47. விபரீதக் கூட்டணி
டமாஸ்கஸ் நகரில் ஷவ்வால் மாத இரவு ஒன்றில் (ஹி. 533/கி.பி. 1139) மூன்று அடிமைகள், அரண்மனையிலுள்ள அதிபரின் படுக்கை அறையினுள் நுழைந்தனர். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அதிபர் ஷிஹாபுத்தீன் மஹ்மூதைக் கச்சிதமாகக் கொன்றனர். அவரை மீளாத் துயிலில் ஆழ்த்தினர். எதற்குக் கொன்றனர், ஏன் கொன்றனர், சம்பளப் பற்றாக்குறை போன்ற அற்பக் காரணமா அல்லது தலைமை சரியில்லை என்ற விரக்தியா, என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. கொலையாளிகளுள் இருவர் பிடிபட்டனர். அவர்களைச் சிலுவையில் அறைந்து கொன்றுவிட்டு மூன்றாமவரைத் தேடினார்கள். அவர் மட்டும் தப்பித்துவிட்டார்.
சென்றார்கள், கொன்றார்கள்; மாட்டினார்கள், மாண்டார்கள் என்று டமாஸ்கஸில் அந்தத் தீடீர் நிகழ்வுகள் ‘சட்டு புட்டு’ என்று முடிந்து விட்டன என்றாலும் சிரியாவில் பெரும் அரசியல் களேபரத்துக்கு அவை வழி திறந்துவிட்டன. கொல்லப்பட்ட ஷிஹாபுத்தீன் மஹ்மூது, ஸுமர்ருத்தின் மகன் என்பதையும் தம் கணவர் பூரியின் மறைவிற்குப் பிறகு அதிபராக இருந்த தம் மற்றொரு மகன் அபுல் ஃபத்ஹு இஸ்மாயீல், இமாதுத்தீன் ஸெங்கியிடம் டமாஸ்கஸை ஒப்படைக்கத் திட்டமிட்டார் என்ற காரணத்திற்காக அந்த மகன் இஸ்மாயீலைக் கொல்ல ஸுமர்ருத் ஆணையிட்டார் என்பதையும் மூன்று அத்தியாயங்களுக்கு முன் வாசித்திருக்கின்றோம்.
அவருக்குப் பின், தாம் ஆட்சியில் அமர்த்திய இந்த மகன் ஷிஹாபுத்தீன் இவ்விதம் அடிமைகளால் கொல்லப்பட்ட செய்தியை அறிந்ததும் ஆத்திரத்திலும் ஆற்றாமையிலும் துடித்தார் தாயார் ஸுமர்ருத்! இச்செயலுக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து பழிவாங்க, உடனே கிளம்பி வரச் சொல்லித் தம் புதிய கணவருக்குத் தகவல் அனுப்பினார். அந்தப் புதிய கணவர் இமாதுத்தீன் ஸெங்கி.
அச்சமயம் மோஸூலில் இருந்த ஸெங்கி உடனே தம் படை பரிவாரங்களுடன் டமாஸ்கஸை நோக்கி அணிவகுக்க, அங்கு டமாஸ்கஸ் ஷிஹாபுத்தீனின் சகோதரர் ஜமாலுத்தீன் முஹம்மதுவை அதிபராக்கிவிட்டு, தற்காப்புக்குத் தயாரானது.
oOo
பைஸாந்தியர்-பரங்கியர் கூட்டணியின் ஷைஸார் முற்றுகையை முறியடித்து, அவர்களைத் திருப்பி அனுப்பியதும் தீராமல் இன்னும் பாக்கியிருந்த தமது அடுத்த பிரச்சினைகளில் இறங்கினார் இமாதுத்தீன் ஸெங்கி. ஹும்ஸு நகரம் அவரது முதல் இலக்கு. போர் நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, அரசியல் நகர்வாக ஒரு காரியம் அவரது தரப்பில் தீவிரமடைந்தது. பூரியின் மரணத்திற்குப் பிறகு விதவையாக இருந்த ஸுமர்ருத்தை மறுமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து அவருடைய மகன், டமாஸ்கஸின் அதிபர் ஷிஹாபுத்தீன் மஹ்மூதுக்கு ஸெங்கி தொடர்ந்து கடிதம் எழுத ஆரம்பித்தார். அத்திருமணத்தின் மூலமாக ஹும்ஸைப் பெறுவதும் அவரது நோக்கமாக இருந்தது. ஒரு கட்டத்தில் அவரது முயற்சி கனிந்து மடியில் விழுந்தது. மண ஒப்பந்தமும் எழுதப்பட்டது.
டமாஸ்கஸிலிருந்து ஸுமர்ருத்தின் தூதுவர்கள் வந்து இமாதுத்தீன் ஸெங்கியைச் சந்தித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஸுமர்ருத்தை அழைத்து வர ஸெங்கி தம் தூதுவர்களை டமாஸ்கஸுக்கு அனுப்பி வைத்தார். தம் பரிவாரங்களுடன் கணவர் ஸெங்கியை வந்தடைந்தார் ஸுமர்ருத். அந்த வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. பக்தாதிலிருந்து சுல்தானும் கலீஃபாவும் தங்களின் பிரதிநிதிகளை அனுப்பியிருந்தனர். ஸெங்கியிடம் நட்புறவு கொள்ள முடிவெடுத்த ரோமச் சக்கரவர்த்தியும் தம் சார்பாகத் தூதுவர்களை அனுப்பியிருந்தார். எகிப்திலிருந்தும் பிரதிநிதிகள் வந்திருந்தனர். ஹும்ஸு நகர் ஸெங்கிக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது. அதன் ஆளுநராக இருந்த முயினுத்தீன் உனூருக்கு பாரின் கோட்டை வழங்கப்பட்டது.
இராக்கின் மோஸூலுக்கும் சிரியாவின் அலெப்போவுக்கும் அதிபதியாக இருந்த இமாதுத்தீன் ஸெங்கியிடம் இப்பொழுது சிரியாவின் மையப் பகுதிகளும் வந்து சேர்ந்தன. ஆனபோதும் அந்த டமாஸ்கஸ்? அந்நகரம் வசப்படாதவரை, சிரியா முழுவதும் தம் தலைமையின் கீழ் வராதவரை, ஜெருசலத்துடன் போர் சரிவராது என்பதை ஸெங்கி உணர்ந்திருந்தார். முரண்டு பிடிக்கும் டமாஸ்கஸை எப்படி வீழ்த்துவது? தம் புது மனைவி ஸுமர்ருத் உதவினால் காரியம் எளிதாகி விடுமல்லவா? அவர் தம் மகன் ஷிஹாபுத்தீனிடம் பேச்சுவார்த்தை நடத்தி, டமாஸ்கஸைப் பெற்றுத் தந்துவிட்டால் கத்திக்கும் யுத்தத்திற்கும் வேலையின்றி காரியம் நிறைவேறுமல்லவா? காய் நகர்த்தினார் ஸெங்கி. ஆனால் ஸுமர்ருத் தயங்கி நின்றுவிட்டார். டமாஸ்கஸ் ஸெங்கிக்கு எட்டாக் கனியாகவே நீடித்தது. அது மட்டுமின்றி முன்னெச்சரிக்கை என்ற பேரில் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் விபரீத அரசியலிலும் இறங்கிவிட்டது. அதன் மூல காரணம் முயினுத்தீன் உனுர்.
1139ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஸெங்கி ஹர்ரானில் இருக்கும்போதுதான் ஸுமர்ருத்திடமிருந்து அவசரத் தகவல் வந்தது. மகன் ஷிஹாபுத்தீன் மஹ்மூதின் படுகொலை ஸுமர்ருத்தைத் தாளாக் கவலையில் தள்ளியது. உடனே படை திரட்டி டமாஸ்கஸ் சென்று, அதைக் கைப்பற்றி, என் மகனைக் கொன்ற கொலைகாரர்களைப் பழிதீர்க்கவும் என்று தம் கணவர் ஸெங்கிக்கு மன்றாடித் தகவல் அனுப்பியிருந்தார்.
டமாஸ்கஸ் எத்தனை நாள் கனவு? இது எப்பேற்பட்ட வாய்ப்பு? நழுவ விடுவாரா ஸெங்கி? உடனே கிளம்பினார். ஷிஹாபுத்தீன் மஹ்மூதின் இந்த மரணம், தாம் சிரியா முழுவதையும் ஒன்றிணைக்க உதவும் நல்வாய்ப்பாக அவருக்குத் தோன்றியது. ஆனால் அந்த நினைவைக் கனவாக்க அங்கு டமாஸ்கஸில் காத்திருந்தார் முயினுத்தீன் உனுர். ஹும்ஸு ஸெங்கியிடம் சென்ற பின் டமாஸ்கஸ் திரும்பிவிட்ட உனுர், மஹ்மூத் மரணமடைந்ததும் நகரைத் தம் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட்டார். அமீராக ஷிஹாபுத்தீனின் சகோதரர் ஜமாலுத்தீன் முஹம்மது ஆட்சியில் அமர்த்தப்பட்டாலும், இராணுவக் கட்டுப்பாடெல்லாம் உனுர் வசம் இருந்தது. என்றாவது ஒருநாள் ஸெங்கி வரத்தான் போகிறார், நகரைத் தாக்கத்தான் போகிறார் என்பதை உனுர் தெளிவாக அறிந்திருந்ததால், இரகசிய நடவடிக்கைகள் சிலவற்றில் ஈடுபட்டிருந்தார். அது முற்றுப் பெறுவதற்குள் இப்படி ஒரு படுகொலையும் விளைவாக ஸெங்கியின் படையெடுப்பும் ஏற்பட்டு விட்டதால் நகரின் தற்காப்பு முக்கியமாகி, அதை பலப்படுத்துவதில் மும்முரமாக இறங்கினார் உனுர்.
தம் படையினருடன் சிரியா வந்து சேர்ந்த ஸெங்கி முதலில் நேராக டமாஸ்கஸ் செல்லவில்லை. மாறாக, ரோமர்களின் பண்டைய நகரமான பால்பெக்கை வளைத்தார். பண்டைய ரோம நகரமான பால்பெக், லெபனானில் வளம் வாய்ந்த பிகா (Biqa) பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. அது டமாஸ்கஸின் கட்டுப்பாட்டில் இருந்தது. முயினுத்தீன் உனுர் தமது வரவை வெறுமே வேடிக்கைப் பார்த்தவாறு அமர்ந்திருக்க மாட்டார் என்பது ஸெங்கிக்கு நன்றாகத் தெரியும். அவரது படையை உளவியல் ரீதியாகப் பலவீனப்படுத்தினால் மட்டுமே தமது நேரடித் தாக்குதல் வெற்றிகரமானதாக அமையும் என்பதால் டமாஸ்கஸுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பால்பெக் அவரது முற்றுகைக்கு இலக்கானது.
பால்பெக் நகரைச் சுற்றிப் பதினான்கு கவண்பொறிகள் நிறுத்தப்பட்டன. தொடங்கியது தாக்குதல். ஓயாமல் பாய்ந்தன கவண் கற்கள். அந்நகரம் அடித்துத் துவைக்கப்பட்டது. பால்பெக்கும் இரண்டு மாத காலம் தற்காத்துப் போராடிப் பார்த்துவிட்டுச் சரணடைந்து வீழ்ந்தது. அதன் படையினர் முப்பத்தேழு பேரைச் சிலுவையில் அறைந்து கொன்றார் இமாதுத்தீன் ஸெங்கி. இரக்கமற்ற அந்த தண்டனையை யாரும் எதிர்பார்க்கவில்லை. தம்மை எதிர்க்கத் துணியும் டமாஸ்கஸுக்கு ஒரு பாடமாகவும் ஸெங்கியை எதிர்த்து நிற்பது எவ்வளவு அபாயகரமானது என்பதை உணர்த்தவும் அந்நகரின் படை வீரர்களின் மனத்தில் கிலியை ஏற்படுத்தவும் இந்த தண்டனை உதவட்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் அந்த மூர்க்கம் நேரெதிர் விளைவை உண்டு பண்ணி விட்டது. முயினுத்தீன் உனூரின் தலைமையில் டமாஸ்கஸ் ஒன்று கூடியது. வாழ்வா, சாவா பார்த்துவிடுவோம் என்று அணி திரண்டது. இதற்குள் குளிர்காலமும் தொடங்கிவிட, அது முடிந்து இளவேனிற் காலம் வரும்வரை ஸெங்கி தீவிரமான தாக்குதலில் இறங்க முடியாத நிலை. கிடைத்த அந்தச் சில மாத அவகாசத்தை உனுர் தம் இரகசியத் திட்டத்தைச் சிறப்பாக வடிவமைக்கப் பயன்படுத்திக்கொண்டார்.
அதனிடையே டமாஸ்கஸின் ஆட்சியாளர் ஜமாலுத்தீனைப் பணிய வைக்க ஸெங்கியின் முயற்சி ஒருபக்கம் தொடர்ந்தபடி இருந்தது. பல மாற்று வழிகளைப் பரிந்துரைத்துத் தகவல்கள் அனுப்பியவாறு இருந்தார் ஸெங்கி. ஹும்ஸு வேண்டுமா, அல்லது பால்பெக் வேண்டுமா, இல்லை வேறு என்னென்ன நகரங்கள்தாம் வேண்டும்? கேளுங்கள், தருகிறேன் என்று வந்தபடி இருந்த தகவல்கள் புதிய அதிபர் ஜமாலுத்தீனை அசைத்து அதற்கு அவர் இசைந்துவிடும் நிலைக்கும் வந்துவிட்டார். ஆனால் அப்படி இலேசில் விட்டுவிடுவாரா முயினுத்தீன் உனுர். ஜமாலுத்தீனின் ஆலோசனைக் குழுவால் ஸெங்கியின் பரிந்துரைகள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டன.
அடுத்தச் சில மாதங்களில், ஹி. 534/கி.பி. 1140ஆம் ஆண்டு, ஜமாலுத்தீன் முஹம்மது நோய்வாய்பட்டு மரணமடைந்தார். அதிபர் மறைந்து, தலைமையில் வெற்றிடம் ஏற்பட்ட அந்த வாய்ப்பை ஸெங்கி பயன்படுத்த முனைவதற்குள், ஜமாலுத்தீனுடைய மகனைப் பெயருக்கு ஓர் ஆட்சியாளராக அமர்த்தி விட்டு, அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தாம் எடுத்துக்கொண்டு ஸெங்கியை எதிர்த்து நின்றார் முயினுத்தீன் உனுர். இமாதுத்தீன் ஸெங்கியும் முழு அளவிலான தாக்குதலுக்கு தயாரானார். இதுதான் அந்தத் தருணம் என்று உனுரின் இரகசியத் திட்டம் செயலுக்கு வந்தது. ஜெருசல ராஜா ஃபுல்க் தம் படையுடன் புறப்பட்டுவர டமாஸ்கஸிலிருந்து பச்சைக் கொடி ஆட்டினார் முயினுத்தீன் உனுர்.
அடிபணிவதாக இருந்தால் அது இஸ்லாமிய விரோதிகளான பரங்கியர்கள் என்றாலும் பரவாயில்லை; ஆனால் எக்காலத்திலும் அலெப்போவின் முஸ்லிம் அதிபதியிடம் மட்டும் சரணடைவதாக இருக்கக்கூடாது என்று முடிவெடுத்து, உனுர் தீட்டியிருந்த விபரீதத் திட்டமும் முன்னெடுத்திருந்த வினோத நேசமும் வெளிச்சத்திற்கு வந்தன. அவை இமாதுத்தீன் ஸெங்கியின் மரணத்திற்குப் பிறகும் தொடரப்போகும் கூட்டணிக்கான தெளிவான ஒப்பந்தமாக, அதன் தொடக்க விழாவாக அமைந்துவிட்டன.
உஸாமா இப்னு முன்கித் என்பவர் ஷைஸரின் பனு முன்கித் வம்சத்தைச் சேர்ந்தவர். முதலாம் சிலுவை யுத்தம் தோன்றிய காலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். முயினுத்தீன் உனுரிடமும் பின்னர் இமாதுத்தீன் ஸெங்கி, நூருத்தீன் ஸெங்கி, ஸலாஹுத்தீன் அய்யூபி ஆகியோரிடமும் ஏறத்தாழ ஐம்பதாண்டு காலம் சேவை செய்தவர். கெய்ரோவின் ஃபாத்திமீக்களின் நீதிமன்றத்திலும் பணியாற்றியவர். கலவையான பல அரசியல் அனுபவங்கள் அடங்கிய அவரது வாழ்க்கை தனி ஒரு வரலாறு ஆகும் . அவரது கவிதைத் தொகுப்புகள் பல பிரபலம் என்றாலும் கிதாபுல் இஃதிபார் (‘Book of Learning by Example’ or ‘Book of Contemplation’) என்ற நூல் வரலாற்று ஆசிரியர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று.
பரங்கியர்களுடன் நெருக்கமாகப் பழகி, அவர்களுடன் நட்பு பேணும் அளவிற்கு உஸாமாவுக்கு வாய்ப்பு அமைந்ததால், சிலுவைப்போர் பற்றிய விளக்கங்களும் அவர்கள் முஸ்லிம்களின் பகுதியைக் கைப்பற்றி அங்கு மேற்கொண்டிருந்த வாழ்க்கை முறையும் இரு சமூகமும் கொண்டிருந்த உறவுகளும் அந்த நூலில் நிரம்பிக் கிடக்கின்றன. சுவையான பல தகவல்கள் அடங்கிய வரலாற்றுக் கிடங்கு அந்நூல்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் – கி.பி. 1138 – முயினுத்தீன் உனுர் தம்முடைய நண்பரான இந்த உஸாமாவைத் தூதுவராக ஜெருஸலத்திற்கு அனுப்பி வைத்திருந்தார். பெரும் சக்தியாக உருவாகிவரும் இமாதுத்தீன் ஸெங்கியை எதிர்க்க, பரங்கியர்களுடன் கூட்டணி ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்; அதற்கான சாத்தியத்தை ஆராய்ந்து சொல்லுங்கள் என்று அவருக்குப் பணி வழங்கப்பட்டிருந்தது. ஜெருசல நகரின் வாசலை வந்து தட்டும் இந்த வாய்ப்பு பரங்கியர்களுக்குக் கசக்கவா செய்யும்? உஸாமாவை மகிழ்ந்து வரவேற்றார்கள் அவர்கள். ஒப்பந்தத்தின் கொள்கைகளை வடிவமைத்தார் உஸாமா. பிறகு 1140ஆம் ஆண்டு டமாஸ்கஸில் முயினுத்தீன் உனுரின் ஆலோசனையின்படி அதன் நியதிகளை எழுதி எடுத்துக்கொண்டு மீண்டும் ஜெருஸலம் வந்தார். ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன் சாராம்சம் என்னவென்றால் –
டமாஸ்கஸைத் தாக்கவரும் இமாதுத்தீன் ஸெங்கியை அதன் சுற்றுப்புறத்திலிருந்தே விரட்ட பரங்கியர்களின் படை உதவும். இனி டமாஸ்கஸுக்கு உருவாகும் எவ்வித ஆபத்தையும் இரு அரசுகளும் ஒன்றிணைந்து கூட்டாக எதிர்கொள்ளும். பரங்கியர்களின் இராணுவச் செலவினங்களுக்காக முயினுத்தீன் உனுர் இருபதாயிரம் தீனார் அளிப்பார். 1132ஆம் ஆண்டு முஸ்லிம்கள் பரங்கியர்களிடமிருந்து மீட்ட பனியாஸைக் கைப்பற்ற உனுரின் தலைமையில் ஒன்றிணைந்த படையெடுப்பு நடக்கும். உனுர் அந்தக் கோட்டையை ஜெருசல ராஜாவிடம் ஒப்படைப்பார். நன்னம்பிக்கையை நிரூபிக்கும் விதமாக டமாஸ்கஸில் உள்ள பரங்கி பிணைக் கைதிகளுள் பிரமுகர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.
சுருக்கமாகச் சொல்வதென்றால் பரங்கியர் பாதுகாப்பில் தம்மை ஒப்படைத்துக்கொண்டு அவர்களின் பிராந்தியம் போல் ஆகிவிட டமாஸ்கஸ் எழுதித் தந்த அடிமை சாசனம் அது. ஆயினும் டமாஸ்கஸ் மக்கள் அதை எதிர்க்கவில்லை. மாறாக, ஸெங்கியின் மூர்க்கத்தனத்தைப் பார்த்து, அஞ்சியோ, வெறுத்தோ போயிருந்த அவர்கள் முயினுத்தீன் உனுரின் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டனர்.
அந்த ஒப்பந்தம் டமாஸ்கஸ் எதிர்பார்த்த பலனைத் தந்தது என்றுதான் சொல்ல வேண்டும். பரங்கியர்-டமாஸ்கஸ் கூட்டணிப் படைகளிடம் இடுக்கிக்குள் மாட்டிக்கொள்வதைப் போல் சிக்க விரும்பாத இமாதுத்தீன் ஸெங்கி பால்பெக்கின் நிர்வாகத்தைத் தம் நம்பிக்கைக்கு உரிய ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு, இந்தப் பின்னடைவிற்குப் பழிவாங்க விரைவில் திரும்பி வருவேன் என்று அவரிடம் தெரிவித்துவிட்டு, தம் படையுடன் வடக்கு நோக்கிக் கிளம்பினார். இமாதுத்தீன் ஸெங்கியின் நம்பிக்கைக்கு மிகவும் உகந்தவராக ஆகிவிட்ட அவர் வேறு யாருமல்லர். திக்ரித்தில் ஸெங்கிக்கு உதவி செய்து, பின்னர் மோஸூலுக்குப் புலம் பெயர்ந்த நஜ்முத்தீன் அய்யூப் – சுல்தான் ஸலாஹுத்தீனின் தந்தை.
மூன்று ஆண்டுகளுக்கு முன், பச்சிளங் குழந்தை ஸலாஹுத்தீனுடனும் தம் குடும்பத்தினருடனும் மோஸூலுக்குக் குடிபெயர்ந்திருந்தார் நஜ்முத்தீன் அய்யூப். திக்ரித்தில் அவர் தமக்கு அளித்த அவசரகால உதவிக்கு, இமாதுத்தீன் ஸெங்கி செய்ந்நன்றி மறவாமல் அவர்களுக்கு அபயம் அளித்து வரவேற்று, பின்னர் இப்பொழுது அளித்த அந்தப் பதவி நஜ்முத்தீன் அய்யூபிக்கும் அவருடைய சகோதரர் அஸாதுத்தீன் ஷிர்குவுக்கும் அரசியல் அரங்கில் வலுவான அடித்தளத்தை உருவாக்கியது. குழந்தை ஸலாஹுத்தீன், பின்னர் சுல்தான் ஸலாஹுத்தீன் ஆவதற்கான வாயில்களைத் திறந்தது.
oOo
உனுர், தாம் வாக்கு அளித்திருந்தபடி பனியாஸ் கோட்டையைக் கைப்பற்றி அதைப் பரங்கியர்களிடம் ஒப்படைத்தார். அதையடுத்து அரசு முறைப் பயணமாக ஜெருசலத்திற்கும் சென்று வந்தார். அடுத்த நான்காம் ஆண்டு முஸ்லிம்கள் உட்பட யாருமே எதிர்பாராத நிகழ்வு ஒன்று ஜெருசலம் முதல் ஐரோப்பா வரை பரங்கியர்களைப் பெரும் குலுக்கு குலுக்கித் தூக்கிப் போட்டது.; முஸ்லிம்களை மகிழ்ச்சிப் பெருக்கில் மூழ்கச் செய்தது.; சிலுவை யுத்த வரலாற்றில் மிக முக்கியமான அத்தியாயத்தை உருவாக்கியது. அது,
இமாதுத்தீன் ஸெங்கியின் எடிஸ்ஸா வெற்றி.
oOo
(தொடரும்)
-நூருத்தீன்
சத்தியமார்க்கம்.காம் – தளத்தில் 09 ஜனவரி 2022 வெளியானது
Image: File:Ioannes II Komnenos1138.jpg
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License