சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 69

69. எகிப்து – இறுதிச் சுற்று (பாகம்-2)

‘இது எம் குடும்பப் பெண்டிரின் தலைமுடி. பரங்கியரிடமிருந்து மீட்க வருமாறு அவர்கள் உங்களிடம் மன்றாடுகின்றார்கள்’ என்று நிலைமையின் அவசரத்தையும் அபாயத்தையும் சரியான விகிதத்தில் கலந்து தகவல் அனுப்பியிருந்த ஃபாத்திமீ கலீஃபா அல்-ஆதித், நூருத்தீனுக்கு மூன்று வாக்குறுதிகள் அளித்திருந்தார். அவை,

எகிப்தில் மூன்றில் ஒரு பங்கு;
நூருத்தீனின் தளபதிகளுக்கு நிலம்;
ஷிர்குஹ் எகிப்தில் தங்க அனுமதி.

அல்-ஆதிதின் தகவல் வந்தபின் நிகழ்ந்தவற்றைப் பின்னர் சுல்தான் ஸலாஹுத்தீன் விவரித்திருக்கிறார். அதை வராலாற்று ஆசிரியர் இப்னுல் அதீர் பதிவு செய்துள்ளார்.

அல்-ஆதிதின் கோரிக்கைகள் வந்தபோது, நூருத்தீன் என்னை அழைத்து எகிப்தில்என்ன நடக்கிறது என்று என்னிடம் தெரிவித்தார். பின்னர் ‘ஹும்ஸில் உள்ள உனது சிற்றப்பா ஷிர்குஹ்வைச் சந்தித்து, தாமதிக்காமல் உடனடியாக இங்கு வருமாறு தெரிவி’ என்று கூறினார். நான் அலெப்போவிலிருந்து கிளம்பினேன். ஆனால், ஏற்கனவே கிளம்பி வந்துகொண்டிருந்த சிற்றப்பாவை ஒரு மைல் தூரத்தில் சந்தித்தேன். நூருத்தீன் அவரை எகிப்துக்குப் புறப்பட தயாராகும்படிக் கட்டளையிட்டார்.

நூருத்தீனுக்குத் தகவல் வந்ததுபோல் எகிப்திலிருந்து ஷிர்குஹ்வுக்கும் செய்திகள் வந்துகொண்டுதான் இருந்தன. நிலைமை மோசமாவதை உணர்ந்ததும் நூருத்தீனைச் சந்தித்து ஆலோசனை புரிய அவர் உடனே கிளம்பி வந்துவிட்டார்.

‘ஷிர்குஹ்! எகிப்துக்கு அணிவகுக்க தயாராகவும்’ என்றார் நூருத்தீன்.

ஷிர்குஹ்வுக்குச் சில கவலைகள் இருந்தன. முதலாவது, வஸீர் ஷவாரின் நயவஞ்சகம். அடுத்தது பொருளாதார நெருக்கடி. நிதி ஒரு தடையா என்ன? போருக்கான செலவாக ஷிர்குஹ்வுக்கு இரண்டு இலட்சம் தீனார்கள் அளிக்கப்பட்டன. போர்த் தளவாடங்கள் வழங்கப்பட்டன.

‘நீ எகிப்துக்குச் செல்வது தாமதமாகுமெனில், நான் செல்ல வேண்டியது கட்டாயமாகிவிடும். நாம் இவ்விஷயத்தைப் புறக்கணித்தால், பரங்கியர்கள் எகிப்தைக் கைப்பற்றிவிடுவார்கள்’ என்றார் நூருத்தீன்.

ஷிர்குஹ் ஸலாஹுத்தீனைப் பார்த்தார், ‘யூஸுஃப்! தயாராகு!’ என்றார்.

‘அதைக் கேட்ட நான் கத்தியால் குத்தப்பட்டதைப் போல் உணர்ந்தேன். ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீர் என்னை அதன் மன்னனாகவே ஆக்கியபோதிலும் நான் எகிப்துக்கு வரமாட்டேன். அலெக்ஸாந்திரியாவில் பட்ட துன்பத்தை நான் மறக்க மாட்டேன்’ என்றேன்.’

என் சிற்றப்பா நூருத்தீனிடம், ‘ஸலாஹுத்தீன் படையினருடன் எகிப்து செல்ல வேண்டியது முற்றிலும் அவசியம்’ என்றார். நூருத்தீன் என்னிடம், ‘நீ உன் சிற்றப்பாவுடன் செல்ல வேண்டும் என்பது என் கட்டளை. நமது சந்திப்பு முடிவடைந்தது’ என்று கூறிவிட்டார்.

படையிலிருந்து இரண்டாயிரம் குதிரை வீரர்கள், மேலதிகமாக ஆறாயிரம் துருக்கிய வீரர்கள் ஷிர்குஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அஸதிய்யா எனப்படும் குர்திய உயரடுக்குப் படைப் பிரிவிலிருந்து ஆயிரக்கணக்கில் வீரர்கள், முக்கியமான தளபதிகள் படையில் இணைக்கப்பட்டனர். அந்தப் படை டமாஸ்கஸை அடைந்தது. ஒவ்வொரு படை வீரருக்கும் இருபது தீனார் ஊக்கத்தொகை அளித்தார் நூருத்தீன்.

ஸலாஹுத்தீன் அடுத்து நிகழ்ந்ததைத் தெரிவித்துள்ளார்.

படை கிளம்பும் நேரத்தில் நூருத்தீன் என்னிடம், ‘நீ உன் சிற்றப்பாவுடன் எகிப்துக்குச் செல்’ என்றார். என்னிடம் போதுமான பொருளாதார வசதியோ, ஆயுதங்களோ இல்லை என்று முறையிட்டேன். எனக்குத் தேவையான நிதியை அளித்தார்; ஆகவே நானும் சிற்றப்பா ஷிர்குஹ்வுடன் எகிப்துக்கு அணிவகுத்தேன். நூருத்தீனின் மறைவிற்குப் பின் எல்லாம் வல்ல அல்லாஹ் நான் எதிர்பார்க்காததை எல்லாம் எனக்கு அருளினான்.

அந்தப் படையெடுப்பு தமது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமையப் போவதை ஸலாஹுத்தீனும் அறிந்திருக்கவில்லை; அப்படியொரு திட்ட வரைவுடனும் ஷிர்குஹ் அவரை எகிப்துக்கு இழுக்கவில்லை. தம் அண்ணன் மகனின் மீது ஷிர்குஹ்வுக்கு இயற்கையான வாஞ்சை. போர்க்களத்தில் அவரது வீரம் மிளிரும் என்ற நம்பிக்கை இருந்திருக்கலாம். அதற்காக அவரை தயார்படுத்தி உரமேற்றலாம் என்று நினைத்திருக்கலாம். எது எப்படியோ, ஒவ்வொரு முறை தாம் எகிப்துக்குச் செல்லும்போதும் ஸலாஹுத்தீனை அவர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றார் என்பது மட்டும் உண்மை. வேண்டா வெறுப்புடன்தான் இந்தப் படையெடுப்பிலும் ஸலாஹுத்தீன் கலந்துகொண்டார் என்பதும் மெய்.

ஆனால் பிற்காலத்தில் இந்நிகழ்வை விவரித்த ஸலாஹுத்தீன், “மற்ற படைவீரர்களைப் போலன்றி, நான் எகிப்துக்குச் செல்வதை வெறுத்தேன். தயக்கத்துடன்தான் நான் சிற்றப்பா ஷிர்குஹ்வுடன் சென்றேன்.

இதுதான் அல்லாஹ்வினுடைய வாக்கின் அர்த்தம் – நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று குர்ஆனின் இரண்டாம் அத்தியாயத்தின் 216ஆம் வசனத்தைக் குறிப்பிட்டுள்ளார். அன்றைய நிகழ்வுடன் அவருக்கு அற்புதமாகப் பொருந்திவிட்ட இறைக்கூற்று அது.

டிசம்பர் 17, 1168. சிரியாவிலிருந்து மீண்டும் எகிப்து நோக்கிச் சென்றது அஸாதுத்தீன் ஷிர்குஹ் தலைமையிலான நூருத்தீனின் படை.

oOo

ஃபுஸ்தத்தைச் சாம்பலாக்கிவிட்டாவது பரங்கியர்களிடம் எகிப்து வசமாகாமல் தடுக்க வேண்டும் என்று நினைத்த வஸீர் ஷவார், அத்தனைக்கும் பிறகும்கூட சிரியாவிலிருந்து வரும் நூருத்தீனின் உதவியை மீறிப் பரங்கியர்களிடம் இணங்கிப் போக நினைத்தார்; பேரம் பேசிக் கெஞ்சினார் என்பதுதான் கொடுமை.

‘ஒரு மில்லியன் எகிப்து தீனார்கள் தருகிறேன். அதில் ஒரு இலட்சம் இதோ இருக்கிறது. மிச்சத் தொகையை விரைவில் திரட்டித் தருகிறேன். தயவுசெய்து திரும்பிச் செல்லுங்கள்’.

பணம் காய்க்கும் ஃபுஸ்தத் எரிந்துகொண்டிருக்க, அந்நகர மக்கள் சிதறி ஓடியிருக்க, அப்பெரும் தொகையை எப்படித் திரட்டுவது? அதனால் பத்தில் ஒரு பங்கை மட்டும் செலுத்தி, கெஞ்சினார் வஸீர் ஷவார்.

நூருத்தீனுக்குத் தகவல் சென்று விட்டது; ஷிர்குஹ்வின் தலைமையில் வலிமையான படை வருகிறது; எகிப்தியர்களின் மனோ நிலைமையும் எப்படியும் எதிர்த்து நிற்பது என்ற முடிவுக்கு வந்து விட்டது என்பதையெல்லாம் கணக்கிட்ட அமால்ரிக் ஒரு இலட்சம் தீனாரைப் பெற்றுக்கொண்டு வஸீர் ஷவாரின் மகனை விடுவித்தார். சொச்சத் தொகையை விரைந்து செலுத்து என்று தம் எகிப்து முயற்சி இம்முறையும் தோல்வியுற்ற நிலையில், அத்துடன் அந்தப் படையெடுப்பை முடித்துக்கொண்டு தம் படையுடன் ஜனவரி 2, 1169 ஃபலஸ்தீனுக்குத் திரும்பி விட்டார்.

அடுத்த ஆறாம் நாள் ஷிர்குஹ்வின் தலைமையில் நூருத்தீனின் படை கெய்ரோ வந்தடைந்தது. ஷிர்குஹ்வை ஆரத்தழுவி வரவேற்றது எகிப்து. வஸீர் ஷவாரின் இடைவிடா பரங்கியர் நட்பால் எகிப்தியர்கள் வெறுத்துப் போயிருந்தனர். பில்பைஸில் பரங்கியர்கள் நிகழ்த்திய கொடூரங்களினால் ஏற்பட்டிருந்த வெறுப்பும் ஆத்திரமும் அவர்களுக்கு ஷவாரின் மேல் திரும்பியிருந்தன. எல்லாமாகச் சேர்ந்து, ஃபாத்திமீ ஷீஆக்கள் அதுநாள் வரை தங்களின் பரம விரோதியாகவே ஸன்னி முஸ்லிம்களைக் கருதியிருந்த போதிலும் நூருத்தீனும் ஷிர்குஹ்வும் சிலுவைப்படை பரங்கியர்களைவிட மேலானவர்கள் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.

ஜனவரி 8, 1169. ஃபாத்திமீ கலீஃபா அல்-ஆதித், ஷிர்குஹ்வை வரவேற்று கௌரவிக்கும் விதமாக அலங்கார அங்கி ஒன்றை அணிவித்தார். அன்றைய அவர்களது வழக்கில் அது ஆகச் சிறந்த வரவேற்பு; அங்கீகாரம். முதன் முதலாக ஷிர்குஹ்வை எகிப்துக்கு அழைத்து வந்துவிட்டு, தமது காரியம் நிறைவேறியதும் அவரை ஓட்டி விரட்டிய வஸீர் ஷவார் இப்பொழுது தமது கண்ணெதிரே ஃபாத்திமீ கலீஃபாவின் சிறப்புக்குரியவராக நின்றிருக்கும் ஷிர்குஹ்வைப் பார்த்தார். மனத்திற்குள் என்ன எண்ணம் ஓடியிருக்கும்? ஆனால் அனைத்தையும் மறைத்துக்கொண்டு முகத்தில் உற்சாகத்தைப் பூசிக்கொண்டார். அடுத்தடுத்த நாட்களில் ஷிர்குஹ்வும் படையினரும் தங்கியிருக்கும் பகுதிகளுக்கு அதிகாலையில் சென்று ஷிர்குஹ்வுடன் நட்பாகப் பேசிக்கொண்டு காலாற நடப்பார். ஆயினும் அல்-ஆதித், நூருத்தீனுக்கு வாக்குறுதி அளித்தது மட்டும் தாமதமாகியது. அதில் வஸீர் ஷவாரின் குறுக்கீடும் தடையும் இருந்திருக்க வேண்டும் என்று நூருத்தீனின் படையினருக்கு சந்தேகம் தோன்றியது.

வஸீர் ஷவாரின் நயவஞ்சக மூளை எளிதில் அனைத்து அதிகாரங்களையும் செல்வாக்கையும் நூருத்தீனுக்கும் ஷிர்குஹ்வுக்கும் தூக்கிக் கொடுத்துவிட அனுமதித்து விடுமா என்ன? ஷிர்குஹ்வையும் ஸலாஹுத்தீனையும் கொன்றுவிட்டு, நூருத்தீனின் துருப்புகளை வசப்படுத்திக்கொண்டு பரங்கியர்களிடமிருந்து தற்காத்துக்கொள்ளலாம் என்று அடுத்துத் திட்டமிட்டார் அவர்.

ஷிர்குஹ்வையும் தளபதிகளையும் விருந்துக்கு அழைப்பது; தடபுடலாக உணவளிப்பது; பின்பு கொல்வது என்பது திட்டம். ஆனால் அவருடைய மகன் அல்-காமில் அதை அறிந்து வெகு தீவிரமாக எதிர்த்தார்.

“அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீ அவ்விதம் செய்ய நினைத்தால் நான் அதை ஷிர்குஹ்விடம் தெரிவித்துவிடுவேன்” என்று மிரட்டினார்.

“நான் கொல்லாவிட்டால், நாம் எல்லோரும் கொல்லப்படுவோம்” என்று அச்சம் தெரிவித்தார் ஷவார். தான் இழைத்த கேட்டிற்கு என்றேனும் எப்போதேனும் ஷிர்குஹ் பழிவாங்கி விடக்கூடும் என்ற அச்சமும் அவருக்குள் இருந்தது.

“இருக்கலாம். நாம் முஸ்லிம்களாக இருக்கும்போது, நமது நாட்டிலுள்ள முஸ்லிம்களால் கொல்லப்படுவது, பரங்கியர்கள் இந்நாட்டைப் பிடித்து அவர்களால் நாம் கொல்லப்படுவதைவிட மேலானது. ஷிர்குஹ் இன்னும் கைதாகவில்லை என்பதால்தான் பரங்கியர்கள் திரும்பி வராமல் இருக்கின்றனர். அப்படி ஏதேனும் அவருக்கு நேர்ந்தால் பரங்கியர் நம்மை அழிக்க வருவது நிச்சயம். அதன் பிறகு, அல்-ஆதித், நூருத்தீனிடம் உதவிக்குக் கோரிக்கை விடுத்தால் நம்மைக் காப்பாற்ற அவர் ஒரே ஒரு குதிரைவீரனைக்கூட அனுப்பப் போவதில்லை. பரங்கியர்கள் இந்நிலத்தை முற்றிலுமாகக் கைப்பற்றிவிடுவார்கள்”

அந்த எச்சரிக்கயில் இருந்த சாத்தியம் சுட்டது. ஷவார் தமது திட்டத்தைக் கைவிட்டார். ஆனால் ஷிர்குஹ்வின் தரப்பு, வஸீர் ஷவாரின் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்தது. அதை முன்முனைப்புடன் நிறைவேற்ற காரியத்தில் இறங்கியவர் ஸலாஹுத்தீன் யூஸுஃப். ஒருநாள், பனிமூட்டமான காலை நேரம். தம் பேச்சுவார்த்தையைத் தொடர்வதற்கு ஷிர்குஹ்வின் கூடாரத்திற்குச் சென்றார் வஸீர் ஷவார். அவரைத் தாக்கிக் கைது செய்து கூடாரத்தில் அடைத்தார் ஸலாஹுத்தீன். செய்தி அல்-ஆதிதுக்குச் சென்றது. உடனே அவர் தகவல் அனுப்பினார்.

‘ஷவாரின் தலையை அனுப்பி வைக்கவும்’

நிறைவேற்றினார் ஸலாஹுத்தீன். வஸீர் ஷவாரின் தலையைச் சீவி எடுத்து, ஃபாத்திமீ கலீஃபா அல்-ஆதிதுக்கு அனுப்பி வைக்க, குறுக்கு மூளை ஷவாரின் அத்தியாயம் அத்துடன் முடிவுக்கு வந்தது. அதையடுத்து, ஃபாத்திமீ கலீஃபா அல்-ஆதித் அதிகம் யோசிக்கவில்லை. அன்றே, உடனே, அஸாதுத்தீன் ஷிர்குஹ்வை வஸீராக அறிவித்தார். அப்பாஸிய கலீஃபாவுக்குக் கட்டுப்பட்ட ஸன்னி முஸ்லிம் சுல்தான் நூருத்தீனின் தளபதி அஸாதுத்தீன் ஷிர்குஹ், ஃபாத்திமீ கலீஃபா அல்-ஆதிதின் வஸீர் ஆனார்.

கெய்ரோவுக்குள் ஒரு கூட்டம் அந்த நியமனத்தை எதிர்த்தது. பதவியேற்க நகருக்குள் சென்ற ஷிர்குஹ்வை அது சூழ்ந்து, கலகச் சூழல் உருவானது. தமது உயிருக்கும் பாதுகாப்பிற்கும் அத்தகு மூர்க்கத்தன எதிர்ப்பு அபாயம் என்பதை உணர்ந்த ஷிர்குஹ் சட்டென்று சாதுர்யமான காரியம் ஒன்றைச் செய்தார். அந்தக் கூட்டத்தின் அத்தனை ஆத்திரத்தையும் வஸீர் ஷவாரின் அரண்மனையை நோக்கித் திருப்பினார்.

‘வஸீர் ஷவாரின் மாளிகையில் உள்ளவை அனைத்தும் உங்களுக்குரியது. யாருக்கு எது வேண்டுமோ, எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் சமர்த்து’ என்று அவர் அறிவிக்க, ஷவாரின் மாளிகையை நோக்கித் தலைதெறிக்க ஓடியது கூட்டம். சடுதியில் சூறையாடப்பட்டது அந்த அரண்மனை. ஒருபொருள் பாக்கியின்றி அனைத்தும் துடைத்து எடுத்துச் செல்லப்பட்டன. ஷிர்குஹ் அந்த மாளிகையை அடைந்தபோது அவர் அமர்வதற்குக்கூட ஒரு நாற்காலி இல்லை.

oOo

அத்தனை ஆண்டுகால முயற்சிக்குப் பின் பரங்கியருடன் யுத்தமின்றி, இரத்தமின்றி, எகிப்துக்குள் நுழைந்து அந்நாட்டின் வஸீராகவும் அமர்ந்துவிட்ட அஸாதுத்தீன் ஷிர்குஹ்வின் ஆயுள் அடுத்த இரண்டே மாதத்தில் சட்டென்று முடிவுற்றுவிட்டது என்பது சோகம். ஷிர்குஹ் உணவுப்பிரியர். வெகு ஏரளமாக இறைச்சி உண்பவர். ஒருநாள் மூக்கு முட்ட உட்கொண்டதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, விபரீதமானது அவரது உடல்நிலை. நூருத்தீனின் தளபதிகளுள் தலைசிறந்த, எகிப்தும் சிரியாவும் ஒன்றிணையப் பாலமிட்ட, துருப்பினரிடம் தயாளமும் கண்டிப்பும் ஒருங்கே கொண்ட, அவர்களுக்கு உவப்பான, அஸாதுத்தீன் ஷிர்குஹ், ஹி. 564 ஜமாதுல் ஆகிர் 22 / மார்ச் 23, 1169 – சட்டென்று மரணமடைந்தார்.

பிறிதொரு புதிய சகாப்தம் தொடங்குவதற்காக இறைவிதி அவ்விதம் அமைந்திருந்தது.

மூன்று நாட்களைத் துக்கத்தில் கழித்துவிட்டு, அடுத்து யாரை வஸீராக நியமிப்பது என்று ஃபாத்திமீ கலீஃபா அல்-ஆதித் ஆலோசனை நிகழ்த்தினார். அய்னல்-தவ்லா எனும் துருக்கியர், ஷிர்குஹ்வுக்கு நெருக்கமான குர்திய வீரர் அல்-மஷ்துப், ஸலாஹுத்தீன் ஆகியோரை அவர்கள் பரிசீலித்தனர். இறுதியாக அவர்கள் தேர்ந்தெடுத்தது ஸலாஹுத்தீனை. அதற்கான காரணம் – அவருக்குத் தகுதி குறைவு என்ற அவர்களின் முடிவு. தகுதி வாய்ந்த மற்றவர்களைவிட அனுபவம் குறைவான, பலவீனமான, தங்களது செல்வாக்கிற்கு எளிதில் வளையத்தக்க, பின்னர் நாம் விரும்பும்போது எளிதில் தூக்கி எறியத்தக்க இந்த இளைஞரே நமக்குச் சரியான வஸீர் என்று அவரை ஆலோசனைக்குழு மதிப்பிட்டிருந்தது. ஆனால் அந்த அத்தனையும் அவர்களுக்கு எதிராக வந்து முடியப் போகிறது, இரண்டரை நூற்றாண்டுகால ஃபாத்திமீக்களின் ராஜ்ஜியத்திற்கு அவர் முடிவுரை எழுதப் போகிறார் என்பது அச்சமயம் அவர்களுக்குத் தெரியவில்லை. தாம் அந்நாட்டிற்கு சுல்தானாகவே உயரப்போகிறாம் என்பதை ஸலாஹுத்தீனும் அறிந்திருக்கவில்லை.

ஸலாஹுத்தீன் யூஸுஃப் அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டார். அல்-மாலிக் அல்-நாஸிர் என்று அவருக்குப் பட்டம் சூட்டப்பட்டது. வஸீருக்கு உரிய தனித்துவமான சிறப்பு மேலங்கிகள் போர்த்தப்பட்டன. தங்கத்தால் நெய்யப்பட்ட வெள்ளைத் தலைப்பாகை, கருஞ்சிவப்பு நிற மேலங்கி, விலையுயர்ந்த கற்கள்-பொதிக்கப்பட்ட வாள், பழுப்பு நிறக் குதிரை ஆகியன அளிக்கப்பட்டன. அக்குதிரையின் சேணமும் கடிவாளமும் கூட தங்கத்தாலும் முத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இவையன்றி, ஏராளமான அளவில் விலைமதிப்பற்ற பொருட்கள்.

மார்ச் 1169, பணியாளர்கள் ஊர்வலமாகப் பின் தொடர, வஸீரின் அதிகாரபூர்வ மாளிகைக்கு வந்து சேர்ந்தார்; எகிப்தின் வஸீராகப் பதவியில் அமர்த்தபட்டார் ஸலாஹுத்தீன் யூஸுஃப் அல்-அய்யூபி.

oOo

(தொடரும்)

-நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம் – தளத்தில் 24 December 2023 வெளியானது


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment