கூடாத காரியங்களுக்கு நேர்ச்சை செய்யப்படின், அதை நிறைவேற்றுவது அவசியமில்லை.

அல்லாஹ்வுக்கு வழிபட்டு நடக்கும் விஷயத்தில் நேர்ச்சை செய்துகொள்ளுவானாயின், அதை நிறைவேற்றுதல் வேண்டும்.

ஆனால், அவனுக்கு மாறு செய்யும் முறையில் இருக்குமாயின், அதை நிறைவேற்றுவது கூடாது” – (ஸஹீஹ் புகாரீ).

ஆனால், இவ்வாறு நேர்ச்சை செய்துகொள்வதனால் பாப மன்னிப்பின் பொருட்டுக் “கஃப்பாரா” கொடுக்கவேண்டுவது அவசியமா? அல்லவா? என்பதில் மாத்திரம் நல்லோர்களான உலமாக்கள் அபிப்பிராய பேதங் கொண்டவர்களாய்க் காணப்படுகின்றனர். மேலும் ஸலஃப் என்ற முன்னோர்களுள் எவரேனும், “சமாதியினருகே சென்று தொழுவதனால் மிக்க பிரயோஜனம் உண்டாகும்; அல்லது அங்குத் தொழுதால்தான் வணக்கம் ஒப்புக்கொள்ளப்படு”மென்றும் கூறினாரில்லை. அன்றியும் இவர்கள், வேறு ஸ்தலங்களைவிடச் சமாதிகளின் அருகே சென்று தொழுவது, அல்லது துஆ கேட்பது மிக்க நல்லது என்றும் சொன்னதாய்க் காணப்படவில்லை. ஆனால். அன்பியாக்கள், ஸாலிஹீன்கள் போன்ற பெரியார்களின் சமாதிகளின் அருகே சென்று தொழுவதைவிட மஸ்ஜிதுகளிலும், சொந்த இல்லங்களிலும் தொழுவதே மிக மிக மேலானதெனக் கூறியிருக்கின்றனர்.

எனவே, அல்லாஹ்வும் அவனுடைய ரஸூலும் சமாதிகளின் அருகே சென்றால், என்ன செய்யவேண்டும்? அதை எவ்வாறு கௌரவித்தல் வேண்டும்? வேறென்ன காரியங்களை அங்குப் புரிவது கூடாதென்றும் பல்வேறு இடங்களில் பற்பல விதமாகவும் விளக்கிக் காட்டியிருக்கின்றார்கள். அவைகளுள் சில:

எந்த மனிதன் மஸ்ஜிதுகளில் ஆண்டவன் பெயர் சொல்லப்படுவதைத் தடுக்கிறானோ, மஸ்ஜிதுகள் நாசமாகும் முறையில் முயற்சி செய்கிறானோ, அவனைவிட அக்கிரமக்காரன் எவனே இருக்கின்றான்?” – (குர்ஆன் 2:114).

நீங்கள் மஸ்ஜிதுளில் தாமதிருக்கக் கூடியவர்களாய் இருக்கின்றீர்கள்” – (குர்ஆன் 2:187).

(ஏ முஹம்மத்!) நம்முடைய ரப்பானவன் நீதமாய் நடக்கும்படி போதித்துள்ளான். மேலும் உங்களின் முகங்களை மஸ்ஜிதகளின் பக்கமாக்கும்படி கட்டளையிட்டுள்ளான் எனக் கூறுவீராக” – (குர்ஆன் 7:29).

அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நன்னம்பிக்கை கொண்டவர்கள்தாம் அல்லாஹ்வுக்காக மஸ்ஜிதுகளைப் பற்றுவார்கள்” – (குர்ஆன் 9:18).

மேலும் மஸ்ஜிதுகளெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். எனவே, அல்லாஹ்வுடன் சேர்த்து வேறெவரையும் அழைக்காதீர்கள்” – (குர்ஆன் 72:18).

ஒரு மனிதன் மஸ்ஜிதில் தொழுவதால்தான் தன்னுடைய வீட்டிலோ அல்லது கடையிலோ தொழுவதைவிட இருபத்தைந்து பங்கு அதிகமான பிரயோஜனத்தை அடைவான்,” என்றொரு நாயக வாக்கியம் காணப்படுகிறது. அன்றியும், “அல்லாஹ்வுக்காக ஒரு மனிதன் மஸ்ஜிதைக் கட்டுவானாயின், அவனுக்காக அல்லாஹ் சுவனலோகத்தில் ஒரு மாளிகையைக் கட்டுகிறான்,” என்று மற்றொரு நாயக வாக்கியமும் காணக்கிடக்கின்றது.

ஆனால், சமாதிகளின் சம்பந்தமாய் நாயகம் (ஸல்) அவர்கள் என்ன திருவுளமாய் இருக்கிறார்கள் எனின், “அவைகளை மஸ்ஜிதுகளாகச் செய்துகொள்ளாதீர்கள். சமாதிகளை ஸஜ்தா செய்யும் ஸ்தலமாகவும் மஸ்ஜிதுகளாகவும் செய்துகொள்ளுபவர்கள்மீது அல்லாஹ்வின் சாபமுண்டாகும்,” என்று தான் திருவுளம் பற்றியுள்ளார்கள். இன்னம் எத்தனையோ சஹாபாக்களும் தாபியீன்களும் மற்றும் பெரியார்களும் மரணமடைந்தவர்கள் சம்பந்தமாகவும் சமாதிகளின் விஷயமாகவும் பேசும்போது குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் (71:23) ஆயத்தைச் சுட்டிக்காட்டியே பேசியிருக்கிறார்கள்.

<<முந்தையது>>  <<அடுத்தது>>

<<ஜியாரத்துல் குபூர் முகப்பு>>

Related Articles

Leave a Comment