கடந்த இரண்டு மாதங்களாக அமெரிக்காவில் ஆடித் தள்ளுபடி பெரும் விற்பனைபோல் கொத்துக் கொத்தாய் துப்பாக்கிச் சூடு கொலைகள்.
அக்டோபர் மாத ஆரம்பத்தில் லாஸ் வேகாஸ் நகரில் 59 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு, அந்தத் துப்பாக்கியின் புகை அடங்குவதற்குள் நவம்பர் முதல் வாரம் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள சிறு ஊரில் ஒருவன் சர்ச்சில் புகுந்து சுட்டதில் 26 பேர் மரணம். அந்த ‘திக் திக்’ அடங்குவதற்குள் நேற்று (Nov. 14, 2017) ஒருவன் கலிஃபோர்னியாவில் துப்பாக்கியும் தோட்டாவுமாகச் சீறிப் பாய்ந்து 5 பேர் சாவு.
ஏன், எதற்கு என்ற ஆராய்ச்சியல்ல இப் பத்தி. இந் நாட்டின் ‘தத்தி’யொன்று அதிபராக உள்ளதே அவரைப் பற்றியது. ஆசியாவில் சுற்றுப்பயணத்தில் உள்ளவர் நேற்றைய துர்நிகழ்வுக்கு வழக்கம்போல் ட்வீட் தட்டியிருக்கிறார். என்னவென்று?
‘டெக்ஸாஸ் நகர மக்களுக்கு கடவுள் துணையிருப்பாராக. FBI யும் காவல் அதிகாரிகளும் களத்தில் உள்ளனர். நான் ஜப்பானிலிருந்து நிகழ்வைக் கண்காணிக்கிறேன்.’
சூரி பாணியில், அமெரிக்கர்கள் அப்படியே ஷாஆஆக்காகி விட்டார்கள். பின்னே? தேர்வில்தான் காப்பியடிப்பார்கள் என்றால், உலக மகா வல்லரசின் அதிபர் கடந்த வார துப்பாக்கிச் சூட்டிற்குத் தாம் அளித்த ட்வீட்டை அப்படியேவா காப்பியடித்துப் பகிர்வார்?
ட்வீட் சமூகமும் பத்திரிகைகளும் காறி உமிழ்ந்தும் அங்கலாய்த்தும் கலாய்த்தும் எழுதிக் கொண்டிருக்கின்றனர். அதற்கெல்லாம் அசரும் ஆசாமியா அந்த ஆள்?
அவரது பதில் சுமந்து வரப்போகும் ஜோக்கிற்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.