48. எடிஸ்ஸா வெற்றி
துருக்கியில் சான்லிஉர்ஃபா மாகாணத்தில் யூப்ரடீஸ் நதிப் படுகையில் இன்று உர்ஃபா (Urfa) எனும் பெயரில் அமைந்துள்ள நகரம்தான் பண்டைய எடிஸ்ஸா. செங்குத்தான பள்ளத்தாக்கில், வெகு திடமான அரண் சுவர்கள் முக்கோண வடிவில் மலைகளுக்கு இடையே நீண்டிருக்க, படுபாதுகாப்பாய் அமர்ந்திருந்தது அழகும் செல்வ வளமும் நிரம்பி வழிந்த எடிஸ்ஸா.
பைஸாந்திய ரோமப் பேரரசின் அதிகாரப்பூவமான மதம் கிறிஸ்தவம் என்று அறிவிக்கப்படுவதற்கு முன்பே எடிஸ்ஸா கிறிஸ்தவ காமென்வெல்த் ஆக நிறுவப்பட்டிருந்தது. அதனால் தாங்கள்தாம் உலகின் மூத்த கிறிஸ்தவ சமுதாயம் என்ற பெருமை எடிஸ்ஸா மக்களுக்கு இருந்து வந்தது. பின்னர் ஏழாம் நூற்றாண்டில் அந்நகரம் முஸ்லிம்கள் வசமானபோதும் பெருவாரியான அளவில் அர்மீனியர்களும் கிறிஸ்தவர்களும் தொடர்ந்து குடியிருந்தனர். பாதுகாப்புடனும் வளமுடனும் வாழ்ந்து வந்தனர்.
ஹி. 491/கி.பி. 1097ஆம் ஆண்டு, முதலாம் சிலுவைப் போர் என்ற போர்வையில் இஸ்லாமிய நிலப்பரப்புக்குள் இலத்தீன் கிறிஸ்தவர்கள் புகுந்தவுடன், சிலுவைப்படையின் தலைவர்களுள் ஒருவரான பால்ட்வினின் பிடிக்குள் எடிஸ்ஸா சென்று சேர்ந்தது. எடிஸ்ஸா நகரை பால்ட்வின் தமதாக்கிக்கொண்டது ஒரு தந்திரம். அச்சமயம் அந்நகரை தோராஸ் எனப்படும் வயது முதிர்ந்த அர்மீனிய ஆட்சியாளர் ஆண்டு வந்தார். பால்ட்வினை அரச விருந்தினராக வரும்படி அழைப்பு அனுப்பினார் தோராஸ். இருவருக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடித்துப்போய், நாமிருவரும் இனி தந்தை-மகன் என்று உறவு ஏற்படுத்திக்கொள்ள முடிவெடுத்தனர். பொதுமக்கள் முன்னிலையில் விமரிசையாக அதற்கான சடங்கும் நடைபெற்றது. இடுப்புக்கு மேல் வெற்றுடம்புடன் இருவரும் நெஞ்சோடு ஆரத் தழுவிக்கொள்ள, நீண்ட அங்கி ஒன்று அவர்கள் இருவரையும் ஒன்றிணைத்துப் போர்த்தப்பட்டது.
ஆனால், பேராசையுடன் கிளம்பி வந்திருந்த பால்ட்வினுக்கு இதெல்லாம் போதுமானதாக இல்லை. ஆட்சிக்காக இரத்த உறவையே இரத்தம் தெறிக்கக் குத்திக் கொல்வது வழக்கமான நடைமுறையாக இருந்தபோது, வளர்ப்புத் தந்தையாவது மகனாவது? அடுத்தச் சில மாதங்களில் அந்த அர்மீனிய வளர்ப்புத் தந்தை ரகசியமாய்க் கொல்லப்பட்டார். எடிஸ்ஸாவும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளும் பால்ட்வினின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்து சேர்ந்தன. கிழக்கு தேசத்தில் உருவானது சிலுவைப் படையின் முதல் ராஜாங்கம், County of Edessa எனப்படும் எடிஸ்ஸா மாநிலம். அது நாளடைவில் வடக்கு எல்லையில் பரங்கியர்களின் முக்கியமான மாநிலமாக உருப்பெற்று கம்பீரமாக நிலைபெற்றுவிட்டது. ஜெருசலம், அந்தாக்கியா, கான்ஸ்டண்டினோபிள் நகரங்களுக்கு அடுத்து எடிஸ்ஸா பரங்கியர்களுக்கு உன்னதம் என்றானது.
oOo
புவியியல் ரீதியாக எடிஸ்ஸாவுக்கு அமைந்திருந்த சாதகத்தால் அன்றிலிருந்து அலெப்போவுக்கும் மோஸூலுக்கும் நிரந்தரத் தலைவலி உருவானது. சிரியா, ஆசியா மைனர், இராக், மெஸபடொமியா ஆகியவற்றுக்கு இடையேயான வர்த்தகப் போக்குவரத்துக்கும் அது நிறம் மாறாத அபாய விளக்காகவும் ஆகிவிட்டது. அன்றிலிருந்து, கெர்போகா தொடங்கி பலக் இப்னு பஹ்ராம்வரை முஸ்லிம் தளபதிகள் பலமுறை முற்றுகை இட்டும் அசைந்துகொடுக்காமல் பரங்கியர் வசம் நீடித்தது எடிஸ்ஸா. அதன் அரண்களின் வலிமை, பரங்கியர்களின் மும்முரத் தற்காப்பு, அந்நகர் மீதான அவர்களது சிறப்பு அக்கறை எல்லாமாகச் சேர்ந்து முஸ்லிம்களுக்கு எட்டாத உயரத்திலேயே அது இருந்தது.
மோஸூலும் அலெப்போவும் தமது கட்டுப்பாட்டுக்குள் வந்து இராக்கும் சிரியாவும் ஒன்றிணைந்த சக்தி ஆகும் வாய்ப்பு அமைந்ததும் இமாதுத்தீன் ஸெங்கியின் கவனம் எடிஸ்ஸாவின் மீது அழுத்தந்திருத்தமாகப் பதிந்தது. அதற்காக அதன்மீது உடனே பாயாமல் வெகு கச்சிதமாகக் காய்களை நகர்த்தினார் ஸெங்கி. நல்வாய்ப்பாக, இத்தனை ஆண்டுகாலம் திறமையான, வலிமையான ஆட்சித் தலைமையின் கீழ் இருந்த எடிஸ்ஸாவுக்கு, போர்த் திறமை அற்ற பலவீனர் இரண்டாம் ஜோஸ்லின் அதிபதி ஆகியிருந்தார். அவருடைய தந்தை முதலாம் ஜோஸ்லின் மரணமடைந்தபின் வாரிசு உரிமையால் அந்நகரம் அவரது கைக்கு வந்து சேர்ந்திருந்தது.
இரண்டாம் ஜோஸ்லினுக்கு உயரம் குறைவு; பெரிய மூக்கு; துருத்திய கண்கள், இலட்சணக் குறைவான தோற்றம். அவருடைய அன்னை ஓர் அர்மீனியர். அதனால், தந்தை வழி உறவான மேற்கத்திய கிறிஸ்தவர்களைவிட, தாய் வழி உறவான கிழக்கத்திய அர்மீனிய கிறிஸ்தவர்களிடம் இரண்டாம் ஜோஸ்லினுக்குத் தனிப்பாசம், கூடுதல் நேசம். அது பரங்கியர் தளபதிகளுக்குள் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. இத்தகு பலவீனங்கள் நிறைந்திருப்பினும் ஜோஸ்லின் எடிஸ்ஸாவினுள் இருக்கும்போது அதை முற்றுகையிட்டு வெல்வதற்கான சாத்தியத்தின் மீது இமாதுத்தீன் ஸெங்கிக்கு முழு நம்பிக்கை ஏற்படவில்லை.
கி.பி. 1143ஆம் ஆண்டு முதற்கொண்டே, வடக்கே அர்துக் இளவரசர்களையும் தியார்பக்ரில் சிறுசிறு குர்திஷ் இராணுவக் குழுத் தலைவர்களையும் தம் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும் இமாதுத்தீன் ஸெங்கியின் இலட்சியமாக இருந்தது. ஹிஸ்னு கைஃபா பகுதியில் இருந்த காரா அர்ஸலான் என்ற அர்துக், இமாதுத்தீன் ஸெங்கியை சமாளிக்க என்ன செய்தார் என்றால் எடிஸ்ஸாவின் இரண்டாம் ஜோஸ்லினுடன் ஓர் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டார். ‘நீங்கள் எனக்கு உதவி அளியுங்கள். எங்கள் மாகாண நிலப் பகுதியில் சிலவற்றை உங்களுக்கு விட்டுத் தருகிறேன்’ என்பது அதன் ஷரத்து. ஸெங்கியிடம் தோற்பதைவிடப் பரங்கியர்களிடம் அடிபணிவது காரா அர்ஸலானுக்கு ஏற்புடையதாக இருந்தது.
கி.பி. 1144ஆம் ஆண்டு. எடிஸ்ஸாவுக்கு வடகிழக்கே எண்பது மைல் தொலவில் உள்ள தியார்பக்ரு நகரைத் தாக்கினார் இமாதுத்தீன் ஸெங்கி. அது ஒரு வகையான பாசாங்குத் தாக்குதல். ஒப்பந்த அடிப்படையில் இரண்டாம் ஜோஸ்லின் தம் படை பரிவாரங்களுடன் காரா அர்ஸலானின் உதவிக்குக் கிளம்பி வருவார் என்று ஸெங்கி யூகித்திருந்தார். அது வீண்போகவில்லை. தம் படையினர் அனைவரையும் திரட்டிக்கொண்டு எடிஸ்ஸாவிலிருந்து கிளம்பினார் ஜோஸ்லின். ஸெங்கி உருவாக்கியிருந்த திறமையான உளவுத் துறை அத்தகவலை உடனே அவரிடம் கொண்டு சேர்த்தது. அதற்குத்தானே காத்திருந்தார் ஸெங்கி. தியார்பக்ரு நகரிலிருந்து உடனே புறப்பட்டு எடிஸ்ஸா நோக்கிப் பறந்தது அவரது போர்ப் படை.
கி.பி. 1144, நவம்பர் 30ஆம் நாள். எடிஸ்ஸாவின் சுற்றுப்புற அரண் சுவர்களுக்கு வெளியே, அவற்றைச் சுற்றி வளைத்துக் களமெங்கும் ஸெங்கியின் படை நிரம்பி நின்றது. கொடிகளும் பதாகைகளும் காற்றில் படபடத்துப் பறந்தன. இலக்கு நிர்ணயிக்கப்பட்டுக் கவண் பொறிகள் நிறுத்தப்பட்டன, மளமளவென்று கூடாரங்கள் எழுப்பப்பட்டன. எடிஸ்ஸாவின் வடக்குப் பகுதியில் ஸெங்கிக்குக் கூடாரம் அமைக்கப்பட்டது. மறந்து, மரத்துப் போயிருந்த ஜிஹாது கடமை உணர்ச்சி முஸ்லிம் படையினருக்கு ஊட்டப்பட்டது. புத்துணர்ச்சியுடன் தோள் புடைத்து நின்றது முஸ்லிம் படை. தலைமை ஏற்று நின்றிருந்தார் இமாதுத்தீன் ஸெங்கி.
தளபதிகளையும் படை வீரர்களையும் ஒருவர் பாக்கி இல்லாமல் ஜோஸ்லின் தம்முடன் அழைத்துச் சென்றுவிட்டதால், காலணிகள் தயாரிப்பவர்கள், நெசவாளர்கள், பட்டு வியாபாரிகள், தையற்காரர்கள், மதகுருக்கள் போன்றோர் நகரினுள் எஞ்சியிருந்தனர். இவர்களை வைத்துக்கொண்டு இமாதுத்தீன் ஸெங்கியின் படையை எப்படி எதிர்ப்பது? வெலவெலத்து, படபடத்து, அஞ்சி நின்றது எடிஸ்ஸா.
முற்றுகை தொடங்கிய நாளிலிருந்து அந்நிகழ்வுகளின் இறுதிவரை, அவற்றின் நேரடி சாட்சியான சிரியாவின் பாதிரி அபுல் ஃபரஜ் பாஸில் (Abu’l-Faraj Basil) என்பவரின் வாக்குமூலம் வரலாற்றில் வெகு விரிவாகப் பதிவாகியுள்ளது. அவர் கிழக்கத்திய கிறிஸ்தவர். அவருக்கு ஸெங்கியின் முஸ்லிம் படையினர் மீதுதான் பரிவு இருந்தது. காரணம் மேற்கத்திய கிறிஸ்தவர்களிடம் அவருக்கு ஏற்பட்டிருந்த வெறுப்பு. அவருக்கு அவர்களைப் பற்றிய நன்மதிப்பும் இல்லை; அவர்கள்மீது மரியாதையும் அறவே இல்லை. ஆயினும் தாம் குடியிருக்கும் எடிஸ்ஸா நகரம் முற்றுகைக்கு உள்ளானதும் அதைத் தற்காக்க அவர் நேரடியாகக் களம் இறங்கினார்.
பரங்கியர்களின் பாதிரி ஒருவர் சிரிய பாதிரி அபுல் ஃபரஜ்ஜையும் அர்மீனிய பாதிரி ஒருவரையும் உதவிக்கு அழைத்துக்கொண்டு நகரின் தற்காப்புக்குத் தலைமை ஏற்றார். தங்களைச் சூழ்ந்துள்ள ஆபத்தையும் நிலைமையின் விபரீதத்தையும் முற்றிலும் உணர்ந்திருந்த அபுல் ஃபரஜ்ஜிற்கு ஸெங்கியுடன் ஏதேனும் பேச்சுவார்த்தை நிகழ்த்தி சமாதானம் ஏற்படுத்திக்கொண்டால் தேவலாம்; அனாவசிய உயிர் இழப்புகளைத் தவிர்க்கலாம் என்பது எண்ணம். அது மிகச் சரியான யோசனையும்கூட. அதற்கான வாய்ப்பையும் இமாதுத்தீன் ஸெங்கி வழங்கினார். ஆனால் மற்றவர்கள் அதைக் கேட்டால்தானே?
எடிஸ்ஸா முற்றுகையும் அதைச் சூழ்ந்து நின்ற ஆபத்தும் ஜோஸ்லினுக்கு அவசர உதவித் தகவலாய்ப் பேரவசரத்துடன் வந்து சேர்ந்தது. ஆனால் என்ன செய்வார் அவர்? அவரது படையின் ஆற்றல் எடிஸ்ஸாவினுள் இருந்தபடி அதை வெற்றிகரமாகத் தற்காக்கப் போதுமானதாக இருந்ததே தவிர, வெளியே களத்தில் ஸெங்கியை எதிர்த்துப் போரிடும் அளவிற்கெல்லாம் வலுவின்றி இருந்தது. தவிர, தமது போர்த் திறமையை நன்கு அறிந்திருந்த ஜோஸ்லினும் எடிஸ்ஸாவின் உதவிக்கு விரையும் முயற்சியில் இறங்கவில்லை. டெல்பஷீருக்குத் தம் படையுடன் சென்று கூடாரமிட்டு, உதவிப்படையை அனுப்புங்கள் என்று இதர மாநில பரங்கி ஆட்சியாளர்களுக்குத் தகவல் அனுப்பிவிட்டு, ஜெருசலப் பாதையைப் பார்த்தபடி சாய்ந்து அமர்ந்துகொண்டார்.
சுற்றி வளைத்த எடிஸ்ஸாவை அதன் மூச்சுத் திணற இறுக்கிப் பிடித்தார் இமாதுத்தீன் ஸெங்கி. உள்ளே போர் வீரர்கள் இல்லை; சாமான்யர்கள் மட்டுமே ஒன்றிணைந்து தற்காப்பு முயற்சியில் முனைந்துள்ளனர்; ஜோஸ்லினும் உதவிப் படையினரும் விரைந்து வந்து தங்களைக் காப்பாற்றுவர் என்பது மட்டுமே அவர்களது நம்பிக்கை என்பதை அவர் அறிந்திருந்ததால், மனோரீதியாக அவர்களைத் திகிலடையச் செய்து, சரணடைய வைப்போம் என்று திட்டமிட்டார். எடிஸ்ஸாவில் இருந்தவர்களுக்குத் தகவல் அனுப்பினார்.
“நிர்கதியான எடிஸ்ஸா மக்களே! உங்களது அனைத்து நம்பிக்கையும் தொலைந்துவிட்டதை நீங்கள் கண்டுகொண்டீர்கள். உங்களுக்கு இன்னும் என்ன வேண்டும்? நீங்கள் இன்னும் என்ன எதிர்பார்க்கின்றீர்கள்? உங்களின் பெண்டிரின் மீதும் இல்லங்களின் மீதும் உங்கள் மீதும் தன்னிரக்கம் கொள்ளுங்கள். உங்கள் நகரம் அழிக்கப்படாமலும் அதிலுள்ளோர் துடைத்து எறியப்படாமலும் இருக்க வேண்டுமாயின் இப்பொழுதே செயல்படுங்கள்” என்று சமாதான முன்மொழிவுகளைத் தொடர்ந்து அனுப்பியவாறு இருந்தார்.
அதைப் பரிசீலித்து, ஏற்றுக்கொள்ளும் அளவிற்காவது உள்ளே சரியான தலைமை இருக்க வேண்டுமல்லவா? பாதிரி அபுல் ஃபரஜ்தாம் அதில் ஆர்வம் காட்டினாரே தவிர, மற்ற அனைவரும் வீண் மமதையில்தான் இருந்தனர். போர் நிறுத்தத்தை முன்மொழிந்து ஸெங்கிக்குக் கடிதம் எழுதுவோம் என்ற அபுல் ஃபரஜ்ஜின் பரிந்துரையை ஒருவழியாக ஒப்புக்கொண்ட பரங்கியரின் தலைமைப் பாதிரி ஸெங்கிக்கு பதில் கடிதம் எழுதினார். அது மக்களுக்குப் படித்தும் காட்டப்பட்டது. ஆனால், மூளை மழுங்கிய பட்டு வியாபாரி ஒருவன் விரைந்து வந்தான், கடிதத்தைப் பிடுங்கினான், கிழித்து எறிந்தான். பிறகென்ன? வெற்று வீறாப்புடனும் தற்பெருமையுடனும் ஸெங்கியை அவமதிக்கும் வகையிலும் பதில்கள் அனுப்பப்பட்டன.
அதற்குப் பிறகும் ஸெங்கி அவசரப்படவில்லை. மேலும் தமது அவகாசத்தை நீட்டித்தார். “மேலும் போர் நிறுத்தம் நீடிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதையும் நாங்கள் ஏற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் உதவி வந்து சேர்கிறதா என்று பார்ப்போம். அப்படி ஏதும் வந்து சேராவிட்டால், சரணடையுங்கள்; உயிர் பிழையுங்கள்” என்று தகவல் அனுப்பினார். நாள்கள் நகர்ந்தனவே தவிர, எடிஸ்ஸாவுக்கு இரண்டாம் ஜோஸ்லினும் வரவில்லை. மக்களை மீட்க உதவிப் படையினரும் வரவில்லை.
இவ்விதம் தகவல் தூது நிகழ்ந்தபடி இருக்க, ஸெங்கியின் படையினர் எடிஸ்ஸாவுக்குக் குழிபறிக்கும் வேலையில் காரியமே கண்ணாக இருந்தனர். அரண் சுவர்களின் அடித்தளத்தில் சுரங்கம் தோண்டுவது தனித்திறன் வாய்ந்த நிபுணர்களின் வேலை. Sapper எனப்படும் சுரங்கம் தோண்டும் அந்த விற்பன்னர்கள் படையில் இடம் பெற்றிருப்பார்கள். போர்களின்போது கோட்டைகள், அரண் சுவர்கள் ஆகியவற்றின் அடித்தளத்தைச் சிதைக்கும் வகையில் சுரங்கம் தோண்டுவதே அவர்களது தலையாய பணி. தற்சமயம் எடிஸ்ஸாவின் ஒரே பெரும் பாதுகாவலாய் இருப்பது அதன் அரண்கள் அல்லவா? அதனால் அவற்றைத் தகர்க்கும் பணியில் அவர்கள் இடைவிடாது ஈடுபட்டிருந்தனர்.
விளைவாக வடக்குச் சுவரின் அடித்தளம் வெற்றிகரமாகச் சிதைக்கப்பட்டது. அவ்விடத்தில் ஏராளமான விறகுகளும் மரக் கட்டைகளும் நிரப்பப்பட்டன. அதன் பிளவுகளில் தார், மிருகக் கொழுப்பு, கந்தகம் ஆகியன இண்டு இடுக்கு மிச்சமில்லாமல் திணிக்கப்பட்டன. படை வீரர்கள் கனக்கச்சிதமாய் அனைத்தையும் நிறைவேற்றியதும் மேற்பார்வையிட்ட இமாதுத்தீன் ஸெங்கி, தலையசைத்து ஆணையிட, வைக்கப்பட்டது தீ. எடிஸ்ஸாவில் ஐம்பது ஆண்டுகாலம் கோலோச்சிய சிலுவைப்படையின் ஆதிக்கத்திற்கு அடிக்கப்பட்ட முதல் சாவு மணி!
oOo
கட்டியக்காரர்கள் படை வீரர்களுக்கு உரத்து அறிவித்தார்கள். ‘போருக்கு தயாராகுங்கள். சுவர் இடிந்து விழுந்ததுமே அதன் பிளவுகளில் புகுந்து பாயுங்கள். எடிஸ்ஸா இனி உங்கள் வசம்’
திகுதிகுவெனக் கொழுந்து விட்டு எரிந்தது தீ. வான் முட்ட எழுந்தது கரும்புகை. அச்சமயம் பார்த்து வடக்குத் திசையில் வீசிய காற்று, புகையை எடிஸ்ஸாவுக்குள் தள்ள, அச்சத்தாலும் புகை நெடியாலும் அம்மக்கள் மூச்சுத் திணறினார்கள். திடகாத்திரமாய் நெடிந்தோங்கி நின்றிருந்த அரண் சுவர்கள் அவற்றின் அடித்தளம் தீக்கிரை ஆனதில் மெல்ல மெல்ல ஆட்டங்கண்டு தள்ளாடின.
டிசம்பர் 24, கி.பி. 1144. அரண் சுவரின் பெரும் பகுதியொன்று இடிந்து விழுந்து வாய் பிளந்தது. நகரம் முஸ்லிம் படையினர் விழி எதிரே விரிந்தது. அவ்வளவுதான். ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு பேராரவாரத்துடன் கிடுகிடுவென்று உள்ளே புகுந்தது ஸெங்கியின் படை.
இதனிடையே நகரினுள் மற்றொன்றும் நிகழ்ந்திருந்தது. மோஸூலைச் சேர்ந்த முஸ்லிம் அறிஞரான மூஸா அல்-அர்மானீ என்பவர் தாமும் ஒரு வீரராகப் படையில் இணைந்திருந்தார். அவருக்கு ஒரு யோசனை தோன்றி, அதைச் செயல்படுத்தினார். அர்மீனியர்கள் அணியும் உடையைத் தேடி வாங்கி அணிந்து, எடிஸ்ஸாவினுள் புகுந்தார் அவர். பரங்கியர்கள் அவரைக் குடிமக்களுள் ஒருவர் என்று நினைத்துவிட, நகருக்குள் சுலபமாகச் சுற்றி வந்தார். பள்ளிவாசல் ஒன்றைக் கண்டதும் அதனுள் நுழைந்தார். அதன் நெடிய மினாராவினுள் விறுவிறுவென்று ஏறினார். மினாராவின் உச்சியில் நின்றபடி ‘அல்லாஹு; அக்பர் அல்லாஹு அக்பர்’ என்று அவர் உரத்து பாங்கு சொன்னதும் அரண் சுவரின் மீதிருந்த பரங்கியர்கள் திடுக்கிட்டு அரண்டு விட்டனர். முஸ்லிம்கள் நகரின் மறுபுறத்திலிருந்து தாக்குகின்றனர் என்று அவர்களாகவே நினைத்துக்கொண்டு, சண்டையை நிறுத்திவிட்டு சுவரிலிருந்து அலறியடித்தபடி இறங்கி வந்து, நகரெங்கும் அச்செய்தியைப் பரப்பியபடி ஓடினர்.
பிளந்த சுவர்களின் வழியே உள்ளே புகுந்த முஸ்லிம் படையினர் நகரில் இருந்தவர்களைத் தாக்கத் தொடங்கினார்கள். சிக்கியவர்களை எல்லாம் வகைதொகை இன்றி வெட்டிச் சாய்த்தார்கள். எங்கெங்கும் கூச்சல், களேபரம், மரண ஓலம். ஏறத்தாழ ஆறாயிரம் மக்கள் கொல்லப்பட்டனர் என்கிறது ஒரு குறிப்பு. பெண்களும் பிள்ளைகளும் இளையவர்களுமாகப் பெரும் மக்கள் திரள் ஒன்று கோட்டையின் மேல்புறத்திற்கு ஓடியது. ஆனால் அங்கு அதன் வாயில் கதவு அடைபட்டிருந்தது. காரணம் பரங்கியரின் பாதிரி.
‘என் முகத்தைக் காணாதவரை நீங்கள் கதவைத் திறக்கக் கூடாது’ என்று அவர் காவலாட்களுக்குக் கட்டளை இட்டிருந்தார். அக்கட்டளையை அட்சரம் பிசகாமல் பின்பற்றிய காவலர்கள் கதவைத் திறக்க மறுக்க, கூட்டம் கூட்டமாக மேல் தளத்திற்கு ஓடி வந்தவர்கள், மேற்கொண்டு ஓட வழியின்றி, ஒருவர் மேல் ஒருவர் ஏறி மிதிக்க… படுபயங்கரமான காட்சியாக அது மாறியது. அந்நெரிசலில் சிக்கி, நசுங்கி, மிதிபட்டு, மூச்சுத் திணறி ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் மரணமடைந்தனர் என்று அபுல் ஃபரஜ் குறிப்பு வைத்திருக்கின்றார். இமாதுத்தீன் ஸெங்கி தாமே நேரடியாகத் தலையிட்டு, கட்டளையிட்டுச் செயல்பட்ட பின்னரே அனைத்துக் களேபரமும் அடங்கின.
பாதிரி அபுல் ஃபரஜ்ஜைச் சந்திக்கத் தமது படையின் உயரதிகாரி ஒருவரை அனுப்பினார் ஸெங்கி.
‘மதிப்பிற்குரிய அபுல் ஃபரஜ் அவர்களே! தாங்களும் தங்களுடைய சமூகமும் விசுவாசத்துடன் இருப்பீர்கள் என்று உங்களது சிலுவையின் மீதும் புதிய ஏற்பாட்டின் மீதும் ஆணையிட்டுக் கூறுங்கள். இருநூறு ஆண்டுக் காலம் அரபியர்கள் இந்நகரை ஆண்ட போது இது எவ்விதம் செழித்துத் திகழ்ந்தது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். பரங்கியர்கள் இதை ஆக்கிரமித்து, இந்த ஐம்பது ஆண்டுகளில் இது எவ்விதம் பாழாகிச் சீரழிந்து கிடக்கிறது என்பதை இன்று காண்கின்றீர்கள். எங்கள் தலைவர் இமாதுத்தீன் ஸெங்கி உங்களை கண்ணியத்துடன் நடத்த தயாராக இருக்கின்றார். சாந்தியுடன் வாழுங்கள், அவரது அதிகாரத்தின் கீழ் பாதுகாப்பாக இருங்கள், அவருக்காக பிரார்த்தியுங்கள்’ என்று அபுல் ஃபரஜ்ஜிடம் தெரிவித்தார் அந்த அதிகாரி.
சிரியர்களும் அர்மீனியர்களும் கோட்டையிலிருந்து பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். நகரின் பூர்வ குடிகளான அவர்கள் தத்தம் இல்லங்களுக்குப் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களது பொருட்கள் அனைத்தும் அவர்களிடம் திருப்பித் தரப்பட்டன. ஆனால் பரங்கியர்களிடமிருந்து, தங்கம், வெள்ளி, புனிதக் குடுவைகள், வழிபாட்டுக் குவளைகள், விலைமதிப்பற்ற உலோகத்தால் தயாரிக்கப்பட்ட தட்டுகள், அலங்காரச் சிலுவைகள், நகைகள் என அனைத்தும் பிடுங்கப்பட்டன. இலத்தீன் பாதிரிகளும் பிரபுகளும் மேட்டுக்குடியினரும் அவர்களது மேலங்கி நீக்கப்பட்டுச் சங்கிலியால் கட்டப்பட்டு அலெப்போ நகருக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். மீதம் இருந்தவர்களுள் கைவினைஞர்கள் அடையாளம் காணப்பட்டு, கைதிகளாக ஸெங்கியின் படைத் தேவைகளுக்கு ஏற்பப் பணிபுரிய வைக்கப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட இதர பரங்கியர்கள் கொல்லப்பட்டனர்.
டிசம்பர் 26, கி.பி. 1144 / ஹி.539 எடிஸ்ஸா நகரம் மீண்டும் முஸ்லிம்கள் வசமானது. பன்னிரண்டாம் நூற்றாண்டின் மாபெரும் நிகழ்வுகளுள் ஒன்றாக வரலாற்றில் பதிவானது இமாதுத்தீன் ஸெங்கி சாதித்த அவ்வெற்றி.
முஸ்லிம்கள் அனைவரும் அச்செய்தி அளித்த ஆனந்த அதிர்ச்சியில் திக்குமுக்காடினார்கள்! சிலுவைப்படை பரங்கியர்கள் அப்படியொன்றும் அசைக்க முடியாத சக்தி வாய்ந்தவர்களல்லர் என்ற யதார்த்தம் அவர்களுக்குள் புது இரத்தம் பாய்ச்சியது! ஜெருசலம் இனி தொட்டுவிடும் தூரம்தான் என்ற சாத்தியம் ஒளி வீசியது. ஜிஹாது போர்க் குரலாக, மந்திரச் சொல்லாகப் பரவியது.
அகமகிழ்ந்து இமாதுத்தீன் ஸெங்கியைப் புகழ்ந்தார் ஸெல்ஜுக் சுல்தான். பக்தாத் கலீஃபாவோ அல்-மாலிக் அல்-மன்சூர், ஸைனத்துல் இஸ்லாம், நாசிர் அமீர் அல்-மூஃமின் என்று பக்கம் பக்கமாய் நீளும் அளவிற்கு ஸெங்கிக்குப் பட்டங்களுக்கு மேல் பட்டம் அளித்துத் தள்ளினார்.
தங்கள் கைக்குள் இருப்பதாய்
கனவில் வாழும் காஃபிர் ஆட்சியாளர்களிடம்
கனவைக் கலைத்து, நிலத்தை விடுத்து
கடிதில் வெளியேறிவிடச் சொல்லுங்கள்
இனி இந்த நிலம், ஸெங்கியின் நிலம்!
என்று கவிதை வடித்துப் புகழ்ந்தார் கவிஞர் அல்-ஃகைஸரானி.
இங்கு இவ்விதம் ஆனந்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, பரங்கியர்கள் அனைவரும் இச்செய்தியை நம்ப முடியாமல் திகைத்து, அதிர்ச்சியில் உறைந்து விட்டார்கள்! ஐரோப்பாவில் போப்பும் சக்கரவர்த்திகளும் கோமான்களும் மற்றும் அனைவரும் தங்களது காலடியில் நிலநடுக்கத்தை உணர்ந்தார்கள்! இலத்தீன் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது!
அடுத்த இரண்டு ஆண்டுகளில் வரலாறு மற்றொரு திருப்புமுனையைச் சந்தித்தது. அது?
oOo
(தொடரும்)
-நூருத்தீன்
சத்தியமார்க்கம்.காம் – தளத்தில் 23 ஜனவரி 2022 வெளியானது
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License