இமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) – 07

ஹஜ் பயணத்தின் போது மதீனாவுக்கும் வரும் பயணிகள், இமாம் மாலிக்கைச் சந்திப்பதும் தங்களது கேள்விகளுக்கும் பிரச்னைகளுக்கும் மார்க்கத் தீர்ப்பை, தெளிவைப் பெறுவதும் வழக்கமாக இருந்தது.

அவ்விதம் வருபவர்கள் உலகின் பல பகுதியைச் சேர்ந்தவர்கள் எனும்போது அவர்களது எண்ணவோட்டமும் பண்பாடும் பழக்க வழக்கங்களும் மாறுபட்டிருக்கும் இல்லையா? அதனால் அவர்களைப் பகுதி வாரியாகப் பிரித்துச் சந்திப்பார் இமாம் மாலிக் (ரஹ்).

அல்-ஹஸன் இப்னுர் ராபி என்பவர் அதைத் தம்முடைய நூலில் குறிப்பிட்டிருக்கிறார். வாயிற்காப்போன் முதலில் மதீனா நகரத்தவர்களை அழைப்பார். பிறகு ஹிஜாஸ் பகுதியினர். அதன் பின்னர் சிரியா, ஈராக் என்று தொடரும். தாமும் ஹம்மாத் இப்னு ஹனீஃபாவும் ஈராக் பகுதியைச் சேர்ந்தவர்கள் அழைக்கப்படும் வரை காத்திருந்தாக அவர் தெரிவித்திருக்கிறார்.

தமக்கு ஆசான் ஆகும் தகுதி ஏற்பட்டுள்ளது; பிறருக்கும் கல்வி பயிற்றுவிக்க முடியும் என்று இமாம் மாலிக்குக்கு உறுதி ஏற்பட்டதும் அவர் உடனே பாடம் நடத்த அமர்ந்து விடவில்லை; விளம்பரப்படுத்தி மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை. மதீனாவில் உள்ள அறிஞர்களையும் நன்மதிப்புக்கு உரியவர்களையும்தாம் முதலில் கலந்து ஆலோசித்தார். அதுவும் ஒருவர் இருவரல்ல. 70 அறிஞர்கள்.

“நான் பாடம் கற்பிக்கத் தகுதியானவன் என்று 70 அறிஞர்கள் ஒப்புதல் அளிக்கும்வரை நான் ஆசானாக அமரவில்லை” என்று அவரே தெரிவித்திருக்கிறார். மற்றொரு குறிப்பில், “பள்ளிவாசலில் அமர்ந்து நபிமொழிகள் பயிற்றுவிக்கவும் ஃபத்வா வழங்கவும் விரும்புபவர், அறிஞர்களைக் கலந்து ஆலோசிக்க வேண்டும். பள்ளிவாசல் நிர்வாகியிடம் அனுமதி பெற வேண்டும். மார்க்க அறிஞர்கள் எழுபது பேர் நான் இவ்விஷயத்திற்கு தகுதியானவன் என்று சான்று பகிரும்வரை நான் பாடம் கற்பிக்க இங்கு அமரவில்லை” என்று விளக்கியிருக்கிறார்.

அவ்விதம் அவர் பாட வகுப்புகள் நடத்த ஆரம்பித்ததும்கூட தம் ஆசான் ரபிஆவிடம் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்த பிறகே நடைபெற்றுள்ளது. கருத்து வேறுபாடு ஒருபுறம் இருந்தாலும் ரபிஆவின் மரணத்திற்குப் பிறகும்கூட தம் ஆசானை அவர் மிக உயர்வாகவே கருதி வந்தார்; குறிப்பிடுவார். ரபிஆ மரணமடையும்போது இமாம் மாலிக்குக்கு வயது 43. எனவே அவர்கள் இருவர் மத்தியிலும் உருவான கருத்து வேற்றுமை, சிறுபிள்ளைத்தனமானதன்று; மாலிக் அவர்களுக்குச் சிறப்பான கல்வி ஞானம் ஏற்பட்ட பிறகே நிகழ்ந்த ஒன்று என்று வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

மதீனாவில் நபியவர்களின் பள்ளிவாசலில் இமாம் மாலிக்கின் பாட வகுப்புக் குழுமம் ஆரம்பமானது. அங்கு தாம் அமர்வதற்கு அவர் தேர்ந்தெடுத்த இடம் விசேஷமானது. உமர் இப்னுல் கத்தாப் (ரலி) ஆலோசனை புரியவும் மார்க்கத் தீர்ப்பு வழங்கவும் எங்கு அமர்வாரோ, அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தார் இமாம் மாலிக். அவர் குடியிருந்த வீடோ அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் வீடு. இவ்விதமாக அவரைச் சுற்றி அமைந்த சூழல் நபித் தோழர்களின் சுவடுகள் ஆழப்பதிந்த தளங்களாக அமைந்து போயின.

அவரது பாடக் குழுமம் இரண்டு வகையாக அமைந்திருந்து. ஒன்று நபிமொழிகளின் ஹதீஸ் கலை வகுப்பு. இரண்டாவது இஸ்லாமியச் சட்ட திட்டங்களைப் போதிக்கு ஃபிக்ஹ் வகுப்பு. இவ்விரு குழுமங்களுக்கும் நாள்கள் பிரிக்கப்பட்டன. ஃபிக்ஹ் வகுப்புகளின்போது தாம் அன்றைய நாள் இயல்பாக அணிந்திருக்கும் உடைகளுடன் பாடம் நடத்துவார். ஆனால் நபிமொழிகளின் வகுப்பின்போதோ அவரது இயல்பு தனித் தரம். தம்மிடம் உள்ள ஆகச் சிறந்த உடையை அணிந்துகொண்டு, நறுமணத் திரவியத்தைப் பூசிக்கொண்டு, அவரது சொல்லும் தோற்றமும் செயல்பாடுகளும் சிறப்பானதொரு பக்தி நிலைக்கு மாறிவிடும்.

தனிப்பட்ட முறையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்களை எழுதி உரியவரிடம் தந்துவிடுவார் இமாம் மாலிக். இதில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. வினா தொடுப்பவர் சாமான்யனா, மதீனாவின் ஆளுநரா என்றெல்லாம் அவர் பாகுபாடு பார்ப்பதில்லை. யாராக இருந்தாலும் சரி, அனைவரும் சமம். ஒரே அணுகுமுறை. ஆனால் தொடுக்கப்படும் வினாக்கள் அனுமானத்தின் அடிப்படையிலோ, கற்பனையான நிகழ்வுகளின் அடிப்படையிலோ இருந்தால் அதற்கும் மட்டும் அவரிடமிருந்து பதில் இருக்காது. சர்ச்சைக்குரிய வினாவொன்று தொடுக்கப்பட்டால், அவர் கேட்கும் முதல் கேள்வி, ‘இப்படியான பிரச்னை, விஷயம் நடைபெற்றுள்ளதா?’ என்பதுதான். பதில், ‘இல்லை’ என்று வருமாயின், அப்படியான ஒரு விஷயம் சாத்தியமே என்றாலும்கூட அதை அவர் ஆய்வுக்கும் எடுத்துக்கொள்வதில்லை. சிந்திப்பதும் இல்லை. இவ் விஷயத்தில் அவரது நிலை இமாம் அபூஹனிஃபாவுக்கும் அவரது வழித்துறைக்கும் நேரெதிர்.

தேடித் தேடிப் பயின்றார், கற்றார், உயர்ந்தார் என்றெல்லாம் நாம் பார்த்துக்கொண்டே வரும்போது அதில் புதைந்திருக்கும் வெகு முக்கியமான ஒரு விஷயத்தைத் தவறவிடக் கூடாது. அவரது ஞானத் தேடலும் அறிதலும் புரிதலும் கற்றலும் அனைத்தும் ‘இறை உவப்பு’ என்ற ஒற்றைக் காரணத்தை மட்டுமே மையப்புள்ளியாகக் கொண்டிருந்தன. அல்லாஹ்வுக்கு உவப்பளிக்கிறதா, அவன் ஏற்றுக் கொள்கிறானா, அது போதும் என்ற மெய்ஞான நிலை அது. நாம் ஈட்டும், ஈட்டியிருக்கும் கல்வியையும் அறிவையும் இவ்விதம் உரசிப் பார்த்தால் சேதாரத்தை மிஞ்சி ஏதேனும் தேறினால் அபூர்வம்.

இறை உவப்பே அடிப்படை என்றாகிப் போனதால்தான் எந்தவித வினாவாக இருந்தாலும் – அது எவ்வளவு எளியதாக இருந்தாலும் – பேதமற்ற தீவிரத்துடன் அணுகினார்; அலசினார்; தெளிவைத் தேடினார். இது நமக்கு வியப்பாக இருக்கலாம். புரிவதற்குச் சிரமத்தைத் தரலாம். ஆனால் அவரது பதில் ஒன்றில் இதற்கான விளக்கம் உள்ளது. “இஸ்லாமிய அறிவுத்துறையில் எளிமையானது என்று எதுவும் இல்லை. அனைத்துமே கடினம்தான். குறிப்பாக, இறுதித் தீர்ப்பு நாளன்று அதற்கான கணக்கு வழக்குகளை நாம் சமர்ப்பிக்க வேண்டும் எனும்போது அனைத்தும் கடினமே.”

இவ்விதமான அவரது குணங்கள்தாம் மற்ற அறிஞர்களிடம் வாத விவாதங்களில் ஈடுபடாமல் அவர் தம்மைத் தடுத்துக்கொள்ளத் தூண்டின என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். உதாரணத்திற்கு, அப்பாஸிய கலீஃபா ஹாரூன் அல்-ரஷீத் இமாம் மாலிக்கிடம், இமாம் அபூஹனீஃபாவின் வழித்துறையின் இரண்டாம் முக்கியப் புள்ளியான அபூயூசுஃபிடம் அவர் விவாதம் புரிய வேண்டும் என்று ஆலோசனை கூறியபோது, “இஸ்லாமிய ஞானம் என்பது மிருகங்களுக்கு இடையேயும் சேவல்களுக்கு இடையேயும் சண்டையைக் கிளறுவதைப் போன்றதன்று” என்று அப்பட்டமாக மறுத்துவிட்டார். வாத விவாதங்கள் எல்லாம் மனத்தைக் கடினமாக்கி, மக்களுக்கு இடையே பகைமையை உருவாக்கிவிடும் என்பது அவரது தீர்க்கமான நம்பிக்கை.

அன்றைய அவரது அந்தக் கருத்து, பல நூறு ஆண்டுகள் கடந்தும் இன்று சமகாலத்தில் நூற்றுக்கு நூறு மெய்யாகத் திகழ்வது தற்செயலா என்ன?

தம்மால் தொந்தரவு எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் சில விஷயங்களை அவர் தவிர்த்துக் கொள்வாரே தவிர, வெகு சில நேர்மையான அறிஞர்களுடன் தனிப்பட்ட முறையில் தம் கருத்துக்கான ஆதாரங்களை முன்வைப்பதும் கலந்துரையாடல்களைப் புரிவதும் நிகழ்ந்துள்ளன. நீதிபதிகளின் மார்க்கத் தீர்ப்பில் பிழையோ, குறையோ இருக்குமேயானால் அவர்களைத் தனியே சந்தித்து, அப்பிரச்னையில் அவர்கள் கவனிக்காமல் தவறவிட்ட விஷயங்களை எடுத்துச் சொல்வது நடைபெற்றுள்ளது.

மதீனாவிற்கு ஒருவர் வந்திருந்தார். இமாம் மாலிக்கைச் சந்தித்து, “நான் மொராக்கோவில் இருக்கும் ஊரைச் சேர்ந்தவன். இங்கு வந்து சேர ஆறு மாதம் பயணப்பட்டிருக்கிறேன். என் ஊரைச் சேர்ந்தவர்கள் வினா ஒன்றுக்கு விடை வேண்டி என்னை உங்களிடம் அனுப்பி வைத்திருக்கிறார்கள்” என்று விஷயத்தை விவரித்தார்.

அவர் விவரித்த பிரச்னையையும் வினாவையும் கவனமாகக் கேட்டுக்கொண்டார் இமாம் மாலிக். ஆற, அமர, தீர யோசித்தார். பிறகு அம் மனிதரை வரவழைத்து அளித்த பதில்தான் பெரும் வியப்பு.

அது-

(தொடரும்)

-நூருத்தீன்

சமரசம் பத்திரிகையில் மார்ச் 16-31, 2018 இதழில் வெளியானது

அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்

<–முந்தையது–>  <–அடுத்தது–>

<–ஞான முகில்கள் முகப்பு–>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment