தோழர்கள் விமர்சனம் – மஹ்ஜபீன்

by admin

பித் தோழர்களின் வரலாறு பற்றிய புத்தகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஓரளவே கிடைக்கின்றன. என்றாலும் அவையெல்லாம் பெரும்பாலும் ஒரே பாணியில் சொல்லப்பட்டதாகவும் பிரபலமான நபித்தோழர்களைப் பற்றியதாகவுமே உள்ளன.

சகோதரர் நூருத்தீன் அவர்களுடைய ‘தோழர்கள்’ வாசிப்பு அனுபவம் இந்த வரையறைக்குள் அடங்காதது. ஒரு புதினம் வாசிப்பது போன்ற புது அனுபவத்தைத் தருவது…!

அவருடைய பாணி அத்தகையது….!

எத்தனை தடவை வாசித்தாலும் சில சஹாபாக்களின் சரித்திரம் வாசிக்கும்போதே கண்களின் வழியே கண்ணீர் கட்டுப்பாடின்றி வழியத் தொடங்கியிருந்திருக்கும்.

தன் சகோதரனின் உயிர் காக்க கையின் தசைகளையெல்லாம் தனல் கங்குக்கு பலி கொடுத்த பராஉ இப்னு மாலிக்(ரலி),

பாலைமணலின் வெம்மையில் தன் கால் விரல்நகங்களைப் பறிகொடுத்து ஒட்டுத்துணிப்போருக்கு சென்ற அபூமூஸா அல் அஷ்அரீ(ரலீ),

சத்தியத்திலிருந்து நழுவி விடாதிருக்க தன் முதுகு தசைகளையெல்லாம் நெருப்புக்கு பறி கொடுத்த கப்பாப் பின் அரத்(ரலி),

‘நபியே! நான் உங்களுக்காக உயிரையும் தருவேன்’ என்றுரைத்து முஸைலமா என்ற கோரன் கையில் சிக்கி நபிக்காக கொஞ்சம் கொஞ்சமாய் உயிர் விட்ட ஹபீப் பின் ஸைத்(ரலி),

குர்ஆனின் காதலன் அப்பாத் பின் பிஷ்ரு (ரலி),

இறைவனுடனே பேரம் பேசிக்கொண்ட ஆஸிம் பின் தாபித்(ரலி),

நபியின் மீது முள் குத்திவிடுவதற்குப் பதிலாக தனக்கு மரண தண்டணையை தேர்ந்த குபைப் இப்னு அதீ (ரலி) ,

மக்கத்து வீதிகளில் செலவச் செழிப்பில் உலவிக்கொண்டிருந்து இஸ்லாத்தை ஏற்று அத்தனையையும் இழந்த உஹதின் உயிர்த்தியாகி முஸ்அப் இப்னு உமைர் (ரலி),

என மனதைப் பிசைந்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் நிறையப்பேர்.

அதுபோல சிகப்புத் துணியை தலையில் கட்டி எதிரிகளை வதம் செய்த அபூதுஜானா (ரலி),

சத்தியத்தின் ஒற்றை உருவமாய் கஅப் பின் மாலிக்(ரலி),

நபியவர்களுக்காக தினமும் உணவு சேமித்து வந்த பாசக்காரர் அபூ ஐயூப் அல் அன்ஸாரி (ரலி),

எளிமையின் இன்னொரு உருவம் இப்னு உமர் (ரலி),

என எத்தனை எத்தனை விதமான கதை மாந்தர்களை எத்துனை அழகாக விவரித்திரிக்கிறார்!

தொடராக வாசிக்கும்போது, சுலாபாவின் சபதம், பத்ர், உஹத் கலங்கள், யமாமாவின் சம்பவம் முஸைலமாவை எதிர்த்தோரின் சரிதங்கள் என தனித்தனிப்பகுதியாக எண்ணத்தோன்றாமல் இது பதின்நான்கு நூற்றாண்டுகளுக்கு முன் எம்மை காலச்சக்கரத்தில் கட்டி இழுத்துச்சென்று நிறுத்தி விட்டிருந்தது.

‘ஒரே இறைவனாம். வேறொன்றும் இல்லையாம். இவர் அந்த இறைவனின் தூதராம்’ என்ற ஆதித்தூதின் அற்புத செய்தி வந்த நிகழ்வினை சாமான்யமானவர்களின் பரிபாஷையில் சொல்லியிருப்பது என்பவையெல்லாம் நூலாசிரியரின் எழுத்துநடைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

இறைவனின் தூதருக்கும் அவரது மூத்த மருமகன் அபுல்ஆஸ் (ரலி) அவர்களுக்கும் அவருடைய பிரிய மனைவி ஸைனபுக்கும் (ரலி) இடையில் நடைபெற்ற சத்தியமா? நேசமா? கோத்திரமா? என்ற போராட்டத்தினையும் சுவைபடச் சொல்லியிருக்கிறார்.

எழுபது நபித் தோழர்களை அப்படியே குறும்படம் எடுத்துக்காட்டியிருக்கிறார். வாசித்தவுடன் கடந்து சென்றுவிடக்கூடியனவாக எந்தக் கதையும் இல்லை.

மலைப்பாக இருக்கிறது. குர்ஆன் சுமந்த முதல் தலைமுறையினர் எமக்கு ரொம்பவும்தான் டஃப் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

ஈமானிலும் தியாகத்திலும் அவர்களளவின் கால்வாசியாவது நாம் தேறுவோமா தெரியவில்லை. அல்லாஹ் அந்த அழகிய தலைமுறையினரைப் பின்பற்றும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்துவிடட்டும்.

இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் அதிகம் அறிமுகமில்லாதவர்கள் கூட இதை வாசிக்கலாம். எழுத்து நடைக்காக மாத்திரமன்றி பிழையாகப் புரியப்பட்ட நிறைய விடயங்களை சரியாக்கிக்கொள்ளவும், நடுநிலை மனநிலையோடு ஒரு சமூகம் ஸீரோவிலிருந்து ஹீரோவான கதையை அழகு தமிழில் தெரிந்துகொள்ளவும் நம்பிக்கையோடு எடுத்து வாசிக்கலாம்…!

“தோழர்களை”

நூல் விபரங்கள்

மஹ்ஜபீன்

Related Articles

Leave a Comment