உடனடியாகப் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளின் உதாரணமொன்றைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இங்கு மற்றோர் எளிய உதாரணத்தைப் பார்ப்போம். சென்னையிலுள்ள மென்பொருள் ஏற்றுமதி நிறுவனத்திற்குப் பல கோடி ரூபாய்
வருமானமுள்ள பெரிய பணி கிடைத்திருந்தது. அதைக் கொண்டாட என்ன செய்வார்கள்?
‘மது அருந்துதல் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும்’ என்று சப்டைட்டில் போட்டுவிட்டு, நட்சத்திர ஹோட்டலில் பார்ட்டி.
அப்படியான பார்ட்டியில், அளவோடு குடித்து, மேட்டுக்குடி மேன்மையை நிலைநாட்டுவோம் என்பதை மறந்துபோன ஓர் ஊழியர், ஓஸியில் கிடைத்த சரக்கை மூக்குமுட்ட ஏற்றிக்கொண்டு ஆடித் தீர்த்துவிட்டார். இப்பொழுதெல்லாம் மது எதிர்ப்புப் பிரச்சாரமெல்லாம் தேசிய அவமதிப்பு ஆகிவிட்டதால் நிர்வாகம் சார்ந்த மோதலை மட்டும் நாம் பார்ப்போம்.
மறுநாள் அந்த ஊழியரை அழைத்த அவரது உயரதிகாரி, “நேற்றைய பார்ட்டியில் நீங்கள் அளவைத் தாண்டிக் குடித்து, போதை மிகுந்துபோய், உரத்தக் குரலில் கத்த ஆரம்பித்துவிட்டீர்கள். நம் வாடிக்கையாளர்களைக் கேலி செய்தீர்கள். பெண் ஊழியர்களிடம் தகாத ஜாடை செய்தீர்கள். உங்களது செயல் நமது கம்பெனிக்கு அவப்பெயரைச் சம்பாதித்துத் தந்து விட்டது” என்று நேரடியாகப் பிரச்சினையின் மூலத்தைத் தொட்டுப் பேசினார்.
அது முதல் முறை ஏற்பட்ட பிரச்சினை. இருந்தாலும் உடனடியாகப் பேசிச் சரி செய்ய வேண்டிய பிரச்சினை. அதை அணுகும்போது, “ஓஸில கிடைச்சா இந்த ஆட்டம் ஆடுவியா?” போன்ற எள்ளல் கேள்விகளுடன் பேச்சுவார்த்தையைத் துவக்காமல், இன்னது செய்தாய்; நமக்கு இன்ன வகையில் சிரமம், நஷ்டம், அவமானம் என்று பேசினார் உயரதிகாரி. தவறை உணர்ந்த ஊழியரும் அடுத்த முறை அவ்விதம் நடக்காது; அளவோடு குடித்து நலமாய் நடப்பேன் என்று வாக்குறுதி அளித்தார். சத்தியமும் செய்தார். ஏற்றுக் கொண்டது நிர்வாகம்.
ஆனால் அடுத்த முறையும் நடந்தது. அதற்கு அடுத்த முறையும் நடந்தது. தொடர்ந்தது. இப்பொழுது பிரச்சினை என்னவென்று நினைக்கிறீர்கள்?
யூகித்துக்கொண்டே அடுத்த உதாரணத்தைப் பார்ப்போம். உங்களுடன் பணிபுரியும் சக ஊழியருக்கு எப்பொழுதுமே எதிர்மறைக் கண்ணோட்டம். அலுவலக மீட்டிங்குகளில் அவரது கருத்துகள் எல்லாமே சுளீர் சுளீரென்று நெகட்டிவ் வாசகங்களாகத்தாம் வெளிப்படும். தாமாக முன்வந்து அவர் எந்தப் பங்களிப்பும் செய்திருக்க மாட்டார். மற்றவர்கள் தங்களது யோசனையை, பங்களிப்பை அளிக்கும் வரை தேமே என்றிருந்துவிட்டு, அவர்களது திட்டங்களிலும் பங்களிப்பிலும் நுணுக்கமாய்க் குறைகளைக் கண்டுபிடித்துச் சாடல் வரும்.
அவரைப் பொறுத்தவரை எந்தத் திட்டமாக இருந்தாலும் அது லொட்டு, இது லொசுக்கு. எதுவும் சரிவராது; வேலைக்காவாது. மற்றவர்களின் திட்டங்களைக் கடுமையான வார்த்தைகளால் எள்ளல் புரிவது இயல்பான குணம். இப்படியான அவருக்கு அவர்கள் சமர்ப்பிக்கும் தகவல்கள் சரியில்லையென்றால் தீர்ந்தது விஷயம்; அட்டாக் பாண்டியாகிவிடுவார்.
கடுமையான தரத்திற்குச் சக ஊழியர்களை அவர் தயார் செய்கிறார் என்று அவரைப் பொறுத்துக் கொள்கிறீர்கள். ஆனால் நாளாவட்டத்தில் அது எல்லை மீறிவிடுகிறது.
‘என்ன மனுஷன் இவர்? எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்கிறார்; குறை கண்டுபிடிக்கிறார். அப்படி நுணுக்கமாய் இருப்பவர், குறை கண்டுபிடிக்க முடியாத விஷயங்களைச் சக ஊழியர்கள் செய்தால், பாராட்டு, தட்டிக் கொடுத்தல் என்று ஏதாவது இருக்க வேண்டுமா இல்லையா? அப்பொழுது மட்டும் வாயை மூடிக் கொள்கிறாரே’ என்று சக ஊழியர்கள் மனம் வெறுத்து, அதன் விளைவாக அவர்களின் ஊக்கமும் பங்களிப்பும் பெரிதும் பாதிப்படைகின்றன.
திருப்பித் திருப்பி நடைபெறும் இத்தகைய பிரச்சினைகள் குடும்பங்களிலும் சகஜம். தேவை, திருநாள் போன்ற சந்தர்ப்பங்களில், ‘இன்னிக்குச் சாயந்தரம் சீக்கிரம் வந்து உங்களையெல்லாம் நானே கூட்டிட்டுப் போரேன்’ என்று வாக்குறுதி அளித்துவிட்டு ஒவ்வொரு முறையும் அதை மீறும் கணவன்; ‘ஸாரிங்க! கலர் துணியோடு போட்டுட்டேன். அடுத்த முறை உங்க வொய்ட் துணிகளைத் தனியா வாஷர்ல போடுறேன்’ என்று சொல்லிவிட்டுச் சாயம் போகும் கலர் ஜாக்கெட்டுடன் கணவரின் வெள்ளைச் சட்டையைப் போட்டு, அவர் அலுவலகம் செல்லும் நேரம் டென்ஷனாக்கும் மனைவி என்று பஞ்சமற்ற உதாரணங்கள் நமது வாழ்க்கையில் ஏராளம்.
திருப்பித் திருப்பி நிகழும் இத்தகைய பிரச்சினைகளுடன் மோதுவது இரண்டாம் கட்ட மோதல்.
இவற்றிலெல்லாம் என்ன பிரச்சினை? எதைப் பேசித் தீர்க்க வேண்டும்.
‘நேற்று பார்ட்டியில ஏன்யா குடிச்சுட்டு ரகளை பண்ணினே?’
‘என்னுடைய இந்தப் புதுத் திட்டம் நல்லாத்தானே இருக்கு. இதில் என்ன குறை?’
‘இன்னிக்கு லேட்டா வந்ததுக்கு என்ன காரணம் சொல்லப் போறீங்க?’
‘உன்னுடைய கலர் துணியைத் தனியாப் போட்டுத் துவைச்சா என்னவாம்? என் உயிரை வாங்குறீயே?’
என்ற ரீதியில்தான் நமது கேள்விகள் அமையும்; மோதல் நிகழும். அப்படி அந்தக் குறிப்பிட்ட சண்டையில், சச்சரவில் சமாதானம், தீர்வு என்று அமைந்தாலும் மீண்டும் அந்தத் தவறு நிகழும். நிச்சயமாக நிகழும். நாமும் சளைக்காமல் மீண்டும் அந்தத் தவறையே அடிப்படையாக வைத்துப் பேசி மோதிக் கொண்டிருப்போம்.
மேற்சொன்ன உதாரணங்களிலிருந்து நாம் அடிப்படையாக அறிய வேண்டியது என்னவென்றால், திரும்பத் திரும்ப நிகழும் பிரச்சினைகளில் அவற்றைத் தாண்டி பின்னால் ஒளிந்துள்ள முக்கியப் பிரச்சினை.
அது வாக்குறுதி மீறலாக இருக்கலாம்; குறிப்பிட்டவரின் நம்பகமற்ற தன்மையாக இருக்கலாம்; மருத்துவ ரீதியான பலவீனமாக இருக்கலாம். அதைத்தான் கண்டறிய வேண்டும். அதனுடன்தான் மோதிச் சரி செய்ய வேண்டும்.
இல்லையென்றால், குடிகாரன் பேச்சு, பொழுது விடிஞ்சா போச்சு; பழைய குருடி, கதவைத் திறடி என்று ஏதாவது ஒரு பழமொழியை கூகுளில் தேடிப்பார்த்துச் சொல்லிவிட்டுத் தலையில் கை வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.
(தொடரும்)
– நூருத்தீன்
இந்நேரம்.காம்-ல் 26 நவம்பர் 2015 அன்று வெளியானது