முஹம்மது (ஸல்) மட்டுமின்றி, அபூபக்ரு, உதுமான், அலீ, ஸுபைர், அப்துர் ரஹ்மான், ஸஅத், தல்ஹா (ரலியல்லாஹு அன்ஹும்) என்னும் அவருடைய தோழர்களும் கூட இஸ்லாத்தைப் பிரசாரம் செய்யவும் புதுக் கட்சிக்கு ஆள் சேர்க்கவும் தீவிரமாகப் பாடுபட்டு வருகிறார்கள்

என்பதைக் கண்ட குறைஷித் தலைவர்கள் பெருந்திகில் கொண்டு விட்டார்கள்; காட்டுத் தீயைப் போல இந்தப் புது இயக்கம் பரவித் தங்கள் தொன்மையான சமூக அமைப்பைக் கருக்கிவிடும் போலிருக்கிறதே என்று வேதனைப்பட்டார்கள். ஆனால், அது சமயத்தில் சில பிரபலமான குறைஷிகளே இஸ்லாத்தை ஏற்றார்கள்; முஹம்மதை நபி என்று நம்பிவிட்டார்கள். இவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஹம்ஸா என்னும் நபியின் சிற்றப்பராவார். இவரொரு வில்வீரர்; பல தீரச் செயல்கள் புரிந்த பெருந்தீரர். இஸ்லாத்தை ஏற்காமலே முஹம்மதை (ஸல்) இவர் மிகவும் நேசித்துப் பாராட்டி வந்தார்.

ஒரு முறை இவர் வேட்டையாட வெளியூர் வனாந்தரங்களுக்குச் சென்று இருந்தபோது, கொடிய விரோதி அபூஜஹ்லு நபியவர்களைப் பலவிதங்களிலும் கொடுமைப்படுத்தி, அவரடையும் வேதனைகளை ரசித்துக் கொண்டிருந்தான். பச்சாத்தாபத்துடன் இக் கொடுமைகளைப் பார்த்துக்கொண்டிருந்த ஹம்ஸாவின் பணிப்பெண், அவர் வேட்டையிலிருந்து திரும்பி வந்தததும் எல்லாவற்றையும் விவரித்தாள். தம் அண்ணன் மகன் இவ்வாறெல்லாம் தீங்கிழைக்கப்பட்டதைக் கேட்டு மனம் நெகிழ்ந்து போன ஹம்ஸா அபூஜஹ்லின் மீது கடும் ஆத்திரத்துடன் அவனைத் தேடிப் புறப்பட்டார். அவன் அப்போது தன் சகாக்களுடன் கூடி, கஅபாவில் அமர்ந்து இஸ்லாத்தை ஒழித்துக் கட்டுவது எப்படி என்று திட்டம் தீட்டிக் கொண்டிருந்தான். ஹம்ஸா அங்கு ஆவேசத்துடன் வந்து அபூஜஹ்லின் மண்டைமீது தமது வில்லினால் மோதி, “என்ன துணிச்சலிருந்தால் நீ இப்படியெல்லாம் அக்கிரமம் செய்வாய்? நாங்கள் யாவரும் உனது போக்கிரித் தனத்துக்குக் கால்கொடுப்போம் என்கிற இறுமாப்புத்தானே உன்னை இப்படி நடக்கத் தூண்டுகிறது? – இதோ பார், இந்த நிமிஷத்தில் நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விட்டேன்! இறைவன் ஒருவனே, முஹம்மதே அவனுடைய திருத்தூதர் என்று நான் சாட்சி பகர்கிறேன். நீயும் உன்னுடைய நட்டுவைக்கப்பட்ட 360 சாமிகளும் நாசமாய்ப் போக!” என்று அரற்றினார். மறுகணமே நபியிடம் வந்து, “நீர் அஞ்சற்க! இதோ நான் உமது சார்பில் எனது உயிருள்ளவரை போராடுவேன்!” என்று ஆர்ப்பரித்தார் ஹம்ஸா (ரலி).

திரு நபியின் கோத்திரத்தார் ‘பனூ ஹாஷிம்’ என்று அழைக்கப்படுவர். மக்காவில் இக் கோத்திரமே மிகவும் கீர்த்தி வயா்ந்த, பெருமைக்குரிய, பெருங் கண்ணியமான வமிசம் என்று யாவராலும் ஏகமனதாகப் பாராட்டப்பட்டு வந்தது. அந்த வம்சத்தின் பெரியாராகிய அபூத்தாலிபின் மைந்தர் அலீ (ரலி) ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்று விட்டாரே என்று வயிறெரிந்து கிடந்த அபூஜஹ்லும் அவனுடைய சகாக்களும் இப்போது அந்த அபூத்தாலிபின் ஒரு தம்பியாகிய ஹம்ஸாவே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாகப் பிரகடனப்படுத்திய ஆவேசத்தைக் கண்டு மனமிடிந்து போனார்கள். மிகவும் முன்னணியில் நின்ற பனூ ஹாஷிம் குடும்பம் முழுதும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விட்டால், பிறகு தங்கள் பழைய மதக் கோட்பாடு கஅபாவை விட்டு வெளியேற்றப்பட்டு, குப்பை மேட்டில் தூக்கி எறியப்பட்டு விடுமே என்று அவர்கள் அச்சமுற்று விட்டார்கள். ஆனால், அவர்களுடைய அதிருஷ்டம் முஹம்மதின் (ஸல்) மூத்த பெரிய தந்தையாகிய அபூலஹப் என்பவன் தங்கள் கட்சியிலிருக்கிறானென்னும் தைரியமும் அந்த அபூலஹபின் தம்பியாகிய அபூத்தாலிப் இன்னும் இஸ்லாத்தில் சேரவில்லையே என்னும் தெம்பும் கொஞ்சம் நம்பிக்கையூட்டின. எனவே, இனி அபூத்தாலிபின் தயவை நாடி, அவர் வளர்த்த முஹம்மது (ஸல்) உற்பத்தி செய்துவிட்ட புதுக்கோட்பாட்டை அவருடைய துணையைக் கொண்டே தொலைத்துக் கட்டவேண்டும் என்று அவர்கள் முடிவு கட்டினார்கள்.

முதலில் சில பிரதிநிதிகள் அபூத்தாலிபிடம் தூது சென்றார்கள். அவர் அதற்குச் சற்றுமுன் கண்டு வந்த காட்சியை நினைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார். இப்போது இங்கு வந்தவர்கள் என்ன நாட்டத்துடன் வந்திருக்கிறார்கள் என்பதை அவர் யூகித்துக் கொண்டார்.

“நான் சற்று முன்புதான் ஒரு காட்சியைப் பார்த்தேன். நகரின் எல்லையில் ஒரு தனியான இடத்தில் என் தம்பி மகன் முஹம்மதும், அவர் மனைவி கதீஜாவும், என் மகன் அலீயும் புதுமையான முறையில் ஏதோ பிரார்த்தனை புரிந்து கொண்டிருந்ததைக் கண்டு வியப்புற்றேன். அப்போது முஹம்மதிடம், ‘என் தம்பி மைந்தரே! நீர் பின்பற்றுகிற இந்த மதக் கோட்பாடு என்னவோ?’ என்று வினவினேன். இதற்கவர், ‘ஒன்றும் இது புதிதில்லை. இதுதான் இறைவனுடைய, வானவர்களுடைய, அவன் முற்காலங்களில் அனுப்பி வைத்த சகல நபிமார்களுடைய, குறிப்பாக நம் பிதாமகர் இப்ராஹீமுடைய பழைய மதக் கோட்பாடு. அந்தப் பழைமையை எடுத்து நான் மக்களிடம் போதிக்க வேண்டும் என்பதற்காகவே அவன் என்னை ஒரு நபியாக இப்போது தேர்ந்தெடுத்துள்ளான்,’ என்று தெரிவித்தார்.

“அப்போது நான், ‘என் தம்பி மகனே! என் தந்தையும் முன்னோர்களும் பின்பற்றி வரும் பழைய மதக் கோட்பாட்டை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன் என்பது எவ்வளவு உறுதியோ அவ்வளவு உறுதியுடன் சொல்கிறேன். நான் எதுவரை உயிருடன் இருப்பேனோ அதுவரை உம்மை எந்தப் பயலும் உபத்திரவப்படுத்தாமல் கண்காணித்து வருவேன்,’ என்று உறுதியளித்து விட்டு வந்திருக்கிறேன்,’ என்று சொன்னார். இவரிடம் கோள்மூட்டி இவரைத் தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக்கொள்ளலாம் என்று எண்ணி வந்த இந்தக் கோஷ்டியினர் பேசாமல் திரும்பி விட்டார்கள்.

இனியும் இவ் விஷயங்களில் வாலாட்ட வேண்டாம் என்று அவரைக் கண்டித்து வையுங்கள், அல்லது அவருடன் நீங்களும் சேர்ந்துகொண்டு எங்களுக்கு எதிரியாகி விடுங்கள்.

ஆனால், பின்னொரு சமயத்தில் அபூஜஹ்லும் மற்றும் சில முக்கிய பிரமுகர்களும் அபூத்தாலிபிடம் வந்து, “உங்கள் வயதுக்கும் குலப் பெருமைக்கும் நாங்கள் மிகவும் மரியாதை காண்பித்தே வருகிறோம். என்றாலும், எதற்குமே ஓர் எல்லையுண்டு. நம்முடைய பண்டைத் தேவ தேவதைகளை உங்கள் தம்பி மைந்தர் வரம்பு மீறி ஏசிப் பரிகசிப்பதை இனியும் நாங்கள் தொடர்ந்து பொறுமையுடன் சகித்துக் கொண்டிருக்க முடியாது. அல்லது அவர் நம் முன்னோர்களைத் திட்டிக் குவிப்பதை நாங்கள் நீடிக்க விடமாட்டோம். எனவே, இனியும் இவ் விஷயங்களில் வாலாட்ட வேண்டாம் என்று அவரைக் கண்டித்து வையுங்கள், அல்லது அவருடன் நீங்களும் சேர்ந்துகொண்டு எங்களுக்கு எதிரியாகி விடுங்கள். அப்போது நாம் போர்க்களத்தில் சந்தித்து, இரு கட்சியினருள் ஒருவர் அடியோடு ஒழிந்து தீர்கிறவரை யுத்தம் நிகழ்த்துவோம். இப்போது இரண்டுங்கெட்டான் நிலையில் எங்களை விட்டுவைத்து வேதனைப்படுத்த வேண்டாம்,” என்று ஆத்திரத்துடன் சொல்லிச் சென்றார்கள். அபூத்தாலிபுக்கோ தம் சமுதாயத்தினரை விட்டுப் பிரியவும் மனமில்லை, அல்லது அந்தப் படிமத் தொழும்பர்களின் பொருட்டாகத் தம்பி மைந்தரைக் கைவிடவும் விருப்பமில்லை.

சற்றே யோசித்துவிட்டு அவர் முஹம்மது (ஸல்) அவர்களைத் தமது இல்லத்துக்கு வந்த போகுமாறு ஆள்விட்டனுப்பினார்: நபியவர்கள் இங்கு வந்ததும், குறைஷிகள் தம்மிடம் இறுதி எச்சரிக்கை விட்டுச் சென்ற விவரத்தை எடுத்துச் சொன்னார். ஊருடன் பகைக்கின் வேருடன் கெடுமே என்று உபதேசித்து, “உமது புதுமதக் கோட்பாட்டுச் சித்தாந்த போதனையை இத்துடன் நிறுத்திக் கொள்வதே உத்தமம்,” என்று புத்திமதி வழங்கினார்.

அபூத்தாலிப் இனியும் தொடர்ந்து தமக்குப் பாதுகாப்பளிக்க முடியாது என்பதைக் குறிப்பாக உணர்த்துகிறார் போலும் என்று நபியவர்கள் யூகித்துக்கொண்டார்களெனினும் தமது தீர்மானமான முடிவைக் கொஞ்சமும் தளர்த்திக் கொள்ளாமல், “பெரியப்பா! அவர்கள் வானத்திலிருந்து சூரியனையும் சந்திரனையும் பறித்து வந்து எனது வலக்கரத்திலும் இடக்கரத்திலும் வைத்து எனது பணியைக் கைவிடுமாறு சொன்னாலும் சரியே! ஒன்று, இறைவனின் நாட்டம் நிறைவேறி அது பளிச்சென்று காட்சியளிக்கிறவரை அல்லது அதற்கென்று பாடுபடும் நான் மாண்டு மடிகிறவரை ஒரு போதும் கைகட்டி ஒதுங்கி நின்றுவிட மாட்டேன். இது உறுதி!” என்று உரைத்தார்கள். இதுவரை தம்மை ஆதரித்து வந்த தம் பெரிய தந்தை இனிமேல் தம்மைக் கைவிட்டு விடத்தான் போகிறார் என்னும் துயருடன் அவர்கள் எழுந்து புறப்பட்டு விட்டார்கள்.

வாயிற்படிவரை சென்றுவிட்ட அவர்களை அபூத்தாலிப், “என் தம்பி மைந்தரே! திரும்பி வருக!” என்று உரத்த குரலில் அழைத்தார். அப்படியே அவரும் திரும்பி வந்தார்கள். “உமது விருப்பம்போல் எதையும் பிரசாரம் செய்து கொள்ளலாம். எது வந்தாலும் சரி. எல்லாம் வல்ல இறைவன்மீது ஆணையாகச் சொல்கிறேன்; உம்மை ஒருபோதும் நான் கைவிட்டுவிட மாட்டேன்; காட்டிக் கொடுக்க மாட்டேன்,” என்று தெம்பூட்டினார்.

இம் முறையும் ஏமாந்த குறைஷிகள் நயிச்சியமாக அபூத்தாலிபிடமிருந்து அவருடைய தம்பி மைந்தரைப் பிரித்துக் கவர்ந்திழுத்துச் சென்றுவிடத் திட்டமிட்டார்கள். அவர்கள் அம் முதியவரிடம் சென்று, “நீங்களோ எங்கள் கட்சி. நம் முன்னோர் வழிபட்ட மார்க்கத்தை நீங்கள் கைவிட மாட்டீர்கள். ஆனால், உங்கள் தம்பி மகனோ உள்ளங் காலில் குத்திய முள்போல் உங்களை உறுத்திக்கொண்டே இருக்கிறார். அந்த முஹம்மதுக்கு இணையாக நாங்கள் ஒரு வனப்பு மிக்க வாலிபரை மக்ஸூம் என்னும் உயர் குலத்தினரிடமிருந்து கொணர்ந்து உங்களிடம் விடுகிறோம். அந்த வாலிபரை நீங்கள் எடுத்துக்கொண்டு முஹம்மதை எங்களிடம் ஒப்படையுங்கள்,” என்று கோரினார்கள். இந்தப் பரிவர்த்தனை யோசனையை அபூத்தாலிப் ஏற்க மறுத்தார்.

குறைஷிகள் இப்போது அதிகமும் ஏமாந்து போனார்கள். அவர் புது மதத்தையும் ஏற்காமல், பழைய மதத்தை ஏசித் திரிகிற முஹம்மதுக்கு எப்படியும் பாதுகாப்பு நல்குவது என்று இரட்டை வேடமிட்டுப் போக்குக் காண்பிக்கிறார் என்று அவர்கள் யூகித்து, முன்னினும் கடிய முறைகளில் தங்கள் பலாத்தார மூர்க்கத்தனத்தில் இறங்க ஆரம்பித்தார்கள். அபூத்தாலிப் உடனே பனூ ஹாஷிம், பனீ முத்தலிபு என்னும் கோத்திரத்தாரை ஒன்று கூட்டி, அவர்களின் பெருமையை நினைவூட்டி, அக் கோத்திரத்தார் யாவரும் ஒன்றாய் இணைந்து, தங்களிடைத் தோன்றியிருக்கும் மாந்தர் குல மாணிக்கமாம் முஹம்மது (ஸல்) அவர்களை எதிர்த் தரப்புக் குலகோத்திரத்தார்கள் கொன்று தீர்த்து விடாதபடி பாதுகாக்க வேண்டியது மகத்தான கடனாம் என்று அறிக்கை விட்டார்.

இஸ்லாத்தை ஏற்றிருந்த அல்லது இன்னம் ஏற்காமலே பழைமையில் ஊறிக் கிடந்த அத்தனை ஹாஷிம் குலத்தார்களும் தங்கள் தலைவராம் அபூத்தாலிப் பிறப்பித்த கட்டளைப்படி முன்வந்து, முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பாதுகாப்பு நல்குவதாக வாக்குறுதி தந்து விட்டார்கள். ஆனால், அபூத்தாலிபின் அண்ணனாகிய, மாறு கண் படைத்த குரூர மிக்க பார்வையுடையவனாகிய அபூலஹப் என்னும் ஒருவன் மட்டுமே எதிர்க் கட்சியில் சேர்ந்து கொண்டான்.

சுவர்மீது வீசி எறியப்படும் பந்து அதே வேகத்தில் திரும்பி வந்து தாக்குவதுபோல், குறைஷிகள் எத்துணைக் கெத்துணை விஷமத்தனமான போக்கிரி வேலைகளைச் செய்தார்களோ அத்துணைக் கத்துணை விரைவாக அவ்வப்போதும் இறையறிவிப்பும் எச்சரிக்கைகளும் பொருந்திய குர்ஆன் திருவசனங்கள் வெளியாகி வந்தன. அவ்வாறு வெளிவரும் வசனங்கள் அந்த எதிரிகளிடையே ஒப்பித்துக் காண்பிக்கப்படவே, அவர்கள் இரட்டைத் துறையில் தோல்வி பெற்று வந்தார்கள். ஒன்று, அவர்கள் கள்ளத்தனமாக இடும் திட்டங்களைக் குர்ஆன் திருவாக்கியங்கள் அம்பலப்படுத்தி விடுகின்றனவே என்னும் ஏமாற்றம்; மற்றொன்று, அந்த வசனங்கள் புதுப் புது அங்கத்தினர்களை இஸ்லாத்தை ஏற்குமாறு தூண்டி விடுகின்றனவே என்னும் வயிற்றெரிச்சல். (திரு நபி மக்காவில் வாழ்ந்த காலத்தில் இறைவனிடமிருந்து பெற்ற அறிவிப்புகள் குர்ஆனில் இனிமை நயம் சொட்ட, வெகு நேர்த்தியான வருணனைகளுடன், படிப்போருள்ளத்தைப் பரவசப்படுத்துவதையும் ஏக இறைவன் சகல வல்லமை பொருந்தியவன் என்று திட்டவட்டமாக உறுதிப்படுத்தியிருப்பதையும் இன்றும் காணலாம்; என்றும் காணலாம்.)

எனவே, “இவைனிடமிருந்து அறிவிப்பு வருவதாகப் பொய் புகன்று, முஹம்மது தாமாகவே கற்பனையாகக் கவிதைகளை யாத்து, மக்களை மயக்கி வருகிறார்,” என்று குறைஷிகள் பொய்ச் சமாதானம் சொல்லி வந்தாலும், குர்ஆனின் நற்போதனைகளும் நேர்வழி காட்டும் மார்க்கங்களும் எப்படியோ தங்களைக் கவர்ந்து வசீகரித்து விடுகின்றன என்பதை உணர்ந்தார்கள். இவரை இப்படியே விட்டால், இனியும் தினமும் புதுப் புதுத் திருவசனங்களை வெளியிட்டு எல்லாரையும் வசியம் செய்து விடுவாரென்று திகில் கொண்ட அபூஜஹ்லு அவரைக் கொன்று தீர்த்து விடுவது ஒன்றுதான் சரியான பரிகாரம் என்று முடிவு கட்டினான். ஆனால், அந்தப் பொறுப்பை எவன் ஏற்பது என்பதே பிரச்சினையாகி விட்டது. ஏனென்றால், பனூ ஹாஷிம் குடும்பத்தினர் ஒருவரைக் கொலை செய்வதென்பது, வெடி மருந்து பீப்பாயில் தீக்குச்சியைக் கொளுத்திப் போட்ட கதையாக முடிந்துவிடும் என்பதை யாவரும் அறிந்து அஞ்சினார்கள்.

ஆனால், அவ்வெதிரிகள் ஒன்றாய்க் கூடி இந்த இக்கட்டான இடைஞ்சலுக்குப் பரிகாரம் தேடிக் கொண்டிருந்த வேளையில் அங்கே நபியவர்களின் பரம விரோதியும் முஸ்லிம்களுக்குச் சொல்லொணா வேதனைகளையும் உபத்திரவங்களையும் உண்டுபண்ணி வந்தவரும் எதற்கும் துணிந்த முரட்டு மனப்போக்குக் கொண்டவரும் அதீ இப்னு கஅப் என்னும் கோத்திரத்தைச் சேர்ந்தவரும் கத்தாப் என்பவரின் மைந்தருமாகிய, கடின சித்தமே உருவாய் அமைந்த உமர் அமர்ந்திருந்தார்.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>

Related Articles

Leave a Comment