அறியாத்தனமும் மனோ இச்சையும் – 2

இன்னம், நபிகள் திலகமவர்கள் (ஸல்) ஒருவரைக் கண்டு மற்றொருவர் மரியாதை செய்யும் எண்ணங்கொண்டு எழுந்து நிற்பதையும் கண்டித்திருக்கிறார்கள். இந் நோக்கத்தைக் கொண்டேதான் மேலே சொல்லிவந்தபடி இமாம்

உட்காந்திருக்கும்போது மௌமூமானவர்கள் பின்னால் நிற்கவேண்டாமென்று கூறயிருக்கிறார்கள். இவ்வாறு ஏனையவர்கள் தங்களுக்கு மரியாதை செய்யவேண்டுமென்று மனத்தில் எண்ணுவார்களாயின், எண்ணுமிவர்கள் நரகலோகம் போய்ச் சுகம் பெறத் தையாராயிருக்க வேண்டுமென்று எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். இதனால்தான் ஹிஜ்ரி நூறாம் ஆண்டில் அரசு செலுத்திவந்த கலீபா உமர் பின் அப்துல் அஜீஜ் (ரஹி) அவர்கள் ஒரு வேலையாளை நியமித்து, “இங்கு நமது தர்பாரில் வந்து மரியாதைக்காக எவரேனும் பூமியைத் தொட்டு முத்தமிடுவரேல், அன்னவரை அம்மாதிரி செய்வதினின்றும் விலக்கி அவருக்குத் தக்கபடி புத்தி புகட்டவேண்டும்,” என்று ஏற்பாடு செய்து வைத்திருந்தார்கள். என்னே அன்னவரின் மார்க்கபக்தி!

எனவே, கியாமென்னும் நிலையும், குஊத் என்னும் இருப்பும், ருகூஃ என்னும் சிரம்குனிதலும், சஜ்தா வென்னும் சிரவணக்கமும், வானலோகங்களையும் பூலோகத்தையும் படைத்த ஏக நாயகனான அவ்வாண்டவனுக்கே யல்லாது வேறு யாருக்கும் செய்வது தகாது. ஆண்டவனுக்குரிய இக்காரியத்தில் வேறு யாரும் தலையிடுவது கூடாது. இதனால் தான் ஆண்டவனைக் கொண்டேயல்லாது ஏனைய வஸ்துக்களைக் கொண்டு பிரமாணம் பண்ணுவதும் கூடாதென விலக்கப்பட்டிருக்கிறது. இதை யொட்டியே புகாரீயிலும் முஸ்லிமிலும் பின்காணும் வாக்கியங்கள் காணக்கிடக்கின்றன: “ஒருவன் பிரமாணம் பண்ண நாடுவானாயின், அவன் ஆண்டவனைக் கொண்டே பிரமாணம் செய்யவேண்டும். இல்லையேல் வாய் மூடிச் சும்மா இருக்கவேண்டும்.” இதுவுமல்லாமல், “யாரேனும் அல்லா(ஹ்) அல்லாத ஏனையவர்களைக் கொண்டு பிரமாணம் செய்வாராயின், நிச்சயமாய் அவர் ஆண்டவனுக்கு இணை வைத்தவராவார்,” என்பனபோன்ற அனேக வாக்கியங்களிருக்கின்றன. எனவே, இதன் கருத்தைக் கவனிக்குமிடத்து, ஒவ்வொரு வணக்கமும் அல்லா(ஹ்) ஒருவனுக்கேயல்லாது ஏனையவர்களுக்கு நடப்பது கூடாதென்னும் கருத்தைப் பெற்றுக் கொள்ளுகின்றோம்.

மனிதர்கள் ஆண்டவனுக்குரிய உண்மையான நேரான மார்க்கத்தைப் பின்பற்றிச் சகலரும் மன ஒற்றுமையாய் அவனை வணங்க வேண்டுமென்றும், தொழுகையை நிலைத்திருக்கச் செய்யவெண்டு மென்றும், தங்கள் ஜகாத்தென்னும் ஏழை விகிதத்தைக் கொடுக்கவேண்டு மென்றும் கட்டளையிடப்பட்டிருக்கின்றனர். மேலும், இதுவே நேர்மையான மார்க்கமாய்க் காணப்படுகிறது” – (98:5).

அன்றியும் ஹதீதில் பின்வருமாறு ஒரு வாக்கியமுமிருக்கிறது: (1) “நீங்கள் அல்லா(ஹ்) ஒருவனுக்கே வணக்கம் செய்யவேண்டும்; அவனுக்கு எந்த வஸ்துவையும் இணையாக்குதல் தகாது.” (2) “நீங்களெல்லீரும் ஒன்று சேர்ந்து ஆண்டவன் கயிற்றை (உத்தரவைப்) பற்றிக்கொள்ள வேண்டும்; நீங்கள் பிரிந்து நிற்பது கூடாது.” (3) “உங்களுக்காக ஆண்டவன் ஏற்படுத்தியிருக்கும் அதிகாரியை மனமார ஒத்துக்கொள்ளுதல் வேண்டும். எனவே, இம்மூன்று விஷயங்களையும் கைக் கொள்ளுபவர்கள்மீது ஆண்டவன் பிரீதி வைக்கிறான்,” என்று நபிகள் (ஸல்) அவர்கள் நவின்றிருக்கின்றார்கள்.

இதனாலும், நாம் தெரிந்துகொள்ள வேண்டுவதென்னவெனின், வணக்கத்தின் ஒவ்வொரு காரியத்தையும் சொந்தமாய் ஆண்டவனுக்கேதான் செய்யவேண்டும். ஆனால், பஹிரங்கமானதும், மறைவானதும், சிறிதும் பெரிதுமான எவ்வித ஷிர்க்கும் செய்வது கூடாதென்பதே யாம். இதனால்தான் கதிரவன் உதயமாகும் போதும், மறைந்துகொண்டிருக்கும் போதும், நடு உச்சத்திலிருக்கும்போதும் வணங்குவது கூடாதென விலக்கப்பட்டிருக்கிறது. இம்மாதிரியான நேரங்களில் சில முஷ்ரிகீன்கள் சூரியனுக்கு வணக்கம் புரிந்து கொண்டு வருகிறார்கள். எனவே, அன்னவர்களுடன் இந்த நேர்மையான முஸ்லிம்கள் எங்கு ஒப்பாக்கப் பட்டுவிடப் போகிறார்களோ வென்று அச்சங்கொண்டுதான் அச்சமயங்களில் முஸ்லிம்கள் வணக்கம் புரிவது கூடாதென்று விலக்கப்பட் டிருக்கிறார்கள் என்பதை யாம் நுங்களுக்கு எடுத்தோத வேண்டிய ஆவசியக மின்று. எனவே, நமது மார்க்கத்தில் இவ்வளவு உஷாராய் ஷிர்க்கின் வாடையே வரக்கூடாதெனத் தடைசெய்யப்பட் டிருக்கும்போது, மறுபடியும் பாமர முஸ்லிம்களாய நேயர்கள் ஏனே இச்சந்தேகக் காரியத்தில் ஈடுபடல் வேண்டும்? இந்த ஷிர்க்குக்கு இடமுண்டாகு மிடங்களிலெல்லாம் உண்மையான முஸ்லிம்கள் நெடுந்தூரத்துக் கப்பாலல்லவோ விலகிப் போய் நிற்கவேண்டும்? இதனால்தான் ஆண்டவன் ஏனை வேத முடையவர்களைப் பின்காணுமாறு சொல்லி அழைக்கும்படி எம்பிரான் (ஸல்) அவர்களுக்கு கட்டளையிட்டிருக்கிறான்:

ஏ வேதமுடையவர்காள்! அல்லா(ஹ்)வைத் தவிர்த்து வேறு யாருக்கும் வணக்கம் புரியமாட்டோம்; மேலும், அவனுக்கு எந்த வஸ்துவையும் இணையாக்க மாட்டோம்; இன்னமும் ஆண்டவனைத் தவிர்த்து எங்களுள்ளேயே சிலர் சிலரை ரப்புகளாய்ப் பற்றிக்கொள்ளமாட்டோம் என்ற, உங்களுக்கும் எங்களுக்கும் பொதுவான இவ்விஷயத்தின் பக்கல் வாருங்கள், என்று (ஏநபியே!) சொல்வீராக. அவர்கள் இதை ஒப்புக்கொள்ளாது புறக்கணிப்பார்களாயின், நாங்கள் முஸ்லிம்களா யிருக்கிறோ மென்பதற்கு நீங்கள் சாக்ஷியாயிருங்கள் என்று சொல்வீர்களாக” (3:63).

ஆதலின், இந்த வேத வாக்கியத்தினால் நாம் தெரிந்து கொள்வ தாவது: யூதர்களும், நசாராக்களும் ஆண்டவனைத் தவிர்த்துத் தங்களுள் ஒருவரை மற்றொருவர் ரப்புகளாய்ப் பற்றிக்கொண் டிருக்கின்றனர். எனவே, முஸ்லிம்களாகிய் நீங்கள் இவ்வா றெல்லாம் இருக்கக் கூடாது என்பதே. இவ்வாறே ஒருவன் ஒரு பெரியாரிடம் ஆண்டவனுக்குச் செய்யும் வணக்கமே போல் செய்வானாயின், இவனும் எஹூதிகளில், அல்லது நசாராக்களில் சேர்ந்தவனென்றேதான் கொள்ள வேண்டியதாய் ஏற்படுகிறது.

இஃதே போல் ஒருவன் மற்றொருவனை நோக்கி, “ஆண்டவனுதவியாலும், உங்களுடைய பரக்கத்தாலும் என்னுடைய இன்ன காரியம் நிறைவேறி விட்டது,” என்று கூறுவானாயின், இதுவும் நமது நேர்மையான ஷரீஅத்துக்கு முற்றும் முரணாணதாய்க் காணப்படுகிறது. ஏனெனின், மனிதர்களின் நாட்டங்களை நிறைவேற்றிவைக்கும் விஷயங்களில் ஆண்டவனுக் குதவியாளர் வேறு யாருமில்லை யென்பது உங்களுக்குத் தெரியும். விஷயம் இவ்வாறிருக்கும் போது, ஆண்டவனுடன் வேறொருவரைச் சேர்த்து இருவர்களின் பரக்கத்தாலும் நாட்டத்தாலும் தாம் என்னுடைய கோரிக்கை நிறைவேறிற்றென்று ஒருவன் கூறுவானாயின், இஃது எவ்வளவு பொருத்தமற்ற விஷயமாய்த் தென்படுகின்ற தென்பதை நீங்களே சிந்தனை செய்து பாருங்கள். இவ்வண்ணம் ஒரு சமயம் நபிகள் (ஸல்) அவர்களையே முன்னோக்கி ஒரு நாட்டுப் புறத்து அரபி சொன்னபோது, “ஆண்டவன் ஒருவனது நாட்டப்படி தான் என்னுடைய இக்காரியம் நிறைவேறிற்று,” என்று சொல்ல வேண்டும்; இது விஸயத்தில் ஆண்டவனுடன் வேறு எவரையும் சேர்த்துக் கூறுவது கூடாது என்று நாயகம் (ஸல) அவர்கள் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்கள். இதை யொட்டியே புகாரீயில் ஜைத்பின் காலித் மூலமாய் நாயக வாக்கிய மொன்று தென்படுகின்றது:

“ஹுதைபிய்யாவில் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு பஜ்ர் தொழுகையைத் தொழவைத்தார்கள். இரவு மழை பெய்திருந்தது. தொழுததன் பிறக நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: ‘இன்றிரவு அல்லா(ஹ்) என்ன சொன்னா னென்பது உங்களுக்குத் தெரியுமா?’ என வினவ, நாங்கள் அல்லா(ஹ்)வும் அவனது ரசூலும் மிக்க அறிந்தவர்கள் என்று சொன்னோம். அதற்குப் பின் நாயகம் (ஸல்) அவர்கள், ‘இன்று விடியற்காலையில் சிலர், மனிதர்கள் மீது ஈமான் கொண்டவர்களாகவும் நக்ஷத்திரங்கள் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களாகவும், வேறு சிலர் நக்ஷத்திரங்களின்மீது நன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் என்மீது நம்பிக்கையற்றவர்களாகவும் எழுந்து இருக்கிறார்கள். ஆண்டவனது அருளாலும் அவனது கிருபையாலுமே (இன்றிரவு) நமக்கு மழைபெய்தது என்று சொல்லும் அவர்கள், என்மீது நன்னம்பிக்கை கொண்டவர்களாகவும்; நக்ஷத்திரத்தின் மீது நம்பிக்கையற்றவர்களாகவும் காணப்படுகிறார்கள்; இதை விடுத்து இன்ன இன்ன காரணங்களினால் தாம் மாரிபொழிந்தது; ஆண்டவனுதவியா லன்று என்று சொல்லும் இவர்கள் நக்ஷத்திரங்களின்மீது நன்னம்பிக்கை கொண்டவர்களாகவும், எனக்கு மாறு செய்தவர்களாகவு மிருந்து வருகிறார்கள்’ என்று சொன்னான், என்று (நபிகள் திலகம்) திருவாய் மலர்ந்தருளினார்கள்.” எனவே, இவ்வுலகினுக்கு வேண்டிய சௌகரியங்களை ஆண்டவன் செய்து கொடுக்கும்போது அவனுக்கு யாரையும் இணை துணையாய் நிறுத்தாட்டுவதும் கூடாதென்பதை நாம் மிகத் தெளிவாய்த் தெரிந்து கொள்ளுகிறோம்.

ஆனால், ஒரு மனிதன் ஜீவித்திருக்கும் எங்கள் ஷைகுடைய பரக்கத்தால் இக்காரியம் முடிவடைந்தது என்றுசொல்லி, அவர் ஆண்டவனிடம் எங்களுக்காக வேண்டிக்கொண்டதி னிமித்தம் இக் காரியம் முடிவடைந்தது எனக் கருத்துக் கொள்ளுவானாயின், இதிலொன்றும் பாதகமில்லை. ஏனெனினல், மறைவான ஒரு மனிதன் மறைவாயிருக்கும் மற்றொருவனுக்காக ஆண்டவனிடம் மன்றாடி, துஆ கேட்பானாயின், இஃது ஏக நாயனால் ஒப்புக்கொள்ளப்படுவதா யிருக்கின்றது. இவ்வாறில்லாது, நமது பெரிய குருவான ஷைகுதான் இக்காரியம் நமக்கு முடிவடைவதற்கு மிக்க உதவியாளரா யிருந்தார் என்பது போன்ற எண்ணங் கொள்வதுதான் கூடாதென நாம் அடிக்கடி கண்டித்துக்கொண்டு வருகிறோம். இப்படி எண்ணுவதால்தான் ஆண்டவனுக் கொப்பான ஒருவரை இது விஷயம் நிறைவேறுவதில் இணையாக்கி வைக்கின்றதா யிருக்கின்றதெனச் சொல்லுகிறோம். உண்மையை கவனித்து, ஒரு சிறிதேனும் ஞானமுடையவர்கள் இதை நன்கு உணர்ந்து கொள்வார்க ளென்பது திண்ணம். ஆகவே, ஆண்டவனுக்குரிய நேரான மார்க்கத்தில் சீராக நடந்து செல்லவேண்டிய தற்காகவும், இவ்வுலகம் மறு உலகமான இருலோகத்திலும் நன்மையைப் பெறுவதற்காகவும், ஒருவர் மற்றொருவரைப் பற்றி ஆண்டவனிடம் துஆ கேட்பதென்பது நமது மேன்மையான ஷரீ அத்தின்படி “ஆகுமான” தென்றும், இவ்வாறுதான் முஸ்லிம்களுக்குள் உண்மையான சகோதர வாஞ்சை இருக்கவேண்டு மென்றும் நமது ஷரீஅத் மிகவும் நன்றாய் வற்புறுத்துகிறது. இம்மாதிரி செய்வதே மெய்யான சகோதரத்துவ முஸ்லிம்களின் வேலையுமாகும்.

<<முந்தையது>>  <<அடுத்தது>>

<<ஜியாரத்துல் குபூர் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment