கலீஃபாவும் வஜீர் ஜகரிய்யாவும்

 

தூதன் சென்று பதினைந்து நாட்களுக்கு மேலாகியும், மிஸ்ரின் செய்தி ஒன்றும் தெரியவில்லையே என்று கலீஃபா முஸ்தஃஸிம் பில்லாஹ் தம்முடைய பாக்தாத் அரண்மனையில் பொறுமை யிழந்தவராய்

உலவிக்கொண்டிருந்தார். வஜீர் ஜகரிய்யாவும் அடிக்கடி கலீஃபாவின் ஆத்திரத்தைப் பலவகையில் மூட்டிக் கொண்டேயிருந்தார். போனவன் வராமற் போகப் போகத் தினமும் கலீஃபாவுக்குக் கோபம் அதிகமும் பொங்கிக் கொண்டேயிருந்தது.

கலீஃபாவானவர் அன்று தமது மாளிகையின் மேற்றளத்தில் நின்றுகொண்டு, தம்முடைய தூதன் வரக்கூடிய திக்கையே உற்று நோக்கியவண்ண மிருந்தார். வஜீர் அதுசமயம் ஏதோ முக்கிய அரசாங்க விஷயமாக கலீஃபாவிடம் பேச வந்தார்.

“ஏ, ஜகரிய்யா! மிஸ்ருக்குப் போனவன், இன்னம் வரக்காணோமே! போன இடத்தில் அவனுக்கு ஏதாவது ஆபத்து வந்திருக்குமோ?” என்று கவலையோடு கடாவினார்.

“யா அமீரல் மூஃமினீன்! தூது செல்கிறவனுக்கு எவருமே ஆபத்து விளைக்கமாட்டார். எனவே, நம் தூதன் பத்திரமாகவே திரும்பிவந்து சேர்வான். காஹிரா இங்கிருந்து சமீபத்திலா இருக்கிறது? அவனும் வந்துவிடுகிற நாளாகிவிட்டது. வீண்கவலையை விட்டொழியுங்கள்.”

“அந்த ஷஜருத்துர் என்ன பதில் அனுப்புவாளென்று நீர் எதிர்பார்கிறீர்?”

இந்த தர்மசங்கடமான கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் வஜீரானவர் நெற்றியைச் சொறிந்தார். பொதுவாக, மிக உயர்ந்த உத்தியோகத்தில் அமர்ந்திருப்பவர்கள் இம்மாதிரியான சந்தர்ப்பத்தில் தாங்கள் என்ன நினைக்கிறார்களோ, அதனையே தங்கள் சிப்பந்திகளும் வாய்விட்டுச் சொல்லவேண்டுமென்று முட்டாட்டனமாய் எதிர்பார்ப்பதுண்டு. இந்த விதிக்கு கலீஃபா விலக்கானவரல்ல என்பதை வஜீர் நன்கறிவாராகையால், சாதுரியமாக விடை கொடுத்தார்.

“யா அமீரல் மூஃமினீன்! அவள் என்ன பதில் அனுப்புவாளென்பதைத்தான் நாம் முன்னமே நன்கறிவோமே! எப்போது அவள் தங்களை ஆரம்பத்திலேயே உல்லங்கனஞ்செய்து தன்னைத்தானே சுல்தானாவாக ஆக்கிக்கொண்டு விட்டாளோ, அப்போதே அவள் எல்லாவற்றுக்கும் துணிந்துதானே இருப்பாள்? தான் சுல்தானாவாயிருப்பதைப் பற்றிக் கேட்கத் தங்களுக்கு யாதொருவித அதிகாரமுமில்லை யென்றே அவள் கூறினால், அதைப் பற்றி நாம் வியப்படையத் தேவையில்லை!”

“அவ்வளவு தூரம் சொல்வதற்குக்கூட அவளுக்கு நெஞ்சழுத்தம் இருக்குமா?”

“துருக்கி தேசத்தில் பிறந்த பெண்களுக்கே ஆண்டவன் ஒரு நரம்பைக் கூடுதலாக வைத்துப் படைத்து விடுகிறான். நானும் சரித்திரத்திலும் கண்ணெதிரிலும் இவ்வுண்மையையே சதா காண்கின்றேன். தைரியம் ஒருபுறம் இருக்க, விசித்திரமாகவும் விபரீதமாகவு மெல்லாம் அந்தப் பெண்கள் குதர்க்கம் பேசுகிறார்கள்.”

“ஏனைத் துருக்கிப் பெண்களின் விஷயம் ஒருபுறம் இருக்கட்டும்! இந்த ஷஜருத்துர் நம்மை ஒரு வார்த்தைகூடக் கேட்காமல், நம்முடைய அனுமதியில்லாமல், நமக்குத் தெரியாமல் தன்னைத் தானாகவே சுல்தானாவாக ஆக்கிக் கொண்டதற்கு என்ன சமாதானம் சொல்வாள்? சமாதானம் சொல்ல முடியாவிட்டால், இனியும் எங்ஙனம் அவள் தொடர்ந்து சுல்தானாவாக இருக்க இயலும்!”

“அதற்குத்தான் அந்த ஸாலிஹ் நஜ்முத்தீனே வழிசெய்து விட்டுப் போய்விட்டாரே! கணவர் மிஸ்ரிலில்லாதபோது ஏற்கனவே அவள் ஒருமுறை தாற்காலிகமாக ஆட்சி செலுத்தியதை ஆதாரமாகக் காட்டி வாதாடலாம். கணவர் காலஞ்சென்ற பின்னர் கலீஃபாவின் உதவியில்லாமலே எட்டாவது சிலுவை யுத்தத்தைத் தான் ஜெயித்ததையும் காரணமாகக் கூறி, தான் சுல்தானாவானது நியாயமென்று விவாதிக்கலாம்.”

“என்ன! இவள் சிலுவை யுத்தத்தை நடத்திவிட்டால், அதற்காக இவளை எல்லாரும் சுல்தானாவாக ஏற்றுக்கொண்டு, ஸுஜூத் செய்ய வேண்டுமோ?”

“ஹுஜூர்! அதிலும் நியாயமிருக்கத்தானே செய்கிறது? மிஸ்ரிகளும் ஷாம் மக்களும் மட்டுமேதாம் எல்லாச் சிலுவை யுத்தங்களையும் ஜெயித்திருக்கிறார்கள். நாம் அப்போதெல்லாம் நம்முடைய கிலாஃபத் படைகளைக் கொடுத்து, அவர்களுக்கு ஏதாவது உதவியா செய்தோம்? அவர்கள் அப்படியொன்றும் உதவிகேட்டு, நாம் அனுப்பாமலிருந்து விடவில்லை. எனினும்….”

“எனினும், என்ன? தங்களுக்கு வந்த ஆபத்தைத் தாங்கள் தாங்களே தற்காத்துத் தடுத்துக் கொண்டனர் ஒவ்வொரு நாட்டினரும். இதற்காக நாம் வேறே நம்முடைய படைகளையும் நிதியையும் அனுப்பி நஷ்டமடைய வேண்டுமோ? இப்படிப் பார்த்தால், உந்துலூஸுக்கும் – (ஸ்பெயின் தேசத்துக்கும்) சீனாவுக்குங்கூட முஸ்லிம்களுக்கு உதவிபுரிய நம்முடைய படைகளையனுப்ப வேண்டுமென்று நீர் சொல்வீர் போலும்! நன்று, நன்று! இஸ்லாம் விரிந்து விருத்தியாக விருத்தியாக, கலீஃபா சற்றுக் கவலையற்று ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டியதிருக்க, பழைய காலத்தில் – இஸ்லாம் ஆரம்பமான காலத்தில் – கலீஃபாக்களும் கிலாஃபத்தும் இருந்ததைப் போலவே நாமும் இருக்கவேண்டுமென்றால், அது முடிகிற காரியமா? முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தத்தம் பாவ புண்ணியங்களுக்குத் தாம் தாமே இறைவனிடம் பிராயச் சித்தம் தேடவேண்டும் என்றிருக்க, ஒவ்வொரு ஸல்தனத்துக்கும் வருகிற லாப நஷ்டத்துக்கு நாமும் நம்முடைய கிலாஃபத் நிதியுமா உதவி செய்ய முடியும்?”

“யா கலீஃபத்தல் முஸ்லிமீன்! அதையே தான் அடியேனும் சொல்ல வந்தேன். ஒவ்வொரு ஸல்தனத்தும் தன் தன்னுடைய ஹாலைப் பேணிக் கொண்டு போகட்டுமென்று நாம் தலையிடாமல் இருந்துவிடுவதுதான் விவேகம். இதை விடுத்து சுல்தான்களை நியமிக்கிற பொறுப்பை மட்டும் நாம் பராமரிக்க விரும்பினால், அதனால் விபரீதமே விளைகிறது. ‘ஆபத்துக்கு உதவாத கலீஃபா சுல்தான்களை நியமிக்கிற விஷயத்தில் மட்டும் மார்தட்டிக்கொண்டு நிற்கிறா’ரென்று மக்கள் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தாலும் அதிசயமில்லை. எனவே, எல்லா விஷயத்திலும் நாம் போடுபோக்காய் இருப்பதேபோல், இந்த சுல்தான்களின் நியமன விஷயத்திலும் ஜாடையாயிருப்பதுதான் விவேகம். என்னெனின், நாமாக நியமிக்கிற சுல்தான் ஏதாவது தவறுதலாய் நடந்து கொண்டால், எல்லா முஸ்லிம்களும் தங்களையே பழிதூற்றுவார்கள். அவரவர்களும் அவரவர் வினையை நன்கு அனுபவித்துக் கொண்டு தொலையட்டுமே!”

“ஏ, ஜகரிய்யா! நீர் என்ன ஹாஸ்யமாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறீரோ? அவரவரும் அவரவர் இஷ்டத்துக்கு நடந்து கொள்வதாயிருந்தால் கலீஃபா எதற்கு? கிலாஃபத் சாம்ராஜ்யந்தான் எதற்கு? எம்மை இக்கணமே முடி துறந்து விட்டுப் போகும்படியும் உபதேசிப்பீர் போலும்! இது நல்ல கதையாயிருக்கிறதே!”

“ஹுஜூர்! நான் அவ்விதம் நவிலவில்லையே! எல்லா ஸல்தனத்திலும் எல்லா சுல்தான்களும் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் அடிக்கடி கேள்விப்படுகிறேனோ, அதையே சொல்கிறேன். எனவேதான், தாங்கள் சர்வாதிகார ஏகாதிபத்திய மனப்பான்மையை அறவே விட்டு விட வேண்டுமென்று அடிக்கடி நான் உபதேசித்து வருகிறேன். தாங்கள் என் மீது வீணே கோபிக்கிறீர்களே.”

“அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டுமென்று நீர் கூறுகிறீர்? விளங்கச் சொல்லுமே பார்ப்போம்!”

“யா அமீரல் மூஃமினீன்! குலஃபாயெ ராஷிதீன்களான முதல் நான்கு கலீஃபாக்களைப் போல நம்மால் இருக்க முடியாதென்றாலும், பனூ உமையாக்கள் வம்சத்தில் வந்த ‘கலீஃபத்துஸ் ஸாலிஹ்’ என்னும் சிறப்புப் பெயருடன் வழங்கப்பட்டு வருகிற இரண்டாவது உமர் அவர்களைப் போலவாவது நாம் இருக்கலாம். என்னெனின், நான் சமீபத்தில் அவருடைய வாழ்க்கைச் சரிதையைப் புரட்டிப் பார்த்தேன். அதில் நான் படித்த சில வாக்கியங்கள் என் உள்ளத்தை இன்னம் குழையச் செய்துக் கொண்டிருக்கின்றன.”

“அவரென்ன அப்படிப்பட்ட பிரமாதமான காரியத்தைச் செய்து விட்டாராம்?”

“பிரமாதமான காரியம் ஒன்றுமில்லை. ஒரு நாள் அந்த கலீஃபா தொழுதுவிட்டுத் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தாராம். அப்போது அவருடைய மனைவி கலீஃபாவை யண்மி, அவரேன் அவ்வாறு அழுகிறாரென்று கேட்டாராம். கலீஃபா அவர்கள் திருவாய் மலர்ந்தருளினார்களாம்: ‘ஏ ஃபாத்திமா!  முஸ்லிம்கள் மீதும், முன்பின் தெரியாதவர்கள் மீதும் ஆட்சி செலுத்தவேண்டியவனாக என்னை எல்லாரும் ஆக்கிவிட்டனர். ஆனால், நானோ பசியால் தவிக்கிற ஏழைகளையும் வியாதியால் உழல்கிற நோயாளிகளையும் மானத்தை மறைத்துக் கொள்ள வழியின்றி நிர்வாணிகளாகத் திரியநேருகிற அம்மண மாக்களையும் சொல்லொணாத் துன்பத்துக் குள்ளாகித் தவிக்கும் தாழ்குல மக்களையும், சிறையில் கிடந்து வாடும் அன்னியனையும் வயது முதிர்ந்த கண்ணியவான்களான பெரிய மனிதர்களையும் பெரிய குடும்பத்தையும் சிறிய வரும்படியையும் வைத்துக் கொண்டு பேரல்லலால் அவதியுறுகிற மனிதனையும் இன்னம் இன்னோரன்ன பற்பல மக்கள் இவ்வுலகின் எல்லாத் தேசங்களிலும் தொலை தூரத்திலுள்ள நம் மாகாணங்களிலும் பரந்து கிடப்பதையும் நினைத்துக் கொண்டேன்; இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹுத் தஆலா என்னைப் பற்றிப் பிடித்துக் கொண்டு, என் கிலாஃபத் ஆட்சியின் போது இவ்வாறெல்லாம் நடந்து விட்டமைக்காகக் கேள்விக் கணக்குக் கேட்பானே என்று உணர்ந்தேன்; அப்போது நான் அவன் முன்னிலையில் எந்த விதமான முறையிலும் தற்காத்துக் கொண்டு வாதாட வழியில்லாமற் போகுமே என்று நான் பயந்தேன்; அழுகை வந்துவிட்டது. அழுதேன்!’ – இப்படிச் சொல்லிவிட்டு, கலீஃபா மீண்டும் தேம்பியழுதார்களாம்,” என்று ஜகரிய்யா இந்த விருத்தாந்தத்தைக் கூறும்போதே மயிர்கூச்செறிந்து கண்ணீருகுத்தார்.

அரபு நாட்டுக் கதைகளில் வருணிக்கப்பட்டிருக்கும் சில விசித்திரமான உலகாயத வாழ்க்கையை மேற்கொண்டு ஒழுகி வந்த இந்த முஸ்தஃஸிம் பில்லாஹ் தம்முடைய வஜீர் ஜாடையாக இடித்துக் காட்டிய உபதேசத்தை நினைத்துப் பெருமூச்செறிந்தார். அவருடைய ஹிருதயத்தில் நூறு குத்தூசிகொண்டு குத்துவதைப் போன்ற சகிக்க முடியாத உணர்ச்சியும் வேதனையும் உண்டாகி விட்டன. பேசாமல் மெளனமாய் நின்றார்.

“எனவே, யா அமீரல் மூஃமினீன்! நாம் இந்தத் துன்யாவை விட்டுச் செல்லும்போது எதைத் தூக்கிக் கொண்டு போகப் போகிறோம்? இருக்கிற வரையில் நாம் பிறருடைய கஷ்ட நஷ்டங்களையும், இன்ப துன்பங்களையும் நம்முடையனவாகவே பாவித்து நல்ல அமல்களைச் செய்து வந்தால், நம் மனச்சாக்ஷியும் நம்மைச் சுடாது; ஆண்டவனுக்கும் பாவியாக மாட்டோம். ஸல்தனத்துக்கு வேண்டிய சுல்தான்களைப் பொறுக்கி யெடுப்பதோடுமட்டும் கலீஃபாவுக்கிருக்கிற அத்தனை கடமைகளையும் செய்து முடித்து விட்டதாக அர்த்தமா? நானொன்றும் தங்களைத் தாக்கிப் பேசவில்லை. ஆனால், எப்படியிருந்தால் நன்றாயிருக்குமென்பதையே சுட்டிக்காட்டுகிறேன். கிலாஃபத்துக்கும், கலீஃபாக்களுக்கும் இருந்துவந்த எல்லாவிதமான கெளரவங்களுக்கும் கண்ணியங்களுக்கும் நாமே ஊறு செய்து அபகீர்த்தியைச் சம்பாதித்துக் கொடுக்கிறோமே என்றுதான் கவலைப்படுகிறேன். கலீஃபாக்களுக்குப் பெயர் கெடுவது ஒருபுறமிருக்க, அவர்களுக்கு வஜீர்களாயிருந்த, இருக்கிற எங்களைப் போன்றவர்களின் பெயர்களுமல்லவோ சேர்ந்து அடிபடும்? கலீஃபாக்களைக் கெடுத்தவர்களேகூட நாங்கள்தாம் என்றல்லவோ ஒரே வார்த்தையில் உலகம் தூற்றிவிடும்? யா அமீரல் மூஃமினீன்! சிநதித்துப் பாருங்கள்! உங்கள் தலைமீது ஆண்டவன் எவ்வளவு பெரிய சுமையைச் சுமத்தியிருக்கிறா னென்பதையும், தாங்கள் தங்கள் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுகிறீர்களா என்பதையும் நிதானமாக யோசித்துப் பாருங்கள். கலீஃபா என்னும் மிகத் தூய்மையான புனிதப் பதவி எப்படி யெப்படி யெல்லாம் இப்போது துர்வினியோகமாகி வருகிறது, பாருங்கள்,” என்று அந்த நேர்மைக்குணம் படைத்த வஜீரானவர் நியாயமாக எடுத்துரைத்தார்.

“ஏ, வஜீரே! நான் உலகாயத வாழ்க்கை நடத்துவதாகவும் கிலாஃபத்திலுள்ள மக்களின் க்ஷேமத்தைக் கருதுவதில்லை யென்பதாகவும் நீர் பேசுகிறீர். என் கீழே இருக்கிற ஸல்தனத்களில் இந்த ஷஜருத்துர்ரைப் போன்ற தாந்தோன்றிகள் இருக்கும்போது நானென்ன செய்ய முடியும்? அவள் சிலுவை யுத்தத்துக்காக நம்மை ஏன் உதவி கேட்கக் கூடாது? அவள் கேட்டா நாம் மறுத்தோம்? அது போகட்டும். அவள் மரியாதைக்காவது தான் சுல்தானாவாக விரும்புவதாக நமக்கொரு வார்த்தை தெரிவித்தாளா? இம்மாதிரியான குட்டிச்சுவர்களை வைத்துக் கொண்டு மாரடிக்கும்போது, ‘கலீஃபா கடமையில் தவறக்கூடாது!’ என்று நீர் உபதேசம் செய்வதைக் கண்டு சிரிப்பதா அல்லது அழுவதா? நீர் சொன்ன கலீஃபத்துஸ் ஸாலிஹின் கீழேயிருந்த அத்தனைபேரும் தத்தம் கடமையைச் செவ்வனே செய்து கலீஃபாவைக் கண்ணியப் படுத்தினார்கள்; அவரும் நேர்மையாய் நடந்தார். அது பழங்காலக் கதை. இப்போது நடக்கிறதைப் பாருமே! கலீஃபாவினால் எல்லாரும் கெடுகிறார்களா, அல்லது எல்லாருமாகச் சேர்ந்து கலீஃபாவைக் கெடுக்கிறார்களா? என்னவோ, எனக்குத் தெரிந்தவரையில் கலீஃபாக்களை குறைகூறிப் பயனில்லை சுல்தான்கள் எல்லாருமே தத்தம் சுயநலத்தைக் கருதி, கலீஃபாக்களை உதாசினம் செய்கிறார்கள்; அவமரியாதைக்கு உள்ளாக்குகறார்கள். காலம் இருக்கிற இருப்பில் நாம் வாய் மூடிக்கொண்டு பேசாமலிருக்க வேண்டும் போலும்! நீர் அப்படித்தானே உபதேசிக்கிறீர்?”

“ஹுஜூர்! குற்றம் யார்மீது இருக்கிறது என்று நான் குறிப்பிட வரவில்லை. கலீஃபாக்கள் செய்ததாலோ, அல்லது சுல்தான்கள் செய்ததாலோ, அல்லது வேறெப்படியோ கிலாஃபத்தின் மதிப்பே மங்கிக்கொண்டு போகிறது. ஆண்டவன் கடைசியாக என்ன செய்ய நாடியிருக்கிறானோ தெரியவில்லை,” என்று வஜீர் பேசிக்கொண்டே யிருக்கையில், கலீஃபா ஒரு குறிப்பிட்ட இடத்தை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தார். எனவே, பேச்சை நிறுத்திக் கொண்டு, கலீஃபாவின் நோட்டம் சென்ற திசையை நோக்கினார்.

ஆம்! மிஸ்ருக்குச் சென்ற தூதன் காற்றினுங்கடிய வேகத்தில் பாக்தாத் நகருக்குள் வந்துகொண்டிருந்தான்.

ஐந்து நிமிஷத்தில் அந்தத் தூதன் கலீஃபாவின் திருமுன்னே வந்து நின்றான். வாய்திறந் தொன்றும் பேசாது மெளனமாய் நின்று கொண் டிருந்தான். ஏற்கனவே பொறுமையை யிழந்துக் காணப்பட்ட கலீஃபாவானவர் ஆத்திரம் பொங்க அவனை முறைத்துப் பார்த்தார். “அந்த விதவைப் பெண் என்ன சொல்லுகிறாள்?” என்று படபடப்புடன் வினவினார்.

“யா அமீரல் மூஃமினீன்! அவள் தங்களுடைய தாக்கீதுக்கு ஒரு பதிலையும் எழுதிக் கொடுக்கவில்லை. தலைக் கிறுக்குப் பிடித்த பெண்பேயாகக் காட்சியளிக்கிறாள். தங்கள் பர்மானை அவமதிக்கிறாள். உள்ளூர் விஷயத்தில் தலையிடத் தங்களுக்கு அதிகாரம் கிடையாதென்று பிதற்றுகிறாள். தான் சுல்தானாவா யிருப்பதை எவரும் அசைக்க முடியாதாம்! உங்களால் ஆனதை யெல்லாம் செய்து கொள்ளலாம் என்றுகூட அறைகூவுகிறாள்! அவ்வளவு தான் விசேஷம்!”என்று தூதன் கலீஃபாவின் பற்றியெரிகிற நெருப்பிலே மண்ணெண்ணெயை வாரியிறைத்தான்.

கலீஃபா அவர்களின் தாடிரோமம் அத்தனையும் சிலிர்த்து விட்டன. கண்களில் நெருப்புப் புகை கனன்றது. நாசித்துவாரங்கள் விரிந்து விரிந்து சுருங்கின. உதடுகள் துடித்தன. வலதுகை முஷ்டியால் இடது உள்ளங்கையில் ஓங்கி ஓங்கிக் குத்திக்கொண்டார். பற்களை நறநறவென்று மென்றுகொண்டார்.

 “ஏ, ஜகரிய்யா! இக்கணமே நம்முடைய படைகளைத் திரட்டும்! இந்தக் கொசுகை இப்போதே நசுக்கி யெறிந்து விட்டு மறுவேலை பார்க்கிறோம்!…. ஹூம்! சீக்கிரம், சீக்கிரம்!” என்று சீறிவிழுந்தார்.

வஜீரின்பாடு பரம சங்கடமாய்ப் போய்விட்டது. கலீஃபாவைக் கேட்காமல் ஒரு பெண்பிள்ளை சுல்தானாவாக உயர்ந்துவிட்டாளென்னும் அற்பக் குற்றத்துக்காக, கலீஃபா படை திரட்டிச் செல்வதென்றால், எப்படியிருக்கும் அந்தக் காட்சி?

“யா அமீரல் மூஃமினீன்! நாம் எதிர்பார்த்த பதில்தானே வந்திருக்கிறது! மீதிக் கதையையும் முழு விவரத்தையும் நன்றாய்க் கேட்டுவிட்டு, என்ன ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமென்பதை அப்பால் முடிவு செய்யலாம். – ஏ, தூதனே! நீ போய் வந்த கதையை விவரமாய்ச் சொல்லாமல் ஏதேதோ உளறுகிறாயே! என்ன நடந்தது? நீ போய்வர ஏன் இத்தனை தாமதம்? என்னும் விருத்தாந்தத்தைச் சொல், கேட்போம்!” என்று ஜகரிய்யா கலீஃபாவையும் தூதனையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டே செப்பினார்.

கலீஃபாவுக்குப் பொறுமையில்லை யென்றாலும், தூதன் சொன்ன விருத்தாந்தத்தைக் கவனமாய்க் கேட்க வேண்டுவது அவசியமாகி விட்டது. என்னெனின், அன்னவன் கதையை வரிசைக் கிரமமாக ஆரம்பிக்காமல், புர்ஜீகளின் கோரிக்கையிலிருந்து தலைகீழாக, நல்ல முன்னுரையுடனே வெகு நேர்த்தியாக, அங்கங்கே வக்கணை வைத்து, நடந்த விவரங்களை நிதானமாகக் கூற ஆரம்பித்தான். ஷஜருத்துர்ருக்கு எதிர்கக்ஷியொன்று காஹிராவிலேயே இருக்கிறதென்னும் செய்தி கலீஃபாவின் காதுகளில் தேனைப் பொழிந்தபடியால், மிக நன்றாய் நிமிர்ந்து குந்திக்கொண்டு, கதையைக் கவனமாகக் கேட்டார்.

வஜீர் ஜகரிய்யாவும் அடிக்கடி கலீஃபாவின் முகபாவங்களைக் கவனித்துக் கொண்டு, தூதன் சொன்ன விவரங்களை யெல்லாம் உற்றுக் கேட்டு வந்தார்.

Image courtesy: Khaleejtimes

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment