ரோன் புஷ்னெல் என்ற அமெரிக்க இளைஞருக்கு 25 வயது. 25 பிப்ரவரி 2024, ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் தலைநகர் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு முன் வந்து நின்றார். “ஃபலஸ்தீனை விடுவி” என்று திரும்பத் திரும்ப உரத்துக் கத்தினார். எரிபொருள் திரவத்தைத் தம் மீது ஊற்றிக்கொண்டார். பற்ற வைத்துக்கொண்டார். திகுதிகுவென்று எரிந்தார்.

அமெரிக்க விமானப்படையில் உளவு, கண்காணிப்புப் பிரிவின் சைபர் துறை பாதுகாப்பு நிபுணர் ஏரோன். மே 2020லிருந்து அங்கு அவரது ஊழியம். இஸ்ரேலின் அரக்கத்தனத்தை உள்ளிருந்து பார்க்க முடிந்த அவரால் அமெரிக்கா அதற்கு உடந்தையாக இருப்பதைப் பொறுக்க முடியவில்லை. ஆத்திரம் ஏற்பட்டிருக்கலாம்; வருத்தம் தோன்றியிருக்கலாம்; கவலை சூழ்ந்திருக்கலாம். ஆனால் கஸ்ஸாவில் நடைபெறும் இனப்படுகொலை எந்தளவிற்குத் தீவிரமாக அவர் மனத்தைத் தாக்கியிருந்தால், தம் உயிரையே மாய்த்துக்கொள்ளத் துணிந்திருப்பார்?

தாம் சார்ந்த இயக்கத்திற்காக, தலைவருக்காக, தம் இனத்துக்காக, மதத்துக்காகத் தற்கொலை செய்துகொள்பவர்களை அறிந்திருக்கிறோம். ஆனால் ஓர் இன மக்கள் மீது காட்டுமிராண்டித்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது; அப்பட்டமான அநீதி நிகழ்கிறது; தம் நாடு அதற்கு உடந்தையாக இருக்கிறது என்பதறிந்து அதை எதிர்க்க தம் உயிரை மாய்த்தாவது அரசுக்குப் புரிய வைக்க வேண்டும், தடுக்க வேண்டும் என்று ஒருவர் துணிந்தால், நிகழ்வுகளின் பின்னணியில் உள்ள அக்கிரமத்தையும் அநீதியையும் அக்கிரமத்தையும் அவர் அப்பட்டமாக உணர்ந்திருந்தால் மட்டுமே முடியும்.

வடிகட்டப்பட்டப் பொய்கள், திரிக்கப்பட்ட செய்திகளுக்குப் பின்னால் நிதர்சனத்திற்கு நெருக்கமாக உள்ளவர்கள் உளவுப் பிரிவில் பணியாற்றுபவர்கள். அவர்கள் அறிய வரும் அந்தரங்கம் புனிதமானதல்ல; அருவருப்பானது என்பது அவர்களுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியும். அவர்களுள் மனசாட்சி உறுத்தப்பட்டு பின்வினை ஆற்றுபவர்கள் வெகு சிலர். ஏரோன் புஷ்னெல் நிகழ்த்தியது அதில் உச்சபட்சம்.

‘இனப்படுகொலைக்கு இனி உடந்தையாக இருக்க மாட்டேன். கஸ்ஸாவில் மனிதாபிமான நெருக்கடி நீடிக்கிறது. அந்த ஃபலஸ்தீனியர்களுடன் ஒப்பிடும்போது (நான் அடையப்போகும்) எனது இந்தத் துன்பம் மிகக் குறைவு’ என்று தனது வாக்குமூலத்தையும் பதிவு செய்து வைத்துவிட்டு ஏரோன் தீயில் வெந்தார், மாய்ந்தார்.

அடுத்து நிகழ்வதுதான் நகைமுரண். தனது கூடா நட்பை, இஸ்ரேலுடனான வெளியுறவுக் கொள்கையை சுய பரிசோதனை செய்ய மறுக்கும் அமெரிக்கா, ஏரோனின் இச்செயலுக்கு என்ன காரணம், தீவிரவாதத் தொடர்பு ஏதேனும் உள்ளதா என்று ஆராய்ந்து துப்புத் துலக்குகிறது.

டிசம்பர் 2023, இதே அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே ஒரு நபர் தீக்குளித்தது முதல் நிகழ்வு. சம்பவ இடத்தில் ஃபலஸ்தீன் கொடியை மீட்ட காவலர்கள், ‘அரசியலை எதிர்க்க நிகழ்ந்த தீவிரவாதச் செயல்’ என்று செய்தியாளர்களிடம் தெரிவித்து முடித்துவிட்டனர்.

யார் கண்டது? ஏரோன் புஷ்னெல் ஒரு பித்துக்குளி; மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அறிவித்துவிட்டு இந்தக் கதையை அவர்கள் முடித்து வைத்தாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

“எங்கள் தூதரக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கஸ்ஸாவில் இதுவரை கொல்லப்பட்டவர்கள் 30,000. See more” என்றபடி இஸ்ரேலின் வெறியாட்டம் மட்டும் தொடர்கிறது.

Read more : app.cnn.com

-நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம் – தளத்தில் 28 பிப்ரவரி 2024 வெளியானது

Related Articles

Leave a Comment