இமாம் அபூஹனீஃபா விமர்சனம் – ராபியா குமாரன்

by admin

ரு கையில் ‘குடியரசு’ இதழையும், மற்றொரு கையில் ‘தாருல் இஸ்லாம்’ இதழையும் ஏந்தியே வளர்ந்தேன் என்று கலைஞர் கருணாநிதி கூறுவார். சுமார் 40 ஆண்டுகள் இஸ்லாமிய இதழ்களில் கொடிகட்டிப் பறந்த ‘தாருல் இஸ்லாம்’ இதழின் ஆசிரியர் ‘பா. தாவூத்ஷா’ அன்றே பெண் கல்விக்காகவும், சமூக சீர்திருத்தத்திற்காகவும் பாடுபட்டவர். இதன் காரணமாக அவர் இஸ்லாமியப் பெரியார் என்று அழைக்கப்பட்டார்.

பா. தாவூத் ஷாவின் மகன் அப்துல் ஜப்பார் அவர்களும் தந்தை வழியிலேயே பயணிக்கத் தொடங்கினார். பத்திரிகையாளர், எழுத்தாளர், நாவலாசிரியர் என பல களங்களில் தடம் பதித்த அப்துல் ஜப்பார் அவர்களின் ‘ஷஜருத்தூர்’ என்னும் நாவல் வரலாற்று நாவல்களின் வரிசையில் சிறப்பிடம் பெற்றதாகும்.

எழுத்தாளுமைகளின் எழுத்தாற்றல் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வருவது மிகவும் அபூர்வமானதாகும். இரண்டு தலைமுறைகள் தொடர்வதே அபூர்வமாகப் பார்க்கப்படும் காலத்தில் பா. தாவூத் ஷா அவர்களின் குடும்ப எழுத்தாற்றல் மூன்றாவது தலைமுறையிலும் சிறப்புடன் தொடர்வது மிகுந்த மகிழ்வைத் தருகிறது.

தாருல் இஸ்லாம் குடும்பத்தின் எழுத்துப் பாரம்பரியத்தில் மூன்றாவது தலைமுறையாகத் தொடரும் அன்புச் சகோதரர் நூருத்தீன் அவர்களின் எழுத்துப் பணியும் போற்றுதலுக்குரியது. தோழர்கள், தோழியர் போன்ற தொடர்களின் வாயிலாக தனக்கென தனியொரு வாசகர் பரப்பைக் கொண்டிருப்பவர். தற்போது அமெரிக்காவில் பணி செய்து கொண்டிருப்பவர். இயந்திரங்களோடு உறவாடுவதைவிட இதயங்களோடு உறவாடுவதில் பெரும் ஆர்வம் கொண்டவர்.

தனது தாத்தா, தந்தை வழி நின்று எழுத்துலகில் தடம் பதிப்பதோடு, தனது குடும்பத்தின் பாரம்பரியத்தையும், வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பணியையும் செய்து வருவது பாராட்டுதலுக்குரியது. முஸ்லிம் சமூகத்தில் வாழ்ந்து மறைந்த எத்தனையோ எழுத்தாளுமைகளை வருடத்தில் ஒரு நாளேனும் நினைவு கூர்ந்து அவர்களை இந்தத் தலைமுறைக்கு அடையாளம் காட்ட யாரும் முன்வருவதில்லை. அவர்களின் சொந்த குடும்பத்தினருக்கே அந்த அக்கறையும், எண்ணமும் இல்லை..

ஆனால் சகோதரர் நூருத்தீன் தனது தாத்தா, தந்தை ஆகியோரின் படைப்புகளை எதிர்காலத் தலைமுறைக்குத் தர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அவர்களின் படைப்புகளை தனது இணைய தளத்தில் darulislamfamily.com தொடர்ந்து பதிவேற்றி வருகிறார். அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகள்.

எழுத்தாளர் நூருத்தீன் சமரசம் இதழில் எழுதிய இமாம் அபூஹனீஃபா (ரஹ்) பற்றிய வரலாற்று நூல் நிலவொளி பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்து. சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்குவதற்காக பட்டியல் தயார் செய்து வைத்திருப்பவர்கள் இந்த நூலையும் அப்பட்டியலில் அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நூலாசிரியர் நூருத்தீனுக்கும், நிலவொளி பதிப்பக நைனார் மற்றும் சகோ. வி.எஸ். முஹம்மது அமீன் ஆகியோருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுதலும்…

-ராபியா குமாரன்

Related Articles

Leave a Comment