இமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) – 01

by நூருத்தீன்

“கசையடி” என்று தண்டனையை அறிவித்தார் மதீனா நகரின் ஆளுநர் ஜஅஃபர் இப்னு ஸுலைமான். தண்டனை வழங்கப்பட்டவருக்கு ஏறத்தாழ 54 வயதிருக்கும். பணியாளர்கள் அவரை அழைத்து வந்தார்கள். நிற்க வைத்தார்கள்.

அடித்தார்கள். கசையால் அடித்துப் புரட்டியதில் அம் மனிதருக்குக் கை எலும்பு நகர்ந்து, மரணவலி. ஆனால் அந்த அத்தனைக் கொடுமையையும் தண்டனையையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டு உறுதி கலையாமல் இருந்தார் அந்த மனிதர்.

அப்படியென்ன அக்கிரமம் புரிந்தார் என்று இப்படியொரு தண்டனை? ஹதீஸ்! ஒரு குறிப்பிட்ட நபிமொழி. அதை அவர் அறிவித்திருக்கிறார். அவ்வளவுதான். ஆட்சியாளர்களுக்கோ, அது வெறுமே ஹதீஸாக ஏட்டளவில் நின்றுவிடாமல் பாக்தாதில் அமர்ந்திருக்கும் அப்பாஸிய கலீஃபாவின் அரியணையை அசைப்பதற்கு உறுதுணையாகிவிடுமே என்ற அச்சம் ஏற்பட்டுவிட்டது.  

விளைவு  மதீனாவில் வசித்த அவருக்குக் கசையடி!

அலீ (ரலி) அவர்களின் மறைவிற்குப் பிறகு பனூ உமையாக்கள் வசம் முழு ஆட்சியும் வந்தடைந்தது. அந்த கிலாஃபத்தோ வாரிசு அடிப்படையில் தலைமை நியமிக்கப்பெற்று தொடர ஆரம்பித்துத் தகுதியெல்லாம் இரண்டாம் பட்சமானது. ஏற்கெனவே நிலவிவந்த அரசியல் காரணங்களும் ஆட்சியாளர்கள் மீது ஏற்பட்ட குறைகளும் சேர்ந்து சேர்ந்து, அதிருப்தி பெருகி, புகைச்சல் எழும்பி, அது பரவிப் படர ஆரம்பித்தது. பனூ உமையாக்களின் ஆட்சியை எதிர்த்தவர்கள் முக்கியமானதாக ஒரு காரணத்தை முன்வைத்தனர். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினருக்கும் வழித்தோன்றல்களுக்கும் மட்டுமே ஆட்சிப் பொறுப்புக்கான அதிகாரம் உள்ளது என்பது அவர்களது வாதம். அதன் அடிப்படையில் அலீ (ரலி), அப்பாஸ் (ரலி) ஆகியோரின் வழித்தோன்றல்கள் பனூ உமையாக்களுக்கு எதிராக ஒன்றிணைந்து ஆட்சியைக் கைப்பற்றும் கிளர்ச்சி உருவாகி மும்முரமானது.

அக்கிளர்ச்சி உச்சகட்டத்தை அடைந்து, பனூ உமைய்யாக்களின் ஆட்சி அந்திம காலத்தை நெருங்கியதும் நபியவர்களின் கோத்திரமான ஹாஷிமீக்கள் முஹம்மது இப்னு அப்துல்லாஹ்வை கலீஃபாவாகத் தேர்ந்தெடுத்து அவருக்குச் சத்தியப் பிரமாணமும் அளித்து விட்டனர். இந்த முஹம்மது இப்னு அப்துல்லாஹ் யார் என்றால் அலீ-ஃபாத்திமா தம்பதியரின் புதல்வரான ஹஸன் (ரலி) அவர்களின் கொள்ளுப் பேரர்.

ஆனால், பனூ உமைய்யாக்களின் ஆட்சி கலைந்ததும் அப்பாஸியிர்கள் எனப்படும் அப்பாஸ் (ரலி) அவர்களின் வழித்தோன்றல்களின் கைக்கு கிலாஃபத் வந்து சேர்ந்து, அலீ (ரலி) அவர்களின் வழித்தோன்றல்கள் தனிப் பிரிவாகிப் போனார்கள். இதுநாள் வரை அப்பாஸியர்களுடன் சேர்ந்து பனூ உமையாக்களை எதிர்த்துவந்த அவர்கள் அடுத்து இப்பொழுது அப்பாஸிய ஆட்சியை எதிர்க்க நேர்ந்து, உருவானது புதுக் கிளர்ச்சி.

அப்பாஸிய கிலாஃபத்தின் முதல் கலீஃபாவாக ஆட்சியமைத்தவர் அப்பாஸ் (ரலி) அவர்களின் பேரரின் பேரர் அஸ்-ஸஃபாஹ் எனப்படும் அபுல் அப்பாஸ் அப்துல்லாஹ். அவரது ஆட்சி நான்கு ஆண்டுகளில் முடிவுற்று அடுத்து பதவிக்கு வந்தார் அவருடைய சகோதரர் அல்-மன்ஸுர் எனப்படும் அபூ ஜஅஃபர் அப்துல்லாஹ். ஏறத்தாழ இருபது ஆண்டுகள் நீடித்த இவரது ஆட்சிதான் நிலையான அப்பாஸிய கிலாஃபத்துக்கு வழி வகுத்திருக்கிறது. தமது ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிகள் அனைத்தையும் அவர் அசுர பலத்துடன் நசுக்கியதாக வரலாற்றுப் பக்கங்கள் தெரிவிக்கின்றன.

பனூ உமைய்யாக்களின் அந்திம காலத்தில் முஹம்மது இப்னு அப்துல்லாஹ்வுக்குச் சத்தியப் பிரமாணம் அளித்தார்கள் என்று மேலே பார்த்தோமே, அச்சமயம் அவ்விதம் பிரமாணம் அளித்தவர்களுள் அப்பாஸியர்களின் இரண்டாவது கலீஃபா அல்-மன்ஸுரும் ஒருவர். ஆனால் அரசியல் மாற்றத்தில் அப்பாஸிய ஆட்சி உருவாகி அல்-மன்ஸுரும் கலீஃபாவாக உயர்ந்துவிட, அதை முஹம்மது இப்னு அப்துல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அவர் கலீஃபாவுக்குப் பிரமாணம் அளிக்காதது மட்டுமின்றி அப்பாஸிய ஆட்சியை எதிர்த்துச் செயல்படவும் ஆரம்பித்து, புதுக் கிளர்ச்சி அப்பாஸிய ஆட்சிக்குப் பெரும் சவாலாகிப்போனது.

இப்படிப் பார்த்துக் கொண்டே சென்றால் ஆட்சி அரசியலுக்குள் நுழைந்து அப்படியே பாக்தாதிற்கும் போய்விட நேரும் என்பதால், இந்த அளவுடன் பின்னணியை நிறுத்திவிட்டு நாம் மதீனாவுக்குத் திரும்பிவிடுவோம்.

போர், கிளர்ச்சி, ஆர்ப்பாட்டம், ஆட்சி, அரசியல் என்று அக்காலகட்டம் ஒருபுறம் பரபரப்பாக இருந்தாலும் இஸ்லாமிய ஞானப் பிரிவு மற்றொருபுறம் பெருந்தாகத்துடன் பரபரவென்று இயங்கிக் கொண்டிருந்தது. நபியவர்களின் பட்டணமான மதீனா கல்வியாளர்களாலும் ஞானவான்களாலும் சூழப்பட்டு, வீதிகளெல்லாம் கல்விச் சுனை. அத்தகைய கல்வியாளர் ஒருவராய் உருவானார் இமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்). அது பழுத்து, அடுத்து ஞானவானாக அவர் உயர்ந்து, அவரது விளக்கங்களுடன் இஸ்லாமியக் கல்வி வழித்துறை (school of thought) ஒன்று மதீனா நகரில் மெதுமெதுவே ஆழ வேரூன்றியது.

வழித்துறை உருவாகும் அளவிற்கு ஒருவரிடமிருந்து ஞானம் பீறிட்டால் அவர் நிலை மக்கள் மத்தியில் எப்படி இருக்கும்? இமாம் மாலிக் இப்னு அனஸின் மீது மக்களுக்கு எக்கச்சக்க மரியாதை, அன்பு, நம்பிக்கை. அவரிடம் மார்க்கம் பயில குழுமியது மக்கள் திரள். தாம் கற்றறிந்த ஹதீஸ்களை அவர்களுக்குப் போதித்துவந்த இமாம் அப்படியாகத்தான் அந்த ஹதீஸையும் அறிவித்தார். ஆனால் அது அவருக்குப் பெரும் பிரச்சினயாக உருவாக ஆரம்பித்தது.

‘கட்டாயத்தின் பேரில் உறுதிமொழி அளித்தால் அதற்குக் கட்டுப்படத் தேவையில்லை’ என்பதுதான் அவர் அறிவித்த ஹதீஸின் சாரம். அதற்கான வியாக்கியானங்களையும் அவர் போதித்து வந்தார். அது என்ன அரசியல் பின்விளைவை உண்டாக்கியதென்றால், அப்பாஸிய கிலாஃபத்தை எதிர்த்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்தார்களே அவர்களுக்குப் படுவசதியாகிப்போய், அவர்கள் இந்த ஹதீஸை மார்க்க அனுமதியாக எடுத்துக்கொண்டு, ‘அப்பாஸிய கலீஃபாவுக்குத் நாங்கள் அளித்த சத்தியப் பிரமாணம் செல்லாது, நாங்கள் அதற்குக் கட்டுப்படத் தேவையில்லை’ என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டார்கள்.

ஆனால், இமாம் மாலிக் அறிவித்த ஹதீஸ் சற்றும் அரசியல் உள்நோக்கம் அற்றது என்பதே உண்மை. ஏனெனில், அரசியலைப் பொறுத்தவரை, கலீஃபாவானவர் திட்டவட்டமான ஆலோசனைகளுக்குப் பிறகே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; அப்படி ஆலோசனைகள் நடைபெறாமல் தாமே ஒருவர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து விட்டாலும்கூட, நீதி செலுத்தும் அவருக்குக் கட்டுப்பட வேண்டும்; அவர் சர்வாதிகரமாக நடந்துகொள்ள ஆரம்பித்தால் மக்களின் வினை பயன் அது; ஆனால் எக்காரணம் கொண்டும் ஆயுதப் புரட்சியையோ கிளர்ச்சியையோ மக்கள் மேற்கொள்ளவே கூடாது; அப்படி நிகழ்ந்தால் அது அந்த ஆட்சியின் தீமையைவிடப் படு மோசமான பின் விளைவுகளையும் அநீதியையும் ஏற்படுத்திவிடும் என்பதே இமாம் மாலிக் அவர்களின் திட்டவட்டமான கருத்தாக இருந்தது. கிளர்ச்சியாளர்களும் சரி, ஆட்சியாளர்களும் சரி, அந்தக் கருத்தைப் பொருட்படுத்தவும் இல்லை; காதில் வாங்கிக் கொண்டதாகவும் தெரியவில்லை.

ஜஅஃபர் இப்னு ஸுலைமான் மதீனாவின் ஆளுநராக நியமிக்கப்பெற்று வந்ததும், அங்கிருந்த நிர்வாகிகள் அவரிடம், மக்கள் மத்தியில் இமாம் மாலிக்கிற்கு இருக்கும் செல்வாக்கையும் இந்த ஹதீஸை கிளர்ச்சியாளர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதையும் எடுத்துச் சொல்ல முளைத்தது இமாமுக்குப் பிரச்சினை.

தம்முடைய ஆள் ஒருவரை இமாமின் பாட வகுப்பிற்கு அனுப்பி, இந்த ஹதீஸைப் பற்றி வினா தொடுத்துச் சோதித்துப் பார்த்திருக்கிறார் ஜஅஃபர் இப்னு ஸுலைமான். அந்த ஹதீஸை அவர் பயிற்றுவிக்கிறார் என்பது உறுதியானது. அப்படியானால் கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்குமுன் இந்த ஹதீஸ் பரவாமல் தடுப்பது முக்கியம் என்று முடிவெடுத்தார் ஜஅஃபர்.

‘இந்த ஹதீஸை நீங்கள் அறிவிக்கக்கூடாது, இது கலீஃபாவின் கட்டளை’ என்று தடையுத்தரவு பிறப்பித்துப் பார்த்தார்.

அரசியல் ஆட்டத்திற்குப் பகடைக்காயா இஸ்லாமிய ஞானம்? மார்க்க அறிஞரிடம் வினா தொடுக்கப்பட்டால், தமக்குத் தெரிந்த ஞானத்தை அவர் மறைத்தலாகாது என்பது இமாம் மாலிக்கின் நிலைப்பாடு. எனவே, அனைவர் முன்னிலையிலும் அந்த ஹதீஸ் ஆதாரபூர்வமானதே என்று விளக்கமளித்தார் இமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்). ஆளுநருக்குக் கோபம் ஏற, அடுத்து என்னவாகும்? கசையடி என்று தீர்ப்பு வழங்கப்பட்டு, இமாம் மாலிக்கின் கை எலும்பு இடம்பெயர்ந்தது.

இமாமின்மீது பெரும் மதிப்புக் கொண்டிருந்த பொது மக்களுக்கு இந்த நிகழ்வு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தி, நகரில் பதற்றம் பரவ ஆரம்பித்தவுடன்தான் தம் தவறை உணர்ந்தார் ஆளுநர். கலீஃபா அல்-மன்ஸுருக்கும் இந் நிகழ்வு பெரும் கவலையை ஏற்படுத்திவிட்டது. கலீஃபாவின் சமிக்ஞையின்றி ஆளுநர் தம் சுய தீர்மானத்தின் அடிப்படையில் அளித்த தண்டனை அது என்றுதான் குறிப்புகள் தெரிவிக்கின்றன. எனினும், அந்நிகழ்வின் பொறுப்பை கலீஃபா முற்றிலும் தட்டிக் கழித்துவிட முடியுமா என்ன?

தாம் ஹஜ் பயணம் மேற்கொண்டபோது, மதீனா நகருக்குச் சென்று, இமாம் மாலிக்கை நேரடியாகச் சந்தித்தார் கலீஃபா அல்-மன்ஸுர்.

“அகிலங்களின் அதிபதி ஏக இறைவன் மீது ஆணையாக! தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நான் அறிவிக்கவும் இல்லை, அதை நான் அறியவும் இல்லை. இரண்டு புனித நகரங்களின் மக்களும் தாங்கள் உயிரோடிருக்கும்வரை நலமுடன் இருப்பார்கள். அவர்கள் தங்கள் துன்பங்களிலிருந்து பாதுகாவல் பெற்றிருப்பதற்கு அவர்கள் மத்தியில் தாங்கள் இருப்பதே காரணம் என்று நான் நினைக்கின்றேன். ஏனெனில் அவர்கள் தொந்தரவு புரிவதற்கு எப்பொழுதும் தயாராகவே இருந்தார்கள். ஆனால் அவர்களைச் சூழவிருந்த பெரும் சோதனையைத் தங்கள் மூலமாக இறைவன் நீக்கியிருக்கிறான் என்று நான் நம்புகிறேன்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அந்த ஆளுநரைக் கைது செய்து, அவமானகரமான முறையில் இழுத்து வரக் கட்டளையிட்டிருக்கிறேன். தங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையவிடப் பன்மடங்கு அதிகமாக அவருக்கு நான் தண்டனையளிக்கவேண்டும்; சிறையில் அடைக்க வேண்டும்” என்று கலீஃபா அல்-மன்ஸுர் இமாம் மாலிக் அவர்களிடம் தெரிவித்தார்.

அனைத்தையும் கேட்டுவிட்டு, நிதானமாக, இமாம் மாலிக் இப்னு அனஸ் ரஹிமஹுல்லாஹ் பதில் அளித்தார். கலீஃபா அல்-மன்ஸுரை ஆச்சரியப்பட வைத்தது அந்தப் பதில்.

அது –

(தொடரும்)

-நூருத்தீன்

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment