ரபீஉல் அவ்வல் மாத 1-ஆவது குத்பா

by பா. தாவூத்ஷா

اَلْحَمْدُ للهِ الَّذِي هَدٰينَا السَّبِْلَ الرَّشَادَ وَ جَعَلَ لَنَا الدِّيْنَ الْاِسْلَامَ خَيْرَ الْاَدْيَانِ فَمَنْ قَامَ وَجْهَهُ لِلدِّيْنِ حَنِيْفًا فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا وَ نَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَ رَسُوْلُهُ وَ عَلٰى ٰالِهِ وَ صَحْبِهِ وَ سَلَّم اَمَّا بَعْدُ

அல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்க வேண்டுமென்பதை எனக்கும் சொல்லிக்கொள்கின்றேன்.

எனதன்பிற்குரிய முஸ்லிம் நேசர்காள்! இப்பரந்த தராதலத்தையும், இதில் வதியும் மானிட கோடிகளையம் அன்புடன் படைத்து, இன்னவரின் பரிபூரணத்துக்காகத் தன் அருந் திரு நபியையும் (ஸல்) அனுப்பி வைத்த அல்லாஹ் ஜல்லஷானுஹுவ தஆலாவை நாம் அனுதினமும் வாயாரப் புகழ்வோமாக; மானிட கோடிகளுக்கெல்லாம் ஒரு தயாளமாய் அவதரித்த நபிகள் நாயகத்தின்மீது (ஸல்) ஆசிமொழியையம் சொரியக் கடவோமாக.

அதன்பின்பு, நேயர்காள்! நம்முடைய நபிகள் நாயகர் (ஸல்) இத்தரணியின் கண் எதற்காக அவதரித்தார்கள்? அவர்களது அவதாரத்தால் இவ்வுலக மக்கள் எத்தகைய நன்மையான சீர்திருத்தங்களை அடைந்தனர்? நம் மஹானுபாவர் அவதரித்து இவ்வுலகத்துக்கு என்னென்ன பேரூழியங்களைப் புரிந்தார்கள்? என்பனவற்றைச் சற்றே நாம் தெரிந்து கொள்ளக் கடவோமாக.

இன்றைக்கு 1,425 ஆண்டுகளுக்கு முன்னே, அஃதாவது நபிகள் பிரான் (ஸல்) அவதரிப்பதற்கு முன்னே இருந்து வந்த அராபிய அந்தகார உலக நிலையைப் பற்றி ஆண்டவனே குர்ஆனில் “கடல்மீதும் கரைமீதும் அக்கிரமங்கள் மலிந்து தோன்றி விட்டன,” என்று கூறியிருக்கின்றான். கி.பி. 6-ஆவது நூற்றாண்டில் இருந்த அராபியர் மகா அந்தகாரப் படுகுழியுள்ளே வீழ்ந்து தாழ்ந்து, பெரும் பாதகச் செயலிலெல்லாம் உழன்று கொண்டு கிடந்தனர். அதுகாலை அவர்கள்பால் எண்ணத்தொலையாத கக்ஷிப் பிரிவினைகளெல்லாம் முளைத்து, சிறுசிறு விஷயங்களுக்கெல்லாம் பல்லாண்டுகள் மட்டும், திமிர்கொண்டு போர்க் கலகம் புரிவார்கள். கொள்ளை, கொலை, வழிப்பறி, துன்புறுத்தல் துயரிழைத்தல், கள்ளுண்டல், கற்பழித்தல், சிசுஹத்தி, ஸ்திரீஹத்தி, அநாதைச் சிறுவர் சிறுமிகளின் சொத்தை அபகரித்தல் முதலிய எத்தகைய கொடும் பாதகச் செயலுக்கும் அஞ்சமாட்டார்கள்.

தினமும் ஐந்து வேலை மது அருந்திக் கெடுவது அவர்களுக்கொரு சாதாரணப் பழக்கமாயிருந்தது. பெண் மக்களைப் படுகுழியில் நிறுத்தி உயிருடன் புதைப்பது அவர்கள் குல வழக்கமாக இருந்து வந்தது. ஒவ்வொருவரும் விக்ரஹ ஆராதனை புரிய வேண்டுமென்பதே அன்னவர்களின் சமூகக் கட்டுப்பாடாக இருந்து வந்தது. இத்தகைய அனாசார மூடப் பழக்கங்களையெல்லாம் விட்டு அவைகளைச் சீர்திருத்திவிட ஒரு சமூகத் தலைவரும் அவ்வரப் நாட்டில் அதற்கு முன்னே, பன்னூற்றாண்டுகள் மட்டும் வெளிவராமல் இருந்ததனால், அத்தகையோரின் அஞ்ஞான அந்தகாரம் வரம்பு கடந்து கொண்டே சென்றது. இடையிடையே ஒரு சில எஹூதி, நசாரா, ஹனீபுகளெல்லாம் அவ் வராபியர்களைச் சீர்திருத்த முன்வந்தும், ஒன்றும் பயன் விளையாமலே பின்னிடைந்தனர். இறைவனின் சகாயமின்றி அக் கூட்டத்தினரைச் சன்மார்க்கத்திற்கு அழைக்க முடியாதென்பது நன்கு புலப்பட்டது.

எனவே, ஏகநாயகனாகிய அல்லாஹுத் தஆலா அக் குழாத்தினரின் வாழ்க்கையைச் சீர்பெறச் செய்வான் வேண்டி, அக் கூட்டத்தாரிடையிலிருந்தே ஒரு திருநபியை அவதரிக்கச் செய்தான். உலகத்தையெல்லாம் சீர்திருத்த வந்த இந்தச் சத்திய சீலரே நம் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்ல மவர்களாவர். அந்த எழுதப் படிக்கத் தெரியாத உம்மீகளாகிய அவ்வரபியர் குலத்தில் இவரும் ஓர் உம்மீயாகவே இருந்து, ஆண்டவனுடைய கடாக்ஷமும் சகாயமும் பெற்று, ஞானப் பெருக்கத்தையும், ஆத்ம பரிபக்குவத்தையும் நன்கு அடைந்து, அல்லாஹ்வின் பாதையிலே சத்திய பிரசாரம் புரிய ஆரம்பித்தனர்.

இப் பிரபஞ்சத்தையும், இதன் கண் காணப்படும் ஸர்வ வஸ்துக்களையும் சிருஷ்டித்தவன் ஆண்டவன் ஒருவனே என்றும், அவனை மட்டுமே மாந்தரெல்லாரும் அடிபணிந்து முடிவணங்க வேண்டுமென்றும் வணக்கத்துக்குரிய ஆண்டவன் ஏகநாயகனாகிய அந்த அல்லாஹுத்தஆலா ஒருவனே யென்றும், தாம் அந்த ஆண்டவன் ஏவலால் அனுப்பப்பட்ட ஒரு தூதரேயென்றும், எல்லாரும் அந்த ஏக நாயகனைத்தான் தொழவேண்டு மென்றும், அனாசாரம் மிக்க விக்கிரஹ ஆராதனையைச் செய்யக்கூடாதென்றும், கொள்ளை, கொலை, சோரம், கள்ளுண்டல் முதலிய பாதங்களைப் புரியக்கூடாதென்றும் போதித்து வந்தார்கள். ஜனங்கள் கூடுமிடங்களுக்கும் கடை வீதிகளுக்கும் சபைக் கூட்டங்களுக்கும் சென்று மேற்கூறியவாறு ஓயாப் பிரசாரம் புரிந்தார்கள். வறுமையிலும் பசியிலும் வெயிலிலும் மழையிலும் வாடியும், சிரமத்தைச் சிறிதும் கருதிப்பாராமல் ஆண்டவன் ஆணையைச் சிரமேல் தாங்கி இஸ்லாத்தின் இனிய பிரசாரத்தை அழகாய்ப் புரிந்து வந்தார்கள். இதற்கென்று எம்மட்டோ துன்பமும் துயரமும் தொல்லையும் பட்டார்கள்; அவ்வராபிக் காபிர்களால் அதிகம் இம்சிக்கப்பட்டுச் சொல்லொணாக் கொடுமைகளுக்கெல்லாம் ஆளாக்கப்பட்டார்கள்; ஆகார வசதிகள் தடுக்கப்பட்டுப் பசிப்பிணியிலா் நொந்தார்கள்.

இத்தனை தொல்லைகளினூடே யெல்லாம் ஆண்டவனது ஊழியத்தை மட்டும் ஒரு சிறிதும் கைவிட்டனரில்லை. அக் குறைஷிகள் இவரிடம் வந்து, நிலம் புலங்கள் எல்லாம் தருவதாகவும் பெருந்திரவிய சம்பத்தை அளிப்பதாகவும் அழகிய நங்கையரை மணமுடித்து வைப்பதாகவும் இவரைத் தங்களுக்கெல்லாம் அரசராக ஏற்றுக்கொள்வதாகவும் கூறி, எவ்வழியாலேனும் இவரது இஸ்லாமிய பிரசாரத்தைத் தடுத்துவிட வேண்டுமென்று முயற்சி எடுத்து வந்தனர். இதற்கு நம் நபிகள் நாயகம் (ஸல்) “நீங்கள் சூரியனை என் வலக் கரத்திலும், சந்திரனை என் இடக் கரத்திலும் கொண்டுவந்து வைத்து வேண்டிய போதினும், என் ஆவியுள்ள மட்டும் இஸ்லாத்தின் பிரசாரத்தைச் செய்துதான் தீருவேன். உலகத்தை அனாசாரத்தைவிட்டும், ஜனங்களை மூடப்பழக்க வழக்கங்களை விட்டும் உங்களை விக்கிரஹ ஆராதனைகளை விட்டும் நீக்கி நலமடையத்தான் செய்வேன். இன்றேல் இம் முயற்சியில் மடிந்தே தீருவேன்,” என்று அதிக தைரியமாய்க் கூறினார்கள்.

இவரது மனோதைரியத்தையும் உத்தம நோக்கத்தையும் பெருந்தன்மையையும் சத்திய வாழ்க்கையையம் கண்ட ஜனங்களுள் சிலர் சிறுகச் சிறுக இந்த நபியின் (ஸல்) சற்போதனைக்குட்பட்டுத் தங்கள் அசுசிமிக்க மவுட்டியங்களையும் விக்ரஹத் தொழும்பையும் அடியோடு விலக்கித் தள்ள ஆரம்பித்தனர். இந்தத் தீர்க்கதரிசியின் போதனையெல்லாம் மானிட கோடிகளைப் பரிசுத்தப் படுத்திப் பாரமார்த்திகப் பரிபக்குவத்துக்குக் கொண்டு சேர்ப்பதாய்க் காணப்படவே, சகல பண்டிதர்களும் அறிஞர்களும்கூட இவரது இஸ்லாத்துக்குள் வந்து சேர்ந்து இவருடன் தீனுக்காக உழைக்க ஆரம்பித்தனர்.

நாயகத்துக்குப் பக்கபலம் அதிகரிக்கவே, இவர் அரசர்களையும் தனவந்தர்களையும் இச் சத்திய சன்மார்க்கத்துக்கு அழைத்தனர். பலர் இவரது அழைப்புக்கிணங்கினர்; சிலர் இவரையும் இவரது திருமுகத்தையும் அலக்ஷியம் செய்தனர். நாட்களும் பல செல்லச் செல்ல, அரபு நாட்டில் இஸ்லாத்தின் தோற்றமே அதிகமாய்க் காணப்பட்டது. விக்ரஹ ஆராதனைகளும், கோயில்களும், கற்சிலைத் தொழும்புகளும் அழிக்கப்பட்டு, அடியோடு மறையத் தலைப்பட்டன. எங்கும் ஏக அல்லாஹ்வை வணங்கும் புண்ணிய ஸ்தலமாகிய மஸ்ஜித்களும் பள்ளிவாசல்களும் நிர்மாணிக்கப்பட்டன. 360 விக்கிரஹங்கள் வைக்கப்பட்டும் பெரிய ஆராதனைக் கோவிலாய் விளங்கிய கஃபத்துல்லா வானது அல்லாஹுத் தஆலாவின் வணக்க ஸ்தலமாகவும் இணையற்ற ஏக இறைவன் ஆலயமாகவும் மாறிப் போயிற்று. மக்காவும் மதீனாவம் ஷாமும் ஜெருஸலேமும் எகிப்தும் ஏனைய எல்லா நாடுகளும் இறுதியில் இஸ்லாம் மயமாக மாறிப் போயின. எங்கும் ஏக தெய்வ கோஷமான “அதானே” (பாங்கே) சப்திக்கத் தலைப்பட்டது. அதன்பின் உலகமே இஸ்லாம் மயமாகத் திகழலாயிற்று. அதன் பயனே இது காலை அறுபது கோடி முஸ்லிம்கள் இத் தரணியின்கண் காணப்படுகின்றனர்.

அன்பிற்கரிய அரிய முஸ்லிம்காள்! நாயகத்தின் (ஸல்) மான்மியத்தை நன்குணருங்கள். அவர்கள் இப்பூவலகிற்குச் செய்த பேரூழியத்தைப் பாருங்கள். இதுவன்றோ ஆண்டவனுக்குப் பிரியமான ஊழியம்.

அன்பர்காள்! அயல் மதவாதிகளின் ஆதிக்யம் மலிந்த இக் காலத்தில் அத்தகைய இஸ்லாமிய பிரசாரத்தை நீங்கள் எப்போது புரியப் போகின்றீர்கள்?

எழுமின்! விழிமின்! உழைமின்!

எல்லாம் வல்ல அல்லாஹுத் தஆலா நம்மெல்லோரையம் உண்மை முஸ்லிம் பக்தர்களாகச் செய்தருளக் கடவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்! 

إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا

بَارَكَ اللهْ بَارَكَ اللهُ لَنَا وَلَكُمْ بِالقُرْاٰنِ اْلعَظِيْمِ وَنَفَعَنَا وَاِيَّاكُمْ بِاْلاٰيٰتِ وَالذِّكْرِ الْحَكِيْمِ اِنَّهُ تَعَالٰى جَوَادٌ كَرِيْمٌ مَلِكٌ قَدِيْمٌ بَرٌّ رَّوءًُفٌ رَحِيْمٌ وَرَبٌّ حَلِيْمُ

Image courtesy: csspmspk.com

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<குத்பா பிரசங்கம் முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment