முடிவை வாசகர்களின் கையில் விடுவது என்பது ஒரு வகை யுக்தி. அவ்வகையான திரைப்படங்கள் வெற்றியைத் தழுவுவதும் வெள்ளோட்டத்தில் தக்கையாக காணாமல் போவதும் கதையை விளக்கிய பாங்கில் இருக்கிறது.
உதாரணத்திற்கு கிறிஸ்டோபர் நோலனின் ‘இன்டெர்ஸ்டெல்லார்’ கதையை சொல்லலாம். அது கனவா நிஜமா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று நம்மிடம் விட்டுவிடுவார்.
அதுபோல இருபது வருடத்திற்கு முன்பு படித்த நாவல் நினைவிற்கு வருகிறது. எம்.ஜி. சுரேஷ் எழுதிய ‘அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்’ என்ற புத்தகம். அந்த நாவலை ஒரு க்ளைமேக்ஸ் எழுதி முடித்துவிடுவார். அதற்கு பின் பன்னிரண்டு அத்தியாயங்கள் இருக்கும். ஒவ்வொன்றும் வெவ்வேறும் முடிவுகள். அதாவது ஒரு கதை. அதற்கு பன்னிரண்டு வெவ்வேறு முடிவுகள். தமிழில் இதுவரை இப்படியொரு புத்தகம் வந்ததில்லை. கடமைக்கென இழுக்காமல் கதையும் சுவாரஸ்யமாக இருக்கும்.
படங்கள், நாவல் இதிலெல்லாம் சரி. சிறுகதையில்?
சிறுகதை என்று ஏன் கூறுகிறேன் என்றால் பக்கங்களின் வரையறை காரணமாக அதில் அதிக விவரங்களை தரவியலாது.
ஐந்து பக்கங்களே உடைய சிறுகதையில் கதை மாந்தர்களை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு ஒரு பின்புலத்தை கூறி அதன் பின் தற்காலத்தில் நடக்கும் ஒரு நிகழ்வுக்கு சுவாரஸ்யமான முடிவை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள் என்று எழுதி அசரடித்திருக்கிறார் எழுத்தாளர் Nooruddin DarulIslamfamily
கதையின் பெயர் ‘இஷ்டபூர்த்தி’
கதையின் தொடக்கமே ஒரு த்ரில்லர் ஜானர் வகை படத்திற்கு நிகராக நம்மை உள்ளே இழுக்கிறது. ஆரம்பமே அதகளம்.
ஹீரோவிடம் அவன் வேலைபார்க்கும் தாதாவின் மனைவி ‘தாதாவை கொள்ளமுடியுமா?’ என்ற கேள்வியில் தொடங்குகிறது. தாதா மிகப் பிரபலமானவன். முரடன். வீடு முழுக்க ஒட்டுக்கேட்கும் பார்க்கும் கருவிகள் என்று ஆயிரம் கண்கள் மற்றும் காதுகளை உடையவன். அதனால் பனிவிழும் பால்கனியில் ஒட்டுக்கேட்கும் கருவி மற்றும் உற்று பார்க்கும் கேமிரா இல்லாத இடத்தில் இந்த கேள்வியை ஹீரோவிடம் கேட்கிறாள் தாதாவின் மனைவி. கையடக்க துப்பாக்கி. அதை ஒரு வேலைப்பாடுள்ள கைப்பையில் ஒளித்து ஒரு மேஜையில் வைக்கப்பட்டிருக்கும். உணவருந்தும் வேளையில் இந்த கைப்பையை எடுத்து அவளிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வளவுதான் வேலை. சுடுவது தன் பொறுப்பு என்கிறாள். இந்த வேலையை முடித்தால் லைஃப் டைம் செட்டில்மண்ட்.
ஹீரோ மையமாக ஒத்துக்கொள்கிறான்.
அந்த நாளும் வருகிறது. தாதாவின் மனைவியின் அழைப்பை எதிர்பார்த்து காத்திருந்தவனுக்கு தாதாவின் அழைப்பு வருகிறது. இவனுக்கு ஆதியோடு அந்தமாக நடுங்க ஆரம்பிக்கிறது. பணிவோடு அவர்கள் முன்னாள் போய் நிற்கிறான். மனைவியின் கையில் அந்த வேலைப்பாடான கைப்பை. தாதா ஒரு குட்டி கதை சொல்லுகிறான். சிறுகதைக்குள் ஒரு குட்டி கடத்தி பாருங்கள். குட்டி கதை என்னவென்றால் ஒரு ராஜா இருந்தானாம். தவறு செய்தவர்களுக்கு ஒரு வினோதமான தண்டனை வழங்குகிறான். இரண்டு கதவுகள். ஒரு கதவிற்கு பின் புலி. மற்றொன்றில் பெண். குற்றவாளி தேர்வு செய்யும் கதவில் பெண் என்றால் திருமணம் ராஜா செல்வத்தில். புலி என்றால் அதற்கு இரை. எந்த கதவிற்கு பின் எது என இளவரசி தெரிந்துகொள்ளுகிறாள். அவள் குற்றவாளிக்கு சைகை புரிகிறாள். குற்றவாளி தேர்வு செய்த கதவு பின்னாடி என்ன இருந்தது? என்பதோடு குட்டி கதை முடிகிறது என்று தாதா விவரிக்கிறான்.
தாதா இதை தனக்கு ஏன் சொல்லுகிறான் என்று இவனுக்கும் ஓரளவு பிடிபடுகிறது. கண்காணிப்பு வளையத்திற்குள் சிக்காமல் நீங்கள் பேசிவிட்டீர்கள் என்று மிதப்பு கொள்ள வேண்டாம். எதிர் புறம் இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த கேமிராவில் பதிவாகியிருக்கிறது என்று தாதா ஹீரோவின் கண்களை பார்க்கிறான். இவனுக்கு நடுங்க ஆரம்பிக்கிறது. குட்டு வெளிப்பட்டுவிட்டது என்று தெரிகிறது. இப்பொழுது ஹீரோவிடம் ஒரு சுழலும் கூண்டை தாதா காண்பிக்கிறான். இந்த கூண்டில் ஒரு பக்கம் வைரம். இரு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம். இன்னோரு பக்கம் துப்பாக்கி. இந்த கூண்டை சுழற்றுகிறேன். ஒன்றை தேர்வு செய். முடிவு உன் கையில் என்று தாதா சிரிக்கிறான். ஹீரோ ஒரு முடிவெடுக்கிறான். எப்படியென்றால் இவன் விடப்போவதில்லை. அந்த துப்பாக்கியை எடுத்து நாமே சுட்டுவிட்டால் என்ன என்று யோசிக்கிறான். சுழன்று நிற்கும் கூண்டின் ஒரு கதவை நோக்கி கையை நீட்டுகிறான். தாதா தன இடுப்பில் இருந்து மற்றொரு துப்பாக்கியை எடுத்து வெளியில் வைக்கிறான். தாதாவின் மனைவி கைப்பையில் கையை நுழைக்கிறாள். கூண்டின் கதவை தாதா திறந்த மறு நொடி மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. ஒரே ஒரு தோட்டா பாயும் ஒளி கேட்கிறது என்றோடு கதை முடிகிறது.
யார் இறந்தார்கள் என்ற முடிவு அவரவர் குணநலனிற்கு ஏற்ப வாசகர்களே தெரிவு செய்துகொள்ள வேண்டிதான்.
–ஶ்ரீ ருத்
ஜனவரி 1, 2023