111. மதப் பள்ளிக்கூடங்களிலும் கலாசாலைகளிலும் வாசிக்கும் முஸ்லிம் மாணவர்கள் புதன்கிழமைதான் நல்ல நாள், அன்றுதான் புதுநூல்களை ஆரம்பிக்கவேண்டும்; இதர நாட்களில் அப்பியசித்தால் சீக்கிரம் முடிவு பெறாதென்று நம்பி, அவ்வாறே செய்துவருகின்றனர். புதன்கிழமையன்று படிப்பதற்கு ஆரம்பம் செய்ய எவ்வித ஆதாரமுமில்லை.
112. சில ஆலிம்கள் குர்ஆன் ஆயத்துக்களை வலூவில்லாமல் எழுதிவிடுகின்றனர். சுத்தமில்லாத ஜனங்களின் கைகளிலெல்லாம் வேத வாக்கியத்தைக் கொடுத்து விடுகின்றனர். இஃது ஒழுங்கீனமாகும். வலூவில்லாமல் குர்ஆனைத் தொடுவதும் எழுதுவதும் நல்லதல்ல.
113. பிளேக், காலரா முதலிய விஷநோய்கள் பரவினால், அப்போது தெருக்கள் தோறும் பாங்கு சொன்னால் அஃது ஓடிப்போகிறதென்று நம்பிக்கொண்டு அவ்வாறே சிலர் செய்து வருகிறார்கள். இதற்கெவ்வித ஆதாரமுமில்லை.
114. குர்ஆனின் 9 வது அத்தியாயமான சூரத்துத் தௌபாவை ஒதுமிடத்து எச்சமயத்திலும் பிஸ்மில்லாஹ் என்னும் வார்த்தையைச் சொல்லக் கூடாதென்று ஒரு சிலர் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், உண்மை விஷயமாவது, குறிப்பிட்ட அத்தியாயத்திற்கு முன்னேயிருந்து ஒருவன் ஓதிக்கொண்டே வந்து இந்த 9 வது அத்தியாயத்தையும் ஓதத் தொடங்குவானாயின், அது சமயம்தான் பிஸ்மில்லாஹ் என்னும் வாக்கியமில்லாமல் இவ் வத்தியாயத்தை ஓதிக் கொண்டே செல்லவேண்டும். இப்படியில்லாது இந்த 9 வது அத்தியாயத்தையே முதல் முதலாய் ஓதத் தொடங்கினாலும், அல்லது இதற்கு முன்னுள்ள வாக்கியங்களை ஓதிக்கொண்டு வந்து சிறிது நேரஞ் சென்று இந்த 9வது அத்தியாயத்தை ஓதத் தொடங்கினாலும் ” பிஸ்மில்லாஹ்” என்னும் வார்தையைச் சொல்லிக்கொள்வது நலமே.
115. சத்தமிட்டு ‘திக்ர்’ செய்வது எக்காலத்திலும் எவ்வித நிபந்தனையுமின்றிக் கூடுமென்று சில முஷாயிகுகள் எண்ணுகின்றனர். இஃது ஒரு தவறான எண்ணமேயாகும். திக்ரை இரைந்து ஓதவேண்டுமாயின், அதற்கொரு நிபந்தனையுண்டு. அஃதாவது, திக்ர் செய்யும் சப்தத்தினால் தொழுபவர்களின் மனம் கலைந்து விடாமலும் உறங்கிகொண்டிருப்பவர்களின் தூக்கத்திற்குப் பாதகமேற்படாமலும் இருக்கும் அப்படிப்பட்ட இடங்களிலேதாம் இரைந்து திக்ர் செய்வதுகூடும். இவைகளுக்கு பாதக மேற்படுமாயின் சப்தமில்லாமல் மெதுவாகவே திக்ர் செய்தல் வேண்டும்
116 நாயின் தேகம் மனிதர்களுடைய உடுப்புகளிலோ பாத்திரங்களிலோ பட்டுவிடுமாயின், அவ்வஸ்துகள் அசுத்தமாகி விடுகின்றன என்று தவறாகச் சிலர் எண்ணுகின்றனர். தேகம் பட்டுவிடுவதால் அசுத்தமொன்றுமாகாது; ஆனால், நாயின் எச்சில் படுவதனால்தான் அசுத்தமாக ஆகிவிடும்.
117. ஆண் பிள்ளைகளின் இடக் கண்களும் பெண் பிள்ளைகளின் வலக் கண்களும் துடிப்பதனால் ஏதோ ஒரு கஷ்டகாலம் வரப்போகிறதென்றும் இதற்கு மாற்றமாய் வலக்கண்களும் இடக்கண்களும் முறையே துடிக்குமாயின் சந்தோஷ சமாசாரம் வரப்போகிறதென்றும் சிலர் எண்ணுகின்றனர். இதுவும் ஒரு தவறான எண்ணமேயாகும்.
118. எந்த மனிதருக்கேனும் பீர் (மூரீது கொடுப்பவர்) இல்லையாயின், அவருக்கு ஷைத்தானே முன்னிலையான பீராய் இருக்கிறானென்று சிலர் சொல்லுகின்றனர். இதுவும் தவறேயாகும்.
119. மஸ்ஜித் அக்ஸா வென்னும் பள்ளி நான்காம் வானத்தின் மீதிருக்கிறது; தெஹ்லியிலுள்ள ஜாமிஃமஸ்ஜித் அந்த நமூனாவைப் பின்பற்றியிருக்கிறது என்று சில பாமரர்கள் சொல்லுகின்றனர். இவ்விரண்டும் தவறே. மஸ்ஜித் அக்ஸா என்னும் பள்ளிவாயில் ஷாம் (பலஸ்தீனம்) என்னும் பாகத்திலிருக்கிறது. தெஹ்லியிலுள்ள ஜாமிஃ மஸ்ஜித் அந்த நமூனாவை பின்பற்றியதாயில்லை.
120. சாதாரண மக்கள் ஜனாஜாவுடைய தொழுகையை நிறைவேற்றும் சமயத்தில் தக்பீர்கள் சொல்லும்போது தங்கள் முகங்களை வானத்தளவே உயர்த்துகின்றனர். இதற்கெவ்வித ஆதாரமுமில்லை.
121. அனேக மனிதர்கள் ஜும்ஆவுடைய குத்பா ஒதப்படும் சமயம் முதலாவதில் இரண்டு கையையும் கட்டிக்கொண்டு உட்கார்ந்து குத்பாவைக் கேட்கின்றனர். இரண்டாவது குத்பாவில் இரண்டு கையையும் தங்கள் தொடைகளின் மீது வைத்துக்கொண்டு குத்பாவை செவிமடுக்கின்றனர். இதற்கும் மார்க்கத்தில் எவ்வித ஆதாரமுமில்லை. இப்படிச் செய்வதில் குற்றமுமில்லை. ஆனால், இதுவும் பர்லான ஒரு காரியமென்று எண்ணுவதுதான் கூடாது.
122. அனேக பாமாக்கள், குறிப்பாக பெண்கள், வைசூரி வந்துவிட்டால் அதற்கு மருந்து தகாத ஒரு காரியமென வெண்ணுகின்றனர். இதுமட்டுமா? மற்றும் சில பாமரர்கள் இந்நோய் ‘மாரியாத்தாள்’ என்ற தேவதையின் செய்கையினால் உண்டாயிருக்கிறதென்று எண்ணுகின்றனர். இவையும் தவறான கொள்கைகளேயாகும்.
123. அனேக இடங்களில் மரித்துப்போன சவத்தைப் புதைக்கும் சமயம் புதைகுழியில் மய்யித்தை மல்லாத்திப் படுக்கவைத்து. அதன் முகத்தை மாத்திரம் கிப்லாவுக்கு நேராய்ச் செய்கின்றனர். இது நன்றன்று. ஜனாஜாவையே கிப்லாவின் பக்கம் திருப்பிவைப்பதே நலமாகும்.
124. சில அறியாத மக்கள், உயிர் நீங்கும் தறுவாயிலிருக்கும் மனிதனுக்கு ஷர்பத் என்னும் இனிப்பான பானத்தைக் குடிப்பாட்ட வேண்டுமென்றும், அப்படிக் குடிப்பாட்டப் படாதவர்கள் வெறுக்கத்தக்கவர்களே என்றும் நினைக்கின்றனர். இதுவும் ஒரு தவறான கொள்கையேயாகும்.
125.மணமான புதியபெண் தன் வீட்டையோ, வீட்டுக்குள்ளிருக்கும் பெட்டிகளையோ பூட்டி விடுவாளாயின், அவளுடைய குடும்பங்களுக்கெல்லாம் நாசகாலம் வந்து விட்டதென்று சில அறியாத பெண்மணிகள் எண்ணுகின்றனர். இதுவும் தவறே.
125a. பெண்பிள்ளைகள் கத்தியைக்கொண்டு தங்கள் அரைரோமத்தைச் சிரைத்துக்கொள்ளக் கூடாதென்று சிலர் சொல்லுகின்றனர். இவ்வார்த்தையும் தவறேயாகும். கத்தியை ஸ்திரீகள் உபயோகப்படுத்துவது வைத்திய சாஸ்திர முறைப்படி நன்றில்லையாயினும், இஃது நமது ஷரீஅத்தில் விலக்கப்பட்டில்லை.
126. சில மனிதர்கள் “ஸலாம் அலைக்கும்” என்னும் வந்தனத்தைக் கூறுமிடத்துத் தமது கரங்களை நெற்றியில் வைத்துக் கொள்ளுகின்றனர்; அல்லது குனிந்துகொள்ளுகின்றனர். இன்னமும் சில மனிதர்கள் முஸாபஹா என்னும் கைலாகு செய்தவுடன் மார்பின் மீது கரங்களை வைக்கின்றனர். இவையும் ஷரீஅத்தில் ஆதாரமற்ற கருமங்களேயாகும்.
127. சில பாமர மக்கள், “சூரத்துந் நாஸ்” என்னும் அத்தியாயத்தை அதிகமாய் ஒருவன் ஓதிக்கொண்டு வருவானாயின், அவன் (நாஸ்) மூக்குத்தூள் போடும் வழக்கத்தைக் கைக்கொள்பவனாய் மாறிவிடுகிறான் என்றெண்ணுகின்றனர். இதுவும் ஒரு தவறேயாகும். ஆனால், இவ்வத்தியாயத்தை அடிக்கடி ஓதிக்கொண்டிருப்பதால் மனிதன் தனக்கேற்படும் கஷ்டங்களினின்று ஆண்டவனுதவியால் தப்பிக்கொள்ளுகிறான்.
128. ஆண்பிள்ளைகளுக்குமுன்னே பெண்பிள்ளைகள் உணவருந்துவது நமது ஷரீஅத்தின் படி விலக்கப்பட்ட காரியமாயிருக்கின்றதென்று அனேகம் பெண்பிள்ளைகள் எண்ணுகின்றனர். இதுவும் தவறேயாகும்.
(129 லிருந்து 136 வரை மூலப் பிரதியில் பக்கம் தொலைந்துவிட்டது.)
137. வீடுகளின் முற்றங்களிலோ கூரை முகடுகளிலோ காக்கை உட்கார்ந்து கத்திக்கொண்டிருக்குமாயின், யாரேனுமொரு விருந்தினர் அந்த வீட்டுக்கு வருவதற்கு அறிகுறியாகும் என்று சில பெண்மணிகள் எண்ணுகின்றனர். இதுவும் தவறான ஓர் எண்ணமேயாகும்.
138. யாரேனுமொரு பெண்ணின் குழந்தைகள் அடிக்கடி மரணமடைந்துகொண்டு வருமாயின், அம்மாதிரியான பெண்பிள்ளையிடம் வேறு சில பெண்பிள்ளைகள் போகவோ, சகவாஸம் வைத்துக்கொள்ளவோ கூடாதென்று எண்ணுகின்றனர். இதுவும் ஒரு கொடிய பாப எண்ணமேயாகும்.
139. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய 3-வது, 8-வது, 13-வது, 18-வது, 21-வது, 33-வது, 39-வது, 48-வது வயதில் நிகழும் வருஷங்கள் மிக மிகக் கடுமையான வருஷங்களாயிருக்கின்றன. எனவே, இவ்வாண்டுகளில் சர்வ ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமென்று சில அறியாத பெண் பிள்ளைகள் கருதுகின்றனர். இதுவும் ஒரு தவறான மனப்பான்மையேயாகும்.
140. பூமியின்மீது கைதவறி உப்புக் கொட்டப்பட்டுப் போய் விடுமாயின், அதனை இறுதி நாளின்போது சிந்தியவன் தன்னுடைய கண்ணிமையினால் பொறுக்கவேண்டி வருமென்று சொல்லப்படுகிறது. இதற்கெவ்வித ஆதாரமுமில்லை.
141. ஒருவன்மீது வாருகோல் பட்டுவிடுமாயின், அது கேவலமாக்கப்பட்டதற்கு ஒப்பாகும் என்றெண்ணி, “யான் இதற்குப் பதிலாய் ஒரு சிறிது உப்பைக் கிணற்றில் கொட்டி விடுகிறேன்” என்று சொல்லி அவனிடம் மன்னிப்புத் தேடுவதும், அதன்படி செய்வதும் கூடாத விஷயமேயாகும்.
142. சில ஜனங்கள், நாய் அழுவதால் ஏதேனும் வியாதியோ வாந்திபேதியோ பரவப்போகின்றது என்று நம்புகின்றனர். இதற்கும் எவ்வித ஆதாரமுமில்லை.
143. ஒரு மனிதன் கொட்டாவி விடும்போது தன்னுடைய நாவில் கையை வைக்காமல் இருப்பானாயின், அவனுடைய வாயில் ஷைத்தான் எச்சில் துப்பிவிடுகின்றானென்று சிலர் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். இதுவும் தவறான ஓர் எண்ணமேயாகும்.
144. சில மனிதர்கள் தொழுகையின்போது இடதுக் கைகளின் முழங்கை திறந்திருப்பதால் தொழுகையில் பின்ன மேற்பட்டு விடுகிறதென்று எண்ணுகின்றனர். இதனால் தொழுகைக்கொன்றும் பாதகமேற்பட்டு விடுவதில்லையென்றாலும், ஒழுங்காய்த் தொழுதுகொள்வது நலமாகும்.
ஆகாத கருமங்கள் முற்றிற்று.
<<முந்தையது>>
<<ஜியாரத்துல் குபூர் முகப்பு>>
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License