இமாம் மாலிக் (ரஹ்) பிறந்தது, வளர்ந்தது, குடியிருந்தது என்று அவர் சுவாசமெல்லாம் நிறைந்திருந்தது மதீனா வாசம் மட்டுமே. அந் நகரமோ அச்சமயம் இஸ்லாமிய அறிஞர்களால் நிரம்பி வழிந்தது. சஹாபாக்களிடமிருந்தோ அவர்களுக்கு அடுத்த
தலைமுறையினரான தாபியீன்களிடமிருந்தோ நேரடியாகப் பாடம் பயின்று தேறிய அறிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் அங்கு ஏராளம் நிரம்பியிருந்தனர். அது அவரது கல்விக்கும் இஸ்லாமிய ஞானத்திற்கும் ஆகச் சிறந்த வாய்ப்பாய் அமைந்துபோய், அவர் பயின்று பருகியதெல்லாம் கலப்படமற்ற, ஆதாரப்பூர்வமான ஞானம்.
திரும்பிய பக்கமெல்லாம் அறிஞர்கள் நிரம்பியிருந்ததால் கல்வி ஞானம் பயில வேண்டும் என்பதற்காக காடு, மலை, பாலை தாண்டியோ, கரை கடந்தோ வெளியூர்களுக்கும் வெளி நாடுகளுக்கும் செல்ல வேண்டிய அவசியமெல்லாம் அவருக்கு ஏற்படவே இல்லை. யாத்திரைக்காக மக்கா என்ற அளவில் மட்டுமே அவரது பயணம் அமைந்தது. கலீஃபா ஒருவர் அவரைத் தம்முடன் இஸ்லாமிய தலைநகருக்கு வந்துவிடும்படி அழைப்பு விடுத்தபோது கூட, “மன்னிக்கவும். ‘அவர்கள் அறிந்திருப்பின் மதீனாவே அவர்களுக்குச் சிறப்பானது’” என்ற நபிமொழியைக் காரணம் காட்டித் தட்டிக் கழித்துவிட்டார்.
மதீனாவில் நிரம்பியிருந்த அறிஞர்கள் ஒருபுறம் இருக்க, அது மஸ்ஜிதுந் நபவீயின் இருப்பிடம், நபியவர்களும் எண்ணற்ற நபித் தோழர்களும் வாழ்ந்து மறைந்த பட்டணம் என்ற சிறப்புத் தகுதிகளால், மக்காவுக்கு யாத்திரை வரும் முஸ்லிம்கள், அந் நகருக்கும் வருகை புரிவது தவறாமல் நடைபெற்று வந்தது. அதனால் முஸ்லிம் உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த அறிஞர்களைச் சந்திக்கவும் கலந்துரையாடவும் மார்க்கத் தொடர்புடைய பல வினாக்களுக்கு அவர்களது தீர்ப்புகளையும் கருத்துகளையும் கேட்டறியவும் இமாம் மாலிக்கிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமைந்து வந்தன.
சிரியாவைச் சேர்ந்த இமாம் அல்-அவ்ஸாயீ, இமாம் அபூஹனீஃபாவின் மாணவர் அபூயூஸுஃப் ஆகியோரோடு அவருக்கு நிகழ்ந்த சந்திப்புகளெல்லாம் அவ்விதமானவையே. தவிரவும் அந்தச் சந்திப்புகளும் கலந்தரையாடலும் சுவையான நிகழ்வுகள். சட்டத் தீர்ப்பில் மாறுபட்ட கருத்து கொண்ட அவர்கள் சந்தித்து உரையாடியபோது மனத்தில் வெறுப்பும் வேறுபாடும் துளி இருக்க வேண்டுமே! மருந்துக்கும் மறதிக்கும்கூட அது அவர்களிடம் இருந்ததாகத் தெரியவில்லை.
மதீனாவுக்கு வந்திருந்த இமாம் அபூஹனீஃபாவின் புதல்வர் ஹம்மாத் இப்னு அபீஹனீஃபா இமாம் மாலிக்கைச் சந்திக்க வந்தார். அறையின் உள்ளே மேலோரமாக அவர் அமர்ந்திருக்க அறையின் இருபுறக் கதவுகளின் ஓரம் நெடுக மாணவர்கள் அமர்ந்திருந்தனர். அறை வாசலில் வந்து நின்றவரைப் பார்த்து “யார் அது?” என்று விசாரித்தார் இமாம் மாலிக். அறிமுகப்படுத்திக் கொண்ட ஹம்மாத், “எனக்குத் தங்களிடம் கேட்டு அறிய ஒரு வினா உண்டு” என்றார். வரவேற்று, தம்மருகே அவரை அழைத்தார் இமாம். உள்ளே சென்ற ஹம்மாதைத் தமக்கு வெகு அருகில் அமர்த்திக்கொண்டார். இதைக் கவனித்த மாணவர்கள் அனைவரும் முக்கிய விருந்தினர் வந்திருக்கிறார் என்று குறிப்பறிந்து கலைந்து சென்றனர்.
வினா தொடுக்க வந்ததோ ஹம்மாத் தான்! ஆனால் ஒரு குறிப்பிட்ட வினாவைத் தெரிவித்து, இதற்கு உங்கள் தகப்பனார் என்ன கூறியிருக்கிறார், அதற்கான அவரது வியாக்கியானம் என்ன என்று விசாரிக்க ஆரம்பித்துவிட்டார் இமாம் மாலிக். அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் மேலும் பல விஷயங்களை ஒன்றன்பின் ஒன்றாகச் சொல்லி, அவற்றை இமாம் அபூஹனீஃபாவின் வழித்துறை எப்படி அணுகுகிறது, அதற்கான ஆதாரமாக அது எவற்றைக் கருதுகிறது என்று மிக விரிவாகக் கேட்டு அறிந்திருக்கிறார். அதற்குப் பிறகே ஹம்மாதின் வினாவுக்குத் தம்முடைய விடையைப் பகர்ந்து வழியனுப்பி வைத்திருக்கிறார்.
‘அதற்குப் பிறகு அம் மாணவர்கள் மீண்டும் வகுப்புக்குத் திரும்பினர்’ என்று தாம் இமாம் மாலிக்குடன் நிகழ்த்திய சிறப்புச் சந்திப்பை விவரித்திருக்கிறார் ஹம்மாத் இப்னு அபீஹனீஃபா.
அந்தளவிற்கு உலகின் பிற பகுதிகளில் உள்ள மார்க்க அறிஞர்களின் கருத்துகளை கற்று அறியும் ஆர்வம் அவருக்கு இருந்திருக்கிறது. பிற்காலத்தில் அவர் பாட வகுப்புக் குழுமங்கள் நடத்தியபோது, மார்க்க அறிஞர்கள் மட்டும் கலந்துகொள்ளும் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றுள்ளன. மதீனாவில் உள்ள அறிஞர்கள், கல்வி கற்கவோ இதர காரணங்களுக்காகவோ அச்சமயம் அந் நகருக்கு வருகை புரிந்துள்ள அறிஞர்கள் என்று அறிஞர்களின் சிறப்புக் குழாம் அது. அப்படியான அந்தச் சிறப்பு வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும், இமாம் மாலிக்கிடம் பாடம் பயில வேண்டும் என்பதற்காகவே பல பகுதிகளிலிருந்தும் பல அறிஞர்கள் பயணம் புரிந்து வந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான தகவல்.
நாம் முந்தைய அத்தியாயத்தில் பார்த்ததைப் போல், இமாம் மாலிக்கின் ஞானம் குர்ஆன், ஹதீஸ், நபியவர்களின் மார்க்கத் தீர்ப்புகள், நபித் தோழர்களின் மார்க்கத் தீர்ப்புகள் என்பதுடன் நின்று விடவில்லை. இதர இஸ்லாமிய வழித்துறைகளின் நம்பிக்கைள், பல்வேறு பகுதிகளில் முளைவிட்டு வளர ஆரம்பித்த பிரிவினைவாதிகளின் குழப்பங்கள், முரண்பட்டவர்களின் கருத்துகள் ஆகியனவற்றையும் ஆழ உள்வாங்கிப் புரிவதும் அதன் ஓர் அங்கமாக நிகழ்ந்திருக்கிறது.
உதுமான் (ரலி), அலீ (ரலி) இருவரும் கொலையுண்ட பிறகு ஷிஆக்கள், கவாரிஜ்கள் என்ற இருபெரும் பிரிவினைகள் உருவாகின. அவர்கள் குர்ஆனைத் தப்பிதமாகப் புரிந்துகொண்டது, பிளவுபட்ட அவர்களது இஸ்லாமிய நம்பிக்கை, அவர்களது சிந்தனைப் போக்கு ஆகியனவற்றையும் தம் ஆசான் இப்னு ஹுர்மூஸிடம் இமாம் மாலிக் கற்றறிந்தார்.
ஆனால் –
அந்தத் தகவல்களையும் விவரங்களையும் அதற்கான விளக்கங்களையும் ‘இந்தா! இதோ!’ என்று தம்முடைய மாணவர்கள் அனைவருக்கும் அவர் தெரிவிக்கவும் இல்லை; பயிற்றுவிக்கவும் இல்லை. ஏனெனில், அவையெல்லாம் அந்தக் குறிப்பிட்ட துறையில், அந்தக் குறிப்பிட்ட விஷயங்களில் ஆர்வமுடையவர்களுக்கும் வழிகேட்டில் இருப்பவர்களிடம் தூய்மையான இஸ்லாமியச் சித்தாந்தத்தை நிலைநாட்டுவதற்காக மல்லுகட்டுபவர்களுக்கும் மட்டுமே பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது.
பள்ளிவாசலில் அவர் பாட வகுப்புகள் நடத்தும்போது, யார் வேண்டுமானாலும் அமரலாம்; செவியுறலாம்; பயிலலாம். ஆனால் அவர் தம் இல்லத்தில் இருக்கும்போது, தம் மாணவர்களுக்கான வகுப்பு முதலில் தனியாக நடைபெறும். அதில் கலந்துகொள்ள அவரது மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி. அதன் பிறகு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்குச் சொற்பொழிவோ, பாடமோ நிகழ்த்தப்படும். அவரவர் அறிவுத் திறனுக்கு ஏற்ப அவரவருக்குரிய முறையில் ஞானம் கற்றுத்தரப் படவேண்டும் என்பதே அவரது வழிமுறை. பாத்திரம் அறிந்து ஞானத்தைப் புகட்டியிருக்கிறார் இமாம் மாலிக்.
ஹஜ் யாத்திரையின்போது பல பகுதியைச் சேர்ந்த மக்கள் அவரைச் சந்திக்க வருவார்கள். அவர்களை இமாம் மாலிக் சந்தித்த விதம் சற்று வித்தியாசமானது.
அது-
(தொடரும்)
சமரசம் பத்திரிகையில் மார்ச் 1-15, 2018 இதழில் வெளியானது
அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License