துல்கஃதா மாத 2–ஆவது குத்பா

اَلْحَمْدُ للهِ الَّذِي خَلَقَ السَّمٰوٰتِ وَ الْأَرْضَ وَ بَعَثَ النَّبِيِّيْنَ عَلَى الْأَرْضِ وَ نُصَلِّيْ عَلَى النَّبِيِّيْنَ الْمُرْسَلِيْنَ وَ نَشْهَدُ اَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَ رَسُوْلُهُ وَ عَلٰى ٰالِهِ وَ صَحْبِهِ اَجْمَعِيْنَ اَمَّا بَعْدُ

அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்க வேண்டுமென்பதை எனக்கும் சொல்லிக் கொள்கிறேன்.

அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் (ஆரம்பம் செய்கின்றேன்). படைத்த உம்முடைய றப்பின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. மனிதனை உதிரக் கட்டியினின்றும் படைத்தான். ஓதுவீராக ; மேலும் உம்முடைய றப் மகா கண்ணியமுள்ளவனாய் இருக்கிறான்; எழுது கோலைக் கொண்டு எழுதக் கற்பித்தவன்; மனிதனுக்கு அவன் அறியாமலிருந்ததை அறிவித்தவன்” — (குர். 96:1—5).

முஸ்லிம் சோதரர்காள்! முதன் முதலில் ஆண்டவன் தன் திருநபியவர்களுக்குக் கற்கும்படியாகவே ஆக்ஞை யிட்டான். என்னெனின், கல்விதான் மனிதனைப் பரிபூரணமடையச் செய்கின்றது; எனவே, பரிபூரணமடைந்த மனிதனே எல்லாம் வல்ல ஏக இறைவனின் மேன்மை தங்கிய கண்ணியத்தையெல்லாம் அறிந்துகொள்ளக் கூடிய பகுத்தறிவைப் பெறுகின்றான். இன்னம், இத்தகைய கல்வியறிவானது எழுதுகோலைக் கொண்டுதான் பூர்த்தியடைதல் வேண்டும்; இதைத்தான் இறைவனும் மேற்கூறப்பட்ட ஆயத்தில் நன்கெடுத்துக் கூறியுள்ளான். எழுதுகோலே இஷாஅத் வேலைக்கும் உதவுகிறது.

“கல்வியானது மனிதனைப் பரிபூரண முள்ளவனாகச் செய்கின்றது; கற்றோருடன் கலந்துறவாடுவதால் எதையும் எளிதில் கிரகிக்கக் கூடியவனாகிறான்; எழுதக் கற்றுக் கொள்வதுதான் அவனைக் கூர்மையுள்ளவனாகச் செய்கிறது,” என்றொரு பெரியாரும் கூறியுள்ளார். எனவே, எமதிறைவன் கூறிய வண்ணம் மனிதனாகப் பிறந்தவன் முதன்முதல் கற்றுக்கொள்ளக் கூடியது கல்வியேயாகும்; அதையும் எழுதுகோலைக் கொண்டு எழுதவும் படிக்கவும் கற்றுக் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு செய்வதனால்தான் நாம் அறிந்து கொள்ளாததையெல்லாம் இலகுவில் அறிந்து கொள்ளுதல் சாலும். இவ்வுபதேசத்தின் கருத்தை யுணர்ந்தே இயற்கையில் எழுதப்படிக்கத் தெரியாத எம்முடைய திருநபியவர்கள் (ஸல்) உம்மீயா யிருந்தும், உலகத்துக் கெல்லாம் ஜகத்குருவாய் ஓங்கிவளர்ந்து விட்டார்கள்.

இந்த வஹீ வெளிப்பட்டு ஆறு மாத காலங் கடந்த பின் “ஓ உடுத்தப்பட்டிருப்பவரே! எழுந்திருந்து எச்சரிக்கை செய்வீராக! உம்முடைய றப்பைப் பெறுமைப் படுத்துவீராக…..” என்னும் குர்ஆன் ஷரீபின் ஆயாத் வெளியாக்கப்பட்டன. இதன் பின்னரே ரஸூல் நாயகமவர்கள் (ஸல்) இவ்வுலகின்கண் வந்து இஸ்லாத்தின் இனிய உபதேசங்களை எடுத்தோதத் தலைப்பட்டார்கள். இதினின்று நாம் அறிந்துகொள்ள வேண்டிய படிப்பினை யாது? இப் பூவுலகின்கண் மனிதன் பிறந்தவுடன் முதன் முதலாய்ச் செய்ய வேண்டிய மாதா பிதாக்களின் முக்கியக் கடமை தங் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பதே யாகும். பெற்றோர் குழந்தைகளுக்குச் செய்யவேண்டிய கடமைகளுள் முதன்மையானது தம் மைந்தர் எச்சபைக்குச் சென்ற போதிலும் அங்கு முதன்மையான ஸ்தானத்தை வகிக்கும்படி செய்தலே யென்று மற்றொரு பெரியாரும் வற்புறுத்திக் கூறுகின்றார். ஆதலின், ஆரம்ப காலத்தே எழுதப்படிக்கத் தெரிந்துகொண்டு, அதற்குமுன் அறியாதிருந்த லெளகிக வைதிக ஞானங்களனைத்தையும் அறிந்துகொண்டு, அதன்பின்பு ஆண்டவனுடைய சுத்த சத்திய தீனுல் இஸ்லாத்தின் பெருமையை யெல்லாம் இவ்வுலகு முழுதும் நன்கு பரத்தி வைத்தல் வேண்டும்.

எனவே, இவ்விரு காரியங்களிலும் ஆதிகால முஸ்லிம்கள் அதிகம் ஈடுபட்டிருந்ததனால், அவர்கள் அதற்கு முன் அராபிய பாலைவனத்துள் அறியாத அஞ்ஞான அடங்காப் பிடாரிகளாய் விளங்கி வந்திருந்தும் அக்கால உலகில் முக்காற் பங்குக்கு மேற்பட்ட பூபாகத்தைத் தம் வசப்படுத்திக்கொண்டு, அக்காலத்தில் அஞ்ஞான அந்தகாரத்துள் ஆழ்ந்து கிடந்த ஐரோப்பா முழுமையும் ஞானச் சுடரைக் கொளுத்தி, நாகரிக முற்போக்கையும் காட்டி கொடுத்தனர். இவ்வுலக முழுதும் இருள் மயமான அந்தகாரத்துள் ஆழ்ந்து மழுங்கிக் கிடந்த அக்காலத்தில் அராபிய முஸ்லிம்களே சகலவிதமான சாஸ்திர ஞானத்திலும் முன்னணியில் நின்றனர். அவர்கள் சுயமே பல கலைகளையும் கண்டுபிடித்த துடன், அதற்கு முன்னேயிருந்த யூனான் (கிரீஸ்), மிஸ்ர் (எகிப்து), பினீஷியா, பாபிலோன், ரோம் முதலிய புராதன தேச ஞானங்களும் இவ்வுலகில் அழிந்து போகாது காப்பாற்றியவர்களும் அந்த ஆதிகால முஸ்லிம்களே யாவர். ஐரோப்பாவின் பழைய சரித்திரங்களை ஊன்றிப்படிப்பவரே அக்கால முஸ்லிம்களால் இவ்வுலக ஞானத்துக்கு எத்துணை உதவி கிடைத்திருக்கின்ற தென்பதை உள்ளபடியே உணர்ந்து கொள்வர்.

ஈதெல்லாம் ரஸூலுல்லாஹ் (ஸல்) அடிச் சுவட்டைப் பின்பற்றியதால் அக்காலத்தில் உண்டாயின. அஃதாவது, அவர்கள் ஆதியில் ஆண்டவனருளிய அழகிய ஞானத்தைக் கற்றுணர்ந்து, அதைப் பிறகு பிறருக்குப் போதிக்கத் தலைப்பட்டனர். ரஸூல் நாயகத்துக்கு (ஸல்) முதன்முதலில் வெளியான வஹீயைக் கொண்டு அம் முஸ்லிம்கள் அதற்கு முன்னே அறியாதிருந்ததை யெல்லாம் அறிந்துகொண்டு, அவனுடைய கண்ணியத்தையும் உணர்ந்து கொண்டார்கள். அந்த நபிகள் திலகத்துக்கு (ஸல்) வெளியான இரண்டாவது வஹீயைக் கொண்டு அவ் விறைவனுடைய கண்ணியத்தை (ஏக தெய்வக் கொள்கையை) எங்கும் பரத்திப் பெருமைப் படுத்தினார்கள். இக் காரணத்தினால்தான் ரஸூலுல்லாஹ் அவர்களும் முஸ்லிமாகிய ஆண்பெண் அனைவரும் கல்வி கற்க வேண்டுமென்று கூறியதோடு நில்லாது, அறிவு சீனாவிலிருந்த போதினும் (அஃதாவது, இவ்வுலகின் எந்த மூலையிலிருந்த போதினும்) அங்கும் சென்று கல்வி கற்க வேண்டுமென்றும் வற்புறுத்திச் சென் றுளார்கள்

முதன் முதலில் கல்வி கற்பது, இரண்டாவது இஷாஅத்துல் இஸ்லாம் செய்வது இவ்விரண்டுமே ஆதிகால முஸ்லிம்களை அவ்வுலகில் முன்னணிக்குக் கொண்டுவந்து சேர்த்தன; ஆதலின், அவர்கள் மேற்கே கிரனாடா (கர்னாதா) முதல் கிழக்கே சீனாவரை சுமார் 700 அல்லது 800 ஆண்டுகள் மட்டும் மிகச் செம்மையாய் அரசு செலுத்தி வந்தார்கள்; மற்றுங் கல்வியிலும் நவநாகரிகத்திலும் அதிக தீக்ஷண்யமடைந்து நின்றார்கள். அவர்களுடைய பகுத்தறிவும் சாஸ்திர ஞானமும் அபார யோக்கியதையை யடைந்திருந்தன. எனவே, அவர்களை நிகர்க்கத்தக்க ஞான மேதையர்கள். அந்தக் கால உலகத்தில் எவரும் காணக் கிடைத்திலர். ஆனால், என்று முதல் கல்வியையும் இஷாஅத்தையும் கைவிட்டனரோ, அன்று முதல் இவ்வுலகில் அதிக வீழ்ச்சியுள் தாழ்ந்து மூழ்கிவிட்டனர். பிறகு தங்கள் சோம்பேறித் தனத்தால் “இவ்வளவுதான் நமக்கிட்டது!” என்றும், “எல்லாம் இறைவனது திருவுளச் சித்தமே!” என்றும் வாய் வேதாந்தம் பேசத் தலைப்பட்டனர். தங்கள் தவற்றை யுணராது பிறிதெங்கோ தவறுண்டென்று குறை சொல்லித் திரிகின்றனர். ஈதெல்லாம் சிறிதும் பயன் தர மாட்டாது.

எனவே, எம் முஸ்லிம் நேசர்காள்! இன்றே நஞ் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் கல்வி கற்பிக்க முற்படுவீர்களாக. இதனால்தான் நஞ் சமூகம் முன்னுக்கு வருதல் கூடும். பிறகு தீன் துன்யாவுக்குரிய கல்வியைக் கற்றுக் கொண்ட பின்பு இஷாஅத்துல் இஸ்லாம் செய்ய இடுப்பை வரிந்து கட்டி எழுவோமாக. இதற்குப் பெரிய அறிவும் விசாலமான பகுத்தறிவும் வேண்டப்படும். தாராளச் சித்தமும் தயாளச் சிந்தையும் இதற்கு அதிகம் வேண்டப்படும். மதப் பொறுமை நிரம்பியும் மதப் பொறாமை அடியோடகன்றும் நிற்றல் வேண்டும். எவரையும் எக் காரணத்தைக் கொண்டும் காஃபிரென்று அழைக்காதிருக்கக் கற்றுக்கொள்ளுதல் வேண்டும். இதற்கெல்லாம் விசாலமான புத்தி (பகுத்தறிவு) வேண்டும்.

அன்பீர்! கல்வியை கற்றவனே மஹா மேலானவனாவான். கல்வியில்லாத மனிதன் கண்ணைக் கட்டிக் காட்டில் விடப்பட்ட மனிதனைப் போலாவான். உலகில் தோன்றிய ஒவ்வொரு மனிதனும் சொந்தமாய்ச் சகல முஸ்லிம்களும் கல்வியைக் கற்றுக்கொள்ளப் பிரயத்தனப்படல் வேண்டும். இந்தக் கல்வியின் காரணத்தினாலேயே ஆண்டவனுடைய ஒவ்வோர் அதிசய ஆச்சரியத்தையும் நன்குணர்ந்து கொள்ளுதல் முடியும். இந்தக் கல்வியின் வாயிலாகவே உங்கள் ஞானத்தை நாளுக்குநாள் அபிவிருத்தி செய்துகொண்டு செல்ல வேண்டும். கல்வியே அழியாப் பொருள். கல்வியில்லாதவன் வழிதெரியாத ஆழிய பள்ளங்களில் அநேகம் தடவைகளில் விழுந்துழல்வான்; கல்விமானோ ஒருசமய மில்லாவிடின், மற்றொரு சமயம் தன்னுடைய கல்வியின் தீக்ஷண்யத்தால் தானும் சரியான பாதையில் சென்று கொண்டு, மற்றையோர்களையும் அத்தறையிலேயே இழுத்துச் செல்லும்படியான சக்தியுள்ளவனாய்க் காணப்படுவான். கல்வியுள்ளவன் எக்காலத்தும் எங்கும் கண்ணியம் வாய்ந்தவனாய் விளங்கி நிற்பான்.

இஸ்லாத்தில் சரியானபடி போதிய கல்வியில்லாக் குறையினாலேயே முஸ்லிம்களாய நேயர்கள் இவ்வுலக காரியங்களிலும், மறு உலகுக்கு வேண்டிய கிரியைகளிலும் மஹா மோசமுடையவர்களாய்க் காணப்படுகின்றனர். இத்தரணியின்கண் சாதாரணக் கல்வியைப் பயின்ற முஸ்லிமல்லாதார்களே ஆட்சி புரிந்து வருகின்றனர். நுங்களிடமோ இரு லோகத்திலும் அரசு செலுத்தற்கு வேண்டிய கல்வி மல்கிக் கிடக்கின்றது. ஆனால், நீங்கள் தாம் அதைக் கவனிக்கின்றீர்களில்லை. இம்மாதிரியான கல்வியைத்தான் நம் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்பித்துச் சென்றார்கள். “சீனா தேசத்திற்கேனும் சென்று கல்வியைக் கற்றுக்கொள்ளுங்கள்,” என்றும் இக்கல்வியையே சுட்டிக் காட்டிச் சென்றார்கள். இனியும் சும்மா இராதீர்கள்.

கற்றோரின் வசனங்களுக்குச் செவி சாய்ப்பதும் அறிவு நூலின் உண்மைகளைப் பிறருக்குப் போதிப்பதும் மதானுஷ்டானங்களைக் காட்டினும் சிரேஷ்ட மானவை யாய்க் காணப்படுகின்றன,” —(நாயகவாக்கியம்)

மத விஷயத்தில் இரத்தசாக்ஷி மரணத்தினால் மரிப்பவனது உதிரத்தைக் காட்டினும் கற்றறிந்தோனது (எழுதுகோலின்) மையானது அதிக பரிசுத்தமுள்ளதாயிருக்கிறது.” —(நாயகவாக்கியம்)

ஞானம் பெறும் பொருட்டுத் தன் வீட்டை விட்டு வெளிப்படுவோன் அல்லாஹ்வின் பாதையில் யாத்திரை செல்கிறான்.” —(நாயகவாக்கியம்)

எனவே, இறைவன் உங்களுக்கும் எனக்கும் போதிய கல்வியையும் இஷாஅத் ஷவ்கையும் அளித்தருள்வானாக. ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

 

اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَِ خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍِ اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُِ الَّذِي عَلَّمَ بِالْقَلَمِِ عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمِْ

بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ

Image courtesy: IqraaUAE

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<குத்பா பிரசங்கம் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment