கவிதைக்கு எது அழகு

by நூருத்தீன்

கவிதைக்கு வடிவத்தைவிட “இவகேஷன்” சொல்லாமல் விட்ட வரிகளைப் பற்றி சிந்திக்க வைப்பது என்பது முக்கியம். 

சுஜாதாவின் “கணையாழியின் கடைசிப் பக்கங்க”ளைப் புரட்டிக்கொண்டிருந்தபோது இது கண்ணில் பட்டது.

‘இன்றைய தினங்களில் தமிழ் கூறும் நல்லுலகத்தில் ஞாயிற்றுக் கிழமைகளிலும் தேசிய விடுமுறை நாட்களிலும் பத்தாயிரம் புதுக்கவிதைகள் எழுதப்படுகின்றன என உத்தரவாதமாகச் சொல்லலாம்‘ என்பது அவர் அக்காலத்தில் எழுதிய உத்தேசக் கணக்கு. இன்றைய இலவச Facebook அருளாசியில் நாளொன்றுக்கு அதைவிட அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

‘நல்ல கவிதையை அடையாளம் கண்டுபிடிக்க உத்தரவாதமான வழிகள் பத்து.’ என்று அவர் விவரித்துள்ளவற்றின் சுருக்கம் கீழே.

oOo

“ஓ“, “அட”, “என்னே” போன்ற வார்த்தைகள் இருப்பின் தூக்கி எறியவும். கவிதைக்கு இந்த “அட”, “ஓ” வெல்லாம் கிடையாது. வெளிப்படையாகத் தேவையில்லை.

இயற்கை வர்ணனை, நிலா, சூரியோதயம், வானத்தில் வர்ணஜாலங்கள் இவைகளை வர்ணித்தால் கவிதைகள் அல்ல. அதுவும் நட்சத்திர இரவை பாட்டாளி வேர்வை, பொத்தல் சட்டை என்றெல்லாம் பாடும் கவிதைகளைத் தடை செய்ய மனுப்போட்டிருக்கிறேன்.

நல்ல கவிதை என்பது குறிஞ்சி மலர் போல ரொம்ப அரிதான விஷயம்….. கவிதை உங்களைப் பாதிக்க வேண்டும். படித்து முடித்தபின் வயிற்றில் ஒரு மாதிரி ஞமஞம என்று பண்ணும்….. நல்ல கவிதை என்பது ஒருவிதமான சொந்த உன்னதம்.

பொங்கல் வாழ்த்து, தேவி மகாத்மியம், நையாண்டி, மியான்தாத் சிக்ஸர் அடித்தது போன்ற தினப்படி விஷயங்களைச் சொல்லுவதெல்லாம் கவிதையல்ல. அரசியல் தலைவர்களுக்கு எழுதப்படும் வாழ்த்தும் இரங்கற்பாக்களும் கியாரண்டியாக கவிதையல்ல. சினிமாப் பாட்டுகளை ஜன்மத்திலும் சேர்க்கக் கூடாது. அனைத்தும் ராஜவேர்வை.

கவிஞன் தனக்குக் கிடைத்த உன்னத கணத்தை உங்களுக்கும் வார்த்தைகளால் அளிக்கிறான். “Since flesh can’t stay we pass the words along” பாசாங்கு என்பதே இருக்காது.

புத்திசாலித்தனமான வரிகளைக் கவிதை என்று குழப்பாதீர்கள். “நள்ளிரவில் வாங்கினோம் இன்னும் விடியவில்லை” என்பதெல்லாம் புத்திசாலித்தனமான வரிகள்.

நல்ல கவிதை எழுத உங்களுக்கு உத்தேசமிருந்தால் முதலில் நல்ல கவிதையைப் படித்துப் பாருங்கள். நீங்கள் சொல்ல வந்தததை மற்றெரு பட்சி சிறப்பாகவே சொல்லியிருக்க சந்தர்ப்பம் உள்ளது. ஆகவே யோசனையைக் கைவிடுவது பெரும்பாலும் உத்தமம்.

oOo

நல்ல கவிதையைப் படிக்கும்முன் மேற்படி ஆலோசனைகளுக்காக சுஜாதாவைத் திட்டவோ சிலாகிக்கவோ நினைப்பவர்கள் ‘வீடு தோறும் தமிழ் கவிதை’ என்ற அந்த அத்தியாயத்தைத் தேடிப் பிடித்து வாசித்துவிடுங்கள். வேறு பல சிறப்புகள் அக் கட்டுரையில் உள்ளன.

Related Articles

Leave a Comment