ரோந்து சுற்றிப் பார்த்து விட்டு, முக்கியமான தகவல் எதையாவது சேகரித்துக் கொண்டு அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷும் (ரலி) அவருடன் சென்றவர்களும் திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்த்து மதீனா முஸ்லிம்கள் காத்துக்கிடந்தார்கள். கொல்லப்பட்ட ஹலரமீயின் சில

பண்டங்களுடனும் இரு கைதிகளுடனும் ஜஹ்ஷ் வந்து சேர்ந்ததைக் கண்டு அவர்கள் திடுக்கிட்டார்கள்.

கடுஞ்சினமுற்ற நபியவர்களின் எதிரில் ஜஹ்ஷ் வந்து நின்று, நடந்த கதையை விவரித்தார்.

“என்னதான் ஏசியிருக்கட்டும், எவ்வளவுதான் புளுகியிருக்கட்டும். நீர் வாய் திறவாமல் எட்டநின்று ஒட்டுக் கேட்டு விட்டுப் பேசாமல் இங்கு வந்தல்லவா தகவல் அறிவித்திருக்க வேண்டும்? நீர் ஏன் அங்கொரு குட்டிப் பிரசங்கத்தை நிகழ்த்தினீர்? ஏன் எதிரிகளை உசுப்பிவிட்டீர்? நான் என்ன கட்டளையிட்டிருக்கிறேன்? எப்படி நீர் ஒருவனைக் கொல்லலாம்?” — நபி (ஸல்) கடுமையாகக் கேட்டார்கள்.

தாம் ஏதோ வீரச் செயல் புரிந்து, அருஞ்சாதனையை நிறைவேற்றி வந்து விட்டதாகப் பெருமையுடன் நினைத்திருந்த அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் பெரிதும் திகிலுற்று விட்டார். நபியவர்களின் சினத்துக்கு ஆளாகி விட்டோமே என்ற வேதனை அவரைப் பெருங் குலுக்குக் குலுக்கிவிட்டது. சற்றே யோசித்தார். அன்றைக்குப் பத்தாண்டுகளுக்கு முன்பே [அதாவது, நபி (ஸல்) மக்காவைத் துறப்பதற்கு 8 ஆண்டுகட்கு முன்பே] குர்ஆனில் வெளியாகியிருந்த (21:107) திருவசனமொன்று அவரது நினைவுக்கு வந்தது.

“இறைத் தூதரே! தாங்கள் மதீனா முஸ்லிம்களாகிய எங்களுக்கு மட்டுமின்றி, அகில உலகுக்கும் கருணைப் பெருங் கடலாக (ரஹ்மத்துன்லில் ஆலமீனாக) இலங்கி வருகிறீர்கள் என்பதை நான் ஏனோ அப்போது மறந்து விட்டேன்; ஹலரமீ உசுப்பிவிட்ட ஆத்திரத்துக்கு எவ்வாறோ இரையாகி விட்டேன். நான் கொலை புரியவேண்டும் என்கிற எண்ணத்தில் வாளுருவவில்லை; தற்காப்புக்காகவே எதிர்த்தேன். தவறு நடந்து விட்டது. அல்லாஹ்வின் பொருட்டு என்னை மன்னிப்பீர்களாக! கொலையுண்ட ஹலரமீயின் குடும்பத்தார் அக்கொலைக்கு ஈடாக எவ்வளவு அபராதத் தொகை (தியா) கேட்கிறார்களோ அவ்வளவையும் நானே செலுத்தித் தீர்க்கிறேன். இனி எக்காரணம் பற்றியும் நான் ஆத்திரப்பட மாட்டேன் என்பதையும் உறுதியாகக் கூறுகிறேன்.”

“ஏ அப்துல்லாஹ்! குறைஷிகள் நஷ்டஈடு கேட்டால்தான் எல்லாம் சரியாகிவிடுமே! எவ்வளவு தொகை கேட்டாலும் கொடுத்து விடலாமே! ஆனால், உதிர வெறியும் போர் ஆவேசமும் பிடித்த அவர்கள் எங்கே சமாதானத்துக்கு வரப் போகிறார்கள்? அவர்கள் நம்மீது படையெடுத்து வருவதற்கு ஏதாவதொரு நொண்டச் சாக்கைத் துருவிவரும் வேளையில் நீர் இப் படுகொலையை நிகழ்த்தி விட்டிருக்கிறீர். இதன் விளைவு விபரீதமாகி விடுமென்றே நான் அஞ்சுகிறேன்.”

இவ்வாறு நபியவர்கள் வருந்திக் கொண்டிருக்கும்போதே ஓர் ஒற்றர் அங்கு ஓடி வந்தார் குதிரையைவிட்டு இறங்கியதும் இறங்காததுமாக, “வந்து விட்டது. வந்துவிட்டது! ஒரு பெரிய சைனியமே மக்காவிலிருந்து ஆக்ரோஷத்துடன் படையெடுத்து வருகிறது! அபூ ஜஹலின் தலைமையில் ஆயிரக் கணக்கான வீரர்கள் வேகமாக மதீனா நோக்கிப் பாய்ந்து வருகிறார்கள்!” என்று ஆர்ப்பரித்தார்.

நபியவர்கள் மட்டுமின்றி, அங்குக் குழுமி நின்ற அத்தனை பேருமே அதிர்ந்து போனார்கள்.

“இனி ஒரு நிமிட நேரமும் நாம் வீணாக்கக்கூடாது. மதீனாவோ போதிய பந்தோபஸ்து இல்லாத ஒரு திறந்தவெளி மைதானத்தில் அமைந்திருக்கிறது. படையெடுத்து வருகிற பாவிகளோ பழி பாவத்துக்கு அஞ்சாத அரக்கர்கள். அவர்களை எதிர்த்துத் தடுத்து நிறுத்தாவிட்டால், இங்கே உள்ளே வந்து புகுந்து பூகம்பம் நிகழ்த்தும் விளைவுகளை உண்டு பண்ணி விடுவார்கள். இங்கு வாழும் முஸ்லிம்களை மட்டுமின்றி, அனைத்துக் குடிமக்களையும் எல்லாப் பெண்டிர்களின் கற்பையும் காப்பாற்ற வேண்டிய மகத்தான பொறுப்பு நம்மீது கடமையாக்கப்பட்டு விட்டது. குழந்தைகள் அனாதைகளாகி விடாமல், அமைதி குலைந்து பலர் அகதிகளாகி விடாமல், அழகிய மதீனா அழிவுறாமல் தடுக்க நாம் இப்போதே படை திரண்டு தெற்கு நோக்கிச் செல்வோம்; தற்காப்புப் போர் நிகழ்த்துவோம்,” என்று நபி (ஸல்) ஆனையிட்டார்கள்.

“ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்கள் ஆவேசத்துடன் பாய்ந்து வருகிறார்களாம்; முஸ்லிம் கோழைகள் எதிர்த்து நின்று தடுக்கப் போகிறார்களாம்! — ஒரு முஸ்லிம் கூட உயிருடன் தப்பப் போவதில்லை. பிறகு நானே குறைஷிகளை அமைதிப்படுத்தி, அவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு மதீனாவின் மன்னனாக உயரப் போகிறேன். எனக்கு இப்பொழுதுதான் நல்ல காலம் உதயமாகியிருக்கிறது. நான் நீண்ட நாட்களாகக் கண்ட கனவு சீக்கிரமே நனவாகப் போகிறது!” — அப்துல்லாஹ் இப்னு உபை என்னும் நயவஞ்சகன் நாவில் தேன் சொட்டிற்று.

மதீனா நகரைக் காப்பாற்றவே நபி பெருமானார் (ஸல்) எதிர் சென்று பகைவர்களைச் சந்திக்க விரும்புகிறார்கள் என்பதையறிந்த அன்சார்கள் தாம் தாமும் படையில் பங்கு பெற முன்வந்தார்கள். சற்று நேரத்தில் தற்காப்புப் படை உருவாயிற்று. மொத்தம் 313 காலாட்படையினரே தேறினார்கள். அவர்கள் ஆயுத பலம் இல்லாதவர்கள்; குதிரைப்படையில்லாதவர்கள். சிறு வாலிபர் முதல் 50 வயது நிரம்பியவர்கள் வரை இப்படையில் சேர்ந்திருந்தார்கள். காட்டு மிராண்டிகளான கொடிய மூர்க்கர்கள் அடங்கிய குரைஷிச் சேனையில் 1000 வீரர்களுக்குமேல் இருக்க, இந்த வலுவற்ற 313 பேர் எப்படிச் சமாளித்து உயிர் தப்பப் போகிறார்கள் என்னும் அச்சம் யூதர்களையும் குலுக்கிவிட்டது.

நபி (ஸல்) தலைமை தாங்க, அபூபக்ர், உமர், அலீ, ஜுபைர், ஹம்ஜா, உபைதா (ரலியல்லாஹு அன்ஹும்) முதலிய தோழர்கள் உடன் நிற்க, இச் சிறு தற்காப்புப்படை அக்கணமே தென்மேற்காக வீறு நடை போட்டது. மூன்று நாட்கள் அப் பாலைவெளியில் இச் சிறு படை பயணம் செய்து, 130 கி.மீ. தூரத்தைக் கடந்தது.

வறண்ட பாலைவனத்தில் எங்காவது ஓரிடத்தில் ஒரு கிணறு அமைந்திருக்கும். எட்ட முடியாத ஆழத்தில் தண்ணீர் அடிமட்டத்தில் இருக்கும். அப்படிப்பட்ட கிணற்றங்க கரையில் ஒரு சிறு கிராமம் உருவாகியிருக்கும். கால்நடைகளுக்குத் தண்ணீர் இறைத்துக் கொடுக்க, மற்றும் தேவைகளுக்கு நீளத் தாம்புக் கயிறுகளில் தோல் பைகளைக் கட்டி இறக்கி மக்கள் நீர் இறைக்கும் காட்சியை இன்றும் அங்கெல்லாம் காண முடியும். இப்போது நபியவர்களும் அவர்ளுடைய சிறு படையும் அப்படிப்பட்ட ஒரு கிணற்றங்கரையருகே மாலை வெயில் மறைகிற நேரத்தில் வந்து சேர்ந்தார்கள். அந்தக் கிணறு பத்று (Badr) என்று அழைக்கப்படுகிறது. அதைச் சுற்றிலுமிருக்கும் கிராமத்துக்கும் அதுவே பெயர். (பெளர்ணமி நிலவும் அரப்மொழியில் பத்று என்றே அழைக்கப்படும்.) அங்கிருந்த மேட்டுப் பாங்கான நிலத்தில் தற்காப்புப் படையினர் கூடாரமடித்து, தாகம் தீர்த்துக்கொண்டு, சற்றே ஓய்வெடுத்துக் கொண்டார்கள். அது ஹிஜ்ரி 2-ஆவது ஆண்டின் ரமலான் மாதம். அப்போது குளிர் காலப் பருவம் நிலவிற்று.

அரபு நாட்டில் திடீரென்று எப்போதாவது பெருமழை பொழிவதுண்டு. அப்படியொரு மழை வந்தால், அது பேய் மழையாகத்தான் கொட்டுக்கொட்டென்று கொட்டித் தீர்த்து விடும். பத்று கிணற்றங்கரையில் முஸ்லிம் படை தங்கியிருந்த அன்றிரவும் அப்படியொரு கடுமையான பெருமழை பிடித்துக் கொண்டது. விடிகிற வரை அது வெள்ளமாகப் பொழிந்து தள்ளிற்று. சரியான பேய் மழை.

தொடரும்…

-N.B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment