தலித் மக்களின் விடுதலைப் பேறு – விமர்சனம்

by நூருத்தீன்

ஐ.ஏ.எஸ். முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரும்பாவூர் இளைஞர் ஒருவர். சில மாதங்களுக்குமுன் இஸ்லாம் மதத்தை வாழ்க்கை நெறியாகத் தேர்ந்தெடுத்து அதனுள் நுழைந்துவிட்டார்.

அவருடன் ஒருவருக்கு சந்திப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறார் அவருடைய நண்பர். சந்தித்தோம், பேசினோம், வாழ்த்து கூறினோம் என்று டீ, சமோசாவுடன் நாம் திரும்பியிருப்போம். ஆனால் அவரைச் சந்தித்தவர் சிந்தித்திருக்கிறார். விளைவு 64 பக்கங்கள் அடங்கிய சிறு நூலாகிவிட்டது.

“தலித் மக்களின் விடுதலைப் பேறு – ஒரு வரலாற்றுப் பார்வை” என்ற நூலை அனுப்பிவைத்திருந்தார் அண்ணன் Yembal Thajammul Mohammad. எனது வாசிப்பு ருசி சிறுபிள்ளைத்தனமாது. ‘தலித்’, ‘விடுதலை’ ரக keywords களைக் கண்டதும் என் மூளையில் புதைந்துள்ள எச்சரிக்கை மணி, ‘அபாயம், அரசியல்’ என்று ஒலியெழுப்பும். ஓடிவிடுவேன், நகர்ந்துவிடுவேன். இந்த மின்நூல் ‘அன்பு’ ஸ்டாம்ப் ஒட்டி வந்திருந்ததால், முயன்று பார்ப்போம் என்று வாசிக்க ஆரம்பித்தால், சுவாரஸ்யம். மிகையற்ற என் கருத்து, நல்ல நூல்.

64 பக்க நூலுக்கு 18 நூல்களை உசாத்துணையாகப் பட்டியலிட்டு ஒருவர் நூல் எழுதியிருக்கிறார் என்றால் அந்த உழைப்பை எப்படி பிரமிப்பது? நூலாசிரியர் முன்னாள் தமிழாசிரியர் என்பதால் உரைநடை வஞ்சனையின்றி அழகு. ஆங்காங்கே புதிய தமிழ் சொற்களை அல்லது நம்மிடம் இயல்பாகிவிட்ட ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் சொல்லை அதட்டாமல் அடைகுறிக்குள் இட்டுக் கற்றுத்தருகிறார். Lodge என்றால் தாவளம் என்பது எனக்கு இப்பொழுதுதான் தெரி்ந்தது.

அரும்பாவூர் ராஷித் அலீயுடனான சந்திப்பில் ஆரம்பித்து, அம்பேத்காரையும் பெரியாரையும் காந்தியையும் துணையாக்கிக்கொண்டு தலித் மக்களின் சிந்தனையைத் தட்டியெழுப்பிருக்கிறார் ஆசிரியர். ஆனால் அதில் அத்தனையும் இழையோடுவது கனிவு.

தயக்கமின்றி நண்பர்களுக்கு சிறு பரிசாக அளிக்கலாம்.

தலித் மக்களின் விடுதலைப் பேறு – ஒரு வரலாற்றுப் பார்வை
ஆசிரியர்: ஏம்பல் தஜம்முல் முகம்மது எம்.ஏ.,
வெளியிடு: Islamic Research Institute of Scriptures & Culture
விலை ரூ. 60.00

-நூருத்தீன்

Related Articles

Leave a Comment