ருக்னுத்தீன் அந்தக் கடிதத்தைப் படித்து முடித்ததும், சுல்தானாவை நிமிர்ந்து நோக்கினார்.

“இதைத் தாங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?”

“ஏன், சரியாய் இருக்கிறதல்லவா?” என்று

குறும்பு நிரம்பிய குஞ்சிரிப்புடனே குலுக்கிக் கேட்டார்.

“எல்லாம் மிக ஒழுங்காகவே இருக்கின்றன. ஆனால், இதை யார் மூலமாக முஈஜுத்தீனிடம் சேர்ப்பிக்கப் போகிறீர்கள்? என்னனெனின், கடிதத்திலுள்ள விஷயத்தைவிட, இதைக் கொண்டு செல்கிறவனின் சாமர்த்தியந்தான் மிகவும் முக்கியமானது. உள்ளதை இல்லாதது போலவும், இல்லாததை உள்ளது போலவும் நடிப்பின் வாயிலாய்ச் செய்து காட்டக்கூடிய அசகாய சூரனே இந்த நுட்பமான வேலையைச் செய்துமுடிக்க வேண்டும். ஓர் உதவாக்கரையான பேர்வழியிடம் கொடுத்தனுப்பினால், எல்லாம் கெட்டுக் குட்டிச்சுவராய்ப் போய்விடுமே!”

“ஜாஹிர் ! இவ்வளவெல்லாம் செய்த நான் அதை மறந்தா போவேன்? இதோ ஒரு நொடியில் நான் மாயக் கள்ளனாகிய மம்லூக் அப்துல்லாவை இவ் வேலைக்காக அனுப்பிவிடுகிறேன். அவனைப் போன்ற அத்துணை அசகாய சூரத்தனமிக்க வேறொரு மனிதனை இந்த மிஸ்ர் ராஜ்யமே கண்டதில்லை என்பதை நீர் அறியீரோ?” என்று பேசிக்கொண்டே, பக்கத்திலிருந்த பெரிய வெண்கலத் தட்டத்தில் மெல்லத் தட்டினார். அதிலெழுந்த ஓசை ஓயுமுன்னே ஒரு சேவகி உள்ளே வந்தாள்.

“அந்த மம்லூக் அப்துல்லாவை இக்கணமே இங் கழைத்து வா!” என்று சுருக்கமாய்க் கட்டளையிட்டார் ஷஜருத்துர்.

அடுத்த நிமிடத்தில் அப்தல்லா வந்து சேர்ந்தான். மரியாதையாய்க் குனிந்து ஸலாம் சொல்லி நின்றான்.

“ஏ, அப்துல்லா! நீ நீலநதியைக் கடந்து, கெஜேக்குச் செல்லவேண்டும். அங்கே புதிதாகப் பொருளீட்டி வந்திருக்கும் பெருத்த முதலாளி யாரென்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அவனுடன் கூடவே சேர்ந்து நிற்கிற, தாடிமீசை ஒன்றுமில்லாத மாஜீ சுல்தான் மலிக்குல் முஈஜ் தலைமறைவாய் இருப்பதை நீ காண்பாய். அவரிடம் இக் கடிதத்தைக் கொண்டுபோய்ச் சேர்ப்பித்து, அவர் சென்றநாள் முதலாய் நாம் அவலமே உருவாகவும், அன்னந் தண்ணீர் அரந்தாத முழுப்பட்டினியே வயிறாகவும் துக்கமே துன்யா வாழ்வாகவும் பேரவதிப்பட்டு வருந்துவதாகப் பக்குவமாய்ப் பசப்பவேண்டும். எப்படியும் நயவஞ்சகமாய் நடித்து அவரைக் கையோடே இங்குக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும். என்ன சொல்லுகிறாய்!” என்று வேகமாய் வினவினார் நம் ஷஜருத்துர்.

“யா ஸாஹிபத்தல் ஜலாலத்தில் மலிக்கா! இஃதென்ன ஒரு பிரமாதமான பெரிய காரியமா என்ன? முஈஜுத்தீன் மட்டும் தாங்கள் குறிப்பிடுகிற இடத்திலே இருக்க வேண்டியது தான். தாங்களே பாருங்களே! நாளைச் சூரியோதயமாகி இரண்டே நாழிகை நேரத்துக்குள்ளே இங்குக் கொண்டுவந்து சேர்க்கிறேனா, இல்லையா என்பதை. இந்த அற்பக் காரியத்தைக்கூடச் செய்யவா எனக்குச் சக்தியில்லாமற் போய்விட்டது? முஈஜுத்தீன் மட்டுமென்ன? வேறு யாராயிருந்தால்தான் என்ன?”என்று பேசிக்கொண்டே மீசையை முறுக்கினான், அந்த நயவஞ்சக வித்தைகற்ற, அப்துல்லா பின் உபையின் வழிவந்த இந்த அப்துல்லா.

“எங்கே, உன் சாமர்த்தியத்தைப் பார்ப்போம்!” என்று தட்டிக் கொடுத்துக்கொண்டே, அவனை வழியனுப்பினார் ருக்னுத்தீன்.

இந்த அப்துல்லா என்பவன் மரியாதையாய் ஸலாம் போட்டு, சுல்தானாவின் உத்தரவைப் பெற்றுப் பின்னிடைந்தே வெளியேறினான். தன்னுடைய கையில் வைத்திருந்த கடிதத்தை எக்கில சொருகிக் கொண்டு, நீலநதிக் கரையை நோக்கி வெகு வேகமாய் நடந்தான். போகிற வழிநெடுகத் தான் நடிக்க வேண்டிய நாடகங்களைத் தானே கற்பித்துக் கொண்டும் நன்றாய்ப் பழகிக்கொண்டும் ஆற்றங்கரையை அண்மினான். பஹ்ரீகளின் பாய்மரத் தோணி ஒன்றில் ஏறிக் கொண்டு, இரண்டு மணி நேரத்தில் ஆற்றைக் கடந்து, அக்கரையில் தாவி இறங்கினான். கூர்நுதிக் கோபுரங்களை எல்லாம் சீக்கிரமே தாண்டிக் கொண்டு, கெஜே நகருக்குள் பிரவேசித்தான். சற்று நேரத்தில் அவன் முஈஜுத்தீனின் எதிரே போய் நின்றான்.

அந்தப்புரத்தில் இருக்கிற அடிமை அப்துல்லா, இப்படித் தம் கண்ணெதிரில் வந்து நின்றதைக் கண்ட முஈஜுத்தீன், மலக்குல் மவுத்தைப் பார்த்த இருமல் வியாதியஸ்தன்போலே தொடை நடுங்கிக்கொண்டே நிமிர்ந்து நோக்கினார். அவரது உயிர் ஆவி ரூபமாகப் பரிணமித்துக்கொண்டிருந்தது.

அப்துல்லா அவரைக் கண்டு உற்று நோக்கி விட்டுப் பொய்ப் புலம்பலுடனே தொப்பென்று குப்புற்று வீழ்ந்து, சாஷ்டாங்கமாய் நீட்டிக்கொண்டு, “காப்பாற்றுங்கள்! யாமலிக், காப்பாற்றுங்கள்!” என்று தேம்பித்தேம்பி அழுதான்.

தம்மைக் கொன்றுபோடுவதற்காகவே இந்த வேளையில் வந்து நிற்கிறான் இம் மம்லூக் என்று எண்ணி, உயிர்விட்டுக் கொண்டே இருந்த முஈஜுத்தீனுக்கு இந்தக் காட்சியைப் பார்த்ததும், ஒன்றும் தோன்றவில்லை. நெஞ்சு பட்பட்டென்று அடித்துக்கொள்ள, அப்துல்லாவையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார். என்னெனின், அவன் ஒரு நம்பத்தகாத ‘பலே பேர்வழி’ என்பதை முஈஜுத்தீன் சுல்தானாய் இருந்த காலத்திலேயே நன்கு தெரிந்துகொண்டிருந்தார் அல்லவா?

“யா மலிக்! தங்களைக் காணாமல் நாங்கள் என்னபாடு படுகிறோம்! தங்களைத்தேடி எங்கெங்கெல்லாமோ சுற்றினோம்! இவ்வளவு அருகாமையில் தாங்கள் தங்கியிருக்கிறீர்கள் என்பது எங்களுக்கு நேற்றுவரை தெரியாமல் போய்விட்டதே! ஆ, இந்நேரம் மலிக்காவின் கதி என்ன வாயிற்றோ! யா மலிக்! காப்பாற்றுங்கள், அவரைக் காப்பாற்றுங்கள்!” என்று கதறித் துடித்தான் அப்துல்லா.

இதில் என்ன சூது நிறைந்திருக்கிறதோ என்று ஒன்றும் புலனாகாமல், இடித்துவைத்த புளிபோலே பேசாமல் குந்தியிருந்தார் முஈஜுத்தீன்.

“யா மலிக்கல் முஸ்லிமீன்! சுல்தானாகிய தாங்கள் இல்லாமல், நாங்களெல்லாம் கரையில் எடுத்து விடப்பட்ட மீனைப் போலத் துடியாய்த் துடிக்கிறோமே! தங்களுக்கு இப்பொழுதாவது எங்கள் மீது கருணை பிறக்காதா? நாங்கள் தெரிந்தோ தெரியாமலோ தங்கள் திருச்சமுகத்துக்குத் தீங்கேதும் நினைத்திருந்தால், அந்த அல்லாஹ் ரசூலுக்காக எங்களை மன்னிக்க மாட்டீர்களா? தங்களை இழந்த அன்றிலிருந்து நாங்களெல்லாம் அழுது அழுது சலிக்கிறோம்! சுல்தானா குப்புறப்படுத்தவர் இன்னம் எழுந்திருக்கவில்லையே! தங்கள் மீது ஏக்கமாகவே அவர் உயிர் விட்டுவிடுவார் போலிருக்கிறதே! சுல்தானாகிய தங்களையும் சுல்தானாவாகிய அவரையும் நாங்கள் ஒருங்கே இழந்துவிட்டால், எங்கள் கதி? வேறு எவரே எங்களைக் காப்பாற்றப் போகிறார், தங்களுக்கும் சுல்தானாவுக்கும் ஏற்பட்ட வீபரீத மனஸ்தாபத்துக்கு, ஒரு பாவமுமறியாத நாங்களா தண்டனை அனுபவிக்க வேண்டும்? மிஸ்ரின் கதி இந்த மாதிரி நாதியற்றுப் போகவேண்டுமென்றா இறைவன் ஏட்டில் எழுதி விடவேண்டும்? யா ஸாஹிப்! சத்தியமாகச் சொல்லுகிறேன் : தாங்கள் சற்றே தங்களுடைய கருணைக் கண்ணைத் திறக்காவிட்டால், இங்கே தங்களுடைய காலடியிலேயே உயிர்விட்டு விடுவேன்! இனி எங்களால் சகிக்க முடியாது!” என்று எழுந்து மண்டியிட்டு முழங்கால்மீது நின்றுகொண்டும் இருகைகளை ஏந்திப் பிடித்துக்கொண்டும் கண்ணீர் காட்டருவியாய் ஓடப் பலாக்கணம் பாடினான்.

“நீ யாருடைய குடியைக் கெடுப்பதற்கு இப்படியெல்லாம் நடிக்கிறாயப்பா! நான்தான் உங்களையெல்லாம் தொலைத்துத் தலைமுழுகிவிட்டுத் தூரத்தில் வந்து இப்படித் தர்வேஷ்கோலம் பூண்டு, பேசாமல் குந்தியிருக்கிறேனே! என்னைக் கட்டிக் கொண்டு ஏன் மாரடிக்கிறாய்,” என்று வெறுப்புடன் பேசினார் மிஸ்ரின் மாஜீ சுல்தான்.

“ஹுஜூர்! யான் மாரடிக்கவில்லை; உண்மையைத்தான் சொல்லுகிறேன் : சுல்தானா தங்களைக் காணாமல் மனமுடைந்து, உலகத்தையே வெறுத்துவிட்டுக் குற்றுயிருங் குறையுயிருமாய்க் குப்புற்றுக் கிடக்கிறார். அவர் தங்களை ஒன்றுமே செய்யவில்லை, ஒன்றுமே சொல்லவில்லை என்றும், தாங்கள் ஏன் கோபித்துக்கொண்டு வெளியேறி விட்டீர்களென்றும் ஒப்பாரி வைத்தழுதுகொண்டு அரசாங்கத்தையும் கவனிக்காமல், அன்ன ஆகாரம் ஒன்றுமே அருந்தாமல் அந்தப்புரத்தில் அவலமே முடங்கிக் கிடக்கிறார். தாங்கள் அரண்மனைக்குள் காலடியெடுத்து வைத்தாலன்றி, இப்படியே மாண்டு மண்ணாய்ப் போவதாகவும் சாதிக்கிறார். மலிக்காவின் முரட்டு வைராக்கியம் எப்படிப்பட்டதென்பதைத் தங்களுக்கு யானா எடுத்துச் சொல்ல வேண்டும்? தாங்கள் அடியேனைச் சந்தேகிக்கிறீர்கள் என்பதைத் தங்கள் முகம் காட்டுகிறது. எனக்கு அப்போதே தெரியம், தாங்கள் என்னைச் சந்தேகிப்பீர்களென்று. இதைப் பார்த்தபின்பாவது தாங்கள் சந்தேகந் தெளிவீர்களா?” என்று கேட்டுக்கொண்டே, தன் எக்கில் சொருகியிருந்த திருமுகத்தை எடுத்து, மரியாதையாய் முத்தியிட்டு, மூக்கைப் பொய்யாக உறுஞ்சிக் கொண்டே, வெகு பணிவுடன் இருகரங்களாலும் நீட்டினான், மிக்க வணக்கத்துடனே.

அவன் ஏந்திப் பிடித்திருந்த, உள்ளங்கைகளில் இருந்து நிருபத்தின் மீதிருந்த ஷஜருத்துர்ரின் மோதிர முத்திரை அடையாளம் முஈஜுத்தீனின் கண்களைப் பறித்தது. அவர் நடுங்குகிற கரத்துடனே அதையெடுத்துப் பிரித்துப் பார்த்தார். ஒவ்வோரிடத்தில் கண்ணீர் சொட்டியிருப்பதையும், அதனால் மை கலைந்திருப்பதையும் அவர் முதலில் கவனித்தார். அதிலுள்ள எழுத்துக்கள் நடுக்கமுற்ற கரத்தால் பொறிக்கப்பட்டிருந்தன என்பதும் திட்டவட்டமாய்த் தெரியவந்தது. பெருமூச்சைப் பலமாக இழுத்து விட்டுக்கொண்டு முஈஜுத்தீன் படித்தார்:-

“அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் : செருக்காலும் மமதையாலும் பின்புத்தி என்னும் பெண்புத்தியாலும் விநாசகாலத்தை வலிய விளைத்துக்கொண்ட அடியாள், கடையாள், பெண்பாவி ஷஜருத்துர் என்னும் நாமம் படைத்த, நாயினுங் கடையேனாகிய யான், என் கண்ணீரே மையாகவும் கருத்தே நாணற் கலமாகவும் கொண்டு, உதிரக் கண்ணீர் உகுத்து, என் ஆசை நாயகரும் அருமைக் கணவருமாகிய தங்கள் திருச்சமுகத்துக்குத் தண்டனிட்டுத் தீட்டும் அவலக்கவலை என்னவென்றால்:-

அற்ப ஆயுளையே நீடிய நிரந்தரச் செல்வமாகவும், நீரிற் குமிழியாகிய அரச போகத்தையே பேரின்ப சுவர்க்க போகமாகவும் மிஸ்ரின் மோகத்தையே இணையற்ற சிற்றின்பச் சுகவாழ்க்கையாகவும் செங்கோலையே கணவனினும் பெரிய கண்கண்ட தெய்வமாகவும் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று அறியாமையாலும் அறிவீனத்தாலும் பெருமைப்படுத்திக்கொண்டு, தங்கள்மாட்டு யான் காட்ட வேண்டிய கடமைகளில் அநியாயமாய்த் தவறிவிட்டேன் என்பதைத் திரிகரண சித்தியுடன் ஒத்துக் கொள்ளுகிறேன். தங்கள் இல்லற வாழ்க்கைக்கு அடியாள் முட்டுக்கட்டை போட்டது என் மமதையால்தானன்றி, வேறெக் காரணத்தாலும் அல்லவே அல்ல! யான் தங்களையே என் ஹிருதயத்தின் பொக்கிஷமாகவும் இழக்க முடியாத மாணிக்கமாகவும் மறக்க முடியாத பாக்கியமாகவும் இறுதித் தீர்ப்புநாள் வரை கொண்டாடுவேன் என்பதற்கு அந்த அல்லாஹூத் தஆலாவையே சாட்சியாய் அழைக்கிறேன்.

தாங்கள் நின்றது நிற்கத் திடுமெனக் காணாமற் போய்விட்டது ஏன் என்றே என் புத்திக்குப் புலப்படவில்லை. ஏதோ தவறுதலாகத் தாங்களும் காலிடறி அப்பீங்கான் பாத்திரங்களை உதைத்தெறிந்திருக்கலாம். அந்நேரத்தில் தெய்வாதீனமாய் யானும் அங்கு வந்துவிட்டேன். தங்களைக் கண்டு யான் பரிதபித்தும் காதல் மேலிட்டும் பேச நாவின்றிக் கற்சிலையேபோல் நின்றுகொண்டிருக்க, தாங்களேன் மயக்குற்று வீழவேண்டும் என்பதே எனக்கு இன்னமும் விளங்கவில்லை. அந் நேரத்தில் தாங்கள் என்னைப்பற்றி ஏதும் விபரீதமாக நினைப்பதற்கு யான் என்ன தீங்கு இழைத்தேன் என்று யோசித்து யோசித்துத்தான் பார்க்கிறேன். என் மூளை கிறுகிறுக்கிறதன்றி, ஒரு விஷயமும் புலப்படவில்லை. அந் நேரத்தில் புர்ஜீ தலைவர் மாண்டுவிட்டாரென்னும் செய்தி கேட்டு, யான் அங்கு அவசரமாகச் செல்ல நேர்ந்தது. அன்று மாலை மய்யித் எடுத்த பிறகு ஓடோடி வந்து எங்கெங்கெல்லாமோ தங்களைத் தேடினேன்; தேடிக் கொண்டும் இருக்கிறேன்… எங்கும் நிறைந்திருந்த தாங்கள் அப்பால் எங்கு மறைந்தீர்களோ! அடியாள் உயிர் துறப்பதற்குமுன் தங்களை ஒரு முறையேனும் நேரில் கண்டு, என் மனச் சுமையை இறக்கி, தங்களிடம் பாவமன்னிப்புக் கோரி, சுத்தமான ஹிருதயத்துடனே ஆண்டவனிடம் போகமாட்டேனா என்று ஏங்கித் தவிக்கிறேன்.

யான் ஏன் பிறந்தேன்? சிலுவை யுத்தத்தைத் தகர்த்து இஸ்லாமிய உலகினைக் காத்த ஒருத்தி, கட்டிய கணவனையே கைவிட்டாள் என்னும் அழியா அபக் கியாதியையும் அபகீர்த்தியையும் உலகம் உள்ளளவும் பெற்று எல்லாராலும் தூற்றப்பட வேண்டும் என்பதற்காகவா இறைவன் என்னைப் படைத்தான்? நாதா! அடியாள் சிந்துகிற கண்ணீரைப் பாருங்கள்! யான் தங்களுக்குத் தவறிழைத்திருக்கலாம்; தங்கள் மனம் சுடும்படியும் நோவும்படியும் யான் எப்போதேனும் நடந்துகொண்டிருக்கலாம்; தங்களை என் அறியாமையால் உதாசினஞ் செய்துமிருக்கலாம். ஆனால், ஆனால்! அந்த ஆண்டவனுக்காக என்னை மன்னித்து விட்டீர்களானால், யான் சாந்தியடைந்து களங்கமற்ற மனத்துடனே கண்ணயர்வேன். எவ்வளவோ பெரிய பாவங்களை இழைப்பவர்கள் கூட, ஒருமுறை தங்களுடைய பாவத்துக்காக இறைஞ்சி வேண்டினால், ஆண்டவன் அப் பாவிகளை அடியோடு மன்னித்துவிடுவதாகக் கூறுகிறார்களே! அப்படிப்பட்ட ஆண்டவனின் நல்லடியார்களுள் ஒருவராகிய தாங்கள் இப்படுபாவிமீது சற்றே கருணைக்கண் ஓட்ட மாட்டீர்களா? என் பிராணநாதா! யான் என் திரிகரண சுத்தியாகச் சொல்லுகிறேன்:

தாங்கள் அன்று அந்தப் பீங்கான் பாத்திரங்களைத் தவறுதலாகத் தட்டிக் கவிழ்த்ததை யான் குற்றமாகவே பாராட்டவேயில்லை! தாங்கள் அதற்காகப் பயந்து கொண்டு, இப்படி என்னைக் கைவிட்டுக் கலங்கித் தவித்து நிற்கவிட்டு, மாயமாய் மறைந்து போவீர்களென்பதை யான் கிஞ்சித்தாவது முற்கூட்டி உணர்ந்திருப்பேனானால், என் உயிரையே அர்ப்பணஞ் செய்தாவது தங்களைத் தடுத்து நிறுத்தியிருப்பேனே! என்ன மோசம் செய்துவிட்டீர்கள்! யான் என்ன மோசம் போயினேன்! என்னரும் பிராணேசா! அடியாளைக் கைதூக்கி விடுங்கள்! காப்பாற்றி விடுங்கள்! யான் தங்கள் மாட்டு ஒரு காலத்தில் எல்லையற்ற காதலைக் கொட்டிக் கொட்டித் தேக்கிடச் செய்யவில்லையா? தங்களையே என் கண்ணாகவும் கருத்தாகவும், தூக்கத்திலும் விழிப்பிலும் சதா கருதியிருக்க வில்லையா? தங்களுக்காகவே யான் என் உடல், பொருள், ஆவியனைத்தையும் அர்ப்பணம் செய்யவில்லையா? நாதா! சற்றே ஞாபகப்படுத்திப் பாருங்களே!

யான் தங்களுக்காகவே எல்லாவிதப் பரித்தியாகமும் புரியவில்லையா? என் முதற் கணவரை யிழந்து பரிதபித்த யான், தங்களையும் இழந்து விட்டா மிண்டும் பரிதபிக்க வேண்டும்? தங்களின் பிரிவாற்றாமையால் யான் ஊணை மறந்தேன்; உலகை வெறுத்தேன்; கண்ணுறக்கமும் கைவிட்டேன். சதா தங்களின் ஞாபகமாகவே ஓரொரு நிமிஷத்தையும் ஒரு யுகமாகக் கடத்திக்கொண்டிருக்கிறேன். போதும், போதும், நான் பட்டபாடெல்லாம். பொறுக்க முடியாது இனித்துயரம்! யானடித்த கூத்துக்களுக்கெல்லாம் இப்பொழுது கற்றுக்கொண்ட படிப்பினை என் உயிருள்ளளவும் என் கருத்தைவிட்டு அகலாது.

காதலீர்! ஏழையை மன்னித்தேனென்று தாங்கள் என் செவிகுளிர ஒரு வார்த்தை சொன்னாலன்றி, யான் இந் நிலையிலிருந்தே என்னுயிர் துறந்து விடுவேன்! தாமரையற்ற தடாகம்போலும், நிதியற்ற கஜானாபோலும் ஒளி இழந்து, பொலிவிழந்து, மாமைநிறம் மழுங்கி, கண்ட இடமும் கடுஞ்சோகமே காட்சியளிக்கும்படி செய்துவிட்ட தங்கள் பிரிவை – என் முட்டாள் தனத்தாலும் மூர்க்க குணத்தாலும் விளைந்த பெருநஷ்டத்தை யான் செப்பனிட்டுக் கொள்ளவே முடியாதா, நாதா? தாங்கள் அரண்மனையைத் துறந்தோடும் படியான அவ்வளவு பெரிய பாபத்தை யான் இழைத்தே விட்டேனா? அப் பாபத்துக்கு விமோசனமே இல்லையா? நாதா! மேலும் சோதிக்காதீர்கள். ஆண்டவன் மீது ஆணையாகச்சொல்லுகிறேன்! தாங்கள் எனக்கு மன்னிப்பளிக்க மறுதளித்து விடுவிர்களேல், இந்தப் பாபாத்துமாவை இன்னமும் சுமந்து பெரியபெரிய கேடுகாலங்களை யான் வரவழைத்துக் கொள்வதைத் தடுத்துக்கொள்வதற்காகவாவது இப்படியே பட்டினி கிடந்து செத்து மடிகிறேன். பின்னாலாவது சரித்திராசிரியர்கள் ‘ஷஜருத்தர் குற்றமற்றவள்; குற்றம் இழைத்திருப்பினும், மன மெய் வாக்குக்களால் அக் குற்றங்களுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டவள். அவள் கேட்டுக் கொண்ட மன்னிப்பு அளிக்கப்படாமையால், தன் கணவனுக்காக உயிரைப் பலி கொடுத்தவள்,’ என்று சரித்திர ஏடுகளில் தீட்டட்டும். நானும் ஒரு மனுஷியே; தவறிழைப்பது மனித இயற்கை. ஆனால், அதை மன்னிப்பது அல்லாஹ்வின் குணம். என் பிராணநாதா! எனனை நம்புங்கள்; நம்புங்கள்; முற்றும் நம்புங்கள்! இன்றேல், என் பொல்லாத தலைவிதி – நஸீப் – இவ்வளவேதான் என்னும் சாந்தியுடன் உயிர்விட்டு விடுகிறேன். இங்ஙனம் : தங்கள் மெய்யடியாள், ஷஜருத்துர்.”

இக் கடிதத்தை முஈஜுத்தீன் ஒருமுறை படித்தார்; ஏதோ சிந்தித்தார். மறுமுறை படித்தார்; ஏதோ யோசித்தார்; மூன்றாம் முறையாகப் படித்தார்; கண்களில் நீர் சுரந்துவிட்டது. கடைசி முறையாக வாசித்தார்; கோவென்றழுதுவிட்டார். ஷஜருத்துர்ருக்கு – அஞ்சா நெஞ்சமும் முன்வைத்த காலைப்பின் வைக்காத சுபாவமும் கொடிய வைராக்கியமும் ஒரே உருவாயமைந்த சுல்தானா ஷஜருத்துர்ருக்கு – மைமூனாவைக் கதறக் கதறத் தலாக்கு வாங்கி விரட்டியடித்த நீலி ஷஜருத்துர்ருக்கு நிஜமாகவே இப்படி நல்ல புத்தி வந்து, நிபந்தனையற்ற மன்னிப்பும் அவள் கோரி நிற்க நேரிட்டதைச் சிந்திக்கச் சிந்திக்க முஈஜுத்தீனுக்கு மயிர்க்கூச் செறிந்தது. ஷஜருத்துர்ரிடம் தாம் படநேர்ந்த உபத்திரவங்களெல்லாம் அரை நொடியில் காற்றாய்ப் பறந்துவிட்டன. அவருடைய மனக்கண் முன்னே மிகப் பழைய சிருங்கார சுபநோபன உல்லாச சப்ரமஞ்சக் காட்சிகளே வந்து நின்றன. முஈஜுத்தீன் கற்பனை செய்து கொள்வதில் மஹா நிபுணர் என்பதை முன்பொரு சமயம் விளக்கிக் காட்டியிருக்கிறோம். இல்லாதவற்றைப் பற்றியே பிரமாதமாக யோசித்துக் காலை நீட்டி உதை கொடுக்க வல்லவர் அவரென்றால், நிஜமாக முற்காலத்தில் அவர் ஷஜருத்துர்ரிடம் பெற்று மகிழ்ந்த மெய்க் காட்சிகளை மனனஞ் செய்வதுதானா பெரிய பிரமாதம்? அவர் கண்ணெதிரிலே அக் காம மூட்டும் இனிய காட்சிகள் உருப்பெற்று வந்துநின்றன.

இதுவரை மெளனமாய் நின்று முஈஜுத்தீனின் முகத்தையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த அப்துல்லா என்னும் இப்லீஸ் தூபம்போட ஆரம்பித்தான். அவன் வந்த வேலையை ஒழுங்காய்ச் செய்யவேண்டு மல்லவா?

“யா மலிக்! கால் தூசிக்குக் கூடப் பெறாத சில பீங்கான் பாத்திரங்களைத் தாங்கள் தவறுதலாக உருட்டித் தள்ளியிருக்க, சுல்தானா பேகம் தங்கள் மீது நடவடிக்கை எடுப்பபாரகளோ என்று பயந்து இப்படி யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஓடிவந்து விட்டீர்களே; இச் செய்கையைப் பார்த்து எவரே வருந்தமாட்டார்? தங்களைவிட அந்தப் பாத்திரங்களா பிரமாதம்? சுல்தானா ஸாஹிபா இதைச் சொல்லிச் சொல்லிக் கண்ணீர் வடிக்கும்பொழுது எங்களுக்குக்கூட அழுகை வந்து விடுகிறதே!” என்று கண்களைப் பிசுக்கித் துடைத்துக் கொண்டான் அப்துல்லா.

முஈஜுத்தீன் மெளனமாகச் சிந்தித்தார். அன்று அவர் அரண்மனையை விட்டு ஏன் ஓடிவந்தார் என்பதை நுணுக்கமாய் யோசித்தார். தாம் ஓடிவந்து விட்டதற்குத் திடீர்க் காரணம் என்னவென்பது அவர் மூளைக்கே எட்டவில்லை! ஷஜருத்துர்ரின் மீது நெடுகவே அவர் பலப்பல சந்தர்ப்பங்களில் மனமிடிந்து கசப்படைந்து போயிருந்தது மெய்யயன்றாலும், இறுதி நிமிஷத்தில் நின்றது நிற்க அவர் திடீரென்று வெளியேற நேர்ந்ததற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்தார். ஃபக்ருத்தீன் மாண்டு போனதற்கும் தாம் ஓடி வந்ததற்கும் என்ன சம்பந்தம் என்று ஆலோசித்தார். தாமும் ஃபக்ருத்தீனும் சேர்ந்து வகுத்த இரகசியச் சதித்திட்டம் சுல்தானாவுக்கு எப்படியோ தெரிந்துபோய் விட்டதாகத் தாம் கற்பித்துக் கொண்டதுதான் காரணமேயொழிய, அச் சதித்திட்டம் ஷஜருத்துர்ருக்குத் தெரிந்துவிட்டது என்பதற்கு யாதொருவித நேர் அத்தாக்ஷியும் இல்லையே என்று நினைத்தார். அப்பொழுது அவருக்கு இறுதியாகச் செவிசாய்த்துக் கேட்ட சம்பாஷணை நினைவுக்கு வந்தது. அந்த இருகுரல்கள் தம்மையும் தூரான்ஷாவையும் பற்றித் தாக்கிப் பேசியதும், சுல்தானா ஃபக்ருத்தீனுக்கு விஷமிட்டார் என்று ஒரு குரல் குறிப்பிட்டதும் அவர் கண்முன்னே வந்து நின்றன. பின் ஏன் தம்மை ‘உடந்தைக் குற்றவாளி’என்று அக்குரல் கூறிற்று? என்று யோசித்தார். நிதானமாகச் சிந்திக்கச் சிந்திக்க அவருக்கு இப்படிப் பட்டது:-

“ஃபக்ருத்தீனும் நானும் பரம ரகஸ்யமாக வகுத்த திட்டம் வேறொருவருக்குமே தெரிந்திருக்கச் சிறிதும் மார்க்கமில்லை! நான் அந்த நச்சுச்சிமிழை அலமாரியில் வைத்ததையும் எவருமே பார்க்கவில்லை! எனவே, என்னைக் குற்றவாளியென்றோ, உடந்தைக் குற்றவாளியென்றோ, எவருமே சொல்ல முடியாது! நான் மிரண்டு போயிருந்தபடியால், என் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாகத் தோற்றியது போலும்! ஃபக்ருத்தீன் வயது முதிர்ச்சியால், மாரடைப்பால் ஏற்பட்ட சாதாரண மரணத்தைத் திடீரென்று அடைந்திருக்கிறார்; புர்ஜீ தலைவர் மாண்டுவிட்டதில் பெருந்திருப்தி கொண்டுவிட்ட எவரோ இரு பஹ்ரீ மம்லூக்குகள் ஏதேதோ உளறிக்கொண்டிருந்திருக்கிறார்கள். என் நெஞ்சு குற்றமுள்ள நெஞ்சாய் இருந்தபடியால், அவர்கள் சாதாரண உபமான உபமேயங்களுடன் பேசிக்கொண்ட வெறும் வார்த்தைகளை நான் எனக்கே பொருந்தமாக எடுத்துக்கொண்டு விட்டேன்.

ஃபக்ருத்தீன் என்னிடம் விஷச் சிமிழைக் கொடுத்தது ஷஜருத்துர்ருக்குத் தெரிந்துவிட்டதாகவும் அவள் அதையே எடுத்துப் போய் ஃபக்ருத்தீன்மீது பிரயோகித்து விட்டதாகவும், பிறகு என்மீது அவள் பழிவாங்கிக்கொள்ள முற்பட்டு விட்டதாகவும் நான்தான் முட்டாள் தனமாய்க் கருதிக்கொண்டு விட்டேன்! எவ்வளவு பெரிய மடத்தனம்! இப்படிக் குழம்பிய புத்தியுடனே நான் செவியேற்ற வார்த்தைகள் எனக்கே விரோதமாய்ப் பட்டுவிட்டன! நான் சார்ந்துநின்ற பெரிய தூணாகிய ஃபக்ருத்தீனே மாண்டுவிட்ட பின்னர், புல்லுருவாகிய நான் அதோ கதியாய்த்தான் போய் முடிவேனென்று அந்த பஹ்ரீகள் பேசிக்கொண்டதில் விபரீதமென்ன இருக்கிறது! வாஸ்தவத்திலேயே ஷஜருத்துர்ருக்கு மட்டும் நான் உடந்தைக் குற்றவாளிதான் என்பது அன்று காலையில் நிஜமாகவே தெரிந்திருக்குமானால் மாலையில் தப்பி வெளியேறுகிறவரை என் உயிரை அவள் விட்டுவைத்திருப்பாளா? அப்படி உயிரை விட்டு வைத்திருந்தாலும், சிறையில் அடைக்காமல் இருந்திருப்பாளா?… என்ன முட்டாள்தனம் செய்துவிட்டேன் ! … இருக்கட்டும்! இதுவும் வந்ததால்தானே அவளுக்கு இப்போதாவது நல்ல புத்தி உதித்திருக்கிறது!”

அப்துல்லா விடவில்லை. அவன் தன்னுடைய வேலையைத் தொடர்ந்து, தூபம் போட்டுக்கொண்டே இருந்தான்:

“யா மலிக் ! கணவன் மனைவிக்கிடையே ஊடல் விளைவது சகஜம். சாதாரணமான குடும்பங்களில் அது விளைந்துவிட்டால், வெளியிலும் தெரிவதில்லை; தெரிந்தாலும், பிரமாதமாகப் பேசிக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், தங்களுக்கும் சுல்தானாவுக்கும் இடையே நடந்து விட்ட காரணங் கற்பிக்க முடியாத சிறு ஊடற் கலகத்துக்கு எவ்வளவு பிராபல்யம் ஏற் பட்டுவிட்டது! ஊரெல்லாம் இதே பேச்சாயிருக்கிறது. தங்களுக்கு தங்கள் மனைவியாருக்குமிடையே உள்ள அற்ப கலகத்தை இப்படி ஊர்சிரிக்க வைக்கலாமா? – ஏன் பேச மறுக்கிறீர்களோ? தாங்கள் வேறு காரணங்களுக்காக சுல்தானா ஸாஹிபாவை வெறுத்து வெளியேறி யிருப்பின், அதையாவது என்னிடம் சொல்லுங்கள்: நான் போய்த் தெரிவித்துப் பதில் வாங்கி வருகிறேன்.”

இறுதியாக முஈஜுத்தன் வாய் திறந்தார்.

“நான் உன்னை முற்றும் நம்பலாமல்லவா? ஏ, அப்துல்லா!”

“யா மலிக் ! யான் அப்பொழுதே சுல்தானாவிடம் மன்றாடினேன், இந்தப் பணிக்கு என்னை அனுப்ப வேண்டாமென்று ! நான் இல்லாததை இருப்பதேபோல் பேசக்கூடியவன் என்று எவ்வாறோ ஒரு தப்பபிப்பிராயம் எல்லார் மனத்திலும் குடிகொண்டு விட்டதைப்போல், தாங்களும் அத்தகைய தவறான அபிப்பிராயத்தை என்மீது கொண்டிருக்கக் கூடுமென்றும், எனவே யான் சென்றால், அவ்வளவு சரியாய் இராதென்றும் வாதாடிப் பார்த்தேன். சுல்தானாவுக்கு இருக்கிற கடுந் துயரத்தில் என்னைப் பரிதாபகரமாய் நோக்கினார். அங்கே மறுவினாடி நிற்க முடியாமல் ஓடோடியும் வந்தேன் என்மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால், நான் இப்பொழுதே போய், வேண்டுமானால் சுல்தானா ஸாஹிபாவையே ஈங்கழைத்து வந்து விடுகிறேன்!”

“வேண்டாம், அப்துல்லா! வேண்டாம்,” என்று கூறி, முஈஜுத்தீன் அவ் வார்த்தைகளைக் கேட்டு, அப்படியே சொக்கிப் போய்விட்டார்!

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment