மலிக்காத்துல் முஸ்லிமீன் சுல்தானா ஷஜருத்துர் மிகவும் ஒழுங்காக நீதி பரிபாலன ஆட்சி புரிந்து வந்தாரென்பதையும் மாஜீ சுல்தான் மலிக்குல் முஈஜ் மூலையில் குந்தி பொழுது போக்கிக்கொண்டிருந்தார் என்பதையும் நாம் முன்னம் விவரித்தோம். இவ்விதமாக ஹிஜ்ரீ

653-ஆம் ஆண்டுவரை (கி.பி. 1256) எல்லாம் சுமுகமாகவே நடந்தேறி வந்தன. மைமூனாவின் தலாக்கு விஷயங்கூட அவ் வரண்மனையிலிருந்த எல்லாராலும் சிறுகச்சிறுக மறக்கப்பட்டே வந்தது. முஈஜுத்தீனே கூட, தமக்கொரு சிறந்த மனைவி இருந்தாள் என்பதையும் நூருத்தீனென்று தமக்கொரு மைந்தன் இருந்து வருகிறான் என்பதையும் அறவே மறந்துவிட்டார். வேண்டிய சுகபோகம் அத்தனையுமே அந்த மாஜீ சுல்தானுக்கு அரண்மனையிலேயே கிடைத்து வந்தமையால், அவர் ஒரு குறைவுமின்றியே மகிழ்வுடன் வாழ்ந்துவந்தார்.

எனினும், ஒரே ஒரு விஷயத்தில் மட்டுமே முஈஜுக்கு அளவுமீறிய அதிருப்தி இருந்துவந்தது. என்னெனின், ஷஜருத்துர் அவருடனே அன்னியோன்னியமாய்ப் பேசுவதில்லை; கொஞ்சுவதில்லை; குலவுவதில்லை; காதலைச் சொரிவதில்லை; காமத்தை மூட்டுவதில்லை; அல்லது மனைவியாய் வாழ்வதற்குக் கணவருடன் ஒத்துழைப்பதில்லை. முன்பெல்லாம் அளவு மீறிய சிருங்காரச் சேஷ்டைமிக்க சொக்குப்பொடி போட்டு, மதிமயக்கமுறச் செய்த அதே ஷஜருத்துர்தாமா இப்பொழுது இப்படியெல்லாம் விறைப்பாகவும் முறைப்பாகவும் வெறுப்புமிக்கும் வாழ்க்கை நடத்துகிறார் என்னும் ஐயமுங்கூட முஈஜுக்கு ஏற்பட்டு விட்டது.

கணவன்-மனைவி வாழ்க்கையில் மனைவியாயிருப்பவள் இப்படிக் காமத்தை முற்றுந் துறந்து கம்பீர வாழ்க்கை நடத்தினால், வாலிபத்தின் முறுக்கால் மோகம் முதிர்ந்து நிற்கும் கணவனின் கதி எப்படியிருக்கும் என்பதைச் சற்றே கண்மூடிச் சிந்தித்துப் பாருங்கள்! “மின்புறங்காட் டுஞ்சயன மேற்படுத்தால் என்புறத்தில், பின்புறங்காட் டிப்படுப்பாள் பேசாமல் – அன்புடன்நான், செய்யா வுபசாரஞ் செய்யப்போ னாலும் முழங், கையா லிடிப்பாள் கடுகடுப்பாய்!” என்று அன்றொரு வேசியால் கைவிடப்பட்ட காமாந்தகாரன் துடித்துக் கூறியது போல் பொம்மை சுல்தான் முஈஜுத்தீனின் கதியும் போய் முடிந்தது.

பகலெல்லாம் சுல்தானா அரசவையில் கொலுவீற்றிருப்பார்; மாலை நேரங்களில் இரகசிய நடவடிக்கையெடுப்பதிலும் அவசரச் சட்டங்கள் இயற்றுவதிலும் பொழுது போக்குவார்; இரவு வந்தடுத்தவுடனே பஹ்ரீ தலைவரான ருக்னுத்தீனுடனே வெகு நேரம் வரை ஏதேதோ சம்பாஷித்துக்கொண்டிருப்பார்; நள்ளிரவுக்கும் அப்பாலே தம் ஹம்ஸதூளிகா மஞ்சத்தில் தொப்பென்று படுத்து நன்றாய் இழுத்துப் போர்த்துக் கொண்டு குறட்டை விட்டுத் தூங்குவார். பிறகு அதிகாலையில் துயிலுணர்ந்தெழுத்து ஏனைக் காரியங்களைப் பார்க்க ஆரம்பித்துவிடுவார். இவ்விதமாகவே ஒவ்வொரு நாளும் கடந்து வந்தது.

என்றைக்காவது ஒருநாள் அந்த ஐபக் பொறுக்க முடியாமற்போய், ஷஜருத்துர் படுக்கச் சென்றதும் கிட்ட நெருங்கினால், அந்த சுல்தானா திமிறுகிற திமிறலிலும் உதைத்துக் கொடுக்கிற உதைப்பிலும் முழுங் கையாலிடிக்கிற இடிப்பிலும் விழுந்து பிடுங்குகிற சீறலிலும் சீற்றத்திலும் முஈஜுத்தீன் பயந்துப்போய், வேட்கையும் தணியாது, கோபமும் அடங்காது, ஆத்திரமும் அணையாது படுதோல்வியடைந்த வீரனேபோல் வெறுமனே சென்று தம்கட்டிலில் படுத்துக்கொண்டு, விடிய விடிய வெய்துயிர்த்துக் கொண்டிருப்பார். மோகம் மூண்டுவிட்ட வாலிபன் ஒருவன்மாட்டு இளம் வனிதை ஒருத்தி இங்ஙனம் நடந்துக்கொள்வதால் அவன் அடைகிற அவமானமும் ஏமாற்றமும் வேறெதற்குமே நிகராகச் சொல்லிக்காட்ட முடியாதென்பதை அனுபவித்தில் கண்டறிந்தவர்கள் மிக நன்றாய் உணர்வார்கள்.

பலநாள் கடும் பசியால் உடல் மெலிந்தவனைக் கையையும் காலையும் வாயையும் கட்டிப் பெரிய விருந்து போஜனத்துக்கு எதிரில் சற்று நேரம் உட்கார வைத்துவிட்டு, நல்ல சமயமாகப் பார்த்து அவனை அங்கிருந்து தூக்கிச் சென்றுவிட்டால், அவனுக்கு எப்படிப்பட்ட ஏமாற்றமும் பொருமலும் ஏற்படுமோ, அதனினுங் கொடிய ஏமாற்றத்தையே முஈஜுத்தீன் பெற்றுக் கொண்டுவிட்டார். கேவலம் காமத்தீயை அணைத்துக்கொள்வது ஒருபுறமிருக்கட்டும்; ஆனால், மனைவியென்றொருத்தி பக்கத்திலேயே இருந்து, பேசாமலும் வார்த்தையாடாமலும் இன்மொழி புகலாமலும் ஒரு புன்முறுவல்கூடப் பூக்காமலும் ஏதோ முன்பின் தெரியாத புதிய மனிதரைச் சற்றும் சட்டை செய்யாமல் வேறு ஜோலியாப் போவது போலவும் தினசரியும் நடந்துகொண்டால், அக்கனவனின் கதி – அதிலும், முஈஜுத்தீன் இருக்கும் நிலையிலுள்ள பொம்மைப் புல்லுருவின் கதி எப்படிப்பட்ட பரிதாபகரமாகமாய்க் காட்சியளிக்குமென்று நினைக்கிறீர்கள்?

மனிதனாய்ப் பிறந்தவன் இவ்வுலகத்தில் பெற்றுக் கொள்ளக் கூடிய மிகப் பெரிய இன்பத்துக்குச் சிற்றின்பமென்று பெயர்; அச் சிற்றின்பத்தையும் அவன் தன் காதலியின் மாட்டுத்தான் பெற்று மகிழ முடியும். அப்படிப்பட்ட சிற்றின்ப ஊற்றுக்கண் ஒரு மொத்தமாய் அடைத்துப்போய்விட்டால், கணவனின் கதி என்னாவது? பெறற்கரிய மிகப்பெரிய இன்பம் இங்ஙனமாகத் தடை செய்யப்பட்டு விட்டவுடனே முஈஜுத்தீனின் கதி அதோ கதியாய்ப் போய்விட்டது. அரசியை நம்பி அரிய மனைவியை கைவிட்டு, ஒருபயனுமில்லாமல், ஒரு பலனுமில்லாமல் வானப்பிரஸ்த வாழ்க்கை வாழவேண்டிய சகிக்க முடியாத பெருஞ் சங்கடத்தில் அவர் சிக்கித் தவிக்கலாயினார். நெடிய வலையினுள்ளே கலைமான் சிக்கினாற்போலே மருண்டார்; தூண்டிலே மீன் சிக்கினாற்போலே மெலிந்தார்; ஏன் சிக்கிக் கொண்டோமென்று உள்ளங் குழைந்து கொதித்தார். இந்த மாதிரியான இடைஞ்சல்களெல்லாம் விளையக்கூடுமென்பதை முற்கூட்டியே முஈஜுத்தீன் எதிர்பார்த்திருந்தால் அல்லவோ சிக்கிக்கொள்ளது இருந்திருப்பார்?

முஈஜுத்தீனுக்கு ஷஜருத்துர்ரால் எவ்விதப் பிரயோஜனமும் இல்லாமற் போனதுடனே, நாளாக நாளாக அந்த ராணியர் திலகம் அவரை வெறுக்கவும் தொடங்கிவிட்டார்.

முஈஜுத்தீனுக்கு ஷஜருத்துர்ரால் எவ்விதப் பிரயோஜனமும் இல்லாமற் போனதுடனே, நாளாக நாளாக அந்த ராணியர் திலகம் அவரை வெறுக்கவும் தொடங்கிவிட்டார். சுருங்கச் சொல்லின், கைந்நிறைய வைத்திருந்த கருந்தனத்தை ஒரு பெரிய செல்வச் சீமான் விலை மாதுக்கு அள்ளிக்கொட்டி ஓட்டாண்டியான பின்னர் அவனை அவள் எப்படி நிராகரித்து, பராமுகமாயிருந்து அவன் வயிற்றெரிச்சலை வாரிக்கட்டிக் கொள்வாளோ, அப்படியேயிருந்தது, ஷஜருத்துர்-முஈஜுத்தீன் வாழ்க்கையும்!

அச் செல்வன் தன் சொத்தையெல்லாம் இழந்ததற்கொப்பாகவே அந்த முஈஜுத்தீன் மைமூனாவைப் பறி கொடுத்ததும் காணப்பட்டது. அல்லாமலும், ஷஜருத்துர்ரை அந்தப் பொம்மை சுல்தான் மணந்துகொண்ட ஆரம்ப காலத்தில் அவர் அதற்குமுன் கண்டோ கேட்டோ இராத மாதிரியிலெல்லாம் ஷஜருத்துர்ரின் சிருங்காரச் சிற்றின்ப லீலைகளைப் பேரின்பப் பெருவாரிதியாக அனுபவித்துப் புளகாங்கிதம் அடைந்திருந்தவர், இப்பொழுது ஒரு சர்வ சாதாரண இல்லற வாழ்க்கையைக்கூட அனுபவிக்க வழியில்லாமற் போய்விட்டது அவருக்குச் சகிக்கமுடியாத மனவேதனையைத் தந்தது. பழைய காலத்துப் பேரின்பங்களை நினைத்துப் புதிய ஆசையோடு அவர் தம்முடைய அரிய மனைவியை அண்மியபோதெல்லாம் இடியும் அடியும் உதையும் குத்துமே கிடைத்தன. எப்படியிருக்கும் ஐபக்கின் நிலைமை? நினைத்துப் பாருங்கள். அவர் தணலில் விழுந்த புழுவெனத் துடித்தார்.

எல்லாம் போகட்டும் என்றாலும், இப்போதெல்லாம் ஷஜருத்துர் முஈஜுத்தீனிடம் சம்பாஷிப்பதைக்கூடக் கொஞ்சங் கொஞ்சமாய் குறைத்துக்கொண்டு விட்டதுடனே, கடைசியில் பேசாமலேயும் இருந்துவிட்டார். முஈஜுத்தீன் தம்முடைய மனைவிபிராட்டியை நள்ளிரவுவரை காண்பதேகூடக் கழுதைக் கொம்பாகி விட்டது. ஒன்று அரசியார் அரியாசனத்தில் வீற்றிருப்பார்; அலலது அந்தரங்க அறையிலே வஜீர்களுடனே திட்டங்கள் வகுத்துக்கொண்டிருப்பார்; அல்லது எதையாவது எழுதிக்கொண்டும் படித்துக்கொண்டும் இருப்பார்; அல்லது ஹம்மாமில் குளித்துக்கொண்டிருப்பார்; அல்லது ஏதாவது வழக்கு விசாரித்துக் கொண்டிருப்பார்; அல்லது அறைக் கதவை சாத்தி உட்புறம் தாளிட்டுக்கொண்டு உறங்கிக்கொண்டிருப்பார்; அல்லது ஒரு வேலையம் இல்லாவிட்டாலும், முஈஜுத்தீன் அவரை நெருங்கி ஏதும் பேசவருகிற நேரத்திலே ஏதோ தலைபோகிற பெரிய காரியத்தைக் கவனிக்க மறந்து விட்ட பாவனையாக வாயைச் சப்புக் கொட்டிக்கொண்டு எழுந்துசென்று, ஏதாவது உருப்படாத காரியத்தைச் செய்துகொண்டிருப்பார்.

இன்னம் என்ன வேண்டும் முஈஜுத்தீனுக்கு? தண்ணீரிலிருந்து தரையில் இழுத்துப் போடப்பட்ட மீன்போலே அவருடைய உள்ளம் துடித்துக்கொண்டிருந்தது. வேலையாயிருக்கிற நேரம். தூங்குகிற நேரம் நீக்கிச் சும்மா இருக்கிற வேளைகளில்கூடத் தம்மை நெருங்க முடியாதபடி ஷஜருத்துர் பொய்ந்நடிப்பு நடித்ததெல்லாம் அவருடைய ஹிருதயத்தைத் துளைத்துக்கொண்டிருந்தன.

எந்த எந்த வகையாலெல்லாம் தம்மைத் திரஸ்கரிக்கவும் அவமானமடையவும் செய்யலாமோ, அந்த அந்த வகையாலெல்லாம் ஷஜருத்துர் திரஸ்கரிக்கவும் அவமதிக்கவும் ஆரம்பித்துவிட்டதை முஈஜுத்தீன் இப்பொழுது மிகத் தெளிவாய் விளங்கிக்கொண்டு விட்டார்.

ஷஜருத்துர்ரையும் இந்த அரண்மனையையும் தொலைத்துத் தலைமுழுகிவிட்டு எங்காவது ஓடிவிடலாமா என்று கூட அவர் இறுதியாக யோசிக்கத் தொடங்கவிட்டார்.

எங்கே ஓடுவது? வெளியே ஓடிப்போன பிறகு ஷஜருத்துர்ரின் அரச கோபம் அவரைத் தொடராது என்பதற்கு என்ன அத்தாட்சி? மாட்சிமிக்க மன்னர் பிராட்டியை வெறுத்துக் கொண்டோ பகைத்துக்கொண்டோ வெளியேறுகிறவர் எவராயிருப்பினும், அவர் கொடிய மிருகத்தைப்போல் எல்லாக் காடுகளிலும் நாடுகளிலும் வேட்டையாடப் படுவாரன்றோ? இப்பொழுது இருக்கிற சூழ்நிலையில், சுல்தானா ஷஜருத்துர் வெளியேறி ஓடிவிடுகிற முஈஜுத்தீனைப் பொல்லாத ராஜ துரோகியென்று பகிங்கரமாகப் பிரகடனப்படுத்த மாட்டார் என்று எவரால் சொல்லமுடியும்? அப்படிப் பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு தம்மை எவராவது பிடித்து சுல்தானாவிடம் ஒப்படைத்துவிட்டால், அவர் வெறிநாயை அறைந்து கொள்வதேபோல் கொஞ்சமும் பச்சாத்தாபமின்றிக் கொன்றொழிக்கப்பட மாட்டார் என்பதற்கு எவரால் உறுதிகொடுக்க முடியும்?

இம் மாதிரியான பயங்கர எண்ணங்கள் பல உதித்துவிட்டபடியால், அரண்மனையை விட்டு எவருக்கும் தெரியாமல் வெளியேறி ஓடிப்போய்விடலாம் என்னும் தைரியம் முஈஜுத்தீனை விட்டோடி விட்டது. வெளியேறிச் சென்று சுல்தானாவின் கோபத்துக்கு அநியாயமாய் இரையாவதை விட, இங்கேயே இருந்துகொண்டு அவருடைய உதாசினத்தையும் அவமதிப்பையும் சகித்துக்கொள்வதே சாலச் சிறந்தது என்னும் ஞானோதயம் உதித்துவிட்டது. எனவே, வருவது வரட்டும் என்று அப்படியே இருந்துவிட்டார் எருமையினும் பொறுமையாய்.

இறுதியாக ஒருநாள் முஈஜுத்தீன் காலையில் துயிலெழுந்ததிலிருந்து அன்று மாலை வரை ஏதேதோ தீர்க்கமாய் எண்ணினார். அந்தி மாலை நீங்கி வந்தடுத்ததும், பகலெல்லாம் எண்ணி உருவாக்கிக்கொண்ட திட்டங்களை மறுமுறையும் ஆற அமரச் சீர்தூக்கிப் பார்த்துக்கொண்டார். எதுவரினும் வரட்டுமென்று துணிந்து, இன்றிரவு எல்லாவற்றையும் ஷஜருத்துர்ரிடம் பேசித் தீர்த்துவிடுதென்று எழுந்துவிட்டார். இராப் போஜனத்தைக் கொஞ்சமாய்ப் புசித்துவிட்டு, தம்முடைய படுக்கையிற் சென்று படுத்துக்கொண்டு, ஷஜருத்துர் வருகிற நேரத்தை மிகவும் ஆவலுடனே எதிர்பார்த்திருந்தார்.

நள்ளிரவு வந்து சென்றது. ஷஜருத்துர் தம்முடைய அன்றைய அலுவல்களை முடித்துக்கொண்டு, படுக்கையில் வந்து குந்தினார். மெழுகுவர்த்தியின் பட்பட்டென்னும் பதறிய ஒளிச்சுடர் மங்கலாய் அவ் வறையை வெளிச்சம்பெறச் செய்துகொண்டிருந்தது. நள்ளிரவாகையால் எங்கும் நிச்சப்தமாயிருந்தது. பூனைபோல் வந்து சந்தடி செய்யாமல் ஷஜருத்துர் படுக்கையில் அமர்ந்து தலையைச் சாய்க்கப் போவதைக் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டே தூங்குகிற மாதிரி கிடந்த முஈஜுத்தீன் தேள் கொட்டப் பட்டவரைப்போல் சட்டென்று துடித்தெழுந்து குந்தினார். பக்கத்திலிருந்த படுக்கையிலமர்ந்த சுல்தானா இந்த எதிர்பாராத பரபரப்பைக் கண்டு அதிசயத்துத் திரும்பிப் பார்த்தார். பேயாலறையுண்ட மனிதனேபோல் முஈஜுத்தீன் தம்மை வெறிக்க முறைத்துப் பார்ப்பதைக் கவனித்தார்.

சப்பியெறிந்த பனம்பழத்தின் கொட்டையைச் சுற்றி ஒட்டிக்கொண்டிருக்கிற சிலும்பி நார்போலே தாடி மயிரும் சீனா தேசத்தின் கிழவனின் மீசைபோலே கீழ்நோக்கி நீண்டு தொங்கிய மீசை யுரோமமும் வற்றியுலர்ந்த ஒட்டிப்போயிருந்த இரு கன்னங்களின் குழியும் அதிருப்தியாலும் அவமானத்தாலும் ஆழ்ந்து தாழ்ந்து போயிருந்த கண்களும் அம் மங்கிய விளக்கொளியில் அதி பயங்கரமான தோற்றத்தைத் தந்தன. புதை குழியிலிருந்து அப்போதுதான் உயிர்த்தெழுந்து வந்த பிரேதமே போல் முஈஜுத்தீன் காட்சியளித்துக்கொண்டிருந்தார். இதுவரை பிறக்காத ஓர் அனுதாபமிக்க பச்சாத்தாப எண்ணம் இக் காட்சிகளைக் கண்டதும் ஷஜருத்துர்ருக்குப் பிறந்தது. எனவே, அவர் முஈஜுத்தீனைப் பரிவு கலந்த பார்வையுடன் நோக்கினார்.

“ஏன், இன்னம் உறக்கம் வரவில்லையோ?”என்று தம்மையறியாமலே ஷஜருத்துர் வினவினார். என்ன இருந்தாலும் அந்த சுல்தானாவும் ஒரு மனுஷியே யல்லவா?

“ஷஜருத்துர்! என் உயிரை நீ ஏன் கொஞ்சங் கொஞ்சமாய்ப் போக்கிக்கொண்டிருக்கிறாய்? இதோ கிடக்கும் இந்த வாளையெடுத்து என்னை ஒரே வீச்சில் கொன்று தீர்த்து, என் உயிருக்காவது நீ விடுதலை அளிக்கக்கூடாதா?” என்று வெறுப்புக் கலந்த கசப்பான வார்த்தைகளை வெகு நிதானமாய்ப் பேசினார் முஈஜுத்தீன்.

ஷஜருத்துர் மெல்லச் சிரித்தார். ஆனால், அது பயங்கரமிக்கதாய் காணப்பட்டது.

“என்னை இப்படிக் கொஞ்சங் கொஞ்சமாய்ச் சித்திரவதை புரிவதில் உனக்கு ஏன் இந்த இன்பம் பிறக்கிறது? ஷஜருத்துர்! நான் விளையாட்டுக்காகச் சொல்லவில்லை. என் உயிரையும் உடலையும் சேர்த்து வைத்துக்கொண்டு நீ இம்சிப்பதைவிட, இவ் விரண்டனுள் எந்த ஒன்றனுக்காவது பூரண விடுதலை அளிக்கும்படி உன்னை மிகவும் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். நான் உன்னிடம் பெற்றுக்கொண்ட இன்ப சுகமும் அடைந்துவிட்ட சிறைத் தண்டனைகளும் போதாவா? என்னை நீ இன்னம் உயிருடனே வைத்துக்கொண்டு விளையாடுகிறாய்? அன்றொரு நாள் நீயாகவே என்னை வரித்தாய். அஃதே போல் இன்று நீயாகவே என்னை விடுவித்து விடக்கடவாய்.”

“நானென்ன, உம்முடைய உயிரைக் கவர்கிற வானவரின் பிரதிநிதியா? நான் ஏன் உம்மைக் கொல்ல வேண்டும்?”

“தன்னிடத்தில் சிக்கிய எலியை ஓடவிட்டுத் துரத்திப் பிடிக்கும் பூனையே போல் நீ என்னை இன்னமும் வருத்த வேண்டாமென்று உன்னை மிகவும் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். எனக்குச் சுதந்திரம் அளித்து, இங்கிருந்து ஓட்டிவிடு! நான் எங்காவது கண்காணாத தேசத்துக்குச் சென்று உன்னைப்பற்றி ஒன்றும் குறை நினைக்காமல் என் எஞ்சிய வாழ்நாட்களைக் கழித்துக் கொள்கிறேன்!”

“ஏன்? நீர் தாராளமாய்ச் சொல்லலாமே? நீர் என்ன, என்னுடைய அடிமையா. உமக்குச் சுதந்திரம் வழங்குவதற்கு? நீர் எப்பொழுதும் போலே சுதந்திர வாழ்க்கையைத்தானே இப்பொழுதும் வாழ்ந்து வருகிறீர்? இதில் என்ன அதிருப்தியைக் கணடுவிட்டீர்?”

“ஆஹா! நான் வாழ்கிற சுதந்திர வாழ்க்கையை நீயேதான் மெச்சிக்கொள்ள வேண்டும்! என்ன சுதந்திரம்! என்ன சுயேச்சை! ஷஜருத்துர்! எனக்குப் போதும் இந்தச் சுதந்திர வாழ்க்கை! பொறிக்குள்ளிருக்கிற பண்டம் மிகவும் இனிப்பான சுவாசனை வீசுகிறதென்று தானே வலியச் சென்று மாட்டிக்கொள்ளும் எலியையே நான் நிகர்த்து நிற்கிறேன். எனக்கு இந்த மாதிரியான சுதந்திரம்தான் காத்துக்கிடக்கிறதென்று மட்டும் முன்னமே கொஞ்சம் தெரிந்திருந்தால் இந்தக் காஹிரா இருக்கிற திக்கை நோக்கியே நான் தலைவைத்துப் படுத்திருக்க மாட்டேன்…….

“போனதெல்லாம் போகட்டும் ஷஜர் நான் உன்னிடம் ஒன்றும் கேட்கவில்லை. ஒன்று என் உயிரைப் போக்கி எனக்கு எதேச்சையளி, அல்லது என்னை உயிருடனே நாடுகடத்திவிடு. தொட்டுக்கட்டிய பிரிய மனைவியையும் பிரிந்துவிட்டு, பிரிந்தது பற்றாமல் அவளுக்குத் தலாக்கும் சொல்லிவிட்டு, கானலைக் கண்டு நீரென மயங்கும் மான்போலே நான் உன்னையண்மிய பாவத்துக்கு எப்படிப் பிரயாசித்தும் தேடிக் கொள்வதென்று ஒன்றுந் தோன்றாமல் திகைக்கின்றேன். உண்மையாகவே நான் உன்னை வந்து அடையுமுன்னே எவ்வளவு மகிழ்வுடன் காலங்கடத்தினேன்! துக்கமென்றால் இன்னதென்றே தெரியாமல் சுகித்திருந்தேன். பெற்ற பிள்ளையைத் தூக்கி முத்தமிட்டுக் கொஞ்சிக் குலவி உளம் பூரித்திருந்தேன். கற்புக்கரசியான மாஜீ மனைவியின்மாட்டுப் போதுமான இல்லறச் சுகத்தைப் பெற்று மகிழ்ந்திருந்தேன். ஆடியும், பாடியும், சிரித்தும், விளையாடியும், கொஞ்சியும், குலவியும், ஆனந்தமுற்றிருந்தேன். துயரமென்றால் இன்னது, வாழ்க்கையில் தோல்வியென்றால் இன்னது என்று தெரியாமல் மிகவும் குஷியாய் நாட்கடத்தி வந்தேன்.

“ஆனால், என் விதியின் கோளாறு, நான் உன்னை வந்தடைந்தேன். நீ என்னை என்னென்ன செய்யலாமோ அன்னவற்றையெல்லாம் செய்து தீர்த்துவிட்டாய். என்னை நீயே சுல்தானாக்கி விட்டாய்; பின்னர் நீயே அப்பதவியை பறித்துக்கொண்டும் விட்டாய். நீயே என்னை தைரியாசாலியாய் நடிக்கக் கற்றுக்கொடுத்தாய்; பிறகு நீயே என்னைக் கோழையான அதைரியசாலியாய் ஆக்கிவிட்டாய். நீயே என்னை மகிழச் செய்தாய்; இப்பால் நீயே என்னை அழச் செய்கின்றாய். சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தாற்போலே என்னைக் கசக்க வேண்டிய மட்டும் கசக்கிச் சாறு பிழிந்துவிட்டு, அப்புறம் இப்புறம் அசையமுடியாத தொழுமரத்திலே இறுக்கி அடித்தும் விட்டாய்.

“உன் வாழ்நாளெல்லாம் நீ விசித்திரம் விசித்திரமான மாற்றுக் குணங்களைக் காட்டிக் காட்டி வந்திருப்பதற்கொப்ப, என்னை நீ ஒருபிடி குழைத்த களிமண்ணே போல் உன் கரத்திடைப் பற்றி உன் மனம்போன போக்கெல்லாம் உருவப்படுத்திக் கொள்ளுகின்றாய். நிஜமாகவே நான் கேட்கிறேன்: உன்னை மணந்துக்கொண்டதால் நான் என்ன நலனை பெற்றுக் கொண்டு விட்டேன்? நீ வேண்டுமானால் உன் பதவி மோகத்துக்கும் பேராசைக்கும் பச்சைச் சுயநலத்துக்கும் என்னைப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றாய். ஆனால், உன்னால் நானடைந்த நல்ல பலன் ஒன்றாவது இருக்கிறதென்று உன்னால் கூற முடியுமா? நீ என்னை சுல்தானாக்கிய தனாலாவது நான் பலன் பெற்றேனா? அல்லது என்னை அப்பதவியிலிருந்து வீழ்த்தாட்டியதனாலாவது பலன் பெற்றேனா?

“என் ஆசை மனைவியை இழந்தேன்; அருமை மைந்தனைத் துறந்தேன்; என் அறிவையிழந்தேன்; என் உரிமையைத் துறந்தேன்; என் மானத்தையிழந்தேன்; என் மரியாதையையிழந்தேன்; என் கண்ணியத்தையிழந்தேன்; என் கெளரவத்தையிழந்தேன்; என் வீரத்தையிழந்தேன்; என் வாலிப தசையையிழந்தேன்; எல்லாவற்றுக்கும் மிக மேலாக என் சுயேச்சையையே இழந்துவிட்டேனே! செத்து நீற்றுச் சாம்பலாய்ப்போன பிதேதத்துக்கும் எனக்குமிடையே எத்தகைய வித்தியாசமும் இல்லாமற் போய்விட்டது. போதும் போதும் எனக்கு இந்த வெட்கங்கெட்ட வாழ்க்கை! உன் புகழை உலகமெல்லாம் மெச்சுகிறது. என் மனமோ, பொறிக்கிற சட்டியில் வீழ்ந்த புறாக் குஞ்சைப்போல் நைகிறது. எனக்கொரு விமோசனமில்லையா? ஏ, ஷஜர்! நீ என்ன, கல்லா, இரும்பா, எஃகா?”

ஷஜருத்துர் இந் நீண்ட பிரசங்கம் முடிக்கிறவரை குறுக்கிட்டொன்றும் பேசவுமில்லை; அல்லது முஈஜுத்தீனை இடைமறிக்கவுமில்லை. ஐபக்கோ, தம் மனத்துள் நெடுநாட்களாய் அழுந்திக்கிடந்த அத்தனை ரோஷத்தையும் ஒன்றாய்ச் சேர்த்துக் கொட்டிக் கவிழ்ந்து முடித்தார்.

“ஆகையினால், நீர் என்னை என் செய்ய சொல்லுகிறீர்?” என்று நிதானமாகவும் சிறிதுகூடக் கலவரமோ கலக்கமோ இல்லாமலும் தெளிந்த தொனியில் தீர்க்கமான குரலில், ஒன்றும் பிரமாதமாக நடக்காததுபோல் ஷஜருத்துர் பையக் கேட்டார். இந்தக் குறும்புத்தனமான கேளிக்கையான கேலிக் கேள்வி முஈஜுத்தீனுக்கு வெந்த புண்ணில் வேலைச் சொருகியது போலிருந்தது!

“உன்னை என்ன செய்யச் சொல்லுகிறேனா? ஏன், நான் இதுவரை பேசிய வார்த்தைகள் உன்னுடைய திருச்செவிக்குள் நுழையவில்லையோ? உன்னை வேறென்ன செய்யச் சொல்ல? நீயே என் தலைவிதியை நிர்ணயிக்க வேண்டியதுதான். இம் மாதிரியாக என்னை இரண்டுங் கெட்டானாக இனியும் நீடிக்கச் செய்யாமல், என்னை விரட்டிவிடு. நான் என்னை எப்படியாவது காப்பாற்றிக் கொள்கிறேன். எங்கேயாவது மூட்டைத் தூக்கி, அல்லது விறகு வெட்டி, அல்லது துணி வெளுத்து, அல்லது க்ஷவரமாவது செய்து என் சாண் வயிற்றைக் கழுவிக்கொள்ளுகிறேன். எனக்கு இந்த நரக வாழ்க்கையான அரண்மனை வாசம் வேண்டவே வேண்டாம்! உனக்குக் கோடி ஸலாம்; உன்னுடைய உதவிகளுக்கெல்லாம் இன்னொரு கோடி ஸலாம்!”

“என்ன, நாடகம் நடிப்பதாக நீ நினைத்துக்கொண்டிருக்கிறீரோ? நான் என்னவோ உம்மை நரக வேதனைக்கு உட்படுத்துவது போலவும் நான் ஒரு ராக்ஷஸி போலவும் நீர் மட்டும் பசுத்தோல் போர்த்திய புலியாகிய பரம சாது போலவும் ஒரு குற்றமும் இழைத்தறியாத பக்கா நிரபராதி போலவும் என்னென்வோ வெல்லாம் பிதற்றிக்கொண்டிருக்கிறீரே? ஸல்தனத்தை நிர்வகிக்கிற பெருஞ் சிரமங்கூட எனக்குப் பெரியதொரு தலைவலியைத் தரவில்லை; நீர் முணங்குகிற முணமுணுப்பும் வெறிக்கப் வெறிக்கப் பார்க்கிற பார்வையும் ‘கொட கொட’வென்று கொட்டிக் கொழிக்கிற வீண் வக்கணைகளுமல்லவோ என் நெஞ்சை இருக்குகின்றன. பச்சிளங் குழவியே போல் பசப்பிப் பேசுவதற்குத் தருணம்பார்த் திருந்தீரோ? நல்ல வயிற்றெரிச்சல் இது!

“நானும் பொறுத்திருந்துதான் எல்லா வேடிக்கைகளையும் பார்த்து வருகிறேன். உமக்கே நற்புத்தி வந்து, நீரே உணர வேண்டியவற்றை உணர்ந்து சும்மா இருப்பீரென்று நான் எண்ணியிருக்க, நீர் ஏதோ பெரிய மேதாவி போலவும் ஒன்றுமறியா நல்ல யோக்கியர் போலவும் ஏதேதோ பேசுகிறீரே? ஓர் உத்தமப் பெண்ணாயிருப்பவள் நீர் விரும்புகிற நேரமெல்லாம் உமது மிருக இச்சையைத் தீர்க்க, உம்முடைய மனம்போன படியெல்லாம் உமக்கு உடந்தையாக இருந்து விடுவாளென்று எண்ணிக்கொண்டிருக்கிறீரோ? எதற்கும் அளவில்லை போலிருக்கிறதே! நல்ல வயிற்றெரிச்சல் இது! உமக்கு காமம் மூண்டெழும்போதெல்லாம் நான் சிரித்துக் கொண்டே சரி சொல்லி விட்டால், எல்லாம் உருப்பட்டுப்போய்விடும் என்னும் எண்ணமோ உமக்கு?

“இந்த அரண்மனையில் உமக்கு அதிருப்தியூட்டுகிறதற்கு என்ன இருக்கிறது? ஸல்தனத்தைக் கொண்டு நடத்தவேண்டிய மகத்தான பொறுப்பை இப்பொழுது உம்முடைய தலைமீது எவரேனும் சுமத்தினாரா? அல்லது வேளாவேளைக்கு உமக்கு ஒழுங்கான சோறு கறி கொடுப்பதில் எவராவது குறைத்து விட்டாரா? அல்லது உமக்கிருக்கிற மனித சுதந்திரத்தை எவரேனும் பறித்துவிட்டாரா? அல்லது உம்முடைய தினசரி வாழ்க்கையில் இவ் வரண்மனையிலுள்ளவர் எவரேனும் தலையிடுகிறாரா? அல்லது முன்பெல்லாம் நீ புர்ஜீகளுடனே சேர்ந்துகொண்டு என்னன்னவோ செய்யத் தகாதவற்றைச் செய்துவிட்டீர் என்பதற்காக உம்மை எவரேனும் பழிவாங்கினாரா?

“நான் உம்மை மணந்துகொண்ட தண்டத்துக்காக உம்மை சுல்தானாக உயர்த்தினேன். உமக்கு நியாயமாய்க் கிடைக்க வேண்டிய கெளரவங்களையெல்லாம் விடவும் அதிகமான கெளரவத்தைச் சம்பாதித்துக் கொடுத்தேன். ஐயூபி சுல்தான்களுக்கிருந்த செல்வாக்கையெல்லாம்விடவும் அதிகமான செல்வாக்கை உமக்குப் பெற்றுக் கொடுக்கப் பெரிதும் பாடுபட்டேன். ஆனால், உம்முடைய செய்கைகளால் உம்மைக் கெடுத்துக் கொண்டுவிட்டீர். உமக்கு ஆளத் தெரியாத இந்த ராஜ்ஜியத்தை நான் ஆண்டு காட்டுகிறேன். உம்மை பஹ்ரீகள் பழிதீர்த்துக்கொள்ள கூடாதே என்பதற்காக உமக்கு நான் பாதுகாவல் அளித்து வருகிறேன். இவற்றுக்கெல்லாம் கைம்மாறாகத்தான் போலும் நீர் இப்படிக் குதித்துப் பாய்கின்றீர்! பேஷ், உம்மைச் சொல்லிக் குற்றமில்லை. எல்லாம் என் விதியின் விளையாட்டே!” என்று மிகவும் கடுகடுத்த தொனியில் கர்ஜித்தார் சுல்தானா.

முஈஜுத்தீனுக்கோ, தலைவலி போய்த் திருகுவலி வந்தது போலிருந்தது. ரோஷம் பொங்கிவிட்டது.

“ஷஜருத்துர்! ஆண் சிங்கமாகவும் வேங்கைப் புலியாகவும் இருந்த என்னை இம்மாதிரி ஆட்டுக்குட்டி ஆக்கிவிட்ட நீ இதுவு ம்பேசுவாய்; இன்னமும் பேசுவாய்! நீ என்ன செய்வாய் எல்லாம் என் தலைவிதி. அமீருல் மூஃமினீன் உன்னைத் தள்ளி வீழ்த்தாட்டுகிற வேளையிலே நீ என்னைக் கேடயமாகக் கொண்டு விட்டாயல்லவா? நீ இதுவும் பேசுவாய்! இன்னமும் பேசுவாய்! மானங்கெட்ட ஈனன் நான் உன்னுடைய புற அழகுக்கு என் சுய அறிவை அடகு வைத்து விட்டதற்கு எனக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்! ஏ, நன்றி கொன்ற மாதே! போதும், நான் உனக்குக் கணவராயிருந்து, நீ அடுக்குகிற இத்தனை விதமான நன்மைகளையும் பெற்றுக்கொண்டது! உனக்கு ஒரு கோடி ஸலாம்; உன்னுடைய உதவிகளுக்கு ஒரு கோடி ஸலாம்; நீ எனக்கு அளித்திருந்த நலன்களுக்கு இன்னமொரு கோடி ஸலாம்! நீ இனிமேல் உன்பாட்டைப் பார்த்துக்கொள்! நான் என்னுடைய ஹாலைப் பேணிக்கொள்கிறேன்.”

ஷஜருத்துர் ஆங்காரமிக்க ஆத்திரப் பார்வையைமுஈஜுத்தீன்மீது செலுத்தினார். சட்டென்று கட்டிலினின்று கீழே குதித்தார். நிமிர்ந்த தலையுடனும் உயர்ந்த மார்புடனும் ஒய்யார நடை நடந்து,விர்ரென்று அச் சயனவறையைவிட்டு வெளியேறினார்.

முஈஜுத்தீன் ஒன்றும் புரியாமல் திகைத்தார். சுல்தானா எழுந்து சென்ற மிடுக்கையும் கொண்டிருந்த கோபத்தையும் நடந்து மறைந்த மாயத்தையும் கண்கொட்டாமற் பார்த்த அவர் ஏதோ பொல்லாத கேடுகாலத்தான் வந்துவிட்டது என்று தம் மனத்துக்குள்ளே கற்பனை செய்துகொண்டு, மேனி சில்லிட்டு மெய்பதறிப் போய்விட்டார்.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment