சுல்தானா ஷஜருத்துர் அன்று தம்முடைய அந்தரங்கத் தோழிகளைப் பறிகொடுத்ததிலிருந்து பதஷ்டமுற்று விட்டதுடனே, ஏதோ கேடுகாலந்தான் சம்பவிக்கப் போகிறதென்பதைப் பரபரப்புடனே உணர்ந்துகொண்டார்.

அரண்மனைச் சேவகர்களும் அடிமைகளும் ஷஜருத்துர்ருக்கு அடிபணிந்து நிற்பதில் ஒன்றும் குறைவுபட்டு விடவில்லை எனினும், சுல்தானாவுக்குத் தம்மையறியாமலே ஒரு மாபெரிய பலஹீனமும் வருணிக்க முடியாத மகா அதைரியமும் பிறக்க அரம்பித்துவிட்டன. மேலும். காணமற்போன தோழிகள் அகப்படாமற் போகப் போக, ஷஜருத்துர்ருக்கு இடுப்பு மிகவும் முறிந்து கொண்டேயிருந்தது.

முஈஜுத்தீன் படுகொலை புரியப்பட்டு ஐந்து நாட்கள் கழியுமுன்னே ஷஜருத்துர் மேனி மெலிந்துவிட்டார். வேளாவேளைக்கு உணவும் உட்செல்வதில்லை; இரவிலே உறக்கமும் வருவதில்லை. கிலியும் பயமும் ஏக்கமும் துக்கமுமே அவரை அல்லுபகலாக அலட்டிக்கொண்டிருந்தன. தலைக்குமேலே கூரிள வாளொன்று தொங்குவது போன்றும் முதுகுப்புறத்தில் பன்னூற்றுக் கணக்கான பகைவர்கள் கட்டாரிகளை நீட்டிப் பிடித்துக்கொண்டிருப்பது போன்றும் பயங்கர உணர்ச்சியொன்று உள்ளத்தைச் சதா உறுத்திக்கொண்டிருந்தது. அயர்ந்த வேளையில் ஏதாவது நினைப்பு வந்துவிட்டால், அந்த ராணியாரின் உடல் முழுதும் ஒரு பெரிய குலுக்குக் குலுக்கும். அச்சமென்றால், நாம் வேறு இணை காண்பிக்க முடியாத பேரச்சமே ஷஜருத்துர்ரை எப்போழுதுமே – அல்லும் பகலும் அனவரதமும், தூக்கத்திலும் வதை புரிந்துகொண்டிருந்தது. உள்ளத்தைத் திறந்து உள்ளதைச் சொல்லி ஒரு மூச்சு அழுது கொள்வதற்கும் ஆள்துணையில்லை. எனவே, மனச்சுமை பொறுக்க முடியாத அளவுக்கு முற்றிவந்தவுடனே ஜாஹிர் ருக்னுத்தீனைக் கூப்பிட்டனுப்பினார். அந்த பஹ்ரீ தலைவர் ஓடோடி வந்து சுல்தானா முன்னர் நின்றார்.

“யா ஸாஹிபத்தல் ஜலாலத்தில் மலிக்கா! தாங்கள் ஏன் இப்படி வாடி வதங்கிப்போயிருக்கிறீர்கள்? உடம்புக்கு என்ன?” என்று ஏக்கத்துடன் துடிதுடித்துக் கேட்டார்.

“ஜாஹிர்! எனக்கு இறுதிக்காலம் வந்துவிட்டதென்றே தெரிகிறது. இறைவன் என்னைக் கைவிட்டு விட்டான்!…”

“என்ன! தாங்கள் சிந்தை குலைந்துவிட வில்லையே! ஏன் இப்படியெல்லாம் பிரலாபிக்கின்றீர்கள்?”

ஷஜருத்துர் சிரித்தார். “ஜாஹிர்! எனக்குப் பைத்தியம் பிடிக்கவில்லை. ஆனால், கூடிய சீக்கிரம் அது பிடித்தாலும் பிடித்தேவிடும்… நான் இதுவரை எந்தப் படவில் சஞ்சரித்தேனோ, அந்தப் படவு இப்பொழுது சாய்ந்து கவிழ்ந்துகொண்டிருக்கிறது. எந்தக் கடலில் நான் மிதந்து கொண்டிருந்தேனோ, அநதக் கடல் கடுஞ் சூறாவளியில் சிக்கிச் சுழன்று கொண்டிருக்கிறது. எந்த ஏணியில் நான் ஏறி உச்சத்தை எட்டினேனோ, அந்த ஏணியே இப்பொழுது திடீரென்று இப்புறமாகச் சரிந்து கொண்டிருக்கிறது. ஏ, ஜாஹிர்! யான் மாபெரிய பாவியாகி விட்டேன். என் சுயநய மனமே என்னைச் சுடுகிறது. என் கணவர் இருவரின் ஆவிகளும் என் துயர்மீது அடைகாக்கின்றன. மாட்சிமை தங்கிய சுல்தானா ஷஜருத்துர்ரின் இணையற்ற பெருஞ்சக்தி இப்பொழுது சூறையிற் சிக்கிய பஞ்செனப் பறந்து கொண்டிருக்கிறது…”

“யா மலிக்கா! இஃதென்ன பேரதிசயமா யிருக்கிறதே! தங்களுடைய பலமும் சக்தியும், வல்லமையும் வீரமும் நாளுக்கு நாள் பன்மடங்காகப் பெருகி வருவதை நாங்கள் எங்கள் கண்ணாரக் கண்டுவருகிறோம். தாங்கள் ஏன் இப்படி ஏதேதோ விபரீதமாய்ப் பேசுகிறீர்கள்? இப்படியெல்லாம் தாங்கள் திடுமெனப் பேசுவதற்கு என்ன அசம்பவம் நேர்ந்துவிட்டது, மலிக்கா!”

“அசம்பவமா? – ஆம்! சுல்தானா ஷஜருத்துர்ரின் அந்தரங்கத் தோழிகள் மாயமாய் மறைந்து பறந்து விட்டார்களென்றால், அதிலும் அப்படி மறைந்தவர்கள் போன இடத்தைச் சென்ற நான்கு நாட்களாகக் கண்டுபிடிக்க இந்த சுல்தானாவின் சிப்பந்திகளால் முடியவில்லை என்றால்,… ”

“யா ஸாஹிபா! தங்கள் அந்தரங்கத் தோழியரைக் காண வில்லையா? – என்ன ஆச்சரயம்!”

“அந்தரங்கத் தோழியர் மட்டுமல்ல; அப்துல்லாஹ்வைக் கூடக் காணோம். முஈஜுத்தீன்மீது அக்கறை கொண்டவர்கள் மட்டுமே இப்படி என் அந்தரங்கத் தோழிகளையும் அப்துல்லாஹ்வையும் இந்த அந்தப்புரத்திலிருந்து அடித்துக்கொண்டு போயிருக்கவேண்டும்! எல்லாம் என்னுடைய கேடுகாலத்தின் அறிகுறியே! என்னைக் கவிழ்க்கச் சதிசெய்பவர்கள் என்னைச் சுற்றிலுமே இருக்கிறார்களென்பதை நான் நன்றாய் அறிவேன். என் வார்த்தைகள் செல்லாக் காசாகிவிட்டபடியால்தான் அத் துரோகிகளை என் அந்தரங்க சிப்பந்திகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. பழைய காலமாயிருந்து, என் செல்வாக்கும் பங்கமடையாமல் இருந்திருப்பின், என் கன்னியாந்தப்புரத் தோழியர் எங்ஙனம் மாயமாய் மறைந்திருக்க முடியும்? கிழப் புலிக்குப் பல் கொட்டிவிட்டது; நகமும் கூர்மை மழுங்கிவிட்டது; சக்தியும் மூப்படைந்துவிட்டது என்பதை என் எதிரிகள் நன்றாய்த் தெரிந்துகொண்டு விட்டார்கள்… ஜாஹிர்! என்னுடைய அந்திய காலம் மிகவும் முடுகிவிட்டது! நிச்சயமாய் யான் என் மரணத் தூதுவரைச் சந்தித்துக்கொண்டிருக்கிறேன்!” என்று பரிதாபம் மலிந்த தொனியிலே பேசி, அவலக் கண்ணீர் அதிகம் வடித்தார், எல்லாம் வல்ல ஏகபோக எகிப்தின் சுல்தானா திலகமாய் விளங்கிய ஷஜருத்துர் மகாராணியார்!

“யா மலிக்காத்தல் முஸ்லிமீன்! எனக்கொன்றும் புரியவில்லையே! தாங்கள் இவ்வளவு தூரத்துக்கு அதிருப்தியுறுவதற்கோ அச்சமடைவதற்கோ என்ன நேரிட்டுவிட்டது? தங்கள் தோழிகள் இருக்கிற இடத்தை நான் நொடியிற் கண்டுபிடித்து விடுகிறேன்! சர்வ வல்லமை பொருந்திய சுல்தானா, ஜலாலா, மலிக்கா, ஸாஹிபாவாகிய தாங்களும் தங்களுக்கு மெய்காப்பாளரான பஹ்ரீகளாகிய நாங்களும் உயிருடனிருக்கு மட்டும், எந்தச் சக்தி நம்மைக் கவிழ்க்க முடியும்?”

“இல்லை, இல்லை! ஜாஹிர்! எனதுள்ளம் சொல்லமுடியாத சஞ்சலத்திலே கிடந்துழல்கிறது. நான் என்னுடைய வாழ்க்கையின் முடிவை எட்டிக்கொண்டிருப்பதாக என் மனச்சாக்ஷியே உறுத்திக்கொண்டிருக்கிறது. என்னை எல்லாரும் வெறுக்கிறார்களென்று என் மனமே சாக்ஷி சொல்கிறது. நான் எவ்வளவு நிதானமாகவும் படிப்படியாகவும் என் வாழ்க்கையின் வெற்றிச் சிகரத்தை எட்டிப் பிடித்தேனோ, அவ்வளவு துரிதமாகவும் தாறுமாறாகவும் நான் என் கேடுகாலமென்னும் பாதாளப் படுகுழிக்குள்ளே ஈர்க்கப்படுகிறேன் என்பதை நானே உணருகிறேன். முஈஜுத்தீனை விலக்கிவிட்டால் முழுமனத் திருப்தியுடன் நிம்மதியாக நாடாளலாமென்று நான் கண்ட கனவெல்லாம் வீண் பகற் கனவாகி விட்டன. நியதிக்கு மாறாக நான் அவரைக் கொல்லச் சதி செய்தது என் கழுத்துக்கே சுருக்காகப்போய் முடிந்துவிட்டிருக்கிறது. ஜாஹிர்! பிரயோஜனமில்லை. உலகத்திலுள்ள சகல சக்தியும் ஒன்று சேர்ந்து என்னைத் தூக்கிப் பிடித்தாலும், நான் என் படுவீழ்ச்சியிலிருந்து சற்றுமே தப்பிக்கொள்ள முடியாதுபோலிருக்கிறது! என் மனோதிடம் என்னைக் கைகழுவி விட்டுவிட்டது.”

“யா சுல்தானா! சென்ற பத்து வருடங்களுக்குமுன் அகில உலகையும் திடுக்கிடச் செய்த தங்கள் ஈடிணையற்ற மனோதிடம் தங்களை எங்ஙனம் இதுகாலை விட்டோடியிருக்க முடியும்? தாங்களேன் இப்படிச் சோர்வடைகிறீர்கள்? தங்கள் வாழ்க்கையில் அந்த எட்டாவது சிலுவை யுத்தமும் ஸாலிஹின் அகால மரணமும் உண்டுபண்ணிய மகத்ததான கடுஞ் சோதனையின் போதெல்லாம் அதனை மிகத் திரணமாய் எண்ணி, அதில் பெரும் வெற்றி பெற்ற தாங்கள், இப்பொழுது எதற்காக வீணே அதைரியமடைய வேண்டும்? தங்கள் உயிருக்கு ஊறு விளைக்க நினைத்த மாபெருந் துரோகிக்கு ஏற்ற தண்டனையைத் தானே தாங்கள் விதித்தீர்கள்? ஸாஹிபா! மனவொருமையுடனே சிந்தனா சக்தியைச் சிறிது கட்டுப்படுத்திக்கொண்டு, இரண்டு நாட்களுக்குப் பூரண ஓய்வுடன் படுத்துக்கிடப்பீர்களானால், எல்லாம் சரியாகிவிடும். தாங்கள் வீணே மனத்தைக் குழப்பிக் கொள்ள வேண்டாமென்றுதான் மீண்டும் மீண்டும் நான் கேட்டுக் கொள்ளுகிறேன். இந்த மிஸ்ர் ராஜ்யம் தங்களுடைய நீடித்த செங்கோலாட்சியின் கீழே இன்னம் என்னென்னவோ நன்மைகளையெல்லாம் பெற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது. நாங்கள் எல்லாரும் சேர்ந்து செய்த நன்மையாலேதான் தங்களை எங்கள் சுல்தானாவாகப் பெற்று மகிழ்ந்திருக்கிறோம். இப்பொழுது தாங்கள் ஏன் அகாரணமாய் அதைரியமுற வேண்டுமோ? முதலில் தூரான்ஷாவையும் பிறகு மலிக்குல் அஷ்ரபையும் இறுதியாக முஈஜுத்தீனையும் ஒழிப்பதற்குத் துணைபுரிந்த நாங்கள் தங்களுக்காகவேயன்றி, வேறு யாருக்காகத் தியாகம் புரிந்தோம்? யா மலிக்கா! என்னைப் பாருங்களே. அல்லாஹ்வின் உதவிகொண்டு…”

“ஜாஹிர்! பயனில்லை. என் நெஞ்சில் பளு ஏறிக்கொண்டிருக்கிறது. நான் இனியும் சுல்தானாவாயிருப்பதற்கு லாயிக்குப் பெற்றில்லையனெ்று நானே உணர்கிறேன்…”

“யா மலிக்கா! இல்லை, இல்லை! வீண் மனப் பிராந்தியே. இந்த மிஸ்ர் தங்களுக்காகவே இருக்கிறது; தாங்கள் இந்த மிஸ்ருக்காகவே இருக்கிறீர்கள்; இறுதிவரை தாங்கள் தாம் சுல்தானாவாக இருக்கப் போகிறீர்கள்…”

“இல்லை! வீண்கனவு காண்பதில் பயனில்லை, ஜாஹிர்! என் நெஞ்சு தானே துடிக்கிறது!” என்று மார்பையழுத்திக் கொண்டு, உடல் குன்றினார் ஷஜருத்துர். தலை தொங்கி விட்டது.

ஜாஹிர் ருக்னுத்தீன் சுல்தானாவைப் பரிதாபத்துடனும் பெருந் துயரத்துடனும் பீதியுடனும் கூர்ந்து நோக்கிக்கொண்டிருக்கும் பொழுதே, அரண்மனச் சபாமண்டபத்தில் திடீரென்று பேரிரைச்சல் கேட்டது. வேகமாக அங்குமிங்கும் அலைந்தோடுவோரின் காலடிச் சப்தமும் குழப்பதால் ஏற்படுகிற பெருங் கூக்குரலோசையும் அலங்கோலமான அமளிப் பேரொலிகளும் கேட்டன. ருக்னுத்தீன் ஒன்றுந் தோன்றாமல், உடனே அங்கிருந்து இரண்டே பாய்ச்சலில் வெளியேறி ஓடினார். சுலல்தானா ஷஜருத்துர்ரோ, மிரளமிரள விழித்துக்கொண்டு, பலஹீனமான தமது மேனியை மெல்லத் தூக்கிய வண்ணம் இரண்டடி எடுத்து வைத்தார். கால் தள்ளாடியபடியால், மேற்கொண்டு நடக்கமுடியாமல், அங்கே கிடந்த மரவணைப் பீடத்தின்மீது மல்லாந்து வீழ்ந்தார்.

அரண்மனையின் வெளி மண்டபத்திலே, அந்த ஒட்டுவினை மாடத்திலே ஜேஜே என்று ஜனத்திரள் குழுமி நின்றுகொண்டிருந்தது. முஈஜுத்தீனின் மாஜீ மனைவி மைமூனா அரசியே போல், உடையுடுத்தி, வெகு கம்பீரமாக நின்று கொண்டிருந்தாள். அவளுடைய வலக்கரத்தைப் பற்றியவண்ணம் இள வாலிபன் நூருத்தீன் அலீ கண்கவரும் கவர்ச்சிமிக்க ஆடையலங்காரத்துடனும் சிறிய தலைப்பாகையுடனும் பளபளவென்று மின்னிக்கொண்டிருந்தான். சகல புர்ஜீ மம்லூக்குகளும், காஹிராவின் பிரமுகர்கள் பலரும் ஏராளமான ஜனத்திரளும், “மைமூனா வாழ்க! நூருத்தீனுக்கு ஜேய்! ஷஜருத்துர் வீழ்க! கொடுங்கோன்மை ஒழிக!” என்று கத்திக்கொண்டிருந்தனர். சுல்தானாவின் ஹல்காவைச் சார்ந்த பஹ்ரீகள் சற்றுமே எதிர்பாராத வேளையில் திடுதிடுவென்று பெருத்த ஜனத்திரளும் புர்ஜீ மம்லூக்குகளும் மேல்விழுந்துகொண்டு பாய்ந்ததைக்கண்டு, நிலைகுலைந்தார்கள். என்ன நடந்ததென்பதை அவர்கள் உணருமுன்னரே புர்ஜீகள் அவர்கள் மீது பாய்ந்து வீழ்ந்து, அந்த ஸ்தானத்தில் நின்றுகொண்டார்கள் எல்லா வேலைகளும் கண்மூடிக் கண்திறக்கிற நேரத்தில் மின்வெட்டு வேகத்திலே நடந்து முடிந்துவிட்டன. கிழவர் அபுல் ஹஸன் அதிக சாதுரியமாகவும் வெகு சாமர்த்தியமாகவும். மிக்க ஒழுங்குடனே யாவற்றையும் நிர்வகித்தபடியால், ஒரு துளி உதிரமும் சிந்தப்படவில்லை. வீண் கைச்சண்டையும் மூளவில்லை. பிளந்த வாயை மூடுமுன்னே, அதிர்ச்சியைப் பெற்றுக்கொண்டவர்கள் திருதிருவென்று விழிக்கிற நேரத்திலேயே எல்லாம் திட்டப்படி நடந்தேறின. சுல்தானாவின் அங்கக் காவலர்களும் பஹ்ரீகளும் என்ன நடந்தது, என்ன செய்ய வேண்டும், எவ்வாறு ஒழுக வேண்டும் என்பதைச் சிந்திக்கக்கூட இயலாமற்போய், நிலைக்குத்தி நின்றுவிட்டார்கள்.

பெரும் புரட்சிக் கலகத்தை இவ்வளவு இலேசாகவும், எளிதாகவும், அஹிம்ஸா முறைப்படியும் சட்டென வெற்றிகரமாகவும் நடாத்தி முடிக்க முடியுமா? என்று நீங்கள் அதிசயிக்கலாம். அனால், உண்மை இதுதான்: அபுல் ஹஸன் காஹிராவாசி ஒவ்வொருவரையும் நெருங்கி நெருங்கி, தம்முடைய கக்ஷியை வாதித்து, முஈஜுத்தீனுக்குப் பிறகு நியாய பூர்வமாய்ப் பட்டத்துக்கு வரவேண்டிய சட்ட உரிமை நூருத்தீன் அலீக்கே இருக்கிறதென்பதைச் சுட்டிக்காட்டி, சிறுகச் சிறுகத் தம்முடைய கக்ஷிக்கு ஆட்பலத்தைச் சேர்த்துக் கொண்டார். புர்ஜீ மம்லூக்குகளின் உதவி ஏற்கெனவே கிடைத்துவிட்டமையால், எல்லாம் சுமுகமாகப் போய்விட்டன. பஹ்ரீகளால் மட்டுமே இடைஞ்சல் சிறிது ஏற்படலாம். அவர்களையும் இப்படித் திடீரென்று கலவரமடையச் செய்துவிட்டால், எல்லாம் சரிப்பட்டு விடுமென்பதை அபுல் ஹஸன் சரியாய்க் கணித்திருந்தார். என்னெனின், ஜாஹிர் ருக்னுத்தீன்கூட ஒன்றுஞ் செய்யவியலாது பிரமித்து ஓடிப்போய் விட்டாரல்லவா?

எனவே, அந்த முக்கியத்துவம் மிக்க நன்னாளிலே மைமூனாவின் தந்தை தம் பேரனையும் மகளையும் இரகசியமாய் மூடு வண்டியில் ஏற்றி, புர்ஜீகளின் கோட்டைக்குக் கொணர்ந்து சேர்த்தார். அங்கே அந்த மம்லூக்குகளும் அவர்களுடைய அமீர்களும் தலைவர்களும் பெரிய கூட்டமாகக் கூடி, எல்லாரும் ஏககாலத்தில் அணிவகுத்து அரசவைக்குச் செல்ல வேண்டுமென்றும் அரசவையை எட்டியதும் அரியாசனத்தின்மீது மைமூனாவையும் நூருத்தீனையும் ஏற்றி அமர்த்திவிட வேண்டுமென்றும் எவரேனும் ஒரு பஹ்ரீயோ அல்லது சுல்தானாவின் மெய்காப்பாளரோ தடை செய்தாலும் எதிர்த்துத் தாக்கினாலும் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் காற்றினுங் கடிய வேகத்தில் தங்கள் கருமத்தைச் செய்துமுடிக்க வேண்டுமென்றும் உறுதியாகத் தீர்மானம் செய்து கொண்டார்கள். பஹ்ரீகள் ஏமாந்த சமயமாகப் பார்த்து இப்படி அணிவகுத்து ஒழுங்காக அரண்மனைக்குள் நுழைந்தால், எங்கும் எவரும் தங்களைத் தடுத்து நிறுத்த முடியாதென்பதை அவர்கள் மிக நன்றாய் அறிந்திருந்தார்கள். என்னெனின், பஹ்ரீகளில் பெரும்பான்மையோர் நீலநதியின் இடைக்குறைத் தீவிலே அடைக்கப்பட்டுக் கிடப்பதாலும், கிளர்ச்சி நடக்கப்போவது மிகவும் சாத்விகமான மந்தண முறையாயிருப்பதாலும், புர்ஜீகள் எதற்கும் பயப்படவில்லை.

இம்மாதிரியாக முடிவுசெய்து கொண்டவர்கள் மைமூனாவையும் நூருத்தீனையும் வெகு அழகாய் அலங்கரித்து, அவர்களைப் பெட்டிவண்டியில் ஏற்றி, எல்லா மம்லூக்குகளும் புடைசூழ, காஹிராவின் மக்களுள் பலர் அபுல் ஹஸனின் தூண்டுதலால் உடன்தொடர, யாதொருவிதப் படாடோபமுமின்றி மிக வேகமாய் முன்னேறி அரண்மனையை அடைந்தார்கள். வாயிலில் நிற்கும் காவலாளிகள் அவ்வூர்வலத்தைத் தடுத்து நிறுத்தியதை எவரும் சட்டைசெய்யவில்லை. ஆனால், தடுத்தவர்கள் கைகளை இறுகப் பிணைத்துவிட்டு, ஒரு காவலனுக்கு இரு புர்ஜீகள் வீதம் இருபுறமும் உருவிய வாளுடன் நின்றனர். இப்படியே எல்லா பஹ்ரீ மம்லூக்குகளும், அரண்மனைக் காவலர்களும் அப்படியப்படியே நின்றவிடத்தில் நின்றபடியே அசையாமல் நிறுத்தப்பட்டு விட்டனர். சுருங்கச் சொல்லின், முன்னம் கலீபா நியமித்தனுப்பிய மலிக்குல் அஷ்ரபை எப்படி எவருமே தடுத்து நிறுத்த முடியாமற் செயலிழந்து போயினரோ, அப்படியே இப்பொழுதும் அக் காவலர்கள் ஒன்றும் செய்யத் தோன்றாமல் நிலைக்குத்திப் போய்விட்டார்கள்.

சபா மண்டபத்துக்குள்ளே புர்ஜீகளும் மைமூனாவும் சென்று நுழைந்ததும், அங்கே காலியாய்க் கிடந்த அரியாசனத்தின் மீது இரண்டே பாய்ச்சலில் மைமூனா தன் மைந்தனைப் பற்றிக்கொண்டே ஏறி அமர்ந்து விட்டாள்.

அப்பொழுது அங்கே ஓடோடியும் வந்த ஜாஹிர் ருக்னுத்தீன் ஒன்றுந் தோன்றாமல், சிம்மாசனத்தின் மிது குந்தியிருந்த மைமூனாவையும் சூழ்ந்து நின்ற மக்களையும் வெறிக்க வெறிக்கப் பார்த்தார். எதையும் நம்பமுடியாமல் பிரமித்துப் போய்த் திரும்பிப் பார்த்தார். அவரைச் சுற்றிலும் புர்ஜீ அமீர்கள் சிலர் நீட்டிய ஈட்டிகளுடனே நின்றிருந்தார்கள். ருக்னுத்தீன் அவ்விடத்திலிருந்து அரையங்குலமும் அப்பாலிப்பால் அசைய முடியாதபடி போய்விட்டது. மீறி அசைந்திருப்பாரேயானால், அத்தனை ஈட்டிகளும் அக்கணமே அவரது உடலுக்குள்ளே சொருகப்பட்டிருக்கும்!

“மலிக்கா மைமூனா வாழ்க! இளவரசர் நீடூழி வாழ்க!” என்ற பேரிரைச்சல் அச் சபா மண்டபத்தைக் கிழித்துக்கொண்டிருந்தது. ருக்னுத்தினைப் போன்று வன்மையுள்ள ஏனைப் பஹ்ரீகளும் நின்ற இடத்திலேயே நிறுத்தாட்டப்பட்டு விட்டார்கள். மீறி எதிர்த்தவர்கள் விலங்கிடப்பட்டார்கள். எல்லாம் கண் மூடிக் கண்திறக்கிற நேரத்தில் நடந்துவிட்டன. என்னே ஆச்சரியம்! எனனே ஜனசக்தி!

அரசவையில் பிரமாதமாகக் கூடி யிருந்த கூட்டம் ஒருவாறாக ஒழுங்காய் அணிவகுத்து ஒருபுறமாக ஒதுங்கி நின்றது. ருக்னுத்தீன் போன்ற பஹ்ரீ தலைவர்கள் அங்கங்கே ஈட்டி வீரர்களின் மத்தியிலே கைகட்டிச் செயலற்று ஒடுங்கி நின்றார்கள்.

சிம்மாசனத்தில் மைமூனா ஏறியமர்ந்ததும், முதலில் இட்டகட்டளை இதுவாகும்;-

“ஏ, வீரர்களே! உள்ளே சென்று, அந்தப்புரத்தில் பதுங்கிக் கிடக்கிற முண்டை ஷஜருத்துர்ரை இப்பொழுதே கைது செய்து, கைகளில் விலங்கு பூட்டி இங்கே கொணந்ந்து எம்முன்னே நிறுத்துங்கள்!”

புதிய ராணியாரின் கட்டளையைச் செவியேற்ற நான்கு புர்ஜீ மம்லூக்குகள் ஓட்டோட்டமாய் அந்தப்புரத்துள்ளே நுழைந்தார்கள். அங்கே பேயறைந்தாற்போல் குந்திக்கிடந்த ஷஜருத்துர்ரின் முன்னே அவர்கள் போய் நின்றார்கள்.

“எங்கே வந்தீர்கள்? என்ன இரைச்சல் அது?” என்று ஆவலுடன் வினவினார் அந்த சுல்தானா.

சென்ற புர்ஜீகள் பதிலேதும் பேசாமல் சட்டென்று அவ்வம்மையைக் கைது செய்து, கைம்மணிக்கட்டில் பொன்விலங்கும் பூட்டிவிட்டார்கள்.

இவ் அரண்மனைக்குள்ளே, அடிமையாயிருந்த ஷஜருத்துர் விலங்கிடப்படாமல் முன்னமொருநாள் சுல்தான் ஸாலிஹின் முன்னே கொணர்ந்து நிறுத்தப்பட்டதற்கு நேர் மாற்றமாகவே இன்றைய நிகழ்ச்சி வந்து லபிக்க வேண்டுமென்று இறைவனே நாடியிருந்தான் போலும்! அடிமையாகவே புர்ஜீ தாவூதால் வளர்க்கப்பட்ட ஷஜருத்துர், இத்தனை ஆண்டுகட்குப் பின்னே வேறு நான்கு புர்ஜீகளாலே அரசியாயிருக்கையிலேயே விலங்கிடப்பட்டு விட்டார். என்னே விதியின் விசித்திரம்!

ஷஜருத்துர் கீச்சிட்டுக் கத்திக்கொண்டே,“அநியாயம்! காப்பாற்றுங்கள்! இவ்வரசியைக் காப்பாற்றுங்கள்! துரோகம், பெருந் துரோகம்!” என்று வீறிட்டலறினார்.

“ஏ, ஷஜருத்துர்! வழக்கு விசாரிக்கவும் தீர்ப்பு வழங்கவும் எங்களுடைய சுல்தானா அரியாசனத்தில் வீற்றிருக்கிறார்கள். அவர்களிடம் சென்று உன்னுடைய வழக்கைச் சொல்லிக்கொள்!” என்று கூறிக் கொண்டே, ஒருவன் பின்னே நின்று மரியாதையாய்ச் செண்டுகொண்டு முன்னோக்கித் தள்ளவும் மற்றொருவன் முன்னே வழிகாட்டிச் செல்லவும், இருபுறமும் மற்றிரு மம்லூக்குகள் உருவிய வாளுடன் தொடரவும் சுல்தானா ஷஜருத்துர் தொங்கிய தலையுடனே வெளியேற நேர்ந்தது. ஷஜருத்துர் ஏறியமர்ந்திருந்த அரியாசனத்திலே மைமூனா தன் மைந்தனுடனே வீற்றிருப்பதையும் சுற்றிலும் புர்ஜீகளும் பல பிரமகர்களும் கைகட்டி நிற்பதையும், அங்கங்கே பஹ்ரீகள் – ருக்னுத்தீனுட்பட – ஈட்டி முனைகளில் கைதுசெய்யப்பட்டு நிற்பதையும் கண்டதும், அந்த அனாதையாகிய ஷஜருத்துர் கோவென்றலறி அழுதுவிட்டார்.

அன்று லூயீ மன்னன் ஷஜருக்கு முன்னிலையில் சிரந்தாழ்த்தி நின்றதைவிடப் பரிதாபகரமான முறையிலே இன்று ஷஜருத்துர் மைமூனாவின் முன்னே தலைகவிழ்ந்து நின்றார். என்னே கால சக்கரத்தின் கடுஞ்சுழற்சி!

இம்மாதிரியான கேடுகாலம் – பொல்லாத வேளை – இவ்வளவு சீக்கிரமாக, அதுவும் இப்படிப்பட்ட விதமாக, இந்த விதச் சூழ்நிலையில் வந்துவிடியுமென்பதை எவரே எதிர்பார்த்தார்? அன்று லூயீ மன்னன் ஷஜருக்கு முன்னிலையில் சிரந்தாழ்த்தி நின்றதைவிடப் பரிதாபகரமான முறையிலே இன்று ஷஜருத்துர் மைமூனாவின் முன்னே தலைகவிழ்ந்து நின்றார். என்னே கால சக்கரத்தின் கடுஞ்சுழற்சி!

மைமூனாவோ, கிஞ்சித்தும் மனமிரங்கவில்லை. நன்றாய் நிமர்ந்து கொண்டு, கம்பீரமாக ஒரு சுற்று அம் மண்டபத்தை உற்றுநோக்கினாள். பழைய சம்பவங்களெல்லாம் அவளுடைய ஞாபகத்துக்கு வெகு வர்ணதர்சனியேபோல் வந்தன. எனினும், அவற்றை மட்டுப்படுத்திக் கொண்டு, ஷஜருத்துர்ரை வெறித்து நோக்கி, அரசவையில் குழுமியிருந்தோரை ஒரு சுற்றுச் சுற்றிப் பார்த்தாள். எங்கும் நிச்சப்தம் நிலவியது.

“ஏ, அடிமைக் கைதியே! நீ உன் கணவராய் விளங்கிய முஈஜுத்தீன் ஐபக் என்னும் மாஜீ சுல்தானை நயவஞ்சகமாய்க் கொலை செய்ததுண்டா, இல்லையா?” என்று தீர்க்கமான குரலில் நூருத்தீனின் தாய் வெகு கடுமையாய்க் கடாவினாள்.

ஒரு சிறிதும் எதிர்பாராத இக் கேள்வியைச் செவியேற்றதும், தம்மையறியாமலே தலையை மேலே தூக்கி, மைமூனாவை ஷஜருத்துர் முறைத்துப் பார்த்தார். ஆனால், தூக்கியதைவிட வேகமாக அத் தலையைக் கவிழ்த்துக் கொண்டார். என்னெனின், ஆத்திரம் பொங்கி வழிகிற மைமூனாவின் வதனம் அவ்வளவு பயங்கரமாயிருந்தது.

“ஏ, அடிமை ஷஜருத்துர்! நீ இப்பொழுது மாட்சிமை தங்கிய சுல்தானா மைமூனாவின் முன்னர்க் குற்றவாளியாக அதுவும், கொலைக்குற்றம் புரிந்தவளாக, கொண்ட கணவனையே கொன்றவளாக நிறுத்தப்பட்டிருக்கிறாய் என்பதையும் நாம் விடுக்கிற ஒவ்வொரு கேள்விக்கும் நீ பதில் சொல்லக் கட்டுப்பட்டிருக்கிறாய் என்பதையும் ஞாபக மூட்டுகிறோம்!” என்று கர்ஜித்தாள் மைமூனா.

ஷஜருத்துர் ஏற்கெனவே உணர்ச்சியை முற்றும் இழந்திருந்தமையால், இப்பொழுது கருங்கல் போலே அசைவற்று நின்றிருந்தார். தாம் நிரபராதி என்பதற்குச் சன்னையாக மெல்லத் தலையசைத்தார்.

“ஏ, கொலைகார ஷஜர்! நாம் இப்பொழுது உன்னை இங்கு ஏன் கைதியாக்கி நிறுத்தியிருக்கிறோம், தெரியுமா? எம் கணவராகிய சுல்தானுல் ஐபக்கை நீ கபட மார்க்கமாகக் கொன்றதுமல்லாமல், அவர் மரணங் குறித்து நீ பொய்யறிக்கையும் விடுத்தாயே, அதன் வெட்ட வெளிச்சத்தைப் பகிரங்கப்படுத்துவதற்காகவே எம் முன்னம் நீ நிறுத்தப்பட்டிருக்கிறாய்! கணவைனைக் கொன்ற காரிகையே! உன் கணவரை நீ கொன்றாயா? இல்லையா?” என்று ரோஷத்துடனும் ஆத்திரத்துடனும் அலறினாள் மைமூனா.

“இல்லை! நான் கொல்லவில்லை!” என்று எதிர்த்துக் கத்தினார் ஷஜருத்துர்.

“ஏ, கைதியான துரோகியே! நீ ஜலாலத்துல் மலிக்கா மைமூனாவின் முன்னிலையில் கொலைக் குற்றவாளியாய் நிறுத்தப்பட்டிருக்கிறாய் என்பதை மறந்துவிடாதே! இப்பொழுது எம்மை நீ அவமதிக்க முற்படுவை யாயின், பொய்யும் புரட்டும் சொல்லித் தப்பிக்கொண்டு விடலாமென்று நினைப்பை யாயின், இன்னம் பலப்பல குற்றங்கள் உன் மீது சுமத்தப்படுமென்பதையும் மறந்துவிடாதே! மரியாதையாய் நீ செய்த மாபெரிய குற்றங்களை ஒத்துக்கொள்ளப் போகிறாயா? இல்லையா?”

அப்பொழுதுதான் ஷஜருத்துர்ருக்குப் பண்டைக்கால நிகழ்ச்சியொன்று நினைவுக்கு வந்தது; முஈஜுத்தீனிடம் தாம் தலாக்கு வாங்கிக் கொடுத்த வைபவம் அப்பொழுது ஷஜருத்துர்ரின் கண்முன்னே வந்து நின்றது.

“ஏ, சூனிய வித்தை கற்ற மாயாஜாலக் கள்ளி! நீயே உன்னுடைய குற்றங்களையெல்லாம் நன்கு உணர்ந்திருக்கிறாய். உனக்கு என்ன தண்டனையை விதிக்கலாம் என்பதையும் நீயே தெரிந்துகொண்டிருக்கிறாய். எனவே, நாம் உனக்கு என்ன தண்டனை கொடுக்கவேண்டுமென்பதை நீயே கூறி விடு!” என்று மைமூனா கிண்டல் செய்தாள்.

இப்பொழுதும் ஷஜருத்துர்ரால் பேச முடியவில்லை. தாம் அடித்த அத்தனை கூத்துக்களுக்கும் ஏற்ற கூலியைப் பெற்றுக்கொள்வதாகவே அவரது உள்ளம் உணர்ந்தது. அல்லது இப்போதுள்ள பிடியினின்று எப்படித்தான் தப்புவது? அந்தச் சபையில் கூடியிருந்தோர் அனைவருமே தமக்கெதிராக இருக்கிறார்கள் என்பதை ஷஜருத்துர் நன்றாயறிவார். குற்றத்தையோ மறைக்க முடியாது; தப்பவோ வழியில்லை.

ஷஜருத்துர் தம்முடைய வாழ்க்கையின் விசித்திரத்தை ஆதிமுதல் அந்தம்வரை மின்வெட்டுகிற வேகத்தில் ஒரு முறை நினைவுகூர்ந்து கொண்டார். அந்தோ! தமக்கு இந்த மாதிரி விதி வந்து நேர்ந்ததே! என்று ஒரே ஏக்கமாக ஏங்கினார். ஏங்கிய வேகத்திலே மூர்ச்சையுற்றுத் தொப்பென்று கீழே வீழ்ந்து விட்டார்.

“விடாதீர்கள்! இவளை விடாதீர்கள்! தீர்ப்பு வழங்குங்கள்! நடுத்தீர்ப்பு வழங்குங்கள்!” என்று அரசவையில் கூடியிருந்தோர் அனைவரும் கூக்குரலிட்டனர்.

குளிர்ந்த தண்ணீர் ஷஜருத்துர்ரின் முகத்தின்மீது தெளிக்கப்பட்டது. சிறிது பொழுதிலே அவரும் மூர்ச்சை தெளிந்தார்.

“ஏ, நீலி! உன்மீது நாம் குற்றப் பத்திரிகையைத் தயாரித்திருக்கிறோம். நீ ஏதாவது எதிர்வாதம் புரிய விரும்புவதாயிருப்பின், தாராளமாய் வழக்காடலாம்! என்ன சொல்லுகிறாய்?” என்று மைமூனா அதட்டிக் கேட்டாள்.

ஷஜருத்துர் வாய் திறக்கவில்லை.

“ஏ, சூது சூமும் சூனியக்காரியே! நீ மெளனமாய் நிற்பதொன்றே, நீ பெரிய கொலைக் குற்றவாளிதான் என்பதை நிரூபிக்கப் போதுமானது. நீ ஓர் அரசி என்னும் அகம்பாவத்தினால் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று செய்யத்தகாத பாதகங்களையெல்லாம் செய்துவிட்டிருக்கிறாய். உன் மாற்றாள் மைந்தன் தூரான்ஷாவைக் கொலை புரியத் தூண்டிவிட்டாய். என் கணவராய் இருந்தவரை உன் கணவராக அபகரித்துக் கொண்டு விட்டாய். உனக்கு உரிமையில்லாத இம் மிஸ்ர் நாட்டை நீ கபடமார்க்கமாய்க் கவர்ந்துகொண்டு விட்டாய். அமீருல் மூமினீன் நியமித்தனுப்பிய மலிக்குல் அஷ்ரபைக் கபடத்தனமாய்க் கொன்றொழித்துவிட்டாய். என் மைந்தனைத் திரஸ்கரித்து விட்டாய். என்னையும் அபலையாக்கி விட்டாய். இறுதியாக, அந்த வீரர் ஐபக்கை உன் நயவஞ்சகப் பித்தலாட்டத்துக்குப் பலியாக்கி உயிரையே உறிஞ்சிவிட்டாய். ஏ, உதிரக்காட்டேறி போன்ற பொல்லாத பிசாசே! உனக்கு ஏற்ற தண்டனையை நீ என் கையிலேயே பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் என்னை இத்தனை நாட்களாக உயிருடன் வைத்துக் காப்பாற்றி, நீ எனக்கு எதிராக இயற்றிய பிரஷ்ட உத்தரவை உன் ஆயுட்காலத்திலேயே முறித்தெறியும்படி எனக்கு உதவி செய்து, உன் கண்ணெதிரிலேயே நான் சிம்மாசனம் ஏறியிருக்குமாறு என்னை அவன் உயர்த்தியிருக்கிறான், எல்லாப் புகழும் அந்த அல்லாஹ் ஒருவனுக்கே! இன்னமும், உனக்கு நான் அன்றொரு நாள் இட்ட சாபத்தை நானே நிறைவேற்ற வேண்டுமென்று அவன் என்னையே இங்கு அனுப்பி வைத்திருக்கிறான்.

“ஏ, பேராசை பிடித்த பேயே! நீ கொடிய சித்திரவதையையே உன் எல்லாக் குற்றங்களுக்கும் ஏற்ற தண்டனையாகப் பெற்றுக்கொள்ளக் கடவாய்! உன் உயிர் போகிறவரை நீ நிர்வாணமாக நிறுத்தப்பட்டுப் பெண்ணடிமைகளால் கசையடி கொடுக்கப் பெறுவாய்! நீ எப்படி மிக அற்பத்திலிருந்து உயர்ந்து, அரசியாகப் போனாயோ, அப்படியே நீ மீண்டும் அற்பத்துக்கே இழிந்துபோய்ச் சேரக்கடவாய்! நீ இழைத்துள்ள மாபெருங் குற்றங்களுக்கு உன்னை முட்பாயில் வைத்துச் சுருட்டினாலும், கொதிக்கிற எண்ணெய்க் கடாரத்தில் போட்டுப் பொரித்தாலும். பழுக்கக் காய்ந்த சலாகைகளை உன் நவதுவாரத்திலும் சுடச்சுடச் சொருகினாலும், உன் கால்களிரண்டையும் இறுக மூடிய இரு கதவுகளில் பிணித்துவைத்து, கடுமையாய்த் திறந்துவிட்டுக் கவட்டை வழியே இருகூறாகக் கிழித்தெறிந்தாலும் அல்லது உன் எலும்பில் ஒட்டியுள்ள ஒவ்வொரு சதையையும் தனித்தனியே பிய்த்தெடுத்து உன் உயிரைக் கொஞ்சங் கொஞ்சமாய்ச் சுரண்டியெடுத்தாலும், அது நியாயமே நன்றாலும், நாம் அப்படியெல்லாம் உன்னைத் தண்டிக்க விரும்பவில்லை. நீ நிர்வாணமாய் நிறுத்தப்பட்டு, பீஷ்டத்தில் சவுக்கடியைப் பெற்றுக்கொண்டு, அவ்வலி பொறுக்கமாட்டாமல் நீ உயிர் துறப்பாயானால், அதுவே போதுமானது! இதுதான் நான் உனக்கு அளிக்கிற குறைந்தபக்ஷ தண்டனையாகும். ஏ, என் பிரஜைகளே! உங்கள் அபிப்பிராயம் என்ன? நான் சொன்னது சரிதானே?” என்று மைமூனா சரமாரியாய்ப் பொழிந்து, பொதுமக்களை இறுதி உத்தரவும் கேட்டுவிட்டாள்.

புர்ஜீகளைக் கேட்கவா வேண்டும்? அவர்கள் இத்தனை நாட்களாக ஷஜருத்துர்ரின்மீது கொண்டிருந்த ஆத்திரத்தையெல்லாம் எப்படித் தீர்த்துக் கொள்வதென்று தவித்துக்கொண்டிருந்த சமயத்தில் மைமூனா விடுத்த கேள்வி அக்கணமே ஏகமனத்தான ஏகோபித்த அனுமதியைப் பெற்றுக்கொண்டு விட்டது. ஒருவர் விடாமல் எல்லாருமே எககாலத்தில், “இவளுக்கேற்ற தண்டனை இதுவேதான், இதுவேதான்!” என்று கூக்குரலிட்டனர்.

“கணவனைக் கொன்ற காதகி!” என்று சிலர் ஓலமிட்டனர்.

“மனிதர்களை மயக்கிய மாபெரும் பிசாசு!” என்றனர் வேறு சிலர்.

“சூனியக்காரி, மோஹினிப் பேய், திருட்டுக்கள்ளி!” என்றெல்லாம் ஆர்ப்பரித்தனர் இன்னம் பலர்.

அபுல் ஹஸனிலிருந்து கடைசி புர்ஜீ வரை ஒருவர் விடாமல் அந்தப் பரிதபிக்கத்தக்க நாரியை வாயாரத் திட்டிக் குவித்தார்கள்; தூற்றினார்கள்! வைது சபித்தார்கள். ஷஜரோ, ஒன்றுக்கும் பதில் சொல்லாமல், மெளனமாகவே எல்லா வசை மொழிகளையும் எல்லாச் சாபங்களையும் புதிய ராணியின் தீர்ப்பையும் ஏற்றுக்கொண்டு, எல்லைக் கல்லேபோல் நின்றார். கொடுக்கிழந்த தேளும் பல்லிழந்த பாம்பும் பணமிழந்த செல்வனும் பதவியிழந்த ராணியும் ஒரே தகுதியில் வைத்துப் பார்க்கப்பட வேண்டியவர்களேயல்லவா?

“எனவே, ஏ, பேராசை பிடித்த கொடிய துரோகி! உன்னைக் குற்றவாளியென்று நீயே ஏற்றுக்கொண்டு விட்டாய். உனக்கு நாம் வழங்கிய தண்டனையும் நேர்மையானதென்பதை இங்குள்ளோர் யாவரும் அங்கீகரித்து விட்டனர். என்ன சொல்லுகிறாய்? நீ இறுதியாகக் கோரிக்கொள்ள வேண்டியது ஏதும் உண்டா?”

ஷஜருத்துர் அதற்கும் பதில் பேசவில்லை. பேசி என்ன பிரயோஜனம் விளையப்போகிறது? ஷஜருத்துர்ருக்கே சகலமும் தெரியுமே!

இரண்டு நிமிடங்களில் ஏழெட்டுப் பெண்ணடிமைகள் சுல்தானா ஷஜருத்துர்ரைத் தரதரவென்று இழுத்துக்கொண்டே சென்று, பயங்கரக் குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருக்கும் பாதாளச் சிறைச்சாலைக்குள்ளே தள்ளிவிட்டார்கள். அரசவையில் கூடியிருந்தோரோ, “கொடுங்கோலாட்சி ஒழிக! சுல்தானா மைமூனா நீடூழி வாழ்க! இளவரசர் நூருத்தீன் நீடூழி வாழ்க! மிஸ்ர் நீடூழி வாழ்க!” என்று பேராராவாரத்துடன் ஆர்ப்பரித்தனர்.

சற்று முன்வரை ஷஜருத்துர்ரின் ஏகபோக உரிமையாகவும் சொந்தச் சொத்தாகவும் செளபாக்கியமாகவும் விளங்கி வந்த மிஸ்ரின் ஸல்தனத்தும் காஹிரா அரண்மனைக் காணியாட்சியும் செங்கோல் பீடமும், வெண்கொற்றக் குடையும் அரை மணி நேரத்துக்குள்ளே, ஆண்டவன் நாடியிருந்த வண்ணம், மைமூனாவுக்கும், நூருத்தீன் அலீக்கும் சொந்தமாகி விட்டன.

உண்மையிலே ஷஜருத்துர்ரின்மீது மெய்யபிமானம் பூண்டிருந்த பஹ்ரீகள் ஒன்றும் செய்து கொள்ள முடியாமல் திகைத்தார்கள். எல்லாம் மின்வெட்டுகிற வேகத்தில் வெகு விசித்திரமாக நடந்து முடிந்துவிட்டபடியால், தீவிலிருந்து வெளியேறித் திரண்டு வந்தவர்களாலோ, அல்லது அரண்மனையெங்கும் பரந்து காவல் புரிந்து நின்றவர்களாலோ எதுவுமே செய்ய முடியவில்லை. மீறி ஏதும் செய்யலாமென்றாலோ, மைமூனாவுக்கு எல்லாரின் உதவியும் அனைவரின் ஒத்துழைப்பும் கிட்டிவிட்டன. எனவே, இச் சந்தர்ப்பத்தில் மரியாதையாய்ச் சும்மா இருப்பது மட்டுமே விவேகமென்று கருதித் தாங்களும் பொய்யாகவாவது ராஜவிசுவாசப் பிரமாணம் பண்ணிக் கொடுத்தார்கள்.

அடுத்த அத்தியாயத்துடன் நிறைவுபெறும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment