சுல்தானா ­ஷஜருத்துர்

மண்ணிலே ஒட்டிக்கொண்டிருக்கிற கட்புலனாகாத சத்து மனிதனின் மேனிக்குள் புகுந்து மிகமிக நுட்பமான சிறு கர்ப்பக் கிருமியாக மாறி, கருப்பையுள் நுழைந்து ஒரு பிண்டமான உருவைப் படைத்து, அப்பால் குழவியாகவே பரிணமித்து விடுவதைப்போல், துருக்கி தேசத்தில் பிறந்ததிலிருந்து சமீபத்தில் மிஸ்ர் தேசத்தில் விதவையாக மாறியது

வரையில் பலவிதமாகப் பரிணமித்து ஷஜருத்துர் இப்போது மிஸ்ர் தேசத்தில் ஏகபோக சுல்தானாவாகவே உயர்ந்து ஓங்கிவிட்டார். காலியாகி நாதியற்றுக் கிடந்த அரியாசனத்தின் மீது ஷஜருத்துர் அம்மையார் ஒருவர் மட்டுமே ஏறியமர்ந்து செங்கோல் பிடிக்கச் சகல அருகதையும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவ ரென்பதை நன்குணர்ந்த ருக்னுத்தீன் ஓயாமல் உழைத்து, எல்லாரின் ஒத்துழைப்பையும் பெற்று, அந் நாரியிர் திலகத்தை மாட்சிமிக்க ராணி ஸாஹிபாவாக, ஏகபோக மலிக்காவாக அரியாசனத்தின்மீது ஏற்றியே அமர்த்தி விட்டார். சுப்ஹானல்லாஹ்!

உலக வரலாற்றில், முதன்முதலாக ஏகபோக ஆணை செலுத்தும் அரசியாக உயர்ந்தோங்கும் பாக்கியம் பெற்றவர் இந்த ­ஷருத்துர்ராகவே விளங்கி வருகிறார். மிஸ்ர் நாட்டின் தலைவிதியை விசித்திரம் விசித்திரமாக அமைக்கும் ஆண்டவன் நாட்டம் அவ்வாறாக இருந்துவந்தபடியால், ஸலாஹுத்தீன் காலந் தொட்டு ஐயூபிகளின் ஆட்சிக்கு கீழேயிருந்து வந்த மிஸ்ரின் ஸல்தனத்தை ஷஜருத்துர் ராணியார் ஏற்று நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. இறுதிவரையில் ஐயூபிகளின் சொத்தை ஐயூபிகளுக்கே சேர்ப்பித்துவிட வேணடுமென்று ஷஜருத்துர் கங்கணம் கட்டியிருந்தும், மலிக்குல் முஅல்லம் அதோ கதியாய்ப் போய் முடிந்தது பெரிதும் வருந்தற்குரியதே!

இஸ்லாம் தோன்றியது முதல் இதுவரை எந்தப் பெண்மணியும் மிஸ்ரில் ஏகபோக சுல்தானாவாக அமர்ந்ததே கிடையாது. அந்தப் பெருமை ஷஜருத்துர்ருக்கு மட்டுமே கொடுத்து வைக்கப்பட்ட உயர் தனிப் பெரும் பாக்கியமாயிருந்தது. முதல் முஸ்லிம் சுல்தானாவாகவே விளங்கியதேபோல், ஷஜருத்துர் கீர்த்தி பிரதாபத்திலும் இன்றளவும் கேந்திர ஸ்தானத்தையே வகிக்கின்றார். மிஸ்ரிலிருந்த எத்தனையோ அரசிகளையெல்லாம் விடத் தனிப்பெரும் புகழ் பெற்றவர் இவராகவே காணப்படா நின்றார்.

இத்தன்மைத்தாய மகா கீர்த்தி பெறும்படியான அளவுக்கு உயர்த்தப்பட்ட ஷஜருத்துர் தம் மாற்றாள் மைந்தன் படுகொலை புரியப்பட்ட இரண்டு மூன்று நாள்களிலே கிரீடந் தாங்கிப் பட்டத்துக்கு வந்தார். ருக்னுத்தீன் அன்று எவ்வளவோ கேட்டுக்கொண்டும் மறுதலித்த ஷஜருத்துர் எல்லாருடைய வேண்டுகோளுக்கும் இணங்கித்தானே தீர வேண்டும்? கபட மார்க்கமாக ராஜாங்கத்தைக் கைப்பற்றுவதாய் இருந்தாலல்லவோ பயப்பட வேண்டும்? எல்லா அமீர்களும், எல்லா மம்லூக்குகளும், எல்லாப் பிரதானிகளும், எல்லாப் பிரதமர்களும், பிரமுகர்களும் ஒரே முகமாக அவரை அரியாசனத்தின் மீது ஏற்றியமர்த்திவிட்டார்கள். ஏற்கனவே ஷஜருத்துர் தம்முடை சாதுரியமனத்தையும் காட்டியிருக்கிறாராகையால், அவர்கள் இயற்கையாகவே அவரை மனமார விரும்பி ஏற்றுக்கொண்டார்கள். கலகத்தில் முதுகொடிந்த புர்ஜீகளுங்கூட வேறு வழியின்றித் திருதிருவென்று விழித்து, ஷஜருத்துரையே சுல்தானாவாக ஏற்றுக் கொள்ள வேண்டியதாய்ப் போயிற்று. அன்றியும், அந்த புர்ஜீகளுள் மிகவும் விஷமிகளாயிருந்தவர்கள் கலகத்தில் கொல்லப்பட்டுப் போய் விட்டமையால், இப்போது அந்த மம்லூக்குகள் பெட்டியுள் அடங்கிய பாம்பென ஒடுங்கிவிட்டனர்.

எனவே, எல்லாராலும் ஏக மனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட சுல்தானா ஷஜருத்துர் தலைநிமிர்ந்து கம்பீரமாக அரியாசனத்தில் அமர்ந்திருநதார். அரசவையிலுள்ள மம்லூக் சிறுவர்களும் சிறுமிகளும் சோபனம் பாடினார்கள். எல்லாரின் உள்ளத்துள்ளும் பரிபூரணமான திருப்தியே குடிகொண்டிருந்தது. எவருடைய முகத்திலும் புன்முறுவலே தவழ்ந்தது. அற்பாயுசுடன் அநியாய ஆட்சி புரிந்த மலிக்குல் முஅல்லம் நீக்கியிருநத பஹ்ரீ அமீர்கள் மீட்டும் பழைய பதவிகளில் அமர்த்தப்பட்டார்கள். அத்தாணி மண்டபத்தில் அனறு குழுமியிருந்த அத்தனை பேர்களுள்ளும் மிக அதிகமான சந்தோஷத்தில் மூழ்கியிருந்தவர் ருக்னுத்தீனே என்பதை நாம் நாம் வேறு கூறவும் வேண்டுமோ?

வீண் படாடோபமோ, பெரியதொரு தடபுடலோ இல்லாமல் ஷஜருத்துர் சிம்மாசனத்தில் ஏறியவுடனே முதன் முதலாக பைஸல் செய்யப்பட வேண்டியிருந்த விஷயம் லூயீயைப் பற்றியதாகவேயிருந்தது. முன்னம் ஒரு முறை விசாரித்து அபராதம் விதிக்கப்பெற்ற பிரெஞ்சு மன்னர் அத் தொகையைக் கொடுக்கச் சக்தியற்றுப் போயிருந்தமையால், இன்னம் சிறைச்சாலைக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தார். அனாவசியமாக வெகுநாட்களுக்கு எதிரிகளைக் கைது செய்து வைத்திருப்பது இஸ்லாமிய சட்டப்படி கூடாதென்பதை நன்கறிந்த ஷஜருத்துர் முதன் முதலாக அந்த லூயீயின் விஷயத்தைக் கவனிக்க முற்பட்டார். ஆகவே, அரசவை கூடிச் சற்று நேரத்தில் லூயீயும் அவருடைய சகாக்களும் நம் சுல்தானாவின் திருமுன்னர்க் கொண்டுவந்து நிறுத்தப்பட்டார்கள்.

அதுவரை ஷஜருத்துர் அந்தச் சிலுவையுத்த வீரர்களை நேரில் சந்திக்கத் தருணம் வாய்க்காமையால், இன்றுதான் — அஃதாவது, சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் — அந்தக் கைதிகளை நேருக்கு நேர் சந்தித்தார். தம்முடைய ஆருயிர்க் கணவர் ஸாலிஹ் நஜ்முத்தீனின் அகால மரணத்துக்குப் பலவகையில் காரண பூதமாயிருந்த லூயீயை ஷஜருத்துர் முறைத்துப் பார்த்ததும், பழைய சம்பவங்கள் அவரது மனக்கண் முன்னே வந்து நின்றன. அதனுடன், மலிக்குல் காமில் ஸல்தனத்தின் போழ்து நிகழ்ந்த ஆறாவது சிலுவை யுத்தத்தின் போது கர்தினால் பெலேஜியஸ் என்னும், போப்பாண்டவரின் பிரதிநிதி இதே சபையில் இரு முறை வந்து ஏளனமாய்ப் பேசிச் சென்ற விஷயத்தை அமீர்தாவூதிடம் கேள்வியுற்றிருந்ததும் ஷஜரின் ஞாபகத்துக்கு வந்தது. கண்களில் அவலக் கண்ணீரும் ஆத்திரக் கண்ணீரும் சேர்ந்து சொரிந்தன. சுல்தானாவுக்கு பிரெஞ்சுமொழி தெரியாதாகையில், லூயீக்கும் ஷஜருத்துர்ருக்கும் இடையே நடக்கப்போகும் சம்பாஷணைக்கு உதவி புரிவதற்காக அவ் விருபாஷையும் தெரிந்த துவிபாஷியொருவர் இடையில் நின்றார். எனவே, அவர் பிரெஞ்சு பாஷையில் லூயீ சொல்வதை அரபிலும், சுல்தானா அரபில் பேசுவதை பிரெஞ்சு மொழியிலும் மொழி பெயர்த்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.

சபையிலே பூரணமான அமைதி நிலவியிருந்தது. முன்னம் மலிக்குல் முஅல்லம் கூட்டிய சபையைவிட இச்சபை அதிக கம்பீரமானதாகவும், மரியாதையும் மதிப்பும் மிக்கதாகவுமே காட்சியளித்து. எல்லாரும் நிச்சப்தமாயிருந்தார்கள்.

“ஏ, ரிதா பிரான்ஸ்! சுல்தான் மலிக்குல் முஅல்லம் உம்மீது சாட்டிய குற்றங்களை நீர் ஏற்றுக்கொண்டீரல்லவா?”என்று ஷஜருத்துர் முதல் வினாவை விடுத்தார்.

மன்னாதி மன்னராகவும் போப்பாண்டவரின் பிரத்தியேக ஆசிர்வாதத்தையுப் பெற்றுக் கொண்டவராகவும் விளங்காநிற்கும் தாம், முன்னம் ஒரு சிறுவனெதிரில் விசாரணைக்காக நிறுத்ப்பட்டதையும், இப்போது கேவலம் ஒரு பெண்ணெதிரில் மறுமுறையும் கொணர்ந்து நிறுத்தப்பட்டிருப்பதையும் லூயீ எண்ணியெண்ணி மனம் புண்ணாயினார். ஷஜருத்துர் வேறொரு பெண்ணாயிருந்தாலும், அந்த பிரெஞ்சு மன்னர் ஒரு வேளை அவ்வளவு கவலைப்பட்டிருக்கமாட்டார். ஆனால், எந்தப் பெண் தாத்காலிக ஆட்சி புரிந்துகொண்டிருந்தபோது இவர் தமீதாமீது படையெடுத்தாரோ, எந்தப் பெண்ணைக் காஹிராவில் கைதியாகச் சிறை பிடிக்கலாமென்னும் கனவு கண்டு மத்தியதரைக் கடலைக் கடந்தாரோ — அதே பெண் பிள்ளை இதுபோது சிம்மாசனத்தின் மீது ராணியாகக் கம்பீரத்துடன் வீற்றிருக்கவும், இந்த லூயீ, கேவலம் ஒரு கைதியாக அவர் முன்னே கொண்டு போய் நிறுத்தப்படவும் நேர்ந்தனவேயென்று மனமிடிந்து, சிரங் குனிந்து, வாட்டமுற்று, நின்று கொண்டிருந்தார். வாஸ்தவத்திலேயே இப்படியெல்லாம் விஷயம் வந்து முடியுமென்பதை அவர் கொஞ்சமேனும் முற்கூட்டியே உணர்ந்திருப்பாராயின், இந்தச் சிலுவை யுத்தத்தையே கனவிலும் கருதியிருக்க மாட்டார். “கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே” என்னும் பழமொழிக்குத் தாம் இலக்கானதை நினைந்து நினைந்து பெரிதும் உருகினார். அல்லது, தமீதாவைக் கைப்பற்றிய அதே வேகத்தில் காஹிராமீது பாயலாமென்று லூயீ போதித்த புத்திமதிகளை மற்றத் தலைவர்கள் கேட்காமற் போனதாலல்லவோ இம்மாதிரியெல்லாம் விளைந்தது என்று கவலுற்றார். சென்று போனவற்றை நினைந்து என்ன பயன்? சென்றது சென்றதே!

சுல்தானா விடுத்த வினாவுக்கு லூயீ விடையிறுக்காததைக் கண்டு, அந்த மொழிப்பெயர்ப்பாளர் மீட்டும் அதே கேள்வியை இன்னொரு முறை விடுத்தார்.

“ஏ, சுல்தானா! நீங்களெல்லீரும் இந்தமாதிரி எங்களைச் சிறுகச் சிறுகச் சித்திரவதை புரிவதைவிட ஒரே நிமிஷத்தில் எங்களைக் கொன்றுவிட்டாலும் பாதகமில்லையென்றே நாங்கள் நினைக்கிறோம். நாங்கள் எங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் முன்னேயிருந்த சுல்தான் ஒரு கோடி பிராங்க் அபராதம் விதித்தார். என்னுடைய ராஜ்ஜிய முழுதையும் விற்றாலுங்கூட என்னால் சேகரிக்க முடியாத அத்துணை மாபெருந் தொகையை கேட்டால், நாங்கள் எப்படிக் கொடுக்க முடியும்? யுத்தம் தொடுத்தோம்; இலக்ஷக்கணக்கில் நஷ்டமடைந்தோம்; கைதிகளாய்ச் சிக்குண்டு உடல் நலிந்தோம்; உள்ளமும் நைந்தோம். பற்றாக்குறைக்கு இந்நாட்டு சுல்தான் எங்கள் கண்ணெதிரில் அநியாயமாய்க் கொலை புரியப்பட்டதைக் கண்டு மனம் இடிந்தோம். எங்களிடம் தாங்கள் இறுதியாக என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை இப்போது கூறிவிடுங்கள். இதுதான் என் கோரிக்கை.”

அதுகேட்டு, ஷஜருத்துர் அதிக ஆத்திரங் கொண்டார். எனினும், அதை அடக்கிக் கொண்டு, “ஏ, லூயீ! நீர் எமக்கும் எம்முடைய நாட்டுக்கும் விளைக்க நினைத்த கொடுமைகள் உம்மையே வாட்டி வதைக்கின்றனவென்றால், அவற்றுக்கு நாமா ஜவாப்தாரி? வினை விதைத்தீர்கள்; வினையை அறுக்கின்றீர்கள். என்றாலும், நேர்மையே உருவாயுள்ள இணையற்ற இஸ்லாம் மார்க்கத்தில் பிறந்துள்ள நாம் உம்மை எதற்காகவும் பழிவாங்க மனந் துணியவில்லை. அல்லது நீர் யுத்தந் தொடுத்தமையால் எமக்கும் எம்மைச் சார்ந்தவர்களுக்கும் விளைந்திருக்கும் கொடுமைகட்கெல்லாம் நாம் ஏற்ற முறையில் பழிவாங்கத் துணிவதென்றால், உம்மால் அதைச் சகிக்கவும் முடியாது; அல்லது அஃது எவ்வளவு கொடூரமாயிருக்குமென்பதை மனத்தால் கற்பனை செய்து பார்க்கவும் முடியாது என்று நாம் கூறுகிறோம்” என்று வெகு நிதானமாய்ப் பேசினார்.

அது கேட்டு, லூயீ மன்னர் விலவிலத்தார். சுல்தான் விதித்த அபராதத்தைவிட இன்னம் அதிகமாக இந்த சுல்தானா விதிப்பார் போலுமென்று அவர் திகிலுடன் எண்ணிக் கொண்டார். எனவே, குனிந்த தலையை நிமிர்த்தாமல், புதிய தண்டனையை எதிர்பார்த்திருந்தார்.

“ஏ, ரிதா பிரான்ஸ்! எமக்கு முன்னே ஆட்சி செலுத்திய சுல்தான் உமக்கு நியாயமான அபராதத்தையே விதித்திருக்கிறார். ஆனாலும், உம்மால் அவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்கச் சக்தியில்லையென்று நீர் கூறுவதால், அபராதத் தொகையைக் குறைக்க நாம் விழைகிறோம். அதையேனும் நீர் ஏற்றுக் கொள்வீரா?”

“எவ்வளவு குறைக்கப் போகிறீர்கள்?”

“விளைந்த கஷ்ட நஷ்டங்களுக்கு ஈடாக நாம் உமக்கு அபராதம் விதிக்க விரும்பவில்லை. ஆனால், ஓரளவுக்காவது நீர் கொடுக்கும் தண்டம் எம் நாட்டு மக்களுக்கு நஷ்ட ஈடாக உதவவேண்டுமே என்றுதான் எண்ணுகின்றோம். நாம் கோருகிற தொகை இன்னது என்பதைப் பின்னர்த் தெரிவிக்கிறோம். ஆனால், அதைவிட முக்கியமான விஷயம் முதலில் தீர்க்கப்பட வேண்டியிருக்கிறது.”

“அஃதென்ன விஷயம்?”

“ஆம் அது தமீதாவைப் பற்றியது. சென்ற பல ஆண்டுகளாகவே அந் நகர் படாத பாடுகளைப் பட்டு வருகிறது. நீர் கொடுக்கப் போகும் அபராதத்தைவிட, தமீதாவை எங்களிடம் சேர்ப்பித்து விட்டு, அந் நகரை இக்கணமே முற்றிலும் காலி செய்ய வேண்டுவதுதான் பிரதானமாகும். என்ன சொல்லுகிறீர்?”

“சுல்தானா! தமீதாவை தாங்கள் எடுத்துக் கொண்டு விடலாம்; நாங்களும் உடனே காலி செய்து விட்டு விடுகிறோம். எங்களுக்கு இதில் ஆக்ஷேபமொன்றும் இல்லை.”

“சரி, சந்தோஷம். அப்படியானால் நீர் நஷ்ட ஈடாகக் கொடுக்க வேண்டிய தொகை எங்கள் தங்க நாணயத்தில் எட்டிலக்ஷம் தீனார்* என்று நிர்ணயித்திருக்கிறோம். என்ன சொல்கிறீர்?”

முன்பு விதிக்கப் பட்டதைவிட அதிகமான தொகை விதிக்கப்படுமென்று இவ்வளவு நேரமும் அதிக திகிலுடன் எதிர்பார்த்த லூயீ, முன்னையை விட இப்போது மூன்றிலிரண்டு பங்கு தள்ளப்பட்டதைக் கேட்டு, அதிசயித்துப் போய்விட்டார். பிதாவையிழந்த புத்திரன் கேட்டதைவிட, கணவனைப் பறிகொடுத்த விதவை இவ்வளவு குறைத்துச் சொன்னது ஏன் ஆச்சரியத்தை உண்டுபண்ணாது?

“என்ன யோசிக்கிறீர்? நாம் இப்போது உமக்கு விதித்திருக்கும் தொகை மிகமிகக் குறைவானது; உமது சக்திக்கு உட்பட்டதே; மேலும் நியாயமானதே. எனவே, யாதொரு விதத் தடங்கலுமின்றி, இக்கணமே உமக்கு உற்றாராயிருப்பவருக்குச் செய்தியனுப்பி, அத்தொகையை இங்குக் கொணர்ந்து கொடுத்துவிட்டு, உம்மையும் உம்முடைய சேனாதிபதிகளையும் மீட்பித்துக் கொண்டு போகச் சொல்லும். நீர் இப்போதே விரும்பினாலும், எம்முடைய சேவகனை உமக்காக அமர்த்திக்கொடுக்கிறோம். அவன் மூலமாகவே நீர் செய்தியனுப்பலாம். என்ன, சம்மதந்தானே?”

“ஏ, சுல்தானா! தாங்கள் தயவுடன் குறைத்துச்சொன்ன தொகையைப்பற்றி யொன்றும் யான் சிந்திக்கவில்லை. ஆனால், எனக்கு நெருங்கிய பந்துக்களெல்லாரும் என்னுடனே யுத்தத்துக்குப் புறப்பட்டு வந்துவிட்டபடியால், நான் யாருக்குச் சொல்லியனுப்புவது? எவர் எனக்காகப் பணம் கொடுக்கப்போகிறார்?”என்று தழுதழுத்த குரலில் முறையிட்டார் லூயீ.

ஷஜருத்துர் அப்பால் சிறிது யோசித்தார்.

“ஏன்! உம்முடன் வந்தவர்களுள் பெரும்பாலோர் இன்னம் தமீதாவிலேயே தங்கியிருக்கிறார்களே! நாங்கள் ஒன்றும் தமீதாவைத் திருப்பித் தாக்கி உங்களவர்களை விரட்டி வெளியேற்றிவிடவில்லையே?”

“சுல்தானா! தாங்கள் கூறுவன முற்றும் உண்மையே! ஆனால், தமீதாவில் தங்கியருக்கிற என் நண்பர்கள் வெறும் ஓட்டாண்டிகளாகவல்லவோ இருக்கிறார்கள்? சூதுவிளையாடியே எல்லாவற்றையும் இழந்து, கப்பரையேந்தித் தெய்வமே என்று தெருவில் நிற்கிறார்கள். அவர்கள் எங்ஙனம் என்னை விடுவிக்கப் போகிறார்கள்? அல்லது எப்படி அந்தத் தொகையைக் கொண்டுவரப் போகிறார்கள்?”

“வேறென்ன செய்வது?”

“தாங்களோ, பரம தயாளகுணம் படைத்துள்ள பெரிய சுல்தானாவாக மிளிர்கின்றீர்கள்! யானோ, விலங்கிடப்பட்ட சாதாரணக் கைதியாகத் தங்கள் முன்பினில் நிற்கின்றேன். எவ்வளவோ விட்டுக்கொடுக்கும் பரம தயாளுவான தாங்கள் என்னை முற்றிலும் மன்னித்துவிட்டால், தேவனும் தங்களை மன்னிப்பார். ஏழையாய்ப் போய்விட்ட யான் எப்படித்தான் தப்புவது, அரசி! யானோ தெரியாத்தனத்தாலும் பேராசையாலும் நாடு பிடிக்க வேண்டுமென்னும் அக்கிரம ஆசையாலும் இஸ்லாத்தைத் தீர்த்துக் கட்ட வேண்டுமென்னும் தீய எண்ணத்தாலும் இந்தப் பெருஞ் சங்கடத்துள் சிக்கி, எல்லாவற்றையும் அடியுடனே இழந்து, போதிய அளவுக்கும் மேலாகவெல்லாம் புத்திபோதிக்கப் பெற்று, இங்கே தனித்து நின்று தவிக்கின்றேன். என்னைத் தாங்கள் இன்னம் கசக்கினால், என்னால் என்ன செய்ய முடியும்? ஏ, முஸ்லிம் மாது சிரோமணி! நான் மிகவும் கேட்டுக் கொள்ளுகிறேன்: என்னை இம்முறை மன்னித்து விட்டுவிடுங்கள். தேவன் துனை புரிவார்!”

“ஏ, பேராசை பிடித்த பிரெஞ்சு ராஜாவே! நீர் மட்டும் நஷ்டமடையவில்லை; சிலுவை யுத்தம் என்று பெயர் வைத்துக் கொண்டு, அநியாயமாகவும் அக்கிரமமாகவும் மூர்க்கத்தனமாகவும் முரட்டுத்தனமாகவும் அநாகரிகமாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் இதுவரை ஒரு முறை, இரு முறையல்ல, எட்டு முறை ஐரோப்பாவிலிருந்து வெறிபிடித்தவர்களான நீரும் உம்முடைய முன்னோர்களும் படையெடுத்து வந்திருக்கிறீர்கள். அப்போதெல்லாம் முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் யூதர்களும் மஜூஸிகளும் உங்கள் மிருகத்தனமான படையெடுப்புகளுக்கு எவ்வெவ்வகையில் அநியாயமாய்ப் பலியாகி, உயிரிலும் பொருளிலும், உணவிலும் உடையிலும் சொல்லொணாக் கஷ்ட நஷ்டமடைந்திருக்கறார்கள், தெரியுமா? தாக்கப்பட்டவர் அடைந்த நஷ்டமிருக்கட்டும்; தாக்கிய நீங்களே எவ்வளவு தேவ தண்டனைக்கு ஆளாகியிருக்கிறீர்கள், தெரியுமா? சென்ற முறை இதே காஹிரா மீது குறி பார்த்துப் பாய்ந்த கர்தினால் பெலேஜியஸ் தலைமையில் வந்த உம்முடைய முன்னோர்கள் எப்படிப்பட்ட கடுவெள்ளத்துக்கு இரையானார்கள் என்பதை நீர் கேள்விப்பட்டிருக்கிறீரா?

இத் தன்மைத்தாய தேவ தண்டனைக்குப் பலியாகியும், நசாராக்களான உங்களுக்குப் புத்தி வந்ததா? அல்லது பேராசைதான் குறைந்ததா?

“இத் தன்மைத்தாய தேவ தண்டனைக்குப் பலியாகியும், நசாராக்களான உங்களுக்குப் புத்தி வந்ததா? அல்லது பேராசைதான் குறைந்ததா? இறைவன் உங்களையெல்லாம் தண்டிக்கத் தண்டிக்க, ஒவ்வொரு முறையும் சென்ற முறையைவிட அதிக மூர்க்கத்தனத்துடனேயே படையெடுத்து வருகிறீர்கள். அதிலும் நீர் இப்போது படைதிரட்டி வந்தது எவ்வளவு மோசமான சந்தர்ப்பத்திலே தெரியுமா? இளம் பெண்ணாகிய நாம் தாத்காலிக ஆட்சி புரிந்துகொண்டிருந்த வேளையில் எம்மைக் கைது செய்து நாட்டைக் கொள்ளையடிக்கவென்று நீர் திட்டமிட்டு இங்கு வந்தீர். நீரொன்று நினைக்க, தேவன் வேறொன்று நினைத்து விட்டான். ஆப்பைப் பிடுங்கிய குரங்கே போல் இப்போது அவதிப்படுகின்றீர். இதற்கு நாமென்ன செய்ய முடியும்! தற்சமயம் நிகழ்ந்திருக்கும் குற்றம் முதற்குற்றமாயிருந்தால், அல்லது இரண்டாவது குற்றமாயிருந்தால், அல்லது மூன்றாவது நான்காவது குற்றமாயிருந்தாலாவது நாம் வெகுதாராளமாகவே மன்னிப்போம்; எமக்கு முன்பிருந்த ஸலாஹுத்தீன் போன்ற ஐயூபிகள் அப்படியே மன்னித்தும் இருக்கிறார்கள். ஆனால், எட்டாவது முறையாக நீர் இந்தக் கேடு காலத்தையெல்லாம் இழைத்திருக்க, எந்த முகத்தை வைத்துக்கொண்டு நாம் இன்னமும் விட்டுக் கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றீர்? உங்கள் பைபிளின் பழைய ஏற்பாட்டிலே இம்மாதிரி குற்றமிழைப்பவர்களுக்கு எத்தன்மைத் தாய தண்டனைகள் வழங்கப்பட வேண்டுமென்று வரையப்பட்டிருக்கிறது, தெரியுமா?”

லூயீ பதிலொன்றும் பேசவில்லை. ஷஜருத்துர்ருக்கோ ஆத்திரம் அதிகரித்தது. கண்களில் கோபக் கனல் கொழுந்து விட்டெறிய மேலும் கூறினார்:-

“ஏ, கிறிஸ்தவ மன்னரே! உமக்குத் தெரியாதென்றால் நான் சொல்லுகிறேன், கேளும். உங்கள் பைபிள் பழைய ஏற்பாட்டிலே, உபாகமம் என்னும் அத்தியாயத்திலே எழுதியிருப்பதைக் கூறுகிறேன், நன்றாய்க் கவனியும்:-

‘நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம் பண்ண நெருங்கும் போது அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய். அவர்கள், உனக்குச் சமாதான உத்தரவு கொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உனக்குப் பகுதி கட்டுகிறவர்களாகி, உனக்கு ஊழியம் செய்யக் கடவார்கள். அவர்கள் உன்னோடே யுத்தம் பண்ணுவார்களானால், நீ அதை முற்றிக்கை போட்டு, உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக் கொடுக்கும் போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக் கருக்கினால் வெட்டி, ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருக ஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப் பொருளை அநுபவிப்பாயாக!’

“ஏ, லூயீ! இந்த வேத வாக்குப்படியே நீங்கள் தலைமுறை தலைமுறையாகச் செயது வருகிறீர்கள். யூதர்கள், கிறஸ்தவர்கள் கைவயம் இருந்ததைவிட இப்பால் எங்கள் முஸ்லிம்களிடம் மிக்க நல்ல முறையிலே இருந்துவரும் ஜெரூஸலத்தை அனாவசியமாய்க் கைப்பற்றப் போவதாகக் கூறிக்கொண்டு, புற்றீசல் போல ஐரோப்பாவிலிருந்து படை திரட்டிக்கொண்டு, வெறிபிடித்து ஓடி வருகிறீர்கள். தமீதா போன்ற ஒரு பாவமுமறயாத பட்டணங்களை முற்றுகையிடுகின்றீர்கள்; கொள்ளையடிக்கின்றீர்கள்; மக்களை வெட்டி வீழ்த்துகின்றீர்கள்; பிறகு உங்கள் கொள்ளைப் பொருள்களை உங்கள் மனம்போன போக்கிலெல்லாம் அனுபவிக்கிறீர்கள். நாம் மட்டும் உங்கள் பைபிளில் சொல்லியிருக்கிற அம்மாதிரி தண்டனைகளை உங்கள் மீது பிரயோகிப்போமேயானால், அஃது எப்படிப்பட்டதாய் இருக்கும் என்பதை நீர் உணர்வீரா?

“ஏ, லூயீ! இப்போதும் உம்மை நாம் மன்னிப்பதனால், நீரோ அல்லது நுமக்குப் பின் வரும் சந்ததியாரோ இந்த மிஸ்ரின் சுல்தானா காட்டிய கருணைக்குக் கடுகளவேனும் நன்றி பாராட்டுவீர்களென்று நாம் நம்பத் தயாராயில்லை. முன்னம் சுல்தான் ஸலாஹுத்தீனும் சுல்தான் காமிலும் மற்ற ஐயூபி சுல்தான்களும் நன்றி கெட்ட துரோகிகளான உங்களுக்குத் தயா விஷயமாய்க் காட்டி வந்த இஸ்லாமிய கருணைக்கும் மன்னிப்புக்குமெல்லாம் நாங்கள் இப்போது படுகிற பாடுகள் போதும். அவர்களெல்லாரும் இழைத்த தவறுகளை நாமும் இன்று இழைக்க வேண்டுமோ? நாளையொரு காலத்தில் நீங்கள் இந்தத் தோற்றுப்போன யுத்தத்துக்காக ஆயிரம் மடங்கு கொடுமையுடனே மீண்டும் பழிவாங்க மாட்டீர்களென்பதற்கு என்ன அத்தாட்சியை நீர் காட்ட முடியும்? ஆறாவது யத்தத்தில் ஆற்றோடு அடித்துக் கொண்டு போனதற்காக இப்போது மறுபடியும் படையெடுத்து வந்த கொடியவர்களாகிய நீங்கள், தற்சமயம் பெற்றுக்கொண்ட பேரவமானத்துக்கெல்லாம் ஈடு செய்து கொள்வதற்காக அடுத்த முறையும் எங்களைக் கொன்றொழிக்கச் சதி செய்து, இனியொரு யுத்தத்தையும் நிகழ்த்த மாட்டீர்களென்பதற்கு எவரே உறுதி கூறமுடியம்?

“லூயீ! முடியாது, முடியாது, முடியாது! இப்போதும் உங்களையெல்லாம் மன்னித்துச் சும்மா விட்டுவிடுவதென்பது அறவே முடியாது; நாம் சொன்னது சொன்னதுதான். நீர் எப்பாடு பட்டாவது அந்தக் குறைந்த தொகையாகிய எட்டிலக்ஷ­ம் தீனார்களை எண்ணிக் கொடுத்துவிட்டுத்தான் போகவேண்டும். உம்மால் இந்தச் சிறிய தொகையைக் கூடக் கொடுக்கச் சக்தியில்லையென்று நீர் கூறுவதை நாம் ஏற்கத் தயாராயில்லை. உம்முடைய விடுதலையை நீர் விழைவீரேயானால், எப்படியாவது கொடுத்து விடுவீர். எனவே, நும்மை நீர் விடுவித்துக் கொள்வதும், இங்கேயே நீர் கைதியாக அடைபட்டுக் கிடப்பதும் உம்முடைய விருப்பத்தைப் பொறுத்தனவாகும். எம்மைக் குறை கூறிப் பயனில்லை. ஆனால், பைபிளில் சொல்லியுள்ள தண்டனைகளை விதிக்காமல், எமது திருமறையில் கட்டளையிடப்பட்டுள்ள கடமைகளுக்கிணங்கவே நாம் நுமக்குத் தயாளத்தைக் காண்பிப்பதற்காக நீர் நும்முடைய கர்த்தராகிய தேவனுக்கு நன்றி செலுத்தக் கட்டுப்பட்டிருக்கிறீர்!”

சாதாரணப் பெண்மணியென்று லூயீ இதுவரை எண்ணியிருந்த சுல்தானா ஷஜருத்துர் இப்படி எதிர்மத வேதஞான சிகாமணியாகவும் விளங்கியிருப்பதைக் கண்டு, திடுக்குற்றார். சுல்தானா பேசுவதில் தவறேதும் இருத்தாலல்லவோ மறுத்துப் பேச முடியும்? எனவே, இன்னதுதான் செய்வதென்று ஒன்றும் தோன்றாமல் வாளா நின்றார். அச்சமயத்தில் ருக்னுத்தீனின் காதில் ஓர் ஒற்றன் ஏதோ இரகசியமாக முணுமுணுத்தான். பிறகு அச் சேணாதிபதி தந் தலையை ஆட்டிக்கொண்டே ஷஜருத்துர்ரை நெருங்கி, அவர் காதிலே ஊதினார். உடனே சுல்தானா நிமிர்ந்தமர்நதார்.

“ஏ, ரிதா பிரான்ஸ்! தமீதாவில் உமது உற்றார் உறவினர் ஒருவருமில்லையா?” என்று சுல்தானா கடுமையாய்க் கடாவினார்.

“ஏ, அரசி! இருக்கிறார்கள். ஆனால், இருந்து என்ன பயன்? அவர்களிடம், தாங்கள் கேட்கிற இம்மாபெருந் தொகை ஏது?”
“ஏன்? அவர்கள் கையில் இல்லாவிட்டாலும் வசூலித்துக் கொடுக்க முடியாதா?”

“எனக்காக அவ்வளவு பொறுப்பேற்றுக் கொள்பவர் எவரிருக்கிறார்?கைதியாய்ப் பிடிபட்டிருக்கும் எனக்கு ஈட்டுத்தொகை கொடுக்க எங்கள் போப்பாண்டவர் ஒருவரால்தான் முடியும். ஆனால், அவர் உதவ மாட்டார்!”

“உங்கள் போப்பாண்டவர்களின் குணத்தை நாம் நன்கறிவோம். அவரைப்பற்றி நமக்குக் கவலையில்லை ஆனால், தமீதாவிலிருக்கிற உம்முடைய மனைவி கூடவா உமது விடுதலைக்காகப் பாடுபட மாட்டாள்?”

குனிந்த தலையுடன் நின்று கொண்டிருந்த லூயீ, ஷஜருத்துர் கூறிய இவ்விறுதி வாக்கியத்தைச் செவியேற்றதும், கூரான ஈட்டியால் குத்தப்பட்டவரே போல் டக்கென்று நிமிர்ந்து பார்த்தார். என்னெனின், தமீதா மீது படையெடுத்து வந்த போது, லூயீ தம்முடைய மனைவியை வேறெவர்க்கும் தெரியாமல் இரகசியமாக உடன் கொண்டு வந்திருந்தார். ஒருவித எதிர்ப்புமில்லாமல் தமீதா லூயீயின் கைக்குள் சிக்கியதும் அங்குள்ள மஸ்ஜிதொன்றைத் தம்முடைய பிரத்தியேக இடமாக மாற்றிக்கொண்டு, அங்கேயே தம் மனைவியையும் இருக்கச் செய்தார். இந்த இரகசியம் சுல்தானாவுக்கு இப்போது எப்படி எட்டியிருக்கக் கூடுமென்பது தெரியாமல் திகைத்தார். உண்மை வெளிப்பட்டுவிட்ட பின்னர் எப்படி மறைப்பது? திருடிவிட்டுக் கையுங்களவுமாய் மாட்டிக்கொண்ட கள்வனைப் போலே திருதிரு வென்று பிரெஞ்சு மன்னர் விழித்தார்.

ஷஜருத்துர் விட்டுக்கொடுக்கவில்லை. “ஏன்! உம்முடைய மனைவிக்கு இபபோதே செய்தி சொல்லியனுப்பும். உம்மை எப்படியாவது மீட்பிக்க வேண்டுமென்று அவள் முயற்சி செய்து, இந்த அபராதத் தொகையைச் சேகரித்து விடுவாள்,”என்று சுல்தானா கூறினார்.

லூயீ மன்னரின் முகத்தில் அசடு வழிந்தது! வேறு வழியின்றித் தலையசைத்தார். அக்கணமே அரசவையின் இலேகன் வரவழைக்கப்பட்டு, இப்புதிய ஷரத்துகள் அடங்கிய சமாதான ஒப்பந்தம் தீட்டப்பட்டது. ஒருமுறைக் கிருமுறையாக அவ்வொப்பந்தம் லூயீ மன்னருக்கு வாசித்துக் காட்டப்பட்டதுடன், அஃது அப்படியே பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு விட்டது. அந்த பிரெஞ்சு மொழிபெயர்ப்பு இரு பிரதிகளாக வரையப்பட்டன. அவற்றிலே நடுங்குகிற கையுடன் லூயீ கையொப்பமிட்டார். அதில் ஒரு நகல் அவரிடமே சேர்ப்பிக்கப் பட்டது.

இவ்வளவுடனே சுல்தானா ஷஜருத்துர் கூட்டிய முதல் அரச தர்பார் கலைக்கப்பட்டது.


* தீனார் என்னும் தங்க நாணயம் நம் நாணயத்தில் உத்தேசம் ரூ.2.50 மதிப்புள்ளது. எனவே, லூயீ கொடுக்க வேண்டிய தொகை சுமார் இருபதி லட்சம் ரூபாய் என்று ஆகிறது. முன்னம் சுல்தான் முஅல்லம் விதித்த அபராதத்தைவிட இது சுமார் மூன்றிலொன்றே ஆகிறது. ஷஜருத்துர் இப்படிக் குறைத்துக் கூறியது அவருடைய தயாளத்தையே காட்டுகிறது. “எதிரிகளை நேசிப்பது” என்பது இஸ்லாத்திலேதான் இருந்துவருகிறது.


தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>

Related Articles

Leave a Comment