“விநாச காலே விபரீத புத்தி!” என்று வடமொழியில் ஒரு பழமொழி உண்டல்லவா? அதை மெய்ப்பிக்கும் வகையிலே சுல்தான் மலிக்குல் முஅல்லமின் ஒவ்வொரு நடவடிக்கையும் காணப்பட்டு வந்தது. மேலே நாம் விவரித்த விபரீத சபதம் நிகழ்ந்து ஒரு மாதமாயிற்று. இதற்குள்ளே ஷஜருத்துர்ருக்கும்

முஅல்லமின் மீது இருந்த தயை, தயாளம், தாக்ஷண்யம் முதலிய எல்லா நல்ல அம்சங்களுமே பறந்துபோய் விட்டன. அடிக்கடி முஅல்லம் ஷஜருத்துர்ரைக் கேவலமாகவெல்லாம் திட்டவும் துவங்கிக்கொணடு விட்டார். தாய் வழியிலும் தகப்பன் வழியிலும் சிறந்த ஐயூபிகளே தம் முன்னோர்கள் என்னும் அகம்பாவ மனோபாவமும் சமயத்துக்கேற்ற புர்ஜீகளின் விஷ போதனைகளும் மலிக்குல் முஅல்லத்துக்குக் கேடுகாலக் கெடுமதியை உண்டுபண்ண ஆரம்பித்தன.

“விதி விட்டு வரும் பின்னே; மதி கெட்டு வரும் முன்னே,” என்பார்கள். லூயீ மன்னரும் இன்னம் சிறை மீட்கப் படவில்லை. அரசாங்க ஊழல்களோ, அதிகரித்து விட்டன. மக்களுக்கோ, புதிய சுல்தான் மீது வெறுப்புத் தோன்றத் தொடங்கி விட்டது புர்ஜீகளுக்கும் பஹ்ரீகளுக்கு இடையிலோ, யுத்தம் ஒன்று மூள வேண்டுவதுதான் பாக்கியாயிருந்தது. எந்த ஐயூபி சுல்தானின் ஆட்சியின் போதும் இதுவரை மிஸ்ரில் ஏற்பட்டில்லாத குழப்பமும் அதிருப்தியும் அதிகம் தலைவிரித்துத் தாண்டவமாடின.

“நஜ்முத்தீன்” என்று சிறப்புப் பெயரிட்டு மக்கள் போற்றிப் புகழ்ந்த சுல்தானின் ஆட்சியாலும் ஷஜருத்துர்ரின் உன்னதப் பெருமையினாலும் கண்ணியம் பெற்ற அத்தனைபேரும் முஅல்லமின்மீது வெறுப்புக் கொள்ளத் துவக்கிவிட்டனர். எங்குப் பார்த்தாலும் புர்ஜீகள் இட்டதே சட்டமாகக் காட்சியளித்தது. என்ன அநியாய அக்கிரமம் புரிந்த போதினும் சுல்தானின் தயவு தங்களுக்கு இருக்கிறது என்னும் தைரியம் அவர்களுடைய போக்கிரித் தனத்தை இன்னம் அதிகமாகக் பெருகச் செய்து விட்டது.

இந்த விபரீதங்களையெல்லாம் ஷ­ஜருத்துர் கேட்கக்கேட்க, மனம் புண்ணாயினார். முன்பெல்லாம் தம் மாற்றாள் மைந்தனுடன் தைரியமாகப் பேசிய அவர் இப்பொழுது வாயடைத்துப் போயினார். மீறிப் பேசினால், வெறும் வசைமாலையே பதிலுக்குக் கிடைத்தது. எனவே, ஷஜருத்துர்ரும் முஅல்லமும் நேருக்கு நேர் நின்று கைப்பூசல் விளைக்க வேண்டிய கட்டமும் வந்துற்றது. விதவையாகிய ஷஜருத்துர் என்ன செய்வார், பாவம்! ஸாலிஹ் உயிரிழந்த பின்னர்த் தூரான்ஷாவின் வருகைக்காகக் காத்திருந்தபோது அவர் மனம் என்ன பாடுபட்டதோ, அதைவிட அதிகமான பாட்டையே இதுபோது பட்டுவந்தது. ‘இப்படியெல்லாம் வருமென்று தெரிந்திருந்தால், மிஸ்ரை லூயீக்கே கூட விட்டுக் கொடுத்திருக்கலாமே’ என்று மனம் புண்ணாயினார். எல்லாம் விதியின் விளையாட்டன்றோ!

தினமும் பலப்பல தூது கோஷ்டியினர் தனித்தனியாக ஷஜருத்துர்ரிடம் சென்று, தங்களுக்குற்ற குறை முறைகளைச் சொல்லிக் கொள்ள ஆரம்பித்தார்கள். அமீர்களும் மம்லூக்குகளும் பொதுமக்களும் அடிக்கடி கூட்டங் கூட்டமாகச் சென்று, கண்ணீருகுக்கத் தொடங்கினர். நிலைமை இப்படியே நீடிப்பதனால், பெரும் ராஜப் புரட்சிக் கலகமொன்றே இறுதியாக வந்து மூண்டுவிடுமென்பதை நம் ஷஜருத்துர் நன்கறிந்துக் கொண்டார். சென்ற காலத்தில் ஆதிமுதல் நிகழ்ந்த அத்தனை நிகழ்ச்சிகளையும் மனக்கண்ணால் பார்த்துக் கொண்டு, நெக்கு நெக்குருகினார். இம்மாதிரியெல்லாம் நிகழுமென்பதை எவரே எதிர்பார்த்தார்?

நிலைமை மிகவும் மோசமாய்ப் போவதற்கும், ஷஜருத்துர்ரின் இத்தா கழிவதற்கும் சரியாயிருந்தது. இப்பொழுது அவர் முன்போலெல்லாம் மூலையில் குந்திக் காலங் கழிக்காமல், வெளியில் வந்து பலருடனே பழக நேர்ந்தது. எங்குப் பார்த்தாலும் பெரிய அதிருப்தியும் இப்படிப்பட்ட சுத்த மோசமான சுல்தான் கிடைத்தாரே என்ற வருத்தமுமே தாண்டவமாடின. மேலும் ஷஜருத்துர்ரையே நாடுகடத்துவதற்கு புர்ஜீகள் திட்டமிடுகிறார்கள் என்பதையும் அவர் உணர்ந்து கொண்டார். எங்கோ அனாதையாய் அலைந்து திரிந்த தாம், மீட்டும் காஹிராவிலிருந்து வெளியேற்றப்படுவதில் அவர் கவலை கொள்ளவில்லை. ஆனால், ஐயூபிகளின் அரிய பொக்கிஷமாகிய ஸல்தனத் குட்டிச்சுவராய்ப் போகிறதே என்றுதான் பெருந் துக்கம் கொள்ள ஆரம்பித்தார். எனவே, வருவது வரட்டுமென்று துணிந்து, அவர் இறுதியாகத் தம்முடைய மாற்றாள் மைந்தனைச் சந்தித்துப் பேச ஆவல் கொண்டார்.

ஓர் இரவின் போழ்து, எல்லோரும் படுக்கப் போகும்போது, ஷஜருத்துர் சுல்தானைச் சந்தித்தார்.

“நான் பலமுறை உம்மிடம் எச்சரிக்கை விடுத்தும், நீர் அலட்சியமாய் இருப்பதுடன், அந்த புர்ஜீகளின் விஷமத்தனத்துக்குப் பலியாகிக் கொண்டே வருகின்றீர். இன்று இந் நாட்டிலுள்ள அனைவருமே உம்மீது சொல்லொணா வெறுப்புக் கொள்ளத் துவக்கி விட்டனர். இருக்கிற சூழ்நிலைமையைப் பார்த்தால், என்னென்ன விபரீதங்கள் விளையக் கூடுமென்று புலப்படவில்லை. நானும் நயமாகவும் பயமாகவுமெல்லாம் உம்மிடம் சொல்லிப் பார்த்து விட்டேன். இப்போது இந்த இறுதி எச்சரிக்கையை விடுக்கிறேன்…”

இனியும் நீ சுல்தானாகிய எம்முடனே வீண்வாது புரிவாயானால், உன் நாக்கை அறுத்து விடுவேன், ஜாக்கிரதை!

“உன்னுடைய எச்சரிக்கையொன்றும் எனக்குத் தேவையில்லை, ஷஜருத்துர்! நீ என்னுடைய தந்தையின் அடிமையாய் இங்கு வந்து சேர்ந்தவள் என்பதை மறந்துபோய், அனாவசியமாக அரசாங்க அலுவல்களில் தலையிடுகின்றாய். உன்னை என் சிற்றன்னையாக பெற்ற தண்டத்துக்காகவாவது இத்தனை நாட்களாகப் பொறுத்திருந்தேன். இனியும் நீ சுல்தானாகிய எம்முடனே வீண்வாது புரிவாயானால், உன் நாக்கை அறுத்து விடுவேன், ஜாக்கிரதை!”

ஷஜருத்துர்ருக்குக் காலடியில் பேரிடி விழுந்ததுபோல் இருந்தது, இந்தப் பதில், ஏனென்றால், தம்மை ஒருமையாகவும் கேவலமாகவும் பேசக்கூடிய அளவுக்குக் கூடத் தூரான்ஷா இழிந்துவிடுவான் என்பதை அவ் வம்மையார் சற்றும் எதிர்பார்க்கவில்லை அல்லவா?

“ஏ காதகா! உன் புதைகுழியை நீயே தோண்டிக்கொள்வதைத் தடுக்க நான் முயல்வது பெருந் தவறுதான்! கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே என்னும் பொய்யாமொழி வாக்குப் பொய்த்தா போகும்? நீ எக்கேடு கெட்டுப்போனால், எனக்கென்ன? உன்னை நான் பெறாத ஒன்றுதான் குறைவேயன்றி, என் சொந்தப் பிள்ளையே போலத்தான் உன்னை இன்றுவரை நன்கு மதித்துவந்தேன். ஆனால், நீ உன் கெட்ட புத்தியைக் காட்ட ஆரம்பித்து விட்டாய். ஏ, பாவி! உனக்கு பொல்லாத வேளை நெருங்கிவிட்டது. நீ உன் மரணத்தை எட்டிக்கொண்டிருக்கிறாய். இனியாவது நீ உயிர் பிழைக்க வேண்டுமென்றால், இப்போதே இங்கிருந்து ஓடிவிடு! இப்போதும் நான் உன்னைக் காப்பாற்றத்தான் விரும்புகிறேன். ஓடிப்போய் உயிர்ப் பிழைத்துக்கொள்! என் வயிறு எரிகிறது.

“ஏ, பெண்ணடிமையே! நீ என்ன, சுல்தானா என்றே எண்ணிக் கொண்டாயோ? அல்லது கலீஃபாவின் பாரியை என்று நினைத்துக்கொண்டாயோ? நான் இங்கிருந்து ஓடிவிட வேண்டுமென்று கட்டளையிட உனக்கு யார் அதிகாரம் கொடுத்தார்? என்னை இங்கிருந்து ஓட்டுவதற்கு நீ யார்? இனியும் அத்துமீறிப் பேசுவாயானால், உன் கதி என்னாகும் என்பதை நீயே தெரிந்து கொள்வாய். வாயடக்கிப் பேசுவாயேயானால், இன்னம் சில நாட்களேனும் நீ இங்கிருப்பாய். இன்றேல்,…”

“அட துரோகி! நீ பேசவில்லை; உன்னைப் பிடித்தாட்டும் புர்ஜீகளின் மோகம் உன்னை இப்படியெல்லாம் பேசும்படி தூண்டிவிடுகின்றன. இந்த ஸல்தனத்தை உனக்காக நான் போற்றித்தந்தால் அல்லவா இப்படியெல்லாம் பேசுகின்றாய்? பாவி! உனக்காக நான் பட்ட பாடெல்லாம் கொஞ்சமா, நஞ்சமா? நீ என்னை இங்கிருந்து வெளியேற்றுவது இருக்கட்டும்; உன்னை இந்த உலகத்திலிருந்தே வெளியேற்றுவதற்கு உன் விரோதிகள் துடியாய்த் துடிக்கிறார்கள் என்பதை இன்னும் நீ அறியவில்லை போலும்! ஏ, நன்றி கொன்ற மூர்க்கா! காதகா! கிராதகா! என் வயிறு எரிகிறதடா! உனக்காக நான் பட்ட பாட்டையெல்லாம் நினைத்துப் பதறுகிறேனடா! பெரிய துரோகியாகிய உனக்காக நான் பல நாட்கள் கண்ணயராமல் காத்துக்கிடந்ததற்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்! நீ என்ன செய்வாய்? உனக்குக் கேடுகாலம் கிட்ட முடுகிவிட்டது.” 

“ஏ, ஷஜர்! மூடு வாயை! நீ இம் மிஸ்ரின் சுல்தானிடம் பேசுகிறாய் என்பதை மறந்துவிட்டாய் போலும்! உன் மாய்மாலத் திருட்டுத்தனத்தை என்னிடமே பிரயோகிக்க வேண்டாம்!”

“அடே! எது மாய்மாலத் திருட்டுத்தனம்? இந்த ஐயூபி ராஜ்யத்தை ஒரு வாரிசும் இல்லாத நேரத்தில் நானே அபகரித்துக் கொள்ளாமற் போனதா மாய்மாலத் திருட்டுத்தனம்? உன் வருகைக்காக என் கணவரின் மையித்தைக் கண்ணெதிரில் வைத்துக்கொண்டு பல நாட்கள் வரை மனம் நைந்ததா மாய்மாலத் திருட்டுத்தனம்? உன்னையும் ஒரு மைந்தனென்று கருதி என் உடலையெல்லாம் வாட்டி வதைத்துக் கொண்டேனே, அதுவா மாய்மாலத் திருட்டுத்தனம்? ஏ, காதகா! நீ இந்த ஐயூபி வம்சத்துக்குச் சத்துருவாக விளங்குவாயென்று எனக்குச் சற்றுமே தெரியாமற் போயிற்றே!….”

“தெரிந்திருந்தால்?”

ஷஜருத்துர்ருக்கு இனியும் பொறுக்க முடியவில்லை. சுட்டெரிக்கிற கொடிய பார்வையைச் செலுத்திவிட்டு, அங்கிருந்து அகன்று சென்றுவிட்டார்.

அந்த நேரம் பார்த்து, அமீர் பக்ருத்தீன் அங்கு வந்து சேர்ந்தார். 

“யா ஸாஹிபல் ஜலாலுல் மலிக்! பஹ்ரீகள் தங்களுக்கு விரோதமாகப் படை திரட்டிக்கொண்டிருக்கிறார்கள். நாளைக் காலையில் தங்களை முடி துறக்கும்படி அவர்கள் கேட்கப் போகிறார்களாம். தாங்கள் இணங்காவிட்டால், போர் புரியப் போகிறார்களாம்!”

“என்ன! சுல்தானாகிய எம்மையா எதிர்த்துப் போர்ப்புரியப் போகிறார்கள்? அந்தத் துரோகி ருக்னுத்தீன் எங்கே?”

“யா மலிக்! நாங்கள் எவ்வளவோ முயன்று பார்த்து விட்டோம். அவன் கூடுவிட்டு கூடுபாயம் ஜாலவித்தைக் கற்றவனேபோல் நிமிஷத்துக்கு நிமிஷம் இடம் மாறிக்கொண்டிருக்கிறான். நதியிலுள்ள தீவிலே அவன் எல்லா மம்லுக்குகளையும் தன்பக்கம் திருப்பிக்கொண்டிருக்கிறான். ஷஜருத்துர்ருக்கும் பஹ்ரீகளுக்கு எல்லா ஊக்கமும் ஊட்டி வருவதாகக் கேள்விப்படுகிறேன். அந்த அம்மாளைக் கைது செய்தால் ருக்னுத்தீனை உடனே இங்கே கண்டு பிடிக்கலாம். வேறு வழியில்லை, மலிக்!”

“இதில் யோசனை என்ன இருக்கிறது? இநத நிமிஷமே அவளைக் கைது செய்யுங்கள்! ருக்னுத்தீனும் ஷஜருத்துர்ரும் இந்த ஸல்தனத்தின் மாகொடிய துரோகிகள் என்று உடனே பறையறைவியுங்கள். நெருப்புடனே விளையாடுகிறவர்களுக்கு இதுதான் தண்டனை. சீக்கிரமே செய்யுங்கள்!”

“யா சுல்தானல் முஸ்லிமீன்! இனியொரு முக்கிய விஷயத்தையும் சொல்லவே யான் இங்கு ஓடிவந்தேன். அஃதாவது, பஹ்ரீகள் எணணிக்கையில் அதிகமாக இருக்கிறார்கள். எப்படிப்பட்ட பொல்லாத கலகத்தையும் விளைக்க அவர்கள் தயாராய் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் சிறையிலிருக்கிற நசாராக்களையும் அவர்கள் திறந்துவிட்டுக் கொண்டால் என் செய்வது?”

“ஏன் லூயீயையும் அவனுடைய சகாக்களையும் இப்போதே மாபெரிய கோபுரத்திலுள்ள கொடுஞ் சிறையில் அடைத்துவிட்டால்?”

“யா மலிக்! இதைத்தான் நானும் தங்களிடம் சொல்லவந்தேன். என்னெனின், லூயீ அடைபட்டிருக்கிற தற்போதைய சிறைக்கூட அதிகாரிகள் ருக்னுத்தீனுக்கு நெருங்கிய நணபர்கள. எனவே, கைதியை இங்கிருந்து இப்போதே வெளியேற்றி, நம்முடைய செங்கோட்டையின் உயர்ந்த கோபரத்திலிருக்கிற பிரத்தியேகச் சிறைச்சாலையில் அடைத்து வைப்பதுதான் உசிதம். புர்ஜிகளாலேயே காவல் புரியப்படுகிற, புழங்கப்படுகிற அக் கோட்டைக்குள்ளிருந்து லூயீ தப்பமுடியாது.”

“சரி, இப்போதே புறப்பட்டுப் போய் லூயீயை அந்தக் கோபுரச் சிறையுள்ளே அடைத்து வையுங்கள். பொழுது விடிந்ததும் ஷஜருத்துர்ரைக் கைது செய்து, குருட்டுக் கண்ணனாகிய ருக்னுத்தீனையும் சிறை பிடிப்போம். ராஜத் துரோகிகள்!”

அமீர் பக்ருத்தீன் அரச ஆக்கினையை நிறைவேற்றி முடிக்கப் புறப்பட்டு விட்டார். முஅல்லம் தனித்து நின்றார்.

இரவு நெடுநேரமாகி விட்டபடியால், படுக்கைக்குப் போய் படுத்துக்கொண்டார். உறக்கம் வரவில்லை; புரண்டு கொண்டே கிடந்தார்.

புர்ஜீகளின் மயக்க மிக்க மாயவலையில் சிக்கிய முஅல்லம் பரிதாபகரமாய்ப் படுத்துக் கிடந்தார். ஷஜருத்துர்ரைப் பற்றி நினைக்க நினைக்க, அவர் மனம் சகிக்கவில்லை. பஹ்ரீகளுடன் சேர்ந்து சதி செய்து தம்மைக் கொன்றுவிட்டுப் பட்டத்துக்கு வருவதற்காகவே அவ்வம்மை திட்டமிட்டு வருவதாக முன்னம் சுல்தான் முஅல்லம் எண்ணிய எண்ணமெல்லாம் இப்போது மேலும் மேலும் வலுவடைய ஆரம்பித்து. சுல்தான் ஸாலிஹ் ஷாமுக்குப் போயிருந்த அந்தக் காலத்திலேயே புர்ஜீகள் தூரான்ஷாவைப் பக்குவமாகத் தங்கள் பக்கம் திருப்பிக்கொண்டு விட்டபடியால், இப்போது இந்த சுல்தானால் எதையும் நிதானமாய்ப் பகுத்தறிய முடியவில்லை. இவர் தம்முடைய மூளையை நயவஞ்சகர்களான புர்ஜீகளுக்கு அடகு வைத்துவிட்ட பின்னர், எதைத்தான் பகுத்துணர முடியும்? எதைப் பார்த்தாலும் புர்ஜீகள் செய்வதே நியாயம் போலவும் பஹ்ரீகள் செய்வதெல்லாம் அநியாயம் போலவும் புலப்பட்டன.

ஷஜருத்துர் தூரான்ஷாவின் வருகைக்காகக் காத்துக் கிடந்ததுகூட ஒரு சூழ்ச்சிதான் என்று புர்ஜீகள் இந்த சுல்தானுக்கு உருவேற்றி இருந்தபடியால், மீண்டும் சிந்தித்தார். பட்டத்துக்குரிய இளவரசராகவே தாம் வெளியூரில் இருக்கும்போது ஸல்தனத்தை அபகரித்துக் கொண்டால் மக்கள் கிளர்ச்சி செய்வாரென்று ஷஜருத்துர் பயந்ததாகவும் எனவே இவர் திரும்பி வருகிறவரையில் கபடமாக ஸாலிஹின் மரணத்தை மறைத்து வைத்திருந்ததாகவும் வந்த பினனர்த் தம்மைப் பேருக்காகவாவது சுல்தானாக உயர்த்தி வைத்துவிட்டு, பஹ்ரீகளுடன் சதியாலோசனை செய்து தம்மை வீழ்த்துவதற்காகவே ஷஜருத்துர் இத்தனை நாட்களாகத் திட்டமிட்டு வருவதாகவும் முஅல்லம் கருதினார். அதற்கேற்றார்போல், தினமும் ஷஜருத்துர் பஹ்ரீகளுக்காகப் பரிந்து பேசுவது இவருடைய சந்தேகத்தை வலுவடையச் செய்தது. இதுபோது ஷஜருத்துர் பஹ்ரீகளின் பக்க பலத்தை வைத்துக்கொண்டு சுல்தானாகிய தம்மை அநியாயமாக வீழ்த்துவதற்கும் கொலை புரிதற்குக்கூட துணிந்து நின்றாரென்று புர்ஜீ அமீர் ஜாடையாகப் பசப்பிய வார்த்தைகளை இவர் சிந்தித்துச் சிந்தித்துச் சிந்தை குலைந்துபோனார்.

சென்றகால நிகழ்ச்சிகளெல்லாம் அவர் கண்முன்னே பலவர்ண தர்சனியேபோல் ஓடி மறைந்தன. மூனிஸ்ஸா மரணத்துக்குப் பின்னே கேவலம் ஓர் அடிமைப் பெண் தம் தந்தையை மயக்கி மணந்ததையும் மணந்த பின்னர் ஸாலிஹின் பலவீனத்தையெல்லாம் நன்கு பயன்படுத்திக்கொண்டு அவரைத் தன்னுடைய அடிமையாக ஆக்கிக்கொணடதையும் ஸாலிஹை அடிமையாக்கிக் கொண்டதுடன் ஸல்தனத்தின் சர்வ அதிகாரத்தையும் தன் கைவயம் பற்றிக்கொண்டதையும் பற்றிக் கொண்டதுடனே, சுல்தானை ஆளாக வைத்து ஆட்டிப் படைத்ததையும் வாரிசுக்கென்று ஒரு கலீலைப் பெற்றுக் கொண்டதையும் முதலல் முஅல்லம் நினைத்துக்கொண்டார். ஆனால், நல்ல காலமாக அந்த கலீல் முன்னமே செத்துப்போனது நல்லதேயென்று மனந்தேறினார். பிறகு அடுத்த ஐயம் பிறந்தது:

சுல்தான் ஸாலிஹ் ஷாமிலிருந்து திரும்புவதற்கு முன்னர் அவசரமாக ஏன் தம்மை அங்கனுப்பித் தந்தையை இங்கே வரவழைக்க வேண்டும்? எப்படியாவது தாம் ஷாம் யுத்தத்தில் உயிரிழந்து விடக் கூடுமென்று எதிர்பார்த்தேயல்லவா தம் சிற்றன்னை, இல்லை மாற்றாள் தம்மை ஷாமுக்கு அனுப்பினாள்? அப்படித் தாம் செத்துவிட்டால், ஐயூபி வம்சத்து வாரிசு யாரும் பட்டத்துக்கு இல்லையாதலால், தன் கணவருக்குப் பின் தானே பட்டத்துக்கு வந்துவிடலாமென்று எதிர்பார்த்தே அல்லவா இப்படிச் செய்தாள்?

போகப் போகச் சந்தேக வியாதி இன்னம் அதிகம் விபரீதமாய் விட்டது: “என் தந்தை நாற்பத்திரண்டே பிராயத்தில் எப்படி மரணமடைந்திருக்க முடியும்? அவருக்கு உயிர் போனபோது ஷஜருத்துர்ரைத் தவிர வேறு யாரும் அருகினில் இருக்க வில்லை. ஷஜருத்துர்ரே ஏன் என் தந்தையை விஷமிட்டுக் கொன்றிருக்கக் கூடாது? கிறிஸ்தவர்கள் காஹிராவின் தலைக் கடையில் படையெடுத்துக் கொண்டிருக்கும்போது வஞ்சகமாகக் கணவரைக் கொலை செய்துவிட்டு, ருக்னுத்தீனுடனே நெருங்கிய நட்புப் பூண்டு, யுத்தத்தையும் ஜெயித்து, நான் இங்கே வந்த பிறகு என்னையும் கொலை புரியத்தானே அவள் நினைத்திருந்தாள்? மாற்றாந்தாய் என்றால் அவளுக்குரிய துர்க்குணம் அவளை விட்டு எங்கே போகும்? அவள் நிரபராதியாய் இருந்திருப்பின், நான் அரண்மனைக் கோட்டை வாயிலுள் நுழைந்தவுடனேயே என் தந்தை இறந்த செய்தியைச் சொல்லி, என்னைக் கட்டிக்கொண்டு அழுதிருக்க வேண்டுமே?…

என்னை ஹம்மாமுக்கு போகச் சொன்னாள்; குளிக்கச் சொன்னாள்; சாப்பிடச் சொன்னாள்; பிறகு என்னென்னவோ நாடகம் நடித்தாள்…! பொய்யாக அழுதாள், புரண்டாள், ஆர்ப்பரித்தாள்… அந்த நேரத்தில் இந்தக் குருட்டுப்பயல் ருக்னுத்தீன் இருக்கிற இடம் தெரியாமல் தலைமறைவாய் ஒளிந்து கொண்டான்… பாவம், புர்ஜீகள் சொல்வது பொய்யா? என் மாற்றாந் தாயும் அந்த பஹ்ரீ அடிமைப் பயலும் மிகவும் நன்றாய்த்தான் பொய் நாடகம் நடித்திருக்கிறார்கள்! இருவரும் அடிமைத் துரோகிகள்!….” என்று கற்பனை உலகின் பைத்திய வட்டாரத்திலே சஞ்சரித்த சுல்தான் மலிக்குல் முஅல்லம் தம் பற்களை நறநற வென்று மென்று கொண்டு தம் தலையணையின் மீது ஓங்கியொரு குத்து விட்டார். கட்டில் அதிர்ந்த அதிர்ச்சியில் தலைமாட்டில் எரிந்துகொண்டிருந்த மெழுகுவர்த்தி பட்டென்று அணைந்துவிட்டது.

இதுவரை அரைகுறையான மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் குலைந்த சிந்தையுடன் படுத்திருந்த முஅல்லம் இருட்டிலே இன்னம் நன்றாக மனப்பிராந்தி கொள்ள ஆரம்பித்தார். ஏனென்றால், குருட்டுத்தனமாக விபரீதக் கற்பனைகள் புரிவதற்கும் கும்பிருட்டுத்தான் உற்றதுணையாய் விளங்கிவருகிறது.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>

Related Articles

Leave a Comment