வஸீலாவாய்க் கொள்வது கூடாது

by பா. தாவூத்ஷா

மரணமடைந்தவர்களை ஏன் வஸீலாவாய்க் கொள்வது கூடாது?

மரணமடைந்தும், தங்கள் கண்களுக்கு மறைவாயிருந்தும் வந்த காரணத்தினாலேயேதான் உஜைர், மஸீஹ் (அலை) முதலிய நபிமார்களைப் பாமர மக்கள் வணங்கத் தலைப்பட்டனர். அவர்களின் ஜீவிய

காலத்தில் இவ்வாறு வணக்கம் செய்யப்பட்டிருக்குமாயின், நிச்சயமாய் அன்னவர்கள் கண்டனம் செய்தேயிருப்பார்கள்; அன்றியும், இம்மாதிரி தாங்களை வணங்கியவர்களுக்குச் சரியான தண்டனையும் வழங்கியிருப்பார்கள். இக்காரணம் பற்றியே ஒருவர் மரணமடைந்திருக்கும் போதும் அல்லது அவர் கண்ணுக்குப் புலப்படாமலிருக்கும் போதும் அன்னாரை வஸீலாவாகக் கொண்டு எந்த வேண்டுகோள்களையும் செய்வது கூடாது, என்று நம் நாயகம் (ஸல்) திருவுளமாயுள்ளார்கள்.

மேலும், சஹாபாக்களும், தாபியீன்களும், தபஃதாபியீன்களும், இல்லை, சலஃப்சாலிஹீன்களான முன்னோர்களும் இவ் வண்ணமாய்க் கப்ருகளின் சமீபம்சென்று தங்கள் தொழுகைகளை நிறைவேற்றுகின்றவர்களாகவோ, அல்லது இந்தச் சமாதியுடைய நபி, அல்லது வலீ முதலிய பெரியார்களிடம் தங்கள் வேண்டுகோள்களைக் கோருகின்றவர்களாகவோ, அல்லது தங்கள் கண்ணுக்கு மறைவாயிருக்கும் ஒரு பெரியாரை வஸீலாவாய்க் கொண்டு ஆண்டவனிடம் துஆ கேட்கின்றவர்களாகவோ, அல்லது கப்ரினருகே சென்று முஜாவிர்களென்றும் முஃதகிப்களென்றும் சொல்லிக் கொண்டு நடந்தவர்களாகவோ காணப்படுகின்றனரில்லை.

எனவே, சுவாலில் கண்டபடி, உண்மையிலேயே ஒருவன் மரணமடைந்த பெரியாரிடமோ, அல்லது கண்ணுக்குத் தெரியாத ஒரு மகானிடமோ வேண்டுதல் செய்ய எண்ணங்கொண்டு, “யாசெய்யிதி! என்னுடைய வேண்டுகோள்களைக் கவனித்து எனக்கு உதவி செய்வீர்களாக!” என்று கூறித் தனக்கு வேண்டிய நன்மையையும் உதவியையும் அன்னவரிடமே கேட்பானாயின், இஃது ஆண்டவனுக்கு ஷிர்க் செய்யும் காரியமென்பதில் ஒரு சிறிதும் சந்தேகமில்லை. நசாராக்களான கிறிஸ்தவர்கள் ஹஜரத் மஸீஹ் (அலை) அவர்கள்மீதும் மரியம் (அலை) அவர்கள் மீதும் தங்கள் ஆலிம்களான அஹ்பார்களின் மீதும் நன்னம்பிக்கை கொண்டு எல்லையை விட்டுக் கடந்து தாங்கள் கோரும் கோரிக்கைகளையெல்லாம் அன்னவர்களே நிறைவேற்றி வைத்துவிடுவார்கள் என்றென்ணி, அவர்களிடமே தங்கள் கோரிக்கைகளனைத்தையும் கேட்க ஆரம்பித்தார்கள். இஃது ஒரு பக்கல் கிடக்க.

உண்மையைக் கவனிக்குமிடத்து, சிருஷ்டியிலெல்லாம் மிக்க உயர்ந்த அந்தஸ்துடையவர்களும் மேலானவர்களும் ஒப்பாரும் மிக்காரு மற்றவர்களும் நாயகம் (ஸல்) அவர்கள் என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை. இவர்களின் மான்மியத்தையும் மஹாத்தியத்தையும் பெருந்தன்மையையும் குண விசேஷ்களையும் மனமாரக் கண்டவர்கள் சஹாபாக்களான நாயகம் (ஸல்) அவர்களின் திருத் தோழர்களாவார்கள். இவ்வாறு பரிபூரணமாய்க் கண்டானந்தித்துக்கொண்டிருந்த அந்த சஹாபாக்கள் நாயகம் (ஸல்) அவர்கள் மறைவாயிருக்கும்போதும் மரணமடைந்ததன் பிறகும் தங்கள் கோரிக்கைகளை எம்பிரான் (ஸல்) அவர்களிடமோ அவர்களின் வாயிலாகவோ வேண்டிக் கொண்டிருந்ததாய் ஒன்றும் காணப்படவில்லை.

<<முந்தையது>>  <<அடுத்தது>>

<<ஜியாரத்துல் குபூர் முகப்பு>>

Related Articles

Leave a Comment