துல்கஃதா மாத 4–ஆவது குத்பா

اَلْحَمْدُ للهِ الْعَزِيْزِ الْجَبَّارِ الْمُتَكَبِّرِ الْمُسْتَعَانِ ذِى الطَّوْلِ وَ النِّعْمَةِ وَ الْغُفْرَانِ وَ نَشْهَدُ اَنْ لَّا اِلٰهَ الَّا اللهُ وَحْدَهُ لَّا شَرِيْكَ لَهُ وَ نَشْهَدُ اَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَ رَسُوْلُهُ اَمَّا بَعْدُ اَيُّهَا الْاِخْوَانُ

அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்க வேண்டுமென்று எனக்கும் சொல்லிக் கொள்கிறேன்.

ஏ முஸ்லிம் நேசர்காள்! ஆண்டவனுடைய அடியார்காள்! அல்லாஹ்வின்மீது நன்னம்பிக்கை கொண்ட நல்ல மூஃமினான முஸ்லிம் சோதரர்காள்! நம தாண்டவன் எம்பிரான் (ஸல்) அவர்கள் வாயிலாய் மனிதர்களின் தீய நடக்கைகள் சம்பந்தமான பழிப்பானவைகளை மூடிவைக்க வேண்டுமென்றும் இவ்வாறான இழிதுறையி லீடுபடும் அன்னவர்களுக்குத் தனிமையில் இதோபதேசம் புரிய வேண்டும் என்றும் எச்சரிக்கை செய்திருக்கிறான். இவ் வாறில்லாது, எவரெவர் என்னென்ன கெட்ட காரியங்களை செய்கின்றார்? எவரெவர் எவ்வாறான துர்க் காரியங்களில் பிரவேசிக்கின்றார்? என்பதையே துருவித் துருவிக் கொண்டலைவதையே தம்முடைய முக்கிய நோக்கமாய்க் கொண்டு திரியும் இவர்களை மிகக் கடினமான முறையில் ஆண்டவன் தன் திருமறையின் வாயிலாய்க் கண்டித்திருக்கின்றான்.

ஒரு சமயம் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களுக்குரிய அத்தியந்த நண்பர்களுள் முக்கியமான நான்கு (பிறகு கலீஃபாக்களாய் விளங்கிய) சஹாபாக்களைத் தங்களிடம் அழைத்து, “உங்களுக்கு ஆண்டவன் இவ்வுலக சம்பந்தமான சகல செளகரியங்களையும் அரசாங்கத்தையும் ஆதிக்கியத்தையும் அளித்தருள்வானாயின், நீங்களெல்லாம் எவ்வாறான முறையில் நடந்து கொள்வீர்கள்? எக்காரியத்தை முக்கியமாய்க் கடைப்பிடித் தொழுகுவீர்கள்?” என்று வினவினார்கள்.

இதை கேட்டவுடன் ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள், “யான், தாங்கள் சொல்லிய இவ்வாறே ஆசிர்வதிக்கப் படுவேனாயின், உண்மை சொல்வதையே என்னுடைய முக்கியக் கடமையெனப் பற்றிக்கொண்டிருப்பேன்,” என்று விடை பகர்ந்தார்கள். இதை கேட்டவுடன் நாயகம் (ஸல்) அவர்கள், “உண்மையையே உரைப்பது மிகப் பெரிய நல்ல காரியமேயாகும்,” என்று ஆசிர்வதித்தார்கள்.

அதன் பிறகு ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள், “எனக்கும் தாங்கள் திருவுளம் பற்றியவாறு அருள் செய்யப்படுமாயின், நான் நீதம் செய்வதையே என்னுடைய முதற் கடமையாய்க் கொள்வேன்,” என்று பதில் கூறினார்கள். இதைக் கேட்டதும் ரஸூல் (ஸல்) அவர்கள், “ஏ உமர்! நீர் எண்ணியிருக்கும் இவ்வெண்ணம் மிக்க நல்லதே. அக்கிரமக்காரர்களிடம் அவஸ்தைப்படும் மனிதர்களை மீட்டு விடுதலை செய்து நீதம் புரிவது நல்ல காரியமேயாகும்,” என்று வாழ்த்தினார்கள்.

அதன் பின்பு ஹஜ்ரத் உதுமான் (ரலி) அவர்கள், “யானும் தங்கள் வாக்கியப்படி ஆண்டவனால் உயர்த்தப்படுவேனாயின், அதிக தயாள குணத்தைக்கொண்டு செல்வங்களை ஏழை எளியார்களுக்குச் சதாவும் சம்மானம் புரிவதையே முக்கியக் கடமையாய்க் கொள்வேன்,” என மொழிந்தார்கள். இதைக் கேட்டதும் எம்பிரான் (ஸல்) அவர்கள், “ஏ உதுமானே! நீர் செய்ய நாடியிருக்கும் இக்காரியம் மிக்க நன்மையைத் தரக் கூடியதாகவே விளங்கி வருகிறது,” எனச் சந்தோஷித்தார்கள்.

அதன் பின்பு இறுதியாய் ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள், “நாயகமே! தாங்கள் திருவுளம்பற்றிய அவ்வாறே யான் ஆண்டவன் திருவருளால் ஆசீர்வதிக்கப்படுவேனாயின், ஆண்டவனுடைய அடியார்களான நம் சோதரர்பால் காணக் கிடக்கும் அழுக்கான இழிவுகளை வெளிப்படையாய்ச் செய்தவர்களைக் கேவலப்படுத்தாமல் மறைத்து வைத்து, அன்னவர்களுக்குத் தனிமையில் இதோபதேசம் செய்ய முயல்வதையே என்னுடைய முக்கியக் நோக்கமாய்க் கொள்ளுவேன்,” எனக் கூறினார்கள். இதனைச் செவியேற்றதும் நம் நயினாரவர்கள் (ஸல்) தங்கள் முகாரவிந்தம் சந்தோஷத்தினால் மலர்ந்தவர்களாய், “ஏ அலீ ! நீர் கொண்டிருக்கும் இவ்வெண்ணமும் இச்செய்கையும் இதுவரை கூறிக்கொண்டு வந்த மற்றவர்களின் மனோபாவத்தைக் காட்டினும் மிகமிக மேலானதாய்க் காணக் கிடக்கின்றது. என்னெனின், மனிதர்களின் கேவலமான இழிய செய்கையைக் கண்டு, அதை மறைத்து அன்னவர்களுக்குச் சரியான முறையில் இதோபதேசம் புரியும் ஒருவன் ஆண்டவனால் தான் செய்கின்ற துர்க் காரியங்களிலும், கேவலமான இழிவுகளிலும் மறைத்து வைக்கப் படுகின்றான்,” என்று கூறிச் சந்தோஷிக்கச் செய்தார்கள்.

இதனால்தான் முன்னோர்களான பெரியோர்கள் ஒருவன் மற்றொருவனைக் கண்டு எக்காரணம் பற்றியும் கேவலமாக எண்ணிப் பரிகாசமாய் நகைப்பானாயின், இந்த மற்றொருவனையும் இன்னொருவன் கண்டு நிச்சயமாய் இவ்வாறே பரிகசித்துச் சிரிப்பான் என்று சொல்லியிருக்கின்றார்கள். எனவே, அன்புள்ள நேயர்காள்! இந்நாட்டின் கண் காணக்கிடக்கும் முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதாரும் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து குடியேறிய மனிதர்களும் அநேக காரியங்களில் தனித்தனியே பிரிந்து கிடக்கின்றனர். இம்மூன்று பிரிவினர்களும் தத்தம் நடக்கைகளிலும் ஒழுக்கங்களிலும் வானத்துக்கும் பூமிக்கு முள்ள வித்தியாசத்தைக் கொண்டிருக்கின்றனர். இந்துக்கள் தங்கள் சமூகத்தாருள் ஏதேனும் குற்றம் குறைகளைக் காண்பார்களாயின், அவற்றை அப்படியே மறைத்து வைத்து, அவற்றிற்கான வேலைகள் என்ன செய்ய வேண்டுமோ, அவற்றினை ஏனை வகுப்பார்கள் அறிந்து கொள்ளா வண்ணம் கெளரவமாகவும், கண்ணியமாகவும் செய்து தங்கள் சமூகத்தாரின் குறைகளை நிவாரணம் பண்ணிக் கொள்ளுகின்றனர்.

வெளிநாட்டினரைக் கவனிக்கப் புகுவோமாயின், அவ் வகுப்பார்கள் தப்பான காரியங்களைச் செய்கின்றனரா? இழிவான கிரியையில் இறங்குகின்றனரா? இல்லையா? என்றுகூட மற்ற வகுப்பார் உணர்ந்துகொள்ள முடியாவண்ணம் அதிக இரகசியமாய்த் தங்களுக்குள் காணப்படும் தகாத காரியங்களை மறைத்து விலக்கிக்கொள்ளுகின்றனர்.

ஆனால், முஸ்லிம்களெனப்படும் நம் நேயர்களோ, மேலே காட்டி வந்த இரு பெரும் வகுப்பார்களின் செய்கைக்கும் முற்றும் முற்றும் முரணாய்க் காணப்படுகின்றனர். இன்னல்களை யெல்லாம் மறைத்தாளும் “சத்தாருல் உயூபான” அல்லாஹுத் தஆலாவானவன், “நுங்கள் சோதரர்களின் கெட்ட நடக்கையை வெளியாக்கிக் கேவலப்படுத்தாது, அவர்களுக்குத் தனிமையில் நல்லுபதேசங்களைப் புரிவீர்களாக,” என்று திருவுளம் பற்றியுள்ளான். ஆனால், இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தங்கள் தங்கள் வேதங்களில் இவ்வாறு நல்லவிதமான ஒரு போதனையும் காணப்படவில்லை. எனவே, இச்சமயம் கவனிக்குமிடத்து, எந்த ஜாதியாருக்கு இந்த உயர்தர போதனை செய்யப்பட்டிருக்கிறதோ, அன்னவர்களே இதை அடியோடு கைவிட்டிருக்கின்றனர். யார் யாருக்கு இவ்வுபதேசம் வேதக் கட்டளையாய்க் காணப்படவில்லையோ, அன்னவர் ஒவ்வொருவரும் இதனை அப்படியே பற்றிக்கொண்டிருக்கின்றனர். என்னே காலத்தின் திரிபு!

அன்பீர்! சமீப காலம் வரையில் ஆங்கிலேயர்களின் அரசாங்கமும் அவர்களின் அவ்வாட்சியும் எக்காரணம் பற்றி இந்தியாவின் கண் நிலை நின்றது, எத்தக் காரியங்களினால் நாளுக்கு நாள் இவர்களது ‘இராஜரீகம்’ முன்னுக்கு வந்துகொண்டிருந்தது என்னுங் காரியத்தையும் அதற்குரிய காரணத்தையும் சிறிது ஆழ்ந்து கவனிப்பீர்களாக. ஆங்கிலேயர்கள் சகல கிரியைகளையும் ஒரு கணக்குடன் ஒழுங்காய்ச் செய்து வருகின்றனர். இரண்டாவதாக, ஒவ்வொரு வேலையையும் அதனதன் இயல்புக்குத் தக்கவாறு காலங்களை பிரித்து வைத்து, அவ்வேலையைச் செய்து வருகின்றனர். மூன்றாவதாக, குறிப்பிட்ட நேரத்தில் கோரிய காரியங்களைச் செய்கின்றனர். நான்காவதாக, நேரத்தை மதிக்க முடியா மேலான பொருளென்று கொள்கின்றனர். ஒரு வினாடியேனும் அவர்கள் குறிப்பிட்ட அடைவின் படியே யல்லாமல் வீணே கழிக்கின்றார்களில்லை. ஐந்தாவதாக, மேலே காட்டப்பட்டு வந்த இவையனைத்தையும்விட மேலாய்த் தங்கள் ஜாதியாருக்குள் எவ்வித இழிவும் கேவலமும் காணப்படாதவாறு தங்களுக்குள்ளேயே அதிக இரகசியமாய்ச் சீர்திருத்தம் செய்து கொள்கின்றனர்.

இவர்களுள் ஒருவருக்கொருவர் எவ்வளவோ எண்ணத் தொலையாத விரோதமுள்ள பகைவனாயினும் ஓர் இழிவான காரியத்தில் இறங்கி விட்டானென்று கேள்வியுற்றவுடன், சகோதரனும் பகைவனும் சகலரும் பாகுபாடின்றி ஒன்று சேர்ந்து அந்தக் கேவலமான காரியம் வெளியில் வராதவாறு அப்படியே மறைத்து வைத்துவிடுகின்றனர். இஃதல்லவோ எமதாண்டவனது போதனை? இதை முஸ்லிம்களாகிய நாமல்லவோ எடுத்து நடத்தல் வேண்டும்? ஆனால், அன்னிய மதத்தினர் நமது மேலான வேத போதனையை எடுத்து நடக்கும்போது உண்மையிலேயே ஆண்டவனது மேலான வேதத்தைப் பெற்ற முஸ்லிம்களாகிய நாம் வெட்கித் தலைகுனிந்து நடக்கும்படியல்லவோ செய்துகொண்டிருக்கிறோம்? நாமோ ஒருவனை யொருவன் காலைவாரி விட்டுக்கொண்டும் காட்டிக் கொடுத்துக் கொண்டும் திரிகின்றோம். ஆங்கிலேயர் தங்கள் ஜாதி விஷயத்தில் பொறுமைக் குணத்துடன் நடந்து கொள்ளவில்லையென்றால், இவ்வுலகில் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை நிருமித்து வெகுகாலம்வரை செங்கோல் செலுத்தியிருப்பது முடியாது. எமதாண்டவனது ஏவலை எடுத்து நடக்கும் எந்த வகுப்பாரும் தாழ்த்தப்பட்டவர்களாகவோ, இழிவாக்கப்பட்டவர்களாகவோ ஆக்கப்பட மாட்டார்களென்பது இதிலிருந்து நன்கு வெளியாகவில்லையா?

இதையும் விட்டுவிட்டு இந்துக்களைச் சீர்தூக்கிப் பார்ப்பீர்களாயின், இவர்களும் மேனாட்டினரைப் போலவே தங்களின் சமூகத்தாரின் இழிவான செய்கையையும் வெட்கிக்கத் தகுந்த வியவகாரங்களையும் மறைத்துக் கொள்கின்றனர். இதனால்தான் இன்னவர்கள் இவ்விந்தியாவில் ஜனாதிபதி, உதவி ஜனாதிபதி, பிரதம மந்திரி, கவர்னர் முதலிய உயர்தர உத்தியோகங்களிலும் முன்னுக்கு வரும் மார்க்கத்திலும் முதன்மையான அங்கத்தினர்களாய் நின்றிலங்குகின்றனர். இக்காரணத்தினாலேயே முஸ்லிம்களைவிட இவர்கள் இப்போது முன்னேற்ற வகுப்பராய்த் தென்படுகின்றனர். எம் உண்மை முஸ்லிம்களாகிய நேயர்கள் இதையெல்லாம் கவனித்து ஆண்டவன் போதித்த வண்ணமும், நபிநாயகம் (ஸல்) அவர்களின் சற்குணங்களின்படியும் என்றுதான் நடக்க முற்படப் போகின்றனரோ? என்றுதான் இவர்களது ஞானக் கண் துலக்கமாகப் போகின்றதோ? அப்படியாயின், அன்று முதற்கொண்டுதான் இவர்கள் முன்னேற்ற மடைவார்கள். சற்குண சீலர்களாய் விளங்குவார்கள். ஆண்டவனே! எம்மை உன்னுடைய நேரான பாதையிலே சீராக நடாத்திச் செல்வாயாக. ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَّحِيمٌ

بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ

Image courtesy: tmcng.net

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<குத்பா பிரசங்கம் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment