அரண்மனையை விட்டுத் திடீரென்று முஈஜுத்தீன் மாயமாய் மறைந்துவிட்டார் என்னும் செய்தி காட்டுத்தீப்போல் காஹிராவெங்கும் பரவிவிட்டது. சிலர் அவருக்காகப் பரிதாபப்பட்டார்கள்; வேறு சிலர் இரக்கப்பட்டார்கள்; இன்னுஞ் சிலர் வருத்தப்பட்டார்கள். ஆனால், பலபேர் அச் செய்தி கேட்டு அணுத்துணையும்
வியப்படையவில்லை. என்னெனின், ஐயூபி சுல்தான்களும் அருமை ஷஜருத்துர்ரும் அலங்கரித்த அரண்மனையிலே முஈஜுத்தீனுக்கு ஒருவித உரிமையுமில்லை என்பது அவர்களின் அபிப்ராயம். எனவே, இல்லாத ஓர் உரிமையை முஈஜுத்தீன் இழந்துவிட்டதில் அவர்களுக்குக் கொஞ்சமும் சஞ்சலமில்லை.
அந்தப்புரத்திலோ, சுல்தானா ஷஜருத்துர் தம்மிரு கரங்களையும் முதுகின்புறமாகக் கட்டிக்கொண்டு, தலையைத் தொங்கப் போட்டு, ஏமாற்றுமும் பேராத்திரமும் பொங்கிப் பொங்கி வழிய, கோபமும் வெகு சினமும் பற்றிப் பற்றியெரிய, பசித்த புலி போனுக்குள்ளே மேலுங்கீழும் துரிதமாய் உலவுவதேபோல், ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்துக்கு மாறிமாறி நடந்தார். தப்பிய முஈஜுத்தீனும் அகப்படவில்லை; மாயமாய் மறைந்து போன விடமும் தெரியவில்லை என்றால், எப்படியிருக்கும் அம் மகாராணியாருக்கு?
இப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலே பஹ்ரீ வீரனொருவன் ஓட்டோட்டமாய் ஓடிவந்து, சுல்தானாவின் எதிரிலே குனிந்து ஸலாம் போட்டு, ஓடி வந்த களைப்பால் பெருமூச்சு விட்டு நின்றான். ஷஜருத்துர் உற்று நோக்கினார்.
“யா ஸாஹிபத்தல் ஜலாலத்தில் மலிக்கா! அகப்பட்டுக்கொண்டார், ஐபக்!”
“அகப்பட்டுக்கொண்டாரா? எங்கே அவர்? கொண்டு வா, இங்கே!”
“யா மலிக்கா! யான் அவர் ஒளிந்திருக்கிற இடத்தைத் தான் கண்டுபிடித்து வந்திருக்கிறேன். தக்க துணைவர்களைத் தாங்கள் தயவுகூர்ந்து என்னுடன் அனுப்பிவைத்தால், அவரை இக்கணமே இங்குக் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறேன்!”
“என்ன, துணைவர்களா! காஹிராவிலுள்ள முழுச்சேனையும் பூகம்பத்திலா புதைந்துவிட்டது? “முஈஜுத்தீனைப் பிடித்து வருவதற்குப் பயன்படாத சேனை இருந்தென்ன, இலாதொழிந்தென்ன? கூப்பிடு, நம் ஜாஹிர் ருக்னுத்தீனை!”
ஷஜருத்துர்ரின் கட்டளைக் குரலின் எதிரோலி நிற்குமுன்னே, ருக்னுத்தீன் அங்கு வந்து தோன்றினார்.
“நன்றாயிருக்கிறது , லக்ஷணம்! நீங்களெல்லாம் இந்தக் காஹிராவில் இருந்துகொண்டு என்ன செய்கிறீர்கள்? நின்றது நிற்கத் திடீரென்று ஒரு பெரிய பேர்வழி எம்முடைய அரண்மனைப் பாதுகாவலிலிருந்து தப்பி வெளியேறி ஓடிப்போய்விட்டார்; அவரை எப்படியாவது கையும் மெய்யுமாகப் பிடித்திழுத்து இங்கே கொணர்ந்து நிறுத்தவேண்டும் என்று நாம் கட்டளையிட்டால், நீங்கள் தூங்கிக்கொண்டா இருக்கிறீர்கள்? போர்க்களத்தில் லூயீ மன்னனைக் கைது செய்த உம்முடைய வீரம் இப்பொழுது காற்றில் கரைந்துவிட்டதோ?” என்று ஷஜருத்துர் உதடுகள் துடிக்க, ராஜ அகங்காரத்துடனே சீறிப் பாய்ந்து விழுந்து பிடுங்கினார்.
“யா ஸாஹிபத்தல் ஜலாலத்தில் மலிக்கா! அடியேன் தங்களின் அடிமை. யான் என்ன செய்யவேண்டுமென்பதை மட்டும் தங்கள் காலால் இடுங்கள்; இக்கணமே யான் தலையால் செய்து முடிக்கிறேன்!”
“கட்டளையிட வேண்டுமாம்! ஏன், நாம் இதுவரை பலமுறை சொல்லி வந்தது பற்றாதோ? நீர் இக்கணமே போதிய படைகளைத் திரட்டிக்கொண்டு இந்த மம்லூக்குடன் சென்று, இவன் காண்பிக்கிற இடத்திலிருக்கிற எம்முடைய கணவரைக் கைப்பிடியாய்ப் பிடித்திழுத்து வாரும்! வர மறுத்தால்…”
“யா ஸாஹிபா! அடியேன் அப்படியே செய்கிறேன். வர மறுப்பதாவது? யானென்ன ஜாஹிரா, அல்லது கொக்கா? ஆனால்….”
“ஆனால், என்ன!”
“யா மலிக்கா! ஒரு சாதாரண முஈஜுத்தீனைப் பிடித்திழுத்து வரவா இவ்வளவு படாடோபத்துடன் படை திரட்டிச் செல்ல வேண்டும்? ஐரோப்பாவிலுள்ள பெரிய கைஸரா என்ன, நாம் பெரிய சேனையுடன் சென்று சிறைசெய்து அழைத்துவருவதற்கு? கேவலம், ஒரு மூட்டுபூச்சி, ஒரு சீலைப்பேன்….”
“மூட்டுப் பூச்சியாவது, சீலைப் பேனாவது? குற்றவாளி குற்றவாளிதான் என்பதையும் அதிலும் இக் குற்றவாளி பெரிய கைஸராய் இல்லாவிட்டாலும், மிஸ்ரின் சுல்தானாவுக்கே விஷமிடச் சூழ்ச்சி செய்தவர் என்பதையும், திருட்டுத்தனமாக இவ்வரண்மனையைவிட்டு ஓடி ஒளிந்தவர் என்பதையும் நீர் மறந்து விட்டீர் போலும்! சிறிய பாம்பனாலும், பெரிய தடியாயெடுத்து அடிக்க வேண்டாமா? சீக்கிரம் புறப்படும்! ஏன் இன்னம் இங்கேயே நிற்கின்றீர்?”
“யா ஸாஹிபத்தல் ஜலாலத்தில் மலிக்கா! அடியேனை விடத் தாங்கள் எத்தனையோ ஆயிரம் பங்கில் அரச தந்திர சாதுர்ய யுக்திகளைத் தெரிந்துகொண் டிருக்கிறீர்கள். ஆனால், இந்த சிறு விஷயத்தில்…”
ஷஜருத்துர் ஆத்திரம் பொங்க, ருக்னுத்தீனை உச்சிமுதல் உள்ளங்கால்வரை உறுக்கி ஒரு பார்வை பார்த்தார்.
“தாங்கள் அடியேன்மீது கொன்று தீர்க்கிற பழியுடனே இருக்கிறீர்கள் என்பதை யான் காண்கின்றேன். ஆனால், அன்று சுல்தான் ஸாலிஹ் அகால மரணம் அடைந்தபொழுது தங்களுக்கிருந்த அற்புதமிக்க பொறுமை இன்று இந்தச் சிறிய விஷயத்தில் இல்லாமற் போய்விட்டதைக் கண்டு நான் பெரிதும் அதிசயிக்கிறேன்!” என்று அடிப்படை மூலாதாரத்தில் கைவைத்தார் அவ் வெற்றிவீரர்.
ஷஜருத்துர் சட்டென்று மேனி குன்றிவிட்டார். இது போதுள்ள சூழ்நிலையிலே அந்தப் பழைய சம்பவத்தை ருக்னுத்தீன் ஏன் ஞாபகப்படுத்த வேண்டுமென்பதே அந்த சுல்தானாவுக்குத் தோன்றவில்லை. சீற்றந்தணிந்த, மாபெரிய மாறுதலடைந்த பார்வையுடனே ருக்னுத்தீனை விலவிலப்புடனே கூர்ந்து நோக்கினார்.
“ருக்னுத்தீன் நீர் என்ன கூறுகிறீர்?” என்று ஸப்த நாடியும் ஒடுங்கிப்போய்ச் சாதாரணமாய் வினவினார் ஷஜருத்துர்.
“யா மலிக்கா! அன்று தாங்கள் பொறுமைமிக்க சாதுரியமான தந்திரத்தைக் கடைபிடித்தால்தான் இணையற்ற மாபெரும் வெற்றியைக் கண்டீர்கள். அஃதேபோல், இன்றும் தாங்கள் அப்படிப்பட்ட பொறுமைமிக்க சாதுரியத்தைப் பிரயோகித்தால் மட்டுமேதான் கோரிய பலன் கிட்டுமென்று அடியேன் அபிப்ராயப்படுகிறேன். நம்முடைய ஜன்ம விரோதி ஃபக்ருத்தீன் செத்துமடிந்த பிறகு அந்தப் போக்கிரியின் கையில் மெழுகாயிருந்த ஒரு சாதாரண முஈஜுத்தீனைப் பிடிக்க நாம் பெரிய படாடோபத்துடன் போரெழுந்து செல்வது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. தங்களுடைய முழுச் சேனைப் பலத்தையும் இவ் அடியேனையும் வைத்துக்கொண்டு தாங்கள் பலாத்காரத்தால் சாதித்துக்கொள்ள நாடுகிற சிறிய, அற்பக் காரியத்தைத் தாங்கள் தங்களுடைய ஒப்பற்ற மதியூகத்தாலே மிகப்பெரிய வெற்றியாக முடித்துக் கொண்டு விடலாமே! இதற்கு எதற்கு இவ்வளவு தடபுடல்? அடியேன் கூறுவதில் தவறேதும் காணப்படின், என்னை மன்னியுங்கள், மகாராணி!”
ஷஜருத்துர் கடுமையாக யோசித்தார். ருக்னுத்தீன் எதைச் சொல்வதற்கு இப்படியெல்லாம் நீட்டி நெளிக்கிறார் என்பதைக் கூர்மையுடன் சிந்தித்தார்.
“ஏன்? நாம் வேறென்ன செய்ய வேண்டுமென்று நீர் கூறுகிறீர்?” என்று சற்றுப் பதஷ்டத்துடன் வினவினார் ஷஜருத்துர்.
“யா மலிக்கா! தாங்கள் நயவஞ்சகமாக முஈஜுத்தீனை இங்கு வரவழைத்து விட்டீர்களானால், நாம் எதையுமே மிக எளிதாக சாதித்துக்கொண்டு விடலாமென்று யான் கருதுகிறேன். இப்போதிருக்கிற சூழ்நிலையில் நாம் ஏதும் தாறுமாறாய் நடந்துகொண்டு முஈஜுத்தீனைப் பலாத்காரமாக பிடித்திழுத்து வருவோமானால், புர்ஜீகளுக்கிருக்கிற வயிற்றுக் கடுப்பில் அவர்கள் எதையும் செய்யத் துணிந்துவிடக்கூடும். பிறகு எல்லாவற்றையும் சமாளிப்பதென்பது முடியாமலும் போய்விடக்கூடும். ஒருவருக்கும் தெரியாமல் மிகவும் தந்திரமாக நாம் முஈஜுத்தீனை இங்குக் கொண்டுவந்து விடுவதுதான் எனக்குச் சிலாக்கியமென்று தோன்றுகிறது, அரசியாரே!”
“பலாத்காரத்தைப் பிரயோகிக்காமல் நாம் எப்படி அவரை இங்கே கொண்டுவந்து சேர்ப்பது? சூடுகண்ட பூனை அடுப்பண்டை எப்படி வரும்? எனக்கொன்றும் விளங்கவில்லையே!” என்று நிதானமாய் மொழிந்தார் சுல்தானா.
“யா மலிக்கா! சகல கலையும் கற்றுத் தேர்ந்த தங்களுக்கா அடியேன் போதிக்கவேண்டும்? மலிக்காத்துல் முஸ்லீமீனாகிய தங்களால் சாதிக்க முடியாதது என்று கூடவா இக் குவலயத்தில் ஒன்று இருக்க முடியும்? ஒரு முறை முஈஜுத்தீனை மயக்கிய தங்களுக்கு மறுமுறையும் அப்படி மயக்கி வெற்றி காண்பது ஒரு பிரமாதமான செய்கையா? பரம விரோதிகளையும் கன்னெஞ்சர்களையும் பொல்லாத மூர்க்கர்களையுங்கூட அப்படியே மெய்ம்மறந்து போகும்படி செய்யக்கூடிய தங்கள் அபூர்வ வசீகரண சக்தியைத் தாங்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரயோகிக்காமல், வேறெப்படிப்பட்ட நிலைமையிலேதான் உபயோகித்துக் காண்பிக்கப் போகிறீர்கள்? உயிரிழந்த ஒரு சுல்தானுக்காக இங்குள்ள அத்தனை பேரையும் அப்படியே வசக்கிவிட்ட தாங்கள், உயிருள்ள தங்களுக்காக ஒரு முஈஜுத்தீனை வசக்குவது என்ன பிரமாதம்! அவனை நயவஞ்சகமாக இங்கு வரவழைத்து எவருக்கும் தெரியாமல் பரம ரஹஸ்யமாகப் பழி தீர்த்துக் கொள்வதை விடுத்துத் தாங்கள் ஏன் வீணே கலங்கித் தவிக்க வேண்டுமோ?” என்று வாழைப் பழத்தில் ஊசியேற்றுவதேபோல் சுல்தானாவை முகஸ்துதி செய்து தூபம் போட்டு விட்டார் ருக்னுத்தீன்.
முகஸ்துதிக்கு இலகுவாக ஷஜருத்துர் இலக்காவது வழக்கமில்லை என்றாலும், இப்பொழுது அவர் பலியாகி விட்டார். என்னெனின், எப்படியாவது முஈஜுத்தீனை மிகப் பொருத்தமாகப் பழிவாங்கித்தான் தீரவேண்டும் என்னும் ஒரே குறியின் மீதே மிஸ்ரின் சுல்தானா கண்ணுங் கருத்துமாய் இருந்தபடியால், ருக்னுத்தீனின் இதமொழிகளுக்கு இரையாகினார்.
“அப்படியானால், எவனுக்கும் தெரியாமல் இரகசியமாகத்தான் பழிவாங்கிக் கொள்ளவேண்டுமென்று நீர் உபதேசிக்கிறீரோ?”
“யா மலிக்கா! அடியேனுக்கு அஃதொன்று மட்டுமே சாலச் சிறந்த மார்க்கமாய்ப் புலப்படுகிறது. என்னெனின், தங்களுடைய அனுபவங்களும் என்னுடைய அனுபவங்களும் நமக்கு என்ன பாடத்தைப் போதித்திருக்கின்றன என்பதைத் தாங்கள் மறந்தா போய் விட்டீர்கள்? வீண் படாடோபம் அளிக்கிற சிறிய வெற்றியைவிட, மெளனமும் மகா ரகசியமும் மட்டுமே அரிய பெரிய அபூர்வ வெற்றியை அளித்திடவில்லையா? அன்று தாங்கள் என்னிடம் பளிக்கறையில் என்ன போதித்தீர்கள்? இன்று தங்களுக்கு அந்தப் பொறுமை ஏன் இல்லாமற் போய்விட்டது? இப்பொழுது அந்த முஈஜுத்தீன் இருக்கிற இடம் தெரியுமல்லவா? தாங்கள் சாமர்த்தியமாக மகிடி பிடித்தால், அந்தப் பாம்பு தானே இங்கே வந்து தலை சாய்த்து ஆடுகிறது! பேசாமல் கூடையைக் கவிழ்த்து மூடிவிட்டால், எல்லாம் சரியாய்ப் போய் விடுகிறது!”
“நீ அந்த ஐபக்கை எங்கே சந்தித்தாய்?” என்று முதலில் செய்தி கொணர்ந்த பஹ்ரீ வீரனை நோக்கிச் சட்டென்று வினவினார் ஷஜருத்துர்.
“கெஜேயின் கடை வீதியில் சந்தித்தேன், மலிக்கா! தாடியையும் மீசையையும் ஒருங்கே மழுங்கச் சிரைத்துப் போட்டுவிட்டுக் கொஞ்சமும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத ஒரு மம்லுக்கே போல் அலைந்துகொண்டிருக்கிறார் அரசி!” என்று வாய்ப்பொத்திச் சிரிப்பை அடக்கிக்கொண்டு அந்த பஹ்ரீ பதிலிறுத்தான்.
“தாடியையும் மீசையையும் சிரைத்துக் கொண்டாரோ!”
“ஆமாம், மலிக்கா! தலையில்கூட ஒரு மொட்டையான, கிண்ணம்போன்ற சிறிய ஒட்டுத்தொப்பியை மாட்டிக் கொண்டிருக்கிறார்! பார்த்தால்….”
“குரங்குபோல் இருக்கிறதாக்கும்! தொடை நடுங்கி; பயந்தாங்கொள்ளி! அவரை நீ எப்படிக் கண்டுபிடித்தாய்?”
“யா மலிக்கா! ஷாம் தேசத்துக்கெல்லாம் போய்த் துணிமணி வியாபாரம் செய்துவிட்டு, ஒரு வர்த்தகன் நிறையப் பணம் சேர்த்துக்கொண்டு சமீபத்தில் கெஜேக்குத் திரும்பினானென்று நான் கேள்விப்பட்டேன். அவன் யாரென்று பார்த்து வரலாமென்று அங்குச் சென்றேன். அவ் வர்த்தகன் நிரம்ப அனுபவம் வாய்ந்த ஓர் ஆத்மாவாகத் தெரிகிறது. புரட்சிகரமாகவே எதையும் பேசுகிறான்; எல்லா மக்களும் அவனுக்கிருக்கிற செல்வத்துக்காக அவனைப் பெரிதாக மதிக்கிறார்கள். அவனுடனேதான் இந்த மழுங்கச் சிரைத்த மாஜீ சுல்தான் கோமாளியே போலவும், மம்லூக்கே போலவும் சுற்றித் திரிகிறார். நான் அவரைச் சுலபமாக அடையாளம் கண்டுபிடித்து விட்டேன், மலிக்கா!”
“நீயுமொரு மம்லூக் கல்லவா? அஃதிருக்கட்டும். அவர் உன்னைப் பார்த்தாரோ!” என்று ருக்னுத்தீன் குறுக்கு விசாரணைப் புரிந்தார்.
“இல்லை! குனிந்த தலையை அவர் நிமிர்த்துவதற்கும் அஞ்சுவதாகத் தெரிகிறது. எப்பொழுதும் தரையை நோக்கி தலை வளைந்தே இருக்கிறது, ஸாஹிப்!”
“தாடியிழந்த, தம் முண்டனமான முகத்தின் தேஜஸைக் காண அவருக்கே வெட்கமாயிருக்கிறது போலும்!” என்று வெறுப்புடன் சிரித்துக்கொண்டே செப்பினார் சுல்தானா.
இதற்குள் சுல்தானா ஸாஹிபாவுக்கு அவசரமான யோசனை ஒன்று தோன்றிது. உடனே, செய்தி கொணர்ந்த மம்லூக் வீரனையும், மற்றப் பாதுகாவலர்களையும் அங்கிருந்து அகலும்படி கட்டளையிட்டுவிட்டு, ருக்னுத்தீனைத் தனியே அழைத்தார்.
“ஏ, ஜாஹிர்! எனக்கொரு யோசனை தோன்றுகிறது!” என்று சட்டெனக் கூறினார் ஷஜருத்துர்.
ருக்னுத்தீன் தம்முடைய ஒற்றைக் கண்ணைச் சிம்புளித்துக் கொண்டே அரசியை நோக்கினார்.
“முஈஜுத்தீனை நான் நயவஞ்சகமாக இங்கு வரவழைத்து விடுவது பிரமாதமில்லை. ஆனால், புர்ஜீகளும் அவரும் சேர்ந்து நமக்கெதிராகச் சூழ்ச்சி செய்வதற்குள் நாம் நம்முடைய திட்டத்தை முன்னேறச் செய்து, எல்லாவற்றையும் தீர்த்து முடித்து விட வேண்டுமல்லவா? எனவே, நாம் இப்பொழுதே எல்லாத் திட்டங்களையும் ஒழுங்காக வகுத்துக்கொள்ள வேண்டுமே!”
“யா ஸாஹிபத்தல் ஜலாலத்தில் மலிக்கா! யானும் தங்களிடம் இதையே தெரிவிக்க விழைந்தேன். அஃதாவது, ஃபக்ருத்தீனைப் பறிகொடுத்த புர்ஜீகள் இப்பொழுது தங்கள்மீது பழி தீர்த்துக் கொள்ளத் துடியாய்த் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே, முஈஜுத்தீன் இவ் வரண்மனைக்குள் மீண்டும் வந்துவிட்டால், அந்த வாலிழந்த அத்தனை நரிகளும் அவரைச் சூழ்ந்துகொண்டுவிடும். இது நாம் எடுக்கிற நடவடிக்கைகளுக்கும் இடைஞ்சலை விளைக்கலாம்; அல்லது அவர்களெல்லாரும் சேர்ந்து போடுகிற திட்டங்களுக்கும் உதவியாய்ப்போய் விடலாம். எனவே, முஈஜுத்தீன் இங்கு வந்து நுழைந்த மறுநிமிஷத்திலேயே நாம் மேலுலகுக்கு அவரை அனுப்பிவிட வேண்டும். இப்படிச் ‘சட்புட்’டென்று காரியங்களைச் செய்து முடிப்பது மட்டுந்தான் விவேகமாகுமன்றி, வீணே நேரத்தை வளர்த்துவதென்பது பேராபத்தை நமக்கே விளைத்தாலும் விளைத்துவிடலாம். எல்லாம் தாங்களறியாததா, ஜலாலத்துல் மலிக்கா!”
ஷஜருத்துர் தீரயோசித்தார். தம்முடைய கணவராயிருந்த ஒருவருக்கு இந்தக் கதியா வரவேண்டுமென்பது பளிச்சென்று அவருடைய சிந்தனையில் மின்வெட்டி மறைந்தது.
“ருக்னுத்தீன்! வலையில் சிக்கிய மானைத் தப்பிவிடுபவள் ஷஜருத்துர் ரல்லவென்பதை நீர் ஏற்கனவே அறியமாட்டீரோ? முஈஜுத்தீன் இங்கு வந்து நுழைந்த பின்னர் ஓர் அரைக்கணமாவதா அவருடைய கழுத்துக்கு மேலே சிரசு ஒட்டிக்கொண்டிருக்கும்? என் கொலையாளிகளின் வாள்களின் கூர்மையை நீர் அறியமாட்டீர்!” என்று குரூர வீறாப்புடன் பல்லைக் கடித்துப் பகர்ந்தார் ஷஜருத்துர்.
வீராதிவீரரான அதிதீரசூர பராக்கிரம ருக்னுத்தீனையே அவ்விறுதி வார்த்தைகள் ஒரு குலுக்குக் குலுக்கித் தூக்கி வாரிப் போட்டன.
“யா ஸாஹிபா! என்னை மன்னியுங்கள். தங்கள் சிப்பந்திகளின் சக்தியை யான் மிக நன்றாய் அறிவேன். தங்களுடைய மனோதிடத்தையும், மாற்ற முடியாத முடிவையும் யான் முன்னமே நன்கு தெரிந்துகொண்டுதான் இருக்கிறேன். ஆனால், இதுவரை தாங்கள் மற்றவர்கள்மீது பழிதீர்த்துக் கொண்டதற்கும், இப்பொழுது தீர்க்கப்போகிற முஈஜுத்தீனுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் காணப்படுகிறதே! அதற்குத்தான் யோசிக்கிறேன்.”
“என்ன வித்தியாசம்?”
“வேறென்று மில்லை. எஃகைவிடக் கெட்டியான திடசித்தமும், வைரக் கல்லை நிகர்த்த மனோ வைராக்கியமும் எவ்வளவுதான் தங்களுக்கு மிகுந்து காணப்பட்ட போதினும், இறுதி நிமிடத்தில் தங்களுக்கு ஒருகால்… அவர் முன்னம் தங்களின் ஆருயிர்க் கணவராயிருந்தாரே என்னும்….”
“ஆருயிர்க் கணவராய் இருந்தாரே என்னும் இரக்கத்தால், நான் தங்கக் கத்தியையெடுத்து உயர்ந்த கத்தியாயிற்றே என்று என் வயிற்றிலேயே குத்திக்கொள்வேன் போலும்! ருக்னுத்தீன் நன்றாயிருக்கிறது! என்னுடைய இன்னுயிரைப் பறிக்க நச்சு விஷம் கொடுத்தவனுக்கு உடந்தையாயிருந்த கொடிய துரோகி முஈஜுத்தீன் என்பதை ஷஜருத்துர்ரா மறந்து விடுவாள்? சற்றே அஜாக்கிரதையாய் இருந்திருப்பின், என்னுயிர் அன்றே மேலோகம் ஏகியிருக்குமென்பதை இந்த சுல்தானாவா மறந்துவிடுவாள்? பழிவாங்குவதில் இணையற்ற சுல்தான் ஸாலிஹ் நஜ்முத்தீனின் மனைவியாய் இருந்த நானா, கிடைக்கிற சந்தர்ப்பத்தைத் தவற விடுபவள்? நான் ஏமாந்த சமயமாகப் பார்த்து என் இன்னுயிரைக் குடிக்கச் சூழ்ச்சிசெய்த முஈஜுத்தீனின் பொன்னுயிரை நான் குடிக்காமற் போனால்தான் என் பசி தணியுமா? கண்ணும் துஞ்சுமா? ருக்னுத்தீன்! என் வயிற்றெரிச்சலை மீண்டும் கிளப்பாதீர்! ஒருமுறை ஏமாந்து கைந்நழவ விட்டுவிட்ட நான், மறுமுறை கிடைக்கிற சந்தர்பப்பத்தையும் முட்டாட்டனமாய்த் தவறவா விட்டுவிடுவேன்?”
“சரி!” என்று சொல்கிற பாவனையில் தலையாட்டினார் அந்த பஹ்ரீ மம்லூக் தலைவர்.
அந்தக் கணமே சுல்தானா ஷஜருத்துர் வீராவேசம் பொங்கப் பற்களை மென்றுகொண்டே ஒரு நீண்ட கடிதத்தை எழுதி முடித்தார். ருக்னுத்தீனோ, பேசாமல் ஒதுங்கி நின்றிருந்தார். முன்னொரு முறை இதே ஷஜருத்துர் ஸாலிஹின் மரணத்தையடுத்துத் தம் கண்ணெதிரில் தயாரித்த பொய்யான அரசகட்டளை ருக்னுத்தீனின் நினைவுக்கு வந்தது. முன்பு செத்துப்போன ஒரு கணவருக்கு உயிர் கொடுக்க வென்று தயாரித்த கடிதத்தைப்போல், அதே கையாலேயே இப்பொழுது உயிருள்ள மற்றொரு கணவருக்கு மரணத்தைக் கொடுக்க ஷஜருத்துர் முனைந்திருக்கிற சக்தியைக் கண்டு புன்முறுவல் பூத்த வதனத்துடனே நின்றார் அவர்.
எழுதி முடிந்ததும் விஷமப் புன்சிரிப்புடனே ருக்னுத்தீனை நோக்கினார் ஷஜருத்துர்.
“இஃது என்ன தெரியுமா? இதுதான் அபயநிருபம்! ஆம். முஈஜுத்தீனுக்கு நானெழுதி முடித்திருக்கிற அபய நிருபம்! என் முழுச் சாமார்த்தியத்தையும் காட்டி மிகக் கெட்டிக்காரத்தனமாய் வரைந்திருக்கிற, மெய்போன்ற பொய்க் கடிதம்! படித்துப் பாரும்!” என்று முகத்தெதிரில் நீட்டினார், அவர் எழுதியதை.
தொடரும்…
-N. B. அப்துல் ஜப்பார்
Image courtesy: deviantart.com
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License