திரு நபி (ஸல்) வந்து நழைகிற வரையில் அந்த நகர் யதுரிப் என்றே அழைக்கப்பட்டு வந்தது. மதீனா என்னும் அரபுச் சொல்லுக்கு ‘நகரம்’ அல்லது ‘பட்டணம்’ என்பதுதான் பொருள். ஆனால், என்றைக்கு நபி (ஸல்) அந்தப்

பட்டணத்துக்குள் பிரவேசித்தார்களோ (2-7-622 கி.பி. – ஹிஜ்ரீ 1, ரபீஉல் அவ்வல், பிறை 16) அன்று முதல் யதுரிபிலிருந்த மக்கள் தங்கள் நகரத்துக்கு ‘மதீனத்துன் நபி’ (நபியின் பட்டணம்) என்று சிறப்புப் பெயரிட்டு விட்டார்கள். இதுவே சுருக்கமாக மதீனா என்று இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது; யதுரிப் என்னும் பெயர் மறக்கப்பட்டுவிட்டது.

[முதன் முதலில் ஃபிரெஞ்சுக்காரர்கள் மக்காவை Mecca என்றும், மதீனாவை Medina என்றும் தங்கள் மொழியில் எழுதினார்கள். அறியாமை காரணமாக நம் நாட்டில் வதியும் பலர் இவற்றை முறையே ‘மெக்கா’ என்றும் ‘மெடினா’ என்றும் உச்சரித்து வருகிறார்கள். இது பிழையாகும். நபி (ஸல்) பிறந்த ஊர் மக்கா; அவர்கள் குடியேறிய ஊர் மதீனா. இவற்றை இப்படித்தான் பிழையின்றி உச்சரிக்க வேண்டும்.]

அந்த மதீனா என்னும் யதுரிப் நகரில் யூதர்கள் நிரம்ப வசித்துவந்தார்கள். கிறித்தவர்கள் அதிகம்பேர் வாழ்ந்ததாகத் தெரியவில்லை. அரபிகளுள் அவுஸ் என்னும் வமிசத்தார்களும், கஸ்ரஜ் என்னும் வமிசத்தார்களும் அந்நகரில் இருந்தார்கள். இவ்விரு வம்சங்களுள் கஸ்ரஜ் குலத்தார்களே இச்சமயத்தில் வலிமை மிக்கவர்களாக, செல்வாக்குள்ளவர்களாக, பெருந்தனக்காரர்களாக இருந்து வந்தார்கள். இந்தக் குலத்தின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபை என்பவனாவான். இவன் யூதர்களின் துணையை வைத்துக் கொண்டு மதீனா நகரின் மன்னனாக ஆகிவிடலாம் என்று ஆசைப்பட்டுக் கொண்டு இருந்தான். அந்த நேரத்தில் மக்காவிலிருந்து ஓடி வந்த அகதிகள் இங்குக் குடியேறவும், நாளுக்கு நாள் புதுமத அங்கத்தினர்கள் பெருகவுமாக ஒரு புது சமுதாயமே உருவாகிறதை அவன் கவனித்தான். இந்த அகதிகளின் தலைவராகிய முஹம்மதுவும் இப்போது இந்நகர் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அவன் கேள்விப்பட்டான்.

பிறவியிலேயே கொஞ்சம் கோணல் புத்தி படைத்தவன் அவன்; பொறாமைக்காரனும் கூட. நயவஞ்சகமும் கபட நோக்கமும் உதிரத்தில் ஊறிப் போனவன். தன்னுடைய நகரில் புது மதம் வேரூன்றிவிட்டால் அம்மதத்தின் ஸ்தாபகரிடம் நாடாளும் தலைமைப் பதவி ஒப்படைக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சிய அவன் முற்கூட்டியே யூதர்களையும் மற்றவர்களையும் தன் வசப்படுத்தி வைத்துக் கொண்டிருந்தான். புது மதம் வலுப்பெற்று விடுமானால், தானும் இஸ்லாத்தைத் தழுவிக் கொள்வதென்றும் பிறகு அவர்களையும் தன் பக்கம் வசீகரித்து நாடாளும் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதென்றும் திட்டமிட்டான். ஒரு வேளை இப்புது மதம் இங்கு வேரூன்றாமல் நலிந்துவிட்டால் அதுவும் தனக்குச் சாதகமே என்று அவன் எண்ணியிருந்தான். அல்லது சில மாதங்களில் மக்காவின் குறைஷிகள் இந்த முஸ்லிம்கள் மீது படையெடுத்து வந்தாலும் வரலாம்; அப்பொழுது அந்தக் குறைஷிகளுக்கு உதவி நல்கி, இஸ்லாத்தைத் தீர்த்துக்கட்டி, எல்லாருடைய ஆதரவையும் பெற்று மன்னனாக ஆகிவிடலாம் என்று மனப்பால் குடித்து வந்தான்.

இந்தக் கெடுமதியாளனுக்கும் பல உற்ற நண்பர்கள் இருந்தார்கள். இவர்கள் அத்தனை பேரின் விருப்பமும் என்னவென்றால்; என்றைக்கும் கஸ்ரஜ் வமிசமே ஆளுங் கட்சியாயிருக்க வேண்டும். புதுமதம் பிரமாதமாக வளர்ச்சியுறக் கூடாது. அப்படியே வளர்ச்சியுற்றாலும் முஸ்லிம்கள் ஆளப்படுகிறவர்களாக இருக்க வேண்டுமன்றி, ஆளுகிறவர்களாக ஆகிவிடக் கூடாது. பதவி வகிக்கும் ஆதிக்கம் பறிபோகாமலிருப்பதற்கு எப்படிப்பட்ட யோக்கியக் குறைவான நடை முறையையும் கடைப்பிடிக்கலாம். நயவஞ்சகந்தான் எதையும் சாதிக்கும். – இப்படியெல்லாம் அப்துல்லாஹ்வும் அவனுடைய சகாக்களும் தீர்மானித்திருந்தார்கள்.

அடுத்தபடியாக. அந்த யதுரிப் நகரில் பல வமிசங்களைச் சார்ந்த யூதர்கள் எங்கெங்கும் வசித்து வந்தார்கள். வட்டித் தொழிலில் நிரம்பப் பொருளீட்டிய அவர்கள் வர்த்தகம் ஏதும் செய்தறியார்கள். ஆனால், இறைவனுடைய சாபக்கேடோ என்னவோ, அவர்கள் ஒரு சமுதாயத்தினராக வாழ்ந்ததில்லை. தங்களுக்கிடையே பல கட்சிகளையும் பிளவுகளையும் அவர்கள் வளர்த்துவிட்டு வந்தார்கள். இத்தனைக்கும் அவர்கள் யாவரும் ஒரே வேதமாகிய தவ்ராத்தைத்தான் ஓதி வந்தார்கள். சனிக்கிழமையை ஓய்வு நாளாக அனுஷ்டித்து வந்தார்கள்; எஹோவா என்னும் ஏக இறைவனை வழிபட்டு வந்தார்கள்; மூஸா நபியின் ஹாரூன் நபியின் சந்ததியார்கள் என்று பெருமை பாராட்டி வந்தார்கள். நாடாள வேண்டும் என்னும் ஆசையோ, மன்னர்களாக வேண்டுமென்னும் நோக்கமோ அவர்களுக்கு இல்லை. ஆனால், விஷமத்தனத்தில் அவர்கள் ஊறிப்போனவர்கள்.

அவர்களுள் ஒரு சாரார் அவுஸ் வமிசத்தினருக்கு பொருளுதவி வழங்கி அவர்களே நாட்டின் அதிபர்களாக உயர வேண்டும் என்று முடுக்கி விடுவார்கள், அனைத்து சகாயங்களும் செய்வார்கள். அதே சமயத்தில் மற்றொரு சாரார் கஸ்ரஜ் வமிசத்தினருடைய கரங்களை வலுப்படுத்தி எல்லா உதவிகளும் வழங்கி, சிண்டு முடிந்து விடுவார்கள். அடிக்கடி இப்படி போர் மூளூம். எதிர்க்கட்சி யூதர்களே கைதியாகிவிடுவார்கள். அப்போதுதான் எல்லா யூதர்களும் கண் விழிப்பார்கள். நம்முடைய மதத்தை சேர்ந்த தோழன் கைதாகி விட்டானே என்று கவலைப்படுவார்கள். நஷ்டஈட்டுப் பரிகாரம் கொடுத்து அவனை மீட்பார்கள். இதற்காக எல்லா யூதரும் சகாய நிதி வசூலித்துப் பணம் திரட்டுவார்கள்.

இப்படியான விபரீத முரண்பாட்டுக் குணம் படைத்த இவர்களை நல்வழிப்படுத்த இப்போது ஒரு நபி வந்தால்தான் முடியும் என அம்மதக் குருமார்கள் வருந்தினார்கள். அவர்கள் தங்கள் வேதாகமங்களின் ஏடுகளை புரட்டிப் பார்த்தார்கள். முன்னறிவிப்பும் தீர்க்கதரிசனங்களும் இந்தச் சந்தர்ப்பத்தில்தான் புது நபி அவதரிப்பார் என்று குறிப்பிட்டிருப்பதைக் கவனித்தார்கள். எனவே அந்நபி சீக்கிரமே இங்கு வந்து சீரழிந்து கிடக்கும் யூத குலத்தைச் செப்பனிட்டுச் சீர்திருத்திக் கொடுக்கமாட்டாரா? இவரொரு தாவீதாக (தாவூதாக) அல்லது சாலமோனாக (சுலைமானாக) இலங்கமாட்டாரா என்று ஏங்கிக் கிடந்தார்கள்.

புது மதம் தழுவியிருந்த நவீன முஸ்லிம் தோழர்களோ என்றால் அவர்கள் அவுஸ் வமிசத்தில் வந்தவர்களாயிருந்தாலும் கஸ்ரஜ் வமிசத்தில் வந்தவர்களாகயிருந்தாலும் தங்களுடைய அனைத்து வேற்றுமை உணர்ச்சியையும் மறந்து ஏக சகோதரர்களாக ஐக்கியமானார்கள். அவ்வளவுடன் நில்லாமல், மக்காவிலிருந்து அகதிகளாக ஓடி வந்து இங்கே குடியேறிய முன்பின் அறியாக் குறைஷி வம்ச முஸ்லிம்களையும் தங்கள் உடன் பிறப்பாக ஏற்றுக்கொண்டார்கள். வந்தவர்களுக்கு வீடு கட்டித் தந்தார்கள்; பொருளுதவி வழங்கினார்கள்; தொழில் நடத்தத் தெரிந்தவர்களைக் கூட்டுச் சேர்த்துக்கொண்டார்கள்; விவசாயிகளுக்கு விவசாய நிலங்கள தந்து உதவினார்கள்; வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டுப் பண்ணிக் கொடுத்தார்கள்.

மக்காவிலிருந்து வந்த பேர்வழி எவராவது தம்முடைய மனைவி புது மதத்தை ஏற்கவில்லை என்னும் காரணத்தால் அவளை விட்டு விட்டு தனியாக ஓடி வந்திருப்பதை மதினா முஸ்லிம் கவனித்துவிட்டால், இவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியுமிருந்தால் ஒருத்தியை மட்டும் நிறுத்திக்கொண்டு மற்றவளுக்கு விவாக விலக்கு (Divorce) அளித்து அவளையே மக்கா முஸ்லிமுக்கு மனைவியாகவும் மணமுடித்து வைத்ததுண்டு. உணவு, உடை, இல்லறம், தொழில் ஆகிய சகலவற்றையுமே இந்த மதினாவாசிகள் மக்காவாசிகளான அகதிகளுடன் சமமாக பகிர்ந்துக்கொண்டனர். புதிய சோஷலிச சமுதாயத்தை உண்டுபண்ணினார்கள்; அன்ஸார்கள் (உதவியாளர்கள்) என்னும் அழியாப் பட்டப்பெயரைச் சம்பாதித்துக் கொண்டார்கள். இஸ்லாமத பக்தியிலோ இந்த அன்ஸார்கள் இணையிலா நிபுணர்களாக இலங்கினார்கள். பிறந்த ஊராம் மக்காவிலிருந்த உறவினர்களெல்லாம் ‘உடன் பிறந்தே கொல்லும் வியாதி’யாக இலங்கியிருக்க, அந்நோய் தீர்க்கும் மருந்தாக—நெடுந்தூரக் குன்றின்மீது வளர்ந்த மூலிகையாக மதினாவாசிகள் விளங்கினார்கள் என்பது மறக்க முடியாத ஒன்றாகும்.

மக்காவிலிருந்து அகதிகளாக மதீனாவில் வந்து குடியேறியவர்கள் முஹாஜிர்கள் (Muhajirs) என்று அழைக்கப்பட்டார்கள். அதாவது ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்து வெளியேறி வந்தவர்கள் என்பது இதன் நேர் பொருளாம்). இந்த மாதிரி வந்து குடியேறிய மக்காவாசிகளோ தங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு பாதுகாப்புத் தலம், உதவியாளர் நிறைந்த அமைதியும் சாந்தியும் ஒருங்கமைந்த புண்ணிய பூமி கிடைத்ததே என்னும் மகிழ்ச்சியில் இறைவனுக்கு நன்றி நவின்றார்கள். அன்ஸார்களுடன் கூடப் பிறந்த சகோதரர்களினும் அதிக பாச உணர்ச்சியைப் பெற்றார்கள். தாம் தாமும் கற்றிருந்த தொழில் முறை, வர்த்தக யுக்தி முதலியவற்றைச் செலுத்தி பொருளாதார சுபிட்சத்தை உண்டுப் பண்ணித் தந்தார்கள். உழைப்பின் மூலம் அரும்பாடுபட்டுப் பேரீச்சந் தோட்டங்களையும் நிரம்பவும் பலன் நல்கத்தக்கனவாக ஆக்கி, தனிநபர் வருமானம் அதிகரிக்க வழிவகுத்துத் தந்தார்கள். சுருங்கக் கூறின், இந்நகருக்குள் என்றைக்கு இஸ்லாம் நுழைந்ததோ அன்று முதலே அதன் வளமும் பொருளாதார முன்னேற்றமும் ஊக்கமும் உற்சாகமும் மிக்க சமுதாயமும் மெச்சத்தக்க அளவுக்கு உயர்ந்துவிட்டன.

இப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்த அந்நகரத்தார்களுக்குத் திரு நபி எப்போது இங்கே வந்து சேரப் போகிறாரோ என்னும் ஏக்கமும் ஆவலும் மிகுந்திருந்தன. இறைவனின் கட்டளையை எதிர்பார்த்து நபியவர்கள் இன்னமும் மக்காவில் காத்திருக்கிறார்கள் என்று, கடைசியாக இங்கு வந்த முஹாஜிர்கள் தெரிவித்தார்கள். செய்திப் போக்குவரத்தோ தபால் முதலிய எந்த வசதியோ இல்லாத அக்காலத்தில் யதுரிப் வாசிகள் தினம் தெற்குத் திக்கில் கண்ணோட்டியவாறு பொறுத்திருந்தார்கள். குதிரை, மற்றும் விரைந்து செல்லும் கோவேறு கழுதைகள் முதலிய வாகனங்களில் தெற்கிலிருந்து வந்த வழிப்போக்கர்களும் பிரயாணிகளும் வரும்போதெல்லாம் யதுரிப்வாசிகள் ஆவலுடன் அவர்களிடம் நெருங்கி வருகிற வழியில் இன்ன அடையாளமுள்ள பேர்வழியைக் கண்டது உண்டா என்று ஆவலுடன் கேட்பார்கள். தனியே மக்காவில் விடப்பட்டு வந்த நபியவர்களுக்கு எந்த ஆபத்தும் நேராமலிருக்க வேன்டுமே என்று யாவரும் தீவிரமாகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். கடுங்கோடை வெயில் சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்த காரணத்தால் எவரும் முன்னோக்கிச் சென்று ரஸ்தாவில் பார்வையிட்டுவிட்டு வரவும் முடியவில்லை.

இவ்வாறு நாட்கள் நகர்ந்து கொண்டேயிருக்கையில், குதிரைமீது சவாரி செய்து வந்த ஒரு பிரயாணி யதுரிப்வாசிகளிடம் சில தகவல்களை அறிவித்தார். “இந்நகர் நோக்கி இரன்டு ஒட்டகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் மீது மூன்று பேர் அமர்ந்து வருகிறார்கள். அவர்களைத் துரத்திக்கொண்டு ஒரு வில் வீரன் பின்னாலேயே ஓடிவந்தான். ஆனால், குதிரை நொடித்து விழுந்து செத்துவிட்டது. வீரன் திரும்பிச் சென்றுவிட்டான். ஒட்டகத்தின் மீது இருக்கும் மூவரும் பத்திரமாக இந்தத் திக்கு நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்” என்னும் செய்தி கிடைத்தது.

தங்கள் நகரை நோக்கி நபியவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்னும் இம்மகிழ்ச்சிக்குரிய தகவலறிந்ததும் முஹாஜிர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள்—நெடுநாள் பிரிந்திருந்த குருநாதரை மீண்டும் சந்திக்கப் போகிறோமே என்று. அன்ஸார்களோ, வேறெந்த ஊரும் அடையாத பாக்கியத்தை நம்மூர் அடையப் போகிறதே என்று மகிழ்ச்சிப் பெருக்கால் துள்ளிக் குதித்தார்கள். யூதர்குல குருமார்களோ முற்கால மூஸா நபியை நிகர்த்த மற்றொரு பெரு நபி வந்து தங்கள் இனத்தைக் கைதூக்கிவிடப் போகிறாரே என்ற ஆவல் மிகுதியுடன் வழி பார்த்து நின்றார்கள். கபட உள்ளங்கொண்ட நயவஞ்சக சிகாமணிகளோ குழம்பிய சிந்தையுடன் தவித்துத் தடுமாறினார்கள்.

ஜூன் மாதம் 27- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடுப்பகல் உச்சி வெயில் பொசுக்குகிற வேளையில் யதுரிப் நகருக்குத் தெற்கே 3 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள குபா (Quba) என்னும் பசுமையான வளப்பமும் வனப்பும் மிக்க ஒரு கிராமத்தை அந்த ஒட்டகங்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. அங்கே இருந்த உயரமான மாடத்தில் அப்போது ஒரு யூதர் அமர்ந்திருந்தார். அவர் எழுந்து நின்று, எதிர்நோக்கி வரும் அம்மூன்று பிரயாணிகளையும் நோட்டமிட்டார். “இதோ வந்து விட்டார் அந்த நபி!” என்று அவர் ஆர்ப்பரித்தார்.1 அவருடன் எல்லாக் கிராமவாசிகளும் சேர்ந்து எதிர் கொண்டு சென்று முகமன் கூறி நல்வரவேற்றார்கள்.

நெடுந்தூரப் பிரயாணத்தாலும் கடும் வெயில் உஷ்ணத்தாலும் களைப்பு மேலிட்டிருந்த அண்ணலும் அபூபக்ரும் ஆமிரும் அங்கே இறங்கிவிட்டார்கள். அங்கிருந்த ஏழைக் குடியானவர்கள் எந்த அளவுக்கு இவர்களுக்கு நல்லுபசாரம் நல்கி, விருந்துணவு பரிமாறி உபசரித்தார்களென்றால், அக் கிராமத்திலேயே அடுத்த நான்கு நாட்களும் (திங்கள், செவ்வாய், புதன், வியாழன்) நபியவர்களும் தோழரும் தங்கி விட்டார்கள். யதுரிப் நகரில் வழி பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம். வந்த நபி வழியில் ஒரு குக்கிராமத்தில் ஏனோ தங்கி விட்டார் என்று ஒன்றும் புரியாமல் சிலர் தடுமாறினார்கள். நபி (ஸல்) செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் ஏதோ ஒரு உள்ளர்த்தம் இருக்கத்தான் செய்யும் என்று நம்பிக்கை கொண்டிருந்தவர்களோ பேசாமல் பொறுமையாயிருந்தார்கள்.

“மக்காவில் அக்கொலைகாரர்களின் என் பெரியப்பர் மைந்தர் அலீயை விட்டு வந்தேனே! ஆண்டவன் அவரைக் காப்பாற்றிவிட்டான் என்பதை நான் அறிந்துள்ளேன். அவரை எல்லாப் போக்கிரிகளும் பலவிதமாக துன்புறுத்தித் துரத்தியடித்து விட்டார்கள். அவர் இப்பக்கமாக வந்துக் கொண்டிருக்கிறார். அவரையும் நம்முடன் சேர்த்துக்கொண்டுதான் நாம் யதுரிப் நகருக்குள் பிரவேசிக்க வேண்டும். நாம் மட்டும் தனியாக அவரை விட்டுச்செல்வது கூடாது,” என்று நபி (ஸல்) தம் தோழர்களிடம் தெரிவித்தார்கள். இந்த ரகசியம் யதுரிபிலிருந்தவர்களுக்கு எப்படி தெரியும்?

1-7-622 வியாழன் மாலை இருள் கவிகிற நேரத்தில் அலீ இப்னு அபீத்தாலிப் (ரலி) நல்லவிதமாகக் குபாவினருகில் வந்து சேர்ந்தார். அபூபக்ரும் (ரலி) ஆமிரும் (ரலி) அவரை நல்வரவேற்று, நபியிடம் அழைத்து வந்தனர். இருவரும் கட்டியணைத்து கலக்கம் தெளிந்தார்கள். ”பிரிந்தவர் கூடினால், பேசவும் வேண்டுமோ?”

அன்றிரவு அந்நான்கு பேரும் அங்கேயே தங்கியிருந்தார்கள். அன்று பெளர்ணமி நிலவு பகல் போல் எறித்துக்கொண்டிருந்தது. அந்நிலா வெளிச்சத்தில்2 அமர்ந்து ஒருவரை விட்டொருவர் பிரிந்தபின் நிகழ்ந்த சகல அனுபவங்களையும் பேசிப் பறிமாறிக்கொண்டார்கள். பொழுது புலரும் நேரம் வந்தது. நபியவர்களை மட்டும் ஒட்டகத்தின் மீது ஏற்றியமர்த்தி, மற்ற மூவரும் கால்நடையாக யதுரிப் நோக்கி புறப்பட்டார்கள்.

காத்துக் காத்துப் பூத்துபோயிருந்த கண்களுக்கோர் விருந்தாகவும் தகர்ந்து போய்க்கிடந்த தர்ம நெறி தழைத்தோங்கவும் எதிர்கால உலகம் சகல துறைகளிலும் முன்னேற்றம் பெறவும் தரணியின் தவப்புதல்வராம், மக்காவின் குலமகனாம், மதீனாவின் மணி விளக்காம் மாநபி இறைவனின் இறுதித் தூதர் (ஸல்) நகருக்குள் பிரவேசித்தார்கள். அது வெள்ளிக்கிழமை வைகறை நேரம். வானுலகோர் வாழ்த்த யதுரிப் வாசிகள் துள்ளி மகிழ, வரவேற்பு விழா கட்டவிழ்த்துக்கொண்டது. விவரிக்க முடியாத அத்துணை விசித்திரமான நல்வரவேற்பு அந் நபிக்கு அன்று அங்கு வழங்கப்பட்டது என்று சுருக்கமாக சொல்லி முடிப்போம். இப்படிப்பட்ட ஒரு பட்டினப்பிரவேசம் எப்போதும் எங்கும் நடந்திருக்கமுடியாது என்று அக்கால வரலாற்றாசிரியர்கள் அன்றைய நிகழ்ச்சியை வருணித்தெழுதி யிருக்கிறார்கள்.

யதுரிப், நபி புகுந்த நன்நகராக ஆயிற்று. அன்றே யாவரும் தங்கள் நகரின் பெயரை, முன்பு நாம் அறிவித்தவாறு, மதீனத்துன் நபி என்று மாற்றிவிட்டார்கள்.

தொடரும்…

-N.B. அப்துல் ஜப்பார்

 


  1. முன்பு மக்காவில் நபி (ஸல்) இருந்தபோது இறைவன் வழங்கியிருந்த குர் ஆன் வசனம் ஒன்றில் (6:20), “வேதம் வழங்கப்பட்டவர்கள் இவரைக் காணும் மாத்திரத்தில் தங்கள் சொந்தப் பிள்ளைகளை அடையாளம் காண்பதைப்போல் அடையாளம் தெரிந்துக் கொள்வார்கள்”, என்று தீர்க்கதரிசனம் வழங்கப்பட்டுள்ளது. அதை இந்நிகழ்ச்சி மெய்ப்பித்துக் காட்டிற்று.
  2. அது ரபீஉல் அவ்வல் பிறை 12 (பெளர்ணமி) என்பாரும், பெளர்ணமி கழித்த மூன்றாம் நாள் (பிறை 16) என்பாரும் உளர். எப்படியிருப்பினும், அது நிலா வெளிச்சம் நிரம்பிய இரவு. 

 


 

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment