தோழர்கள் விமர்சனம் – ஷா. காதர் கனி

by admin

ரலாறுகளை எழுதும் பொழுது வரலாற்று நாயகர்களை – (கதை மாந்தர்கள்) – மட்டுமே எழுத்தாளர்கள் கொண்டாடுவார்கள். வரலாற்று நாயகர்களாக விளங்கும் அவர்களைத் தவிர மற்றவர்களைப் பற்றிய (களம் கண்டவர்களினுடைய) வரலாற்றைப் பொதுவாக எழுதுவதில்லை. இஸ்லாமிய மார்க்கம் மட்டும் இதற்கு விதிவிலக்காக களம் கண்டவர்களும் வரலாற்று நாயகர்களே என்று அவர்களின் தனித் தன்மைகளையும், விவரனைகளையும் வரலாறாக ஒவ்வொரு மொழியிலும் எடுத்து வைத்துள்ளது.

இன்று நமக்கு கிடைத்திருக்கும் இப்புனிதமிகு மார்க்கம் மிகச் சாதாரணமாக நமக்கு கிடைக்கவில்லை. அதன் பின்னே நீண்ட நெடிய வரலாறுகள் இருக்கின்றன என்பதனை நாம் அறிவோம். ஆனால் அந்த வரலாற்று நாயகர்களை பற்றிய அறிவையும் தெளிவையும் கல்வியாகவும் படிப்பினைகளாகவும் எந்த அளவிற்கு நாம் பெற்றுள்ளோம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட வரலாற்றின் படிப்பினைகளையும், கல்வியையும் தோழர்கள் என்ற இந்த நூலின் வழியாக 70 நபித் தோழர்களுடைய வரலாறுகளை 1062 பக்கங்களில் மிக அற்புதமாக வடித்து சமூகத்திற்கு சமர்பித்துள்ளார் ஆசிரியர் நூருத்தீன். வாசிப்பவர்களின் மனக் கதவை நேர் வழியின் பக்கம் திறப்பதற்கு தோழர்கள் – புனிதர்களின் அற்புத வரலாறு என்ற இந்த நூல் உள்ளபடியே உதவி செய்கிறது.

பொதுவாக நபித் தோழர்களின் வரலாறுகளைப் படிக்கும் பொழுது வரலாறுகளை தெரிந்து கொள்வதுடன் அவர்களுடைய தியாகம், மன உறுதி மற்றும் கட்டுப்படும் தன்மை ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும். இவற்றைத் தாண்டி தோழர்களின் வாழ்க்கை முறையுடன் நம்முடைய வாழ்க்கையயும், அன்றாட நிகழ்வுகளையும் தகவமைத்து அல்லது வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவலை உணர்வு பூர்வமாக இந்த புத்தகம் நமக்குக் கொடுக்கின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றும் நான்கு கலீபாக்கள் நீங்கலாக ஏனைய தோழர்களுடைய வரலாற்றை வாசிப்பதற்கு மிகவும் எளிமையாகவும் புரிந்து கொள்வதற்கு பொருத்தமாகவும் மிகச் சிறப்பாக வடிவமைத்து கொடுத்துள்ளார் நூலின் ஆசிரியர். இது தவிர நபித் தோழர்களின் சில தனித்தன்மையான விஷயங்களையும் அவர்களுக்கிடையே இருந்த ஒற்றுமைகளையும் கீழ்க்கண்ட அடிப்படையில் மிக எளிமையாக விளங்கிக் கொள்வதற்கு இந்த நூல் வழிவகை செய்கின்றது.

1. மன உறுதி
தோழர்களிடம் மன உறுதி இருந்தது என்பதை வார்த்தையாகச் சொல்லும் பொழுதோ அல்லது எழுத்தாக எழுதும் பொழுதோ நம்மிடம் அது மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் இந்தப புத்தகத்தில் தோழர்களின் மன உறுதியை வாழ்க்கையின் நிகழ்வுகளாக மனக் கண்ணில் காணக்கூடிய வகையில் அமைத்துள்ளதால் மன உறுதி என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறையை நம்மால் ஏற்படுத்திக் கொள்ள முடிவதுடன் குறைந்தபட்சம் அதனை செயல்படுத்துவதற்கும் மனதைத் தயார்படுத்தவும் முடிகிறது.

2. கட்டுப்படுதல்
தோழர்களுடைய கட்டுப்பாடே மாபெரும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஆணிவேர் என்பது நமக்குத் தெரியும். அவர்கள் ஒவ்வொரு நிலையிலும் தங்களுடைய சுய விருப்பு வெறுப்பின்றி முற்றிலுமாக அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டதை அல்லது தங்களை முழுமையாக அர்ப்பணித்ததை இந்த நூல் நம் கண் முன் நிகழ்ச்சிகளாகக் காட்டுகிறது.

3. தியாகம்
தியாகம் என்ற வார்த்தைக்கான வாழ்க்கை நிகழ்வுகளைக் கேட்கும்பொழுதோ அல்லது காணும் பொழுதோ நம்முடைய புருவங்கள் உயர்வது இயல்புதான். ஆனால் இந்த நூலில் தோழர்களுடைய தியாகத்தை வாசிக்கும் பொழுது புருவங்கள் உயர்வதுடன் கண்களின் ஓரம் நீர் கசிவதை நம்மால் தடுக்க முடியவில்லை. அந்த அளவிற்கு உணர்வுபூர்வமான எழுத்தாற்றலை வெளிப்படுத்தியுள்ளார் இந்த நூலின் ஆசிரியர்.

4. கருத்து வேறுபாடுகள்
நபித்தோழர்கள் மார்க்க அடிப்படையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கு என்ன எல்லையை வரையறுத்துக் கொண்டனர்? சமத்துவம் / சகோதரத்துவம் என்பது என்ன? கருத்து வேறுபாட்டின் அளவுகள் என்ன? என்பனவற்றை வகுத்துக்கொண்டு சகோதரத்துவத்திற்கும் கருத்து வேறுபாட்டிற்கும் உள்ள பிணைப்புகளையும், முரன்களையும் மிகத் தெளிவாக கையாண்டிருந்தனர். இதன் அடிப்படையில் இன்றைய இஸ்லாமிய சமூகத்திற்கு ஏராள படிப்பினைகளை இந்நூல் நமக்குக் கொடுக்கின்றது.

5. பத்ரு மற்றும் உஹதுப் போர்கள்
பத்ரு மற்றும் உஹதுப போர்களின் வரலாறுகளை பொதுவாக நாம் அறிந்து வைத்திருப்போம். ஆனால் அதில் பங்கு பெற்ற ஒவ்வொரு சஹாபாக்களினுடைய தன்மைகள் மற்றும் அவர்களுடைய விவரனைகளை பற்றி மிகத் துல்லியமாக அறிந்து கொள்வதற்கும் தெரிந்து கொள்வதற்கும் இந்த நூல் மிகவும் பயன்படுகிறது. அது மட்டுமல்லாமல் இஸ்லாமிய வரலாற்றில் ஏற்பட்ட ஏனைய போர்களைப் பற்றியும் அதில் பங்கேற்ற மாவீரர்களின் தனித்தன்மைகளைப் பற்றியும் அறிந்து கொள்வதற்கு இந்த நூல் மிகவும் பயன்படுகிறது.

6. நபிகளாரின் ஆளுமை
இந்த நூலின் வாயிலாக நமக்கு கிடைக்கும் மற்றொரு பரிமாணம் நபிகளாரின் ஆளுமை. தங்களுடைய தோழர்களிடம் எப்படியான ஆளுமையை அவர்கள் செலுத்தினார்கள என்பதையும், தோழர்களோடு தோழராய் எவ்வகையில் இஸ்லாம் மீளெளுச்சி பெறுவதற்கு கடமையாற்றினார்கள் என்பதையும் மிக அழகாகவும், எதார்த்தமாகவும் நூலாசிரியர் அவர்கள் வாசகர்களின் மனதில் உட்காரும் வகையில் ஆங்காங்கே நிகழ்ச்சிகளை மற்றும் வரலாற்று குறிப்புகளை வைத்துள்ளது நபிகளாரின் ஆளுமையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்குப் பயன்படுகிறது.

7. தூதரின் வாழ்க்கை முறை
பெருமானார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இந்த புத்தகத்தில் கொடுக்கவில்லை என்றாலும், அவர்களுடைய வாழ்ககையின் அடிப்படையிலேயே தோழர்களுடைய வாழ்க்கை முறைகளும் இருந்ததால் பெருமானாரின் வரலாற்றையும் சேர்த்து வாசித்த அனுபவமும் இந்நூல் நமக்கு வழங்குகிறது.

ஒவ்வொருவரின் வரலாற்றைப் படிக்கும் பொழுது நேரத்தையும், உணவினையும் மற்றும் பொருளாதாரத்தையும் நாம் எவ்வளவு வீணடிக்கிறோம் என்பதைச் சுய மீளாய்வு செய்ய மனது எத்தனிப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

வரலாற்றை எளிமையாகப் படிக்கும் வகையில் ஒவ்வொரு சஹாபியின் வாழ்க்கையில் நடந்த ஏதோ ஒரு பகுதியில் இருந்து ஆரம்பம் செய்து, மீண்டும் அவருடைய வரலாற்றை ஆரம்பத்தில் இருந்து கொண்டு செல்லும் பாணி வெற்றி அடைந்துள்ளது. காரணம், குறிப்பிட்ட தோழரைப் பற்றிச் சொல்லப்படக்கூடிய முன் நிகழ்வு அவரைப் பற்றி இன்னும் அறிய வேண்டும் என்ற ஆவலை அதிகமாகத் தூண்டுகிறது.

நபி பெருமானார் மற்றும் நான்கு கலீபாக்களைத் தவிர நபித் தோழர்களின் தன்மையையும் அவர்களின் சீரிய தியாகத்தையும் மற்றும் ஆளுமையையும் ஒவ்வொரு தோழரின் வரலாற்றின் வழியாகவும் நாம் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக இந்தப் புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றுமொறு சிறப்பு.

ஈமானின் பகுதிகளை எவ்வாறு நம்ப வேண்டும் என்பதற்கு முழு உதாரணமாக வாழ்ந்து விட்டு சென்றவர்களின் வரலாற்றைப் படிக்கும் பொழுது நம்முடைய ஈமானும் நிச்சயம் புதுப்பிக்கப்படும் என்பதை மறுக்க இயலாது. அந்த வகையில் தோழர்கள் புத்தகம் நமது ஈமானை நிச்சயம் புதுப்பிக்கவே செய்கிறது.

ஒவ்வொருவரின் வரலாற்றுக்கு இடையில் நம்மை நாமே மீளாய்வு செய்து கேள்வி கேட்டுக் கொள்ளக்கூடிய சில கேள்விகளை வரலாற்றின் உள்ளேயே வைத்து, முழுமையான படிப்பினையாக வரலாற்றை மாற்றித் தந்துள்ள அடிப்படையில் மற்ற வரலாறுகளில் இருந்து தோழர்கள் தனித்து நிற்கிறது.

ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய, வாசிக்கப்பட வேண்டிய புத்தகமாக எழுதப்பட்டிருக்கும் தோழர்கள் புத்தகத்தை மிகச் சிறப்பான முறையில் வடிவமைத்து கெட்டி அட்டையுடன் எந்தப் பக்கம் திருப்பினாலும் மிக எளிமையாக வாசிக்கக் கூடிய புத்தகமாகவும், குறிப்பாக பெரிய அளவில் பிழைகள் ஏதும் இல்லாமலும் சமூகத்திற்கு வழங்கியுள்ள சீர்மை பதிப்பகத்தின் உவைஸ் அஹமது அவர்களுக்கும் எழுத்தாளர் நூருத்தீன் அவர்களுக்கும் இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்காகக கேட்டவுடன் வழங்கிய கண்ணியத்திற்குரிய மௌலானா மௌலவி அல்ஹாஜ் ஜாஃபர் சாதிக் பாக்கவி (இமாம் – மலபார் ஹவுஸ், எழும்பூர்) அவர்களுக்கும் எனக்கு இந்தப புத்தகத்தை வாசிப்பதற்கு ஊக்கம் அளித்த கண்ணியத்திற்குரிய மெளலானா மெளலவி சதக்கதுல்லாஹ் பாக்கவி (இமாம் – மஸ்ஜிதே ரஹீமா,) ஹஜ்ரத் அவர்களுக்கும் மற்றும் கண்ணியத்திற்குரிய மௌலானா மௌலவி நியாமத்துல்லாஹ் மிஸ்பாஹி அவர்களுக்கும் வல்ல இறைவன் இம்மை மற்றும் மறுமையில் நற்கூலிகளை நிரப்பமாக வழங்குவானாக என்ற துஆவுடன்…

ஷா.காதர் கனி M.Sc., M.Ed.,
ஆசிரியர் – ஜாமிஆ அல்ஹுதா அரபிக் கல்லூரி,
அடையாறு, சென்னை.


தோழர்கள் – புனிதர்களின் அற்புத வரலாறு
விலை : Rs. 1800
பக்கங்கள்: 1070

நூல் கிடைக்குமிடம்:
சீர்மை Seermai
New No 280, Old No 238/2, 2nd Floor,
Quaide Millath Road, Triplicane, Chennai-600005
Email: seermainoolveli@gmail.com
Phone: 0091-8072123326
Website: www.seermai.com


Related Articles

Leave a Comment