இமாம் இப்னு தைமிய்யா எழுதியது

அன்புள்ள மேன்மைமிக்க சோதரீர்! இதுகாலை இத்தரணியின்கண் (சொந்தமாய் நமது தென்னாட்டின்கண்) கப்ர் வணக்கம், பஞ்சா வணக்கம், ஷெய்கு வணக்கம் போன்ற ஷிர்க்கான விஷயங்கள் எண்ணிறந்த விதமாய் மிளிர்ந்து வருகின்றன என்பதை நேத்திரமுடைய எவர்தாம் மறுத்துச் சொல்ல முன்வருவர்?

அது முடியவே முடியாது. இந்த ஷிர்க்கின் பாபமோ மகா கொடிது. ஏனெனின், அல்லாஹ் சகல பாபங்களையும் பொறுத்து ரக்ஷிப்பான்; ஆனால், தனக்கு இணையாய் மற்றொன்றைக் கொண்டு வணக்கம் புரிவதால் உண்டாகும் பாபத்தை மாத்திரம் எக்காரணத்தைக் கொண்டும் எப்பொழுதும் மன்னிப்பது முடியாதென்று கடினமான ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளான். எனவே, கீழே வரைந்து கொண்டு செல்லப்படும் மார்க்கத் தீர்ப்பைக் கண்ட பின்னரேனும் கப்ர்களை எப்படி ஜியாரத் செய்யவேண்டும்? எம்மாதிரியான முறையில் அதைக் கௌரவிக்க வேண்டும்? இது விஷயமாய் எம் நாயகம் (ஸல்) அவர்கள் என்ன திருவுளம் பற்றியுள்ளார்கள்? அல்லாஹ்வாகிய ஏக பராபரன் என்ன கட்டளையைப் பிறப்பித்திருக்கிறான்? என்பன போன்ற விஷயங்களை நன்கு கவனித்து, இவ்வித ஷிர்க்கான காரியங்களில் பிரவேசிக்காமல் நியாயமான முறையில் நடந்துகொண்டு, ஆண்டவனருளை அடைய முயற்சி செய்வீர்களெனப் பெரிதும் விரும்புகின்றேன். (ஹாபிஸ் முஹம்மது யூசுபு)

கேள்விகள்

  1. சில மனிதர்கள் சமாதிகளுக்குச் சென்று தங்களுக்காகவும், தங்கள் உயிர்ப் பிராணிகளான குதிரை, ஒட்டகம் முதலிய ஜீவப் பிராணிகளுக்காகவும் ஏற்பட்டிருக்கும் வியாதிகள் சொஸ்தமடைய வேண்டுமென வேண்டிக் கொள்ளுகின்றனர்; மேலும், சமாதியினுள் அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களை நோக்கி, “யா செய்யிதீ! ஏ என்னுடைய எஜமானே! தாங்களே என்னைக் காப்பவராய் இருக்கின்றீர்கள்; இன்ன மனிதன் என்மீது அக்கிரமம் செய்திருக்கிறான்; இன்னான் எனக்குக் கஷ்டத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறான்,” என்றும் கூறுகின்றனர். இன்னம் இம்மனிதன், அல்லாஹ்வுக்கும் தனக்கும் இடையே நடுநிலைமையைப்பெற்ற ஒரு பெரிய மஹானென்று இச்சமாதியினுடைய பெரியாரை நம்பியிருக்கின்றான்.
  2. வேறு சில மனிதர்கள் மஸ்ஜித்களிலோ அல்லது மடாலயங்களிலோ, ஜீவித்தோ அல்லது மரணமடைந்தோ காணப்படும் பீர்களின் நாமத்தைக் கொண்டு பணங்களைப் போடுவேனென்றும், ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய உயிர்ப் பிராணிகளைக் கொண்டுவந்து விடுவேனென்றும், விளக்கேற்றுவதற்காக எண்ணெய் வர்த்தி முதலிய வஸ்துக்களைக் கொண்டுவந்து தருவேனென்றும் நேர்ச்சை செய்துகொள்ளுகின்றனர். மேலும், “என்னுடைய பிள்ளை பிழைத்துக் கொண்டால் இந்தப் பீருக்காக இன்ன இன்ன வஸ்துக்கள் என்மீது கடமையாகிவிடுகின்றன”, என்றும் கூறுகின்றனர்.
  3. மற்றும் சில மனிதர்கள் தங்கள் ஷெய்க் அல்லது பீர் போன்றவர்களிடம் சென்று, “எங்கள் ஹிருதயங்கள் உறுதியற்றனவாய்க் காணப்படுகின்றன. எனவே, இவற்றைச் சாந்தத்துடனும் சமாதானத்துடனும் இருக்கச் செய்வீர்களாக,” என்று கூறுகின்றனர்.
  4. இன்னம் சில மனிதர்கள் தங்கள் பீர் அல்லது முர்ஷித் அடக்கப்பட்டிருக்கும் ஸ்தலம் சென்று, அதன்மீது தங்கள் வதனங்களைத் தேய்க்கின்றனர்; இதுவுமல்லாமல் அந்தக் கப்ரின்மீது தங்கள் கைகளைத் தேய்த்து முகத்தில் தடவிக் கொள்ளுகின்றனர். இஃதேபோல் இன்னமும் அனேகங் கிரியைகளைச் செய்கின்றனர்.
  5. இவ்வாறு, சில மனிதர்கள் தங்களுடைய தேவைகள் நிறைவேறும் பொறுட்டு எவரேனும் ஒரு பெரியார், அல்லது வலீயினிடம் சென்று, “யாபீர்! உம்முடைய பொருட்டினாலேயே என்னுடைய தேவை நிறைவேறிற்று,” என்று புகலுகின்றனர். அல்லது “முர்ஷித் முதலியவர்களின் உதவியினால் என்னுடைய நாட்டம் நிறைவேறிற்று,” என்று மொழிகின்றனர்.
  6. இவ்வண்ணமே வேறு சிலர் காணம் பாடும் சபைகளை ஏற்படுத்துகின்றனர். இன்னம், சமாதிக்கும் சமீபமாய்ச் சென்று தம்முடைய முர்ஷிதின் எதிரே பூமியின்மீது விழுந்து சஜ்தாவென்னும் சாஷ்டாங்கம் செய்கின்றனர்.
  7. இம்மாதிரியே ஒரு சிலர் குதுப், கௌஸ், பர்த், ஜாமிஃ என்பன போன்ற வார்த்தைகளைச் சொல்லுகின்றனர். இவ்வளவுடன் நில்லாது, சிற்சில இடங்களி்ல் இம்மாதிரியான பெரியார்கள் இருந்துகொண்டு வருகின்றனரென்றும் நம்புகின்றனர்.
  8. இஃதேபோன்ற அகீதாக்களின் விஷயங்களிலெல்லாம் ஏற்படும் சந்தேகங்களைத் தெளிவாய் விளக்கிக்காட்டி, மேதாவியும் மஹானுமாகிய தாங்கள் (இப்னு தைமிய்யா) மார்க்கத் தீர்ப்பளிப்பீர்களாக.

 

<<முந்தையது>>  <<அடுத்தது>>

<<ஜியாரத்துல் குபூர் முகப்பு>>

Related Articles

Leave a Comment