புர்ஜீ மம்லூக் தலைவரின் பிரேதம் அன்று மாலை ஒருவாறாக அடக்கப்பட்டு முடிந்தது. அப்பால்தான் முஈஜுத்தீனுக்குச் சுய உணர்வு வந்து, மூர்ச்சை தெளிந்தது. அந்த மாஜீ சுல்தானுக்கு எத்தனையோ வகைகளிலெல்லாம் உதவி புரிந்துவந்த ஃபக்ருத்தீனின்

பிரேதத்தைப் பின்தொடரும் பாக்கியங்கூட முஈஜுத்தீனுக்கு இல்லாமற் போய்விட்டது.

அந்த ஐபக் மூர்ச்சை தெளிந்து எழுந்ததும், தம்மைத் தாமே ஒருமுறை வெறிக்கப் பார்த்துக்கொண்டார். சற்று முன்வரை நிகழ்ந்த நிகழ்ச்சிகள் நிஜமாக நடந்தவைதாமா, கேட்ட வார்த்தைகள் நிஜமாய்ப் பேசப்பட்டவைதாமா என்பதையே அவரால் நிதானிக்க முடியவில்லை. அவ் அறையிலே மூலைக்கு மூலை சிதறிக் கிடந்த பீங்கான் ஓடுகளும் கண்ணாடித் துண்டுகளும் அப்படியப்படியே கிடந்தன. கடுங்காவற் கைதியாகப் பாதாளச் சிறையறையிலே பல்லாண்டுகள் வரை அடைக்கப்பட்டுக் கிடந்த கைதியொருவன் தப்பி வெளியேறச் செய்த முயற்சிகளெல்லாம் உருப்படாமற் போய், அவன் வெறிப்பிடித்துப் போய்க் குந்திக்கிடக்கும் தோற்றத்தையும் நிலைமையையுமே முஈஜுத்தீன் எட்டிவிட்டார்.

சற்றுநேரம் சென்றது; முஈஜுத்தீனின் மூளை ஒருநிலைப்பட்டது. இப்பொழுது அவரால் ஓரளவுக்குச் சிந்திக்கவும் நிதானிக்கவும் முடிந்தது. ஷஜருத்துர் எப்படிச் சாவாமல் தப்பிக் கொண்டார்? ஒரு வேளை ஃபக்ருத்தீன் நஞ்சென்றுச் சொல்லித் தந்த தந்தச் சிமிழுக்குள்ளே ஒன்றுமில்லாமற் போய்விட்டதோ? ஃபக்ருத்தீன் ஏன், எப்படி, எதற்காக திடீரென்று மாள வேண்டும்? அந்த இழவுச் செய்தியைக்கேட்ட சுல்தானாவின் முகத்தில் ஏன் ஒரு மாறுதலும் தோன்றவில்லை? எல்லாம் ஒரே குழப்பமாய்ப்போய், அவருடைய மூளையைப் புயலெழுந்த கடலெனப் பெருங் கலக்குக் கலக்கிவிட்டது. சிந்திக்கச் சிந்திக்க, மீண்டும் மயக்கம் வரும்போல் தெரிந்தது; அல்லது பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது.

சிலந்திக் கூண்டின் மெல்லிய நூலிழையின் நுனியைக் கண்டுபிடித்தாலும் பிடிக்கலாம்; ஆனால், இப் பெரிய பிரச்சினைக்குத் தலைப்பைக் கண்டுபிடிக்க இயலாதென்பதை உணர்ந்த முஈஜுத்தீன் வெறுப்புக் கலந்த ஏமாற்றத்துடனே மெல்ல எழுந்து, தள்ளாடித் தள்ளாடிக்கொண்டே அவ் வறையின் வாயிலை அண்மினார். இப்பொழுது நடுப்பகல் வேளையா, அல்லது மாலை நேரமா, அல்லது இரவின் முற்பகுதியா என்பதைக்கூட அவரால் ஓர்ந்துகொள்ள இயலவில்லை. என்னெனின், பசியாலும் தாகத்தாலும் பற்பல அதிர்ச்சியாலும் அவருடைய நேத்திரங்கள் பஞ்சடைந்து போயிருந்தன.

எங்கும் நிச்சப்தமாயிருந்தது. வழக்கத்துக்கு விரோதமாக வாயிலண்டைக்கூட ஒரு காவலாளியோ சேவகனோ காணப்படவில்லை. ஈனசுரத்தில் அவர் கூப்பிட்ட கூப்பீடுகளுக்குப் பதில் கிடைக்கவில்லை. எங்கும் ஒரே நிச்சப்தம்! கப்ருஸ்தானில் காணப்படுகிற பயங்கர நிச்சப்தமே எங்கும் நிலவியிருந்தது. முஈஜுத்தீனுக்கோ, கொஞ்சங் கொஞ்சமாய் உயிர் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தது. உயிர் ஊசலாடிய தமக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்டுச் சாவடிக்கவே ஷஜருத்துர் முடிவு கட்டி விட்டதாக எண்ணிக்கொண்டு விட்டார். அந்தோ, பரிதாபம்!

கடும் பசியால் காதடைத்துப் போயிருப்பினும் எவரோ இருவர் சற்றுப் பலமான குரலில் சிறிது தூரத்தில் பேசிக்கொள்வது ஐபக்கின் செவியில் விழுந்தது. ஓசை வந்த திக்கை நோக்கி உற்றுக் கேட்டார்.

“புர்ஜீகளின் வலையில் விழுந்தவன் எவன்தான் தப்பமுடியும்? நம்முடைய தூரான்ஷாவை விடவா வேறு ஓர் உதாரணம் வேண்டும்?” என்று ஒரு குரல் கூறிற்று.

“அது பழைய காலத்துக் கதையல்லவா! இன்றைக்கு நடப்பதைப் பார்! எந்த புர்ஜீ சுல்தானாவுக்கு விஷமிட நினைத்தானோ, அவனை அதே வி­த்தால் கொன்றார் நம் மலிக்கா! உடந்தைக் குற்றவாளியான முஈஜுத்தீனின் கதி என்னவாய்ப்போய் முடியுமென்பதை எவரால் முற்கூட்டிச் சொல்ல முடியும்? போயும் போயும் இந்தப் புல்லுரு, ஃபக்ருத்தீனிடம் சரணடையுமா? கேடுகாலமே, ஐயோ கேடுகாலம்!” என்று மற்றொரு குரல் சொன்னது.

இது கேட்டு முஈஜுத்தீன் திடுக்கிட்டார். ஃபக்ருத்தீனும் தாமும் சேர்ந்துப்போட்ட சதித் திட்டம் அடியோடு குட்டிச்சுவராய்ப் போனது மல்லாமல், அந்த புர்ஜீ மம்லூக் அதே விஷத்துக்குப் பலியானான் என்பதும், உடந்தைக் குற்றவாளியாயிருந்த தாமும் மாட்டிக்கொண்டுவிட்டார் என்பதும் அவருக்குப் பளிச்சென்று புலப்பட்டன. இவ் வெண்ணம் உதயமானதும் எங்கிருந்தோ ஒரு வீர உணர்ச்சி பிறந்துவிட்டது. – ஆம்! இப்போதே ஓடிப்போக வேண்டும்! ஷஜருத்துர்ரின் கோபக் கனல் எட்டிப்பிடிக்க முடியாத தொலை தூரத்துக்குக் காற்றாய்ப் பறந்தோடிப் பாய்ந்துபோக வேண்டும்! கசாப்புக்காரனின் கத்திக்குக்கீழே சிக்கிய இறைச்சித் துண்டு படுகிற பாட்டிலிருந்து தமதுடல் தப்பவேண்டுமானால், உலகின் கண்காணாத மூலையிலே சென்று பதுங்கிக்கொள்ள வேண்டும்! சிறகு முளைத்தில்லை யென்றாலும், காடையைவிடக் கடுவேகத்தில் பறத்து ஓடிவிடவேண்டும்! ஓட்டோட்டமாய் ஓடிப்போய்விட வேண்டும்!

முஈஜுத்தீன் ஓடவேண்டுமென்று நினைத்த வேகத்தை விட அதிகமான வேகத்திலே அவருடைய எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. மனோ வேகத்தை நிகர்க்ககூடிய மற்றொரு வேகம் எங்கிருக்கிறது, இவ் அவனியில்!

இவ் வெண்ணத்தால் எழுந்த புதிய ஊக்கத்தைப் பெற்றுக் கொண்ட முஈஜுத்தீன் அங்குமிங்கும் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். தம்மை ஒருவரும் கவனிக்கவில்லை என்பதை நன்றாய்த் தெரிந்துகொண்டு, அவர் மெல்ல நழுவினார். சென்ற இரவு இருளிலே பதுங்கிச் சென்றதுபோல் இப்பொழுது பையச் செல்லவில்லை; ஆனால், அசட்டுத் துணிச்சலால் பிறந்த விசித்திர வீரமாகவே அது காணப்பட்டது. அவர் வேகமாய் நடக்க ஆரம்பித்தார். சில நிமிஷங்களில் அரண்மனையை அடுத்திருக்கிற நந்தவனத்துள் புகுந்துவிட்டார். அப்போதுதான் அவருக்கு அது முன்னிரவின் முதல் ஜாமம் என்பது தெரிய வந்தது. காலையில் மயக்கமுற்று அந்தப்புர அறையில் வீழ்ந்த அவர் சூரியாஸ்தமயம் வரை அந்த இடத்திலேயே அப்படியே கிடந்துவிட்டார் என்பதும் அவருக்கு அப்போதுதான் விளக்கமாயிற்று. ஆயினும், அவர் நிற்கவில்லை; கால்போனவழி நடந்து கொண்டேயிருந்தார்.

அந்த நந்தவனத்தையும் அவர் அதி சீக்கிரம் கடந்துவிட்டார். இப்பொழுது அவர் ஜனசஞ்சாரமே அற்ற ஓர் ஒற்றையடிப் பாதையூடே வழிநடந்துகொண்டிருந்தார். ஆத்திரம் முன்னே இழுக்க, அவதி பின்னே பிடித்துத்தள்ள, உயிர் தப்ப வேண்டுமே என்னும் ஒரே குறியின்மீது கண்ணாய்ச் சென்று கொண்டேயிருந்தார். அவர் மனிதனாய்ப் பிறந்து இதுவரை இப்படி நடந்ததுமில்லை; அல்லது இவ்வளவு தூரம் நடந்ததுமில்லை. உயிர் பிழைக்க வேண்டுமென்றால், பசியும் அயர்வும் பிரமாதமான தடங்கல்களா?

ஆனால், அவருக்கு ஒரே ஓர் அச்சம் மட்டும் நெஞ்சைத் துடிக்கச் செய்துகொண் டிருந்தது: அஃதாவது இப்படி ஜனசஞ்சாரமே அற்ற இடத்தில் ஏதாவது விஷ ஜந்து கடித்து மாண்டாலும் பரவாயில்லை; ஆனால், மீண்டும் ஷஜருத்துர் முன்னே கொண்டு நிறுத்தப்படக் கூடாதே என்பதுதான் அவ் வச்சம். இந்நேரம் தாமிருந்த அறையை எவரேனும் வந்து எட்டிப் பார்த்திருக்கக் கூடுமென்றும் தம்மைக் காணாத விஷயம் சுல்தானாவுக்கு எட்டுவிக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் யூகித்துக் கொண்டார். எனவே, இதுவரை நடந்த நடை இப்பொழுது ஓட்டமாக உருப்பெற்றுக் கொண்டுவிட்டது. ஓடினார், ஓடினார், ஓடினார், ஒரே ஓட்டமாக.

ஆகாரம் உட்கொண்டு இருபத்து நான்கு மணி நேரத்துக்கு மேலாகிவிட்டபடியாலும் அதிலும் முந்தையிரவு சந்துஷ்டி மிகுதியால் சரியாகக்கூட உணவருந்தாதபடியாலும் அவரது உடல் சோர்ந்து விட்டது. மேனியில் தளர்ச்சி மிகுதியால் அப்படியே சுருண்டு இடைவழியில் படுத்துவிட்டார். உணர்ச்சி இருந்தும் புண்ணியமில்லை; உயிரிருந்தும் பயனில்லை. அப்படியே கிடந்தார் கட்டையைப்போலே.

அவ் வேளையில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது; வெளிநாடுகளுக்குச் சென்று வர்த்தகம் புரிந்துவிட்டு, பண்டங்களை விற்றுப் பொன்னாக்கிக்கொண்டு, சேகரித்த நிதியை இடுப்பைச் சுற்றிக் கட்டிக்கொண்டு, தன் பெண்ணொட்டகத்தை நடப்பாட்டிக்கொண்டே கால்நடையாய் வந்த வர்த்தகனொருவன் அவ் வழியே வந்தான். அவன் பல வருடங்களுக்கு முன்னே மிஸ்ரைவிட்டு வெளியேறி வயிற்றுப் பிழைப்புக்காகச் சென்றவன்; மீண்டும் இப்போதுதான் திரும்புகிறான். அவனுக்கு இப்போது மிஸ்ரை யார் ஆளுகிறார் என்பதும் தெரியாது; அல்லது ஐயூபி வம்சம் அஸ்தமித்துப் போனதும் தெரியாது. பற்றாக்குறைக்கு எழுதப்படிக்கத் தெரியாதவன் அவன்; முரட்டாத்மா. அப்படிப்பட்ட வர்த்தகனின் காலிடறுகிற இடத்திலே நெடுஞ்சாங்கிடையாக நீட்டிக்கிடந்தார் ஐபக்.

கால் தடுக்கியதைப் பார்த்து அவ் வர்த்தகன், அது என்ன மரக்கட்டை என்று தெரிந்து கொள்வதற்காகக் குனிந்து உற்றுப் பார்த்தான். அது மரக்கட்டையல்ல, மனித மேனி என்பதைக் கண்டதும் திடுக்கிட்டான். செத்த பிரேதம் ஏன் இப்படி நாதியற்று நடுவழியில் கிடக்கவேண்டுமென்று சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டான். ஏனென்றால், அந்தக் காலங்களில் வழிப்போக்கர்களாய் இருப்பவர்கள் சுமந்து செல்கிற செல்வத்தைப் பறிப்பதற்குப் பாலைவன பதவீகள் இம்மாதிரியான தந்திரத்தைக் கையாள்வதுண்டு: ஒரு பிரேதத்தை வழியிலே போட்டுவைத்து விடுவார்கள். வருகிற வழிப்போக்கன் காலிடறியதைக் கண்டு திடுக்கிட்டுக் குனிந்து நிமிர்வதற்குள், அருகில் புதரிடைப் பதுங்கியிருக்கும் கள்வர் கூட்டம் குபீரெனப் பாய்ந்துவந்து அவனைக் கொள்ளையடித்துக் கொலையும் புரிந்து விடும். இந்தக் தந்திரம் அந்த வர்த்தகனுக்குத் தெரியுமாதலால், ஒருமுறை தன்னைச் சுற்றிப் பார்த்துக் கொண்டான். அவன் எதிர்ப்பார்த்தது நடக்கவில்லை. மீண்டும் குனிந்து பார்த்த பொழுது, வழியிலே கிடந்தது பிணமன்று என்பதும் உயிருள்ள மனிதனென்பதும் தெரியவந்தன.

புழுதி படிந்த தாடியும், தலைப்பாகையற்ற மொட்டைத் தலையும், மேலங்கியற்ற முண்டா சட்டையும் அந்த முஈஜுத்தீனை பரம நீசனாய்க் காட்டிக்கொண்டிருந்தன. ஹஷீஷ் என்னும் போதை மருந்தைச் சுவைத்து முகடு முட்டிப் போன பெரும் போதைக்காரன் இப்படித் தாறுமாறாய் நடுவழியில் கிடக்கிறான் போலுமென்று அவ் வர்த்தகன் எண்ணிக்கொண்டான்.

“நீ நாசமாய்ப் போக! இஸ்லாத்திலே பிறந்துவிட்டு ஏண்டா அநியாயம் புரிகிறாய்? குடம் குடமாய்ச் சாராயம் குடிப்பது மட்டுமே ஹராம்; இப்பொழுது இப்படி தலைகால் தெரியாமல் உருண்டு கிடக்கச் செய்யும் ஹஷீஷைத் தின்பது மட்டும் ஹலாலோ? அக்கிரமம்! அக்கிரமம்! தூய இஸலாத்தைப் பாழ்படுத்த வந்த எந்தப் பாவி, இப்படிக் கஞ்சாப் புகையையும் அபின் ஹல்வாவையும் ஹஷீஷ் லேகியத்தையும் முஸ்லிம்கள் உட்கொள்வது அனுமதிக்கப்பட்ட காரியமென்று ஃபத்வா விடுத்தானோ? அவனும் அவனைப் பின்பற்றுகிறர்களும் மீளாத நரகத்திலே போய்வீழ! போதை தருகிற எந்த வஸ்துவையும் ஒரு சிறு துளியே சாப்பிடுவதும் ஹராம் என்று அன்றொரு நாள் ஒரு படித்த மேதாவி இமாம் பைத்துல்முக்கத்தஸ் மஸ்ஜிதிலே பிரசங்கம் பண்ணினார். இந்த மிஸ்ரிலே என்னடாவென்றால், கமர் என்றால் சாராயம் என்றுதான் அர்த்தமாம்! ஆகையால் சாராயம்குடிப்பது மட்டும் ஹராமாம்! பலக் கணக்கில் அபின் உருண்டைகளையும் ஹஷீஷ் மருந்துகளையும் பூரணாதி லேகியங்களையும் உருட்டி உருட்டி உள்ளுக்குத் தள்ளுவது ஹலாலாம்! – ஏ, ஹஷீஷ் தின்ற மிருகமே! நீ நாசமாய்ப் போக!” என்று வாய்விட்டுச் சத்தமிட்டுச் சபித்துக் குவித்தான், அவ் வர்த்தகன். படிக்காதவனாய் இருந்தாலும் பேராசைக்காரனாயிருந்தாலும் தூய இஸ்லாத்திலே முரட்டுப் பக்திமிக்க நேர்மையான முஸ்லிம் வர்த்தகன் அவன்.

முஈஜீத்தீனுக்கு ஒன்றும் பேச முடியவில்லை. வாயை மட்டும் முதலை பிளப்பதுபோலே பிளந்து பிளந்து மூடினார். அவ் வர்த்தகனுக்கு இரக்கம் பிறந்தது. தன் ஒட்டகத்தின் முதுகின் மீது கிடந்த தோல் துருத்தியை எடுத்து, முஈஜுத்தீனின் வாயில், மேலும் திட்டிக்கொண்டே தண்ணீரூற்றினான். ஐபக்குக்கு மூர்ச்சை தெளிந்தது. மெல்ல எழுந்திருக்க முயன்றார்; அவ் வர்த்தகன் ஒத்ததாசை புரிந்தான்.

“இப்படி அந்த ஹஷீஷைத் தின்பானேன்? இந்த அவதியையெல்லாம் படுவானேன்? நீயும் உன்னுடைய ஹஷீஷும் சேர்ந்து நாசமாய்ப் போகக் கடவீர்கள்!” என்று இன்னமும் சபித்தான் அவ் வர்த்தகன்.

“ஏ, மரியாதைக்குரிய ஷெய்கே! என்னை மன்னியுங்கள். நான் ஒன்றும் குடிகாரனல்ல; அல்லது தாங்கள் நினைத்துக் கொண்டிருப்பதேபோல ஹஷீஷ் சாப்பிடுபவனுமல்ல. நானொரு மூஃமின். என்னை ஒரு சில வழிப்பறி கள்வர்கள் இந் நடுக்காட்டில் கொள்ளையடித்து இப்படிப் புடைத்துவிட்டுப் போய்விட்டார்கள். நான் செத்துவிட்டதாகக் கருதி ஓடிவிட்டார்கள். – ஆ என் பசி காதடைக்கிறதே! ஒரு துண்டு ரொட்டி கொடுங்களே!” என்று துடிதுடித்தார். முஈஜுத்தீன்.

மீண்டும் கீழே விழாமல் அணைத்துப் பிடித்துக்கொண்ட வர்த்தகன் அவரை நன்றாய் உற்று நோக்கினான். இந்தப் பேர்வழி அபின் சாப்பிடுபவரல்லர் என்பதைக் கண்டுகொண்டான். உடனே தன் ஒட்டகத்தின் மேலிருந்த சிறு மூட்டையொன்றை அவிழ்த்து, தன் வழிப்பிரயாணத்துக்காக வைத்துக்கொண்டிருந்த உணவையெடுத்து முஈஜுத்தீனுக்குக் கருணையோடு நீட்டினான். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமைச் சந்தித்து விட்டால், தானே பிறக்கிற கருணையைப் பார்த்தீர்களா?

சென்ற பல ஆண்டுகளாக அரண்மனை உணவுகளை வகை வகையாய் உண்டு தெவிட்டிப் போயிருந்த முஈஜுத்தீனுக்கு அவ்வர்த்தகன் கொடுத்த காய்ந்த பேரீச்சங் காய்களும், உலர்ந்துபோன ‘பார்லி’ ரொட்டித் துண்டும் சுவர்க்கலோகத்துப் பெயர்போன போஜனம் போலிருந்தன. பசித்துப் புசிக்கும்போது தானே பண்டங்களின் ருசி தெரியும்?

வயிறார உண்டு முடித்ததும், முஈஜுத்தீன் தம் உயிரைக் காப்பாற்றிய மனிதனை ஏறிட்டு நோக்கினார்.

“சகோதரரே! ஆண்டவன் உமக்கு என்றென்றும் சுவர்க்கானந்தப் பெருஞ்சுகத்தைத் தந்து ரக்ஷிக்கட்டும்! உமது நன்றியை நான் என்றும் றவேன்!” என்று ஏப்பமிட்டுக் கொண்டே நன்றி கூறினார் முஈஜுத்தீன்.

“நண்பரே! என்னை மன்னியும். நான் தவறுதலாக உம்மை ஹஷீஷ் சாப்பிடுகிற மதவிரோதி என்று நினைத்துக் கண்டபடியெல்லாம் திட்டிவிட்டேன். என்னை மன்னித்து விடும்!” என்று அவ் வர்த்தகன் பதிலீந்தான்.

“நான் உம்மை மன்னிப்பதாவது! ஆண்டவன் தற்செயலாய் உம்மை இங்கனுப்பி யில்லாவிட்டால், நான் இந்நேரம் மறுவுலகம் சென்றிருப்பேனே! நான் உம்மை மன்னிப்பதாவது! நல்ல கதை! -ஷெ­ய்கே! நீர் எந்த ஊர்! இங்கே எங்கே வந்தீர்? உம்முடைய ஒட்டகத்தின்மீது போர்த்திருக்கிற கம்பளத்தைப் பார்த்தால், அது பஸராவில் வாங்கப்பட்டது போல் தோன்றுகிறதே?”

“ஏன்? நீர் பஸாராவுக்கு போயிருக்கிறீரோ? அவ்வளவு குறிப்பாயும் நுணுக்கமாயும் கவனித்துக் கண்டுபிடித்து விட்டீரே!”

முஈஜுத்தீன் நெடுமூச்செறிந்தார். மலிக்குல் அஷ்ரப்புடன் சேர்ந்து முன்னொரு சமயத்தில் கூட்டாட்சி புரிந்துகொண்டிருந்த காலத்தில் அவர் ஷாமுக்குச் சென்றதும், ஷாம் தகராறுகள் முடிந்த பிறகு இறாக்குக்குச் சென்றதும், பாக்தாத், பஸரா முதலிய பெயர்போன நகரங்களைக் கண்டுவந்ததும், அப்போதெல்லாம் அந்நகர் மக்கள் தம்மை ‘மிஸ்ரின் சுல்தான்’ என்று உற்றுஉற்று நோக்கியதும் அவரது நினைவில் வந்து நின்றன.

“ஒஹோ! உமக்கு ஞாபகமூட்டத் தகாத வொன்றை நான் நினைவுபடுத்தி விட்டேன்போலிருக்கிறது. சரி, மன்னியும். எழுந்திரும், போவோம்! இங்கேயே குந்திக்கிடந்தால், உம்மை விட்டுச் சென்ற கொள்ளையர் கூட்டம் திரும்பிவரப் போகிறது!” என்று பேசிக்கொண்டே அவ் வர்த்தகன் எழுந்தான்.

தம்மை அரண்மனைக் காவலாளிகள் துரத்திக்கொண்டு வருகிறார்களோ என்பதை ஒருமுறை சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்ட முஈஜுத்தீனும் உடனெழுந்தார். தப்பிப் பிழைத்துக் கொள்ளவே ஆண்டவன் இம்மாதிரியான அரிய தருணத்தை இந் நேரத்தில் தந்து ரக்ஷித்தான் போலுமென்று கருதிவிட்ட அவர் முன்பின் யோசியாமல் அவ் வர்த்தகன் பின்னேயே நடந்தார். நள்ளிரவு வருவதற்கு முன்னே அவ்விருவரும் காஹிராவின் எல்லையைக் கடந்துவிட்டார்கள். கடல்போன்ற நீலநதி அலையோசை கிளப்பிக்கொண்டிருக்கிற கரையோரத்தில் அவர்கள் வந்து நின்றார்கள்.

“ஏ, பெரியாரே! நான் ஆற்றைக் கடந்து அக்கரையிலிருக்கிற கெஜே என்னும் பட்டணத்துக்குப் போகிறேன். நீரும் என்னுடன் வருகிறீரா? அல்லது வேறெங்காவது நீர் போகிறீரா?”என்று அவ் வர்த்தகன் நதிக்கரையில் நின்றுகொண்டு அன்புடனே வினவினான்.

“ஏ, நல்ல குணம் படைத்த ஷெய்கே! நான் வேறெங்கே போகப்போகிறேன்? உமக்கு விருப்பமிருப்பின், நானும் கெஜே நகருக்கு வந்துவிடுகிறேன். எனக்கு மனைவி மக்களோ, உற்றார் பெற்றோரோ, வேறு உறவினரோ, இம் மிஸ்ரில் எவருமில்லை. கையிலிருந்த பொருளையெல்லாம் கொள்ளைக் கூட்டத்தினருக்குக் கொட்டிக் கொடுத்துவிட்டேன்!” என்று ஒரு போடு போட்டுத் தமது ஈரக் கண்ணைத் துடைத்துக்கொண்டார் ஐபக்.

அந்த வேளையில் படவோட்டும் கறுப்பு நீகிரோ ஒருவன் அங்கு வந்து சேர்ந்தான். ஒரு பெண்ணொட்டகத்தை வைத்துக்கொண்டு இரண்டு பேர்வழிகள் ஆற்றறைக் கடப்பதற்காகவே அங்கு அந் நேரத்தில் நின்றுகொண்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டான்.

“எஜமான்களே! இந்த ஏழைப் படவோட்டியின் உதவி தங்களுக்குத் தேவைப்படுகிறதோ?” என்று மரியாதையாய்க் கேட்டான்.

அவ்விருவரும் அவனைக் கூர்ந்து நோக்கினர்.

“உன் படவு எங்கே இருக்கிறது?”என்று இருவரும் ஏக காலத்தில் கேட்டனர்.

“இதோ, தெற்கே ஒரு பர்ஸாங் தூரத்திலிருக்கிறது. வாருங்கள் போவோம். உங்கள் இருவரையும், இவ் வொட்டகத்தையும் அக் கரையில் பத்திரமாய்க் கொண்டுபோய் விட்டுவிடுகிறேன். ஒரு தீனார் கொடுங்கள் போதும்!” என்று காட்டுத் தொண்டையால் கத்திக்கொண்டே, அவ் வர்த்தகனின் கரத்திடையிருந்த ஒட்டகக் கயிற்றைத் தான் பற்றிக்கொண்டு விட்டான்.

சற்று நேரத்தில் அந்த ஹபஷீயின் படவிலே எல்லாரும் போய் ஏறிக்கொண்டார்கள். படவு மிதந்துகொண்டே மேற்கு நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. இதுவரை யாதொரு தடங்கலுமின்றித் தப்பிவிட்டார் முஈஜுத்தீன்! அவராலே கூடத் தாம் இவ்வளவு சுலபமாக ஷஜருத்துர்ரின் பிடியினின்று தப்பிய அற்புதத்தை நம்ப முடியவில்லை! காற்று வாக்கில் படவு காஹிராவை விட்டுக் கொஞ்சங் கொஞ்சமாக அக் கரை நோக்கிப் போய்க்கொண்டே இருந்தது.

ஆற்றின் நடுப்பாதையைக் கடந்ததும் முஈஜுத்தீன் சற்று நிதானமாக அமைதியடைந்து, தாராளமாக மூச்சிழுத்துக் கொண்டார். இனிமேல் தம்மை எவரே தொடர முடியுமென்னும் அகம்பாவம் சிறிது தோன்றிவிட்டது. இன்னம் தாராளமாக அந் நீலநதியின் இளங்காற்றைச் சுவாசித்துக்கொண்டார்.

அவ் வர்த்தகனுக்கோ, ஒன்றும் புரியவில்லை. இவர் பார்க்கிற பார்வையும் மூச்சு விடுகிற மாதிரியும் விழிக்கிற விழிப்பும் அவனுடைய உள்ளத்துள் பேரதிசயத்தை மூட்டின. மெளனமாகக் கவனித்தான். தம் தலை தப்பியதை நினைத்து வெய்துயிர்க்கிறார் முஈஜுத்தீன் என்பதை அவன் எங்ஙனம் உணர்வான்?

நீல நதியின் அக்கரையை எட்டியதும் அவர்கள் படவை விட்டு இறங்கினார்கள். வர்த்தகன் படவுகாரனின் கூலியைக் கொடுத்துவிட்டு, வெண்மணற் காட்டிலே வழிநடக்கத் துவங்கினான்.

“உம்முடைய பெயர் என்ன?”என்று இப்போது நிதானமாக வினவினான் அவ் வர்த்தகன்.

“முஈஜ்!”என்று அவர் விடையீந்தார்.

“உமக்குக் காஹிராவே சொந்த ஊரோ?”

“ஆம். அங்கே சிலகாலம் தங்கியதுண்டு.”

“இப்போதுங் கூட அந்த ஸாலிஹ்தானே அரசாட்சி புரிந்துவருகிறார்?”

“ஸாலிஹா! நீர் எந்த உலகத்தில் இருக்கிறீர்? மிஸ்ரிலே ஐயூபிகளின் ஆட்சி அஸ்தமித்து வெகுகாலமாகிவிட்டதே!” என்று வியப்புடனே விடையீந்தார் முஈஜுத்தீன்.

“ஐயூபிகளின் ஆட்சி அஸ்தமித்து விட்டதா! அப்படியானால், இப்பொழுது யார் ஆளுகிறார்?”

“ஷஜருத்துர் என்னும் ஒரு பெண்பிள்ளை!”

“ஷஜருத்துர்! ஷஜருத்துர்! – இஃதென்ன வின்னியாசமான பெயராய் இருக்கிறதே! நான் கேட்டதுகூட இல்லையே, இம்மாதிரியான நூதனப் பெயரை!”

“ஆம். அவள் பெயர்மட்டும் அதிசயமானதல்ல; அவளேகூட இவ்வுலகத்தின் எட்டாவது அதிசயம்!”

“நீர் அவளைப் பார்த்திருக்கிறீரோ?”

முஈஜுத்தீன் நெஞ்சு சுறுக்கென்றது. பதில் சொல்ல நாவெழவில்லை.

“ஒரு பெண்பிள்ளை இஸ்லாமிய கிலாஃபத் ராஜ்யத்திலே நாடாள்வதாவது? என்ன ஆச்சரியம்!”

முஈஜ் நெடுமூச்செறிந்தார். “அமீருல் மூஃமினீன் முஸ்தஃஸிம் பில்லாஹ்வே அவளை வீழ்த்த முயன்றார்; முடியவில்லை!” என்று சுருக்கமாய் விடையீந்தார்.

“என்ன! கலீஃபாவாலேயே ஒரு பொம்மனாட்டியை வீழ்த்த முடியவில்லையா! அவள் என்ன அத்துணைப் பெரிய மந்திரீக வித்தைகற்ற சூனியக்காரியோ?”

“அவளைப்பற்றி எல்லாரும் அப்படித்தான் கூறிக்கொள்கிறார்கள். உலகத்திலேயே இதுவரை இந்த மாதிரியான ஓர் அற்புதப் பெண்பிள்ளை பிறந்ததில்லை என்று கூடச் சொல்லிக் கொள்கிறார்கள்!”

“ஆமாம்! அவள் எப்படிப் பட்டத்துக்கு வந்தாள்? சுல்தான் ஸாலிஹுக்குத்தான் ஒரு மைந்தன் இருந்தானே? அவன் ஷாமுக்குக் கூடச்சென்று குவாரிஜம் ஷாவைக் கொன்று போட்டான் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேனே!”

“அதெல்லாம் பெரிய கதை! சாவகாசமாய்ச் சொல்லுகிறேன். இந்த மிஸ்ரின் நாற்றம் பிடித்த அரசியலை மூக்கைப் பிடித்துக்கொண்டுதான் மோந்து பார்க்கவேண்டும்! இந்த நாற்றம் இன்றைக்கு, நாளைக்கு மறையக் கூடியாதா? உலகம் உள்ளளவும் அழுகி நாறிக்கொண்டேயிருக்கும்!”

பொழுது புலர்ந்து நெடுநேரங் கழிந்து அவ்விருவரும் கெஜேயை எட்டினார்கள். அங்கிருந்த ஒரு பாழடைந்த வீடு, பாதி இடிந்தும் இடியாமலும் கிலமாய் நின்றுகொண்டிருந்தது. எங்குப் பார்த்தாலும் சிலந்திக்கூடுகள் காணப்பட்டன. வெளவால் நத்தி அண்டுவதால் எழுந்த கெட்ட பிழுக்கை நாற்றம் வீசிக்கொண்டிருந்தது.

“இதுதான் என் இல்லம்,” என்று சுட்டிக் காட்டினான் அவ் வர்த்தகன்.

சுவர்க்கலோகம் போன்ற காஹிரா அரண்மனையில் சுகமான வாசம் செய்த முஈஜுத்தீன் நரகலோகத்தின் தகர்ந்த சுடுகாடு போலிருந்த இந்த வெளவானத்தி வீட்டை மேலுங் கீழும் கூர்ந்து நோக்கினார்.

“குடைநிழ லிருந்து குஞ்சர மூர்ந்தோர், நடைமெலிந் தோரூர் நண்ணிணும் நண்ணுவர்!” என்னும் அநியாய கதிக்கு ஆளாகிப்போன அந்த ‘ஆடுதன் ராஜா’வாகிய மாஜீ மலிக் ஐபக் அப்படியே நெற்றியில் கையை வைத்துக்கொண்டு குந்திவிட்டார். எப்படிப்பட்ட பெருஞ் சோகத்துக்கும் பலியானவனின் முகங்கூட அந்த முஈஜுத்தீனின் ‘மூன்றாம் பேஸ்து வைத்த’ முகத்தைப்போல் இருந்திருக்காது. அவ்வளவு பரிதாபகரமாகவும் இரங்கத்தக்கதாகவும் அவருடைய தோற்றம் காட்சியளித்தது.

“யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும்–ஏனை
வினையுலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள.” *

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

Image courtesy: shirleytwofeathers.com

 

* நாலடியார் – அறத்துப்பால், செல்வம் நிலையாமை.

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment