பொழுது புலரப் போவதற்கு அறிகுறியாக முஸ்லிம் பாசறைகளில் வைகறைத் தொழுகைக்கான அழைப்பு முழங்கப்பட்டது. நபியின் (ஸல்) தலைமையில் எல்லா முஸ்லிம்களும் அத் தொழுகையை நிறைவேற்றினார்கள்.

அப்துல்லாஹ் இப்னு உபை தன்னுடைய அத்தியந்த தோழர்கள் பத்துப் பேருடன் நபி (ஸல்) எதிரே வந்து நின்றான். இவன் கபடத்தனமாக எண்ணிய எண்ணம் அனைத்தும் இறைவனால் நபிக்கு முற்கூட்டியே அறிவிக்கப் பட்டுவிட்டன. இவனுக்கு அது தெரியாது. நல்ல பிள்ளை போல் பசப்பத் தொடங்கினான்.

“இறைத் தூதரே! என்ன செய்வேன்? பாவிப் பயல்கள் எனது பேச்சைக் கேட்க மறுக்கிறார்கள். எனது சேனா வீரர்கள் முந்நூறு பேரும் ஒரு மொத்தமாகக் கலகம் விளைக்க முற்பட்டு விட்டார்கள். ‘உஹதுக்கு வரமுடியாது, மதீனாவுக்கே திரும்புவோம்!’ என்று எல்லாருமே எதிர்ப்புக் குரலை எழுப்புகிறார்கள். நானும் எவ்வளவோ நயமாகவும் பயமாகவும் சொல்லிப் பார்த்துவிட்டேன். முரட்டுப் பயல்கள் என்னையே கூட எடுத்தெறிந்துவிட்டு மதீனாவின் பக்கம் திரும்பிவிட்டார்கள். அந்தோ, இப்போது நான் என்ன செய்வேன்?’ – பொய்க் கண்ணீர் வடித்தான் கயவன்.

உமர் கத்தாபுக்கு (ரலி) ஆத்திரம் பொத்துக் கொண்டது. பக்கத்தில் நபியவர்கள் இருப்பதையும் மறந்து, “என்ன ஒப்பாரி இது? இப்பொழுது நீ ராஜதுரோகம் செய்யப் போகிறாயோ?” என்று கத்தினார்.

“என்னுடைய ஆட்களே எனது பேச்சைக் கேட்கவில்லையே! நான் என்ன செய்யட்டும்?”

“இந்த நேரத்தில்தான் கழுத்தறுக்க வேண்டுமா? நகரை விட்டுப் புற்படு முன்னே நீ மறுத்திருக்கலாமே! அப்போது நாங்கள் வேறு ஏற்பாடுகளைச் செய்திருப்போமோ! நட்டாற்றில் கைந்நழுவ விட்டாற்போல் பாதி வழியில் ஏன் இப்படிப் பழி வாங்குகிறாய்?”

“திரும்பிப் போக எனக்கு அறவே விருப்பமில்லைதான்! ஆனால், நான் என்ன செய்யட்டும்? என்னுடைய ஆட்களே தக்க சமயத்தில் எனது காலை வாரிவிட்டார்கள். என் பேச்சைக் கேட்க மறுக்கிறார்கள். மீறி இவர்களைக் களத்துக்கு ஒட்டிச் சென்றால், அத்தனை பேரும் எதிரிகளுடன் சேர்ந்து விடுவார்கள்போல் தெரிகிறது. அப்பொழுது நிலைமை இன்னம் பயங்கரமாக ஆகிவிடும். நடுக் களத்தில் நம்மைக் கழுத்தறுக்காமலிருக்க, அவர்களை இப்பொழுதே விவேகத்துடன் வெளியேற்றி விடுவது நலமல்லவா? பாறாங்கல்லைக் கழுத்தில் கட்டிக்கொண்டு கடலில் குதிக்கக் கூடாதே!” – பசப்பினான் பாதகன்.

நல்ல வேளை! போர் நடுவில் இந்தப் பயல் பின்முதுகில் குத்தாமல், களத்துக்குச் செல்லுகிற வழியிலாவது கழற்றிக் கொள்கிறானே என்னும் ஒருவகைத் திருப்தி முஸ்லிம்களின் உள்ளத்தில் உதித்தது. உதவி கிடைக்காவிட்டாலும் உபத்திரமாவது இல்லாமற் போகட்டும் என்று யாவரும் எண்ணத் தொடங்கினர். எதிர்கால நிகழ்ச்சிகளை நிழற் படம்போல் ஞான திருஷ்டியில் கண்ட நபிமணி (ஸல்) ஒன்றும் பேசவில்லை. மௌனம் சம்மதத்துக்கு அடையாளம் என்று அப்துல்லாஹ் சட்டென்று அகன்றான். தன்னுடைய பரிவாரங்களைக் கூட்டினான். மதீனாவுக்குத் திரும்பிவிட்டான்.

உலக சரித்திரத்தில் இப்படிப்பட்ட ஒரு பயங்கரக் கட்டம் எந்தப் போர்க்களத்திலும் நிகழ்ந்திருக்குமா என்பதே சந்தேகம். முன்பு ஜுஹ்ரிகளாவது தக்க காரணத்தைச் சொல்லி, குறைஷியரைக் கைவிட்டுச் சென்றார்கள். இப்போது இந்நயவஞ்சகன் கடுந் துரோகமிழைத்துப் பின்முதுகில் குத்திவிட்டு அகன்றான். வேறெந்தப் போர்த் தளபதியாயிருந்தாலும் இந்நேரத்தில் அப்படிப்பட்ட துரோகிகளைத் தப்பவிட்டிருக்க மாட்டான். ஆனால், நபிமணி (ஸல்) இந்நேரத்திலும் நிதானத்தை இழக்கவில்லை. அவர்கள் மட்டும் தலையசைத்திருந்தால், 700 முஸ்லிம்களும் அந்த 300 நயவஞ்சகர்களை அப்போதே கொன்று கூறுபோட்டிருப்பார்கள்.

ஆத்திரத்துடன் பற்களைக் கடித்த உமர் கத்தாப் (ரலி) போன்ற தீவிரவாதிகளை நபி (ஸல்) அமைதிப்படுத்தினார்கள். “இந்த 300 பேரைத் தடுத்து நிறுத்த நாம் இங்கே ஒரு போர் முனையை உருவாக்குவோமானால், அதோ நிற்கிற குறைஷி எதிரிகளுக்குக் கொண்டாட்டமாகிவிடும். நம்மால் சமாளிக்க முடியாது. எனவே, அப்துல்லாஹ் போனாற் போகட்டும்; நமது லட்சியத்தை மறக்கக் கூடாது.”

“நம்மினும் நபியே நன்கறிவார். எனவே, இவரிடும் கட்டளையையே நாம் திரிகரண சுத்தியுடன் ஏற்று நடப்போம்!” என்று யாவரும் ஆர்ப்பரித்தனர். போனவர்கள் போக மீதிப்பேர் அனைவரும் நபி (ஸல்) எதிரே அணி வகுத்து நின்றார்கள். இவர்களுள் எவருமே எந்தப் பெரிய போர்க்களத்திலும் அனுபவம் பெற்ற தேர்ந்த ராணுவ வீரரல்லர். ஆனால், இஸ்லாத்துக்காகவும் திரு நபிக்காகவும் எதையும் தியாகம் செய்ய மனவுறுதி பூண்ட திட உள்ளம் படைத்த தீவிர நோக்கமுள்ளவர்கள். ஓரிரு உதாரணத்தைப் பாருங்கள்.

உணர்ச்சி வசப்பட்ட வாலிப யுவர்கள் இருக்கட்டும். பருவ வயதை எட்டாத ஒரு சிறுவன் படையணியிலிருந்து நீக்கப்பட்டான். அவனுக்கு ஏமாற்றமாகிவிட்டது. “என்ன, நான் கொஞ்சம் குள்ளமாயிருக்கிறேன் என்பதற்காகவா எனது வயதைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்?” என்று கேட்டுக் கொண்டே, உடம்பை நெட்டையாக உயரே நீட்டி, பாத விரல்களின் நுனிமீது எக்கி நின்றான். இவ்வளவு வீராவேசம் மிக்கவனாக இருக்கிறானே என்பதற்காக அவனை மீண்டும் ராணுவத்தில் சேர்த்துக் கொண்டார்கள்.

இன்னொருவன் தோற்றத்தில் நோஞ்சானாகக் காட்சியளித்தான். “எனது புறத் தோற்றத்தைக் கண்டு என்னை எடை போடாதீர்கள். எந்தப் பலாட்டியனையும் மல்யுத்தத்தில் நான் தூக்கி எறிந்துவிடுவேன்!” என்று அவன் மார் தட்டினான். சொன்னபடி செய்து காட்டியும் நிரூபித்தான். அவனும் படையில் இடம் பெற்றான்.

தள்ளாத வயதில் தடுமாற்றமடைந்த தோற்றத்துடன் கூடிய ஒரு முதியவர் முன் வந்தார். திரு நபி (ஸல்) பச்சாத்தாபத்துடன் அக் கிழவரை நோக்கினார்கள்.

“அல்லாஹ்வின் அருநபியே! நானோ புதை குழியை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். வீட்டில் தனித்துக் கிடந்து உயிர் விடுவது ஒரு பாக்கியமா? எனது உயிர் பிரிகிற நேரத்தில் அல்லாஹ்வின் திருத் தூதருக்கு எதிரியாக வந்த கயவர்களுள் ஒரிருவரையாவது வெட்டியெறிந்து உயிர் விட்டேன் என்னும் பெருமைக்கு நான் பாத்திரமாகக் கூடாதா?” – கெஞ்சினார் கிழவர்.

கோழைகளாகிய அப்துல்லாஹ்வின் ஆட்கள் அத்தனை பேரும் விலகி ஓடியபின், எஞ்சி நின்ற 700 பேரும் வைர நெஞ்சம் படைத்த பெருந் தீரர்கள்; பரம பக்தர்கள்; இஸ்லாத்துக்காகவும் அல்லாஹ்வின் தூதருக்காகவும் எல்லாவற்றையும் துறக்கத் துணிந்த தியாகிகள். 3000 முரட்டு வீரர்கள் அடங்கிய எதிரிச் சேனையைச் சந்திக்க இந்தத் தியாகிகளுக்குத் தளபதியாக நபி (ஸல்) முன் சென்றார்கள். உஹத் குன்றைப் பின்னணியில் வைத்து, போர்க்களத்தை அவர்கள் வரையறுத்தார்கள். குன்றோரமாக அவர்கள் நின்று, அதையே தமக்குப் பின் அரணாக அமைத்துக் கொண்டு, படைகளை அணியணியாக வகுத்து, தக்க இடத்தில் நிறுத்தினார்கள். இங்கே ஒரே ஒர் இயற்கைக் குறைபாடு குறுக்கிட்டது. என்னவென்றால், உஹத் குன்றின் உச்சியில் பாறைகளுக்கிடையே ஒரு திறந்த கணவாய் இடைவெளி இருக்கிறது. மலையைச் சுற்றிப் பின்பக்கமாகச் செல்வோர், அப்பக்கச் சரிவினூடே மேல் ஏறி, இப் பாதை வழியே இறங்கி இப்பக்கமாக வந்து விட முடியும். எனவே, அக்கணவாய்ப் பாதையில் தக்க பாதுகாப்பை முதலில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

கைதேர்ந்த வில் வீரர்கள் 50 பேரை நபி (ஸல்) தேர்ந்தெடுத்தார்கள். அவர்களைக் கொண்டு போய் அக்கணவாய்ப் பாதையில் குறுக்கே நிறுத்தினார். அப்துல்லாஹ் இப்னு ஜாபிர் (ரலி) என்பவரை அவ் வில் வீரர்களுக்குத் தளபதியாக நியமித்தார்கள்.

“நீங்கள் மறு உத்தரவு வருகிற வரையில் இந்த இடத்தை விட்டு ஓர் அடியும் அப்பால் இப்பால் நகரவே கூடாது. எதிரே களத்தில் என்ன நிகழ்ந்தாலும் இங்கிருந்தபடி பார்த்துக் கொண்டும் காவலை வலுப்படுத்திக் கொண்டும் கருமமே கண்ணாயிருங்கள். எது வந்தாலும் நீங்கள் இங்கிருந்து இறங்கி ஓடவே கூடாது. இது என் கட்டளை. இக் கணவாயின் முன் பக்கமிருந்தோ பின் பக்கமிருந்தோ எவனேனும் இங்கே ஏற முயன்றால் அம்பு வீசி வீழ்த்துங்கள். உங்கள் தலைவர் இப்னு ஜாபர் இடுகிற கட்டளைப்படி நடந்து கொள்ளுங்கள். இந்தக் கணவாயின் பாதுகாவலிலேயே நம் வெற்றியெல்லாம் அடங்கிக் கிடக்கிறது.” இவ்வாறு நபி (ஸல்) ஆணை பிறப்பித்தார்கள். உஹத் குன்றுக்கு வடபுறம், தென்புறம் ஆகிய இரு பக்கங்களையும் அந்த உயரமான கணவாயில் நின்ற 50 வீரர்களும் கவனமாகக் கவனித்துக் கொண்டார்கள்.

குறைஷிப் படைகள் அரை வட்ட வடிவில் களத்தில் அணி வகுத்து நின்றன. அவ்வீரர்களை ஊக்கி உற்சாகப்படுத்த அனேகம் பெண்மணிகளும் வந்திருந்தார்களில்லவா? அது மட்டுமின்றி, மதீனா வீரர்கள் சற்றுச் செயலிழந்துவிட வேண்டுமென்னும் கருத்துடன் இன்னொரு திட்டமும் உருவாயிற்று.

தொடரும்…

-N.B. அப்துல் ஜப்பார்

Image courtesy: message4muslims.org.uk

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment