துரோகி – விமர்சனம்

by நூருத்தீன்

க்கிரமமான அந்த சிறைச்சாலைக்குள் தரதரவென்று நம்மை இழுத்துச் செல்கிறார் துரோகி. அக்கிரமக்காரர்களையும் குற்றவாளிகளையும் அடைக்கத்தானே சிறைச்சாலை… அதென்ன அக்கிரமமான சிறைச்சாலை?

சிறைச்சாலை அமைந்துள்ள நிலம் பக்கத்து நாட்டுக்காரனுக்குச் சொந்தமானது. உலக மகா தீவிரவாதிகள் என்று குற்றஞ்சாட்டி அங்கு அடைத்து வைக்கப்பட்டவர்களில் மிகப் பெரும்பாலானவர்களோ குற்றத்திற்குச் சம்பந்தமே இல்லாதவர்கள். உள்நாட்டுச் சிறைகளில் அவர்களை அடைத்தால், மனித உரிமை, மண்ணாங்கட்டி என்று யாராவது தேவையில்லாத கூக்குரல் எழுப்புவான்; மனித உரிமைச் சங்கம், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் என்று வேலை மெனக்கெட்டு அரசாங்கத்தின்மீது வழக்கு தொடுப்பார்கள். பிறகு, மிருகத்தைப்போல் கைதிகளை அடித்துச் சாத்தி துவைத்து ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள அவையெல்லாம் அனாவசிய தடங்கல்கள்… என்று அமெரிக்காவுக்கு ஏகப்பட்ட அநீதக் காரணங்கள். அதனால் க்யூபா தீவில், குவாண்டனமோ பகுதியில் அமெரிக்கா தனக்கான ஒரு சிறைச்சாலையை அமைத்துக்கொண்டது. ‘தீவிரவாதிகள்’ என்று அமெரிக்காவால் முத்திரை குத்தப்பட்டவர்களால் அக் கொட்டடி நிரப்பப்பட்டது. 9/11 நிகழ்விற்குப் பிறகு அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகளுள் மிகப் பெரும் வேதனை இது.

அங்கு பணிபுரிய அனுப்பி வைக்கப்பட்டார் அமெரிக்க இராணுவ வீரர் டெர்ரி சி. ஹோல்ட்புரூக்ஸ். எத்தனையோ நூறு பேரில் அவர் ஒருவர். ஆனால் அவர் நூற்றில் ஒருவர் ஆனதுதான் விந்தை. இராணுவத்தினரை அங்கு அனுப்பும்முன் நியூயார்க் நகரில் அவர்களது மூளையை வழக்கம்போல் சலவை செய்யும் டிடர்ஜென்ட் ஹோல்ட்புரூக்ஸை சரியாக வெளுக்காமல் போனது. அங்கு ஆரம்பித்தது அவரது முதல் திசை மாறல். சரியான திசைக்கான மாறல்.

காட்டுமிராண்டிகளையும் மனிதகுல விரோதிகளையும் உலக மகா தீவிரவாதிகளையும் சமாளித்து, உரிய முறையில் கவனித்து நல்ல பாடம் புகட்டப் போகிறோம், சேவையாற்றி அமெரிக்காவுக்குப் பெருமை சேர்க்கப் போகிறோம் என்ற எண்ணத்துடன் குவாண்டனமோ மண்ணில் வந்து இறங்கிய ஹோல்ட்புரூக்ஸுக்கு முதல் நொடியிலேயே அதிர்ச்சி. அந்நாட்டு மண், தட்ப வெப்பம், அபாய ஜந்துக்கள் புழங்கும் சூழலில் அமைந்துள்ள சிறை என்று திரைப்படக் காட்சி போல் புழுதி பறக்க விரிகிறது அவரது அனுபவம்.

கொடுங்கோல் சிறை அதிகாரிகள், விசாரணை என்ற பெயரில் நிகழும் உலக மகா அயோக்கியத்தனம், அவர் கற்பனை செய்திருந்ததற்கு மாறாக ஒழுக்கத்தையும் இணக்கத்தையும் இறை வழிபாட்டையும் மேற்கொண்டுள்ள முஸ்லிம் கைதிகள் என்று அவர் கண்டதெல்லாம் பேரதிர்ச்சி. கைதிகளின் உடைமையான குர்ஆன் கழிவறையில் வீசப்படுவது, விசாரணை என்ற பெயரில் பெண் காவலரின் மாதவிடாய் இரத்தத்தை முஸ்லிம் ஆண் கைதியின் முகத்தில் தேய்ப்பது போன்ற செயல்கள் அவருக்குள் ஏற்படுத்திய விளைவுகளைக் குறிப்பிட பேரதிர்ச்சி என்ற சொல் போதாது.

ஆனால், அத்தகு கடும் சூழ்நிலையிலும் மனிதாபிமானத்திற்குச் சற்றும் தொடர்பற்ற சித்திரவதைகளுக்கு நடுவிலும் அந்த முஸ்லிம் கைதிகள் கட்டிக்காத்த ஒழுங்குமுறைதான் ஹோல்ட்புருக்ஸினுள் பல வினாக்களை எழுப்பியது. ஆவலைத் தூண்டியது. தேடலுக்கு வித்திட்டது. யார் இவர்கள்? அதென்ன அரபு மொழி? அப்படி என்னதான் சொல்கிறது இவர்களின் இஸ்லாம்?

அவ் வினாக்களுக்கான விடைகள் அச் சிறை கம்பிகளுக்குப் பின்னிருந்து கிடைக்கின்றன. தெளிவு பிறக்கிறது. அமெரிக்க அதிகாரிகளிடம் பட்டம் கிடைக்கிறது. ‘துரோகி’!

இஸ்லாத்தின்மீது ஆகப்பெரிய களங்கத்தைச் சுமத்தி அதை வேரறுக்க நினைக்கும் வல்லரசின் திட்டத்திற்கு எதிர்மாறாய் அவர்களது படைவீரர்களுள் ஒருவரான அவரிடம் மாற்றம் ஏற்பட்டு இஸ்லாம் அவரது வாழ்வியல் நெறியானது.

எந்தச் சந்தர்ப்பத்திலும் அந்த முஸ்லிம் கைதிகள் அவரிடம் மதத்தைத் திணிக்கவில்லை. இஸ்லாத்தை வற்புறுத்தவில்லை; முஸ்லிமாகிவிடு என்று அறிவுறுத்தவும் இல்லை என்பதுதான் இதிலுள்ள அற்புதம். தாங்கள் கற்றறிந்த இஸ்லாத்தைக் கொடுமையான அச் சூழலிலும் அக் கைதிகள் மேற்கொண்டிருக்கிறார்கள். எவ்வித சமரசமும் புரியாமல் வாழ்ந்திருக்கிறார்கள். அவ்வளவுதான்!

திரைப்படம் போல் விறுவிறுப்பான நிகழ்வுகள், காட்சி விவரிப்புகள் என்று உள்ளத்தைத் தொடும் அருமையான அனுபவம் இந் நூல். தமிழ் வாசகர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. மொழிபெயர்த்துத் தமிழ் வாசகர்களுக்கு அளிப்பதில் முக்கியப் பணி ஆற்றியுள்ளது இலக்கியச் சோலை டீம். நிறைய உழைத்துள்ளார் சகோதரர் M.S. அப்துல் ஹமீது. பாராட்டுகளும் நன்றியும் அவர்களுக்கு உரித்தாவன. ஆனால், ஏராளமான பிழைகளும் அச்சுப் பிழைகளும்தாம் பெரும் குறை; ஏமாற்றம். அவற்றைத் திருத்தி சீரான முறையில் மறுபதிப்பை அவர்கள் வெளியிட வேண்டும் என்பது என் பேரவா.

நூல்: துரோகி
வெளியிடு: இலக்கியச் சோலை, 26 பேரக்ஸ் சாலை, பெரியமேடு, சென்னை 600003.
போன்: 044-2561-0969, 96000-08724

-நூருத்தீன்

புதிய விடியல், 2017 ஆகஸ்ட் 16-31 இதழில் பிரசுரமான கட்டுரை

அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்

Related Articles

Leave a Comment