அல் மலிக்குஸ் ஸாலிஹ் நஜ்முத்தீன் ஐயூபி ஹிஜ்ரி 647, ஷஃபான், பிறை 15-இல் மரனமடைந்தார் என்பதையும் அம் மரணம் சம்பவித்து பல நாட்கள் வரை அவருடைய சடலம் அடக்கப்படவில்லை என்பதையும் இளவரசர் தூரான்ஷா காஹிராவுக்குள்ளே நுழைகிற வரையில் எல்லாம் இரகசியமாகவே மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்பதையும் முன்னம் நாம் விவரித்தோமல்லவா?
அதன் பின்னர், பல நாட்கள்வரை ஸல்தனத் முழுதுமே துக்கங்காத்து வந்தது. இறுதியாக, அவ் வாண்டின் ஷவ்வால் மாத இறுதியிலே (கி.பி. 1250, ஜனவரியில்) இளவரசர் தூரான்ஷா மகுடமேற்றுப் பட்டத்துக்கு வந்துவிட்டார். இவர் பட்டாபிஷேகம் செய்து கொண்டபொழுது வழக்கமாக நடைபெறுகிற ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிகள் ஒன்றுமே பிரமாதமாக நிகழ்வுறவில்லை. என்னெனின், மக்களெல்லாரின் பிரீதிக்கும் அன்புக்கும் பாத்திரரான சுல்தானா இன்னமும் தங்கணவருக்காக இத்தாவிலே துக்கங்காத்திருந்தபடியால், வேடிக்கையான கேளிக்கைகள் எவையும் கொண்டாடப்படாமல், தூரான்ஷா சிம்மாசனத்தின்மீது சம்பிரதாயமாக அமர்த்தப்பட்டார்.
இளவரசராய் இருந்தவர், இதுபோது ஐயூபிவம்ச ஏழாவது சுல்தானாக உயர்ந்துவிட்டார். ஆகவே, அவர் தமது பெயரை மாற்றிவைத்துக் கொண்டார்; அவர் பட்டத்துக்கு வந்ததிலிருந்து தூரான்ஷா என்னும் பெயரைத் துறந்து, அல்மலிக்குல் முஅல்லம் என்று தம்மை அழைத்துக் கொண்டார்.
சுல்தான் மலிக்குல் முஅல்லம் அரியாசனம் ஏறி அமர்ந்ததும் கவனிக்கவேண்டிய மிகவும் அவசரமான அலுவல்கள் பலப்பல இருந்தன. அவற்றுளெல்லாம் தலைசிறந்த, அவசரமாய்க் காணப்பட்ட மகா பெரிய விஷயம் சிலுவை யுத்தக் கைதிகளையும், லூயீ மன்னரையும் பற்றியதாய்க் காணப்பட்டு வந்தது. இதுவரை நிகழ்ந்த எல்லாச் சிலுவை யுத்தங்களையும் விட, கடைசியாக நடந்துமுடிந்த மகா யுத்தமே மிகப் பொல்லாததாகவும் மூர்க்கம் நிரம்பியதாகவும் விளங்கி வந்தது. எனவே, யுத்தக் கைதிகளை விடுவிக்கிற விஷயத்திலும், லூயீ மன்னருக்கு உரிமையளிக்கிற விஷயத்திலும் சர்வ ஜாக்கிரதையாக நடந்து கொண்டாலன்றி, மீண்டும் மீண்டும் கிறிஸ்தவர்கள் அனாவசியமாக மிஸ்ரின்மீது படையெடுத்து வருவார்கள் என்று எல்லாருக்குமே பொதுவான உளக்கவலை உதித்திருந்தது. வீரர் ஸலாஹுத்தீன் காலத்திலிருந்து எல்லா ஐயூபி சுல்தான்களும் கிறிஸ்தவர்கள்மாட்டுக் காட்டிவந்த கணணியத்துக்கும் கெளரவ மரியாதைக்கும் என்ன விதமான பொல்லாத வெகுமதியை ஒவ்வொரு முறையும் பெற்றுக் கொண்டார்கள் என்பதை எவரே மறந்தனர்? அதிலும், மலிக்குல் முஅல்லம் சுல்தானுக்கு நசாராக்களின் நனறி கொன்ற தன்மையைக் கண்டு அதிகமான ஆத்திரம் அளவிலாது ஜனித்தது.
பட்டத்துக்கு வந்த மறுநாள் கூட்டப்பட்ட அரசவையிலே ஏராளமாக மக்கள் குழுமியிருந்தார்கள். என்னெனின், அன்றுதான் யுத்தக் குற்றவாளிகள் முதன் முதலாக விசாரிக்கப்பட வேண்டிய நாளாயிருந்தது. மன்ஸூராப் போர்க்கள நடவடிக்கைக்குப் பின் கூட்டப்பட்ட முதல் அரசவைக் கூட்டம் இதுவேயாதலால், எல்லாப் பிரமுகர்களும், போரில் புதிதாகச் சிருஷ்டிக்கப்பட்ட இரு மம்லூக் வம்சத்துத் தலைவர்களும், அமீர்களும், மந்திரி பிரதானிகளும், மற்றையோரும் தேனடையில் ஈமொய்த்தாற்போல், அரசவையில் குழுமி விட்டனர். உத்தேசம் இருபது வயதுக்கூடச் சரியாக நிரம்பப்பெறாத சுல்தான் மலிக்குல் முஅல்லம் அதிகம்பீரமாக நடந்துவந்து, அரியாசனத்தில் ஏறி, மிக ஒய்யாரமாக அமர்ந்துகொண்டார். திருவோலக்கத்துக்கு வருமுன்னே அவர் ஷஜருத்துர்ரைச் சந்தித்துச் சிறிதுநேரம் வார்த்தையாடிவிட்டு வந்தபடியால், ஆசனத்தில் அமர்ந்ததும் பார்வையைக் கீழே தாழ்த்தி ஓரிரு நிமிடம் தம் காலஞ்சென்ற தந்தையைப் பற்றிச் சிந்தித்துவிட்டு, சிற்றன்னையையும் சற்று ஞாபகப்படுத்திக்கொண்டார். ஆயிரக்கணக்கான மக்கள் அந்த பெரிய சபையிலே செறிந்து காணப்பட்டாலும், சுல்தான் மெளனமாய்க் குந்தியிருப்பதைப் பார்த்து, எல்லோருமே வாய்மூடி நின்றனர். நள்ளிரவில் காணப்படும் நிச்சப்தமே அங்குக் குடிகொண்டிருந்தது. தங்களுடைய சுல்தான் தம் தந்தையை நினைத்துத்தான் மனத்துள் ஏங்கிக்கொண்டிருக்கிறார் என்பதை ஓர்ந்துகொண்ட ஒவ்வொருவருமே சுல்தான் ஸாலிஹைத் தத்தம் மனக்கண்முன்னே கொணர்ந்து நிறுத்திக்கொண்டனர்.
பிறகு சுல்தான் முஅல்லம் தலைநிமிர்ந்தார். தம் அவலக் கவலையை அத்துடன் மறந்து, இளங்குருளையேபோல், வீராவேசமாக ஜாஹிர் ருக்னுத்தீனை நோக்கினார்.
“ஏ வெற்றி வீரரே! அந்த நரகத்துக் கொள்ளிகளை இக் கணமே இங்குக் கொணர்ந்து நிறுத்தும்! எம்முடைய தந்தை உயிருக்கு மன்றாடிக்கொண்டிருந்த வேளையிலே நம் ஸல்தனத்தை அநியாயமாய்க் கொள்ளை கொள்ளவந்த அந்தப் பேடிகளான சிலுவை யுத்தக் கைதிகளை இங்கே கொண்டு வாரும்!”என்று கர்ஜித்தார்.
உத்தேசம் பத்து நிமிடத்தில் லூயீ மன்னர் உட்பட, முக்கியமான யுத்தக்கைதிகள் கைகளிலே விலங்கிடப்பட்டவர்களாய் அந்தச் சபையிலே கொணர்ந்து நிறுத்தப்பட்டார்கள். அத்தனை கைதிகளும் குனிந்ததலை நிமிராமல் வெட்கி வெய்துயிர்த்து நெடுமரம்போல் நின்றார்கள். முற்றும் சர்வ மெளனமாய் இருந்த அச் சபையில் இப்பொழுது சிறிது பரபரப்புக் காணப்பட்டது. ஆயினும், கைதிகள் வரிசையாய் நிறுத்தப்பட்டு, சுல்தானும் வாய்திறக்க ஆரம்பித்ததும், மீட்டும் பழைய நிச்சப்தம் எங்கும் நிலவுவதாயிற்று.
லூயீயும் அவருடைய சகாக்களும் சுல்தானின் கண் முன்னே நிறுத்தப்பட்டது, அவருக்குச் சொல்லொணா ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. எத்தனை நிரபராதிகளின் இன்னுயிர்கள் இந்தப் பாழாய்ப்போன ‘புனித சிலுவை யுத்தங்’களின் பெயரால் அநியாயமாகவும் அக்கிரமமாகவும் பலியிடப்படுகின்றன! எவ்வளவு உணவுப் பண்டங்களும் வர்த்தகப் பொருள்களும் பாழாக்கப்படுகின்றன! எத்தனை ஜனங்கள் யுத்த காரணமாகத் தங்கள் சொத்தை இழக்கின்றனர்! எல்லாவற்றுக்கும் மேலாக, எத்தனை இறைவணக்க ஸ்தலங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப் படுகின்றன? – இந்த எல்லாக் கேள்விகளும் ஏககாலத்தில் மலிக்குல் முஅல்லத்தின் மூளையைக் கலக்கின.
சிறு பிராயத்தினராய் இருந்தபோதே இந்த சுல்தான் பிரெஞ்சு மொழியையும் பேசக் கற்றக்கொண்டிருந்தபடியால், தம்மெதிரிலே நின்ற பெரிய குற்றவாளியாகிய லூயீயை இவரே விசாரிக்க ஆரம்பித்தார்:
“ஏ, ரிதா பிரான்ஸ்! நீர் இப்பொழுது எம் முன்னே பெரிய யுத்தக் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கிறீர் என்பதை உணர்கின்றீரா?”என்று முஅல்லம் முதல் கேள்வியை விடுத்தார்.
லூயீ வாய் திறக்க வில்லை. தலை மட்டும் அசைந்தது.
“நீர் ஊமையோ? ஏன் பேசமாட்டேன் என்கின்றீர்?”
இப்போது லூயீ தலையைக்கூட அசைக்காமல் பட்ட மரமே போல் நெட்டையாய் நின்றார். ஆனால், அவருடைய வாய் மட்டும் ஏதோ முணுமுணுத்துககொண்டே இருந்தது.
போர்க் கைதியாகவும், யுத்தக் குற்றவாளியாகவும் கொணர்ந்து நிறுத்தப்பட்ட லூயீ இப்படி அரசவையை அவமதிப்பதைக் கண்ட எல்லார்க்கும் நெஞ்சு சுறுக்கென்றது. சுல்தானுக்கோ, ஆத்திரம் பொங்கிவிட்டது.
|
“ஏ ‘சாது’ வென்று பெயர் வைத்துக்கொண்டிருக்கும் பூனையே! ஏன் பேச மறுக்கின்றீர்? தேவனின் பரலோக ராஜ்ஜியம் உம்முடைய கைக்குக் கிட்டாமற் போய் விட்டதே என்பதற்காகவா? போர்புரிய வந்த ஆண்பிள்ளையாகிய நீர் இப்போது ஏன் பேடியைப்போல மேனி குன்றி நிற்கின்றீர்? தமீதாவை – தற்காப்பாற்ற தமீதாவை – லபக்கென்று விழுங்கிய உமது வீரம் எங்கே? உம்முடைய போப்பாண்டவரிடம் கூறிவந்த உமது சபதம் எங்கே? போர்க்களத்தில் எம் வீரர்களைச் சந்தித்தவுடனே அவையனைத்தும் ஆவியாய்ப் பரிணமித்து விட்டனவோ?”
சுல்தானின் கிண்டல்மிக்க இவ் வார்த்தைகளைக் கேட்டதும், லூயீ பேச ஆரம்பித்தார்:-
“ஏ, சிறுவரே! ஏன் வீண்பேச்சுப் பேசி நேரத்தை வீணாக்குகிறீர்? யானே, இங்குக் கைதியாகி நிற்கிறேன்; உம்முடைய கையோ ஓங்கி நிற்கிறது. எனக்கும் என்னைச் சார்ந்தவர்களுக்கும் என்ன தண்டனையைக் கொடுப்பீரோ, அதை இப்போதே கொடுத்துவிடும். ஏன் என்னையும் எங்கள் போப்பையும் நீர் வீணே தூற்ற வேண்டும்?”
“தண்டனையா? ஏது, நீரே எல்லா முடிவையும் கூறிவிடுவீர் போலிருக்கிறதே! நீர் தற்போது விசாரணைக்காக நிறுத்தப்படிருக்கிறீர் என்பதையும், நாம் கேட்கும் கேள்விகளுக்கு நீர் சரியான முறையில் பதில் சொல்லா விட்டால், சபையை அவமதித்த குற்றத்தையும் சம்பாதித்துக்கொள்வீர் என்பதையும் மறந்து விட்டீரோ?”
“என்னால் ஒன்றும் பதில் சொல்ல முடியாது. நீர் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். ஏதோ துரதிருஷ்ட வசத்தினால் நான் கைதியாகவும் நீர் விசாரணை புரிகிற வெற்றி வீரராகவும் மாறிவிட்டோம். ஆனால்…”
“ரிதா பிரான்ஸ்! முஸ்லிம் மன்னர்கள்- அதிலும் எங்கள் ஐயூபி வம்சத்து சுல்தான்கள் எதையும் விசாரிக்காமல் தீர்ப்பு வழங்க மாட்டார்கள் என்பதை நீர் உணர மாட்டீர். நீங்களெல்லாரும் பழகிவருகிற காட்டுமிறாண்டித்தனமான, அயோக்கியத்தனமான அநாகரிகத்தில் முஸ்லிம்களும் மூழ்கியிருப்பதாக நீர் இதுவரை தவறாக எண்ணியிருந்தால், இக்கணமே அதை விட்டொழியும். உம்மை நாங்கள் சிறைபிடித்த காரணத்தால் உடனே உம்மைக் கொன்று விடுவோமோ என்று நீர் நினைத்திருக்கிறீர். அப்படிப்பட்ட கெட்ட எண்ணம் எங்களுக்கு என்றுமே இருந்ததில்லை. உம்மை நன்கு விசாரித்து, குற்றமிருந்தால் மட்டுமே தண்டிப்போம் என்பதையும், இன்றேல், வாளா விட்டுவிடுவோம் என்பதையும் உமக்கு நினைவூட்டுகிறோம். எம்முடைய அன்னையாரின் தந்தையரிடம் இங்கிலாந்தின் மன்னர் என்ன தாராளங்களைப் பெற்றுக்கொண்டாரோ, அதே விதமான தாராளங்களை நீர் எம்மிடமும் பெற்றுக்கொள்வீர். ஆனால், எமது கோபத்தை வீணே கிளப்பாதீர். கேட்கிற கேள்விகளுக்கு ஒழுங்காகப் பதில் சொல்லும். இந்த ஐயூபியாகிய எம் வாசாவில் பிறக்கப்போகிற தீர்ப்பைக் கேட்டு நீரே ஆச்சயரியம் அடைந்துவிடுவீர்!”
லூயீ மன்னர் தலைநிமிர்ந்து, சுல்தானைப் பார்த்தார். இன்னம் மீசைகூடச் சரியாக முளைக்காத இளவல் சுல்தானாக வீற்றிருப்பதையும் அவர் வீறாப்புடன் பேசுவதையும் இடக்கராக மொழிவதையும் பார்த்துப் பெருமூச்சு விட்டார் அவர். பிரான்ஸ் தேசத்தின் மணமுடி தரிக்கும் தாம் எங்கே? இந்தச் சுண்டெலி போன்ற சிறுவர் எங்கே? போப்பாண்டவரின் ஆசிர்வாதத்தைப்பெற்று வந்திருக்கும் இந்த முனிபுங்கவர் எங்கே? அதே போப்பின் கோபத்துக்கும் சாபத்துக்கும் முழுக்க முழுக்க ஆளாகிக் கிடக்கும் “முஹம்மதிய”னாகிய இந்த அற்பர் எங்கே? — லூயீயின் மார்பு உட் சுவாச நிச் சுவாசத்தால் உயர்ந்து உயர்ந்து தாழ்ந்தது, ஓட்டப்பந்தயத்தில் ஓடிவந்து மூச்சு முட்டுபவனைப்போல்.
“ரிதா பிரான்ஸ்! என்ன வெறிக்கிறீர்? உம்முடைய பரலோக ராஜ்ஜியத்தை இந்த மூமின்களின் மத்தியிலே ஸ்தாபிக்கும் எண்ணத்தில் ஆண்டவன் மண்ணைப் போட்டுவிட்டான் என்பதை நீர் ஏற்றுக்கொள்கிறீரா?”
“ஏ சிறுவரே! தேவ தூஷணை புரியாதீர். தேவனின் பரலோக ராஜ்ஜியம் என்பது மிகமிகப் பரிசுத்தமானது. அதன் பெயரை அஞ்ஞானியாகிய நீர் உச்சரிக்கவும் அருகதை அற்றவராய் இருக்கறீர். ஆதாமின் மக்களாகிய நாம் பாவிகளாகவே பிறந்திருக்கிறோம். அந்தப் பாபமென்னும் பழைய கறையைக் கழுவிப் பரிசுத்தப் படுவதற்காகத் தேவனே இப்பூமியில் திருவவதாரம் புரிந்து தம்முடைய புனித ரத்தத்தைச் சிலுவை மீது சிந்தினார். இப்போதே மனந்திருந்தி அச் சிலுவையை ஏற்று, உம் பாபத்தையும் உம்முடைய மக்களின் பாபத்தையும் போக்கிக்கொள்ள முற்படாமல், தேவனை மேலும் மேலும் தூஷிக்கின்றீர். அந்த நடுத்தீர்வை நாளில் நாம் அவர் முன்னே நிறுத்தப்படும் போது…”
“ஊம்! அவர் முன்னே நிறுத்தப்படும் போது…?”என்று சுல்தான் முஅல்லம் பல்லைக் கடித்துக்கொண்டு கோபவேசத்துடன் சீறினார்.
“ஏ முஹம்மதிய சுல்தான்! நீர் என்னை எப்படித் தண்டித்தாலும் சரிதான்! ஆனால், நீர் தேவனைத் தூற்றுகிற குற்றத்தை மட்டும் நான் கேட்டுக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன். முன்னொரு சமயம் இதே எகிப்து தேசத்தை ஆணடுவந்த பேரோ ஒருவன் மோசே தீர்க்கதரிசியிடம் தேவ தூஷணை செய்ததற்குப் பெற்றுக்கொண்ட வெகுமதியை நீர் அறிய மாட்டீர்போலும்! சிறு பிள்ளை! உமக்கும் அத்தகைய தேவதண்டனை வாராமலிருக்க வேண்டுமென்றால், சற்று வாயடக்கியே பேசவேண்டும். நான் இந்த யுத்தத்தில் தோற்றிருக்கலாம்; நீர் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், இதற்காகத் தேவலோக ராஜ்ஜியத்தையோ, தேவனையோ, தேவகுமாரனையோ, எங்கள் போப்பாண்டவரையோ நீர் தாறுமாறாகப் பேசுவதற்கு அருகதை வாய்க்கப் பெற்றில்லை என்பதை மறந்துவிடாதீர்! இதை நான் எச்சரிக்கையாகவே விடுக்கிறேன். முன்பின் யோசித்துப் பேசும்!”
லூயீ மன்னரின் சீறலான மறுமொழியைக் கேட்ட அரசவையிலிருந்த அனைவருமே அடிவயிற்றில் இடிவிழுந்தாற் போன்ற நிலைமையுடன் வாய்பிளந்து நின்றார்கள்.
தொடரும்…
-N. B. அப்துல் ஜப்பார்
<<ஷஜருத்துர் II முகப்பு>> <<அடுத்தது>>