காயப்போட்டத் துணியை சுருட்டுவதைப்போல் சீட்டுக் கம்பெனிகள் முதலுடன் மாயமாவது வாடிக்கையாகிப் போனாலும், அதிக வட்டிக்கு நாவில் நீர் சுரந்து மற்றுமொரு புது கம்பெனியின் வரிசையில் நின்று ‘இந்தா வெச்சுக்கோ’ என்று மக்கள் தங்கள் சேமிப்பைக் கொட்டுவது தடைபடுவதில்லை. கவனித்திருக்கிறீர்களா?
சாமியார்கள் டுபாக்கூர் என்று அவர்களது அந்தரங்க அபிலாஷைகளைப் படம் பிடித்து நீல நிறத்தில் காட்டினாலும் புது சாமியார்களின் காலில் பத்தினிகள் பக்தியுடன் விழுவதைப் போல் –
நுகர்பொருள் கள்ள மார்க்கெட்டைத் திட்டிக்கொண்டே படம் ரிலீஸாவதற்குள் திருட்டு டிவிடி கிடைக்காதா, காப்பிரைட் நூலின் PDF கிடைக்காதா என்று தேடுவதைப் போல் –
முற்கால சர்வே சங்கதிகளின் யோக்கியதை நாறியிருந்தாலும் இன்றைய கணிப்புகளை நம் மக்கள் வாட்ஸ்அப்பிலும் facebook-இலும் பரப்பி மாய்கிறார்கள். அதை வைத்து ஆராய்ச்சிப் பட்டிமன்றம் வேறு. ஒவ்வொரு கணிப்பும் நேர்முரண் என்பது இதில் தனியொரு நகைமுரண்.
மனிதனின் ஜீன் வடிவமைப்பே இப்படித்தானோ என்று தோன்றுகிறது.
பிடித்த பொத்தானை அமுக்குவோம்; மே 19 வரை தேமே என்று பொறுத்திருப்போம் என்றிருந்தால் ராஜ துரோகமா ஏற்பட்டுவிடும்?
அந்த ஓட்டுப் பொத்தான் பெட்டிகள் குமாரசாமி கால்குலேட்டரா, பிழையான கணக்கு சொல்ல? துல்லியமாக எண்களைக் காட்டத்தானே போகிறது. பிறகு வைத்துக்கொண்டால் போச்சு புள்ளிவிபர பஞ்சாயத்தை!
திருமணத்திற்குமுன் டேட்டிங்கில் ருசிக்கத் துடிக்கத் துடிக்கும் விடலையைப் போல் எல்லோருக்குள்ளும் இனந்தெரியா துடிப்பு. இதில் கொடுமை எனக்குத் தெரிந்த நண்பர் அவர் பங்கிற்கு தம் அலுவலகத்தில் இருபது பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தி, ரிசல்ட்டை நம்பமுடியாமல் facebook-இல் stun ஆகிறார்.
இந்த பேஜாருக்கு, சர்வேக்களிலேயே ஆட்சியைத் தேர்ந்தெடுத்து விட்டால் நாட்டிற்கு கோடிகள் மிஞ்சும்.
SBI கும் அமிர்தாஞ்சன் தேவைப்படாது.
#தேர்தல்சர்வே