கன்னிப் பருவத்திலே

by நூருத்தீன்

பத்தாம் வகுப்பு முடித்ததும் காமர்ஸ்தான் என் மண்டைக்குச் சரிவரும் என்று புரிந்துபோனதால் புதிதாக முளைத்திருந்த வொகேஷனல் கோர்ஸ் என் ப்ளஸ் டூ வகுப்பாயிற்று. B.Com-ற்கு நுழைவாயிலாக ஃபோர்த் குரூப் இருந்தாலும் இந்தப் புதிய குரூப்பைத் தேடிப் பிடித்ததற்குக் காரணம் கணக்கு. செவிவழி, வாய்வழிச் செய்தியாக திரட்டியிருந்த தகவல்கள் ப்ளஸ் டூவின் கணக்குப் பாடத்தை மனத்தில் எக்ஸார்ஸிட் அளவிற்கு தோற்றுவித்த அச்சத்தால், அது இல்லாத காமர்ஸ் குரூப்பாகத் தேடி அலைந்து இதைப் பிடித்துவிட்டேன்.

ஐந்தாண்டுகள் வெட்டி முறித்த முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில் இந்தப் புதிய கோர்ஸ் இல்லை என்பது அன்று ஒருவித மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. அந்தப் பள்ளி பிடிக்கவில்லை என்பதன்று காரணம். சற்று போரடித்திருந்தது. மாறுதல் தேவைப்பட்டது. அதனால் உயர்நிலைப் படிப்புக்கு புதிய கோர்ஸ், புதிய பள்ளி என்று நகரின் மையத்தில் அமைந்திருந்த கல்விச்சாலைக்கு என் மாணவப் பருவத்தின் அடுத்த இரண்டாடுகள் நகர்ந்தன.

கம்பீரத் தோற்றம் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு. நுழைவாயிலிலிருந்து கட்டடம்வரை சாலையின் இருபுறமும் மரங்கள். பெரிய மைதானம். சாலையின் போக்குவரத்து இரைச்சலிலிருந்து விடுபட்ட அமைதி… மிகவும் பிடித்துவிட்டது. உயர்நிலைப் பள்ளியின் கட்டுப்பாடுகள் தளர்ந்து, கிடைத்த புதிய சுதந்திரத்தால் கூடுதல் மகிழ்ச்சி. அது நாள் வரை பழகியிருந்த கண்டிப்பான ஆசிரியர்கள் போலன்றி ராம்தாஸ், கணபதி, கருப்பையா ஸார்கள் காட்டிய நட்பில் தலைகால் புரியவில்லை.

அதைப் பயன்படுத்தி நாங்கள் அடித்த லூட்டி தனி ரகம், ஒரு ஸார் லீவு எடுத்தாலும் போதும். மற்றவர்களிடம் பேசி அன்றைய பீரியட்டைகளை முன்னும் பின்னுமாய் அட்ஜஸ்ட் செய்து, அவர்கள் ஆசிர்வாதிக்காத குறையாய் பதினொன்றரை மணி சினிமாவிற்கு ஒரு குரூப்பாகச் சென்றுவிடுவோம். மூன்றாம் பிறை, மௌன ராகங்கள், அலைகள் ஒய்வதில்லை என்று அது ஒரு தனிப்பட்டியல்.

குறிப்பிட்ட அளவே மாணவர்கள் கொண்ட வகுப்பு. அதனால் எங்கள் அனைவர் மத்தியிலும் இனிய சினேகிதம் உருவாகியிருந்தது. ஆனாலும் கட்சி பிரிந்து சண்டையும் வாக்குவாதமும் ஆக்ரோஷமும் இல்லாமலில்லை. என்ன விஷயத்தில்? நான், சுரேஷ். பிரசாத், அஷோக்குமார் மற்றும் சிலர் கமல்ஹாசன் அபிமானிகள். கமலைப் போல் டேன்ஸர் உண்டா என்ற கட்சி. உவைஸ், முஸ்தபா, மஸுத் மற்றும் சிலர் மிதுன் சக்ரவரத்தி ரசிகர்கள். மிதுனின் ஒரு ஸ்டெப்புக்கு ஈடா உங்கள் கமல் என்று அவர்கள் கலாய்த்து… அந்தப் பிரச்சினை மட்டும் முடிவுறாத பட்டிமன்றமாகவே இரண்டு ஆண்டும் கழிந்துவிட்டது.

பள்ளிக்கூடத்திற்குப் பின்புறம் சென்னை தேம்ஸ் நதியை ஒட்டி மதில் சுவர். வகுப்பு இல்லாத நாள்களில் அது எங்களின் குட்டிச்சுவராகி, தொற்றி அமர்ந்து, அளவாளவிய விஷயத்தின் சாரம் எதுவும் நினைவில்லை. அதுவா முக்கியம்? ரகளை, கூச்சல், சிரிப்பு, கலாட்டா, நக்கல் என்று நினைவுப் பேழையில் சேகரமாகியுள்ளவை
மீட்டி வருடி சுகம் காணப் போதுமானவை.

பள்ளிக்கூடத்திற்கு அடுத்து அமைந்திருந்த TNEB அலுவலக கேண்ட்டீனில் சகாய விலைக்கு மதிய உணவு (கட்டி எடுத்துச் சென்ற வீட்டு உணவும் வீணாகாது), சாலையைக் கடந்து எதிர் தெருவில் நுழைந்து இராணி கடையில் கட்டைவிரல் சைஸ், சமூசா, டீ, அச்சமயம் எங்களுள் யாராவது ஒருவனின் கவனத்தைத் திருப்பி அவனது பேண்ட்டின் பின்புறம் பெல்ட் லூப்பில் கட்டிவிடும் சணல் கயிறு வால்… எங்கள் குரூப்பின் அன்றாட அட்டகாசங்களுள் சில.

அடுத்த காம்பவுண்ட் பெண்கள் கல்லூரி என்பதால் தினந்தோறும் வண்ணமயமாகவும் தென்றல் வருடலாகவுமே கழிந்த பொழுதுகள் அன்றைய வயதிற்குச் சிறப்புச் சிலிர்ப்பு.

பள்ளிக்கூடத்தின் கட்டடம் கம்பீரத் தோற்றம் என்று குறிப்பிட்டேனே, அதன் முகப்பு தேளின் வடிவம் போல் வடிவமைக்கட்டது என்று யாரோ என்னிடம் தெரிவிக்க அதன் பிறகுதான் அதை மனக்கண்ணால் ஏரியல் வியூ நோட்டமிட்டேன். முன் புறம் மாடியிலிருந்து இரு புறமும் இறங்கும் இரண்டு பக்கப் படிக்கட்டுகளும் தேளின் முகமும் குறடுகளும் போலவும் மெயின் பில்டிங்கிலிருந்து இரு புறமும் விரவியிருந்த வகுப்புகள் தேளின் நான்கு கால்கள் போலவும் தோன்றின. அது யதேச்சையா, கட்டும்போதே அப்படித்தான் திட்டமிட்டு வடிவமைத்தார்களா என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது. ஆனால் அதன்பின் அந்தக் கட்டடத்தின் கம்பீரமும் என் மனத்தில் மேலும் பன்மடங்கு கூடிப்போனது மட்டும் உண்மை.

பட்டம் முடித்து அலுவல், பணி என்று வெளிநாடுகளுக்கு வந்தபின் அந்தப் பழைய பள்ளிகூடத்தை சில தமிழ் சினிமாக்களில் பார்த்துவிட்டு, ஒருமுறை உவைஸிடம் ஃபோனில் பேசும்போதும், ‘டேய்! நம்ம ஸ்கூலை இப்போ சினிமா ஷுட்டிங்கிற்கெல்லாம் தருகிறார்கள் போலிருக்கிறது. பார்த்தேன்டா’ என்று பேசும்போது அன்று என் குரலில் ஏதோ ஒரு குதூகலம்.

இப்பொழுது இவற்றையெல்லாம் இங்கு பகிர, பதிய காரணம் இல்லாமலில்லை. கடந்த ஒரு வாரமாக கண்ணில் படும் சென்னைச் செய்தி. நான் ப்ளஸ் டூ படித்த மதரஸா-ஏ-ஆஸம் பள்ளிக்கூடச் செய்தி.

மனத்தில் ஏனோ ஒரு வலி. விழியோரங்களில் சில துளி.

Related Articles

Leave a Comment