கி.பி. 1250-ஆம் ஆண்டின் மே மாதம் பிறந்துவிட்டது. சென்ற ஆண்டின் டிஸம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விழாவின் போழ்து காஹிராவையே கிறிஸ்து ராஜ்யத்தின் தலைநகராக ஆக்கிவிட்டுப் பெரு விழாக் கொண்டாட வேண்டுமென்று கனவுகண்டு மிஸ்ர்மீது படையெடுத்து வந்த லூயீ மன்னரும்
அவர் சகாக்களும் இன்னம் காஹிராவின் கோட்டைக் கோபுரத்தின் கோட்டத்திற்குள்ளேயே சிறைவர்களாக அடைபட்டுக் கிடந்தார்கள். தமீதாவுக்கு லூயீ முன்னமே செய்தி அனுப்பியிருந்தும் லூயீயின் மனைவியோ அல்லது வேறெவருமோ, அந்த எட்டிலக்ஷம் தீனார் அபராதத் தொகையையும் இன்னம் கொண்டுவரவில்லை; பதில் செய்தியும் வந்து சேரவில்லை.
பசு மரத்தையும் பொசுங்க செய்யும் மிஸ்ரின் இளவேனிற் காலம் காஹிராவின் எதிர்க்கரையிலிருக்கும் ஸஹராப் பாலைவனத்திலிருந்து நெருப்புக் காற்றை அள்ளி வீசிக்கொண்டிருந்தது. மிகவும் குளர்ச்சியான பிரான்ஸ் தேசத்திலிருந்த வந்த லூயீ இத்துணைக் கடுமையான வெயில் காஹிராவில் வீசுமென்பதைச் சற்றும் எதிர்பார்த்ததில்லை. மேலும், இப்போது தொடங்கியிருப்பது இளவேனிலின் ஆரம்ப காலமே என்றும், செல்லச் செல்லச் சொல்லொணாக் கடுங் கோடை வந்து, வறுக்கிற சட்டியிலே போட்டுப் பொறிக்கிற மீனைப் போல் வாட்டி வதக்கிவிடுமென்றும் லூயீ கேள்விப்படக் கேள்விப்பட, நெடு மூச்சு விட்டுக்கொண்டே இருந்தார். கோடையின் கொடுமைக்கு அவருடைய உடல் பலியாவதை விட, தொடர்ச்சியான சிறை வாசத்தாலேயே உயிர் போய்விடுமோவென்று பெரிதும் கலக்க முற்றார்.
ஐரோப்பா கண்டத்தின் அருமையான பிரான்ஸ் தேசத்தில் அரசராய் வீற்றருந்து, பெயரும் புகழும் கீர்த்தியும் பிரதாபமும் பெற்று இன்புறுவதை விடுத்து, மத்தியதரைக் கடலை அடுத்துள்ள கொடிய பாலைவனங்கள் நிரம்பியிருக்கும் வனாந்தரங்களின் மத்தியில் காணப்படும் மிஸ்ர் தேசத்தின் தலைநகரிலே, அதிலும் ஒரு பெண் விதவை ஆட்சி செலுத்திக்கொண்டிருக்கிற இடத்திலே மானமிழந்து, கேட்பாரற்று, கைதியாக அடைபட்டுக் காவலிலே வைக்கப்பட்டிருப்பதை எண்ணியெண்ணி உடல் நலிந்தார்; உள்ளஞ் சோர்ந்தார்; மனம் புண்ணாயினார்; மானம் போனதே என்றார்.
வெளியே வீசுகிற வெயிலின் உஷ்ணம் ஒருபுறம்; உள்ளத்துள் எழுகின்ற மனக் கசப்பால் உதிக்கின்ற வேதனை ஒருபுறம்; இன்னம் எத்தனை நாட்களுக்கு இப்படிச் சிறையிலேயே அடைபட்டுக் கிடந்து மடிய வேண்டுமோ என்னும் மாபெருங் கவலை மற்றொரு புறம். அனலிடைப்பட்ட புழுவெனத் துடித்து உள்ளங்குன்றினார் பிரான்ஸ் தேசத்து ராஜாதி ராஜா, ஒன்பதாவது லூயீ மன்னர்.
“என் தாயார் என்னைப் பெற்றதைவிட, செத்த குழவியைப் பெற்றிருக்கக் கூடாதா? அல்லது வெறும் மாமிசப் பிண்டத்தைப் பெற்றிருக்கலாகாதா? என்னை வளால் வெட்டப்படவும் அருகதையில்லாதவன் என்று என் எதிரிகள் இன்னம் உயிருடன் விட்டுவைத்து, சங்கிலி கொண்டு பிணைக்கப்பட்ட நாயைப் போல எல்லா வகைச் சங்கடத்துக்கும் உள்ளாக்கி, வன்பகைஞர் மத்தியில் என்னைச் சிக்க வைத்த கதியை யான் எங்ஙனம் சகிப்பேன்? ஐயோ, என்னைப்போல ஒரு பிள்ளையை பெறுவார்களா?”* என்று தமிழ்நாட்டு மன்னரொருவர் கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது பாடினாராம். அதைப் போல லூயீ மன்னரும் இப்போது சிறையிலிருந்தபடியே தம்மைத் தாமே நொந்துகொண்டிருந்தார். முஸ்லிம்கள் அவரைத் துன்புறுத்தவில்லை என்பது முற்றிலும் மெய்யேயென்றாலும், எத்தனை மாதங்களுக்குத்தாம் அன்னவர் கைதியாகவே காலங் கழிப்பார்? சாதாரண மனிதனுங் கூடச் சுயேச்சையாக அலைந்து திரிந்துகொண்டிருக்கையில், மன்னாதி மன்னராக விளங்கிய லூயீ சகல உரிமைகளையும் இழந்து, தம்முடைய ஜன்ம சத்துருக்களின் காராக் கிருகத்துள் எல்லையில்லாத விருந்தினராய் அடைபட்டுக் கிடக்க எங்ஙனம் மனந் துணிவார்?
“குழவி யிறப்பினு(ம்) ஊன்தடி பிறப்பினும் ஆளன்(று) என்று வாளில் தப்பார் தொடர்ப்படு ஞமலியி(ன்) இடர்ப்படுத் திரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத் தாமிரந்(து) உண்ணு(ம்) அளவை ஈன்ம ரோஇவ் வுலகத் தானே!” என்னும் புறநானூற்று 74-ஆம் பாடலில் கண்டுள்ள உண்மைச் சம்பவத்தையே இங்கு விளக்கியுள்ளோம். இம் மாதிரி மனமுருகியவர் கணைக்காலிரும்பொறை என்னும் சேரமன்னன். |
தமீதாவிலுள்ள தம் மனைவிக்கு அவர் முன்னமே செய்தியனுப்பியிருந்தமையால், அவள் எப்போது வந்து தம்மை விடுவிக்கப் போகிறாளோவென்று தினமும் வழி பார்த்துக்கொணடிருந்தார். அவ்வளவு பெரிய தொகையைச் சவதரித்துக் கொண்டுவர நாட்கள் செல்வது நியாயமே என்றாலும், லூயீ பொறுமையிழந்தே வருந்திக் காணப்பட்டார்.
இறுதியாக, அந்த பிரெஞ்ச் மன்னர் எதிர்பார்த்த நன்னாள் வந்து விடிந்தது. லூயீயின் மனைவி ஒரு பெரிய படவிலே ஏறிக்கொண்டு, தங்கப் பாளங்களையும் மூட்டை கட்டிக்கொண்டு, உடன் சிலரைத் துணையாகக் கொண்டு, நீல நதி வழியே வந்து, காஹிராவில் கரையிறங்கினாள். கோட்டைச் சிறையின் சாளர வழியே இதைக் கண்ட அந்த பிரெஞ்ச் மன்னர் துள்ளிக் குதித்து, ஆனந்த பரவசத்தால் களிப்பெய்தினார். விடுதலை செய்வதற்காக வருபவரைக் கண்டு கைதிகள் எவ்வாறு மனங்குளிர்வர் என்பதை நாம் பிரமாதமாக வருணிக்கத் தேவையில்லை. என்னெனின், எப்படிப்பட்ட மனிதனும் முதலில் தனது உயிரையும் அடுத்தப்படியாகத் தன்னுடைய சுயேச்சையென்னும் சுதந்திரத்தையுமே காப்பாற்றிக் கொள்ள அரும்பாடு படும்போது, பட்டபாடெல்லாம் போதும் போதுமென்று போய்விட்ட லூயீ தம்மை விடுவிக்க வந்தவர்களைப் பார்த்துக் களிப்புக் கடலுள்ளே மூழ்கியதை நாம் விளக்கத் தேவையில்லை.
சுல்தானா ஷஜருத்துர் அன்று அரசவை கூட்டுதற்கு முன்னரே, லூயீயை விடுவிக்க ஆட்கள் வந்திருக்கிறார்களென்ற செய்தி அவருக்கு எட்டிற்று. இந்தக் காலத்தில் நாம் காண்கின்ற மாஜிஸ்ட்ரேட்டுகளைப் போலவும் நீதிபதிகளைப் போலவும் ஆடம்பரத்துக்காவும் இடம்பத்துக்காகவும், வந்திருப்பவர்களை வீணே காக்க வைத்துவிட்டு இறுதியாக, “இந்த விஷயத்தை இன்று கோர்ட் கூடியவுடனே மனுப்போட்டு என் கவனத்துக்குக் கொண்டு வாருங்கள்!” என்று சட்டப்படி சொல்லியனுப்பிவிடும் மாபெரிய கெட்ட வழக்கம் அந்தக் காலத்தில் இஸ்லாமிய ராஜ்ஜியத்திலே இருந்ததில்லை; முஸ்லிம்கள் ஆட்சி செலுத்திய எந்நாட்டிலும் அப்படி அலைக் கழித்ததில்லை. எனவே, சிறையிலே கிடக்கிற கைதியை விடுவிப்பதற்காக ஈட்டுத் தொகையை மூட்டை கட்டிக்கொண்டு உரியவர்கள் வந்திருக்கிறார்கள் என்று ஷஜருத்துர் செவியேற்றவுடனே, சபை கூட்டி அங்கே தான் அதைக் கவனிக்க வேண்டும் என்னும் வெற்றுச் சம்பிரதாயத்தைக் கைக் கொள்ளாமல், அக்கணமே லூயீயின் மனைவியைத் தம் முன்னர்க் கொண்டு வந்து நிறுத்துமாறு சுல்தானா தம் ஏவலாட்களிடம் கட்டளையிட்டார். மறு நிமிஷத்தில் மிஸ்ரின் மகாராணி முன்னே பிரெஞ்ச் ராணி வந்து நின்றாள். சகலவித முக வசீகரணமும் பொருந்திய கட்டழகி ஷஜருத்துர்ரை அவ் வநாகரிக பிரெஞ்ச் ராணி இப்போதுதான் முதன் முறையாகச் சந்தித்தாள்.
“ஏ, இந் நாட்டு ராணியே! என் கணவரை இங்கிருந்து விடுதலை செய்து அழைத்துப் போவதற்காக யானும் என் நண்பர்களும் இங்கேவந்து தங்கள் முன்னே நிற்கிறோம்,” என்று அவள் நேராக வந்த விஷயத்துக்குச் சென்றாள்.
“ஏ, பிரெஞ்ச் நாட்டு மன்னரின் மனைவியே! மிகவும் சந்தோஷம். உன் கணவரை நீ மீட்பித்துக்கொண்டு போவதில் எமக்கொன்றும் ஆக்ஷேபமில்லை. ஆனால், அவருடைய விடுதலைக்காக நாம் கோரியிருக்கிற முழுக் கிரயத்தையும் கொண்டு வந்திருக்கிறாயல்லவா?”
“ஏ, சுல்தானா! நாங்கள் இந் நாட்டுக்கே புதியவர்கள். இங்கே புழக்கத்திலிருந்து வருகிற தங்க நாணயங்களுக்கும் நாங்கள் எங்கள் நாட்டில் புழங்கி வருகிற வெள்ளி நாணயத்துக்கும் உள்ள சம்பந்தா சம்பந்தத்தை எங்களால் கணக்கிட முடியவில்லை. எனவே, யானும் என் இனத்தவரும் எங்கள் தேசத்தில் எவ்வளவு தங்கத்தைச் சுரண்ட முடியுமோ, அவ்வளவையும் ஒட்டச் சுரண்டியெடுத்து மூட்டை கட்டிக்கொண்டு வந்திருக்கிறோம். அந்தத் தங்கப் பொதியின் மதிப்புத் தங்கள் நாணயக் கணக்கில் எவ்வளவு ஆகிறதென்பதைத் தாங்கள் தாம் சொல்ல வேண்டும். மேலும், மற்றொரு விஷயத்தையும் தெரிவிக்க யான் ஆசைப்படுகிறேன் : என்னெனின், இப்போது நாங்கள் கொண்டு வந்துள்ள தங்கந்தான் எங்களால் மிகவும் உயர்ந்தபக்ஷமாகச் சேகரிக்க முடிந்த தொகையாகும். இதன் மதிப்பு தங்கள் தேசத்து நாணய மதிப்புப்படி தாங்கள் கேட்ட தொகைக்குச் சரியாயிருந்தாலும், சற்றே குறைவாயிருந்தாலும், அப்படியே ஏற்றுக்கொள்ளும்படி மிகவும் மன்றாடிப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். என்னெனின், குறைவாயிருந்தால், இதற்குமேல் ஒரு செப்புக் காசுங்கூட எங்களால் சவதரிக்க வழியில்லையென்பதை மிக்க வருத்தத்துடனே தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலும், இந்த யுத்ததால் எங்களுக்கு இதுவரை ஏற்பட்டிருக்கிற நஷ்டத்தை ஈடுசெய்து கொள்வதற்குக் கடுமையான வரிகளை எங்கள் குடிஜனங்களுக்கு இன்னம் பல ஆண்டுகளுக்கு நாங்கள் விதித்தாக வேண்டி வரும். எனவே, இவற்றையெல்லாம் கருதி, என்னுடைய கோரிக்கையை ஏற்று, இந்தத் தங்கத்தை மனமொப்பி எடுத்துக்கொண்டு, என் கணவரை என்னிடம் சேர்ப்பிக்கும்படி மிகவும் விநய பூர்வமாய் வேண்டிக்கொள்ளுகின்றேன்.”
இவ்விதமாக அந்த பிரெஞ்ச் மாது பேசி முடிந்ததும், அந்தத் தங்கப்பாளம் நிரம்பியிருந்த பெரிய மூட்டையை ஐந்து பலாட்டியரான அடிமைகள் பத்திரமாகத் தூக்கிக்கொண்டு வந்து சுல்தானாவின் சமுகத்தில் மெள்ள வைத்தார்கள். மறு கணமே நாணயப்பரிவர்த்தனை அதிகாரி கொண்டுவரப்பட்டார். அந்தத் தங்கப்பாளங்கள் மிக ஒழுங்காக எடை போடப்பட்டன; பிறகு அவற்றின் மதிப்பு மிகச் சரியாகக் கணக்கிடப்பட்டது. ஒருமுறைக் கிருமுறையாக அப் பரிவர்த்தனை அதிகாரி கணக்கைச் சரிபார்த்து விட்டு, சுல்தானாவின் திருமுகத்தை நோக்கினார்.
“யா ஸாஹிபத்தல் ஜலாலத்தில் மலிக்கா! சரியாக நான்கிலக்ஷம் தீனாரே ஆகிறது. அதைவிட ஒரு திர்ஹங்கூடக் கூடுதலாகவுமில்லை; குறைவாகவுமில்லை.”
“என்ன! நான்கிலக்ஷமா? அப்படியானால், இன்னொரு நானகிலக்ஷம்?” என்று சுல்தானா ஆச்சரியத்துடனே வினவினார்.
லூயீயின் மனைவி கைகளைப் பிசைந்தாள். பதிலொன்றும் பேசாமல் வாய் புதைந்து நின்றாள்.
“ஏற்கனவே விதிக்கப்பட்ட அபராதத்தில் நான் மூன்றிலொரு பங்கையே கேட்டிருந்தும், நீ அதில் பாதியை மட்டுமே கொண்டு வந்து விட்டு, உன் கணவரின் விடுதலையைக் கோருகிறாயே! உனக்கு இது நியாயமாய்ப் படுகிறதா? நீ கூறுவதை மெய்யென்று வைத்துக் கொண்டால், உங்கள் ராஜ்யத்தின் பெறுமதி நான்கிலக்ஷம் தீனார்தானென்றா எம்மை நம்பச் சொல்லுகின்றாய்? சென்ற நான்கு மாதங்களாக நீங்களெல்லாம் முயற்சி செய்தும் இந்தச் சிறிய தொகையைத்தானா சவதரிக்க முடிந்தது? இதை நாம் நம்பத் தயாராயில்லை!”
“எகிப்து தேசத்தின் ராணியே! எங்கள் தேவன் மீது ஆணையாக! என்னால் எவ்வளவு பிரயாசை எடுக்க முடியுமோ, அதற்கும் மேலான பிரயாசை எடுத்தே இப்பெரிய தொகையைச் சம்பாதித்தேன். இனிமேல் என் உயிருள்ள வரையிலும் எவ்வளவுதான் மேற்கொண்டு முயன்றாலும், இனியும் ஒரு தங்க நாணயத்தைக்கூடச் சம்பாதிக்க முடியுமென்று நான் நம்பவில்லை. என் கணவரின் விஷயத்தில் தாங்கள் தயாளத்தைக் காட்டவில்லையென்று நான் தங்கள்மீது குறை கூறவில்லை. ஆனால், தங்களுக்கு இஷ்டமிருந்தால், இனியுங்கூட சற்று அதிகமான தயாளத்தைத் தங்களால் காண்பிக்க முடியுமென்றுதான் நான் நம்புகிறேன். நான் பிரெஞ்ச் தேசத்து ராணி என்னும் அகம்பாவத்துடன் இந்தப் பாதிக் கிரயத்துக்குத் தங்களிடம் என் கணவரின் விடுதலையைக் கோரி நிற்கவில்லை. ஆயின், தங்களிடம் தோல்வியடைந்து கைதியாய்ச் சிக்கித் தவிக்கும் என் கணவரை விடுவிக்க வேண்டுமென்று மட்டுமே குறையிரக்கிறேன்.”
“ஏ, பெண் பிள்ளை! இதுவரை எப்பொழுதுமே முஸ்லிம்கள் தங்கள் எதிரிகளின்மாட்டுக் கருணையும் அன்பும் தயாள சித்தமும் காண்பிக்காமல் இருந்ததில்லை என்பதை நீயே மிக நன்றாய் அறிந்திருக்கிறாய். எனவே, உன்னுடைய கணவர் விஷயத்தில் நான் கடுஞ்சித்ததுடன் இருக்கிறேனென்று நீ கருதாதே. அந்த லூயீ கிளப்பிய அக்கிரமமான அநியாய யுத்தத்தில் அவர் படுதோல்வியடைந்து, இன்னம் ஆண்டவனுதவியால் உயிருடனேயிருப்பதால், நீ என்னிடம் அவருடைய விடுதலையையும் அவரை நான் உன்னிடம் சேர்ப்பிக்க வேண்டுமென்பதையும் மனவேதனையுடனே கோரி நிற்கின்றாய். ஆனால், உன் புருஷர் கிளப்பிய அந்த அக்கிரமமான யத்தத்துக்காகத் தற்காப்பு ஆயுதங்களைச் செய்து கொண்டிருக்கும்போதே ஆண்டவன் திருவடி நீழலை அடைந்துவிட்ட என் கணவரை என்னிடம் சேர்ப்பிக்கும்படி யான் யாரிடம் கோருவது? நாங்களெல்லாம் ஆண்டவனுக்குப் பயந்து, அக்கிரமம் புரியாமல், எங்கள் எல்லைக்குள்ளே சும்மா குந்திக்கிடக்கும் போது, நீங்கள் ஏராளமாய்ப் படை திரட்டுகிறீர்கள்; எல்லையைக் கடக்கிறீர்கள்; கடலைத் தாண்டுகிறீர்கள்; ஊர்களை முற்றுகையிடுகிறீர்கள்; கொள்ளை, கொலை, சூறை முதலியவற்றைத் தாராளமாய்க் கைக்கொள்ளுகின்றீர்கள்; நிரபராதிகளின் உயிர்களைக் குடிக்கிறீர்கள்; என்னைப்போன்ற பெண்மணிகளை விதவைகளாக்குகிறீர்கள். இவ்வாறு இல்லாத அநியாயத்தையும் பொல்லாத அக்கிரமத்தையுமெல்லாம் புரிந்துவிட்டு, விஷமப் பிரசாரம் புரியும் நோக்கத்துடனே, ‘முஹம்மதியர்கள் தங்களுடைய மதத்தை வாளாயுதத்தின் உதவி கொண்டே பரத்துகிறார்கள்!’ என்று பொய் புகல்கிறீர்கள்; இந்தப் பச்சைப் பொய்யைச் சரித்திரத்திலும் எழுதுகிறீர்கள். எனினும், நாங்கள் அவையொன்றினையும் கருதாமலும் பாராட்டாமலும் உங்களையெல்லாம் மிக மிகத் தாராளமாக எங்கள் நபியின் அடிச்சுவட்டைப் பின்பற்றி மன்னித்து விட்டு விட்டாலும், திரும்பத் திரும்ப உங்களுடைய நீச புத்தியைக் காண்பிக்கின்றீர்கள். ஈதெல்லாம் போகட்டும். நீயாவது எவ்வளவோ பாடுபட்டு இந்தத் தங்கக் குவியலைக் கொண்டு வந்து என்னிடம் சமர்ப்பித்து விட்டு, லூயீயை விட்டுவிடும் படி கோரிக் கொள்கிறாய். நான் இதைவிட நூறு மடங்கு தங்கத்தைக் கொடுத்து என் கணவரை உன்னிடம் யாசித்தால், உன்னால் அவரைத் திருப்பிக் கொடுக்க முடியுமா? கிறிஸ்தவர்களாய நீங்கள் எப்போதுமே செப்பனிட முடியாத பெரு நஷ்டத்தைத்தான் முஸ்லிம்களாய எங்களுக்கு வீணே இழைக்கின்றீர்கள் என்பதற்கும், ஆனால் நாங்கள் அப்படிப்பட்ட செப்பனிட முடியாத எத்தகைய நஷ்டத்தையும் உங்களுக்கு இழைப்பதில்லை என்பதற்கும் இதனினும் சிறந்த அத்தாக்ஷியும் வேண்டுமோ?”
“ஏ, சுல்தானா! யாங்கள் உங்களுக்கு இழைத்திருக்கும் கொடுமைகளும் அக்கிரமங்களும் அநீதிகளும் அனந்தமென்பதை யான் திரிகரண சுத்தியுடனே ஏற்றுக் கொள்ளுகிறேன். என் கணவர் கிளப்பிய யுத்தத்தால் தங்கள் கணவர் உயிரிழக்கவும் நேர்ந்ததென்பதையும் யான் முற்றும் ஏற்றுக் கொள்ளுகிறேன். ஆனால், சென்றவற்றையெல்லாம் சிந்தித்து, தங்களுக்கு இழைக்கப்பட்ட கஷ்ட நஷ்டங்களுக்கெல்லாம் எங்களிடம் ஒவ்வோரம்சத்திலும் கணக்காகப் பழிவாங்கத் துணிந்தீர்களானால், யான் எங்ஙனம் சகிப்பேன்? சிறியேங்கள் செய்த சிறு பிழையையெல்லாம் பெரியாராகிய தாங்கள் பொறுத்தருள வேண்டும்.”
|
“ஏ, லூயீயின் மனைவியே! சிறு பிழையா? …ஆயின், அதையேதான் நானும் சொல்ல வந்தேன். பழிவாங்கும் விஷயத்தில் சன்னத் தராசுகொண்டு நிறுத்துப் பார்த்து, எனக்கேற்பட்ட நஷ்டங்களுக்கெல்லாம் உன்னிடம் பதிலுக்குப் பதில் சரியான ஈடு வாங்க நான் நினைத்தேனானால், முதலில் உன் கணவரை நான் கொன்றுவிட்டு, உன்னையும் என்னைப்போலக் கைம்பெண்ணாக்க வேண்டும். அடுத்தபடியாக, எங்கள் நாட்டையெல்லாம் நீங்கள் கொள்ளையடித்ததுபோல், உங்கள் தேசத்தை முழுதும் நாங்கள் சூறையாட வேண்டும். எங்கள் மக்களுள் எத்தனை பேரைக் கொன்று போட்டீர்களோ, அத்தனைபேரை உங்களுள்ளே கொன்றெறிய வேண்டும். எங்கள் மஸ்ஜித்கள் எத்தனை இடிக்கப்பட்டனவோ, அத்தனை மாதா கோவில்கள் உங்கள் நாட்டில் பாழப்படுத்தப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, எத்தனை பெண்மணிகளின் கற்பை மிருகங்களான உங்கள் படையினர் அழித்தார்களோ, அத்தனை பிரெஞ்ச் ஸ்திரீகளை மிஸ்ரிகள் கற்பழிக்க வேண்டும். – இவையனைத்தும் மோசேயின் தர்மயுத்த நியதியின் பிரகாரம் நியாயமென்றே கருதப்படினும், ஏ, நங்காய்! எங்கள் இஸ்லாம் இப்படியேதான் செய்து முடிக்க வேண்டுமென்று எங்களுக்கு விஷமத்தனத்தைப் போதிக்கவில்லை; அல்லது நாங்கள் எங்கள் வேத போதனைக்கு மாற்றமாகவும் நடந்துகொள்ளவும் மாட்டோம். உம்முடைய கணவருக்கோ, அல்லது அவருடைய சகாக்களுக்கோ, யாதொருவிதக் குறைவும் வராமலே மிக மிக ஒழுங்காக இதுவரை மரியாதையுடனே நடாத்தி வந்திருக்கிறோம். அவருடைய விடுதலைக்கும் மிக மிகக் குறைவான அபராதத்தையே விதித்திருக்கிறோம். எனவே, எம்மீதோ அல்லது எமது தீர்ப்பின் மீதோ, நீ குறை எதையும் கற்பனை செய்ய முடியாதென்றே நாம் நம்புகிறோம். ஆனால், நாம் எவ்வளவு தயவு காட்டினாலும், மேலும் மேலும் விட்டுக்கொடுக்க வேண்டுமென்று நீ கேட்பதைக் கண்டு, சிரிப்பதா அல்லது அழுவதா? உன் கணவரின் விடுதலை வேண்டுமென்றால், இககணமே மீதியையும் கொடுத்து விட்டு, அவரை உடனழைத்துச் செல்!”
லூயீயின் மனைவி, கடுமையான இந்தப் பதிலைக் கேட்டதும் மண்டியிட்டு விட்டாள். தன்னிரு கைகளையும் நீளமாக நீட்டியேந்திக்கொண்டு, மிகவும் பரிதாபகரமாய்க் கீழ்க்காணுமாறு கேட்டுக்கொண்டாள்:-
“உலகம் புகழும் உன்னத தேசத்தின் உத்தம ராணியே! யான் குறைவான தொகையைக் கொடுத்துவிட்டு என் கணவரை மீட்பித்துக்கொண்டு செல்வதற்காகத் திட்டமிட்டு இங்கு வரவில்லை. ஆனால், என்னால் முடிந்த அளவுக்கு மேலும் அதிக நிதி திரட்டிவிட்டு, மீதியைத் தங்களிடம் இரந்து பிச்சை கேட்கவே இங்குவந்து யான் இருகையேந்தி நிற்கின்றேன். என் கணவரின் உயிரைக் காப்பாற்றிப் பிச்சையளிக்கும் தாங்கள், எனக்காக ஒரு பாதி அபராதத் தொகையையும் சேர்த்துப் பிச்சையிடும்படியே யாசிககின்றேன். ஓர் அரசியாக யான் என்னை நினைத்துக்கொணடு தங்களைக் கேட்டுக்கொள்ளவில்லை; ஆனால், ஒரு பரதேசி என்னும் ஹோதாவில் மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்: என் கணவரின் உயிரைக் காப்பாற்றிக் கொடுக்கும் தாங்கள், இந்தப் பாதி அபராதத்தையேற்று எங்களை அடியுடன் மன்னித்து விடுமாறு பிரார்த்தித்துக்கொள்கிறேன். தங்களுடைய தயாள சித்தத்தையோ, அல்லது தங்களுடைய பெருந்தன்மையையோ, யான் துஷ்பிரயோகஞ் செய்துகொள்ளவில்லை. ஆனால், எவ்வளவோ விட்டுக்கொடுக்கிற தாங்கள் இந்தப் பாதித்தொகையையும் மன்னித்து விட்டுவிடுவதால் தாங்கள் ஏதும் நஷ்டமடையப் போவதில்லை; அதற்கு மாறாக, மிஸ்ர் தேசத்தின் முதல் முஸ்லிம் அரசி எதிரிகளை அடியுடன் மன்னித்து விட்டுவிட்டார் என்னும் கீர்த்தியும் கியாதியும் சரித்திரத்தில் பென்னெழுத்தால் பொறித்து வைக்கப்படுமன்றோ? இதனால் யாங்களும் எங்கள் ஜென்மம் உள்ளளவும் இந்தப் படிப்பினையை மறக்கமாட்டோமன்றோ?”
“ஏ, பிரெஞ்ச் மாதே! எம்முடைய கணவர் உயிருடனிருக்கையில் நாம் இந் நாட்டைத் தாற்காலிகமாக ஆட்சி செலுத்திய போதே இங்குப் படையெடுத்துவந்த நீங்கள், இப்போது நாம் நிரந்தரமாக சுல்தானாவாகி விட்டோமென்று தெரிந்த பின்னர், நாளையே மீட்டும் எம்மீது மற்றொரு சிலுவை யுத்தத்தைத் தொடுக்கமாட்டீர்களென்பதற்கு எவரே உறுதி கூற முடியும்? சென்ற யுத்தத்தில் சுல்தான் ஸாலிஹின் உயிரைக் குடித்தீர்கள்; இந்த யுத்தத்தில் எமது உயிரைக் குடித்தாலும் குடித்துவிடுவீர்களே!”
“சுல்தானா! ஆப்பைப் பிடுங்கிய குரங்கு பட்ட பாட்டை விடப் பொல்லாத பாடெல்லாம் பட்ட நாங்கள் எங்கள் தலையைத் தூக்கவே இன்னம் பல நூற்றாண்டாகுமே! அன்றியும், என் நாட்டிலுள்ள எல்லாவற்றையும் அடியுடன் சுரண்டியே யன்றோ இந்தத் தண்டனையைச் சவதரித்து வந்திருக்கின்றேன்! மேலும், விதவையாய்ப்போன தாங்கள் பழிவாங்காமல் என் கணவரைப் பெருந்தன்மையுடன் நன்கொடையளிக்கும்போது, இனித் தலைமுறை தலைமுறைக்கம் எவரே மனத்தாலும் தங்களுக்குத் துரோகம் நினைக்க முடியும்? நாங்கள் மீண்டுமா தவறிழைக்க வேண்டும்? போதும், போதும், நாங்கள் பட்ட பாடெல்லாம்! தேவனே இனி எங்களுக்கு நேர்வழி காட்டுவாராக!”
“இதுவரை எட்டு முறை உங்களுக்கு நேர்வழி காட்டாத தேவன் இனிமேலாவது நேர்வழியைக் காட்டட்டும். ஆனால், ஏ, பிரெஞ்ச் மாதா! நீங்கள் பட்ட பாடெல்லாம் ஒரு புறமிருக்க, நான் பட்டபாட்டை நீ சிறிதேனும் அறிவாயா? ஏ, பெண்ணே! உயிர் துறந்த என் கணவரின் உடலை நான் தைலமிட்டுத் தைத்து, உயிருள்ளதே போல் நடிப்பதற்காகப் பட்டபாட்டை நீ அறிவாயா? பிரேதத்தைப் புதைக்க முடியாமல், அதை அல்லுபகல் அனவரதமும் என் கண்ணெதிரே வைத்துக்கொண்டு, அவலக் கண்ணீரை நீரருவியாய்ச் சொரிந்த எனது இருதலைக் கொள்ளி எறும்பை நிகர்த்த பெருங்கொடுமையை நீ உணர்வாயா? ஏ, நங்காய்! இதே மாதிரி நான் பதினாறு நீண்ட நாட்கள் – பதினாறு இரவும், பதினாறு பகலும், சவத்துக்குப் பக்கத்தில் குந்திப் பொங்கிப் பொங்கிப் பொறுமி யழுதுகொண்டும் அழுத கண்ணை ஆருமறியாது துடைத்துக் கொண்டு ஆட்சியை நடத்திக்கொண்டும் எல்லாவற்றுக்கும் மேலாகக் காட்டுமிறாண்டிகளான நீங்கள் தொடுத்த மகாகொடிய அநியாய யுத்தத்தை வெளியே எதிர்த்துக்கொண்டும் ஒவ்வொரு வினாடியையும் ஒரு பத்து யுகமே போல் கடத்தி வந்தேன் என்பதை நீ நம்புகிறாயா? – முடியாது, முடியாது; முக்காலும் முடியாது! நான் எட்டிலக்ஷம் தீனாரையும் பெற்றே ஆகவேண்டும்! ஒரு நாட்டைக் காப்பாற்றுவதற்காக நாம் புரிந்த பெருந் தியாகங்களுடனே நீ இந்த நாலிலக்ஷம் தீனார் பெறுமதியுள்ள தங்கத்தைச் சேகரிப்பதற்காக எடுத்துக்கொண்ட பிரயத்தனங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், போதுமான கஷ்டங்களை அனுபவித்து விட்டாய் என்று எம்மால் நம்ப முடியாது. நீ மீதியை அனுபவித்தேதான் தீரவேண்டும்! இன்னொரு நான்கிலக்ஷம் தீனார் தங்கத்தை நீ கொண்டுவந்து கொடுத்துதான் ஆகவேண்டும்! அதைச் சேகரிக்க முடியாமல் நீ இன்னம் சிறிது திண்டாடித்தான் தீரவேண்டும்! உன்னை இத்துடன் மன்னித்து விடுவதால், நீ போதிய புத்திமதியைப் பெற்றுக்கொள்ள முடியாது போயவிடும்!” – ஷஜரின் கண்களில் தீப்பொறி பறந்தது.
“ஏ, சுல்தானா! லூயீயின் மனைவியென்று யான் தங்களை நெருங்கவில்லை; அல்லது ஓர் அரசி மற்றோர் அரசியைச் சந்திப்பதாக எண்ணிக் கொண்டும் யான் தங்களை அண்மவில்லை. ஆனால், ஒரு சாதாரணப் பெண்மணி மற்றொரு பெண்மணியிடம் தன் கணவனுக்காக மன்றாடுகிற பாவனையிலேயே அடியேன் தங்களை நெருங்கியிருக்கிறேன். தாயே! லூயீயின் மனைவி என்பதற்காகத் தாங்கள் என்னைத் தண்டனைக்குள்ளாக்க வேண்டாம்; தங்கள் மீது போர் தொடுத்த ஜாதியாரின் அரசி என்பதற்காக எனக்குப் பிராய்ச்சித்தம் அளிக்க வேண்டாம். ஆனால், யானும் தங்களைப் போன்ற ஒரு பெண்மணியே என்பதற்காக என்னை மன்னித்து விடுங்கள். தாங்களாவது இப்போது வேறுவிவாகம் செய்துகொண்டுவிட முடியும். ஆனால், கத்தோலிக்க மாதாகிய யான் என் கணவரைத் தங்கள் சிறையிலே உயிருடன் அடைத்து வைத்துவிட்டு, எங்ஙனம் வேறு விவாகம் செய்து கொள்ளமுடியும்? தங்கள் கணவரை ஆண்டவன் தங்களிடமிருந்து பிரித்துக்கொண்டான் என்பதற்காகத் தாங்கள் என் கணவரை என்னிடமிருந்து பிரித்து விடாதீர்கள். உயிரிழந்த தங்கள் கணவரின் உடலுக்குத் தந்திரமாய்த் தாங்கள் உயிர் கொடுத்தாற்போலே நடிக்கச் செய்ததேபோல், உயிருள்ள என் கணவரை உயிரற்ற பிரேதமாக நடிக்கச் செய்யாதீர்கள். மண்ணுள் புதைந்த தங்கள் கணவருக்காகத் தாங்கள் கைம்பெண்ணாகியிருக்கும்போது, தங்கள் சிறையுள் அடையுண்ட என் கணவருக்காக என்னைக் கைப்பெண்ணினுங் கேவலமாக ஆக்கிவிடாதீர்கள். நாங்கள் முட்டாட்டனமாய்த் தங்கள் நாட்டின்மீது படையெழுப்பி வந்தும் தங்கள் நாட்டைக் காப்பாற்றிக் கொண்ட தாங்கள், எங்கள் நாட்டை நீங்கள் படையெடுக்காமலே இப்படி இன்னம் கெடுத்துவிடாதீர்கள். பொருளாதாரத்தில் ஏற்கனவே ஈன ஸ்திதியில் இழிந்துபோயிருக்கிற எங்களை இன்னம் அகல பாதலத்துள்ளே ஆழ்த்திவிட விழையாதீர்கள். இவ்வளவு கோரிக்கைகளையும் என் இருகையேந்தி யான் ஒரு சாதாரணப் பெண்பிள்ளையென்ற ஹோதாவிலேயே விநயபூர்வமாய் வேண்டிக்கொள்கிறேன். தாயே! எல்லாம் தங்கள் சித்தமே எங்கள் பாக்கியம்! தாங்கள் இட்டால் பிச்சை; இல்லாவிடில், யான் இங்கேயே என் உயிரையும் விட்டுவிட ஆயத்தமாக இருக்கிறேன். எனக்குக் கணவரில்லாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?”
ஷஜருத்துர் இடது கன்னத்தில் இடக்கை ஊன்றிக் கொண்டு, மிகவும் ஆழமாகச் சிந்தித்துக்கொண்டிருந்தார். மிகவும் பரிதாபகரமான வதனத்துடனே அந்த பிரெஞ்ச் மாது கெஞ்சிக் கேட்டும், ஷஜருத்துர்ரின் மனம் இளகவில்லை. தம்முடைய பழைய அனுபவங்களை எல்லாம் ஞாபகப்படுத்திக் கொண்டு, இன்னம் ஆத்திரத்துடனே உற்று நோக்கினார். இன்னமும் மிஸ்ரின் சுல்தானா தம் கருணைக்கண் திறக்கவில்லையென்பதை உணர்ந்துகொண்ட பிரெஞ்ச் ராணி இறுதி முயற்சியை இவ்வாறு ஆரம்பித்தாள்:-
“ஏ, சுல்தானா! தேவனின் சக்தி மகத்தானது. இன்று அற்பராயுள்ளரை நாளைப் பிரபலஸ்தராகச் செய்கிறான். இன்று ஆண்டியாயுள்ளவரை நாளை அரசராக உயர்த்துகிறான். இன்று ஊர்பேர் தெரியாதவரை நாளை உலக புகழ்பெற்ற உத்தமராக்குகிறான். அதேபோல் இன்று குடைநிழலிருந்து குஞ்சர மூர்வோரை நாளை நடைமெலிந்தோரூர் நண்ணும்படியும் செய்து விடுகிறான். ஆனால், இதுபோது அதே தேவன் நம்மிடையே விட்டிருக்கும் சோதனையிருக்கிறதே, அது மிகவும் விசித்திரமானது. என்னெனின், சென்ற சில ஆண்டுகட்கு முன்னே ஊர் பேர் தெரியாத அபலையாக இருந்த தங்களை இன்று இம் மாபெரும் எகிப்து ராஜ்யத்தின் ஏகபோக ராணியாக்கிவிட்டிருக்கும் தேவன், தலைமுறை தலைமுறையாக ராணியாக இருந்து வரும் என்னைத் தங்கள் மூலம் அபலையாகவும், அனாதையாகவும், மானிடருள் மிகக் கேடுகெட்டவளாகவும் மாற்றிவிட முற்பட்டிருக்கிறானே, அதைத்தான் நான் நினைந்து நினைந்து வாடுகிறேன். பல தலைமுறையாக அரசியாயிருந்த ஒருத்தியை, புதிதாக அரச பதவிக்கு வந்த வேறொரு சாதாரண பெண் அடியுடன் கெடுத்துவிட்டாளென்று சரித்திரத்தில் பதிவாகிவிடுமே, அதையே உன்னியுன்னி வருந்துகிறேன்!”
லூயீயன் மனைவி நனியுங் கனிந்துபோய்க் கண்ணீருகுத்தாள். ஷஜருத்துர்ரின் கண்முன்னிருந்த திரை கிழிந்தது. இதுவரை ஸாலிஹைப் பற்றியும் சிலுவை யுத்தத்தைப் பற்றியும் மன்னர் மரணத்தை மறைத்து வைத்ததைப் பற்றியும் இதற்காகத் தாம் பட்ட கஷ்ட நஷ்டங்களைப் பற்றியும் மட்டுமே அடுத்தடுத்து நினைத்துக்கொண்டிருந்த அவர் இப்போது திடீரென்று தம் ஆதிகால வாழ்க்கையைப் பற்றியும் அப்போது பட்ட அல்லல்களைப் பற்றியும் கேவலமான அடிமையாக விற்கப்பட்டதைப் பற்றியும் நினைக்க ஆரம்பித்தார். நெருப்பை மிதித்தவர் துள்ளிப் பாய்வதேபோல், ஒய்யாரமாய் இதுவரை அரச அகம்பாவத்துடனே வீற்றிருந்த நம் சுல்தானா உடனே உடல் சிலிர்த்துச் சட்டென்று நிமிர்ந்தமர்ந்தார். தோற்ற பிரெஞ்ச் ராணி ஜயித்த மிஸ்ர் ராணியை வென்றுவிட்டாள்!
ஷஜருத்துர் எண்ணாததெல்லாம் எண்ணினார். அனாதையாயிருந்த தம்மை அரசியாக அல்லாஹுத் தஆலா உயர்த்திவிட்டிருக்கும்போது, தாம் எங்ஙனம் ஓர் அரசியை அனாதையாக்கலாமென்று ஆழச் சிந்தித்தார். பிறருக்கெல்லாம் இதுவரை புத்தி போதித்து வந்த தமக்கு இவ் வுண்மையை எடுத்துக் காட்ட ஒரு பிரெஞ்ச் ராணியைத் தம்மிடம் ஆண்டவன் அனுப்பிவைத்தானே என்று அவர் கண் திறந்தார். தம்முடைய பழைய நிலைமையை இந்த வேற்று நாட்டுப் பெண்மணி எங்ஙனம் உணர்ந்திருக்கக் கூடுமென்று சிந்தித்தார். மண்டை கிறுகிறுத்தது; மூளை மாழ்கிற்று.
“ஏ, பிரான்ஸ் தேசத்து ராணியே! நீ என்னை வென்று விட்டாய்! நான் தோல்வியடைந்து விட்டேன்! உன் கணவரை நான் இனியும் இங்கிருத்திக்கொள்ள நாடவில்லை. இக்கணமே அவருக்கு விடுதலையளித்துவிட்டேன். நான் தேவ தூஷணை செய்ய விழைய மாட்டேன்; உன் அரச போகத்தையும் களவாடத் துணிய மாட்டேன். புண்பட்டிருந்த என் மனத்தை நீ வேறுபக்கமாய்த் திருப்பி, என்னை மற்றொரு வகையில் துன்புறுத்தி விட்டாய்!”
ஷஜருத்துர் கூறிய இவ் வார்த்தைகளைச் செவியேற்ற அந்த பிரெஞ்ச் ராணி சட்டென்றெழுந்து நின்றாள். “ஏ, சுல்தானா! தங்கள் முன்னோர்கள் எங்களுக்குக் காட்டிய எல்லாக் கருணைகயையும் தாங்கள் மிகைத்து விட்டீர்கள். கிறிஸ்தவர்களாகிய எங்களுக்கு நல்ல புத்திமதியையும் கற்பித்து விட்டீர்கள். எனவே, களங்கமில்லாத நற்கியாதியையும் பெற்றுக்கொண்டு விட்டீர்கள். என் கணவரை மீட்டுக்கொடுத்தீர்கள். அவருக்கு விடுதலையளித்தீர்கள். விதித்த அபராதத்தில் சரிபாதியைத் தள்ளிக் கொடுத்தீர்கள். உலகம் உள்ளளவும் தங்களை யாரே மறப்பார்? கருணையின் பொக்கிஷமே! காருண்ய திலகமே! தேவன் தங்கள் ஆயுளையும் ஆட்சியையும் நீடிப்பாராக! உலகப் பெண்களுக்குத் தங்களையே சிறந்த முன்மாதிரியாகத் திகழச் செய்வாராக! இந்த எகிப்தின் கீர்த்தியை இன்னம் அதிகமும் வளர்ப்பாராக!” என்று மட்டற்ற மகிழ்ச்சியால் மனமுருகிக் கழறலுற்றாள்.
மறுகணமே சுல்தானா விசேஷ அரசப் பிரகடனத்தில் கையயழுத்திட்டார். வந்த நான்கிலக்ஷம் தீனாரைப் பெற்றுக்கொண்டு லூயீ மன்னருக்கு விடுதலை அளித்து விட்டதாக அதில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. உடனே சிறைக் கோட்டத்தின் கதவு திறந்தது. லூயீ விடுதலை பெற்றார்.
அன்றிரவு விசேஷ விருந்தொன்றை ஷஜருத்துர் நடத்தினார். லூயீயையும் அவர் மனைவியையும் சுல்தானா வயிறார உண்பித்தார். பிரெஞ்ச் மன்னருக்கு இந்த விசித்திரமான விசேஷ மரியாதை பெரிய ஆச்சரியத்தையளித்தது. அநாகரிகத்தின் அகல பாதலத்துள் ஆழ்ந்து கிடக்கும் கிறிஸ்தவர்களாய தங்கள்மாட்டு, மிகவும் மனிதத் தன்மை மிகுந்து காணப்படும் முஸ்லிம்கள் இப்படியெல்லாம் மரியாதையைச் சொரிவதைக் கண்டு அவர் வெட்கித் தலைகுனிந்தார். தங்களிடம் முஸ்லிம்கள் கைதிகளாகச் சிக்குண்டிருந்தால், தாங்கள் அவர்கள் மாட்டு எவ்வளவு மிருகத்தனமாய் நடந்திருப்பார்களென்பதை நினைத்துக்கொண்டு, இப்போது நடக்கிற தடபுடலான விருந்து வைபவத்துடன் ஒப்பிட்டு நோக்கி ஏங்கினார். “இன்னா செய்தாரை யொறுத்தல் அவர்நாண, நன்னயஞ் செய்து விடல்”என்ற வள்ளுவனார் வாக்கை ஒரு முஸ்லிம் அரசி எங்ஙனம் செயல் பூர்வமாக நிரூபித்து விட்டார், பார்த்தீர்களா? இதுதான் இஸ்லாம்; இதுதான் இம் மதத்தின் வேளாண்மை யென்னப்படுவது.
விருந்துக் களரியில் ஷஜருத்துர் உபசரித்த உன்னதமான உபசாரங்களெல்லாம் கூரிய முட்களைக்கொண்டு லூயீயின் ஹிருதயத்தைக் குத்திப் புண்படுத்துபோலிருந்தன! லூயீ மனம் வெதும்பிக் கண்ணீர் சிந்தினார்.
எல்லோரும் உணவருந்தி முடிந்ததும் ஷஜருத்துர் லூயீயையும் அவர் மனைவியையும் ஏனைக் கிறிஸ்தவத் தலைவர்களையும் நன்கு உபசரித்து வழியனுப்பி வைத்தார். அக் கிறிஸ்தவர்கள், “வீரமுங் களத்தே போட்டு வெறுங்கையோ டிலங்கை புக்க” ராவணனைப் போல், ஓட்டாண்டிகளாகக் காஹிராவை விட்டு வெளியேறினார்கள்!
தொடரும்…
-N. B. அப்துல் ஜப்பார்