“முன் தேதி மடல்கள்” என்ற இந்த நூல், மனிதகுலத்தை இம்மைக்கு மட்டுமின்றி மறுமைக்கும் சேர்த்து முன்னேற்ற வேண்டும் என்ற அக்கறை மிக்க இறைநம்பிக்கையாளர்களால் எழுதப்பட்ட முன்மாதிரியான மடல்களின் தொகுப்பு.
இந்த நன்னூல் அரியவகையானது; பதினைந்து மடல்களை உள்ளடக்கியதாக இலங்குகிறது. எனவே பொதுவாக மடல்கள் பற்றிய ஒரு பறவைப் பார்வை பார்ப்பது, நாம் இந்த நூலின் சிறப்பை உணர நமக்கு முன்னுதவியாக இருக்கும் எனக் கருதுகிறோம்.
உலக வரலாற்றில் மடல்களுக்கென்றோர் சிறப்பிடம் உண்டு. கி.மு.காலத்தவரான மார்கஸ் டுலியஸ் ஸிஸிரோ(கி.பி.106-43) முதல் ஆப்ரஹாம் லிங்கன், டால்ஸ்டாய், செஸ்ட்டர் ஃபீல்ட், மெக்காலே, பெர்னாட்ஷா (1856-1950), காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, ராமலிங்க அடிகள், மறைமலை அடிகள்(ம.1952), பேரறிஞர் அண்ணா, கலைஞர் வரை பரந்துபட்ட பார்வையால் பல அறிஞர் பெருமக்களும் எழுதிய பலவகை மடல்களால் – அவை ஏற்படுத்திய விளைவுகளால் – பெரிதும் பேசப்படுபவர்கள் ஆவர். மடல்களை -கடிதங்களை- வெறுமனே ஒரு கருவியாகக் கருதாது ‘கலை’யென வளர்த்தவர்கள் மேல்நாட்டவர் என்பது பிற்காலத்தில் அவர்கள் பெற்ற பெருமிதம். மடல்களைக் “கலைகளின் கலை, எழுத்துக்களின் ஒளி, எண்ணங்களின் பெருமித வெளிப்பாடு” என்று கூறிக் குதூகலிக்கிறார் வால்ட் விட்மன்(1819-1892) என்ற அமெரிக்கக் கவிஞர்.
“தமிழிலக்கியம் கண்ட கடித வகைகளில் ஒன்றான ‘மடல்கள்’. சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி முதலிய காப்பிய காலத்தில் இருந்து ‘இலக்கியம்’ என்ற மதிப்பைப் பெற்றவை. இவை பிற்காலத்தில் பல பெயர் பெற்று ‘சீட்டுக் கவி’ வரை நீண்டு இன்று வழக்கொழிந்தாற்போலவும் ஆகி உள்ளன. “மடல்களை அனுப்புவது என்பது இருந்த இடத்திலிருந்தே இதயத்தை அனுப்புவது” என்ற அறிஞர் ஃபிலிஸ் த்ரோ, அவற்றை எவ்வளவு ஆழமாக உணர்ந்து, நேசித்து எழுதி இருப்பார் என்பது, எண்ணிப்பார்த்து இன்புறத் தக்கது.
இந்தக் கடிதக் கலையும் இலக்கியமும் இந்த உலகில் எவ்வளவோ பயனுடையவையாய் இருப்பினும் அது இறையச்சம், மறுமை பற்றிய நினைவூட்டல்களில் சற்று பின் தங்கியவையே.
“ஓத முடியாத உம்மி நபி”யாக இருந்திருந்தாலும் அண்ணல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள், அன்று உலகாண்ட மன்னர்களுக்கும் மாமன்னர்களுக்கும், “ஏக இறைவனையும் அவனுடைய தூதரையும் ஏற்றுக் கொண்டு நேர்வழியில் வாழ வேண்டும்” என்று விடுத்த அழைப்பு மடல்கள், உலக வரலாறு காணாத நிகழ்வுகள் அல்லவா! “அந்த மன்னர்கள், ‘நமக்குக் கட்டளை பிறப்பிக்க இந்த மனிதருக்கு என்ன துணிச்சல்?’ என்று எண்ணி வியந்திருப்பர்” என்று ஜவஹர்லால் நேரு தாமும் வியந்து தம்முடைய Glimpses Of World History என்ற புகழ்பெற்ற நூலில் அதைப் பதிவும் செய்துள்ளார்.
தங்களுடைய வாழ்க்கைப் பணியில் அண்ணல் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் காட்டிய அளவற்ற ஆர்வமும் ஆழ்ந்த நம்பிக்கையும் அவர்களுக்கே உரியன அல்லவா? என்றாலும் அவர்களை முற்ற முழுக்கப் பின்பற்றி வெற்றியாளர்களாக விளங்க வேண்டும் என்ற வேணவா, அவர்களைப் பின்பற்றி வாழ்ந்த பெருமக்களிடத்தில் காலமெல்லாம் கங்குகரை காணாது கனன்று கொண்டே இருந்தது என்பதற்கான ஆவணங்கள்தாம் இந்த நூலில் நீங்கள் படிக்க இருக்கும் மடல்கள். அதே கனற்பொறிதான் எம் இனிய இளவல் நூருத்தீன் அவர்களின் இதயத்திலும் கனன்று, இங்கு மடல்கள் தொகுக்கப்பட்டு நூலாக ஒளிவீசுகின்றது. இல்லை என்றால் இந்தப் பணியை இவர் உவந்திருக்க மாட்டார். (இந்த மடல்களை அடுத்த பதிப்பில் காலவரிசைப்படித் தொகுப்பது நூலின் பயனை மேலும் மிகுவிக்கும்)
மேலெழுந்தவாறு பார்த்தால் இஸ்லாமியப் பொதுநல (Welfare State) அரசின் குடியரசுத் தலைவர்களும் அவர்களின் தலைமையின் கீழ் பணியாற்றிய ஆளுநர்களும் படைத் தலைவர்களும் தங்களுக்கிடையில் எழுதிக் கொண்ட அலுவல் மடல்களே இவை எனத் தோன்றக் கூடும். (இவையன்றி அறிஞர்கள் எழுதிய மடல், பகைவருக்கு எழுதிய மடல் ஆகியனவும் உண்டு.) சற்று ஆழ்ந்து படிக்கும் போதுதான் இவை வெறும் அலுவல் மடல்கள் மட்டுமல்ல; எனில் கலையா? இலக்கியமா? இரண்டையும் உள்வாங்கிக் கொண்டு அவற்றிற்கு மேலாக வெளிப்படும் ஆன்மீக அலைகளின் வீச்சா? என்பது தெரிய வரும்.
இந்த நூலை நாம் ஒருவரி விடாமல் படித்தோம்: மடல்களின் தொகுப்பாக மட்டும் இன்றி ஒவ்வொரு மடலையும் அறிமுகப்படுத்தும் ஒரு மடலையும் நூலாசிரியர் நூருத்தீன் அவர்கள் எழுதியுள்ளார். இது சிறந்த உணவை உண்ணத் தொடங்கும் முன் தரமான உணவு விடுதிகளில் வழங்கப்படும் Starter அல்லது Appetizer போல அமைந்திருக்கிறது; ஒரு மடலைப் படித்து அதன் கருத்துக்களை உள்வாங்கத் தூண்டுவதாக உள்ளது,புதுமை! பின் இனிப்பாகக் கொஞ்சம் குறிப்பு இருப்பது,அருமை! இந்த உத்தி ஒவ்வொரு கடிதத்தின் சாரத்தையும் உள்ளத்தில் நிறைத்து விடும்.இவ்வாறு வேறெந்தக் கடிதத் தொகுப்பும் வந்ததாக எமக்கு நினைவில்லை.இந்த நூலுக்குள் சென்று வாசகர்கள் மூழ்கி முத்தெடுக்க வேண்டும் என்பதால் நாம் நூலில் இருந்து மேற்கோள் எதையும் இங்கு காட்டவில்லை.
இந்த நூலில் பயின்று வரும் நூருத்தீன் அவர்களுடைய இனிய எளிய தமிழ்நடை, இவருடைய தந்தையார் நூலாசிரியர் தமிழாசிரியர் அப்துல் ஜப்பார் (ரஹ்) அவர்களை நினைவூட்டுகிறது. இவருடைய மார்க்க அறிவு, சமுதாய அக்கறை இந்த நூலின் மூலம் வாசகர்களுக்கு இவர் ஊட்ட விரும்பும் உணர்வு, முதலியன இன்றுவரை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழ் வல்லார் “குர்ஆன் மஜீத்” பொருளுரையும் விரிவுரையும் என்ற நிலை பேறுடைய நூலை எழுதிய இவருடைய பாட்டனார் பா.தாவூத் ஷா(ரஹ்) அவர்களை நினைவூட்டுகிறது. வாழையடி வாழையாய் வருகின்ற திருக்கூட்டமாய் இது தொடர வேண்டும்.
இந்த நூல் உள்ளங்களுக்கு ஒளியூட்டும், வழிகாட்டும். அதிலே நடைபயிலத் துணைபுரியும். இறையச்சத்தையும் இறைநேசத்தையும் ஏற்படுத்தும் இந்த நூலின் ஆசிரியர், இத்தகைய முத்தான நூல்களைத் தொடர்ந்து எழுதிவர வேண்டும்;அதற்கு இறையருளும் வாசகர் பெருமக்களும் என்றும் துணை நிற்க வேண்டும் என்பது நம் இறைஞ்சுதல்.
எந்த நிலையிலும் எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
-ஏம்பல் தஜம்முல் முகம்மது