இமாம் அபூஹனீஃபா – 02

by நூருத்தீன்

ஈராக்கில் உள்ள டைக்ரிஸ் நதிக்கரை ஓரமாக இளைஞர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு அதிகப் பசி இருந்தது. ஆனால், அவரிடம் உண்பதற்கு எதுவுமில்லை. நதியையே வெறித்துப் பார்த்தவாறு அவர் அமர்ந்திருக்க, அதில் ஆப்பிள் ஒன்று மிதந்து வந்தது.

விருவிருவென விரைந்து சென்றார்; அதை எடுத்தார்; உண்டு முடித்தார். பசியின் தாக்கம் சற்று குறைந்து ஆசுவாசம் அடைந்த பிறகுதான் அவருக்குக் கவலை தோன்றியது.

என்ன கவலை?

‘எனக்கு உரிமையில்லாத ஆப்பிள் பழம் அது. அதன் உரிமையாளர் யாரென்றும் தெரியாது. அவரிடம் அனுமதியும் வாங்கவில்லை. பிறகு, ஏன் அதைச் சாப்பிட்டேன்?’ என்பதே அந்தக் கவலை. யோசிக்க, யோசிக்க கவலை அதிகமாகி, அது யார் வீட்டு ஆப்பிள் என்பதைக் கண்டுபிடிக்க அதன் உரிமையாளரைத் தேடி நடக்கத் தொடங்கினார். வெள்ளம் பாய்ந்து வரும் திசையின் கரையோரம் உள்ள வீடுகளை எல்லாம் அவர் நோட்டமிட்டவாறே நடக்க, ஒரு வீட்டில் பழத்தோட்டத்தைக் கண்டார். அதிலுள்ள ஆப்பிள் மரமொன்றில் பழங்கள் கனிந்து தொங்குவதையும் அதன் கிளையொன்று நதியில் நீட்டிக் கொண்டிருப்பதையும் பார்த்துவிட்டார்.

‘ஹா! இந்த வீடாகத்தான் இருக்க வேண்டும்’ என நினைத்து அந்தக் கதவைத் தட்டினார். ‘இந்த வீட்டின் உரிமையாளரைச் சந்திக்க வேண்டும்’ என அனுமதி கேட்டார். முதியவர் ஒருவரிடம் அவரை அழைத்துச் சென்றார்கள். ஒளிவீசும் முகம்; தீர்க்கமான பார்வையுடன் அமர்ந்திருந்தார் அந்த முதியவர்.

‘ஐயா! உங்கள் வீட்டுக் கனியை உங்கள் அனுமதியின்றி நான் சாப்பிட்டுவிட்டேன்; தவறு செய்துவிட்டேன்’ என்று தம் கதையைச் சொன்னார் இளைஞர்.

தவறு செய்துவிட்டேன் என்று தெரிந்தவுடன் அந்த இளைஞர் இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோரி விட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றிருக்கலாம். அதுவே போதுமானதாக இருந்திருக்கும்தான். ஆனால், இவர் அதையும் தாண்டி உன்னதமானவர் என்று அந்தப் பெரியவருக்குத் தெரிந்துவிட்டது. இப்படியானவரை அப்படியே விட்டுவிட முடியாது என்ற முடிவுடன், ‘ஒரு நிபந்தனை. அதை நிறைவேற்றினால் போதும். உன்னை மன்னிப்பேன்’ என்றார்.

பெருந்தன்மையாளர் என்று நெற்றியில் எழுதி ஒட்டியிருக்கிறது. தோட்டத்திற்கு நீர்பாய்ச்சு; களை எடு என்று ஏதாவது எளிதான வேலையைச் சொல்லப் போகிறார் என்ற பெரும் நம்பிக்கையுடன் இளைஞர் தலையாட்ட, முதியவர் அந்தத் தலையில் ஒரு குண்டைப் போட்டார்.

“திருமண வயதில் எனக்கொரு மகள் இருக்கிறாள். ஆனால் அவளது தோற்றம் அழகில்லாதது; பேதை; என்னுடைய இறப்புக்குப் பிறகு அவளை யார் கவனித்துக் கொள்ளப்போகிறார்கள் என்ற கவலையில் இருந்தேன். உன்னைப் பார்த்ததும் அந்தக் கவலை பறந்துவிட்டது. அவளுக்குரிய தேவைகளை உன்னைவிடச் சிறப்பாய் யார்தான் நிறைவேற்ற முடியும்? எனவே அவளை நீ மணமுடிப்பதாக வாக்குறுதி அளித்தால் உனக்கு மன்னிப்பு வழங்குவேன்!”

காசோ, பணமோ சற்று அதிகமாகக் கேட்டாலும் கடன் வாங்கியாவது பிரச்சினையைத் தீர்த்துவிடலாம். இவரோ வாழ்க்கையைக் கேட்கிறாரே என்ற திகைப்பு தாக்கினாலும் நிதானமாக யோசித்தார் அந்த இளைஞர். மாற்றான் தோட்டத்துக் கனியை அனுமதியின்றி உண்ட பாவத்திற்கு மறுமையில் நிரந்தர இழப்பு அடைவதைவிட அவருடைய மகளை மணந்து கொண்டு இம்மையிலேயே பரிகாரம் செய்துவிடலாம் என்று முடிவெடுத்து, தலையாட்டினார் அந்த இளைஞர். திருமணமும் நடைபெற்றது.

ஆனால், முதல் இரவன்றுதான் அவருக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இனிய அதிர்ச்சி. பெரியவர் குறிப்பிட்ட எந்தக் குறைகளும் இல்லாத, நிறைவான அழகு ததும்பிய மங்கை அவருக்கு மனைவியாக வாய்த்திருந்தார்.

தாபித் பின் ஸவ்தி எனும் அந்த பாரசீக முஸ்லிம் இளைஞருக்கும் முஸ்லிம் பெரியவரின் மகளுக்கும் ஈராக்கின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கூஃபா நகரில் ஹிஜ்ரீ 80ஆம் ஆண்டு, (கி.பி. 700) பிறந்தார் அந்நுஃமான்; இவர்தாம் பிற்காலத்தில் தம் ஞானத்தால் புகழ்பெற்ற இமாம் அபூஹனீஃபா அந்நுஃமான் இப்னு தாபித் (ரஹிமஹுல்லாஹ்).

இமாம் அபூஹனீஃபாவின் தந்தை துணி வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார். அது நன்கு செழித்தோங்க, வர்த்தகக் குடும்பத்தின் செல்வச் செழிப்பில் வளரத் தொடங்கினார் இமாம். எனினும் அவரது சிறுவயதிலேயே இஸ்லாமியக் கல்வி புகட்டப்பட்டது. சிறு வயதிலேயே திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்துவிட்டார். அதுவும், குர்ஆன் ஓதும் கலையின் முன்னோடி இமாமான ஆஸிம் அவர்களிடமிருந்து அதனை அவர் பயின்றார். அதை முடித்துவிட்டு நபிமொழிகள், மார்க்கத்தின் அடிப்படைக் கூறுகள் ஆகியவற்றைப் பயின்றாலும் அத்தருணங்களில் அவரது நோக்கமெல்லாம் தம் வாழ்க்கையையும் குடும்பத் தொழிலையும் இஸ்லாமிய நெறிமுறைகளுக்குள் அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே இலட்சியமாக இருந்திருக்கிறது. எளிய இலட்சியம். இஸ்லாமிய வரலாற்றில் தமக்கென சிறப்பான ஓர் இடம் காத்திருப்பதை அவர் அப்போது அறியவும் இல்லை; அதற்கான பெரு முனைப்புகளில் ஈடுபடவும் இல்லை.

அக்காலத்தில் ஈராக்கின் இருபெரும் நகரங்களுள் ஒன்று கூஃபா. பண்டைய நாகரிகத்தில் திளைத்திருந்த ஈராக்கில் கிறித்தவர்கள், பாரசீகர்கள், கிரேக்க தத்துவவாதிகள் எனப் பலதரப்பட்ட மதங்களும் நம்பிக்கைகளும் பரவியிருந்தன. இப்படியான நாட்டில் இஸ்லாம் எழுச்சியுற்றதும் மக்களிடம் ஊறியிருந்த அந்தப் பலவித நம்பிக்கைளும் கருத்துகளும் இஸ்லாமிய மார்க்கத்தில் புகுந்து முரண்பாட்டைத் தோற்றுவிக்கத் தொடங்கின. இவை போதாதென்று ஷியா, முஅதஸிலா, பாலைவனங்களில் பரவியிருந்த காரிஜியாக்கள் ஆகியோர் விளைவித்த குழப்பமோ பெரும் குழப்பம்.

இவை தவிர, மற்றொரு முக்கியப் பிரச்சினையாக திருக்குர்ஆன் இறைவனால் உருவாக்கப்பட்டது என்றொரு குதர்க்கம் தோன்றி, அந்தக் கூட்டத்தினர் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தனர். உமய்யாக்களுக்குப் பிறகு தோன்றிய அப்பாஸிய கலீஃபாக்கள் அதை அரசாங்கத்தின் முடிவாகவே ஏற்றுக்கொண்டிருந்தனர். அந்தக் குழப்பத்தை எதிர்த்துப் பேசி, எழுதி, வாதிட்ட அறிஞர்கள் பட்ட பாடு பெரும்பாடு. அதுவே ஒரு தனித்தொடராக நீளும்.

இப்படியாக மார்க்கத்துக்குள் கருத்து வேறுபாடுகளும் குழப்பங்களும் நிலவின. ஓர் அசாதரண சூழ்நிலை நிலவியது.

இவை அத்தனைக்கும் இடையே, நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையினரான தாபியீன்கள் தாங்கள் சந்திக்கும் நபித்தோழர்களிடமிருந்து இஸ்லாமிய ஞானத்தைப் பெறுவதிலும் பயில்வதிலும் முனைப்புடன் கண்ணும் கருத்துமாய் இருந்தனர். கவனத்தை திசை திருப்பும் சூழல்கள் நிறைந்த அந்த வேளையிலும் தங்களின் இலட்சியம் என்னவாக இருக்க வேண்டும் என்ற தெளிவு அவர்களிடம் இருந்திருக்கிறது.

திருக்குர்ஆனை முடித்துவிட்டு, நபிமொழிகளையும் பயின்று விட்டு, அதற்குமேல் பெருமுனைப்பு ஏதும் இன்றி இருந்த அபூஹனீஃபாவுக்கு சராசரியைத் தாண்டிய நுட்பமான அறிவுக்கூர்மையை அல்லாஹ் அளித்திருந்தான். அது அவரது இளமையிலேயே சுடர்விட ஆரம்பித்தது. அந்நகரில் தம்மைச் சுற்றிப் பரவியிருந்த பல தரப்பட்ட இஸ்லாமிய நம்பிக்கைகளை, சித்தாந்தங்களைப் பின்பற்றுபவர்களைக் கண்ட அவருக்கு, அதிலுள்ள முரண்கள் தெரிந்தன. அவை இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டவை, தொடர்பில்லாதவை என்பதை அவருடைய இயற்கையான உள்ளுணர்வு உணர்த்தியது. அவர்களுடன் வாதம் புரியத் தொடங்கினார் இமாம் அபூஹனீஃபா.

அது வளர்ந்து, வளர்ந்து வாதம் புரிவது என்பது அவருக்கு மிகவும் விருப்பமான ஒரு விவகாரமாகவே ஆகிவிட்டது. பஸரா நகருக்குப் பயணம் சென்று, அங்குள்ள பலதரப்பட்ட குழுக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். வாத விவாதங்களை மேம்போக்காகவோ, தம் பராக்கிரமத்தை நிலைநாட்டுவதற்காகவோ நிகழ்த்துவது அவரது நோக்கம் அல்ல என்பதால், இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகளை ஆழமாகப் பயிலத் தொடங்கினார்.

இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் குடும்பத் தொழிலை மட்டும் அவர் கைவிட்டுவிடவில்லை. சந்தைக்குச் செல்வது, வணிகம் புரிவது என்று அதனையும் கவனத்துடன் தொடர்ந்தார்.

நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையினரான தாபியீன்களில் குறிப்பிடத்தக்க மார்க்க அறிஞர் ஆமிர் அஷ்-ஷாபி. அவர் அபூஹனீஃபாவைக் கவனித்துக்கொண்டே இருந்தார். அபூஹனீஃபாவின் அறிவுக் கூர்மையைச் சரியாகக் கணித்து வைத்திருந்தார் அவர். ஒருநாள் ஆமிர் அஷ்-ஷாபி அமர்ந்திருந்த பாதையை அபூஹனீஃபா கடந்து செல்லும்போது, அவரை அழைத்தார் ஆமிர்.

“எங்கே செல்கிறீர்?” என்று கேட்டவரிடம் “சந்தைக்குச் செல்கிறேன்” என்று பதில் அளித்தார் அபூஹனீஃபா.

“நான் சந்தைக்கு அதிகமாகச் செல்வதில்லை. மார்க்க அறிஞர்களிடம் செல்வதே எனது நாட்டமாயிருக்கிறது” என்றார் ஆமிர்.

“நான் எப்பொழுதாவதுதான் அவர்களிடம் செல்வேன்” என்றார் அபூஹனீஃபா.

“விழிப்பான அறிவும் ஊடுருவிச் செல்லும் புத்திக்கூர்மையும் உள்ள ஒருவரை உம்மிடம் நான் காண்கிறேன். மார்க்க ஞானத்தை தேடிப் பயில்வது உமக்குச் சிறப்பானது. மார்க்க அறிஞர்களின் கல்விக் குழுமங்களில் கலந்து கொள்ளுங்கள்” என அறிவுரை கூறினார் ஆமிர்.

அந்த அறிவுரை அபூஹனீஃபாவிடம் சரியான தாக்கத்தை ஏற்படுத்தியது. பிற்காலத்தில் அதைக் குறித்து அபூஹனீஃபா கூறும்போது, “அவர் சொன்னது எனக்குப் பிடித்திருந்தது. சந்தைக்குச் செல்வதை குறைத்துக்கொண்டு இஸ்லாமியக் கல்வி பயில்வதைத் தொடர ஆரம்பித்தேன். அவருடைய அறிவுரையினால் நான் பயனடைவதை அல்லாஹ் எனக்குச் சாத்தியமாக்கினான்.”

அந் நுஃமான் என்றோ அபூஹனீஃபா என்றோ வரலாற்றில் ஏதோ ஒரு மூலையில் ஒதுங்கிவிட இருந்தவரை, பிற்காலத்தில் இமாம் அபூஹனீஃபா என்ற உயர்நிலைக்கு உயர்த்த அந்த அறிவுரை ஒரு முக்கியக் காரணமாய் அமைந்தது வரலாறு.

(தொடரும்)

– நூருத்தீன்

சமரசம் பத்திரிகையில் டிசம்பர் 1-15, 2015 இதழில் வெளியானது

அச்சு வடிவில் வாசிக்க இங்கே க்ளிக்கவும்

<–முந்தையது–>  <–அடுத்தது–>

<–ஞான முகில்கள் முகப்பு–>

Related Articles

Leave a Comment