இமாம் அபூஹனீஃபா – 11

இமாம் அபூஹனீஃபா அவர்கள் மீது கலீஃபா அல்-மன்ஸூருக்கு என்னதான் எரிச்சலும் கோபமும் இருந்தாலும், அவரது ஞானத்தின்மீது பெருமதிப்பு இருக்கத்தான் செய்தது. அல்-மன்ஸூருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே பிரச்சினை ஒன்று எழுந்தது. தம்மைவிட இதர மனைவியருக்கு அவர் அதிக சலுகை காட்டுகிறார்

என்பது அவரது குற்றச்சாட்டு. குற்றம் சாட்டியதோடு மட்டும் நின்றுவிடாமல், ‘நமக்கிடையே அபூஹனீஃபாதாம் தீர்ப்பு வழங்க வேண்டும்’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

‘சரியான தேர்வு’ என்று ஏற்றுக்கொண்டார் அல்-மன்ஸூர்.

அபூஹனீஃபாவை வரவழைத்து, “என் மனைவி அல்-ஹுர்ராஹ் என்னுடன் மனவேறுபாடு கொண்டுள்ளார். எங்களுக்கிடையே நீதியுடன் தீர்ப்பு சொல்லுங்கள்,” என்று வழக்கை முன்வைத்தார் அல்-மன்ஸூர்.

“பிரச்சினையைக் கூறுங்கள்” என்றார் அபூஹனீஃபா.

“முஸ்லிமான ஆண் ஒரே நேரத்தில் எத்தனைப் பெண்களை மணமுடிக்க, எத்தனை அடிமைப் பெண்களை சொந்தமாக்கிக் கொள்ள அனுமதி உள்ளது?”

“நான்கு பெண்களை ஒரே நேரத்தில் மனைவியராக்கிக் கொள்ளலாம்; அவன் சொந்தமாக்கிக் கொள்ளும் அடிமைப் பெண்களுக்கு வரம்பு இல்லை” என்று பதிலளித்தார் அபூஹனீஃபா.

“இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டா?” என்று கேட்டார் அல்-மன்ஸூர். “இல்லை, இதுதான் அனைத்து அறிஞர்களின் ஒட்டுமொத்த கருத்து” என்றார் அபூஹனீஃபா. உடனே கலீஃபா தம் மனைவியிடம், “இவர் சொன்ன தீர்ப்பைக் கேட்டாயா?” என்றார்.

அப்பொழுது குறுக்கிட்டார் அபூஹனீஃபா. “இங்கு ஒன்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். தம் மனைவியரை சமமாய், நேர்மையுடன் நடத்துபவருக்கே இதை இறைவன் அனுமதித்துள்ளான். அவ்விதம் நடந்து கொள்ள இயலாது என்று அவன் அஞ்சுவானேயானால், அவன் ஒரு பெண்ணை மட்டுமே திருமணம் முடிக்க வேண்டும். ‘ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்) (குர்ஆன் 4:3)’ என்று அல்லாஹ் கூறுகிறான். நாம் அல்லாஹ்வின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதும் அவனுடைய எச்சரிக்கை, அறிவுரைகளைச் செவிமடுப்பதும் மிகவும் முக்கியம்.”

அதைக்கேட்டு வெகுநேரம் அமைதியாக இருந்தார் கலீஃபா.

ஜஅஃபர் இப்னு அர்ராபீ: “நான் அபூஹனீஃபாவிடம் ஐந்தாண்டுகள் பயின்றுள்ளேன். நீண்ட நேரம் அமைதியாக இருக்கும் அவரைப்போல் வேறு யாரையும் நான் கண்டதில்லை. சட்டம் பற்றிய கேள்வி அவரிடம் கேட்கப்பட்டால், அவர் அதைப்பற்றி விவரித்துப் பேசும்முன் அவருக்கு வியர்வை ஆறாய்ப் பெருக்கெடுக்கும்.”

மாலிக் இப்னு வாகீ: “அபூஹனீஃபா மிகவும் நம்பிக்கைக்குரியவர். அவருக்குத் தயாள குணம். அல்லாஹ்வின் உவப்பையே அவர் விரும்பினார். அல்லாஹ்வின் பாதையில் அவர் மீது வாள்கள் வீசப்பட்டிருந்தாலும் அவற்றை அவர் தாங்கியிருப்பார்.”

அப்துல்லாஹ் இப்னுல் முபாரக்: “அவர் ஞானத்துக்கோர் எடுத்துக்காட்டு.”

அபூஹனீஃபா வீட்டிற்குத் திரும்பிவிட்டார். சற்று நேரத்தில் கலீஃபாவின் மனைவி அனுப்பியதாக, பணம், துணிமணிகள், ஓர் அடிமைப்பெண், எகிப்து நாட்டுக் கழுதை என்று பல அன்பளிப்புகளைச் சுமந்து கொண்டு சேவகன் வந்தான். அதை அப்படியே நிராகரித்தார் அபூஹனீஃபா.

“அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவியுங்கள். அல்லாஹ்வின் பொருட்டே நான் அவரை ஆதரித்தேனே தவிர, அவரிடமிருந்து சலுகையும் வெகுமதியும் பெறுவதற்காக அல்ல,” என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

அபூஹனீஃபாவின் ஞானத்தின்மீது நம்பிக்கை கொண்டு கலீஃபா தம்முடைய வழக்கை ஒப்படைத்தது ஒருபுறமிருக்க, அந்த கலீஃபாவின் அமீர் ‘அபூஹனீஃபா இனி ஃபத்வா வழங்கக்கூடாது’ என்று தடையுத்தரவு பிறப்பித்த விந்தையும் மறுபுறம் நிகழ்ந்தது.

கூஃபா நகரில் அரசாங்கத்தின் தலைமை நீதிபதியாக இப்னு அபீலைலா நியமிக்கப்பட்டிருந்தார். வழக்குகளை விசாரித்து மார்க்கத் தீர்ப்புகளை வழங்குவது அவரது வேலையல்லவா? அதைச் செய்து கொண்டிருந்தார் அவர். அந்தத் தீர்ப்புகள் மார்க்கத்திற்கு முரணாக உள்ளது என்று தமக்குத் தோன்றினால் அதைத் தயங்காமல் தெரிவிப்பதும் அரசாங்கத் தலைமை நீதிபதியின் தீர்ப்புக்கு மாற்றமாக கருத்துச் சொல்வதும் இமாம் அபூஹனீஃபாவின் இயல்பாக இருந்தது.

நீதிபதியின் தீர்ப்பாக இருந்தாலும் சரி; மார்க்க அறிஞரின் ஃபத்வாவாக இருந்தாலும் சரி, அது தவறாக இருக்கும் பட்சத்தில் அவற்றை விமர்சிப்பதில் இமாம் அபூஹனீஃபா பாரபட்சமே காட்டியதில்லை. இன்னும் சொல்லப்போனால், ஒரு தவறான ஃபத்வாவினால் அநீதி நிகழ்ந்துவிடும் என்று அவருக்குத் தோன்றினால், அதை அவர் மிகக் கடுமையாக எதிர்த்துச் செயல்பட்டார். ஏனெனில் அநீதியானது மக்களுடைய வாழ்விலும் அவர்களுடைய பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் அவருக்கு இருந்தது. அது அவருக்கு மிகுந்த மன வலியை ஏற்படுத்தியது.

இவ்விதமாக தம்முடைய தீர்ப்புகளுக்கு எதிராக அபூஹனீஃபா கருத்து தெரிவிப்பதும் செயல்படுவதும் தலைமை நீதிபதி இப்னு அபீ லைலாவுக்குப் பெரும் தலைவலியாகிவிட்டது. கடும் அதிருப்தி அடைந்த அவர், ‘நீதிபதி அவரா அல்லது நானா?’ என்பதுபோல் தம்முடைய அமீரிடம் புகார் அளித்துவிட்டார். அபூஹனீஃபாவின் நடவடிக்கைகளை நெடுக கவனித்துக் கொண்டு, என்ன செய்து அவரை அடக்குவது என்று யோசித்துக் கொண்டிருந்த கலீஃபாவுக்கு இது போதாது?

‘அபூஹனீஃபா இனி ஃபத்வா வழங்கக் கூடாது’ என்று தடையுத்தரவு பிறக்கப்பட்டது.

ஆனால் வேடிக்கை என்னவெனில் வெகு சில நாள்களிலேயே அந்த உத்தரவு பிசுபிசுத்துப்போனது. பலதரப்பட்ட பிரச்சினைகளும் மார்க்கம் தொடர்பான பலப் பல கேள்விகளும் புதிது புதிதாகத் தோன்றிக்கொண்டிருந்த அந்தக் காலநிலையில் அனைத்திற்கும் சரியான பதிலையோ தெளிவையோ அவர்களுக்கு எட்ட முடியாமற்போக, அவற்றையெல்லாம் தூக்கிக்கொண்டு அவர்கள் அபூஹனீஃபாவிடம்தான் வந்து நின்றனர்.

“எனக்குத் தடையுத்தரவு உள்ளது” என்று வாயைத் திறக்க மறுத்துவிட்டார் இமாம் அபூஹனீஃபா. தூதர்கள் அமீரிடம் ஓடினர். ‘இப்படியான நுணுக்கமானப் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து பதில் சொல்லும் தகுதி உள்ளவர் இங்கு இப்போது அவர் மட்டும்தான். அவரோ வாயைத் திறக்க மறுக்கிறார்’ என்று புலம்பாத குறையாக முறையிட்டனர். பிறகு? “நான் அனுமதியளிக்கிறேன்” என அமீர் தம்முடைய உத்தரவைத் தாமே திரும்பப்பெறும் நிலை ஏற்பட்டது. அதன் பிறகுதான் மீண்டும் இமாம் அபூஹனீஃபா பகிரங்கமாக தமது ஃபத்வாக்களை வெளியிடத் தொடங்கினார்.

ஆனாலும் தலைமை நீதிபதி இப்னு அபீ லைலாவுக்கு அபூ ஹனீஃபாவின் மீதிருந்த சங்கடங்களும் அதிருப்தியும் ஒருவித எதிர்ப்பு உணர்வை அவர் மனத்தில் ஏற்படுத்தி இருந்தது. கலீஃபா அல்-மன்ஸூருக்கும் அபூஹனீஃபாவின் மார்க்க நிலைப்பாடுகள் தொல்லையாகத்தான் இருந்தன. இவை தவிர, அப்பாஸியரின் ஆட்சிக்கு எதிரான அலாவீக்களுக்குச் சாதகமாக அவரது கருத்துகள் அமையப்போக, அது நெருப்பில் எண்ணெய் ஊற்றியதைப்போல் மேலதிகமான வெறுப்பை அவர் மனத்துள் வளர்த்தது.

ஆனாலும் இமாம் அபூஹனீஃபாவை எப்படிச் சமாளிப்பது என்பது மட்டும் அவருக்கு விளங்கவில்லை. கருத்தியல் ரீதியாகத்தான் மோதல் அமைந்திருந்ததே தவிர, அபூஹனீஃபா தாம் நடத்தும் வகுப்புகளை விட்டு மற்ற தொந்தரவுகளில் ஈடுபடுவதில்லை. அவருடைய இறைவழிபாடும் இதர நடவடிக்கைகளும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவையாக இருந்தன. அவருடைய ஆழமான, அழுத்தமான மார்க்க ஞானம், அறிவு, தயாள குணம், நம்பிக்கை, இறையச்சம் ஆகியவற்றை மக்கள் வெகு நன்றாக உணர்ந்திருந்தனர். மேலும் அது எந்தளவிற்குப் பரவியிருந்ததென்றால் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் தங்கள் ஐயங்களைச் சுமந்துகொண்டு அவரிடம் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஆகவே, அவர் அரசுக்கு எதிராகக் கலவரத்திலோ, கிளர்ச்சியிலோ நேரடியாக ஈடுபட்டாலன்றி அவர்மீது நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமுமில்லை என்று தெரிந்ததால் என்ன செய்வது என்று யோசித்தார் கலீஃபா அல்-மன்ஸுர்.

அது இறுதியில் பழைய உத்தியில் வந்து முடிந்தது. உமய்யாக்களின் ஆட்சியின்போது ஆளுநர் இப்னு ஹுபைரா கையாண்டாரே, அதே உக்தி.

‘இதோ உங்களுக்கு நீதிபதி பதவி!’ என்று பக்தாத் நகரின் தலைமை நீதிபதி பதவியை அளித்தார் அல்-மன்ஸூர்.

அவர் பதவியை ஏற்றுக்கொண்டால் நல்லது. மாநிலத்தின் தலைமை நீதிபதி என்ற பட்டத்தை அளித்து தமக்குக் கட்டுப்பட்டவராக அவரை ஆக்கிவிடலாம். மறுக்கிறாரா, ‘பாருங்கள். நீதிபதிகளின் தீர்ப்புகளை மட்டும் விமர்சிக்கின்றார். இந்தாருங்கள் உங்களுக்குப் பொறுப்பு. அதை ஏற்று நீங்களும் தீர்ப்பு வழங்குங்கள், உங்களுக்குக் கீழுள்ள நீதிபதிகளையும் வழி நடத்துங்கள் என்றால் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார். வெறும் வாய்ச் சொல் வீரர்’ என்று அதையே காரணம் காட்டி அவரைத் தண்டிக்கலாம். கலீஃபாவின் கட்டளையைப் புறக்கணிக்கிறார்; மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமையிலிருந்து தவறிவிட்டார் என்றொரு தோற்றத்தை உருவாக்கிவிடலாம். அதற்குரிய தண்டனைதான் அது என்று மக்களைச் சமாதானப்படுத்திவிடலாம் என நிறைய கணக்கிட்டிருந்தார் கலீஃபா.

இமாம் அபூஹனீஃபா பதவியை மறுத்தார். “உங்களுக்கும் உங்களுடைய பிள்ளைகளுக்கும் உங்களுடைய தளபதிகளுக்கும் எதிராகத் தீர்ப்பு கூறுமளவு யாருக்குத் துணிச்சல் இருக்கிறதோ அவரே அப்பதவிக்குத் தகுதியானவர். நான் அத்தகையவனல்லன்,” என்று படு துணிச்சலாக மறுத்தார்.

அப்பதவியில் தாம் சுதந்திரமாகச் செயல்பட வேண்டுமெனில் ஆட்சியாளர்களின் தலையீடு இருக்கக் கூடாது. அதை ஏற்று கலீஃபா தமக்கு முழு சுதந்திரம் அளித்து ஒப்புதல் தந்தால் மட்டுமே தாம் அப்பதவியை ஏற்கும் சாத்தியம் உள்ளது என்பதைத் தெரிவிக்கும் விவேகம் நிறைந்த பதில் அது.

“தாங்கள் என் அன்பளிப்புகளையும் ஏற்கவில்லை” என்று குற்றம் சுமத்தினார் கலீஃபா அல்-மன்ஸூர். ‘இப்போது பதவியை மறுக்கும் நீர் இதற்குமுன் எனது அன்பளிப்புகளையும் ஏற்கவில்லையே, அரசாங்கத்துடன் மோதல் போக்கு ஏன்?’ எனும் நோக்கத்தில் அதை கேட்கத் தோன்றியது போலும்.

அதற்கு இமாம் அபூஹனீஃபா, “அமீருல் மூஃமினீன் தாங்கள் எனக்கு அனுப்பிய பணத்தை நான் திருப்பிவிட்டேன்தான். அது அன்பளிப்பு எனில் ஏற்றிருப்பேன். தாங்களோ என்னை முஸ்லிம்களின் கருவூலத்துடன் தொடர்புபடுத்திவிட நினைத்தீர்கள். எனக்கு முஸ்லிம்களுடைய பணத்தின்மீது எவ்வித உரிமையும் இல்லை. நான் படைவீரனும் அல்லன். அதனால் படைவீரனுக்குரிய பங்கும் எனக்குக் கிடையாது. அவர்களுடைய வாரிசுக்குரிய உதவிப்பணத்தை நான் பெறலாம் என்பதற்கு நான் படைவீரருடைய வாரிசுமன்று. வறியவர்களுக்குரிய உதவிப்பணத்தைப் பெறுவதற்கு நான் வறியவனும் அல்லன்,” எனக் காரணம் சொன்னார்.

அல்-மன்ஸூர் மிகவும் வற்புறுத்தினார். அழுத்தம் கொடுத்தார். அபூஹனீஃபா நிராகரித்தவாறே இருந்தார். அடுத்து எச்சரிக்கைத் தொணிக்கு மாறியது கலீஃபாவின் பேச்சு. அதற்கு அபூஹனீஃபா, “தாங்கள் என்னை டைக்ரஸ் ஆற்றில் மூழ்கடிப்பதாக மிரட்டினாலும் சரியே, உங்களது அரசாங்கத்தில் நீதிபதியாகப் பதவி வகிப்பதைவிட ஆற்றில் மூழ்கி மரணமடைவதே எனக்கு மேல். நீங்கள் சொல்வதைக்கேட்டு இணங்கக்கூடிய பலர் உங்கள் அரசவையில் உள்ளனர். அவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நான் அப்பதவிக்குத் தகுதியானவன் அல்லன்” என்றார்.

“பொய்யுரைக்கிறீர்கள். நீங்கள் அப்பதவிக்குத் தகுதியானவரே” என்றார் கலீஃபா.

“பொய்யுரைப்பவர் ஒருவரை நீதிபதியாக எப்படி நியமிப்பீர்கள்?” என்று கலீஃபாவை மடக்கினார் அபூஹனீஃபா.

அதற்குமேல் அவரிடம் பொறுமை காக்க முடியாமல்போன கலீஃபா, “அவருக்கு நூற்றுப்பத்து கசையடி. சிறைத் தண்டனை,” என்று தீர்ப்பு வழங்கினார்.

அவை நிறைவேற்றப்பட்டன. உமய்யாக்களின் ஆட்சியில் கசையடியைச் சுவைத்த அவரது தேகம் இப்போது அப்பாஸியர்களின் ஆட்சியிலும் அதைச் சுவைத்தது.

பின்னர் சில காலத்திற்குப் பிறகு அல்-மன்ஸூர் அவரை விடுவித்தார். ஆயினம் இனி அவர் ஃபத்வா அளிக்கவோ, பாடம் நடத்தவோ கூடாது என்று தடைவிதிக்கப்பட்டது. மார்க்கத்தை ஆட்சியாளர்களுக்காக விட்டுத்தர முடியாது, வளைக்க முடியாது என்று நின்ற அந்த ஞானவான் இத்தகு சித்ரவதைகளை அனுபவித்து தமது 70ஆவது வயதில் ஹிஜ்ரீ 150ஆம் ஆண்டு பக்தாத் நகரில் உயிர் நீத்தார்.

ஆட்சியாளர்கள் முறைகேடாகக் கையகப்படுத்திய நிலத்தில் தம்மை அடக்கம் செய்யக்கூடாது என்று மரண அறிவிப்பு செய்துவிட்டுச் சென்றிருந்தார் இமாம் அபூஹனீஃபா. அதை அறிந்த அல்-மன்ஸூர், “அவர் உயிருடன் இருந்தபோதும் சரி, இப்போது இறந்த பிறகும் சரி என்னை இப்படிப் படுத்துகிறாரே – யார் என்னை அந்த அபூஹனீஃபாவிடமிருந்து காப்பாற்றுவீர்கள்?” என்று அரற்றினார்.

அபூஹனீஃபாவின் வரலாறு நிறைவற்றது.

– நூருத்தீன்

சமரசம் பத்திரிகையில் ஏப்ரல் 16-30, 2016 இதழில் வெளியானது

அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்


இத் தொடருக்கு உதவிய நூல்கள்:

Pioneers of Islamic Scholarship by Adil Salahi. Published by The Islamic Foundation, Leicestershire, UK

The Four Imams (Their Lives, Works and their Schools of Thought) by Muhammad Abu Zahra, (Translation by Aisha Bewley), Published by Dar Al Taqwa Ltd., London, UK


 

<–முந்தையது–>  <–அடுத்தது–>

<–ஞான முகில்கள் முகப்பு–>

 

Related Articles

Leave a Comment