மலிக்குல் முஅல்லம் என்னும் ஐயூபி சுல்தான் உயிருக்காக மன்றாடிக் கொண்டு, ஓட்டோட்டமாய் ஓடினாரல்லவா? சுல்தானுக்குரிய எத்தகை அடையாளமும் இல்லாமல் அடிமையின் கோலத்திலே அவர் ஓடியபோதினும், ஒரு பஹ்ரீ மம்லூக் அப்படி ஓடுகிறவர் சுல்தானேதான்

என்பதைப் பார்த்துவிட்டான். எனவே, இந்த மம்லூக் நேரே ருக்னுத்தீனிடம் சென்று, செய்தி தெரிவித்தான் என்பதை முன் அத்தியாயத்தில் குறிப்பிட்டோம். தாக விடாயினால் தவித்துக் கொண்டிருப்பவன் குளிர்ந்த நீர் நிரம்பிய குவளையைத் தாவி ஒரே மிடற்றினில் குடித்துத் தீர்க்க விரைவதைப் போல், ருக்னுத்தீனும் மற்ற பஹ்ரீகளும் காற்றினுங் கடிய வேகத்தில் நீல நதியின் திக்கை நோக்கித் தாவிப் பாய்ந்தார்கள்.

திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு, ஓட்டோட்டமாய் ஓடிக்கொண்டிருந்த சுல்தான் முஅல்லம் தம்மைத் துரத்திக்கொண்டு எல்லா பஹ்ரீகளும் வருகிறார்கள் என்பதைக் கண்டதும், இன்னம் அதிக வேகமாய் ஓடினார். ஓவ்வொரு மனிதனுக்கும் தன்தன் உயிரின்மீது எவ்வளவு பற்றிருக்கிறது, பாருங்கள்! பரிசுக்காகவாவது போட்டிக்காகவாவது சுல்தான் முஅல்லத்தை ஓடச் சொல்வியிருந்தால்கூட, அவர் இப்போது ஓடிய வேகத்தில் பத்தில் ஒரு பங்கு வேகத்துடனேயும் ஓடி இருக்க முடியாது. ஆனால் தம்மைக் கிழித்தெறிய ஆர்வங் கொண்டு பழிவாங்கும் ஓநாயுணர்ச்சியுடன் பஹ்ரீகள் துரத்துகிறார்கள் என்னும் எண்ணம் அவரை மின்சார வேகத்தில் பாய்ந்து பறந்தோட உதவி புரிந்தது. குதிக்கால் பீஷ்டத்தில் இடிக்க ஓடினார்; புலியால் துரத்தப்படும் புள்ளி மானினும் கடுவேகமாய்த் துள்ளிப் பாய்ந்துகொண்டிருந்தார். பஹ்ரீகளும் சளைக்காமலே துரத்திக்கொண்டு ஓடினார்கள். ஓட்டப் பந்தயத்தில் தம்மை மிகைத்தவரில்லை என்னும் பெயர்பெற்ற ருக்னுத்தீன் எல்லாரையும்விட மிக வேகமாய்ப் பறந்துகொண்டிருந்தார்.

முன்னே சுல்தான் ஓடவும், பின்னே மம்லூக்குகள் துரத்தவும், இடையே இருந்த தூரம் சிறிது சிறிதாகக் குறுகிக் கொண்டே வந்தது. தம்மை மம்லூக்குகள் நெருங்கிவிட்டார்கள் என்பதைத் திரும்பிப் பார்த்த முஅல்லம் இன்னம் வேகமாய் ஓடினார். பயத்தாலும், ஓட்டத்தின் பெரிய அதிர்ச்சியாலும் சுல்தானின் ஹிருதயம் எவ்வளவு வேகமாய் அடித்துக்கொண்டதென்றால், அவருடைய தொண்டையில் அது வந்து ஏறிக் கொண்டதேபோல் அவருக்குத் தோற்றிற்று. என்றாலும், சளைக்காமலும் களைக்காமலும் வருவது வரட்டுமென்று முன்னினும் மிகமிக வேகமாகவே பாய்ந்தோடிக்கொண்டிருந்தார்.

ஓடுபவரைக் கண்டால் துரத்துபவருக்கு இலேசல்லவா? மலிக்குல் முஅல்லம் முன்னினும் வேகமாய் ஓடியதைப் போலவே ருக்னுத்தீனும் இப்போது இன்னம் விரைவாகத் துரத்தினார். இவ்விதமான ஓட்டப் பந்தயம் நிகழ்வதைக் கோட்டைக் கோபுரத்தின் உச்சிமாடியில் உள்ள சிறைச்சாளர வழியே லூயீ மன்னர் ஆனந்த பரவசராய்க் கண்டு களித்துப் புன்னகை பூத்து ரசித்துக்கொண்டிருந்தார். தம்மை விடுதலை செய்வதாய் இருந்தால் அதற்கு ஒரு கோடி பிராங்க் அபராதம் கொடுக்கவேண்டும் என்று கொஞ்சமும் நெஞ்சமஞ்சாமல் தண்டனை விதித்த ஐயூபி சுல்தானை, நீட்டிய வாளுடனே பசித்த புலியேறேபோல் ருக்னுத்தீன் குறிபார்த்துப் பாய்ந்து துரத்திச் சென்றது லூயீக்குக் கண்குளிர்ந்த பரமானந்தக் காட்சியாகத் தோற்றமளித்தது; பிளந்த வாயை மூடாமல் அந்த பிரெஞ்சு மன்னர் இந்தக் கூத்தை முழுக்க முழுக்க ரசித்த வண்ணம் பேருவகை பூத்து நின்றார். துன்பத்துக்கு உள்ளான ஒரு மனிதன், தன்னை அத்தகைய கடுந்துன்பத்துக்கு ஆளாக்கியவன் சங்கடத்தில் சிக்கிக்கொள்ளும் போது, அவனைக் கண்டு அவன் அகங் குளிர்வது உலக இயற்கையாகவே விளங்கிவருகிறதன்றோ?

ருக்னுத்தீன் அந்த சுல்தானை நெருங்க நெருங்க, முஅல்லம் நீல நதிக்கரை ஓரத்தை எட்டி விட்டார். கடல் போன்ற அம் மஹா நதியில் முதலைகள் நிரம்ப உண்டென்றாலும், நதியின் அகலம் ஒரு சாதாரண நீச்சு வல்லுநனால் நீந்திக் கடக்க முடியாததாக இருந்தபோதினும், வேறு வழியின்றி, சுல்தான் சற்றுத் திகைத்துப் போனார். ஓர் அரை வினாடி மட்டுமே யோசித்துவிட்டு, வருவது வரட்டுமென்று, குபீரென்று அந் நீத்தத்துள்ளே பாய்ந்து மூழ்கினார். அவர் அப்படிப் பாய்ந்த வேகத்தில் உயரமாய் ஓங்கி எழுந்த அலையைத் திரையாய்க் கொண்டு, நீர் மட்டத்துக்கு அடியிலேயே மிக விரைவாக நீந்தி முன்னேறினார். அதற்குள்ளே, துரத்திவந்த ருக்னுத்தீனும் கரையை எட்டிவிட்டார். ஒரு சுல்தானைவிட ஒரு மம்லூக் – அதிலும் பஹ்ரீ மம்லூக் தலைவர், பெரிய சேனாதிபதி – நீத்துவதில் சளைத்தா விடுவார்? சுற்றுமுற்றும் நோக்கினார் ருக்னுத்தீன். நதியுள் மூழ்கிய சுல்தானின் சிரம் சற்றுத் தொலைவில் மூச்சு வாங்குவதற்காக நீர்மட்டத்துக்கு மேலே எழுந்ததை இவர் கண்டார். அக்கணமே, கொஞ்சமும் யோசியாமலும் பிடித்திருந்த வாளை வீசியயறியாமலும் உடுத்திருந்த உடைகளைக் களைந்தெறியாமலும் மின்வெட்டும் வேகத்திலே துடுமெனப் பாய்ந்து முன்னேறினார்.

கரையில் பிடித்த சனியன் கடல்போன்ற நதியின் அலை மீதும் மிதந்துவிடாமல் தம்மைத் தொடர்ந்து வருவதைஅந்த ஐயூபி உணர்ந்துகொண்டார்.

அதுவரை அக்கோட்டைச் சிறைச் சாளர வழியே வாய் திறந்தபடியே மெளனமாக அத்தனை காட்சிகளையும் அகமகிழ்வுடன் கண்டு களித்துக்கொண்டிருந்த லூயீ மன்னர் ருக்னுத்தீன் நதியுள் வேகமாய்ப் பாய்ந்ததைக் கண்டு, பெருஞ் சந்தோஷத்தால் துள்ளிக் குதித்து,“சபாஷ்!” என்று பேரோலம் இட்டுக் கைதட்டிச் சிரித்தார். காஹிரா நகரிலிருந்த எல்லா உயர்ந்த கட்டிடங்களுள்ளும் லூயீ அடைக்கப்பட்டிருந்த கோட்டைக் கோபுரமே மிகவும் உயரமானதாகவும் அதிலும் நீலநதிக் கரையோரத்தில் நிருமிக்கப்பட்டதாகவும் விளங்கி வந்தபடியால், அந்த பிரெஞ்சு மன்னரும் அவருடைய சிலுவையுத்த சகாக்களுமே அக்காட்சி முழுதையும் மற்றெல்லாரையும் விட மிக நன்றாய்க் கண்டு களித்து மகிழ்ந்தார்கள். அவர்கள் அதுவரை ஆயுளிலே கண்டிராத அந்த அற்புதமான ராஜப் புரட்சிக் கலகத்தையும் சுல்தான் உயிர் தப்புதற்காக விழுந்தடித்து ஓடி, நதியுள் குதித்து நீந்துவதையும் அவரை இறுதி வரையில் விடுவதில்லையென்று ருக்னுத்தீன் இன்னம் நிறைந்த ஆத்திரத்துடனே விரட்டிக்கொண்டு ஓடி, நதியுள் துடுமெனப் பாய்வதையும் பார்த்துக் குதூகலித்த குதூகலத்தில் தாங்கள் சிறையிலே யுத்தக் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்ததையும் மறந்து விட்டார்கள். இதைவிட இன்பமூட்டும் வேறு காட்சியை, அல்லது நாடகத்தை அவர்கள் வேறெங்கே எப்போது காணப்போகிறார்கள்! சிலுவை யுத்தத்தில் முதுகொடிந்த நசாராக்கள் இந்த வேடிக்கையை மிகவும் நனறாய் ருசித்து, தேன் குடித்த நரிமாதிரியாகத் துள்ளிக் குதித்துப் பல்லை இளித்து மனச்சாந்தி அடைந்தார்கள்.

நீல நதியுள் முதலில் குதித்த சுல்தான், ருக்னுத்தீன் தம்மை அங்கும் தொடர்வார் என்பதை எதிர்பார்க்கவில்லை. அப்படித் தொடர்வதாய் இருந்தாலும், அந்த பஹ்ரீ தம்முடைய ஆடையணிகலன்களைக் கழற்றிவிட்டுச் சாவகாசமாக நீருள் இறங்குவாரென்றும் அதற்குள்ளே தாம் வெகுதூரம் சென்று விடலாமென்றும் உயிர்தப்பிப் பிழைத்தும் ஓடிவிடலாமென்றும் எண்ணினார். ஆனால், அவர் முதல் முக்குளியிலிருந்து மூச்சு வாங்கத் தலையைத் தூக்கியவுடனே ருக்னுத்தீன் ஓடிவந்த வேகத்தலேயே தம்மைவிட வேகமாகத் தண்ணீரில் பாய்ந்ததைக் கண்டு கலங்கிவிட்டார். உயிருக்கஞ்சி அரண்மனையிலிருந்து ஒளிந்து தப்பியோடி வந்த அதிர்ச்சி ஒருபுறம்; வெளியே வந்த பின்னர் நதிக்கரை வரையில் மரைமான் வேகத்தில் இரைக்க இரைக்கப் பறந்தோடி வந்த களைப்பு வேறொரு புறம்; ஆபத்து இன்னம் விலகாமல் நதியலைமீதும் தொடர்ந்து வருகிறதே என்ற கிலி இன்னொரு புறம்; ருக்னுத்தீன் தம்மைவிட மிக வேகமாய் நீந்திக்கொண்டு நெருங்குவதால் ஏற்பட்ட மனச்சோர்வு மற்றொரு புறம்; இவ்வளவும் பற்றாததற்கு, உடலில் ஏற்பட்ட நலிவும் சோர்வும் இன்னமொரு புறம். என்ன செய்வார், பாவம், சுல்தான்!

ருக்னுத்தீன் சுல்தானை எட்டித் தாவிப் பிடிக்கு முன்னே அந்த சுல்தானுக்குப் பாதி உயிர் போய்க்கொண்டே இருந்தது. எனினும், பஹ்ரீ மம்லூக் தலைவர் விட்டுவிடாமல், ராஜாளிப் பறவை ஒரு புறாவைத் தாவிப் பற்றுவதேபோல், சுல்தானின் கழுத்தைத் தாவிப் பிடித்தார்; அவ்வாறு பிடித்திழுத்து, சுல்தானின் தலையைத் தமது கட்கத்துள் அழுத்திப் பிடித்துக் கொண்டு, மீண்டும் கரைநோக்கித் திரும்பினார். குற்றுயிருங் குறையுயிருமாய் இருந்த சுல்தான் பாம்பின் வாயில் சிக்கிய தேரையே போல ருக்னுத்தீனின் இருப்புப் பிடியில் மாட்டிக்கொண்டு, துவண்டுபோய் வாளா மிதந்து வந்தார். ருக்னுத்தீனோ, தம் பிடியைக் கொஞ்சமும் தளர்த்தாமல், மூச்சுத் தடுமாறாமல், நிதானத்தையும் சிறிதும் இழக்காமல், சுல்தானின் செயலிழந்த உடலை உடனிழுத்துக் கொண்டு, கரையின் பக்கமாக விரைந்து ஏகினார். இதற்கிடையில். ருக்னுத்தீன் பின்னேயே தொடர்ந்தோடி வந்த மற்ற பஹ்ரீகள் கரையை எட்டி விட்டார்கள். தங்கள் தலைவர் அந்தத் துரோகியான சுல்தானை அக்குளிலே அமுக்கிப் பிடித்துக் கொண்டு நீந்தி வருவதைக் கண்டு, மகிழ்ச்சிமிக்குப் பேராரவாரம் இட்டார்கள். தனியே தத்தளித்த வண்ணம் மெல்ல மெல்ல சுல்தானுடனே நீந்தி வருகிற அவருக்கு உதவி புரிவதற்காக மற்றுஞ் சில மம்லூக்குகளும் தண்ணீருள் தாவிக் குதித்து எதிர்கொண்டு நீந்திச் சென்று, ருக்னுத்தீனையும் சுல்தானையும் பத்திரமாகக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள். இக்பாட்சி முழுதையும் கண் கொட்டாமல் பார்த்துவந்த லூயீ தம்மையும் மறந்து, கோமாளியைக் கண்ட சிறு பிள்ளைபோன்று பலமாகக் கைகொட்டி, வயிறு குலுங்கக் குலுங்க இடியிடியென்று நகைத்தார்.

கோட்டைக் கோபுர உச்சியிலிருந்து இவ்வளவு பெரிய இடியொத்த பெருஞ் சிரிப்புச் சத்தம் அந்தப் பயங்கரமான நிச்சப்த வேளையிலே திடீரென்று கேட்டதும் எல்லா மம்லூக்குகளும் ஏக காலத்தில் அண்ணாந்து பார்த்தார்கள். பெரும் பைத்தியம் பிடித்தவன் அமாவாசையன்று பயங்கரமாய்ச் சிரிப்பதைப்போல லூயீ நகைப்பதைக்கண்டு, ஆத்திரமடைந்தார்கள், ருக்னுத்தீனுக்கோ, சொல்லொணாப் பெருங் கோபம் கனன்றெழுந்து, அண்ணாந்து பார்த்தபடியே பற்களை நறநறவென்று கடித்தார்.

அதே ஆத்திரத்துடன் குனிந்து சுல்தானைப் பார்த்தார் ருக்னுத்தீன். பேச்சுமூச்சின்றி, அரைக்கால் உயிருடன் மூர்ச்சித்துக் கிடந்த சுல்தானைச் சகிக்கொணா மனவேதனையுடன் தூக்கி நிறுத்தினார். உயிர்போவதற்கு அறிகுறியாக, அந்தப் பரிதபிக்கத்தக்க முஅல்லம் நாக்கை நீட்டித் தொங்கவிட்டுக் கொண்டு, பயங்கரமாய் இமைகளைத் திறந்து, சோளக் கொல்லையில் பறவைகளை வெருட்டத் தூக்கி நிறுத்தப்பட்டிருக்கும் புல்லுருப் பொம்மைபோல், விழிபிதுங்கித் தோற்றமளித்தார். ருக்னுத்தீன் தம்முடைய உடைவாளை அந்த உயிர் போய்க் கொண்டிருந்த  சுல்தானின் மார்பெதிரே நீட்டிப் பிடித்துக் கொண்டு, மூச்சு இரைக்க இரைக்க, “ஏ, நன்றி கொன்ற பாதகா! மனிதர்களுள் எல்லாம் மிகக் கேடுகெட்ட பதரே! இதோ பெற்றுக்கொள், உனக்காக நான் கொடுக்கும் இறுதிப் பரிசை!” என்று சொல்லிக்கொண்டே, ஒரே சொருகாகச் சொருகினார். லூயீ ஏறியிருந்த அம் மாபெருங் குதிரையின் தலையை அரைக்கண நேரத்தில் சீவியெறிந்த அதே வாள்தான் இப்போது சுல்தான் முஅல்லம் மார்பின் வழியே புகுந்து முதுகுப் புறமாய் வெளிவந்தது. வேரறுந்த அடிமரம்போல விழுந்து மாண்டார் அந்த ஐயூபி சுல்தான்!

சுல்தானை இவ்விதமாக வேலைதீர்த்து முடித்ததும், ருக்னுத்தீன் கோட்டைக் கோபுரச் சாளரத்தை மீண்டும் அண்ணாந்து நோக்கினார். லூயீ மன்னர் இமை கொட்டாமல் இக்காட்சியை நோட்டமிட்டுக்கொண்டிருந்ததைப்  பார்த்ததும் இன்னம் அதிகமான கோபம் ருக்னுத்தீனுக்குப் பிறந்தது. சுல்தானின் சவத்தினின்றும் தமது உடைவாளை உருவிப் பிடுங்கினார்; அவ்வுடலின் மார்பகத்தைத் தாறுமாறாய்க் கிழித்தெறிந்தார்; அங்கே இன்னமும் துடித்துக்கொண்டிருந்த ஹிருதயத்தைத் தனியே பிய்த்தெடுத்தார்; உஷ்ணமான உதிரம் இன்னமும் சொட்டிக்கொண்டிருக்க, அதைத் தம் இடக்கரத்தில் ஏந்திக்கொண்டு, வலக்கரத்தில் வாளை நீட்டிப் பிடித்துக் கொண்டு, மேலெல்லாம் வியர்வை நீரும் தண்ணீரும் சேர்ந்து சொட்ட, அச் செங்கோட்டைக்குள்ளே நுழைந்தார். மறு நிமிஷத்தல் அத்தனை சுற்றுப்படிக்கட்டையும் நாலே தாவலில் தாவி, லூயீயின் எதிரிலே போய் நின்றார்.

இந்தக் கோரச் செயலையும் பயங்கரமிக்க ருக்னுத்தீனின் வதனத்தையும் கண்ட லூயீ ஈரற்குலை நடுங்கிப் போயினார். அந்த பஹ்ரி தமது இடக்கரத்தில் இருந்த தூரான்ஷாவின் வெது வெதுப்பான ஹிருதயத்தை லூயீயின் முகத்தருகே ஏந்திப் பிடித்து நீட்டிக் கொண்டும் வலக்கரத்தில் இருந்த வாளை ‘வீச்’ சென்னும் சப்தத்துடனே ஓச்சிக்கொண்டும் மூச்சி முட்ட ஒன்றும் பேசாமல் முறைத்துப் பார்த்து நின்றதை லூயீ பார்த்ததும், தம்மை அறியாமலே தம் மார்பை இரு கரங்களாலும் அழுத்திப் பிடித்துக்கொண்டார்.

லூயீ மன்னர் பிரானுக்கு அவரது உயிரே போய்விடும் போன்ற மகா பயங்கர உணர்ச்சி பிறந்ததால், வாயைப் பிளந்துவிட்டார். வறந்துலர்ந்து போய்விட்ட அவர் தொண்டையிலிருந்து ஒருவித பயங்கர சப்தம் மட்டுமே வெளிவந்தது!

அந்த பிரெஞ்சு மன்னர் விலவிலத்துப் படபடத்து மெய் விதர்த்துப் போனதுடன், பேசவும் நா எழாமல் திணறிப் போய், ருக்னுத்தீனையும் அவர் கையில் விரித்துப் பிடித்திருந்த ஓர் உயிருள்ள மனித ஹிருதயத்தையும் மாறிமாறிப் பார்த்துத் திக்பிரமை கொண்டுவிட்டார். ஆனால், ருக்னுத்தீனோ, அடிமேலடி வைத்து நடந்து, லூயீயை நெருங்கி நின்று கொண்டார். ருக்னுத்தீன் கிட்டே வரவர, லூயீயின் பிளந்த வாய் இன்னம் அகலமாய் விரியத் துவக்கிற்று.

“ஏ, ரிதா பிரான்ஸ்! சற்று  முன் விழுந்து விழுந்து சிரித்தீரே! இப்போது நன்றாய்ச் சிரியும்! இன்னம் வேகமாய்ச் சிரியும்! மூச்சு முட்டுகிற வரையில் சிரியும்!” என்று இடியேறு போல் முழங்கினார் ருக்னுத்தீன். அச் சிறை மண்டபம் அவருடைய கோபமிக்க பேய்ச் சிரிப்புடன் கூடிய பேரொலியைப் பயங்கரமாக எதிரொலித்தது. லூயீ மன்னருக்கோ, உடலில் ஓடிக்கொண்டிருந்த உதிரம் உறையத் துவக்கிவிட்டது. மேலெலாம் வேர்த்துக் கொட்டியது. நதியில் மூழ்கிக் கரையேறியதால் ஈரத்துடன் நின்றுகொண்டிருந்த ருக்னுத்தீனின் மேனியைப்போல, பயமென்னும் பெருங்கடலில் மூழ்கிய வேர்வையின் ஈரத்தால் லூயீயின் உடலும் நனைந்து காணப்பட்டது. என்ன பதில் சொல்வார்? அல்லது எப்படிச் சொல்வார்?

“ஏ ரிதா பிரான்ஸ்! ஏன் மெளனஞ் சாதிக்கிறீர்? பேஷாய்ச் சிரிக்கலாமே நீர்! முன்னினும் பலமாய்ச் சிரிக்கலாமே!”.

லூயீ ஏதோ உளறினார் ஆனால், வார்த்தைகளாக ஒன்றும் தோன்றவில்லை; பேய் அறைவதால் அதிர்ச்சியுண்டவன் குழறும் உளறலாகவே காணப்பட்டது அது: “…நா…நா…ன் தெரி…யா…ம…ல்.”

“என்ன தெரியாமல்? கைதியாக அடைபட்டிருக்கும் உமக்கு இவ்வளவு இறுமாப்பா? இந் நாட்டின் சுல்தானாய் இருந்தவரின் ஹிருதயம் என் கையில் சிக்கி இந்தப் பாடுபடும்  போது, இந்த ஸல்தனத்தின் பரம வைரியாக வந்து, யுத்தத்தில் படுதோல்வி அடைந்து, கேவலம் ஒரு கைதியாக அடைபட்டிருக்கும் உம்முடைய கதி என்னாகும் தெரியுமா?” என்று அடித்தொண்டையால் உறுமிக் கொண்டே சுல்தானின் குளிர்ந்துவிட்ட ஹிருதயத்தை லூயீயின் காலடியில் விசிறியெறிந்தார்.

மறு கணமே லூயீ மண்டியிட்டுக் குந்திக் கொண்டு, தம்மிரு கரங்களையும் பரிதாபகரமாய் விலவிலப்புடன்  ஏந்திக் கொண்டு, ருக்னுத்தனைக் கண்ணீர் ஒழுக ஏறிட்டு நோக்கினார்: கொலை செய்வதற்காக வாளோச்சுபவனிடம் உயிருக்கு மன்றாடும் கொலையுண்பவனைப்போல் லூயீ பரிதபிக்கத்தக்க தோற்றத்துடன் காட்சியளித்தார். சென்ற சில மாதங்களுக்கு முன்னர் மன்ஸூரா போர்க்களத்தில் ருக்னுத்தீனின் பொல்லா வீரம் எத்தன்மைத்தாய்க் காணப்பட்டது என்பதை லூயீ இன்னம் மறந்துவிடவில்லை அல்லவா? மேலும், அதே ருக்னுத்தீன் எத்தகைய விசுவரூபத்தில் காட்சி அளிக்கிறார் என்பதைக் கண்டு மெய்பதறிவிட்டார் அல்லவா?

தாடி பற்றி எரியும்போது சுருட்டுப் பற்ற வைக்க நெருப்புக் கேட்காதீர்.

“ஜாக்கிரதை! ஏ, மாஜீ பிரெஞ்சு மன்னரே! உம்மைக் கொல்ல வேண்டுமென்னும் குறியுடனே நாங்கள் இங்கு வரவில்லை. ஆனால், ஆண்டவன் பாதையில் நாங்கள் மேற்கொண்ட புனித காரியத்தைப் பார்த்து நீர் எள்ளி நகையாடினீரல்லவா? இனியும் நீர் இம் மாதிரியான வேளைகளில் இப்படி நடந்துகொள்ளத் தகாது என்று எச்சரிக்கவே இங்கு வந்தோம்; ஜாக்கிரதை! தாடி பற்றி எரியும்போது சுருட்டுப் பற்ற வைக்க நெருப்புக் கேட்காதீர். தெரிகிறதா?”

பூகம்பத்தில் சிக்கிய கட்டிடம் கிடுகிடுவென்று ஆடுகிற வேகத்தில் லூயீயின் தலை ‘இல்லை, இல்லை!’ என்று பலமாக ஆடிற்று. அவருடைய கண்கள் திருதிருவென்று விழித்தன; தொடைகள் வெடவெடவென்று நடுங்கின;  கைகள் வில விலத்துத் தொங்கின; தாடி மயிர்கள் சிலர்த்துவிட்டன். ருக்னுத்தீன் இப்படியெல்லாம் செய்வார் என்பது முன்னமே தெரிந்திருந்தால், சாளர வழியே எட்டிப் பார்க்காமலே இருந்திருக்கலாமே என்று லூயீ மெய் துவண்டார். இப்போது தலைக்கு வந்திருக்கிற ஆபத்துத் தலைப்பாகையுடன் போனால் போதுமே என்று இரங்கி ஏங்கினார்.

லூயீயின் மகா பரிதாபகரமான தோற்றத்தைக் கண்டு, ருக்னுத்தீன் சிந்தித்தார். பிரெஞ்சு மன்னர் மீது தவறென்ன இருக்கிறது? வேற்று நாட்டிலிருந்து வந்து இங்குக் கைதியாக அடைபட்டிருப்பதால், சம்பிரதாயம் தெரியாமலும் அறியாத்தனத்தாலும் முதலில் சிரித்து மகிழ்ந்தார். ஆனால், நன்றி கொன்ற சுல்தானைப் பழிவாங்குவதற்காக மம்லூக்குகளும் பொதுமக்களும் நியாயமாய்க் கிளப்பிய புரட்சிக் கலகமென்பதை அவர் எங்ஙனம் அறிவார்? – இப்படியெல்லாம் சிந்தித்தபடியால், ருக்னுத்தீன் சற்று மனமரங்கி, தலைவழியே நெற்றியில் வழிந்துகொண்டிருந்த ஈரத்தைப் புறங்கையால் துடைத்துக்கொண்டே, மௌமாக வெளியேறினார்.

போன உயிர் லூயீக்குத் திரும்பி வந்தது!

கோட்டையில் கோட்டத்திலிருந்து ருக்னுத்தீன் விரைவாக அரண்மனை நோக்கி ஏகினார். ஷஜருத்துர் அம்மையார் அடைத்து வைக்கப்பட்டிருந்த – அல்லது புகுந்துகொண்டிருந்த – அறைப்பக்கம் வந்து நின்றார். முன்னமே சிந்தை குலைந்து தடுமாறிக்கொண்டிருந்த ஷஜருத்துர்ருக்கு நீலநதிக்கரையில் நிகழ்ந்த சம்பவத்தைப் பற்றிய தகவலொன்றுமு் தெரியாதாகையால், தம் முன்னே திடுமென்று ஈரத்துடன் வந்து நின்ற பஹ்ரீ தலைவரை அம்மையார் உற்று நோக்கினார்.

”யா உம்ம கலீல்! தங்கள் சார்பாக நானே பழி தீர்த்துக்கொண்டு விட்டேன்! என்னை மன்னியுங்கள்!” என்று கெஞ்சுகிற தொனியில் கேட்டுக்கொண்டே, சிரங் குனிந்தார் ருக்னுத்தீன்.

பக்ருத்தீனுட்படப் பல் புர்ஜீகள் இந்தக் கலகத்தில் பரிதாபகரமாய் உயிரிழந்தனர் என்பதை மட்டுமே யூகித்திருந்த ஷஜருத்துர், ருக்னுத்தீன் இப்படிப் பழி தீர்த்துக்கொண்டதாகக் கூறியதை விபரீதமாக ஒன்றும் நினைக்கவில்லை.

“உம்மை நான் மன்னிக்க வேண்டுவது என்ன இருக்கிறது? என்னை அமீர் தாவூத் வளர்த்து வாலிபமாக்கினார் என்னும் ஒரே காரணத்துக்காக நான் எல்லா புர்ஜீகளையும் என்றைக்குமே நேசித்ததில்லையே! பக்ருத்தீனையும் மற்ற புர்ஜீகளையும் நீர் பழி தீர்த்துக்கொண்டதற்காக நான் ஏன் வருந்தப்போகிறேன்?… ஆனால், நீர் என்ன பழி தீர்த்தாலும், என் கணவரின் மைந்தனைத் திருத்த முடியுமென்றா கருதுகின்றீர்?” என்று நீண்ட பெருமூச்சுடனே பொருமினார் ஷஜருத்தர். சென்ற இரவு தமக்கும் அந்தத் தூரான்ஷாவுக்கும் இடையே நடந்த பயங்கரமிக்க சம்பாஷணையையும் தாம் கேவலாமாக இழிவு செய்யப்பட்டதையும் அவர் அப்போது நினைத்துக்கொண்டார்.

“யா ஸாஹிபா! அவனைத் திருத்துவதாவது? அல்லது இனியும் திருத்த முயல்வதாவது? பாழான வஸ்துவைச் செப்பனிட பஹ்ரீகள் முயல்வார்கள் என்பதையும் செப்பனிட முடியாவிட்டால் அதை அடியுடன் அழித்துவிடுவார்கள் என்பதையும் தாங்கள் அறியமாட்டீர்களா!” என்று சூசகமாகப் பேசினார் ருக்னுத்தீன்.

ஏகசந்த கிராஹியான ஷஜருத்துர் இந்தப் பதிலைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போயினார். “…அப்படியானால் தூரான்ஷாவை…”

“ஆம்; கொன்று தீர்த்துவிட்டேன்!”

கன்னத்தில் பளாரென்று அறை விழுந்தாற் போன்ற இந்தக் கொடிய வார்த்தைகளைக் கேட்டதும் ஷஜருத்துர் மேனி சிறிது குலுங்கினார்.

ருக்னுத்தீனோ, வீரத்துடன் தலை நிமிர்ந்து நின்று, வன்மையுடன் பேசுகிறார்:- “யா ஸாஹிபா! தாங்கள் அந்தக் கயவன்மீது முன்னம் கொண்டிருந்த கரிசனத்தின் காரணமாக இன்னமும் அவனை முற்றும் வெறுக்கக்கூடிய நிலையை எட்டவில்லை என்பதை நான் நன்குணர்கிறேன். ஆனால், எவர்மாட்டுக் கரிசனம் காட்டுவது, தாயே! பெற்ற தந்தைக்கு மாற்றமிழைத்து, வளரத்த தங்களுக்குத் துரோகமிழைத்து, போற்றிய எங்களைப் புதை குழியின் பக்கம் சேர்ப்பிக்க நாடிய ஒரு நீசனிடமா கரிசனம் காட்டுவது? எதிரிகளிடமிருந்து இந்நாட்டைக் காப்பாற்றித் தானமாக நாம் வழங்கியதைப் பெற்ற ஒருவன் நம் தலைக்குமேல் கல்லை உருட்டுவதற்கா நாம் கரிசனம் காட்டுவது? அல்லு பகல் அனவரதமும் கண்விழித்து உண்மையான ராஜபக்தி விசுவாசத்தை எவனுக்காகக் காட்டி வந்தோமோ, அவன் நம்மை ராஜ துரோகிகளென்று குற்றஞ்சாட்டிக் கழுவில் ஏற்றுவதற்குத் திட்டமிடுவதையா நாம் அன்புடன் வரவேற்பது? ஸாலிஹ் போன்ற சிங்கங்கள் வீற்றிருந்த சிங்காசனத்தின் மீது சுண்டெலி போன்ற துன்மார்க்கன் ஒருவன் உட்கார்ந்து கொடுங்கோல் ஓச்சுவதையா நாம் பாராட்டுவது? உயிரிழந்த சவத்துக்கு உயரி கொடுத்து நாட் கடத்தி வடகிழக்கு எல்லையைக் கண்கொட்டாமல் பார்த்து நின்ற நம்முடைய உடல்களிலுள்ள உயிரை உறுஞ்ச ஊசலாடிய கயவனுக்கா நாம் கருணை காட்டுவது? மந்தருள் மாணிக்கமாய் ஜொலித்து மிளிரும் தங்களை அவ்வற்பன் நீசத்தனமாய் உதாசினப்படுத்தித் திட்டிக் குவித்ததற்கா நாம் பெருந்தன்மை காட்டுவது? குருடனுக்குக் கண் கொடுத்த தேவதையைக் கொல்வதற்குச் சூழ்ச்சி செய்த அக் குருட்டுப் பயலுக்கா நாம் பரிந்து பேசுவது? ஊனமான என் கண்ணின் நிமித்தமாக என்னைக் ‘குருடன், குருடன்,’ என நையாண்டியுடன் நையவைத்த துஷ்டனுக்கா நாம் அன்பு பூணுவது?

“யா ஸாஹபா! சிந்தியுங்கள்: நாம் எவ்வளவோ தூய்மையான உள்ளத்துடனும் துல்லியமான எண்ணத்துடனும் ஐயூபிகளின் ஸல்தனத்தை ஐயூபி ராஜ குமாரனுக்கே சேர்ப்பிக்க வேண்டுமென்னும் சத்திய நோக்குடனும் அல்லும் பகலும் அரும்பாடுபட்டோம். அதிலும், தலைமுறை தலைமுறையாக இந்த ஸல்தனத்துடன்  நேர்முகமாகவோ மறைமுகமாகவோ யாதொருவிதத் தொடர்பும் கொள்ளாத வேற்று நாட்டு மக்களாகிய நாமிருவேமும் அத்தனை அரும்பாடுகளையும் பட்டு, எல்லாவற்றையும் தியாகம் பண்ணினோம். ஊணை மறந்தோம்; உறக்கத்தைக் கைவிட்டோம்; மூமிய்யாவை மூடி வைத்தோம்; லூயீயைக் கைது செய்தோம்; புர்ஜீகளிடமிருந்து ஸல்தனத்தைக் காப்பாற்றிணோம்!

“இதற்காகவெல்லாம் நாம் அந்தத் துரோகிப் பயலிடமிருந்து என்ன பிரமாதமான கைம் மாற்றை எதிர்பார்த்தோம்? நாம் அவனைத் தியாகம் புரியச் சொன்னோமா? நாட்டைக் காப்பாற்றிக் கொடுத்த நமக்கு அவன் ஆயுளெல்லாம் அடிமையாய் இருக்க வேண்டுமென்று விரும்பினோமா? அல்லது இந்த ஸல்தனத்தில் நம் உற்றார் உறவினர் எவரையேனும் பெரிய பதவிக்கு உயர்த்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டோமா? அல்லது பெயரளவில் அவனை சுல்தானாக அமர்த்திவிட்டுத் தாங்களோ அல்லது நானோ இந் நாட்டின் மீது ஆட்சி செலுத்த நாடினோமா? அல்லது நாம் சொல்கிறபடிதான் அவன் ஆளவேண்டும்; இன்றேல் எல்லாவற்றையும் தொகைத்து விடுவோமென்று ஏதாவது வீண் குழப்பம் புரிந்தோமா?

“தலைக்கை தந்து தூக்கி விட்ட நம் கழுத்தை அவன் நெரித்தான். கபடமிக்க சூழ்ச்சிகள் வகுத்த புர்ஜீகளுடன் தோழமை பூண்டான். பகை நட்டான்; நட்புப் பிரிந்தான்; கெட்டு ஒழிந்தான். எந்தக் கையினால் யான் இந்த நாட்டை லூயீயிடமிருந்து காப்பாற்றி விட்டேனோ, அதே கரத்தால் இன்று அவனுடைய நெஞ்சைப் பிளந்து, ஹிருதயத்தைக் கழற்றி எடுத்து, அதைக் கசக்கிப் பிழிந்து வீசி எறியும் அதிருஷ்டத்தையும் பெற்றுக் கொண்டேன்! என் சார்பாக வேறு எவர் இந்த மகத்தான காரியத்தைச் செய்து முடித்திருந்தாலும், யான் காற்பங்கு கூடத் திருப்தி அடைந்திருக்க மாட்டேன். ஆனால், என் கோபத்துக்கு இலக்கான அச் சண்டாளன் என்னுடைய கைகளாலேயே என் மனம் களிக்கக் களிக்க ஒழுங்கான முறையில் நன்றாகப் பழிவாங்கப்பட்டதை என் ஆயுள் உள்ளமட்டும் எண்ணி எண்ணிப் பூரிப்பேன், தாயே! அன்று நான் லூயீயை வென்றேனே, அதுகூட எனக்குப் பெருநாளாகத் தோன்றவில்லை; ஆனால்; இன்றைத் தினந்தான் மிகப் பெரிய திருநாளாகத் தோன்றுகிறது. நான் கொலைக் குற்றந்தான் புரிந்திருக்கிறேன்; ஆனால், எப்படிப்பட்ட கொலை? மிகப் புனிதமான புண்ணியமிக்க, கண்ணியமான கொலை! இந்த ஸல்தனத்தில் செங்கோலை நிலைநாட்டுவதற்காகப் புரிந்த மாபெருங் கொலை அது!”

அதற்குமேலும் மூச்சடக்கிப் பேச முடியாமையால், ருக்னுத்தீன் தம் பிரசங்கத்தை நிறுத்தினார். அவர் எவ்வளவு திறந்த உள்ளத்துடன் இச்சொற்பொழிவை நிகழ்த்தினார் என்பதைத் தெளிவான அவர் வதனம் நிரூபித்துக் காட்டிற்று.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>

Related Articles

Leave a Comment