5. சூல்
பைஸாந்தியச் சக்ரவர்த்தி ஏழாம் மைக்கேலின் கோரிக்கைக்கு, போப் கிரிகோரியினால் படையை அனுப்பி வைக்க முடியாமல் போனதல்லவா? அதன் பிறகு, இரு தரப்பிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன.
அங்கு இரண்டாம் அர்பன் போப்பாகப் பதவிக்கு வந்திருந்தார். இங்கு அலக்ஸியஸ் சக்ரவரத்தி ஆகியிருந்தார். இவரும் போப்பின் திருச்சபைக்கு, துணைப்படைகளை அனுப்பச் சொல்லித் தகவல் அனுப்பி வைத்தார்.
பண்டைய ரோம சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி கான்ஸ்டன்டைன். கிரேக்க வம்சாவளியைச் சார்ந்தவர். கிரேக்கர்களின் காலனியாகத் திகழ்ந்த பைஸாந்தியப் பகுதியில் ஏகாதிபத்தியக் குடியிருப்புகளைப் புதிதாக உருவாக்கி அந்நகருக்கு, “கான்ஸ்டன்டினோபிள்” என்று தம் பெயரையே சூட்டிவிட்டார். அதுதான் இன்றைய இஸ்தன்புல். இவர் கி.பி. 312ஆம் ஆண்டு கிறிஸ்தவ மதத்தைத் தழுவ, அதன்பின் உலக அரங்கில் கிறிஸ்தவ மதம் விரிவடைய ஆரம்பித்து ஐரோப்பா முழுவதும் பரவியது.
பைஸாந்தியம், கான்ஸ்டன்டினோபிள், கிழக்கத்திய கிறிஸ்தவத் திருச்சபை என்பனவெல்லாம் இந்தப் பண்டைய ரோம சாம்ராஜ்ஜியத்தின் வழித்தோன்றல்களைக் குறிப்பிடுபவை. இவர்கள் கிழக்கத்தியக் கிறிஸ்தவர்கள்.
ஐரோப்பாவில் பரவிய கிறிஸ்தவ மதம் லத்தீன் கிறிஸ்தவம் எனக் குறிப்பிடப்படுகிறது. லத்தீன் மொழியில் கிறிஸ்தவ வேத நூல் எழுதப்பட்டு மதச் சடங்குகளும் லத்தீன் பாரம்பரியம் சார்ந்ததாகி அதற்கு அப்பெயர் ஏற்பட்டுவிட்டது. மத்திய காலப் பின்னணியில் இந்தக் கிறிஸ்தவர்கள், ‘இலத்தீனியர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். இன்று அவர்கள் ‘ரோம கத்தோலியர்கள்’. மேற்கத்தியக் கிறிஸ்தவத் திருச்சபை, போப்பாண்டவரின் திருச்சபை, இலத்தீனியர்கள் என்ற பதங்களெல்லாம் மேற்கத்தியக் கிறிஸ்தவம் சார்ந்தவை. நிகழ்வுகளுக்கேற்ப இப் பதங்கள் பலவிதமாக இடம்பெறப் போவதால் எது யாரைக் குறிப்பிடுகிறது என்ற தெளிவுக்காக இந்தச் சொற்பொருள்.
கிழக்கத்திய கிறிஸ்தவர்களிடமிருந்து உதவி கோரிக்கை வந்ததும் போப் அர்பன் அந்தப் பிரச்சினையை ஆராய்ந்தார். ஸெல்ஜுக் துருக்கியர்கள் முன்னேறி வருகின்றனர். கிறிஸ்தவர்களின் மையமாகத் திகழும் நைக்கியா நகரை ஸெல்ஜுக்கியர்கள் கைப்பற்றிப் பதினேழு ஆண்டுகள் ஆகிவிட்டன. கி.பி. 325ஆம் ஆண்டு Nicene Creed எனப்படும் கிறிஸ்தவக் கோட்பாடுகள் அந்நகரில் உருவான நாளிலிருந்து. காலங்காலமாய் அதற்கொரு புனித அந்தஸ்து இருந்து வந்தது. கான்ஸ்டன்டினோபிள் நகரிலிருந்து 70 கி.மீ. தொலைவு மட்டுமே உள்ள அந்கருக்குள், கிறிஸ்தவ ராஜ்ஜியத்தின் வெளிப்புற அரணுக்குள், ஸெல்ஜுக்கியர்கள் நுழைந்து விட்டார்கள். அது போப் அர்பனுக்கு முதலாவது பிரச்சினை.
இரண்டாவது – கிறிஸ்தவ ராஜ்ஜியமோ ஒற்றுமையின்றிக் கிழக்கே கான்ஸ்டன்டினோபிள், மேற்கே ரோம் நகரம் என்று பிரிந்து கிடந்தது. மதக்கோட்பாட்டின் ஒரு முக்கியமான விஷயத்தில் அவர்கள் இருவரும் பிளவுபட்டிருந்தார்கள். பிதா, மகன், பரிசுத்த ஆவி என்ற முக்கடவுள் கிறிஸ்தவக் கொள்கை. அதில் பரிசுத்த ஆவி என்பது பிதாவிலிருந்து வந்தது என்பது கிழக்கத்திய பைஸாந்திய நம்பிக்கை. பிதா, மகன் இருவரிலிருந்து வந்ததே பரிசுத்த ஆவி என்பது மேற்கத்திய ரோமின் கொள்கை. இந்த அடிப்படை வேறுபாட்டைக் களைந்து இருதரப்பும் ஒன்றிணைய முடியாமலேயே இருந்து வந்தது.
மூன்றாவது – போப்பின் மேற்கத்திய ஐரோப்பா, குறிப்பாக பிரான்ஸ், ஒழுங்கற்று, சீர்குலைந்து கிடந்தது. போப்புக்கும் சக்ரவர்த்திக்கும் இடையே அதிகாரப் போட்டி; குறுநில அதிபர்களுக்குள் சண்டை, சச்சரவு, போர்; பொதுமக்கள் அவதிப்பட்டுக் கிடந்தனர். தமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாத இவர்களை ஒன்றிணைக்கவும் போப்புக்கு முடியவில்லை.
என்ன வழி? சிந்தித்தார் போப் அர்பன். அனைத்து மாங்கனிகளையும் ஒரே கல்லில் பறித்துவிட வழி தோன்றியது. போர்! மதச் சாயம் பூசிய அயல்நாட்டுப் போர்!
போப் இரண்டாம் அர்பன்தான் சிலுவை யுத்தங்களின் சூத்திரதாரி என்று வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும் தயக்கமின்றிச் சுட்டு விரலை நீட்டிவிடுகின்றார்கள். கிழக்கே பைஸாந்தியத்தில் நிகழ்ந்து வந்த போர்களை மத ரீதியான போருக்கான முகாந்தரமாக்கி, மேற்குலகை ஒன்று திரட்டி வரலாற்றில் பெரும் பூகம்பம் நிகழ வித்திட்டவராக அவரைத்தான் அடையாளம் காட்டுகின்றார்கள்.
போப்புகளுக்கும் ஐரோப்பாவின் ரோமானியப் பேரரசர்களுக்கும் சண்டை, சச்சரவு, போர் என்றல்லவா சென்ற அத்தியாத்தில் பார்த்தோம், பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அப்படித்தானே இருந்திருக்கிறது, பிறகு அந்த நூற்றாண்டின் இறுதிக்குள் ஒற்றை நோக்கத்திற்காக, கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒரு போப்பின் கீழ் எப்படி அணி திரள முடிந்தது? பெரும் போருக்குத் துணிய முடிந்தது? கேள்வி எழுகிறதல்லவா? வியப்பு மேலிடுகிறதல்லவா?
சாமர்த்தியம். ஐரோப்பாவில் நிலவிவந்த அசாதாரணச் சூழலைத் தம் நோக்கத்திற்கு ஏற்ப நாசூக்காகத் திசை திருப்பத் தெரிந்த அரசியல் தந்திரம். நாம் அவற்றையெல்லாம் ஓரளவிற்கு விரிவாகப் பார்த்தே தீர வேண்டியிருக்கிறது. அன்று அந்த போப்பாண்டவர் தொடங்கி வைத்த நடைமுறை இன்றும் இஸ்லாத்திற்கு எதிராக எப்படி மீண்டும் மீண்டும் கடைபிடிக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு அந்த வரலாற்றை அறிவது மிக முக்கியம்.
oOo
கி.பி. ஆயிரமாவது ஆண்டு. பிரான்ஸின் மேற்குப் பகுதியில் உள்ள ஆன்ஞ்ஜு மாகாணத்தை ஃபுல்க் நெர்ரா என்ற போர்க்குணங் கொண்ட ஒரு கொடுங்கோலன் ஆண்டு வந்தான். வில்லத்தனத்திற்குத் தேவையான அயோக்கிய குணம், மிருகத்தனம், பேராசை என்று தீய குணங்களுள் எதையும் தவிர்க்காத கொடுங்கோல் ஆசாமி. பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திடமிருந்து தன் மாகாணத்தைக் காப்பாற்றித் தக்கவைத்துக்கொள்ள அவர்களுடன் அவனுக்கு ஓய்வற்ற போர். அதில் ஏதும் இடைவெளி கிடைத்தால், அண்டை மாகாணத்தை ஆக்கிரமிப்பது, கொள்ளையடிப்பது என்று அடுத்த ரகளை. போர்க்களமோ, உள்ளூர் நிலமோ எங்குப் புகினும் அவனது மொழி வன்முறைதான், மூர்க்கம்தான். அது யாராக இருந்தாலும் சரி, எவராக இருந்தாலும் சரி.
மாற்றானுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தாள் என்று கூறி, தன் மனைவியைக் கழுமரத்திலேற்றித் தீயில் சாம்பலாக்கியது; அரசவையைச் சேர்ந்தவர் ஏதோ ஒரு குற்றம் புரிந்துவிட்டார் என்பதற்காக மிகக் கொடூரமாகக் கொன்றது என்று அவன் வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கமும் இரத்தம். ஆனால், மதப்பற்றாளன். கிறிஸ்தவ மதத்தைத் தீவிரமாக நேசிப்பவன்.
அப்படியாகக் கழிந்த அவனது பொழுதுகளில் ஒருநாள் அவனுக்குத் திடீரென்று அச்சம் ஏற்பட்டுவிட்டது. ‘என்னுடைய மிருகத்தனமான செயல்களும் நடவடிக்கைகளும் கிறிஸ்தவக் கோட்பாட்டின்படி பெருங்குற்றங்களாயினவே! மறுமையில் அது என்னை நிரந்தரமான தண்டனைக்கு ஆளாக்கிவிடுமே’ என்று எக்கச்சக்கமாகக் கவலைப்பட ஆரம்பித்து விட்டான். ‘நான் என் ஆன்மாவைப் பரிசுத்தம் செய்தே ஆக வேண்டும்’ என்று முடிவெடுத்து மூன்று முறை ஜெருசலம் நகருக்குப் புனித யாத்திரை சென்று வந்தான். அவனது ஊரிலிருந்து ஜெருசலம் சுமார் 2000 மைல் தொலைவு. பயண வசதிகள் முன்னேற்றமடையாத அக்காலத்தில், ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம், அதுவும் மூன்று முறை என்றால் அவனது மதப்பற்று எவ்வளவு தீவிரமாக உருமாற்றமடைந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
அவனது மூன்றாவது யாத்திரையின்போது மிகவும் வயது முதிர்ந்திருந்தான். தனது பாவங்களுக்கான பிரயாச்சித்தத்தை இவ்வுலகில் பெற்றே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தவன், ஒரு விசித்திரமான காரியம் புரிந்தான். உடைகளைக் களைந்து, உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் தன்னை முழு அம்மணமாக்கிக்கொண்டான். நாய்களைக் கட்டி இழுத்துச் செல்வதைப் போன்ற தோல்வார் அவனது கழுத்தில் கட்டப்பட்டது. சேவகனொருவன் அவனைச் சவுக்கால் அடித்தபடி ஏசுவின் கல்லறைக்குத் தரதரவென்று இழுத்துச் செல்ல, கிறிஸ்துவிடம் மன்னிப்புக் கேட்டு மன்றாடியவாறே சென்றான் அவன்.
ஏன் இத்தகு சுய தண்டனை? எதற்காக இப்படியாரு கொடூர பாவமீட்சி? வாழ்க்கையின் முந்தைய கட்டத்தில் அப்படியொரு கட்டுப்பாடற்ற கொடுஞ்செயல்கள் புரிந்துவிட்டு, இப்பொழுது இப்படியான அர்த்தமற்ற பக்தி?
பதினோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அந்த ஐரோப்பியர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஒன்று பரவியது. ‘ஏசு இறந்த ஆயிரமாவது ஆண்டு இறுதித் தீர்ப்பு நாளின் அறிகுறி’ என்று அவர்கள் மிகவும் நம்பினார்கள். உலகம் இருளான காலத்தைக் கடக்கிறது; நாம் இருண்ட காலத்தில் வாழ்கிறோம்; மனித குலத்தின் இறுதிக் காலம் நெருங்கிவிட்டது என்று அந்த அச்சம் வளர்ந்தது. கி.பி. 1030-ஆம் ஆண்டில் அந்த ஊழியிறுதி அச்சம் உச்சத்தை எட்டியது.
‘இப்படியான அச்சம், பதட்டத்தின் அடிப்படையில் அணுகினால் ஃபுல்கின் பாவமன்னிப்பு நடவடிக்கையைப் புரிந்து கொள்ள முடியும்’ என்கிறார் வரலாற்று நூலாசிரியர் தாமஸ் ஆஸ்பிரிட்ஜ் – தமது The Crusaders நூலில்.
ஃபுல்கின் கதை இங்கு நமக்கு எதற்கு எனில், மக்களிடம் நிலவிய இத்தகு மத உணர்வு போப்பின் சிலுவைப் போர் அழைப்பிற்கு எப்படி உதவியது என்பதை நாம் அறிந்துகொள்வதற்கும் அவரிடமிருந்து போர் அறிவிப்பு வந்ததும் இந்த ஃபுல்கைப் போன்றவர்களும் அவனுடைய வழித்தோன்றல்களும் முன் வரிசையில் வந்து நின்றது எப்படி என்பதை நாம் புரிந்துகொள்வதற்கும் மட்டுமே.
சிலுவை யுத்தத்திற்கான மெய் நோக்கம், உள் நோக்கம் பற்றியெல்லாம் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. அரசியல், பொருளாதாரம், சமூகச் சூழ்நிலை என்று பல காரணங்கள் அவற்றுள் ஒளிந்திருந்தாலும் மத வெறியே அதற்கு மூல எரிபொருள் என்பது ஒளிவு மறைவற்ற உண்மை. வறுமை, சாகச நாட்டம், மண்ணாசை, பொன்னாசை என்று ஒவ்வொரு பிரிவினருக்கும் இருந்த ஆசாபாசங்கள் போருக்கு இதமான சூழலை உருவாக்கித் தந்திருந்தன என்றாலும் சிலுவை யுத்தத்திற்கான அடிநாதமாகத் திகழ்ந்ததென்னவோ மத வெறி! இஸ்லாமிய துவேஷம் ஆழப்பதிக்கப்பட்ட மத வெறி!
கிறிஸ்தவ மரபின்படி திருச்சபையின் ஐம்பெருந் தந்தைகள் அல்லது தலைவர்கள் மத்தியதரைக்கடல் பகுதியில் அமைந்துள்ளனர். ரோம், கான்ஸ்டண்டினோபிள், அந்தாக்கியா, ஜெருசலம், அலெக்ஸாந்திரியா ஆகியன அந்த ஐந்து நகரங்கள். மத்திய கால கட்டத்தின்போது, இவர்கள் அனைவருள்ளும் தாமே முதன்மையானவர் என்று ரோம் நகரத்து பிஷப் உரிமை கோர ஆரம்பித்தார். இவர் தம்மைத்தாமே Papa (தந்தை) அல்லது போப் என்று அழைத்துக்கொண்டார். அதையடுத்து உலகிலுள்ள எல்லா தேவாலயங்களுக்கும் தன்னைத் தலைமைப் பீடமாக ஆக்கிக்கொள்ள, போப்பின் திருச்சபை போராடியது. மேற்கத்திய திருச்சபையின் பாதிரியார்களுக்குத் தம்மை ஓர் தலைமை அதிபதியாக ஆக்கிக்கொள்ள விழைந்தது. பாதிரியார்களோ பல நூறு ஆண்டுகளாகச் சுதந்திரமாக இயங்கி வந்தவர்கள். திருச்சபை என்றொரு தலைமைப் பீடம், அதற்கு அவர்கள் கட்டுப்படுவது என்ற வழக்கம் இல்லாதிருந்த காலம் அது. பெரும்பாலான பாதிரியார்கள் உள்ளூர் அரசியல் பிரமுகர்களுக்கோ மேற்குலகின் அரசருக்கோதான் தங்களது பிரமாணத்தை அளித்து வந்தனர்.
போப்பின் திருச்சபை தமது இலக்கில் வலிமையடைய வாகாக உதவியது கிறிஸ்துவ மத மறுமலர்ச்சி இயக்கம். ஐரோப்பாவில் பத்தாம் நூற்றாண்டில் துவங்கியிருந்த இவ்வியக்கம் பதினோராம் நூற்றாண்டில் தம் பணியின் உச்சத்தைத் தொட்டது. மக்களின் உள்ளத்துள் மத உணர்வை அபிவிருத்தி செய்ய ஆரம்பித்தது. அதன் பலனாய், போப்புகளும் தங்களது புனித அந்தஸ்தை நிலைநாட்ட, வீரியமுடன் செயல்பட ஆரம்பித்தனர். அவர்களுடைய செயல்பாடுகளின் ஓர் அங்கம்தான் சக்கரவர்த்தியுடன் போர், பூசல் என்று போப் கிரிகோரியின் வாழ்வில் நாம் பார்த்த நிகழ்வுகள்.
மத விவகாரங்கள் இப்படியிருக்க, மற்ற நிலவரங்கள் எப்படியிருந்தன என்று பார்த்துவிடுவோம்.
அக்கால ஐரோப்பியச் சமூகம் தனிவிதமானதொரு வர்க்க அமைப்பால் ஆளப்பட்டு வந்தது. மத குருமார்கள், நிலச்சுவான்தார்கள், Knights எனப்படும் சேனாதிபதிகள் என மூன்று வர்க்கத்தினர் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். விவசாயிகள், சமூகத்தில் பெரும்பான்மையினராகத் திகழ்ந்தாலும் அவர்கள் ஒடுக்கப்பட்டிருந்தனர். கடுமையாக உழைப்பது, நிலச் சுவான்தார்களின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு அவற்றை நிறைவேற்றி வைப்பது அவர்களது விதியாக இருந்தது. தங்களுக்கென ஏதொன்றையும் அவர்கள் உரிமையுடன் வைத்துக் கொள்ள முடியாது. அவையெல்லாம் எசமானனின் உடைமைகளாக ஆகிவிடும். வறுமையான வாழ்வு.
Feudal lords எனப்படும் நிலச்சுவான்தார்கள் ஒரு பெரும் வர்க்கம். ஏறக்குறைய குறுநில மன்னர்கள் போல் அவர்களுக்கு அதிகாரம், பலம், செல்வாக்கு. ஒருவரிடம் உள்ள பண்ணை நிலப்பரப்பு எந்தளவு பெரியதோ, எவ்வளவு அதிகமான நிலம் உள்ளதோ, அந்தளவு அந்த ஆண்டைக்குச் சமூகத்தில் மதிப்பு, மரியாதை. நிலமற்ற இளவரசர்களும் சேனாதிபதிகளும் முக்கியமற்றவர்களாக, செல்வாக்கற்றவர்களாகத்தான் வலம் வர வேண்டும்.
நிலமற்ற இளவரசர்களா? அது எப்படி?
குலவுரிமைச் சட்டம்!
அச்சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடு என்னவெனில், குடும்பத்தின் மூத்த மகனுக்கே நிலத்தில் முழு வாரிசுரிமை. நிலச்சுவான்தார் ஒருவர் மரணமடைந்தால் அவரது நிலம் முழுவதும் ஓர் இம்மி குறையாமல் மூத்தவனுக்கு. மற்றவர்கள் வயிறெரிய வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். அதனால் நிலமற்ற இளவரசர்களும் சேனாதிபதிகளும் என்ன செய்தனரென்றால் செல்வம் நிறைந்த, வசதி படைத்த பெண்ணாகப் பார்த்து, திருமணம் புரிந்து கொள்ள ஆரம்பித்தனர். அத்தகைய வாய்ப்பு அனைவருக்கும் அமைந்துவிடுமா என்ன? அதனால் நிலத்தை அபகரிக்க, ஆக்கிரமிக்க அந்த இளவரசர்களுக்கு இடையே அவ்வப்போது அடிதடி, போர். போதாததற்குப் பரம்பரைப் பகையால் வெடிக்கும் வன்முறை, பழிவாங்கல் என்று எப்பொழுதுமே கலவரச் சூழல். பெரும்பாலானவர்கள் படிப்பறிவில்லாதவர்கள். சட்டம் ஒழுங்கு என்றால் இன்னதென்று தெரியாமல் கிடந்தது ஐரோப்பா.
இங்ஙனமாக சமூகத்தின் பல்வேறு தரப்பும் பல்வேறு பிரச்சினைகள், அடக்குமுறை, மத உணர்வுகள், என்றிருந்த நிலையில் அவர்களது பிரச்சினைகளில் இருந்து அவர்களைத் திசை திருப்பி அனைத்துத் தரப்பு ஆற்றலையும் ஒருமுகப்படுத்தித் தம் எண்ணத்தை ஈடேற்ற சிறப்பாகத் திட்டமிட்டார் போப் அர்பன். பைஸாந்தியத்திலிருந்து வந்த உதவிக் கோரிக்கையை அருமையான வாய்ப்பாக, கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். அவர்கள் அனைவருக்கும் இஸ்லாத்திற்கு எதிரன உணர்வு தூண்டப்பட்டது. வெறும் எதிர்ப்பு உணர்வாக இல்லாமல் அது மதவெறியாக மாற்றப்பட்டது.
ஒவ்வொரு தரப்பினருக்கும் அவர்களுக்கு ஏற்றவகையில் சலுகைகளும் சன்மானங்களும் உத்தரவாதங்களும் அளிக்கப்பட்டன. விவசாயிகளிடம், “உங்கள் எசமானர்களுக்குக் கட்டுப்பட்டுக் கிடப்பதை ரத்து செய்வோம்” என்று போப்பின் திருச்சபை வாக்குறுதி அளித்தது. அவமானகரமான வாழ்க்கை முறையைவிட கிறிஸ்தவத்திற்காகப் போர் புரிந்து, இறந்தால் ஏசு கிறிஸ்துவிடம் மீட்சி, பிழைத்தால் வளமான கிழக்கத்திய தேசங்களில் செழிப்பான வாழ்வு என்று ஆர்வமூட்டியது.
இளவரசர்கள். சேனாதிபதிகளின் போர் ஆற்றலும் வீரியமும் உள்நாட்டுக் கலகத்திலல்லவா வீணாகின்றன. அதை மடை மாற்றியது திருச்சபை. நிலமற்ற இளவரசர்களுக்கோ வளமான கிழக்கு தேசத்தில் தங்களுக்கும் ஆட்சிப்பகுதி, நிலங்கள் கிடைக்கும் என்ற நப்பாசை. நிலச்சுவான்தார்களாகத் திகழ்ந்தவர்களுக்கோ தங்களுக்கு அயல்நாடுகளிலும் நிலம், புகழ், பெருமை சேர இதுதான் அருமையான வாய்ப்பு என்ற பேராசை.
சிலுவை யுத்தத்திற்கான பரப்புரை துவங்குவதற்கு முன் வரை லத்தீன் சேனாதிபதிகள் இரத்தம் சிந்துவது மிகப் பெரும் பாவம் என்றுதான் கருதி வந்தனர். “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு”; “நீ கொலை செய்யாதிருப்பாயாக” என்றெல்லாம் அறிவுறுத்தும் கிறிஸ்தவம் அஹிம்சை மதமாகத்தானே நம்பப்படுகிறது. ஆனால் மெதுமெதுவே அவர்களது மனத்தில், தேவனின் பார்வையில் சிலவிதமான போர்கள் நியாயமானவையே என்றொரு புதுக்கருத்து உருவாக ஆரம்பித்திருந்தது. சிலவித வன்முறைகளை போப்பாண்டவரின் திருச்சபை ஆசிர்வதிக்கவும் செய்யும் என்ற எண்ணம் ஏற்பட்டிருந்தது.
புனித அகஸ்தைன் என்பவர்தாம் அந்த அஹிம்சைக் கருத்தை மாற்ற முனைந்த முன்னோடி. ‘சில கடுமையான விதிகளின்படி நடைபெற்றால் ஒரு போர் சட்டப்பூர்வமானதாகவும் நியாயமானதாகவும் ஆகும்’ என்ற வாதத்தை அவர்தான் முன்வைத்தார். அவர் அமைத்த அடித்தளத்தில்தான் போப்பாண்டவரின் திருச்சபை யுத்தத்தை நியாயப்படுத்தியது.
சிலுவை யுத்தம் சூல் கொண்டது!
(தொடரும்)
-நூருத்தீன்
சத்தியமார்க்கம்.காம் – தளத்தில் வெளியானது
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License