ரபீஉல் ஆகிர் மாத 1-ஆவது குத்பா

by பா. தாவூத்ஷா

‎اَلْحَمْدُ للهِ الَّذِي هدًٰينا السَّبِيْلَ الرَّشَادَ وَجَعَلَلَنَا الدِّيْنَ الْاِسْلَامَ خَيْرَالْاَدْيّانِ فَمَنْ قَامَ وَجْهَهُ لِلدِّيْنِ حَنِيْفًا فَقَدْ فَازَ فَوْزًا عَظِيْمًا وَنَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ وَعَلٰ اٰلِهِ وَصَحْبِهِ وَسَلَّم اَمَّابَعْدُ

அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு

அஞ்சி நடக்கவேண்டுமென்று எனக்கும் சொல்லிக் கொள்கிறேன்.

சகல ஜகத்துக்கும் சரண்யனாகிய எல்லாம் வல்ல அல்லாஹுத் தஆலாவைப் போற்றிப் புகழ்ந்து, அவனுடைய சத்தியத் திருநபி முஹம்மத் (ஸல்) அவர்கள்மீது ஆசிமொழியுங் கூறியதன் பின்னால் அறிந்து கொள்வீர்களாக:

ஆண்டவன் தன் குர்ஆன் ஷரீபில் இன்னத்தீன இன்னதல்லாஹில் இஸ்லாம் — “அல்லாஹ்வினிடத்தில் உண்மையான மதமாயிருப்பது இஸ்லாமேதான்,” என்று கூறியுள்ளான். இத் தரணியின் மாந்தரெல்லோருடைய இயற்கைச் சுபாவத்துக்கு ஒத்துவரக்கூடிய மதம் இஸ்லாம் ஒன்றுதான். இதன் கொள்கைளும் கோட்பாடுகளும் புத்திக்கும் யுக்திக்கும் ஒத்து வருவதே இதன் விசேஷமாகும். தோட்டி முதல் தொண்டமான்வரை எல்லாரின் அனுஷ்டானத்துக்கும் மிகவும் இலேசாய்க் காணப்படுவதும் இஸ்லாம்தான். சித்தாந்தங்கள், அனுஷ்டானங்கள், வணக்கங்கள், ஒழுக்கங்கள், முன்னேற்றப் படிப்பினைகள், ஜீவனோபாய வழிகள் முதலிய எல்லாவற்றைப் பற்றியும் கண்ணியமாயும், கௌரவமாயும் அதிக தாராள நோக்கத்துடன் போதிப்பது நமது இஸ்லாம் ஒன்றேதான். தற்காலத்தில் எல்லாவித மேதாவிகளும் இஸ்லாம் மதம் ஒன்றுதான் மேன்மையானதென்று இதுகாலை ஒத்துக் கொள்கிறார்கள். மேனாட்டு ஐரோப்பியர்களும் இஸ்லாமிய முன்னோர்களிடத்திருந்தே நவநாகரிகத்தையும் சாஸ்திர முன்னேற்றத்தையும் நவீனமான சாமான்கள் சிருஷ்டிக்கும் அறிவு நூல் வழிகளையும் கற்றுக் கொண்டார்கள்.

எல்லா மதஸ்தர்களும் இஸ்லாமதத்தைப் பார்த்துத்தான் தங்கள் மதங்களை நவீன முறையிலே சீர்திருத்திப் படித்துக் கொள்கிறார்கள். இந்தக் குவலயத்தில் சீரிய வாழ்வையும் சத்திய வாழ்க்கையையும் அளித்துப் பரலோகத்தில் மோக்ஷ பேரானந்தத்தையும் முழு ஆத்ம விசிராந்தியையும் அளிக்கவல்லது எமது இஸ்லாம் மதம் ஒன்றேதான். இந்த இஸ்லாத்தில்தான் ஏகேசுவரக் கொள்கையென்னும தவ்ஹீது விஷயம் மிக அழகாயும் அதிக செவ்விதாயும் சித்தாந்ததத்துக்கும் அனுஷ்டானத்துக்கும் ஒத்தவாறு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நம் இஸ்லாத்துக்குத்தான் பரிபூரண வேதமாகிய சத்தியக் குர்ஆன் அளிக்கப்பட் டிருக்கிறது. இந்தக் குர்ஆனிலுள்ள போதனைகள் தாம் மனிதரின் இலௌகிக வைதிக மார்க்கத்துக்குரிய எல்லாவித ஞானங்களையும் நன்கெடுத்துக் கூறுகின்றது. இந்தக் குர்ஆனின் ஆக்ஞைப்படி சிறிதும் தவறா தொழுகும் ஒவ்வொரு மனிதனும் இம்மை மறுமையில் மேன்மையடைவான் என்பது திண்ணமேயாம்.

சகோதரர்காள்! நம திஸ்லாத்தில் இத்தனை மேன்மைகளும் மஹாத்மியங்களும் மலிந்திருக்க, நம் முஸ்லிம் பாமரர்களுள் பலர் சீர்கெட்டுப் போய்த் தாழ்த்தப்பட்டிருப்பதற்குக் காரணம் அவர்களின் அறியாமையும் மதஞான மின்மையுமே யாகும்; அன்னிய மதஸ்தர்கள் இஸ்லாத்திலிருந்து எம்மட்டோ பிரயோஜனம் பெற்றிருக்க, நம் பாமர முஸ்லிம் சமூகம் இப்படிப்பட்ட கீழான தசையை நோக்கிச் சென்று கொண்டிருப்பது மிகவும் வருத்தத்தக்க விஷயமேயாகும். இத்தகைய அஞ்ஞானிகள் தங்களுக்குப் பிற்காலத்தில் அஃதாவது மரணித்த பின்னர்ப் பரலோக வாழ்க்கையில் எத்துணைச் சங்கடங்களும் தண்டனைகளும் வந்து சேருமென்பதை ஒரு சிறிதும் சிந்தித்துப் பார்ப்பதாய்க் காணப்படவில்லை.

குர்ஆனிலுள்ள போதனைகளையும் நபிகள் நாயகத்தின் (ஸல்) நற்போதனைகளையும் மேதாவிகளின் படிப்பினைகளையும் உணர்ந்து, நமது நிலையைச் சீர்தூக்கிப் பார்ப்பார்களாயின், நிச்சயமாக எம்மட்டோ நஞ்சமூகம் மேன்மைக்கும் முன்னேற்றத்துக்கும் வரும் என்பது திண்ணம். நம்முடைய குறைவுக்கெல்லாம் நம்முடைய செய்கையே காரணமாகும். என்னெனின், ஆண்டவன் குர்ஆனில், “தங்களுக்குள்ளிருக்கும் நிலைமையைத் தாங்களே மாற்றிக் கொள்ளும் வரை அண்டவன் எந்தக் கூட்டத்தாரின் நிலைமையையும் மாற்றுவதில்லை,” என்று கூறியிருக்கிறான். இதனால் நமது சமூகத்தின் பிற்போக்கிற்கு நாமே காரணகர்த்தர் என்பதை நன்குணர்ந்து கொள்ளக் கடவோமாக.

ஆண்டவன் மாந்தர்க்கு அறிவிக்க வேண்டிய சகல ஆக்ஞைகளையும் தனது இறுதி வேதத்தில் விளக்கிவிட்டான். இனி அவற்றை ஏற்று அனுஷ்டித்து ஒழுக வேண்டுவது நமது கடனேயாகும். என்னெனின், ஆண்டவன் குர்ஆன் ஷரீபின் இனியோரிடத்தில், “எல்லா உலகத்தாருக்கும் அச்சமூட்டி எச்சரிக்கையாய் இருப்பதற்காகத் தன் உண்மையடியாரின்மீது வேதத்தை இறக்கி வைத்த ஆண்டவனே மிக மேலானவன்,” என்று கூறுகின்றான். இதனால், குர்ஆன் ஷரீஃபானது, நாம் இத் தரணியில் வாழுங்கால் மாயையென்னும் மருட்சியில் ஆழ்ந்து வழிகெட்டுப் போகாமல் உஷாராயிருந்து ஒழுக வேண்டியதற்காகவே நபிகள் நாயகத்தின் (ஸல்) மூலமாய் நம்மெல்லோருக்கும் அனுப்பப்பட்டிருக்கிறதென்பது நன்கு புலப்படுகின்றது. எனவே, குர்அன் வேதம்தான் மனிதர்களுக்குப் பரிபூரண நேரான சன்மார்க்கத்தை அளிக்க வல்லதாயிருக்கிறது.

ஆகவே, நேயர்காள்! வழிகெட்டு அஞ்ஞானத்துள் வீழ்ந்து, தெய்வ பக்தியும், சத்திய வாழ்க்கையுமற்றுக் கிடக்கும் நம்மைச் சீர்திருத்த இனி எந்த நபியும் அவதரிக்கப்போவதில்லை; அவதரிக்க வேண்டிய அவசியமுமில்லை. வேறெந்தத் தெய்வத் தூதரும் பீரும் முர்ஷிதும் தங்களும் வந்து நம்மைக் கைலாகுகொடுத்து நன்மார்க்கத்துக்கு அழைத்துச் செல்ல மாட்டார். மனிதன் தான் செய்த முயற்சிக்குத் தக்கபடியே பிரதிப் பிரயோஜனத்தையடைவான். ஆகவே, நமக்கு ஆண்டவன் அளித்துள்ள பகுத்தறிவையும் அவனுடைய வேத போதனைகளையும்தாம் வைத்துக் கொண்டு நம்மை நாமே சீர்திருத்திக் கொண்டு கடைத்தேற வேண்டும். இந்தத் தாத்பரியத்தைக் கொண்டுதான் இறுதிக்காலம் மட்டும் நமதுதவிக்கு வரும்படியாக நபிகள் நாயகமும் (ஸல்) இமாம்மார்களும் மேதாவிகளும் குர்ஆனிலுள்ள போதனைகளை நம்மெல்லோரின் பகுத்தறிவும் ஏற்றுக் கொள்ளுமாறு பக்குவப்படுத்தி அறிவித்துச் சென்றார்கள்.

குர்ஆன் ஷரீஃபின் ஆக்ஞைகளும் நாயக வாக்கியத் தாத்பரியங்களும் நன்கமைந்துள்ள மார்க்க நூல்களைப் படித்து, உங்கள் ஈமானின் நன்னம்பிக்கைகளையும் அமல் அனுஷ்டானங்களையும் வாழ்க்கையின் சாதனங்களையும் நன்கு சீர்திருத்திக்கொள்ளல் வேண்டும். மார்க்க சம்பந்தமான ஞானங்களைப் படித்தறிந்து, தொழுகை, நோன்பு, ஜகாத்து முதலிய சகல அனுஷ்டான முறைகளையும் செம்மைப்படுத்திக் கொள்ளல் வேண்டும். உங்கள் அஞ்ஞானத்தைப் போக்கி மெய்ஞ்ஞானத்தைப் பெற்றுய்யுங்கள். உங்கள் மனத்தை உத்தமமான முறையிலே பழக்கிச் சத்தியசீலராகுங்கள். உங்கள் நடத்தைகளையும் செம்மைப் படுத்திக்கொண்டு, சீரிய ஒழுக்கத்தில் நேரிதாய்ச் செல்லுங்கள். ஏனை நேயர்களையும் நன்மையின்பக்கல் அழைத்தும் தீமைகளை விட்டு விலக்கியும் மதஊழியம் புரிவதுடன், இதன் சம்பந்தமாய் உங்களுக்கு ஏற்படும் துன்பங்களின் மீதும் பொறுமை கொண்டு தெய்வத்தின்மீது பரிபூரணமான நன்னம்பிக்கை கொள்ளுங்கள். பொறுமையைக் கொண்டும் தொழுகை வணக்கத்தைக் கொண்டுமே ஆண்டவனிடத்தில் உதவியைத் தேடுங்கள்.

எக்காலத்திலும் ஆண்டவன்மீது திட சித்தமும் நன்னம்பிக்கையும் வைத்திருப்பீர்களாக. ஆண்டவன் இட்ட கட்டளைகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அறிவித்துச் சென்ற போதனைகளையும் பெரியோரின் படிப்பினைகளையும் ஒரு போதும் மறவாமல் நுங்கள் வாழ்க்கையைச் சீர்ப்படுத்திக் கொள்ளுங்கள். என்னெனின், இவ்வுலக வாழ்க்கையில் நீங்கள் எம்மட்டும் முயன்று பாடுபட்டீர்களோ, அம்மட்டுக்கு அல்லாஹ்வும் மறுவுலக வாழ்க்கையில் நற்கூலி கொடுப்பான்.

ஆதலின் முஸ்லிம்காள்! வாழ்க்கையில் சீர்பெறுவீர்களாக. ஆண்டவனும் நம்மெல்லோருக்கும் நற்சாந்தியை அருள்வானாக, ஆமீன்!

 

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

 وَالْعَصْرِِ إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍِ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِِ

 

بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ،

Related Articles

Leave a Comment