துல்ஹஜ் மாத 2–ஆவது குத்பா

اَلْحَمْدُ للهِ الَّذِي خَلَقَ السَّمٰوٰتِ وَ الْأَرْضَ وَ بَعَثَ النَّبِيِّيْنَ عَلَى الْأَرْضِ وَ نُصَلِّيْ عَلَى النَّبِيِّيْنَ الْمُرْسَلِيْنَ وَ نَشْهَدُ اَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَ رَسُوْلُهُ وَ عَلٰى ٰالِهِ وَ صَحْبِهِ اَجْمَعِيْنَ اَمَّا بَعْدُ

அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்க வேண்டு மென்பதை எனக்கும் சொல்லிக் கொள்ளுகின்றேன்.

அன்பின்மிக்க அருமை நேயர்காள்! இஃதென்ன மாதமென்பது நீங்களெல்லீரும் நன்குணர்ந்த ஒரு விஷயமேயாகும். எனினும், இந்த மாதத்தில் செய்யவேண்டிய கிரியைக ளென்ன? வணக்கங்க ளென்ன? என்னும் விஷயத்தைச் சிறிது நீங்கள் மறந்திருக்கலாம். எனவே, அவற்றை ஞாபகப்படுத்திக் கொள்ளும்பொருட்டு யான் இங்கு விவரிக்கின்றேன். சிறிது கவனிப்பீர்களாக:

இம்மாதத்தின் 9-ஆம் தேதியில் முஸ்லிம்களுக்கு ஒரு மகா பெரிய முக்கிய பர்லான ஹஜ்ஜென்னும் காரியம் நிறைவேறுகின்றது. 10-ஆம் நாள் குர்பானீ செய்ய வேண்டியவர்கள் குர்பானீ செய்கின்றனர். மேலும், இம்மாதத்தின் முதல் தேதியினின்று 9-ஆம் தேதி வரை நோன்பு நோற்பது மிக்க நன்மை பயக்கக்கூடியதா யிருக்கிறது. ஆனால், அய்யாமுத் தஷ்ரீக் கென்னும் இம்மாதத்தின் 11, 12, 13-ஆம் நாட்களில் நோன்பு நோற்பது கூடாதெனத் தடுக்கப்பட் டிருக்கிறது. குர்பானீ செய்ய வேண்டிய 10-ஆம் நாளன்று தொழுகைக்குமுன் ஒன்றையும் உண்ணாது, உரத்த தொனியுடன் தக்பீர் சொல்லிக் கொண்டு தொழுதுகொள்ளும் பொருட்டு ஈத்காஹுக்குச் செல்லவேண்டும். போகும்போது ஒரு பாதையாலும் திரும்பும்போது மற்றொரு பாதையாலும் செல்வது ஸுன்னத்தாம்.

அநேகமாய்ச் சகல முஸ்லிம்களும் ஈத்காஹுக்கு வந்து சேர்ந்ததன்பின், “ஈதுல் அல்ஹாவின் வாஜிபான இரண்டு ரக்ஆத் தொழுகையை அதிகமான ஆறு தக்பீர்களுடன் கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வுக்காகத் தொழுகிறேன்,” என்று ஒவ்வொருவரும் நிய்யத் செய்து தொழுவதற்காகத் தக்பீர் கட்டவேண்டும். தக்பீர்கட்டி “ஸுப்ஹானக் கல்லாஹும்ம!” என்னும் தஹ்மீதை ஓதி, இமாமுடன் மூன்று முறை “அல்லாஹு அக்பர்!” என்னும் தக்பீரைச் சொல்லி கையை உயர்த்தி, மூன்று முறையும் கரங்களைத் தொங்கவிட்டு விடவேண்டும். நான்காம் முறையும் கையை உயர்த்தித் தக்பீர் கட்டிக்கொண்டு நிற்க வேண்டும். பிறகு இமாம் ஓதும் கிராஅத்தைக் கவனிக்க வேண்டும்.

பிறகு இமாம் இரண்டாம் ரக்அத்தின் கிராஅத், அஃதாவது, ஸூரத்துல் பாத்திஹாவுக்குப்பின் ஓதும் மற்றொரு சூராவை ஓதி முடித்ததும், அந்த இமாமுடன் மூன்றுமுறை தக்பீர்சொல்லிக் கையை உயர்த்தவேண்டும். நான்காம் தக்பீர் சொல்லி ருக்கூஉக்குக் குனியவேண்டும். தொழுகையின் ஏனைக்காரியங்க ளெல்லாம் எல்லாத் தொழுகையிலும் செய்வதேபோல் நிறைவேற்றப்பட வேண்டும்.

உங்களுள் எவரேனும் ஈத்காஹுக்கு வரத் தாமதமாயதால் இமாம் முதல் ரக்அத்தின் தக்பீர்களை முடித்துக்கொண்டு கிராஅத் ஓதுபவராய்க் காணப்படின், உடனே தக்பீர் தஹ்ரீமா மட்டும் சொல்லிக் கையைக் கட்டிக்கொண்டு, இமாமின் கிராஅத்தைக் கவனித்து கேட்கவேண்டும். இல்லை, இமாம் ருகூஃ செய்துகொண் டிருக்கும்போது நீங்கள் வந்தீர்களாயின், அதிதுரிதமாய்த் தக்பீர் தஹ்ரீமா சொல்லி ருகூஇல் சேர்ந்து கொள்ள வேண்டும். அப்பொழுது கையை உயர்த்த வேண்டு மென்பது அவசியமில்லை. இல்லை, முதல் ரக்அத் முடிந்து இரண்டாம் ரக்அத்தின்போது வந்தீர்களாயின், தக்பீர் சொல்லி இமாமுடன் சேர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சேர்ந்துகொண்டு இமாமுடன் தொழுகையை முடித்து, அந்த இமாம் ஸலாம் கொடுத்தபின்பு நீங்கள் எழுந்து நுமக்குத் தவறிப்போன முதல் ரக்அத்தை இமாமின் முதலாவது ரக்அத்தேபோல் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

இத் தொழுகை முடித்தபின்பு இமாம் குத்பா ஓதுவார்; அதனை கவனமாய்ச் செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். குத்பாவைக் கேட்பது வாஜிபாகும். ஆனால், தொழுகை முடிந்தவுடன் குத்பாவுக்கு முன்னமே எழுந்து ‘முஆனக்கா’ வென்று கட்டி அனைத்துக் கொள்வதும், வார்த்தையாடுவதும் கூடா. இவ்வாறு செய்வதனால் ஏனையர்களின் வணக்கங்களில் இடையூறுண்டாகின்றது. இஃது ஒருபக்கல் கிடக்க. அங்குக் கூடியிருக்கும் மனிதர்கள் ஏராளமாயிருந்து இமாம் ஓதும் குத்பாவைச் சிலர் கேட்க முடியாதவர்களா யிருப்பின், அன்னவர்களும் ஒழுங்காய் அமர்ந்து குத்பாவைக் கேட்கும் பாவனையாய் அமைதியா யிருத்தல் வேண்டும். அந்த குத்பாவை ஊன்றிக் கவனிக்குமிடத்து, ‘இஃது ஏன் ஏற்படுத்தப்பட்டது?’ என்பதை உணர்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் ஒரு சிலரே என்றுதான் எண்ணவேண்டியதா யிருக்கின்றது. சுருங்கக் கூறுமிடத்து, இந்த குத்பாக்களை நுங்களின் தாய்பாஷையில் ஓதும்படி செய்து, நீங்கள் கேட்டுச் சந்தோஷத்துடன் மார்க்க போதனைகளைத் தக்க முறையில் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதே மிக்க பொருத்தமாய்க் காணப்படுகின்றது.

ஜகாத் கொடுக்கவேண்டிய அவ்வளவு சொத்துடையவர்கள் குர்பானீ செய்ய வேண்டும். இதன் நேரமோ நாட்டுப் புறங்களிலுள்ளவர்கள் 10-ஆம் நாள் காலையினின்று 12-ஆம் நாள் மாலைவரை குர்பானீ செய்ய வேண்டும். இதற்குள் கொடுத்தால் மாத்திரம் ‘அதா’ (அசலை நிறைவேற்றல்) என்பதாகும். அதன் பிறகு குர்பானீ செய்யப்படுமாயின், அது ‘கலா’ (ஈடு செய்து நிறைவேற்றல்) என்பதாகும். நகரங்களிலுள்ளவர்கள் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின்னிருந்து 12-ஆம் நாள் மாலைவரை குர்பானீ செய்ய வேண்டும். தொழுகைக்குமுன் இவர்கள் குர்பானீ செய்வது தகாது. எனவே, மேலே குறிப்பிட்ட இரு வகுப்பார்களும் 12-ஆம் நாள் மாலைக்குள் தங்கள் குர்பானீக் கிரியையை முடித்துக் கொள்ளல் வேண்டும். இதற்குள் இன்னவர்கள் குர்பானீ செய்யவில்லையாயின், குர்பானீ கொடுக்கும் உயிர்ப்பிராணியின் விலைமதிப்பு எவ்வளவாகின்றதோ, அதனை ஏழைகளுக்குத் தர்மமா யளிக்கவேண்டும்.

குர்பானீ செய்வதில் 10-ஆம் நாள் தேதியே மிக்க நல்லதென முன்னோர்கள் முடிவு செய்திருக்கின்றனர். குர்பானீ செய்வதற் கருகதையான உயிர்ப்பிராணிகளோ, ஒட்டகம், மாடு, எருமை, செம்மறியாடு, வெள்ளாடு, தும்பையாடு முதலியவைகளாகும். குர்பானீ கொடுக்கக்கூடிய இவ்வுயிர்ப் பிராணிகள் நல்லவையாகவும், இன்னல்களற்றவையாகவும் இருக்கவேண்டும். 5 வருஷம் சென்ற ஒட்டகையாகவும், இரண்டு வருஷம் சென்ற எருமையாக அல்லது மாடாகவும், ஓர் ஆண்டின் ஆடாகவுமிருத்தல் வேண்டும். மேலும், ஒட்டகம், எருமை, மாடு முதலிய உயிர்ப்பிராணிகளில், குர்பானீ செய்யவேண்டிய ஏழு மனிதர்கள் சேர்ந்து ஓர் உயிர்ப்பிராணியைக் குர்பானீ செய்யலாம்; இதில் ஒவ்வொன்றை ஒருவர்தாம் குர்பானீ செய்யவேண்டு மென்பதில்லை.

குர்பானீ செய்யப்போகும் உயிர்ப் பிராணியைப் பட்டினியாய்ப் போட்டுவைத்துக் குர்பானீ செய்வது நல்லதன்று. இவ்வாறே இந்த உயிர்ப் பிராணியின்முன் பலியிடுவதற்காகக் கையில் வைத்துக் கொண் டிருக்கும் கத்தியைக் காட்டுவது கூடாது. இவ்வண்ணமே இவ்வுயிர்ப் பிராணியின்முன் மற்றோர் உயிர்ப் பிராணியைப் பலியிடுவதும் கூடாது. இம்மாதிரி குர்பானீ செய்த உயிர்ப் பிராணிகளின் மாம்சங்களை மூன்று பங்குகளாய்ச் செய்து, ஒருபாகத்தைத் தான் வைத்துக் கொள்ள வேண்டும்; மற்றொருபாகத்தை உற்றார் உறவின் முறையார்களுக்குப் பகிர்ந்து விடவேண்டும்; இன்னமுமொரு பாகத்தை ஏழை எளியார்களுக்குப் பங்கிட்டுவிட வேண்டும். குர்பானீ செய்த இவ்வுயிர்ப் பிராணியின் தோலை ஏதேனும் பள்ளிவாசலுக்கோ, கலாசாலைகளுக்கோ, அனாதை விடுதிகளுக்கோ, அல்லது வேறேதேனும் நற்காரியங்கள் செய்வதற்காகவோ உதவியாய் அளித்தல் வேண்டும். இவ்வாறில்லாது குர்பானீ செய்த இவ்வுயிர்ப் பிராணியின் தோலைவிற்றுத் தன்னுடைய செளகரியத்துக்காக அதன் தொகையைச் செலவுசெய்து கொள்வது தகாது.

இஃது ஒருபுற மிருக்க, இவ்வாறு முஸ்லிம்களாய நாம் ஏன் குர்பானீ செய்ய வேண்டும்? இதனா லென்ன பிரயோஜனம்? இதன் தத்துவங்க ளென்ன? என்னும் விஷயத்தை இன்ஷா அல்லாஹ், அடுத்தவாரம் கவனிப்போம். பொதுவாய்க் கூறுமிடத்து, இந்தக் குர்பானீயினால் முஸ்லிம்களாகிய நாம், இப்ராஹீம் (அலை) அவர்களே போல், ஆண்டவன்மீது பரிபூரண நம்பிக்கைவைத்து, நம்முடைய பெண்ஜாதி பிள்ளை, செல்வம் சுதந்தரம், மாட மாளிகை, கூடகோபுரம் முதலியவைகளைக் காட்டினும் அதிகமாய் அல்லாஹ்வை நேசித்தல் வேண்டுமென்றும், ஹஜ்ரத் இஸ்மாயீல் (அலை) அவர்களேபோல் ஆண்டவனது ஆணைக்கு அப்படியே முற்றும் அடிபணிந்து முடி சாய்த்தல் வேண்டுமென்றும் தந்தையும் மைந்தருமான அவ்விருபெரிய நபிமார்களும் நடந்து சென்ற ஏகேசுவர மார்க்கத்திலே நடந்துசென்று, இவ்வுலக சுகங்களைவிட மறுவுலக சுகத்தையே மேலானதென எண்ணித் தக்வாவைக் கைக்கொண்டு, ஆண்டவனால் ஏவப்பட்டிருக்கும் காரியங்களை எடுத்து நடந்தும், அவனால் விலக்கப்பட்டவை களினின்று நெடுந்தூரத்துக் கப்பால் விலகியிருக்க வேண்டு மென்றும் மிகமிக நன்றாய் உணர்ந்து கொள்ளுகிறோம்.

எனவே, அல்லாஹ் நம்மையும் தன்னுடைய தோழர் நடந்துசென்ற நேரான பாதையில் சீராக நடாத்திச் செல்வானாக. “புகழடங்கலும் அல்லாஹ்வுக்காகும். (நான் 96 வயதாயும், 112 வயதாயும் இருந்தபோது, நான்) வயோதிகனா யிருந்தும் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் (பிள்ளைகளாக எனக்குத்) தந்தருளினான். நிச்சயமாகவே என்னுடைய றப்பானவன் கூப்பீடுகளைக் கேட்கக் கூடிய வனாயிருக்கிறான்.” ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَلَهُ أَسْلِمُوا وَبَشِّرِ الْمُخْبِتِينَ

بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ

Image courtesy: freepressjournal.in

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<குத்பா பிரசங்கம் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment