ஆகாத கருமங்கள் – 2

by பா. தாவூத்ஷா

19. புதிதாக இஸ்லாம் மதத்தை தழுவிக்கொள்பவரைச் சில மௌட்டிய முஸ்லிம்கள் மிக முக்கியமாய் மொட்டையடித்து, ஸ்னானம் செய்வித்து, உடைகளை மாற்றிப் புதுக் கோலப்படுத்திச் சிரமத்தைத் தருவதேபோல் அவர்களின்

ஜனனேந்திரியங்களையும் சுத்தப்படுத்துவதற்காக மலசுத்தி மருந்தைத் தருகின்றனர். இது மஹா மூடக் கொள்கையும் தவறான நடத்தையுமாகும். இஸ்லாத்தைத் தழுவிக் கொள்பவரை இத்தன்மையாகப் பலாத்காரம் செய்வது கூடாது.

20. இதர பாமர ஜனங்களுக்கு முரீது தரும் பீர்கள் தங்கள் மனைவிக்கு மட்டும் முரீது தருவது கூடாது; அப்படிக் கொடுத்துவிட்டால் விவாக பந்தம் முறிந்து போகிறதென்று சில ஜனங்கள் நம்புகின்றனர். இதுவும் பெருத்த மூட நம்பிக்கையேயாகும். மனைவிகளுக்குச் சன்மார்க்கத்தைப் போதித்து முரீது தருவதால் ஒன்றும் பாதகமில்லை. அன்றியும் முரீதின் உண்மையான தாத்பரியமும் இதுவேயாகும். நமது நபிகள் நாயகமும் (ஸல்) தமது மனைவிமார்களுக்கு முரீது தந்துள்ளார்கள்.

21. ‘தபஹ்’ செய்பவனின் (ஆடு, மாடு, கோழிகள் அறுப்பவனின்) தர்மங்கள் ஆண்டவனால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாவென்று சிலர் நம்புகின்றனர். இதுவும் தவறானதேயாகும். எத்தகைய மனிதர்கள் தர்மம் செய்தாலும் அதற்குரிய நன்மைகள் இல்லாமற் போகா.

22. கையில் பிரம்பேனும் தண்டமேனும் வைத்துக் கொள்ளக் கூடாது; இமாம் ஹுஸைனை (ரலி) வதைத்த யஜீதும் கையில் பிரம்புதான் வைத்திருந்தான் என்று சிலர் முரணாக நம்புகின்றனர். இதுவும் ஒரு தவறான எண்ணமாகவே இருக்கிறது. கையில் பிரம்பு தடிகளை வைத்துக்கொண்டிருப்பதை எல்லாம் நம் மதம் தடுக்கவில்லை.

23. ஜாதிக்காய், சந்தனம் போன்ற மரங்களின் விறகுகளையோ பலகைகளையோ எரிப்பதற்கும், இதர காரியங்களுக்கு உபயோகப்படுத்துவதற்கும் முன்வரக் கூடாதென்று சில பாமரர்கள் நம்புகின்றனர். இதுவும் ஓர் ஆகாத கெட்ட நம்பிக்கையென்பதில் சந்தேகமொன்றுமில்லை.

24. கணவனும் மனைவியும் தீக்ஷைதரும் ஒரே பீரிடத்தில் முரீது பெறக்கூடாது; அப்படி முரீது பெற்றால், இருவரும் சகோதரன் சகோதரியாகப் போய்விடுவார்கள் என்றும் நிகாஹ் முறிந்து போகுமென்றும் சில அறிவிலிகள் கருதுகின்றனர். இதுவும் ஓர் ஆகாத மூடக்கொள்கையும் பாப எண்ணமுமேயாகும்.

25. புருஷனும் மனைவியும் ஒரே பாத்திரத்தில் பால் பருகக்கூடாது; அப்படிக் குடித்தால் இருவரும் ஒரே தாயிடம் பால் குடித்த அண்ணன் தங்கையைப்போல் ஆய்விடுவார்கள் என்றும் ஒரு சிலர் கருதுகின்றனர். இதற்கு நம் மார்க்கத்தில் ஆதாரமேயில்லை.

26. பிறர் திருடிக் கொண்டுவந்த பொருள்களை விலை கொடுத்து வாங்கிவிட்டால், அது ‘ஹலாலா’க ஆய்விடும்; இதில் ஒரு குற்றமுமில்லை என்றும், அவ்வாறே ஹராமான சொத்துக்களை மாற்றிக்கொள்வதாலும் பாதகமில்லையென்றும் சிலர் கருதுகின்றனர். உதாஹரணமாக, ஒருவன் விலையுயர்ந்த பொருள்களையோ கனிகளையோ திருடிக்கொண்டு வந்து விற்றுவிடுகிறான்; இது திருட்டு உடைமையென்று தெரிந்திருந்தும் விலைக்கு வாங்குபவன், நாம் கிரயத்தைக் கொடுத்துப் பெற்றுவிட்டதனால் நமக்கொன்றும் குற்றமில்லையென்று கருதிக்கொள்கிறான்; இவ்வாறே, நம் மார்க்கத்தில் ஆகாத வட்டிப்பணத்தை ஒருவன் வாங்கினான்; அதைக் கொண்டு வேறொருவனிடம் கொடுத்து மாற்றிக்கொண்டு, வட்டியாகப் பெற்ற பணம்தான் பிறரிடம் போய்விட்டதேயென்று இந்தப் பணத்தை வைத்துக்கொள்வதனால் பாபமொன்றுமிலலையென்று கருதிக்கொள்கிறான். இந்த இருவிதக் காரியங்களும் ஆகாத ஹராமேயாகும். இத்தகைய தந்திரங்களாலெல்லாம் பாபத்தைவிட்டும் தப்பிக்கொள்வது முடியாது.

27. நடுப்பகல் உச்சிநேரத்தில் தொழுதுகொள்வது மக்ரூஹாக (அருவருக்கத்தக்கதாக) இருப்பதைப்போல் அந் நேரத்தில் குர்ஆனை ஓதுவதும் கூடாதென்று சில மௌட்டியர்கள் கருதுகின்றனர். இதுவும் தவறான கொள்கையேயாகும்.

28. பிள்ளையைப் பெற்று அதன் துடக்கில் இருக்கும் ஸ்திரீகள், மாதவிடாயான ஸ்திரீகள், (வீடு கூடியபின்) ஸ்னானம் செய்யாத ஸ்திரீகள் இவர்களின் கரத்தால் ஒன்றையும் வாங்கிப் புசிக்கக் கூடாதென்று சில அறிவிலிகள் கருதுகின்றனர். இவ்வாறு நம்புவது மூடத்தனமும் இவ்வாறு நடத்தல் ஆகாத கருமமுமாகும். இவர்களின் கரத்தால் தாராளமாய் எதையும் வாங்கிப் புசிக்கலாம். அசுத்தமாகாது.

29. ஒரு பெரிய தடாகத்தில் கையினால் தள்ளிய தண்ணீரை அருந்துவது கூடாதென்று சிலர் கருதுகின்றனர். இதுவும் தவறானதேயாகும். கைபட்ட தண்ணீர் அசுத்தமாகாதென்பது மார்க்க அனுமதி.

30. வலூச் செய்துகொண்ட பின்னர்ப் பன்றியைப் பார்த்துவிட்டால், அது முறிந்து போகிறதென்று சில மௌட்டியர்கள் நம்புகின்றனர். இது பெருந்தவறான மார்க்க ஆதாரமற்ற கருமமாகம்.

31. ஆடு கோழி முதலியவைகளை அறுக்கும் கத்தி மூன்று பூண்கள் உடையதாய் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் தான் ‘தபஹ்’ செய்வது ஆகுமாம்; இன்றேல் ஹலால் ஆகமாட்டாதென்று சில பாமரர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இதுவும் மௌட்டியமேயாகும். நல்ல கத்தி எத்தகையதானாலும் அதைக்கொண்டு அறுக்கலாம்.

32. தன் ஆஸ்தி பூஸ்திகளுக்குப் பிதுரார்ஜித பாத்தியமுடைய மக்கள் இருக்கும் போது, அன்னியரெவருக்காவது தம் சொத்தில் ஒரு பகுதியையோ முழுதையுமோ நன்கொடையாகவேனும் தர்மமாகவேனும் இனாமாகவேனும் கொடுத்தல் கூடவே கூடாது; அப்படி அளிக்கவேண்டுமாயின், தான் சுயமே பிரயாசைப்பட்டுத் தேடிச் சேமித்த பொருள்களிலிருந்து தான் கொடுக்கவேண்டும்; மூதாதைகளின் மூல்யமாய்த் தனக்குக் கிடைத்த சொத்திலிருந்து பிறருக்குக் கொடுக்கக்கூடாதென்று சில பாமரர்கள் தவறாகக் கருதி வருகின்றனர். தான் சொந்தமாய்ச் சம்பாதித்த சொத்தாயினும் அல்லது பிதுரார்ஜிதமாய் வந்த பொருளாயினும், இவ்விரண்டுக்கும் மார்க்கக் கட்டளை ஒன்றே. அஃதாவது, தன்னுடைய சொத்தில் மூன்றிலொரு பாகத்தைத் தவிர அதிகமாய்த் தானம் பண்ணவோ தர்மம் செய்துவிடவோ வஸிய்யத் செய்யவோ கூடாது.

33. விவாகம் முடித்துக் கொண்டு வாழ்ந்து இருபது மக்கள் வரை பெற்றுவிட்டால், இனிமேல் புருஷன் மனைவிக்கு இடையே இருந்து வந்த விவாக பந்தம் முறிந்து விடுமென்றும் தம்பதிகள் இருபது புத்திரர்களுக்கு மேல் பெற்றெடுக்கக் கூடாதென்றும் சில மௌட்டியர்கள் கருதி வருகின்றனர். இதுவும் ஒரு மூடக் கொள்கையையேயாகும். மக்களைப் பெற்றெடுக்கும் விஷயங்களிலெல்லாம் கட்டுப்பாட்டை நுழைத்துவிடுவது கூடாத கருமமேயாகும்.

34. இராக்காலங்களில் மரத்தையாவது செடியையாவது அசைக்கக்கூடாதென்றும் அவைகளெல்லாம் அப்போது ஓய்வெடுத்துக் கொண்டு தூங்குகின்றனவென்றும், அதைக் கலைத்துச் சிரமத்தை உண்டாக்கக் கூடாதென்றும் இது பாபமென்றும் சில பாமரர்கள் கருதி வருகின்றனர். இதவும் ஒரு மூடக் கொள்கையேயாகும். மரஞ் செடி போன்றவைகளையெல்லாம் அசைப்பதனாலும் அசைக்காமலிருப்பதனாலும் நம்மார்க்கத்தில் யாதோர் அனர்த்தமேனும் நன்மையேனும் விளைந்துவிடப் போகிறதில்லை. இம்மாதிரியான நம்பிக்கைகளெல்லாம் கல்வியில்லாமலிருப்பதன் தீமையேயாகும்.

(தொடரும்)

<<முந்தையது>>  <<அடுத்தது>>

<<ஜியாரத்துல் குபூர் முகப்பு>>


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment