35. இருட்டில் நின்று தொழுது கொள்வதே கூடாது; வெளிச்சத்தில்தான் தொழுது கொள்ளல் வேண்டும், என்று சில மெளட்டியர்கள் நம்புகின்றனர். இதுவும் ஒரு தவறான நம்பிக்கையேயாகும். இருட்டிலேனும் வெளிச்சத்திலேனும் எங்கேனும் தொழுதாலும் முகம் மாத்திரம்
கிப்லாத் திசையை முன் நோக்கிக் கொண்டிருந்தால், அதுவே போதுமானது. இருள் ஒளியென்பனவெல்லாம் நிபந்தனையல்ல.
36. நமது ஆதி மாதாவாகிய ஹவ்வா (அலை) ஆண்டவன் கட்டளைக்கு விரோதமாய்ச் சுவர்க்கலோகத்தில் நடந்து கொண்டார்கள்; அதனால்தான் ஆண்டவன் அவர்களைப் பூலோகத்திற்குப் பிரஷ்டம் செய்து விட்டான், என்று ஹவ்வா (அலை) அவர்களைப் பெண்கள் தூஷித்தாலும் ஆண்கள் அவ்வாறே ஆதம் (அலை) நபியைத் தூற்றினாலும் தமக்குள் இருந்து வரும் விவாக பந்தம் (நிகாஹ்) முறிந்து போகுமென்று சில பாமர அறிவிலிகள் கருதிவருகின்றனர். இதுவும் ஒரு மூடக் கொள்கையேயாகும். ஆதம் நபியையேனும் ஹவ்வாவையேனும் தூஷிப்பது நம் மார்க்கத்தில் ஆகாத கருமமேயாகும். அவர்களின் வரலாற்றைக் கூறுங்கால் உண்மையைத்தான் கூறுதல் வேண்டும். இதனாலெல்லாம் விவாஹ பந்தத்திற்குத் தீமை ஏற்பட்டு விடாது.
37. பாலண்ணம் அல்லது வெறும் பால் உட்கொண்ட பின் ஆண்டவனின் கருணைக்காக நன்றி (ஷுக்ரியா) செலுத்தக்கூடாதென்று சில மெளட்டியர்கள் எண்ணி வருகின்றனர். இது மகா மூடத்தனமாகும்; எந்த ஆகாரம் புசித்தாலும் அல்லாஹ்வைப் போற்றல் வேண்டும்.
38. பென்களெல்லாம் ஒன்று சேர்ந்து தொழுது கொள்ள நேரிடுங்கால், தனித்தனியே முன்னும் பின்னுமாக இருந்து தொழுது கொள்ளக்கூடாதென்றும், அப்படித் தொழுது கொண்டால் எல்லோரும் ஒரே வரிசையாக நின்று ஒற்றுமையாகத்தான் தொழுது கொள்ளுதல் வேண்டுமென்றும் சில பாமரப் பெண்கள் கருதுகின்றனர். இதுவும் மகா மூடத்தனமேயாகும். தொழுது கொள்ளும் பெண்களுக்குச் சவுகரியம் எவ்வாறுள்ளதோ, அவ்வண்ணமே தாராள நோக்கத்துடன் தொழுது கொள்வதில் யாதொரு கட்டுப்பாடேனும் நிபந்தனையேனும் நம்மார்க்கத்தில் இல்லை.
39. ஹராத்தில் பிறந்தவன் கைப்பட அறுக்கப்பட்ட மாமிசத்தைப் புசிக்கக்கூடாதென்று சிலர் நம்புகின்றனர். அறுக்கும் விஷயத்தில் மார்க்கம் இட்டுள்ள நிபந்தனை தவறாமல் எந்த அஹ்லெகிதாபி அறுத்தாலும் அதைப் புசிப்பதனால் பாதகமொன்றுமில்லை.
40. கோட்டான், கூவை, ஆந்தை முதலியவைகள் கத்துவதனால் அசுபமும் மரணமும் சம்பவிக்கின்றன என்ற ஒரு மூடக்கொள்கையும் சிலரிடம் இருந்து வருகிறது. சுபமும் அசுபமும், இறப்பும் பிறப்பும், ஆண்டவனின் செயல்களேயல்லாமல், இத்தகைய பறவைகளால் ஒன்றும் சம்பவித்து விடமாட்டாது.
41. ஹஜ்ஜுப் பெருநாளன்று பிராணியைக் குர்பானீ செய்யும் வரை நோன்பு வைத்துக் கொண்டிருக்க வேண்டும்; அறுத்த மாமிசத்தால்தான் தோன்பு திறக்க வேண்டுமென்று சில பாமரர்கள் நம்பிக்கை கொண்டுவருகின்றனர். இஃது அத்துணை அவசியமான மார்க்கக்கட்டளையன்று. குர்பானீ செய்த மாமிசத்தை முதன் முதல் புசிப்பது (முஸ்தஹப்) அழகிய நன்மையேயாகும். அன்று நோன்பு வைக்க வேண்டியதுமில்லை; மாமிசத்தால் தான் நோன்பு திறக்க வேமண்டு மென்பது அவசியமுமில்லை.
42. பிரசவித்த ஸ்திரீ 40 நாட்கள் மட்டும் தீட்டாக இருக்குங்கால், அவள் இருக்கும் இடத்திற்குக் கூடச் சொந்தக் கணவன் போகக்கூடாதென்று சில பாமரர்கள் நம்புகின்றனர். இதுவும் மார்க்க ஆதாரமற்ற மூடக்கொள்கையே ஆகும். கணவன் தன் மனைவியை எந்தக் காலத்தில் காண்பதாலும் குற்றமொன்றும் இல்லை. இதில் புருஷனுக்கில்லாத உரிமை வேறு யாருக்கு இருக்கப் போகிறது?
43. ஜபமாலையில் (தஸ்பீஹில்) ஜபிக்கும் போது அதன் வலது பக்கத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்; இடப்பக்கம் தான் முடிவு பெற வேண்டும்; வேறுவிதமாக ஓதக்கூடாது என்றெல்லாம் சிலர் தாறுமாறான முறைகளையெல்லாம் வீணே ஏற்படுத்திக் கொள்கின்றனர். இத்தகைய மூடவழக்கங்களுக்கு எல்லாம் மார்க்க ஆதாரமே இல்லை.
44. ஜலவிஸர்ஜனம் (சிறுநீர்)செய்தபின் சுத்தம்செய்து கொண்டு எஞ்சிய நல்ல தண்ணீரைக் கொண்டு வலூச் செய்யக்கூடாதென்று சிலர் நம்புகின்றனர். இது மார்க்க ஆதாரமற்றதும் தவறான கொள்கையுமாகும்.
45. குர் ஆன் ஷரீபை ஒதிக்கொண்டு வருங்கால் ஸஜ்தாவுடைய ஆயத்துக் குறுக்கிட்டால் அப்பொழுது அனுஷ்டிக்கப்படும் “ஸஜ்தாதிலாவத்”தின் பிறகு இருபக்கமும் ஸலாம் செய்து திரும்ப வேண்டுமென்று சில மனிதர்கள் கருதுகின்றனர். ஷாபியீ மதுஹபுடையவர்கள்தாம் இவ்வாறு அனுஷ்டித்தல் வழக்கம். ஹனபீ மதுஹபுடையவர்கள் இவ்வாறு ஸலாம் கொடுக்கத் திரும்ப வேண்டியதில்லை. இதற்கு ஹனபீ மதுஹபில் ஆதாரமில்லை.
46. ஜனாஜா (பிரேத)த் தொழுகைக்காகச் செய்த வலூவினால் இதர வேளைகளின் தொழுகையொன்றையும் தொழக் கூடாதென்றும், அந்த மரணத் தொழுகைக்குச் செய்த வலூ கேவலமானதென்றும் சில பாமரர்கள் கருதுகின்றனர்; இது மார்க்க ஆதாரமற்ற ஒரு துர்வழக்கமேயாகும். எத்ததகைய வலூவானாலும் எந்தத் தொழுகையையும் தாராளமாய்த் தொழுது கொள்ளலாம்.
47. முஹர்ரம் மாத 10-வது நாள் (ஷஹாதத்து தினம்) நோன்பு வைக்கவே கூடாது; அன்றுதான் யஜீதின் தாயானவள் நோன்பு வைத்தாள்; அதற்காக நாம் நோன்பு வைத்தலாகாதென்று சில மெளட்டியர்கள் நம்புகின்றனர். இதுவும் மார்க்க ஆதாரமற்ற கொள்கைகளேயாகும். எந்த நாளில் விரதம் அனுஷ்டித்தாலும் அதற்கு ஆண்டவன் நன்மையை அளிக்காமற் போகான்.
48. மக்காவில் ஹஜ்ஜுக் காலங்களில் ” இஹ்ராம்” கட்டிக் கொள்ளும்போது அணிந்து கொள்ளும் ஆடையொன்று, இரு துண்டுகளை இடையில் வைத்ததாக இருந்தால், அது கூடவே கூடாதென்றும், ஒரே நீளமான துணியைத் தான் உடுத்திக்கொள்ள வேண்டுமென்றும் சிலர் கருதுகின்றனர். இவைகளெல்லாம் மார்க்க ஆதாரமற்றவைகளேயாகும். ஒரே வஸ்திரம் போர்த்திக்கொள்வதற்கு ஏற்றவாறு கிடைக்காவிட்டால் இரு துண்டுகளை ஒன்றாக இனைத்துத் தைத்துக் கொள்ளாமல் வேறென்னதான் செய்கிறது? ஆனால், தைத்த ஆடை அக்காலை கூடாதென்று நம்மார்க்கத்தில் விதிக்கப்பட்டுள்ளது ஏனெனின், சட்டை, கோட்டு, அங்கி முதலியவைகளைப்போல் கத்தரித்து ஒழுங்காகத் தைத்த ஆடைகளே அப்பொழுது கூடா என்பதற்காகத் தான்.
49. தும்பையாடுகளுள் அதிகமாய்க் கொழுத்துள்ள பிராணியைக் குர்பானீ செய்யக் கூடாதென்று சில பாமரர்கள் நம்புகின்றனர். இதற்கும் யாதொரு மார்க்க ஆதாரமுமில்லை. இந்நம்பிக்கைக்கு எதிராகவே நமது நபிகள் நாயகம் (ஸல்) கொழுத்திருக்கக் கூடிய தும்பையாட்டைக் குர்பானீ செய்வதுதான் சிறந்ததென்று கூறியிருக்கிறார்கள்.
50. காக்கை, பருந்து முதலிய பிராணிகள் வலூவுக்காக வைத்த சிறிது தண்ணீரில் எச்சம் செய்து விடுமாயின், நல்ல தண்ணீரை அப்பாத்திரத்தில் நீர் வழியும் வண்ணம் அதன்மேல் ஊற்றிவிட்டால் சுத்தமாய்ப் போய்விடுகிறதென்று சில பாமரர்கள் தவறாகக் கருதுகின்றனர். இது தவறான நம்பிக்கையேயாகும். எந்தப் பிராணிகள் எச்சமிட்டு விட்டால் தண்ணீர் அசுத்தமாய்ப் போய்விடுகிறதென்று நம்மார்க்கம் கட்டளையிட்டிருக்கிறதோ, அதுவே சரியானதாகும். இவ்வாறெல்லாம் சற்று வழியத் தண்ணீரை ஊற்றிவிடுவதனால் தண்ணீர் சுத்தமாய்ப் போய் விடாது.
51. கணவன் மரணமடைந்து போனதால் மார்க்கச் சட்டப்படி ஒரு குறித்த காலம் மட்டும் வீட்டிற்குள் “இத்தா” இருக்க வேண்டி மனைவி மரித்த தன் கணவனின் பிரேதப் பெட்டி (ஜனாஜா) வீட்டிலிருந்து வெளியில் கொண்டு போகப்படுவதற்குமுன், தனக்கிஷ்டமான வேறெந்த இல்லத்திற்கேனும் போய் “இத்தா” இருக்கலாமென்று சில ஜனங்கள் தவறாக கருதுகின்றனர்; இத்தாவின் ஒழுங்கு எவ்வாறெனின், கணவனின் ஆவி நீங்கின வினாடி தொடுத்து அவன் மனைவி தன் கணவன் இல்லத்திலேயே இருந்து இத்தாத் தவணையைக் கழித்தல் வேண்டும். ஆனால், இந்தப் பாமரர்கள் மையித்தை வீட்டைவிட்டுக் கொண்டு சென்ற பின்னர்தான் இத்தாவின் காலம் ஆரம்பமாகிறதென்று கருதிக் கொண்டனர் போலும்! இது தவறேயாகும்.
52. இஷாவுக்கு முன் தூங்கிப் பிறகு எழுந்து தொழுவதாயின், இஷாவின் தொழுகையைக் கலா(விடுப்பட) தொழுகையை நிறைவேற்றுவதேபோல் நிய்யத் செய்து தொழ வேண்டுமென்று சில மார்க்கமறியாத அறிவிலிகள் கருதுகின்றனர். இஷாவுக்கும் மக்ரிபுக்கு மிடையே தூங்குவது சாதாரண வழக்கமின்மையேயாகும். இதனாலெல்லாம் தொழுகையைக் கலாவான நிய்யத்துடன் தொழ வேண்டிய அவசியமில்லை. ஆனால், இஷாத் தொழுகையை இதன் நேரத்தைவிட்டு அதிகமாய்ப் பிற்படுத்தி நடுநிசியில் தொழுவது தான் “மக்ரூஹ்” ஆகும்.
53. மையித்துக்கு (சவத்துக்கு), ஸ்னானம் செய்வித்துக் கீழே கொட்டப்பட்டுபோன தண்ணீரையும் காலால் மிதிக்கக் கூடாதென்றும், அந்த “குஸ்ல்” செய்வித்த தண்ணீரையெல்லாம் சிந்தாமல் பிடித்து வைத்திருந்து பிரேதத்தைக் குழியில் (கப்ர்) அடக்கஞ் செய்யும்போது அந்த கப்ருக்குள் குடைந்து தோண்டப்படும் சிறு குழியுள் அதை ஊற்றிவிட வேண்டுமென்றும் சில மெளட்டியப் பாமரர்கள் கருதிக் கொண்டிருக்கின்றனர். இது முழுத்தவறானதும் மார்க்க ஆதாரமற்றதுமான வாதமாகும். அத்தகைய தண்ணீரை மிதிப்பதனால் குற்றமொன்றுமில்லை. அத் தண்ணீரைக் கப்ரில் ஊற்றுவதும் கொடிய செய்கையாகும்; பாபமுமாகும். இன்னும் இத்தகைய வேறு சில அறிவிலிகள் அந்த “குஸ்ல்” தண்ணீரை இதர இடத்தில் ஒரு சிறு குழி தோண்டி, அதில் ஊற்றி மூடிவிடுகின்றனர். இதுவும் ஒர் அனாவசிய ஆகாத கருமமேயாகும்.
54. ஸ்திரீகள் பிள்ளைப் பிரசவத்துடக்கு, மாதாந்தத் தீட்டு முதலிய காலங்களில் இறந்துபோனால் அவர்களின் பிரேதத்துக்கு இரண்டு முறை ஸ்னானம் செய்வித்தல் வேண்டுமென்று சில மெளட்டியர்கள் நம்பியிருக்கின்றனர்; இதுவும் மார்க்க ஆதாரமற்ற மூடக் கொள்கையேயாகும். எத்தகைய துடக்கும் தீட்டும் உடையவர்களாயினும், அன்னாரின் சவத்துக்கு ஒழுங்காய் ஒருமுறை ஸ்னானம் செய்வித்து விட்டால் அதுவே போதுமாகும்.
55. கிப்லா (மேற்கு)த் திசையில் மரியாதைக்காகக் காலை நீட்டக் கூடாதென்றும் வடமேற்கு, தென்மேற்கு திசைகளிலும் காலை நீட்டக்கூடாதென்று சில பாமரர்கள் நம்புகின்றனர். இவ்வெண்ணமும் மார்க்க ஆதாரமற்றதேயாகும். இதனால் யாதோர் ஒழுக்கமின்மையும் குற்றமுமில்லை.
56. நல்ல சுத்தமான தண்ணீரில் விரலின் ஒரு நகத்தை அமுக்கி வைத்துவிட்டாலும் தண்ணீர் அசுத்தமாய் விடுகிறதென்றும், அத்தண்ணீரால் வலூவும் ஸ்னானமும் செய்யக் கூடாதென்றும் சில அறிவிலிகள் கருதுகின்றனர். இதுவும் மெளட்டியத் தனமேயாகும். சுத்தமான தண்ணீரில் அசுத்தமான கையைப்போட்டுக் கலக்கினால்தான் அசுத்தமாகுமேயல்லாது, ஒரு நகம் பட்டுவிடுவதனாலெல்லாம் அசுத்தமாகாது.
57. பிற மதத்தில் ஒருவனுக்கு மனைவியாயிருந்து அம் மதத்தையும் கணவனையும் விட்டு வந்த ஒர் அன்னிய மதஸ்திரீ இஸ்லாம் மதத்தைத் தழுவிக்கொண்டால் ஆய்ந்தோய்ந்து பாராமல் நம் பாமரர்கள் உடனே அவளுக்கு இஸ்லாமியப் புருஷனுடன் விவாகம் செய்துவைத்து விடுகின்றனர். இது கூடாத காரியமாகும். ஏனெனின், அன்னிய மதக் கணவனை விட்டு இஸ்லாத்தில் சேர்ந்துகொண்டது விவாஹ விலக்கு (தலாகைப்) போல் இருப்பதால் அப் புதிய முஸ்லிம் ஸ்திரீயை “இத்தா” வுடைய காலமாகிய மூன்று மாதவிடாய் காலம் வரை காத்திருக்கச் செய்யவேண்டும். பிறகு இன்னும் மூன்று மாதம் அவளுக்கு முன் புருஷனால் உண்டான கர்ப்பமேதாவது தென்படுகிறதாவென நிச்சயிக்கப் பிற்படுத்தி வைக்கவேண்டும்; பிறகு தான் மற்றக் காரியத்தைச் செய்வது ஒழுங்காகும்.
[ஆனால், இக்காலத்தில் இவ்வாங்கில ஆட்சியின் கீழ் அயல்மத ஸ்திரீயொருத்தி இஸ்லாத்தில் சேர்ந்துவிட்டதனாலேயே அவளை ஒரு முஸ்லிம் மணந்துகொள்ளலாம் என்பது செல்லமாட்டாது. அவள் தன் மதமாற்றக் காரணத்தால் தனது பழைய புருஷனிடமிருந்து கோர்ட் மூலமாகவோ அல்லது வேறு மூலமாகவோ விவாகரத்து பெற்றுக் கொண்டாலொழிய, அவளுடைய முதல் புருஷன் உயிருடனிருக்கும் மட்டும் வேறொரு முஸ்லிமும் அம்மாதை இரண்டாமுறை விவாகம் செய்துகொள்வது இந்தியன் பீனல் கோடின்படி ஒரு பெருங்குற்றமாகும். ஆசிரியர்.]
58. முரீது பெறக்கூடிய ஸ்திரீ தனக்கு முரீது தரும் பீர் அன்னிய புருஷராயிருந்தாலும் கோஷா முறையை அனுஷ்டிப்பது கூடாதென்று சில பீர்மார்கள் தீயோபதேசம் செய்கின்றதை உண்மையென்றே சில பாமரர்கள் ஒப்புக் கொண்டு நடக்கின்றனர். இது தவறும் மோசமுமான வழக்கமாகும். பீராக இருப்பினும் வேறு யாராக இருப்பினும் பரபுருஷரின் முன் பர்தாவின்றிச் செல்லக் கூடாது.
59. தன் புருஷன் சாப்பிடாதமுன் மனைவியும் புசிக்கக் கூடாது; கணவன் நித்திரை போகாதமுன் ஸ்திரீயும் தூங்கக் கூடாது, ஆடவர் தொழுதுகொள்ளாத முன் நேரமாய் விட்டாலும் பெண்டிர் தொழுதுகொள்ளக் கூடாதென்றும் சொல்லிக்கொள்கின்றனர். இஃது ஒரு தவறுதலான விஷயமேயாகும்.
60. வலூச் செய்து கொண்டபின் வீட்டைவிட்டு வெளியில் (ஏதோ அவசியத்திற்காகப்) போனால் வலூ முறிந்து போகுமென்று சில பாமர மாதர்கள் கருதி வருகின்றனர். வலூவை முறிக்கக்கூடிய காரியங்கள் உண்டானாலல்லாமல் வெளியில் போவதனாலெல்லாம் வலூ முறிந்து போகாது. ஆனால், பெண் பிள்ளைகள் அவசியமின்றி வெளிச் செல்வது தகாது.
(தொடரும்)
<<ஜியாரத்துல் குபூர் முகப்பு>>
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License