ஆகாத கருமங்கள் – 5

by பா. தாவூத்ஷா

86. ஜகாத்துக்காக (தன்னிடமுள்ள சொத்துக்குத் தர்மமாக)ப் பணத்தை வினியோகிக்கும்போது இது ஜகாத்துடைய பணம் என்று சொல்லியே கொடுக்க வேண்டுமாம். இன்றேல் அது ஜகாத்தாகாதென்று பாமரர்கள் கூறுகின்றனர். இதுவும் தவறானதேயாகும். இவ்வாறு கூறவேண்டுமென்ற அவசியமில்லை; மனத்துள் எண்ணிக்கொள்வதே போதும்.

87. தங்கம், வெள்ளி நகைகளை அணிந்துகொண்டிருந்தால் அதற்காக ஜகாத்துக் கொடுக்க வேண்டியதில்லை; உபயோகிக்காமல் வெறுமனே வைத்திருக்கும் ஆபரணாதிகளுக்குத்தாம் ஜகாத் கொடுக்கவேண்டுமென்று சில பாமரர்கள் எண்ணுகின்றனர். இஃது ஆதாரமற்ற கூற்றாகும். அணிந்துகொள்ளும் ஆபரணமும், பெட்டியில் வைத்திருக்கும் நகையும் ஜகாத் விஷயத்தில் ஒன்றேதாம்.

88. பெண்கள் வீட்டுக்குத் தூரமாய் (ஹைலாய்) இருக்கும்போது அவர்கள் மணமுடித்து வைக்கப்பட்டால் அந்த விவாகம் கூடாதென்று சில பாமரர்கள் நம்புகின்றனர். இதுவும் தவறான நம்பிக்கையேயாகும். அக்காலத்தில் விவாகம் முடித்து வைப்பதனால் யாதொரு முரணும் நம்மார்க்க விஷயத்தில் இல்லை. ஆனால், புருஷன் அக்காலத்தில் அவளுடன் சம்ஸர்க்கம் புரிதல்தான் கூடாது.

89. அன்னியர் நிலத்தில் வீணாய்க் கிடக்கும் புற்பூண்டுகளை மாடாடுகள் தின்று விடாமல் காப்பாற்றிக்கொண்டால் அவை தங்களுக்குச் சொந்தமாகி விடுகின்றனவென்றும் அவற்றைத்தான் விற்றுவிடுவது ஆகுமென்றும் சில நிலச்சுவான்தார்கள் எண்ணுகின்றனர். இது தவறாகும்.

90. கனிகள் விளைப்பதற்கு முன் தோட்டத்தை விற்று விடுவது ஆகாதென்றும் அதனுடன் சிறிது நிலத்தையும் குத்தகைக்காக விட்டு விட்டால் ஆகுமென்றும் சில ஜமீன்தார்கள் கூறுகின்றனர். இதுவும் தவறாகும். இந்தக் குத்தகையினால் அந்த விற்பனை கூடாது.

91. அடமானம் வைத்த பொருளிலிருந்து இலாபத்தை அடைவது நம்மார்க்கத்தில் கூடாததாய் இருக்க ஒரு சில ஜமீன்தார்கள் ஏழைகளிடமிருந்து அடமானமாய்ப் பெற்ற பூமி முதலியவைகளிலிருந்து பிரயோஜனம் அடைந்து விட்டுப் பூமிக்குடையவனிடம் கேட்டு ஹலாலாக்கிக் கொண்டால் பாதகமில்லையென்று கருதிக்கொண்டு, அடமானம் வைக்கப்பட்ட பொருளிலிருந்து எந்தத் தந்திரத்தினாலும் பிரயோஜனமடைவது கூடாததேயாகும்.

92. கோபமாயிருக்கும் நேரத்தில் மனைவியை மிரட்டுவதற்காகவென்று “தலாக்” (விவாகரத்து) சொல்லிவிட்டால் விவாக. விலக்கு ஏற்படாதென்றும் இஃது உண்மையில் சொல்லப்படுவதில்லை என்றும் சில பாமர அறியாதார்கள் கருதிக் கொண்டிருக்கின்றனர். இஃது அன்னாரின் அறியாத் தன்மையேயாகும்.

93. சிலர் ரயிலில் பிரயாணம் செய்யும்போது யாதோர் இடையூறுமின்றி உட்கார்ந்து கிப்லாத் திசையை முன்னோக்காமல் தொழுது விடுகின்றனர். இது கூடாத கருமமேயாம். தொழுகையில் கிப்லாவை முன்னோக்குவது ஒரு கடமையாம். எத்தகைய சந்தர்ப்பமானாலும் கிப்லாத் திசையல்லாத திக்கை நோக்கித் தொழக்கூடாது. நம் மார்க்கத்தில் வீட்டில் ஒரு சட்டமும் ரயிலில் ஒரு சட்டமுமில்லை. திசை தெரியாமற் போனாலல்லாமல் இதர திசையை நோக்கித் தொழுதல் கூடாது; மேலும் வீடுகளில் யாதொரு வியாதியுமின்றிப் பெண்கள் உட்கார்ந்து தொழுதுவிடுகின்றனர். இதுவும் நல்ல காரியமன்று. நின்று தொழுதல் அதிக நன்மையைத் தரும்.

94. சில பெண்கள் பெட்டி வண்டி (டோலி)களில் போகும்போது அதனுள் உட்கார்ந்து தொழுது கொள்கின்றனர். வண்டியை விட்டு இறங்கினால் ஆபத்து இல்லை என்ற இடங்களில் இறங்கியே தொழுதுகொள்ளல் வேண்டும். அதிகமான திரைமறைவு வேண்டுமென்ற அவசியமில்லை; வழக்கமாய்ப் போர்த்திக் கொள்ளும் “புர்காவே” போதுமானது.

95. சில மனிதர்கள் வஸ்திரத்தின்மீதும் தலையணையின் மீதும் (தூசியில்லாமலிருக்க) தயம்மும் செய்து கொள்கின்றனர். அவைகளின் மீது அதிமான புழுதியில்லையாயின் தயம்மும் செய்வது கூடாது.

96. சில தெரியாத பாமரர்கள் கோஷா வழக்கத்தை விட்டு, வேறு எந்த வீட்டு மாதர்கள் அவ்வாறு அனுஷ்டிப்பதில்லையோ அவ்வீட்டுப் புருஷரான இமாம் சாஹிபைப் பின் பற்றித் தொழுவது கூடவே கூடாதென்று கருதிக்கொண்டிருக்கின்றனர். இதுவும் ஆதாரமற்ற ஒரு வீண் நம்பிக்கையேயாகும். இப்படி வாதாடும் பாமரர்களின் வீட்டு ஸ்திரீகளும் அன்னிய புருஷர்களுக்கெதிரில் போய் விட்டால் இவர்களின் வீட்டிலும் பர்தாவெனும் கோஷா வழக்கமில்லை, என்றேதான் சொல்லவேண்டும். இது சமயம் இமாமும் இவரிடம் கேள்வி கேட்போரும் சமமாகவே இருக்கின்றனர்.

97. திருடிவிட்டவர்களை ஜாலம், மாந்திரீகம் (அமல்) முதலியவைகள் செய்து பிடித்துத்தருவது மார்க்கப்படி ஆகுமென்றும், இஃது ஒரு நன்மையென்றும் கருதுகின்றனர். இஃது ஆகக்கூடியதுமில்லை; ஒரு நன்மையுமில்லை. திருடரைப் பிடிப்பதற்கு யாரை அரசாங்கத்தார் நியமித்திருக்கிறார்களோ அவர்களின் தொழிற்கடமை அது. அமலிய்யாத் செய்து கண்டுபிடிப்பவர் யாதொரு தகுந்த ஆதாரமின்றி ஒர் உத்தேசத்தின்மீதே நிச்சயித்து விடுகிறார்கள். அப்படி நிச்சயிக்கப்பட்டவன் உண்மையில் களவாடாதவனாயிருப்பின், எல்லாக் குற்றமும் ஆண்டவனிடத்தில் இந்த “ஆமில்” மீதுதான் ஏற்படும். மேலும் இரண்டு “ஆமில்” கள் திருடிய ஒருவனைக் கண்டுபிடிக்க அமல் புரிவார்களானால், திருடாதவர்களின் மீதும் உத்தேசப்படி குற்றத்தைச் சாட்டி விடுவார்கள். ஆதலால், இவைகளெல்லாம் ஆகாத கருமங்களேயாகும்.

98. பரிசுத்தக் குர்ஆன் ஷரீபைக் கீழே போட்டுவிட்டால், அந்த வேதத்தின் எடைக்குச் சரியாகத் தானியத்தை அல்லது உப்பை நிறுத்தித் தர்மம் செய்துவிடும் வழக்கம் ஒரு சில பாமரர்களுக்குள் நடந்து வருகிறது. இந்தக் காரியம் மிகுந்த அழகானதும், யாரும் ஒப்புக்கொள்ளக் கூடியதும்தான். ஆனால், இப்படி குர்ஆனைப் போட்டு நிறுத்தாமல் தாங்கள் செய்த குற்றத்துக்காக ஒரு பொருளையோ, தொகையையோ கணக்கின்றிக் கொடுத்துவிடுவது அதைவிட நன்மையாகும். இதை முக்கியமான கடமையென்று எண்ணிக் கொள்வதும் அவசியமற்றதே யாகும்.

99. மிருகங்களை மிருகங்களுடன் சேர்த்து வைப்பதையும் சில பாமரர்கள் அருவருப்பாகவும், மார்க்கத்துக்கு ஆகாத கருமமாகவும் கருதுகின்றனர். இதற்குக் கூலி வாங்குவது கூடாது, அவைகளைச் சேர்த்து வைப்பதை ஆகாதென்று கண்டித்தால், வியவசாயத்துக்குப் பிராணிகளும் பால் பருகப் பசுக்களும் சவாரி செய்யக் குதிரைகளும் பக்ஷணிக்க ஆடுகளும் எங்கிருந்து கிடைக்கும்?

100. பிரமாணிக்கம் (சத்தியம்) செய்யும்போது வலது கரத்தின் பெருவிரலை மடக்கிக்கொண்டால், அது சத்தியமாக ஆகாதென்று சில பாமரர்கள் நம்புகின்றனர். இப்படியெல்லாம் சொல்லிப் பிரமாணிக்கத்தை மீறுவது பெரும் பாதகமேயாகும்.

101. பள்ளிவாயிலில் அவசியமில்லாத நேரங்களில் வீணாக எரியும் விளக்குகளையும் அணைக்கக் கூடாதென்று பாமரர்கள் நம்புகின்றனர்; இது மார்க்க ஆதாரமற்ற வாதமாகும். ஆவசியகமற்ற காலங்களில் அனாவசியமாய் விளக்கெரிய வைப்பது “இஸ்ராப்” என்னும் வீண் விரயம் ஆகும். அவசியமில்லாத காலத்தில் தீபத்தை அனைத்து விடுவதே நலமாகும்.

102. வஸ்திரங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியாத விதமான வியாதியஸ்தர்களின்மீது ஆண்டவன் விதித்துள்ள தொழுகை தள்ளப்பட்டுப் போகிறதென்று சில பாமரர்கள் தமக்குள் எண்ணுகின்றனர். இது முழுத் தவறானதாகும். இவ்வித நோய்வாய்ப் பட்ட நிலைமையில் தொழ முடியாமற் போயினும், அவன்மீது தொழுகையின் கடமை இருந்துகொண்டுதான் இருக்கிறது. வியாதி சொஸ்தமானதன் பின் விடுபட்ட (கலா) தொழுகைகளையெல்லாம் சிறுகச் சிறுகத் தொழுதுதான் ஆகவேண்டும். அல்லது வியாதி நீங்கவே இல்லையாயின், சுத்தமில்லாத உடையைக்கொண்டே இயன்ற மட்டும் உட்கார்ந்தோ, படுத்தோ தொழுதுதான் ஆகவேண்டும்.

103. சில மனிதர்கள் மஸ்ஜிதுக்குச் சமீபமாயிருக்கும் தங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு ஜும்ஆத் தொழுகைக்காகப் பள்ளிவாயிலுக்கு வருவார்களாயின், வந்தவுடன் சிறிது நேரம் உட்கார்ந்து பிறகு தான் எழுந்து சுன்னத் என்னும் தொழுகையை நிறைவேற்றுகின்றனர். இவர்கள் சமீபத்திலிருந்து வந்ததனால் சிறிது உட்கார்ந்து ஓய்வெடுத்துப் பிறகுதான் தொழுகையை நிறைவேற்ற வேண்டுமென்பதில்லை. மஸ்ஜிதுக்குள் நுழைந்தும் தங்கள் சுன்னத்துத் தொழுகையத் தொழுவது நலமாம்.

104. இறந்தோர்களின் ஸமாதிகளின்மீது ஒவ்வொரு முஹர்ரம் மாதத்திலும் புது மண்ணைப் போட்டு மெழுக வேண்டுமென்பதை அவசியக் கிரியையாகச் சிலர் கருதுகின்றனர். இதற்கும் நம்மதத்தில் ஆதாரமில்லை.

105. சில பாமரர்கள் மரித்த சவங்களுக்கு ஸ்னானம் செய்விக்குங்கால் தம் வீட்டிலிருக்கும் பழகிய பாத்திரங்களை உபயோகிக்கக் கூடாதென்று புதுப் பாத்திரங்களையே வரவழைத்து அவற்றால்தாம் ஸ்னானம் செய்விக்க வேண்டுமென்று எண்ணுகின்றனர். அதன் பிறகும் அப் புதுப் பாத்திரங்களை வீட்டில் வைத்துப் பழகுவது கூடாதென்று அவற்றைப் பள்ளிவாயில்களுக்குத் தானம் செய்துவிட வேண்டுமென்றும் அல்லது உடைத்தெறிந்து விடவேண்டுமென்றும் சிலர் கருதுகின்றனர். இதற்கு எவ்வித ஆதாரமுமில்லை.

106. சில ஸ்திரீகள் இரவில் வீட்டைக் கூட்டிச் சுத்தம் செய்வதையும் விளக்கை வாயால் ஊதி அணைப்பதையும் பிறருக்குத் தலை சீவுவதையும் ஆகாத கருமங்களாகப் பாவிக்கின்றனர். ஈதெல்லாம் வீண் நம்பிக்கையேயாகும்.

107. ஆடு கோழி முதலியவைகளை (தபஹ்) அறுக்கும்போது அவற்றைப் பிடிப்பவன் முஸ்லிம் அல்லாதவனாக இருப்பது கூடாதென்றும், அவ்வாறு செய்யின் மாமிசம் ஹராமாய்ப் போய்விடுமென்றும் கருதுகின்றனர். இஃதோர் ஆதாரமற்ற கொள்கையேயாகும். முஸ்லிம் அல்லாதவன் பிடிப்பதனால் மாமிசம் ஹராமாகாது.

108. ஏதேனும் ஓர் அவசியத்தினிமித்தம் (முதலில் நிச்சயித்த மஹ்ரை) இரண்டாவது முறை பெண் ஜாதிக்குக்கென்று அதிகப்படுத்த வேண்டுமாயின், அதற்குப்பின் மூன்றாவது முறையும் அத்தியாவசியமாய் அம்மஹர்த் தொகையை நிச்சயிக்கவேண்டும் என்று சிலர் சொல்லுகின்றனர். இதற்கு எவ்வித ஆதாரமுமில்லை.

109. குர்ஆன் ஷரீபின் வாக்கியங்களை சில இடங்களில் சேர்த்து ஓதிவிட்டால், ஓதினவன் “காபீராய்ப்” போய்விடுகிறானென்றும் அவ்வாறு சேர்த்து வாசிப்பதால் ஷைத்தானின் பெயர் அதில் உண்டாகிறதென்றும் “அல்ஹம்து” சூராவின் எந்த ஆயத்தைச் சேர்த்து ஓதினாலும் ஷைத்தானின் பெயர் உண்டாகிறதென்றும் சிலர் சொல்லுகின்றனர். குர்ஆன் வாக்கியத்தைச் சேர்த்து ஓதிவிடுவதனால் “குஃப்ரிய்யத்” உண்டாய்விட மாட்டாது. ஷைத்தானுடைய பெயரும் வந்துவிடுவதில்லை. இஃதெல்லாம் வெறும் வாதமேயாகும். ஆனால், வாசிக்கும் (தஜ்வீத்) சட்டப்படி ஒழுங்காய்ச் சேர்க்குமிடத்தில் சேர்த்தும் பிரிக்குமிடத்தில் பிரித்தும் ஓதுவதே நலம்.

110. சில படித்த ஆலிம்களே “அமலிய்யாத்” போன்ற சில காரியங்களுக்கு (முதற் பிறை, பூரணச்சந்திரன், அமாவாசை என்று) குறிப்பான காலங்களை நியமித்துக்கொள்கின்றனர். இவையும் அவசியமற்றவைகளேயாகும்.

(தொடரும்)

<<முந்தையது>>  <<அடுத்தது>>

<<ஜியாரத்துல் குபூர் முகப்பு>>


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment